கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 12

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 12



புது மனைவியுடன் தன் ஸ்கார்ப்பியோவில் உல்லாச மனநிலையில் கிளம்பிய கதிர் சத்யாவிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தான்.



தங்கள் வீட்டில் கூடவே சத்யா இருந்தாலும் அவர்களுக்குத் தனிமை என்பது அங்கே கிடைக்கவில்லை.. அப்படியே அவன் தனியாகப் பேச முயன்றாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் சத்யாவை அவனுமே தொந்தரவு செய்ததில்லை.



இரவின் தனிமையிலும் சத்யா அவர்கள் படுக்கையறையை ஒட்டிய தனி அறையில் கதவை மூடிக் கொண்டு படுத்துறங்கும் வழக்கத்தை மேற்கொண்டதினால் அவர்களுக்குப் பேச்சு வார்த்தை என்பது அரிதாகவே இருந்தது.



அப்படியே அவர்கள் ரெண்டு வார்த்தைகள் பேசினாலும், ஒன்று அப்பத்தாவை சுற்றி இருக்கும்.. இல்லை சத்யா வெற்றியுடன் பேசும் பொழுது இவன் அதில் நுழைந்து கொண்டதாக இருக்கும்.



இப்படி இன்று கிடைத்த முழுத்தனிமையை மிகவும் ரசித்தான் கதிர்.. இந்தப் பிரயாணத்தில் எப்படியாவது தன் மனதைத் திறந்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தான்.



'முதலிரவன்றே நமக்குள் எந்தப் பொருத்தமும் இல்லை என்று அதான் சத்யா ஏற்கனவே சொல்லிவிட்டாளே.. இன்னும் என்ன பாக்கி இருக்கு.. உனக்கு வெட்கமில்லையா?..' இடித்துரைத்த மனதைப் புறம் தள்ளினான்.



'அவ சின்னபொண்ணு.. திடீர்ன்னு கல்யாணம் பண்ணினா.. யாருக்கும் அப்படித்தான் இருக்கும்.. கொஞ்சம் விட்டு பிடிக்காலம்ன்னு அப்படி இருந்தேன்.. அதுக்குன்னு கொஞ்சம் கூட முயற்சி பண்ணலைன்னா அப்புறம் எப்படி வாழ்க்கையைத் தொடங்குகிறதாம்.. பக்கத்துல பூப்போலப் பொண்ணிருக்கு.. தொட்டுக் கொண்டா தப்பில்லை..' தன் மனதை அடக்கினான் கதிர்.



மெல்லப் பேச்சை தொடங்கினான் கதிர்.



"சத்யா.."



கண்ணை மூடிக் கொண்டிருந்த சத்யாவோ எதைப் பற்றியோ சிந்தனையில் இருந்தாள்.. அவன் அழைத்ததைக் கவனிக்க வில்லை.



"சத்யா.. உன்னைத்தானே.. தூங்குறியா?.. சத்யா.. கொஞ்சம் என்னன்னு கேளேன்.."



அவளோ அவனைக் கண்டு கொண்டால் தானே..



"சத்யா...." அதட்டலாகச் சற்றுச் சத்தமாக அழைத்தான் கதிர்.



சட்டெனத் தூக்கி வாரிபோட கண்ணைத் திறந்த சத்யா.., தன்னை நோக்கிக் கொண்டிருந்த கதிரைக் கண்டாள்.



"சத்யா.. தூங்கிட்டியா?.."



"இப்போ என்ன வேணும் உங்களுக்கு.. கண்ணை மூடி படுத்திருக்கறது தெரியலையா?.. தூங்கிட்டியான்னு என்ன ஒரு கேள்வி..ஹௌ ஸ்டுபிட்.."



"இல்லை.. சத்யா.. சாரி.. நீ சும்மா கண்ணைச் சும்மா மூடி இருக்க என்று நினைச்சு பேச்சு வார்த்தை கொடுத்தேன்.." காரை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்த கதிரைப் பார்த்தவள்..



"ம்.. சொல்லுங்க.. என்ன வேணும் உங்களுக்கு.. தொணதொணன்னு.."



பாவம் நம்ம கதிர்.. என்ன சொல்லுவான்.. ‘உன்னோடு ஆசையா பேசலாம்ன்னு நினைச்சேன் வாயைத் திறந்து சொல்லி விடமுடியுமா?..’ சட்டென வாயை மூடினான்.



"என்ன.." எனச் சத்யா தன் புருவத்தை உயர்த்த.. அந்தச் சின்னச் செய்கையில் கவர்ந்திழுக்கப்பட்டவன்,



"இல்லை.. ரெண்டு மணி நேரமா காரை ஓடிட்டு வாரேன்.. இன்னும் நாலு மணி நேரமாகும் உங்க ஊருக்கு போறதுக்கு.. ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும்.. காரை நிப்பாட்டமா?.. நீயும் வரியா?.."



அவளுடன் கொஞ்சம் பேசிக் கொண்டு வரலாமே என்று நினைத்து அவளை அழைத்தவன் அவள் எரிச்சலைடையவும் வாயில் வந்ததைச் சொல்லி வைத்தான்.



"அதானே பார்த்தேன்.. எங்கடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு.. அது எப்படித்தான் உங்களுக்குப் பசி எடுக்குமோ?.. எதையாவது வயித்துக்குப் போட்டுட்டே இருக்கணுமோ?.." இகழ்ச்சியாகக் கேட்டவளைக் கண்டு கொள்ளாமல்..



"ம்.. பின்னே.. டிரைவிங்க் பண்ணுரவங்களுக்குத்தான் தெரியும் அந்தக் கஷ்டம்.. நீ வந்தா வா.. இல்லைன்னா.. அதோ அந்த மோட்டலிலே காரை நிப்பாட்ட போறேன்.."



உண்மையில் இப்படிப்பட்ட நெடுதூர பிரயாணங்களில் கதிர் எப்பொழுதுமே நடுவில் நிறுத்த மாட்டான்.. ஒரேடியாகக் காரை நிறுத்தாமல் ஓட்டுபவனைக் கண்டு வெற்றி கூட ஆச்சர்யப் படுவான்.. அது எப்படி அண்ணன் இப்படித் தொடர்ச்சியா ஓட்கிறானென்று.



இன்று ஏனோ அவள் உதாசீனத்தில்.. ஒரு சின்னப் பேச்சு வார்த்தைக்குக் கூட முகம் கடுப்பவளின் மேல் சட்டெனக் கோபம் பொங்க.. ஒரு டீ குடிக்கலாம் என இப்பொழுது வண்டியை நிறுத்தினான்.



"நான் போய் டீ குடிச்சிட்டு வரேன்.. கார் திறந்துதான் இருக்கு.. உனக்குப் பாத்ரூம் போகணும்ன்னா பூட்டிட்டுப் போ.." அலட்சியமாகச் சொல்லிவிட்டு சென்று விட்டான்.



வேகமாகக் கார் கதவை அடித்துச் சாத்தி விட்டுச் செல்லும் கதிர் வித்தியாசமாகத் தெரிய முதல் முறையாக அவனை ஊன்றிக் கவனித்தாள்.



"சாருக்கு வர கோபத்தைப் பாரு.. கொஞ்சமாவது ஒரு கெத்தா.. ஆம்பிள்ளையா நடக்குறானா?.. என்னவோ பம்மிகிட்டு.. சத்யான்னு கூப்பிடக் கூட யோசிப்பான் போல.. இவனெயெல்லாம்..' வேகமாகச் செல்பவனைப் பார்த்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள் சத்யா.



தூரத்தில் ஹோட்டல் வாசலில் பெட்டிக் கடை முன் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த கதிர் கண்ணில் பட்டான்..



'ஓ.. அய்யாவுக்கு இந்த நல்ல பழக்கமெல்லாம் இருக்கோ.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இவனை நல்லா கவனிக்க வேண்டும்.. ம்.'.



'ம் அதான் இப்போ கவனிக்கறேயே..'



'ஆளைப் பாரு நல்லா பனை மரம் மாதிரி உயர்ந்து நிக்கிறான்.. ஆறடிக்கும் மேல கட்டாயம் இருப்பான்.. ம்... நல்ல ஹயிட்தான்.. கலர் கொஞ்சம் கம்மிதான்.. பரவாயில்லை.. என்ன ஒண்ணு.. அட்டை போலக் கருப்பு இல்லை.. மா நிறத்துக்கும் கொஞ்சம் கம்மிதான்.. அவன் சைஸ்.. அய்யோ.. இப்படிக் குஸ்தி பயில்வான் மாதிரி இல்ல இருக்கான்.. அவ அவ சிக்ஸ் பேக் அது இதுன்னு பீத்திப்பாளுங்க.. இவன் என்னடான்னா.. எயிட்பேக்.. டென்பேக்கா இல்லை இருக்கான்.. கட்டாயம் இவன் உடம்பை குறைக்கணும்.. இப்போ கூட பாரு, கொஞ்சம் நேரத்துக்குக்கூட வாயைக் கட்டுப்படுத்த முடியலை ..'



'ஹேய் என்னடி சத்யா.. நீ போற ரூட் சரியில்லையே??.. நீ எப்போதிலிருந்து அவனைக் கவனிக்க ஆரம்பிச்சே?.. இந்தக் கல்யாணம் எப்படி நடந்ததுன்னு மறந்து போச்சா?..'.. அதுவரை உறங்கிக் கொண்டிருந்த எங்கிருந்தோ எழுந்த அவள் பிளாக் மனம்.. அதாங்க அந்தக் கருப்பு கெட்ட மனசாட்சிங்க.., முழித்துக் கொண்டு.. இவ சிந்திக்க ஆரம்பித்தாள் தனக்குக் கஷ்டமாச்சே என அவளை அடக்கி ஆள நினைக்க..



'ஏன் அவனைப் பத்தி அவள் நினைக்கக் கூடாதா.. அவ நினைக்காம யார் நினைப்பா.. நீயா?.. அவளுக்கு எப்படிக் கல்யாணம் ஆனால் என்ன.. அது கல்யாணம் தானே?..' நம்ம நல்ல மனம் வெள்ளை மனம் அவளைச் சமாதானம் செய்ய..



'ஹலோ.. அது உனக்குப் பிடிக்காத கல்யாணம்.. மறக்காதே.. அத்தோடு அவன் உன் அக்காவை சைட் அடிச்சவன்.. அதிலும் படிக்காத பட்டிக்காட்டான்.. எதோ பட்டிணத்துக்காரன் பஞ்சு மிட்டாயைப் பார்ப்பது போல அவனை ரசிக்க ஆரம்பிக்காதே.. அவன் உனக்குச் சரி வரமாட்டான்..' என்று கருப்பு.. இப்பொழுது கொடி பிடித்தது.



'அவ பேச்சை கேட்காதே சத்யா.. கொஞ்சம் அவனை உத்து பாரு.. உனக்கேத்த மாதிரி அவனை மாத்தப் பாரு.. அப்ப தெரியும் அவனோட அருமை.." வெள்ளைக் கொடியோ அவளைச் சமாதானப்படுத்தியது.



"சே.. அடங்குங்கடி ரெண்டு பேரும்.. எப்படி இருக்கான்னு ஜஸ்ட் திங்க் பண்ணினதுக்கு இப்படியா?.. இந்தச் சத்யாவாது அவனை ஏற்பதாவது.. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது..'



சத்யா நிமிர்ந்து நடந்தாள் ரெஸ்ட் ரூமை நோக்கி.



"அஃது.." என்று கருப்பு சமாதானம் ஆகி வெற்றியுடன் படுத்துக் கொண்டது.



"பின்னே நீ பட்டினி கிடக்கப் போறீயா.. நீ புலி இல்லை.. புலித்தோல் போர்த்த பசு.. புல்லைத் தின்னாமல் என்ன செய்வே.. புரிஞ்சிக்கடி.." என்றபடி அப்போதைக்கு வெள்ளையும் சோர்ந்து போய் அடங்கியது.



ரெஸ்ட் ரூமை யூஸ் செய்து விட்டு வெளியே வந்த சத்யா.. சரி தானும் ஒரு டீ குடிக்கலாம் என எண்ணி அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.



ஏற்கனவே டீயை குடித்து முடித்திருந்த கதிர் சத்யா அவனை நோக்கி வருவதைப் பார்த்து விட்டு.. அவசரவரசமாக எழுந்தான் கதிர்.



"என்னாச்சு சத்யா.. ஏதாவது ப்ராப்ளமா?.. என்னாச்சும்மா..", எனப் பதற்றமாகக் கேட்க..



"என்ன என்னாச்சு.. ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் நானும் ஒரு டீ குடிக்கலாம்ன்னு வந்தேன்.. அவ்வளவுதான்.."



"ஓ.. நீ வேண்டாம்னியா.. அதான் நீ உள்ளே வரவும்.. நான் பயந்திட்டேன்.. சரிசரி வா.. உனக்கு டீ சொல்லறேன்..", எனச் சொன்னவன், அவள் அமர நாற்காலியை இழுத்துப் போட்டான்.



தாங்க்ஸ் என்றபடி அமர்ந்தவளுக்கு டீயை ஆர்டர் செய்துவிட்டு.. வேறு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டவன்.. "இல்ல.. இங்குச் சமோசா நல்லா இருக்கும்.. நானும் வெற்றியும் டிராவல் பண்ணும் போது அவன் எப்பவும் சாப்பிடுவான்.."



வேண்டாம் என மறுத்தவளுக்குத் தலையாட்டிவிட்டு அவளைப் பார்த்துக் கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தான்.. அதற்குள் டீ வந்துவிட, அவள் டீயை ரசித்துக் குடிப்பதை அவள் காணாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.



சத்யா அவனைக் கண்டு கொண்டாலும், எதுவும் பேசவில்லை.



அங்கிருந்து வெளியே வந்த கதிர், "நீ காருக்கு போ சத்யா.. நான் பின்னாடி வரேன்.."



‘சரி ரெஸ்ட் ரூம் போவானோ’ என நினைத்த சத்யா காருக்கு அருகே சென்றவள், கதவை திறந்து கொண்டு காரில் அமர்ந்தவள் கண்ணில் மீண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் கதிர் கண்ணில் பட எரிச்சலானாள்.



'சே..இதென்ன ஹாபிட்.. சரியான செயின் ஸ்மோக்கரோ.. இத்தனை நாளா நம்ம கண்ணுல படலியே?.."



அவனை எரிச்சல் படுத்த அந்தக் காரியத்தைச் செய்தாள் சத்யா.



சட்டென டிரைவர் சீட்டில் அமர்ந்தவள்.. காரை வேகமாகக் கிளப்பிச் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்த கதிரின் அருகே சடாரெனப் பிரேக் அடித்து நிறுத்தினாள்..



அலறி அடித்து நகர்ந்த கதிர் கோபமாக நிமிர அங்கே தங்கள் காரில் சத்யா டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பதைக் கண்டு பயந்து போனான்.



சட்டெனச் சிகரெட்டை கீழே போட்டு செருப்பால் தேய்த்து அணைத்து விட்டு, "ஏய்.. சத்யா.. என்ன பண்ணறே??.. உன் மனசுல என்ன நினைச்சே..முதல்ல காரிலிருந்து கீழே இறங்கு.. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடப் போகுது?.." பதட்டத்துடன் அதட்ட..



அவன் பதறுவதைக் கண்டு நன்றாகச் சிரித்தாள். இதில் காரிலிருந்து ஸ்டியரிங்க் வீலிலிருந்து கையை வேறு எடுத்து விட்டு,



"ஹலோ மிஸ்டர் பார்த்தா தெரியலை.. முதல்ல காருக்குள்ள ஏறு.. இல்லைன்னா அப்படியே உன்னை விட்டுட்டு எங்கம்மா வீட்டுக்கு நான் தனியா அபீட்டாயிடுவேன்.."



"அய்யோ சத்யா.. விளையாடாதே.. வேணாம்.. எங்கேயாவது காரை மோதினா அவ்வளவுதான்.. முதல்ல இறங்கு.. நான் இருக்கேன் இல்ல.. நான் ஓட்டுறேன்.." கதிர் விடாமல் டிரைவர் சீட்டை திறக்க முயல..



சட்டென வேகமாகக் காரை எடுத்த சத்யா.. முன்னே செலுத்த.. பதறி அடித்து அவளுடன் ஓடினான் கதிர்.



"ஏய்.. சத்யா.. வண்டியை நிப்பாட்டு.." எனக் கதிர் கத்த.. மெல்லக் காரை நிறுத்தியவள்..



"உள்ளே ஏறுங்க.. நான் ஓட்டறேன் காரை.."



பதில் பேசாமல் மறுபக்கம் வந்து ஏறி அமர்ந்தான் கதிர்.. அவன் மனம் பதற, முகத்தில் கோபம் கொந்தளித்தது.. 'இவளை....எவ்வளவு கொழுப்பு இவளுக்கு..'



அதற்கேற்றாற் போல அங்கிருந்த எவனோ ஒருவன்.. "நல்ல ஜோடி.. குண்டனுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தைப் பாருங்கடா.. சூப்பரான பிகர்.. தள்ளிட்டு வந்துட்டான் போல..", மற்றொருவனிடம் சொல்ல..



ரௌத்திரத்தின் உச்சியில் அடைந்தான் கதிர்.. அப்படியே கதவை திறந்து அவர்களை மொத்த எண்ணி இறங்க எத்தணிக்க.. சத்யாவோ அவன் எண்ணத்தை அறிந்தவள் போலக் காரை வேகமாகக் கிளப்பினாள்.



வெளியே இருந்தவர்களோ அவளைப் பார்த்து கையாட்டி விசிலடிக்க.. அதைக் கண்ட நம்மவன் மனம் பொரும.. சத்யா விசிலடித்தபடி வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்.



கதிர் அமைதியாக அவளைப் பார்த்தான்.. அவன் உள்ளுக்குள் கோபம் கனற்றுக் கொண்டிருந்தாலும், சத்யா விசிலடித்ததும்..



"உனக்குக் கார் ஓட்டத் தெரியுமா?.. விசில் எல்லாம் தூள் பறக்குது?.." அடக்கி வைத்திருந்த கோபத்துடன் அவளை அதட்டினான் கதிர்.



“ம்.. சூப்பரா ஓட்டுவேன்.. எப்பவும் எங்க வீட்டுலு லாங்க் டிரைவ்னா நானும், பிரகாஷும் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டுவோம்.. ம்.. அவன் தான் எனக்கு விசிலடிக்கவும் கத்து கொடுத்தான்.." என்று இளித்தவளைக் கழுத்தை பிடித்துத் திருகலாமா என்று தோன்றியது கதிருக்கு.



'எப்படி.. டென்ஷன் படுத்தி விட்டாள்.. இவளை.. இவள் மனசுல என்னைக் கிறுக்கன்னு நினைச்சிருக்கா.. இருக்கட்டும் இத்தனை நாளா பாவம் சின்னப் பொண்ணு சும்மா விட்டதுக்கு.. இனி என்ன பத்தி போகப்போகத் தெரிஞ்சிப்பா..'



"அப்போ உனக்கு ஓட்டத் தெரியுமுன்னா முன்னாடியே சொல்லறதுக்கு என்ன?.. இப்படித்தான் செய்வியா?.. ஒரு நிமிஷம் எனக்குக் கதிகலங்கிடுச்சு.. நாளைக்கே உனக்கு ஏதாவது ஆச்சுன்னா.. உன்னைப் பெத்தவங்களுக்கு நாங்க என்ன பதில் சொல்லறது.. இனி இந்த மாதிரி நடத்துக்காதே.."



“நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. அவங்களுக்கு என்னைப் பற்றி நல்லாவே விஷயம்.. அத்தோட நானும் பிரகாஷும் கார் ரேஸ் எல்லாம் கூடப் பார்ட்டிசிபேட் பண்ணி இருக்கோம்.. ம் .. எவ்வளவோ நாங்க எஞ்சாய் பண்ணியிருக்கிறோம்..“



சத்யா எதையோ நினைத்து மென்னகை புரிந்து கொண்டிருக்க.. கதிரோ..



“இவளுக்கு அந்தப் பிரகாஷ் மேல் ரொம்பக் காதலோ?.. அதான் அவளைப் பத்தியே பேசி என்னைக் கடுப்படிக்கறா?.. முகமெல்லாம் சிரிப்பா இருக்கு.. என்னைப் பார்த்தா மட்டும் முறைச்சி பயாமுறுத்துவா?..’



“ம்.. ரொம்ப நல்ல நினைவோ?.. அப்படி என்ன பூரிச்சி போற அளவுக்கு?..”



“ம்.. இன்ஃபாக்ட் எனக்கு இந்தக் கார் ஓட்டறதை கூடப் பிரகாஷ் தான் கத்துக் கொடுத்தான்.. அவன் அப்போ காலேஜ் பி.ஜி. செகன்ட் இயர்ல இருந்தான்.. நான் டுவெல்த்தான்.. பரிட்சை முடிஞ்சப்புறம் யாருக்கும் தெரியாமல் எனக்குக் கார் ஓட்ட கத்துக் கொடுத்தான்.. அம்மா ஒரு நாள் எங்களைக் கண்டு பிடிச்சு நல்லா திட்டு.. ஆனா அப்பா எனக்குச் சப்போர்ட்.. எப்படியா இருந்தாலும் நான் கார் ஓட்ட கத்துக்கணும் தானே.. பிரகாஷ் கிட்ட தானே கத்துகிட்டான்னு அம்மாவை அடக்கி விட்டார்..”



எனச் சிரித்த சத்யாவை கண்டு எரிச்சலானது கதிருக்கு.



‘இவ அவன் பேச்சை விட மாட்டாளா.. எதோ கொஞ்சம் பேசறாளேன்னு பார்த்தா.. வாயை திறந்தா பிரகாஷ் புராணம் தான்..’



“ம்… அப்படியா?.. இன்னும் என்னென்ன சொல்லிக் கொடுத்தான் அந்தப் பிரகாஷு?..” ஒரு மாதிரியாகக் கேட்டவனை..



சட்டெனத் திரும்பிப் பார்த்தாள் சத்யா.. ‘என்ன சொல்ல வருகிறான்.. இவன் பேச்சு சரியில்லை மாதிரி இருக்கு..’



“இல்லை வேறு ஏதாவது வண்டியும் ஓட்டிவியான்னு ஒரு ஆர்வத்தில் கேட்டேன்..”



‘ம்.. ஐயாவுக்குப் பொறாமையோ.. இருக்கட்டும்.. இவன் நக்கலை நான் அறியாதவளா.. இவனை.. விட்டேனா பாரு..’



“ம்.. எவ்வளவோ சொல்லிக் கொடுத்திருக்கிறான்.. அவனும் நானும் நல்ல ப்ரெண்ட்ஸ் தெரியுமா?.. சின்ன வயசிலிருந்தே எனக்கு ரொம்பச் சப்போர்ட்டா இருப்பான்.. நான் சைக்கிள் ஓட்டினா எனக்குப் பின்னாடி துணைக்கு வருவான்.. நான் டூ வீலர் ஓட்டும் பொழுது அவனும் என்னோடு பைக்கில வருவான்.



“இதுக்கெல்லாம் மேல எனக்குக் கணக்குன்னா பிடிக்காது.. எப்பவும் பிரகாஷ் தான் என் மண்டையில ஏத்துவான்.. அவன் எனக்குச் சொல்லி தர அழகில நானே பிடிச்சி போய் நல்லா கணக்கு போட ஆரம்பிச்சிட்டேன்னா பாருங்களேன்..



“ஒரு ஸ்டேஜ்ஜுல எனக்கு ஃப்ரெண்ட், பிலாசபர், கையிட் எல்லாமே பிரகாஷ் தான்.. அவன் இல்லைன்னா நான் இல்லை.. அதனால தான் நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கவும் சம்மதிச்சேன்.. என்னைப் புரிஞ்சிட்ட பிரகாஷ் என்னோட லைஃ பார்ட்னரா வந்தா நல்ல இருக்குமேன்னு..”



பெருமூச்சை விட்டபடி காரை சீராக ஓட்டிக் கொண்டிருந்த சத்யாவை பார்த்து கதிருக்கோ..



‘டேய் பிரகாஷ்.. மொத்ததுல நல்லா கணக்கு பண்ணக் கத்து கொடுத்திருக்கடா..”



எதுவும் பேசாமல் கண்களை மூடித் தூங்குவது போலப் பாவனைச் செய்தான் கதிர்.



சத்யாவோ கதிரை வெறுப்பேற்ற பிரகாஷை பற்றிப் பேச்சை தொடங்கி இப்பொழுது அவனை நினைத்து மனத் துன்பம் அடைந்தாள்.



‘சே.. பிரகாஷை எப்படி விரும்பினோம்.. அவன் தானே என்னோட லைஃப்ன்னு இருந்தோமே.. அதனால் தானே அவன் படிச்ச படிப்பையும் படிச்சேன்.. ஃப்யூச்சர்ல ரெண்டு பேரும் ஒண்ணா கம்பெனியை நடத்தலாம்னு கனவு கண்டோமே?..



‘இப்போ எப்படி இருக்கானோ?.. என்னை மிஸ் பண்ணுவானா?.. இந்த அப்பாவை சொல்லணும்.. இந்தக் குமரேசன் பெரியப்பா நல்ல ஸ்மார்ட்.. எப்படியோ நைச்சியமாகப் பேசி.. அந்தப் படிக்காத வேதாவை என் பிரகாஷோட தலையில கட்டிட்டாரே?..



‘இந்தப் பெரியம்மாவும் கில்லாடி.. கல்யாணம் நின்னு போனதும்.. எப்படி நைச்சியமாகத் தன் அண்ணனிடம் ஒப்பாரி வைச்சி அவருடைய மகனைக் கட்டி வைச்சிட்டாரே?.. இந்தப் பட்டிக்காட்டுச் சாதூர்யம் அவரோட தங்கைக்கு இருந்திருந்தா நான் இன் நேரம் மாமா வீட்டுல அடி எடுத்து வைச்சிருப்பேனே..’



கார் அவள் கையில் பறந்தது.. தன் இழப்பையெல்லாம் காரை ஓட்டும் வேகத்தில் காண்பித்தாள்.



“எதுக்கு இப்போ இவ்வளவு வேகம்.. யார் மேல கோபம்?.. உண்மையில பார்த்தா நான் தான் உம்மேல கோபமா இருக்கணும்.. நீ பண்ணக் காரியத்துக்கு.. சரி நல்லாத்தான் கார் ஓட்டறேன்னு சும்மா இருந்தா.. திரும்பவும் இவ்வளவு வேகமா?.. முதல்ல காரை நிறுத்து.. நான் டிரைவ் பண்ணறேன்..”



கதிர் கடுப்படித்தான்.



“ஷ்.. சும்மா.. வெறுப்பேத்தாதே.. எனக்கு எல்லாம் தெரியும்.. நீங்கப் பண்ண காரியத்தைப் பார்த்து தான் நானே காரே எடுத்தேன்.. அது சரி நீங்க சிகரெட்டெல்லாம் பிடிப்பீங்களா?..”



சட்டென அவன் மனதில் சாரலடித்தது.



இவள் நம்மைக் கவனிக்கிறாள்..



“எதுக்குக் கேக்கறே.. நான் பிடிச்சதை பார்த்தியா?.. அப்படி நான் என்ன பண்ணேன்.. சிகரெட் பிடிச்சதா?..’



“ம்..”



“எனக்குச் சந்தோஷமா இருந்தாலும், கோபமா இருந்தாலும் சிகரெட்டை பிடிச்சி என்னைச் சமாளிச்சிப்பேன்..”



“ஓ.. அப்போ சார் ரெண்டு வாட்டி பிடிச்சிங்களே.. அப்போ கோபமா?.. சந்தோஷமா?.. ஆனால் மிஸ்டர் கதிர்.. எனக்கு இந்தச் சிகரெட்டை ஸ்மெல்லுன்னால அலர்ஜி.. இப்படித்தான் ஒரு வாட்டி பிரகாஷ் சிகரெட்டை பிடிச்சிட்டு கிட்ட வந்தான்.. செமையா ராடு விட்டேன்.. சிகரெட்டை பிடிச்சிட்டு என் பக்கத்துல வராதேன்னு..”



“அதான் நீங்க அங்க ஊதரதை பார்த்திட்டு கடுப்பாய் காரை எடுத்தேன்..”



‘ஓ.. திரும்பவும் அவன் புராணமா?.. இவ அவனை மறக்கவே மாட்டாளோ?.. பக்கத்துல வந்தானா?.. என்னத்தைச் செய்தானோ?..”



‘அதுக்கு நீ முயற்சி பண்ணாதானே?..’



“ஓ.கே. இனி மேல் நானும் பிடிக்கலை..” என்றவன் தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை தூக்கி எறிந்தான்.



“ஹேய்.. நான் பிரகாஷ் பிடிச்சது பிடிக்கலைன்னுதான் சொன்னேன்.. உங்களைச் சொல்லலை.. இட்ஸ் யுவர் விஷ்..” அசால்ட்டாகச் சொல்லி அவனுக்கு ஆப்பு அடித்தாள்.



‘சே.. இவளை.. இவளுக்குப் பிடிச்சா மாதிரி நடந்துக்கலாம்ன்னு பார்த்தா.. கொழுப்பெடுத்தவள்..’



வந்த ஆத்திரத்தில் மீண்டும் சிகரெட் பிடித்தால் கூடப் பரவாயில்லை என்று தோன்றியது.. ‘இவளுக்காக அதை வேறு தூக்கி ஏறிஞ்சாச்சு..’



வாயை மூடிக் கொண்டு கண்ணை மூடினான் கதிர்.



அவனை அறியாமல் தூங்கி விட்டான் போல..



“ஹேய்.. கதிர் எழுந்திருங்க.. அம்மா வீட்டுக்கு வந்தாச்சு..” என்ற சத்யாவின் உற்சாகக் குரலில் பதறி அடித்து எழுந்தான்.



பிரம்மாண்டமான பங்களாவின் முன்னால் காரை நிறுத்திருந்த சத்யாவை பார்த்தபடி காரின் கதவைத் திறந்தான்.



“வாங்க மாப்பிள்ளை.. ரிலாக்ஸ்.. மெதுவா வாங்க.. வாம்மா சத்யா.. முதன் முதல்ல வர்றீங்க.. அப்படியே கொஞ்சம் நில்லுங்க.. ரேவதி அந்த ஆரத்தி தட்டை எடும்மா..”



ராஜ்குமாரின் குரலில் மெல்லப் புன்னகைத்தபடி காரிலிருந்து இறங்கினான் கதிர்.



“சத்யா.. மாப்பிள்ளையோடு சேர்ந்து நில்லு..” தாயின் குரலில் கதிரின் பக்கத்தில் நின்றாள் சத்யா.



இனம் புரியா உணர்வு தோன்றியது கதிருக்கு.. சத்யா பக்கத்தில் நெருங்கி நின்றதாலா இல்லை வேறு என்னவோ.. ‘இல்லை சத்யா தள்ளி அல்லவா நிற்கிறாள்.. இது வேறு எதுவோ..’



யாரோ தன்னைத் துளைக்கும் உணர்வு.. சட்டென நிமிர்ந்து பார்க்க.. பக்கத்தில் ஒட்டியிருந்த பங்களாவின் ஒரு பால்கனியில் இருந்து யாரோ உறுத்துப் பார்ப்பது தெரிந்தது….



‘யார் இவன்.. ஒருவேளை.. ‘



சத்யாவின் மலர்ந்த முகத்தைப் பார்த்து கதிர் இறுகினான்.







**************************************************************************************

 

Jothiramar

Moderator
Staff member
இரு வேறு துருவமாக கதிர் சத்யா அடுத்து என்ன நடக்குமோ??
 
Top