பூவே பூச்சூடவா
மெத்தையில் புரண்டு புரண்டு பத்ரிக்கு தூக்கம் வரவில்லை. விடியற்காலை மணி மூன்று இருக்கும். ஜன்னலை ஒட்டி இருந்த தோட்டத்திலிருந்து ஆவாரம்பூ மணம் மனதை மயக்கியது. சட்டென்று அவனுக்கு ப்ரீதாவின் முகம் நினைவில் வந்தது. கள்ளம் கபடில்லாத குணம், குழந்தைத்தனமான பேச்சு, அழகான முகம், யாருக்காவது ஏதாவது கஷ்டம் என்றால் உடனே இரக்கப்படும் சுபாவம். இது போதாதா ஒரு ஆண் மகனின் மனதை கவர்வதற்கு. பத்ரியின் மனம் கவர்ந்த பெண்ணானாள் ப்ரீதா. எப்போது அவளை முதன் முதலில் பார்த்தோம் என்று யோசித்து பார்த்தான். கல்லூரி ஆண்டு விழாவில் நடந்த பாட்டு போட்டியில் பாடுவதற்கு நிறைய பேர் கலந்து கொண்டார்கள். பாடுவதற்கு தேர்வு செய்த பாடல்கள் சுமாராகத்தான் இருந்தது. கேட்டு கொண்டிருந்த மாணவ மாணவிகளுக்கு லேசாக அலுப்பு தட்ட ஆரம்பித்தது. பத்ரி நண்பர்களை பார்த்து, டேய் போய் டீ குடிச்சிட்டு வரலாமா. ஒரே போர். ஒரு பாட்டும் நல்லா இல்லே. பாடறவங்களும் ஒகே தாண்டா என்று சொல்லியபடியே கிளம்பியவர்களை அப்போது மைக்கில் மிஸ்.ப்ரீதா, இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி பாடுவார் என்ற அறிவிப்பு கேட்டதும், பரத் டேய் நில்லுங்கடா. இந்த பொண்ணு எப்படி பாடுறான்னு கேட்டுட்டு போகலாம் என்றவன் திரும்பி பார்த்தான். மேடை ஏறிய ப்ரீதா ஊதா நிறத்தில் சுடிதார் அணிந்து எந்த விதமான மேக்-அப்பும் இல்லாமல் இடுப்பு வரை தொங்கிய சுருட்டையான தலை முடியை கிளிப் போட்டு அடக்கி வாரியிருந்தாள். நெற்றியில் ரெட் கலர் ஸ்டிக்கர் போட்டு, கழுத்தில் மெல்லிய செயின், காதுகளில் சின்ன தோடு, வலது கையில் ஒரு வளையல், இடது கையில் ப்ளாக் ஸ்ட்ராப் போட்ட வாட்ச் இவ்வளவு தான். ஆனால் பார்க்க அழகாக தெரிந்தாள். அவனையறிமால் உட்கார்ந்தான். வாலி எழுதிய யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே பாடலை பாடி முடித்தவுடன் கை தட்டலின் ஓசையே சொல்லியது ப்ரீத்தா தான் பரிசுக்குரியவர் என்று. பரிசு கோப்பையை பெற்றுக்கொண்டு கீழே இறங்கியவளை கை குலுக்கி தன் வாழ்த்தை தெரிவித்தான். சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட அவள் நான் நல்லா பாடினேனா என்று வெகுளியாக கேட்டவளை அந்த நிமிடத்திலிருந்தே விரும்ப ஆரம்பித்தான். பத்ரி M.Sc. IT கடைசி வருடத்தில் இருந்தான். ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்து பெற்றோர் வரை விஷயம் சென்றது. இரு வீட்டினரும் சந்தித்து முறைப்படி பேசி கல்யாணத்தை நிச்சயம் செய்தனர். சந்தோஷத்தில் எதிர் காலத்தை பற்றியெல்லாம் கற்பனையில் இருவரும் மிதக்க ஆரம்பித்தனர்.
ஒரு நாள் திடீரென வயிற்று வலியால் துடித்த பிரீத்தாவை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். பெண்களுக்கு கர்ப்ப பையில் இரண்டு ஓவரிகள் இருக்கும். அதில் ஒன்று செப்டிக் ஆகி வேறு வழியில்லாமல் உடனடியாக எடுக்க வேண்டிய சூழல்.அதிர்ந்து போன பெற்றோர்கள், டாக்டர் அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கோம். இனிமே எப்படி இந்த கல்யாணம் நடக்கும் என்று கலங்கியவர்களை சமாதானப்படுத்திய டாக்டர்கள், தாராளமாக இவளுக்கு கல்யாணம் பண்ணலாம். குழந்தையும் நல்ல படியா பிறக்கும் கவலைப்படாதீங்க என்றனர். அனால் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பத்ரியின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ப்ரீதாவின் உடல்நிலை நன்கு தேறியது. அவள் பத்ரியிடம் வேற பெண்ணை கல்யாணம் பண்ணிக்குங்க என்று வற்புறுத்த ஆரம்பித்தாள்.ஒரு வெள்ளிக்கிழமை ப்ரீத்தாவின் பெற்றோர்கள் சம்மதத்தோடு அவளை வா கோவிலுக்கு போயிட்டு வரலாம், மனசுக்கு ஆறுதலா இருக்கும் என்று அழைத்து போனான். அங்கு காத்திருந்த நண்பர்கள் மத்தியில் அவள் எவ்வளவோ மறுப்பு தெரிவித்தும் தாலி கட்டி பிறகு முறைப்படி ரெஜிஸ்டர் பண்ணி தன்னுடைய மனைவி ஆக்கிக்கொண்டான். முதலில் கலங்கிய ப்ரீத்தா பிறகு சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தாள். ஆர்ப்பரித்த பெற்றோர்கள் பிறகு ஏற்றுக்கொண்டனர். ஒரு வருடம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. அவர்களின் காதல் வாழ்க்கைக்கு பரிசாக குட்டி ப்ரீத்தா வந்து சேர்ந்தாள். நினைவலைகளில் மூழ்கியிருந்த பத்ரி இன்று வரப்போகும் ப்ரீதாவையும் குழந்தையையும் வரவேற்க தயாரானான்.