அத்தியாயம் 14
அன்று இரவு வெகு நேரம் ராஜ்குமாரிடம் பேசிக் கொண்டிருந்தான் கதிர்.. சத்யா தன் தாய் ரேவதியுடன் பேசியபடி தன்னறைக்குள் சென்று மறைந்து விட்டாள்.
ராஜ்குமார் அவன் தொழிலை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். முன் காலத்தில் அவருடைய மூதாதையர்கள் விவசாயத்தில் இருந்தவர்கள் தான்.. ஒரு கட்டத்தில் விவசாயம் பொய்த்து அவர்கள் சென்னைக்குத் தொழில் செய்ய வந்துவிட.. அவருடைய பெற்றவர்களும் அவர்களைத் தொடர்ந்து வேறு தொழில்களில் இறங்கி விட்டனர்.
அதைப் பற்றிச் சொல்லி கொண்டிருந்தவர் அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
கதிரும் அவர்கள் நிலத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களைப் பற்றிச் சொல்லியவன்,
"முடிந்தவரை எங்களுக்குக் கரும்பு சாகுபடிதான் மாமா.. கொஞ்சம் நிலத்தில் வீட்டுக்குத் தேவையான நெல்லை விதைச்சிடுவோம்.. மிச்சத்தை வெளியே அனுப்பிடுவோம்.. நமக்குச் சொந்தமா ரைஸ் மில்லு இரண்டு இருக்கு இல்லையா?.. ஊர்ல வேறு யார்கிட்டேயும் இல்லை.. அதிலிருந்தும் நமக்கு வருமானம் வரும்.
"அப்பா காலத்தில வெளியில கரும்பையெல்லாம் அனுப்பிட்டு இருந்தாங்க.. செங்கல் சூளையை மட்டும் அவர் பார்த்திட்டு இருந்தார்.. பிறகு நான் தலை எடுத்ததும் கரும்பு ஆலையைத் தொடங்கினேன்.. அதுல நமக்கு நல்ல வருமானம் இப்போ கிடைக்குது.. அதுக்குப் பிறகு இரண்டு வருஷத்துக்கு முன்னால ஜவ்வரிசி ஃபேக்ட்டிரியும் ஆரம்பிச்சேன்.
"அம்மா காலத்துக்கு அப்புறம் அப்பா அவங்க ஞாபகமா கல்யாண மண்டபமும் கட்டி வாடகைக்கு விட்டிருக்காரு.."
"அப்ப மாப்பிள்ளை.. ஏதோ கல்லூரி இருக்குன்னு சக்திவேல் சொன்னாப்பல.."
"ஆமாம் மாமா.. ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி கலை, மற்றும் அறிவியல்
கல்லூரி ஒண்ணு தொடங்கி இருக்கோம்.. முதல்ல அது பொம்பளை புள்ளைங்க கல்லூரி ஆரம்பிக்கலாம்னு யோசிச்சு கடைசில இரண்டு பேருக்கும் பொதுவா தொடங்கிட்டோம்..
“சுத்து பட்டு கிராமங்களில் தனியா பெண்களுக்குன்னு நல்ல கல்லூரியே இல்லை.. அப்பாவுக்கு ரொம்ப ஆசை பெண்களுக்கென்று பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் ஒரே இடத்தில் தொடங்கணம்னு.. இடம் கூட எங்களுக்குச் சொந்தமா இருக்கு.. ஆனால் எனக்குத்தான் இப்போ நேரம் போதலை.. கொஞ்சம் காலம் கழித்துப் பார்க்கணும் மாமா.."
"நல்ல எண்ணம் தானே.. படிப்பு சொல்லி தருவது ஒருத்தருக்கு வாழ்க்கையே கொடுத்தா மாதிரி இல்லையா மாப்பிள்ளை.. ஒரு பெண் படித்திருந்தால் அந்த வீடே உயருமே.."
"ஆமாம் மாமா.. அப்பாவுக்கு நான் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன்னு ரொம்ப மனக்குறை.. அந்தச் சமயத்துல எனக்கு அம்மா இல்லை.. நான் ரொம்ப அம்மா பிள்ளை.. அவங்க எங்களை விட்டுட்டு போனப்பின்னால எனக்கு எதுலையும் பிடிப்பு வரலை.. ரொம்பவும் ஏங்கிப் போயிட்டேன்.. ஸ்கூல் படிப்பையே தட்டுத் தடுமாறி முடிச்சேன்.
"அப்பா எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தாரு.. எனக்கு எதுவும் பிடிக்கலை.. எங்கம்மா எப்பவும் அப்பாவோட வயல்லே இறங்கி விருப்பமா வேலை செய்வாங்க.. அவங்கதான் இந்தக் கரும்பாலைகள் தொடங்கனோம்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. என்னமோ எனக்கு அப்போ அவங்க சொன்னதே தோணிட்டு இருந்ததுல படிப்பை விட்டுட்டு விவசாயத்துல இறங்கிட்டேன்.
"பின்னாடி அப்பா ஆசைக்காக நான் இந்தக் கல்லூரி எல்லாம் தொடங்கியது.. இப்போ கூட அதுல எனக்குப் பிரியம் அவ்வளவா இல்லை.. எனக்கு எப்பவும் விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில்கள் தான்.. அதான் மாமா இப்போ வெற்றியை பார்த்துக்கச் சொல்லிவிட்டேன்.."
"ம்..... நல்லது மாப்பிள்ளை.... படிப்பென்ன படிப்பு.. சொல்லுங்க.. நம்ம நாட்டுல படிக்காத மேதைங்க எத்தனையோ பேர் இல்லையா என்ன?. நீங்க விரும்பினா இப்போ கூட விவசாயம் சம்மந்தமா ஏதாவது படிக்கலாம்.. படிப்பதற்கு நேரம், காலம் இல்லை வயசோ கிடையாது.."
"மாமா.. நான் இப்படிக் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. இப்படிப் படிக்காத என்னை உங்க பொண்ணுக்கு கட்டி வைச்சிட்டீங்களே.. அதுக்கு வருத்தப்படலையா?.." என்ற கதிரை..
"சே..சே.. அதெல்லாம் இல்லவே இல்லை.. படிப்பெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை... வாழ்க்கையில படிப்பதற்கு எவ்வளவோ இருக்கும்போது இந்த ஏட்டுக் கலவியா முக்கியம்.. உங்களுக்கு இருக்கிற அனுபவமே படிப்புதானே?.. ஒருத்தரோட அனுபவமே வாழ்க்கைக் கல்விதான்.. அதை விட என்ன வேறு என்ன வேணும் சொல்லுங்க..
“நான் தான் சொன்னேனே இப்ப நினைச்சா கூட நீங்க படிக்கலாம்.. நீங்க படிக்கலைன்னே யோசிச்சு உங்களையே தப்பா நினைச்சி தாழ்த்திக்காதீங்க..
"நீங்க ஏன் இப்படிக் கேக்கறீங்கன்னு எனக்குப் புரியுது.. என் பொண்ணு சத்யாவை நான் சரியா வளர்க்கலையோன்னு இப்போ நான் யோசிக்கறேன்.. அவ நடந்துக்கற முறையைப் பார்த்து மனசுக்கு வருத்தமா இருக்கு.. ஆனாலும் ஒரு தகப்பனா அவளோட கோபமும் புரியுது.
“நீங்க ரெண்டு பேரும் இங்க வந்ததிலிருந்து நானும் பார்த்திட்டுத்தான் இருக்கேன்.. உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் சரியா பிடிப்பு வரலைன்னு அவளோட நடவடிக்கையிலேர்ந்து தெரியுது.. நீங்க ரெண்டு பேரும் சரியா புரிஞ்சிக்கணும்னு தான் கொஞ்சம் அவகாசம் கொடுத்து இத்தனை நாள் கழிச்சி மறு வீட்டு விருந்துக்கு அழைச்சேன்.
“ஆனாலும் இப்போ என் பொண்ணு உங்களை எடுத்தெறிந்து பேசறதைப் பார்த்தால் இந்தனை நாளில கொஞ்சம் கூட அவ இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கிட்டாளான்னு எனக்குத் தெரியலை..
“அதுவும் ராஜன் வீட்டில கொஞ்சம் நேரம் முன்னாடி அவ உங்ககிட்ட நடந்துகிட்ட முறைக்கு ஒரு தகப்பனா நான் அறைஞ்சிருக்கணும்.. ஆனாலும் கல்யாணம் ஆன பின்னாடி எனக்கு அந்த உரிமையில்லைன்னு அடக்கிகிட்டேன்.. நீங்களே புருஷனா அவளைப் பொறுத்துப் போகும்போது நான் இதுல தலையிட விரும்பலை.
“அதுவுமில்லாமல் என்னதான் இருந்தாலும் ராஜேந்திரனோடு தங்கச்சியை நான் கட்டி இருக்கும் போது.. அங்கே என் மகளைப் பேசி அவமானப் படுத்து முடியாம சும்மா இருந்திட்டேன்..
“சின்ன வயசிலேர்ந்து பிரகாஷோட சேர்ந்து வளர்ந்திட்டா சத்யா.. அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது..
“நாங்க எல்லோருமே அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்தான் தான் இருந்தோம்.. பட் என்ன செய்யறது?.. யாருக்கு யார்ன்னு விதிச்சிருக்கும் போது அதை ஏத்துக்கப் பழகிக்கணும்..
“நாம நினைச்சது கிடைக்கலேன்னா.. கிடைச்சதை ஏத்துக்கப் பழகிக்கணும்..”என்று ராஜ்குமார் மனம் திறந்து பேசினார்.
“விடுங்க மாமா.. சத்யாவை நான் பார்த்துக்கறேன்.. நீங்க பீல் பண்ணாதீங்க.. அவளை நான் தப்பா நினைக்கலை.. அவளோட நிலை எனக்குப் புரியுது.. அவ குழந்தை மாமா.. இத்தனை நாளா தனக்குன்னு வைச்சிருந்த பொம்மையைப் பிடுங்கி வேறு ஒருத்தருக்கு கொடுத்தா.. அதான் இப்போ அவளுக்குக் கோபம்.. போகப் போக எல்லாம் சரியாகிடும்..”
"நீங்க சொல்லறது வாஸ்துவமான பேச்சு.. குழந்தைகளுக்கு நோய் வந்தா கசப்பா மருந்தை அழ அழ நாம் புகட்டுவோமே.. அந்தக் கசப்பை கொடுக்கலைன்னா உடம்பு நோவு எப்படிச் சரியாகும்.. அது போலத்தான் இதுவும்.. அவள் கட்டாயம் உங்க நல்ல மனசை புரிஞ்சிக்கிற காலம் வரும்.. நீங்க அவளைச் சின்னக் குழந்தையா நினைச்சு மன்னிச்சிடுங்க.. அவ உதாசீனத்தைக் கொஞ்சம் பொறுத்துக்கங்க.. கட்டாயம் அவ உங்களைப் புரிஞ்சிப்பா.. அதுவரைக்கும் கொஞ்சம் நீங்க காத்திருக்கணும் மாப்பிள்ளை..
"இதை நான் ஒரு பெண்ணைப் பெத்த தகப்பான உங்களை இறைஞ்சி கேட்டுக்கறேன்.. அவளை வெறுத்து ஒதுக்கிடாதீங்க..” என்று உணர்ச்சி வசப்பட்டார் ராஜ்குமார்.
"அய்யோ மாமா.. என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க.. ப்ளீஸ்.. அவ மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை.. அவளுக்குப் பிடிச்சவனா நான் இல்லையேங்கற வருத்தத்தைத் தவிர.. எனக்குச் சத்யாவை பத்தி நல்லா தெரியும்.. அவ மனசு புரிகிறது..”
“அவ இப்போ நிச்சயம் குழப்பத்தில் தான் இருக்கா..கட்டாயம் அவளும் என்னைப் புரிஞ்சிப்பா.. நாங்க சந்தோஷமா வாழப்போற காலம் வரத்தான் போகுது.. அதை நீங்க பார்க்கத்தான் போறீங்க.." என்றான் கதிர் அவருக்கு ஆறுதலாக..
"சரி மாப்பிள்ளை.. ரொம்பச் சந்தோஷம்.. ரொம்ப நேரமா பேசிட்டு இருந்திட்டோம்.. பெண்கள் இரண்டு பேரும் ரூமுக்கு போய் விட்டாங்க போல.. இப்போ கூட இந்த சத்யாக்குக் கொஞ்சம் கூடத் தெரியலை பாருங்க.. புது இடம்.. உங்களை ரூமுக்கு அழைச்சிட்டு போக வேண்டாமா?.. என் பெண்டாட்டி ரேவதியும் சொல்லிக் கொடுக்கலை பாருங்க.."
"பரவாயில்லை மாமா.. நான் போயிக்கிறேன்.. எனக்கு ரூம் தெரியும்.. ஏற்கனவே எங்க சாமானெல்லாம் எடுத்து வைக்கப் போன போது பார்த்தேனே.. நீங்க இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க.. அத்தை அப்போவே சொல்லிட்டுத்தான் போனாங்க.. அத்தோடு அவங்க சத்யா மேல கோபமாத்தான் இருக்காங்க.. பாவம்..” என்றவன்..
“அப்புறம் மாமா.. என்னை நீங்க கதிர்ன்னே கூப்பிடலாம்.. நானும் பிரகாஷ் மாதிரிதான் உங்களுக்கு இன்னொரு மகன்.." என்ற கதிருக்கு..
‘இவனுக்குப் பிரகாஷ் மேல் கொஞ்சம் மனத்தாங்கல் இருக்குமோ..இல்லையென்றால் இப்படிப் பேச வேண்டிய அவசியமென்ன.. எல்லாம் இந்தப் பெண் சத்யாவை சொல்லணும்.. இப்படிப் புருஷனை கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே..’ அதைப் பற்றி மேலே யோசிக்கப் பிடிக்காமல்..
"இல்லை மாப்பிள்ளை.. எனக்கு இருப்பது ஒரே மகள் தானே.. நீங்க அவளுடைய கணவன்.. எனக்கும் உங்களை முறை வைத்து அழைப்பது பிடித்திருக்கு.. நீங்க என்னோட இன்னொரு மகன் என்றாலும்.. உங்களுக்குரிய மரியாதையை நான் கொடுக்கணும்.. அதைத் தடுக்காதீங்க ப்ளீஸ்.."
"சரி மாமா.. உங்கள் இஷ்டம்.." என்றவன் அவரிடம் தலையாட்டி விட்டு சத்யாவின் அறைக்குள் சென்றான்.
அங்கே சத்யாவோ நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.. பாதிக் கட்டிலை ஆக்கிரமித்துக் கொண்டு, போதாதற்கு அவளுக்குத் துணையாகச் சில பொம்மைகள் வேறு பரப்பி வைத்துச் சின்னக் குழந்தை போலத் தூங்கிக் கொண்டிருந்தவளை கண்ட கதிருக்கு என்னவோ போல இருந்தது.
'இப்போ நான் எங்கே தூங்குவது?.. இந்தக் கட்டில் வேறு சின்னச் சைஸ்ஸாக இருக்கு.. இரண்டு பேருக்கு மேல் படுக்க முடியாது போல.. இதுல பொம்மைகளை வேறு கட்டிட்டு தூங்கறா?..
'நம்ம வீட்டுல அவ தனி அறையில தூங்கினா?.. இல்லைன்னாலும் என்னோட கட்டில்ல நாலு பேரு படுத்து உருளலாமே?.. ம்.. சரி சோபாவுல தூங்குவமா?.. அய்யோ இதுல நான் எப்படி.. எனக்கு இதெல்லாம் போதாதே?..'
சின்னச் சைஸ் சோபா அவனைக் கண்டு பல்லிளித்தது.
'ம்.. அவ பக்கத்துல படுத்திட்டா நம்மளை பத்தி என்ன நினைப்பா.. முதல் நாள் அவளைத் தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ இங்க படுத்தா எதையாவது தப்பா புரிஞ்சிட்டா.. கட்டாயம் நம்மைக் கிழிச்சி தோரணம் கட்டுவா..’
‘ஏற்கனவே வந்த உடனே அவளைக் கட்டி பிடிச்சி கடுப்பேத்தியாச்சு.. பாவம் மாமா அது தெரியாமா.. என்னவோ அவர் பொண்ணு என்னை அலட்சியம் பண்ணிட்டதா ஃபீல் பண்ணுறார்..’
‘உண்மையில அவ நான் அவளைக் கட்டி பிடிச்சதக்கு என்னை வெறுப்பேத்த என்னைக் கண்டுக்காம பிரகாஷோடு பேசப் போனா.. அதை நான் அவர்கிட்ட சொல்ல முடியுமா என்ன?.. ஆனாலும் இவளும் ரொம்ப ஓவராத்தான் செய்யறா?.. இருக்கட்டும்.. ஊருக்கு போவதுகுள்ள இவளை எப்படியாவது என்னைப் பார்க்க வைக்கணும்..’
‘ம்.. அதை விடு.. முதல்ல மணி ஆகுது.. தூக்கம் கண்ணைச் சொக்குதே.. இப்போ என்ன பண்ணலாம்.. ஆனா இப்போ வேற வழி.. தரையில படுக்கலாமா.. ம்.. ரூம்ல ஏசியை வேற போட்டு விட்டுருக்காளே..’
"சரி என்ன வேணா நினைச்சிகட்டும்.. அவதானே எனக்கு இடம் ஒதுக்கி வைக்கலை என் தப்பா.. எதாவது சொன்னா இருக்கு அவளுக்கு.. இந்தக் கதிரை என்ன நினைச்சா..'
மெல்ல அவளைச் சுற்றியிருந்த பொம்மைகளை எடுத்து ஒதுக்கி வைத்தான்.. இது என்னாடா இது இத்தனை வைச்சிருக்கா.. எவ்வளவு மெத்து மெத்துன்னு எல்லாம் இருக்கு.. அவனுக்கு ஒவ்வொன்றும் அதிசயமாக இருந்தது.
அது மாதிரி டெட்டி பொம்மைகளை அவன் இதற்கு முன்னால் பார்த்ததில்லை.. அதுவும் இல்லாமல் பொம்மைகள், சொப்புச் சாமான்கள் எல்லாம் பெண் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் என்று மட்டுமே அறிந்திருந்தான்.. அவனும் வெற்றியும், கோலி, கில்லி, சைக்கிள் டயர் உருட்டுவது, கம்பு சுற்றுதல் என்று இப்படிக் கிராமப்புற விளையாட்டுகளை விளையாடுபவர்கள்.
இத்தனை வயதான பெண் இப்படிப் பொம்மையுடன் விளையாடுவாளா?.. ஒரு வேளை இவளும் வளர்ந்த குழந்தையோ.
எப்படியோ அவள் அருகில் படுத்தவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.. முதல் முறையாக ஒரு பெண் அவனருகே.. தாய் அருகில் விவரம் தெரியாத வயதில் படுத்தவன் தான் அவன்.. ஆனால் அது வேறு அல்லவா..
வளர்ந்த பின் அவன் அருகே ஒரு பெண் அதுவும் அவனது மனைவி.. அவனுக்கே சொந்தமானவள் என்ற பொழுது அவனுக்கு எதைஎதையோ யோசிக்கத் தோன்றியது.. கணவன் மனைவி உறவை அறியாதவன் இல்லையே அவன்.
அவளிடமிருந்து கமழ்ந்து வந்த மல்லிகை பூவின் நறுமணம் அவன் நாசியைத் துளைத்தது.. 'இது என்னடா இது புது அவஸ்தை.. பேசாமல் இறங்கி தரையில் படுத்து விடலாமா' என யோசித்தவனுக்கு ஆப்பு அடித்தது.
சத்யா அவனருகில் நகர்ந்திருந்தாள்.. அவன் கால் மேல் தன் காலை பட்டெனப் போட்டவள், அவன் மார்பில் தலை வைத்திருந்தாள்.. ‘அடிப்பாவி.. தூக்கத்திலேன்னாலும் இப்படியா?.. பொம்மைன்னு நினைச்சாளோ என்னை?..’
'அய்யோ இப்போ என்ன செய்வது.. கொஞ்சம் நகர்த்தி விடுவோமா?.. மெல்ல அவள் தலையை நகர்த்த கையை வைத்தவன் அவனறியாமல் அவளை அணைந்திருந்தான்.
'டேய் கதிர் இது சரியில்ல.. எடுடா கையை.. வேணாம்.. இது தப்பு.. தூங்கறவளை இப்படிச் செய்யலாமா?..'
‘அடங்கு மனமே அடங்கு.. இவ என் பெண்டாட்டி.. நான் கையைப் போடுவேன்.. இல்லை காலையும் போடுவேன்.. நீ யாருடா கேக்கறத்துக்கு.. நான் கையைப் போடலையே?.. அவதானே என்னை முதல்ல கட்டி பிடிச்சா.. கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ண நான் என்ன மடையனா?..’ அதை அதட்டியவன்.. இப்பொழுது நன்றாக அவளை அணைத்து அவளைத் தலையில் மெல்ல முத்தமிட்டான்.
மீண்டும் அவள் ஸ்பரிசம்.. மாலையில் அவன் அனுபவித்த அதே மணம்.. அவனைக் கிறங்க வைத்தது.. மெல்ல அவள் முகத்தை நோக்கியவன் அவளை ரசிக்க ஆரம்பித்தான்.
'ம்.. இவதான் எவ்வளவு அழகா இருக்கா.. வட்ட வடிவான முகம்னு சொல்ல முடியாது. கொஞ்சம் நீண்ட முகம் தான்.. பிறை நெற்றி.. வில்லை வளைச்சா போலப் புருவம்.. அதுக்கு மத்தியில கடுகு சைஸ் பொட்டு.. இமை மூடிய விழிகள்.. அவை எப்பவும் துதுருவென அலைபாய்வது அவனுக்கு நினைவு வந்தது.. அந்தக் கொட்டைபாக்கு.. இல்லையில்ல.. திராட்சை கண்ணை வைச்சி முறைச்சா.. நான் அம்பேல்தான்..’
‘இவளுக்குச் சொப்பு போன்ற மூக்கு.. அதுல சின்ன வெள்ளை கல்லு மூக்குத்தி போட்டா நல்லாத்தான் இருக்கும்.. ஆனா அவளுக்குப் பிடிக்குமா தெரியலயே.. கன்னத்தைப் பாரு அப்படியே நல்ல கொழுகொழுன்னு இருக்கு.. நல்லா கிள்ளிட்டு ஒரு முத்தம் வைச்சா..’
அவன் கையில் தன்னையறியாமல் அவள் கன்னத்தை வருடின..
ம்.. அவள் மெல்ல அசைவது கண்டு சட்டெனக் கையை எடுத்தவன் அவளையே பார்க்க.. இப்பொழுது இன்னும் அவனை இறுக்கிக் கொண்டாள்.
‘அடிப்பாவி.. இப்படி இறுக்கினா.. நான் சின்னப் பையன் என்னடி பண்ணுவேன்.. ‘
‘சத்யா.. சத்தி.. சது.. இனிமே நீ எனக்குச் சது செல்லம் தான்..சது குட்டி தான்’ அவள் கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தவன் மெல்ல நிமிர்ந்தான்.
அவன் ஆராய்ச்சி தொடர்ந்தது.. அவள் கள்ளூறும் கொவ்வை இதழ்களைப் பார்த்தவனுக்கு உன்மத்தம் தலைக்கேறியது.. மாலையில் அவள் இதழ் தேனைப் பருகியது நினைவில் வர மீண்டும் அதைச் சுவைக்க நினைத்தான்.
பருகியிருப்பானோ என்னவோ.. மீண்டும் சத்யா அசைய.. 'இவ ஒருத்தி ஒரு எடமா படுக்கிறாளா?.. இப்படியா உருளுவா.. சரியான இம்சை..' எனச் செல்லமாக வைதவன்.. மீண்டும் அவளை ரசிக்கத் தொடங்க..
இப்பொழுது அவள் முன்னேறிப் படுத்திருந்தாள்.. அவள் கழுத்து அவன் முகத்திற்கு நேராய்.. அவன் கண்கள் நிலைகுத்தி நின்றன.. அவனால் பார்வையை நகர்ந்த முடியவில்லை.. அவள் அணிந்திருந்த மெல்லிய நைட்டி அவள் மேலழகை அப்பட்டமாய்க் காட்ட.. மயக்கம் வருவது போல இருந்தது.. அவன் கைகள் தனிச்சையாகக் கீழே இறங்க எத்தணிக்க.. சட் வலை அறுந்தது..
சட்டெனக் கண்களை மூடினான்.. தன்னைச் சமன் படுத்திக் கொண்டான்.. இது தப்பு.. நிர்மலமாய் உறங்கும் பெண்ணை அவள் அறியாமல் நினைத்ததே தப்பு.. இதில் முத்தமிட்டாயிற்று.. இதற்கு மேல்.. என்ன செய்ய இருந்தேன்..
இதைவிட வேறு கேவலம் இல்லை.. பிடிக்காத பெண்ணை, அவள் சம்மதம் இல்லாமல் தொட முயன்றதே தப்பு.. அதிலும் அவள் அறியாமல்.. ஏற்கனவே சாயங்காலம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.. திரும்பவுமா??..
தன் கைகளை விலக்கிக் கொண்டான்.. ஆனாலும் தன்னை அணைத்திருந்த அவள் கைகளை அகற்றவில்லை.. நான் போடவில்லையே.. அவள் தானே போட்டாள்..
தன்னைச் சமாதானம் படுத்திக் கொண்டு, அவள் பிடியில் தன்னைத் தொலைத்தவன்.. அந்தச் சுகத்தோடு.. நிம்மதியாய் கண்களை மூட.. முதல் முறையாகத் தன்னவள் அருகே உறக்கத்தில் தன்னையே தொலைத்தான்.
"டேய்.. குண்டா.. தள்ளுடா.. எப்படிடா என்னைக் கட்டி பிடிச்சி தூங்குவே?.. கொஞ்சமாவது மூளை இருக்கா.. நான் தான் நேத்திக்கே சொன்னேனே.. எனக்கு உன்னைப் பிடிக்கலைன்னு.. ஏண்டா என்னை அணைச்சிருக்கே.. விடு.."
அவன் காதருகில் யாரோ கத்துவது போலத் தெரிய.. கண்ணைத் திறந்தான் கதிர்.. சத்யாதான் அவனருகே எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் சிவந்த முகத்தைப் பார்த்தவன் இதழ்களில் மெல்லப் புன்முறுவல் தோன்ற..
"ஏய்.. அரிசிமூட்டை.. என்ன இளிப்பு காலையில.. என்னை ஏண்டா கட்டி பிடிச்சே.." அவனை உலுக்கிக் கொண்டிருந்தாள்.
கதிர் தன் கைகளைப் பார்க்க.. பாவம் அவைகள் அவன் பக்கத்தில் சாந்தமாக வீற்றிருக்க.. புரியாமல் சத்யாவை பார்த்தவனுக்கு இரவு நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்து இன்னமும் பெரிதாகப் புன்னகை புரிய வைத்தது.
“சது குட்டி.. நானா.. நான் எங்கே பிடிச்சேன்.. என்னடா செல்லம்..என்னாச்சு.. ஓ.. இந்த மாமனைக் கட்டி பிடிக்காம உனக்குத் தூக்கம் வரலையா?.. என் உடம்பெல்லாம் ஒரே நோவுடா.. இப்படியா இறுக்குவே??.. உன் காலை வேற தூக்கி போட்டா நான் எப்படிடா தாங்குவேன்.."
"டேய் திமிரா.. நானா.. என்ன எங்கப்பா உனக்குச் சப்போர்ட் பண்ணராங்கன்னு ரொம்பக் கொழுப்பு ஏறி போச்சா.. இதெல்லாம் எங்கிட்ட வேணாம்.. இந்தச் சத்யா ஆரம்பிச்சேன்.. நீ தாங்க மாட்டே?.."
"அதைத்தானேம்மா நானும் சொல்லுறேன்.. என்னால முடியலைடா சது குட்டி.. ராத்திரியெல்லாம் இப்படி இறுக்கினா.. ஏய் நீ ஆளு பார்க்கத்தான் குச்சி.. ஆனா உடம்பு முழுக்கும் நல்ல கொழுப்புதான்.. கொஞ்சம் உன் காலை எடுக்கிறியா.. காலெல்லாம் மரத்து போச்சு.."
அப்பொழுதுதான் சத்யா தன்னை உணர்ந்தாள்.. தன் கால்கள் அவன் மேல் இருக்க.. தன் இடக்கை அவனை வளைத்திருக்க.. வலக்கை அவனை உலுக்கிக் கொண்டிருந்தது.
பதறி அடித்து விலகி அமர்ந்தாள்.. உண்மை புரிய கட்டிலை விட்டுச் சட்டென இறங்கியவளுக்கு மானம் போனது..
'அய்யோ.. என்ன நினைச்சிருப்பான்.. ராத்திரி நானா.. இவன் எப்போ வந்து படுத்தானோ?.. நான் என்ன செய்தேனோ..'
"சா... சாரி.. நான்.. என் டெட்டி.. எனக்குத் தெரியலை.. எப்படி.. பொம்மையில்ல.." எனத் திணறியவள்.. சுதாரித்துக் கொண்டாள்.
"ஆமாம் .. நான்.. நீங்க ஏன் ரூம்ல.. அதுவும் என் கட்டிலில.. யூ.. நீங்க வேணும்ன்னு பண்ணிறீங்க.. உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?.. அது எப்படி என் கட்டில்ல தூங்குவீங்க??.."
பொரிந்து கொட்டினாள் சத்யா.
மெல்லக் கட்டிலை விட்டு இறங்கினான் கதிர்.. தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவன், தன் நீண்ட கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.. நாசூக்காக வந்த கொட்டாவியை வாயை மூடி வெளியேற்றியவன்..
"ஆமாம்டி என் பெண்டாட்டி.. எனக்கு அறிவு இருக்கப் போய்தான் இங்க படுத்தேன்.. அறிவைக் கடன் கொடுத்திருந்தேன்னா உங்க வீட்டு ஹாலிலே படுத்திருப்பேன்.. இவ்வளவு பேசறவா.. நான் எங்க தூங்கறதுன்னு சொல்லிட்டு தூங்கினியா?.. அதான் நான் ரூமுக்கு வர்றதுக்கு முன்னாடியே கும்பகர்ணனுக்குத் தங்கச்சி நான்னு தூங்கிட்டேயே?.. பின்னே நான் எங்க படுப்பேன்.. அதான் உன் பக்கத்தில் படுத்தேன்.."
வாயைப் பிளந்து நின்ற சத்யாவை கண்ட கதிருக்கோ சிரிப்பாக வந்தது.. எங்கே சிரித்து இன்னும் எதையாவது வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டாம் என்று தோன்ற..
"என்னடி பார்க்குறே.. முதல்ல தள்ளுடி.. போய்ப் பல்லை விளக்கிட்டு வரேன்.. போய்ப் பொண்டாட்டியா லட்சணமா புருஷனுக்குக் காப்பியை ஏற்பாடு பண்ணு.." என அவளை லேசாக இடித்தபடி குளியலறையை நோக்கி நகர்ந்தான்.
"இனிமே இப்படித்தாண்டா சது.." எனக் கட்டிலை காட்டிவிட்டு கதவை மூடப் போக.. எங்கிருந்தோ அவன் மேல் தலையணை வந்து விழுந்தது..
டமாலெனக் கதவை அடித்து மூடியவன்..'ஹப்பாடா.. தப்பிச்சாச்சு..' என வாய்விட்டுச் சிரித்தான் சத்தமாக.. அவன் மனம் என்றுமில்லாமல் மகிழ்ச்சியில் திளைந்திருந்தது.
நிதானமாக ஏதோ ஒரு பாட்டைச் சீட்டி அடித்தபடி குளித்து முடித்து டவலை கட்டிக் கொண்டு, வெளியே சத்யா இருப்பாளோ என்ற எதிர்பார்ப்புடன் வந்தவனுக்குச் சற்று ஏமாற்றமே.
அங்கே அவள் இருக்கும் அடையாளமே இல்லை.
தன் பெட்டியை திறந்து பொருத்தமான பேன்ட்டையும் சட்டையும் அணிந்து தயாரானான்.. இன்று பிரகாஷின் வீட்டில் அவர்களை விருந்துக்கு அழைத்திருப்பது நினைவுக்கு வர, சட்டெனக் குனிந்து தன் உடைகளை ஆராய்ந்தான்.
பரவாயில்லை.. தன் தோற்றத்திற்கு நன்றாகத் தான் இருக்கிறது.. பொருத்தமாகவும் இருந்தது.
சற்று நேரம் சத்யா வந்து அழைப்பாளோ என அவளுக்காகக் காத்திருந்தான்.. நேரம் கடந்ததே ஒழிய.. அவளைக் கண்ணிலேயே காணவில்லை.
வயிறு நான் இருக்கிறேன் எனச் சத்தமிட.. ஒரு டீயோ அல்லது காப்பியோ குடித்தால் தேவலை போல அவனுக்குத் தோன்றியது.
‘இது வேலைக்கு ஆகாது.. இவள் வருவாள் எனப் பார்த்திருந்தால்.. முடியாது போல.. நாமே கீழே செல்வோம்.., எனத் தீர்மானித்து அறையை விட்டு வெளியே வந்தான்.
மாடியில் இருந்து கீழே இறங்கியவன், சோஃபாவில் சத்யா அவள் தாயுடன் எதையோ சொல்லி அரட்டை அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
‘சே.. என்ன பெண் இவள்.. அங்கே நம் வீட்டில் அப்பத்தா இவளுக்குப் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்வாரே.. இவளானால் நம்மைக் கண்டு கொள்ளாமல்.. அரட்டை அடித்துக் கொண்டு..’
“குட்மார்னிங்க் சது.. குட்மார்னிங்க் அத்தை..”
சட்டென எழுந்தார் ரேவதி..
“வாங்க தம்பி.. குட்மார்னிங்க்.. காப்பிக் கொடுக்கவா?.. நல்லா தூங்கினீங்களா?.. ரூமுக்கு கொடுத்து விடலாம்ன்னு சொன்னேன்.. சத்யா நீங்க அசந்து தூங்கறதா சொன்னா..உங்களுக்கு யாராவது அறைகுறை தூக்கத்தில் எழுப்பினா பிடிக்காதாமே?.. அதான் நீங்களே வருவீங்கன்னு இருந்தேன்.. சாரி.. இதோ எடுத்து வருகிறேன்..”
ரேவதி தன் இருக்கையில் இருந்து பரபரப்புடன் எழுந்தார்..
“பரவாயில்லை அத்தை.. டிபனோடு காப்பிக் கொடுத்தா கூட ஓ.கே தான்..“ என்றவன்..
“ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை அத்தை.. ரொம்ப நேரமாச்சா.. அதான் கொஞ்சம் அசந்திட்டேன்.. ஏன் சதும்மா.. எதுக்கு இவ்வளவு சீக்கிரமா எழுந்தேம்மா.. இன்னும் கொஞ்சம் நேரம் என்னோடு படுத்திருக்கலாமே.. ராத்திரி எல்லாம் தலைவலின்னு என்னைப் பிடிச்சி விடச் சொன்னியே?.. இப்போ பரவாயில்லையா?..” என்று அக்கறையாகக் கேட்டவன் சத்யாவை பார்த்துக் கண்ணடித்தான்.
சத்யாவுக்கோ புரை ஏறி முகம் சிவந்தது.
‘அடப்பாவி.. இவன் பேசறதை பார்த்தா அம்மா என்ன நினைப்பாங்க என்னைப் பத்தி..;
ரேவதியும் கவனித்தாள் அவனுடைய குறும்பை.. ‘அவரும் எல்லாவற்றையும் கடந்து வந்தவர் தானே.. ஒருவேளை நேற்று அவள் அப்பா சத்யாவை கண்டித்ததில் ரெண்டு பேரும் ராசி ஆகிட்டாங்களோ..’
“நீங்க பேசிட்டு இருங்க.. சத்யா நான் காப்பியை கலக்குறேன்.. வந்து மாப்பிள்ளை தம்பிக்கு எடுத்துட்டு போ.. இல்லைன்னா அவரையும் கூட்டிட்டு டிபன் சாப்பிட வா..” எனச் சொல்லிவிட்டு விரைவாக அங்கிருந்து நகர்ந்தவர் காதுகளில்.........
‘டேய்.. நீ அடங்க மாட்டே போல.. உன்னை..”
“மாம்.. அவருக்குக் காப்பி, டிபனெல்லாம் பிடிக்காது.. கேப்பை கூழோ இல்லை.. நேத்து மீந்த பழைய சோத்துல தண்ணி ஊத்தி வைச்சிருந்தா.. ரெண்டு வெங்காயத்தை அதுல கட் பண்ணி குடுங்க.. அதைத்தான் அவர் விரும்பிச் சாப்பிடுவார்.. அவர் வில்லேஜர்ன்னு மறந்துட்டிங்களா என்ன?..”
கதிரின் முகம் கறுக்க.. சத்யா வெற்றி பெற்ற மிதப்பில் அவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
*******************************************************************************