கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 17

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 17



நாட்கள் அதி வேகமாக விரைந்தன..



ஒரு மாதத்திற்கு முன்பு கதிர் ஊருக்குச் சென்றவன் தான்.. ஊருக்கு நல்லபடியாகச் சென்றுவிட்டதாகத் தகவல் சொன்னவன்.. அதற்குப் பின் அவனிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை.



சத்யாவும் அதைப் பற்றிப் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.. விட்டது தொல்லை எனத் தன் தாய் வீட்டில் சீராடிக் கொண்டிருந்தாள்.



ஒரு மாதம் முன்புதான் திருமணமானவள் என்று யாராவது சொன்னால் நம்பக் கூட மாட்டார்கள்.. அந்த அளவுக்கு.. திருமணம் என்று ஒன்று ஆனதா என்று கேட்கும் அளவிற்கு அவள் நடத்தை இருந்தது.



ரேவதிக்கும், ராஜ்குமாருக்கும் தான் அவள் நடந்து கொள்வதைக் கண்டு பயமாக இருந்தது.. எங்கே இந்தப் பெண் தன் வாழ்க்கையைத் தொலைத்து விடுமோ எனக் கவலை கொண்டனர்.



அன்று காலை ஏழரை மணிக்கே வெளியே செல்ல தயாராகி வந்த சத்யாவை கண்ட ரேவதி,



"சத்யா.. என்ன இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டே.."



"ஹாய்.. மாம்.. ஹாய் டாட் குட்மார்னிங்க்..” என்றவள்.., ஆமாம்மா.. எங்க ப்ராஜக்ட் இப்போ முடிகிற தருவாயில் இருக்கு.. பிரகாஷ் இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பலாம்ன்னு சொன்னான்.. அதான்.."



கடந்த ஒரு மாதமாகப் பிராகாஷின் அலுவலகத்திற்குத் திருமணத்திற்கு முன்பு சென்றது போலச் செல்லும் மகளைக் கண்டிக்க வழியில்லாமல் சும்மா இருந்தார் ரேவதி.



எதையாவது பேச்சை எடுத்தால் அந்த ப்ராஜக்ட்டின் டீம் லீடர் அவள்தான் என்றும், கடைசிக் கட்ட வேலையில் விட்டு விட முடியாது என்றும் சொல்லி சொல்லியே அவர்கள் வாயை அடைத்தாள்.



மீறி எதையாவது சொன்னாலோ.. என் வாழ்க்கை என் விருப்பம்.. உங்கள் இஷ்டப்படி அதுதான் திருமணம் முடிந்து விட்டதே.. இன்னும் என்ன.. என்று சொல்லி அவர்களை மனம் வருந்த வைத்தாள்.



அவள் சுபாவத்தை அறிந்திருந்தவர்கள் இந்த ப்ராஜக்ட் முடியட்டும் எனக் காத்திருந்தார்கள்.. இன்று கடைசிக் கட்ட வேலை என்றதும் ரேவதி மகிழ்ந்து போனாள்.



"அப்போ.. நாங்க நல்ல நாள் பார்க்கட்டுமாடி.."



"எதுக்கு?.. ப்ராஜக்ட் முடிச்சு சப்மிட் பண்ணுவதற்கா?.."



"அடச்சீ.. அடங்குடி.. மறுவீட்டு விருந்துக்குன்னு அம்மா வீட்டுக்கு வந்துட்டு இப்படி இங்கேயே தங்கி இருக்கியே?.. இன்னும் எத்தனை நாள் இங்க இருக்கிறது?.. அதான் சீரோடு உன்னைக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுல விடறதுக்கு.. ஏற்கனவே ஒரு மாசம் ஆச்சு.. நீ இங்க வந்து.. மாப்பிள்ளையும் உன்னை ஒண்ணும் சொல்லலை.."



தன் தாய் என்ன சொல்ல வருகிறார் என அறியாத சின்னப் பெண்ணா என்ன சத்யா.. அய்யோ மீண்டும் அந்தப் பட்டிக்காட்டுக்கா.. முகம் சுளித்தாள் சத்யா.



அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரேவதிக்கு அவள் முகம் சுளிப்பதைக் கண்டு மனம் நடுங்கியது.. விட்டால் இந்தப் பெண் இங்கேயே இருந்து விடும் போல இருக்கே..



"இந்த வார கடைசில நல்ல நாள் இருக்குடி.. காலண்டர்ல போட்டு இருக்கு.. சுப முகூர்த்த நாளாம்.. அன்னிக்கு நாம கிளம்பலாமா?.. நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திடுறேன்.. என்னங்க.. உங்களுக்கு லீவ் இருக்கா.. இல்லைன்னாலும் பரவாயில்லை.. ஒரு நாலு நாள் ஆபீஸ் பக்கம் போக வேண்டாம்.." வேகவேகமாகத் திட்டங்களைப் போட்டு அடுக்கிய தாயை கண்டு எரிச்சலாக வந்தது சத்யாவுக்கு.



"ஏம்மா.. என்னை இங்கிருந்து துரத்தறதில் அப்படி என்னம்மா உங்களுக்கு ஆனந்தம்.. நான் இங்க இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா.., சொல்லுங்க.. நான் பிரகாஷ் வீட்டுக்கு போறேன்.. ருக்மணி அத்தை என்னை நல்லா பாரத்துப்பாங்க.. நான் அவங்க வீட்டுக்கு முன்னே மாதிரி வர்றதே இல்லைன்னு அன்னிக்கு கூட ரொம்ப ஃபீல் பண்ணாங்க.."



"ச்சீ.. வாயை மூடுடி.. விருந்தும் மருந்தும் மூணு நாளுதான்.. அதைத்தான் அன்னிக்கு மாப்பிள்ளையும் சொன்னாரு.. லூசு மாதிரி நீ எதையோ சொல்லி இங்க உட்கார்ந்திருக்க.. இங்க பாருடி.. உனக்குச் சொல்லிட்டேன்.. ருக்மணி என்னோட நாத்தனாருதான்.. இல்லைன்னு சொல்லலை..அத்தோட அது எங்கண்ணன் வீடும்தான்.. நீ தாராளமா போய்த் தங்கலாம்.. ஆனால் எத்தனை நாளுக்கு..



"உன்னோட இடம் எதுன்னு முதல்ல தெரிஞ்சிக்கணும்.. உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு.. அதே போலப் பிரகாஷுக்கும் வேதாவோட கல்யாணம் முடிஞ்சாச்சு.. இனி அங்கே வேதாவுக்குத்தான் முதல் இடம்.. அவளுக்குத்தான் அங்க உரிமை.. இதை நீ புரிஞ்சிக்கிற வழியைப் பாரு..



"பைத்தியம் மாதிரி.. ப்ராஜக்ட் அது, இதுன்னு உளறிட்டு திரியாம நடக்கற வேலையைப் பாரு.. நானும் இத்தனை நாளும் சும்மா இருந்தேன்.. சரி சின்னப் பொண்ணு.. கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்ன்னு.. ஏதோ வேலைன்னு நீ மாப்பிள்ளை கிட்ட சொல்லிச் சமாளிக்கலாம்.. ஆனால் உன்னோட எண்ணம் எனக்குத் தெரியும்டி.. நீ நினைக்கிறது எதுவும் நடக்காது..



"இந்த வார கடைசியிலோ.. இல்லை அடுத்த வார நடுவிலேயோ நாம கட்டாயம் சங்ககிரிக்கு போறோம்.. என்னடா அம்மா நம்மள தொரத்தி விடறாங்களேன்னு நீ நினைச்சாலும் பரவாயில்லை.. இனி உன்னோட இடம் அதுதான்.. ஒழுங்கு மரியாதையா புருஷனோட வாழற வழியைப் பாரு.. இனிமேல் நீ இங்க வர்றதுன்னாலும் கதிர் தம்பியோடு சேர்ந்து வந்துட்டு அவரோடவே சேர்ந்து போகணும்.. சொல்லிட்டேன்.."



கண்டிப்பாக.. ஆனால் கத்தாமல்.. நிதானமாகச் சொன்ன தன் அன்னையை வெறுப்புடன் பார்த்தாள் சத்யா.



பின்னர் தந்தையின் பக்கம் திரும்பியவள், "டாட்.. இந்த அம்மா தேவையில்லாமல் பேசறாங்க.. நான் என்ன அங்க போக மாட்டேன்னா சொன்னேன்.. எனக்கு வேலை இருக்குன்னு சொன்னா.. புரிஞ்சிக்காம பேசினா எப்படி?.. நீங்களே சொல்லுங்க.." தன் தந்தையிடம் புகார் படித்தாள் சத்யா.



"இல்லைம்மா.. உங்கம்மா புரிஞ்சிக்காமல் இல்லை.. இன்னிக்குச் சரியாகத்தான் பேசறா.. எல்லாம் இந்தக் கதிர் மாப்பிள்ளையைச் சொல்லணும்.. நானா இருந்தால்.. இப்படி என் பொண்டாட்டி கட்டின பத்தாவது நாளே அம்மா வீட்டுல ஒரு மாசம் டேரா போட்டா.. அவளை நாலு அறை கொடுத்து இழுத்துட்டுப் போயிருப்பேன்.. தம்பி உனக்கு ரொம்ப இடம் கொடுத்திருக்காரு.." என்றவர்..



"சத்யா.. போதும்.. இனி என்ன வேலைன்னாலும் பரவாயில்லை.. எல்லாத்தையும் அப்படியே பிரகாஷ் கிட்ட சொல்லிடு.. இன்ஃபாக்ட் அவன் ஏற்கனவே யாரையாவது ஆள் போட்டுக்கறேன்னு தான் சொன்னான்.. நீ தான் இழுத்து விட்டுக் கொண்டே.. வேலை பார்த்தது போதும்.. அடுத்த வாரம் உன்னை நாங்கள் மாப்பிள்ளை கிட்ட கொண்டு விடணும்.. ரெடியாகு..", என்றார் கண்டிப்புடன்.



தேவையில்லாம் ஒரு சொல் கூட அதிகம் பேசாமல் தன் முடிவை எடுத்துச் சொல்லுவதில் நிகர் அவரேதான்.. இதற்கு மேல் பேசினால் இனி அங்கே பிரயோஜனமில்லை என்று அறிந்திருந்த சத்யாவும் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டி விட்டு அங்கிருந்து கோபமாக நகர்ந்தாள்.



"ஏய்.. என்ன கோபமன்னாலும் சாப்பிட்டு விட்டு போடி.. வயத்தை ஏன் காயப் போடறே.. ஏய் சத்யா.."



தாயின் குரலை அலட்சியப் படுத்தியவள் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பிரகாஷின் வீட்டில் இருந்தாள்.



"விடு ரேவ்.. எல்லாம் உங்கண்ணன் வீட்டில சாப்பிடுக்குவா.. அவள் என்ன சின்னக் குழந்தையா?.. அதான் தினம் அங்கத்தானே சாப்பிடறா..", தந்தையின் குரல் தொடர்ந்தாலும் அவள் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.



அவள் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.. ‘ஒரு மாசமா இங்கே நிம்மதியா இருந்தாகி விட்டது.. ஆபிஸ், நல்ல ஜோவியலான பிரகாஷ், என்னோட ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ்.., வீக் எண்ட்ஸ்ல பிரகாஷோட போகிற அவுட்டிங்க்ஸ், சினிமா, பீச்.. மால். அய்யோ எல்லாவற்றையும் மிஸ் பண்ண வேண்டுமே.. அந்தப் பட்டிக்காட்டுல என்ன சுவாரஸ்யமா இருக்கு..’



‘சரி அப்படியே வேலைக்குப் போனாலும்.. அப்படி ஒண்ணும் இன்ட்ரெஸ்டிங்கா இல்லையே.. அந்தப் போர் பிடிச்ச ஓட்டை கல்லூரி.. இந்த லைஃப் ஸ்டையில் வருமா?.. இங்க சாஃப்ட்வேர்ல வேலை பார்த்திட்டு அங்க போய் டீச்சர் உத்யோகமா?.. நமக்குச் சரி படுமா?..’



யோசித்தபடியே பிரகாஷின் வீட்டிற்குள் நுழைந்தவள் சட்டென எதிரில் வந்து கொண்டிருந்த அத்தை ருக்மணி மீது மோதிக் கொண்டாள்.



"பார்த்துடா சத்யா செல்லம்.. விழப் போறே.. என்னடா குட்டி.. நீ வர்றியான்னு பார்க்கத்தான் வெளியில வந்தேன்.. என்ன அப்படி ஒரு யோசனை.. சாப்பிட்டியா.. இல்லைனா வா.. எங்களோடு ஜாயின் பண்ணிக்கோ.. உனக்காகத்தான் நானும் வெயிட்ங்க்.." பாசமாகக் கேட்ட ருக்மணியின் பேச்சில் சத்யாவுக்குக் கண் கலங்கியது.



"ஒண்ணுமில்ல அத்தை.. இன்னும் சாப்பிடலை.." என்றவள்..



"அடுத்த வாரம் நான் அந்தப் பட்டிக்காட்டு ஊருக்கு போகணும்ன்னு அம்மா ஆர்டர் போட்டாச்சு.. கூட உங்கண்ணன், எங்கப்பா அப்படியே அவங்களுக்கு ஜால்ரா.. எனக்குக் கோபம் கோபமா வருது அத்தை.. ஒண்ணும் பிடிக்கலை.."



"அய்யோ.. இந்த அண்ணனுக்குப் புத்தி எங்கே போச்சோ.. கிளியை பிடிச்சி குரங்கு கைல கொடுத்தாப்ல.." சட்டென நாக்கை கடித்துக் கொண்டவர் சத்யாவின் முகத்தைக் கண்டு திருப்தியானார்.. 'அப்பாடி.. பரவாயில்லை.. இவள் அவ புருஷனை குரங்குன்னு சொன்னதைக் கண்டுக்கலை..'



"உ ம்.. என்ன செய்யறதுடா செல்லம்.. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணப் போறேன்.. இந்த ஒரு மாசமா நீ காலையிலேயே இங்க ஓடி வந்திடுவே.. உன்னோட நாங்க சாப்பிடும் போது எவ்வளவு விஷயங்களைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்.. எனக்கு ரையிட் ஹாண்டா இருந்தே.. இனிமேல் எல்லாம் மிஸ்ஸிங்க்ன்னு சொல்லு..”



"என்னதான் இருந்தாலும் உன்னை மாதிரி படிச்ச பொண்ணு வீட்டுல இருந்தா அதனோடு மதிப்பே தனிதான்.. பாரு பிரகாஷ் கூட நீ திரும்பவும் வேலைக்குச் சேர்ந்தவுடன் கொஞ்சம் நிம்மதியா இருந்தான்.. அவன் முகத்திலேயும் சந்தோஷம் தெரிந்தது.. இனி அந்த இஞ்சி தின்ன மூஞ்சியை இல்லை பார்க்கணும்..



"எல்லாம் எங்க தலை எழுத்து.. எங்களுக்குன்னு விதிச்சிருக்கு பாரு.. எங்க லேடீஸ் கிளப்புல கூட அன்னிக்கு.."



"ருக்மணி.. சாப்பிடலாமா.. டிபன் ரெடியான்னு பாரு.." குரல் கொடுக்க



மேலே என்ன சொல்லி இருப்பாரோ ருக்மணி அதற்குள் ராஜேந்திரனின் அழைப்பில் கடுப்பானார் ருக்மணி.



"அதுக்குதான் உங்க அருமை மருமகள் இருக்காளே.. இப்பல்லாம் உங்களுக்கு வேண்டியதை அவதானே செய்யறா.." என்றவர்..



"நீ போ சத்யா.. பிரகாஷ் என்னமோ இன்னிக்குச் சீக்கிரம் போகணும்ன்னு சொன்னான்.. நீ போய் அவன் ரூம்ல ரெடியான்னு பாரு.." என அவளை அனுப்பி வைத்தார் ருக்மணி.



"ருக்கு.. நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை.. இப்போ எதுக்கு அந்தப் பொண்ணை அவன் ரூமுக்கு அனுப்பி வைச்சே.. பிரகாஷுக்கு ரெடியாகி வரத் தெரியாதா என்ன?.. அப்படியே இல்லைன்னாலும் அவனோட பெண்டாட்டி வேதா இருக்கா.. அவ இதெல்லாம் பார்த்துக்க மாட்டாளா?.."



“என்னது அந்தப் பொண்ணா?.. யாரை சொல்லறீங்க..ஏன் சத்யா அவன் ரூமுக்குப் போனாதான் என்ன?.. அவ என்ன அசலா?.. இல்லை இதுக்கு முன்னாடி அவன் ரூமுக்கு போகாதவளா?..” என்றார் ருக்மணி அலட்சியமாக.



“இங்க பாரு ருக்கு.. உன்னோட போக்குக் கொஞ்சம் கூடச் சரியில்லை.. வேண்டாம்டி.. அந்த வேதா பொண்ணு ரொம்பப் பாவம்.. நீ கொஞ்சம் அனுசரணையா இருந்தா பிரகாஷும் மாறிடுவான்.. இப்படிச் சத்யாவை தூண்டி விடாதே..”



“சத்யாவும் என்னோடு தங்கை பொண்ணுதான்.. இல்லைன்னு சொல்லலை.. அவ இப்போ வேறு ஒருத்தனுக்கு மனைவிடி.. இப்போ இரண்டு பொண்ணுங்களோடு வாழ்க்கையும் இதுல சம்மந்தப்படிருக்கு.. தேவையில்லாமல் நீ பிரச்சனையைப் பெரிசு படுத்தாதே..” எனக் கண்டித்த ராஜேந்திரனை கண்டு கொண்டால் தானே ருக்மணி.



“இங்க பாருங்க ராஜ்.. நானா தடுத்தேன் சத்யாவை.. அவளுக்கு இஷ்டம்ன்னா புருஷன் வீட்டுக்குப் போகட்டுமே.. நான் ஒண்ணுமே சொல்லலையே.. அதே மாதிரிதான் பிரகாஷும்.. அவனுக்குப் பிடிச்சதை அவன் செய்யறான்.. வளர்ந்த பிள்ளை.. அவன் விஷயத்துல நான் எப்படித் தலையிட முடியும்.



“இந்தப் பொண்ணு வேதாவுக்குச் சாமர்த்தியம் போதாது.. இதே அவள் இடத்துல சத்யா இருந்தால் எப்பவோ பிரகாஷை முந்தியில முடிச்சி வைச்சிருப்பா..”



“ஏண்டி ருக்கு.. இது என்னடி எடக்கு பேச்சு.. உனக்கே அசிங்கமாயில்லை.. இப்படி லூசுத்தனமா பேசாதே.. உனக்கே நல்லா இருக்கா.. சத்யா வேற வீட்டுக்கு வாழ போயாச்சுடி.. இனி அவளைப் பிரகாஷோடு இணைச்சி பேசாதே.. என் தங்கை காதுல விழுந்தா என்ன நினைப்பா?..”



“ராஜ்.. நான் என்ன லூசா?.. நான் எல்லாம் சரியாத்தான் பேசினேன்.. யதார்த்தமா உலகத்துல நடக்கிறதைச் சொன்னேன்.. இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?.. என்ன குடும்பமோ?.. இதுல நினைக்கறதுக்கு என்ன இருக்கு..” என அங்கலாய்த்தபடி காலை உணவுக்குச் சென்றார் ருக்மணி.



அங்கே பிரகாஷின் அறைக்குச் சென்ற சத்யா எதிரிலேயே அவன் அறையிலிருந்து வந்த பிரகாஷை கண்டாள்.



“ஹாய் பிரகாஷ்.. குட்மார்னிங்.. ரெடியா?.. கிளம்பலாமா?..”



“ஹாய் சத்தி.. மார்னிங்.. லுக்கிங் கார்ஜியஸ்.. வா.. வா.. பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு கிளம்பலாம்..” என்றவன் தன் டையைச் சரி செய்தபடி வந்தான்.



“ஹே.. பிரகாஷ்.. கொஞ்சம் நில்லு.. அஸ் யூஷுவல் டையைத் தப்பா கட்டி இருக்கே.. வெயிட்.. லெட் மீ டூ இட்..”



“ஓ.. அதென்னவோ சத்தி.. எல்லாம் உன்னாலதான்.. இந்த டை கட்டறது மட்டும் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வர்றது இல்லை.. சின்ன வயசுல அம்மா செய்வாங்க.. அப்புறம் நீ தானே எனக்குக் கட்டி விடுவே..” என்றவன்..



“நீ போன பின்னால நான் டை கட்டற வழக்கத்தையே விட்டுட்டேன்.. இன்னிக்கு ஃபாரீன் டெலிகேட்ஸை மீட் பண்ணனுமேன்னு எடுத்தேன்.. கமான் வா.. சீக்கிரம்.. லேட்டாச்சு பாரு..”



சத்யா சிரித்தபடி அவன் கழுத்தில் டையைச் சரியாகக் கட்டி விட்டவள்.. சட்டென அவன் தலையைக் கலைத்து விட்டாள்..



சின்ன வயதிலிருந்தே பிரகாஷுக்கு தலையை யாராவது தொட்டாலே பிடிக்காது.. சத்யா அவனை வம்பிழுக்க என்றே அவன் தலையைக் கலைத்து விடுவாள்.. அதுவும் அவள் டையைக் கட்டிவிட்டு இப்படி அவன் தலையைக் கலைத்து விட்டுச் சிரித்து அவனை வெறுப்பேற்றுவாள்.



“யூ நாட்டி.. என் தலையில கையை வைக்காதேன்னு எத்தனை வாட்டி உனக்கு வார்ன் பண்ணறதோ.. உன்னை..” என்றவன் அவளைப் பிடிக்க முயல.. அவளோ அவனுக்கு அகப்படாமல் மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.



“பிரகாஷ் மாமா.. உங்க கம்ப்யூட்டர் பொட்டியை எடுத்துக்க மறந்திட்டீங்களே?..” அவன் அறையிலிருந்து அவன் பின்னாலேயே வேகமாக வந்தாள் வேதா.



“ஏய்.. சத்யா.. நில்லு..” என அவள் பின்னால் ஓடக் கால்களை வைத்த பிரகாஷ் வேதாவின் குரலில் சட்டென அப்படியே நின்றான்.



அதற்குள் அங்கே நடந்ததே கண்டு விட்ட வேதாவின் முகமோ சட்டெனச் சுருங்கி பின்னர் இயல்பானது.



“அது கம்ப்யூட்டர் பொட்டி இல்லை.. லாப் டாப்..” என்ற பிரகாஷ்..,



“ஓ.கே தாங்கஸ்..” என்றவன் அவளிடமிருந்து தன் மடிக்கணினியை வாங்கிக் கொண்டு அவளைக் கண்டு கொள்ளாமல் வேகமாகக் கீழே இறங்கிச் சென்றான்.



சத்யா அவனுக்காகக் கீழே படிகளில் நின்று கொண்டிருந்தாள்.. எப்பொழுதும் அவன் தலையைக் கலைத்தால் கோபத்துடன் அவளைக் குட்ட வருபவன், இன்று காணவில்லையே எனத் திரும்பிப் பார்த்தவள் கண்ணில் வேதா என்னவோ பிரகாஷிடம் பேச அவன் எதையோ தன்மையாகப் பேசுபவனைக் கண்டு எரிச்சலானது.



“என்ன சத்யா.. சாப்பிடப் போகலையா?.. டயமாச்சே..” இயல்பாகச் சொல்லிவிட்டு அவளுக்கு முன்னால் நடந்தான் பிரகாஷ்.



‘அப்படி என்ன சொன்னாள் இந்த வேதா.. இப்படி நான் செய்ததை மறக்கும்படி.. இன்னிக்கு அவன் கொட்டு வைக்கப் பின்னால் வரவில்லை..’



அங்கே நின்று கொண்டிருந்த சத்யாவை கண்டு கொள்ளாமல் பிரகாஷின் பின்னால் சென்ற வேதாவைக் கண்டு இன்னும் எரிச்சலடந்தவள்..



“ஏய் வேதா.. இன்னிக்கு என்ன ஸ்பெஷலா டிபன் செஞ்சிருக்கே?..” என்ற கேட்டபடி அவளுடன் இணைந்து கொண்டாள் சத்யா.



பதில் சொல்லாமல் நடந்த வேதாவை கண்ட சத்யாவுக்கோ.. ‘இவளுக்கு என்ன ஆச்சு.. பேசாமல் போறா?..’



‘ஒருவேளை நான் பிரகாஷுக்கு டை கட்டினதை பார்த்திட்டு ஃபீல் பண்ணராளோ?.. ஓ.. பெண்டாட்டி உரிமையோ?.. சரியான பட்டிக்காடு.. இதெல்லாம் இங்க சகஜம்ன்னு தெரியாதோ?..’



சத்யாவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.. இருந்தாலும் வேதாவை வெறுப்பேற்ற நினைத்தாள்.. ‘என் இடத்தைப் பிடிச்ச இல்லை.. இப்போ அனுபவிடி..’



“என்ன பிரகாஷ்.. இன்னிக்கு உன் பெண்டாட்டி என்ன ஸ்பெஷலா சமைச்சிருக்கா.. கிராமத்தில செய்யறதெல்லாம் புதுமைன்னு உங்க தலையில கட்டிடுவாளே?..” மெல்ல வம்புக்கு இழுத்த சத்யாவை கண்டு புரியாமல் சிரித்தான் பிரகாஷ்.



“ஹேய் சத்தி.. எதோ ஒண்ணு.. டோன்ட் பாதர்.. வயத்தைப் பில் பண்ணணும்.. எதுவா இருந்தா நமக்கென்ன.. டயமாகுது.. இந்தப் பேர் தெரியாத வஸ்துவை வாயில போடு.. இல்லைன்னா எப்படியும் நீ டெய்லி சாப்பிடற சாலட் அன்ட் கார்ன்ப்ளேக்ஸ் இருக்குமே..” என்ற பிரகாஷுக்கு..



“பிரகாஷ் மாமா.. அது பேர் வெள்ளை பணியாரம்.. அதுக்குத் தோதா மல்லி சட்னியும் இருக்கு.. வெங்காயச் சட்னியும் வைச்சிருக்கேன்.. பாருங்க.. அத்தோடு உங்களுக்குப் பிடிக்கும்ன்னு மாமா சொன்னாங்கன்னு பொங்கலும், கொத்சுவும் இருக்கு..”



“சே.. என்ன இது மாம்.. இவ்வளவு காலையில இப்படிச் சோறா?.. ரொம்ப ஹெவியா அன்ஈசியா இருக்கும்.. இதுல ஆயில் அயிட்டமா வேற இருக்கு.. எனக்கு இதெல்லாம் வேண்டாம்.. என்னம்மா நீங்க இதெல்லாம் பார்க்கக் கூடாதா?..”



சலித்துக் கொண்டான் பிரகாஷ்.. ஒரு நிமிடம் முன்புதான் எதையாவது வயிதுக்கு ஃபில் பண்ண்ணும் என்றவன் இப்பொழுது கூலாக அனைத்தையும் ஒதுக்கி வைத்தான்.



“ஹேய் பிரகாஷ்.. அத்தை பாவம்ப்பா.. அவங்களுக்கு ஏற்கனவே கிளப் டென்ஷன்.. என்ன வேதா.. இப்படி ஹெவியா எப்படி எர்லியா சாப்பிட முடியும்.. உனக்குக் கொஞ்சம் கூட மூளையே இல்லை.. அது சரி.. உனக்கு மூளை இருந்தா நீ ஏன் இப்படி இருக்கே?.. இதெல்லாம் சாப்பிட்டா கம்பெனியில போய் நல்லா தூங்க வேண்டியதுதான்.. டீல் பேச முடியாது..”



“நீ அவனோடு வீட்டுக்காரியா இருந்தா அவனோடு ஹெல்த்தை பார்ப்பே.. நீதான் சமையல்காரியா இல்லை இருக்கே?.. பாவம் பிரகாஷ்..”



முகம் கருத்த வேதாவோ..



“சாரி மாமா.. நீங்க விருப்பமா சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன்.. நல்ல சத்தான உணவுதான்னு சமைச்சேன்.. இதோ ஒரே நிமிஷம்.. மாமாவுக்குன்னு ஓட்ஸ் இட்லி செய்தேன்.. கொஞ்சம் லைட்டா இருக்கும்.. அதை எடுத்திட்டு வாறேன்.. டிரை பண்ணுங்களேன்..” என்ற வேதா சமையலறைக்குள் நுழைந்து ஓட்ஸ் இட்லியை எடுத்து வந்தாள்.



கூடவே நான்கு பிரட் ஸ்லைசும் வாட்டி எடுத்து வர.. எல்லாவற்றையும் ஒதுக்கிய பிரகாஷோ.. பிரட் துண்டுகளை இரண்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஜூஸை குடித்தான்.



“போதும்.. தாங்க்ஸ்..“ என்றவன்.. “போகலாமா சத்யா..” எனக் கிளம்ப..



அங்கே சத்யாவோ அவன் ஒதுக்கித் தள்ளிய வெள்ளை பணியாரத்தை வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள்.. அவளை வினோதமாகப் பார்த்தவனை..



“என்ன பண்ணறது பிரகாஷ்.. ஆல்ரெடி லேட்.. இதுல அவ புது டிபன் எடுத்து வந்து.. அதான் டிலே ஆகிடும்ன்னு.. நீ சொன்னா மாதிரி எத்தையோ வயத்துக்கு ஃபில் பண்ணிக்கணும்..” சொல்லிச் சமாளித்துவிட்டு அவசரமாக எழுந்தாள் சத்யா.



அவளுக்கு உள்ளுக்குள் திருப்தியாக இருந்தது.. வேதா ஆசையாக எடுத்து வந்த உணவுகளைப் பிரகாஷ் ஒதுக்கியதைக் கண்டு.



ராஜேந்திரனுக்கோ சிரிப்பாக வந்தது.. ருக்மணியோ வாயைத் திறக்காமல் சத்யாவிற்குத் துணையாகப் பணியாரத்தைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தார்.



அவர் வேதாவை பார்க்க.. அவளுக்கும் உள்ளூர சிரிப்பு வந்தாலும் தன் தங்கை அந்த உணவை ரசித்து உண்பதில் மகிழ்ச்சியே அடைந்தாள்.. ஆனாலும் உண்ண வேண்டிய அவனோ ஒதுக்கி விட்டானே என்றும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.



“மாமா.. உங்கள் தலை கலைஞ்சி இருக்கு.. சரியா வாரிட்டு போங்க..” என்றாள் வேதா.



“என்ன சத்யா.. ஆரம்பிச்சிட்டியா உன்னோட வேலையை..” என்ற ருக்மணி.. “நான் சாப்பிட்டுட்டு இருக்கேன்.. நீதான் வாரி விடேன் சத்யா கொஞ்சம்..” என்றார் கூலாக.



“இருக்கட்டும் மாம்.. ஆபிஸ்ல பார்த்துக்கறேன்.. எனிவேஸ் தலையைக் கலைச்ச அவதான் வாரணும்.. ஓ.கே.. பை மாம்.. பை டாட்..” என்றவன் சத்யா பின் தொடர வேகமாக அலுவலகத்துக்கு வெளியேறினான் பிரகாஷ்.



ருக்மணி தன் உணவை முடித்துக் கொண்டு எழுந்து சென்று விட.. அங்கே அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ராஜேந்திரன்.



வேதாவோ வாசலைப் பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள்.. அவளைக் கண்ட ராஜேந்திரனுக்கோ மனம் கனத்தது.



இந்தப் பையன் இப்படிப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறானே.. அவன் இயல்பாகச் செய்யறதெல்லாம் இந்தப் பொண்ணு மனசு என்ன பாடுபடும்ன்னு தெரியாதா?.. இல்லை புரியவே புரியாதா..



“வேதா.. வாம்மா.. நீயும் சாப்பிடு.. இப்படிப் பார்த்து பார்த்து மத்தவங்களைக் கவனிக்கறே.. உன்னையும் கொஞ்சம் நீ கவனிச்சிக்கனும்மா.. பாரு வந்ததுக்கு இப்போ ரொம்ப இளைச்சா போலத் தெரியறே?.. உங்கம்மாக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் சொல்லு..”



அவருக்குப் பதில் சொல்லாமல் வேதனையுடன் புன்னகைத்தவள்.. தன் தட்டில் அவன் ஒதுக்கி விட்டுச் சென்ற பணியாரத்தை வைத்துக் கொண்டாள்.



“இங்க பாரு வேதா.. நீ இப்படி ஒதுங்கி ஒதுங்கி போறதுனால் தான் அவனும் உன்னைக் கண்டு கொள்வதே இல்லை.. சத்யா உன்னோட தங்கச்சின்னாலும் அவளும் வேற வீட்டுக்கு வாழ போயாச்சு.. உன் உரிமையை நீ விட்டுக் கொடுக்கக் கூடாது..”



“பின்ன என்ன பண்ண முடியும் மாமா?.. நீங்களே சொல்லுங்க.. கொஞ்சம் நேரம் முன்னாலா பார்த்தீங்க இல்ல.. எப்படி அவரைச் சாப்பிட விடாமல் பண்ணா.. தனக்கா தெரியலைன்னா நான் என்ன செய்ய முடியும்?.. சண்டையா போட முடியும்.. இல்லை ஊட்டியா விட முடியும்..”



சட்டென வெட்கத்தில் நாக்கை கடித்துக் கொண்டாள்.



“நீ எடுத்து சொல்லணும்மா.. அவனுக்குதான் புரியலை.. அந்தப் பொண்ணு சத்யாவுக்கு எல்லாமே தெரியும்.. அவள் உன்னை விடச் சின்னவள் தான்.. ஆனால் விவரமானவள்.. அவனுக்குத் தெரியலைன்னா நீ சண்டையும் போடலாம்.. ஏன் ஊட்டி கூட விடலாம்.. இதெல்லாம் உன்னோட உரிமைம்மா.. உன்னோட உரிமையை எதுக்கு நீ விட்டு கொடுக்கறே?..”



“இல்ல மாமா.. நான் உரிமை விட்டு கொடுக்க நினைக்கலை.. என் உரிமையா நிலை நாட்ட விரும்பறேன்.. அதுக்கு அவரும் ஒத்துழைக்கணும் இல்லை.. அவர் அதைக் கொடுத்து என்னை அங்கீகரிக்கணும் என்று எதிர்பார்க்கிறேன்..”



“என்னை ஒரு மனுஷியா கூட மதிக்காமல் ஒதுங்கி போறவர் கிட்ட எப்படி அந்த உரிமையை நீருபிக்கறதுன்னு புரியாமல் திணறிட்டு இருக்கேன்.. இதுல சத்யாவை மட்டும் குத்தம் சொல்லி என்ன லாபம் சொல்லுங்க..”



“ம்.. நீ என்ன சொன்னாலும்.. சத்யா செய்யறது கொஞ்சம் அதிகப்படிதான்.. பார்த்தும்மா.. மொத்தமா நீ உன்னோட உரிமையை இழந்துட கூடாதேன்னு நான் பயப்படறேன்..” என்ற ராஜேந்திரன்..



“சரிம்மா.. நானும் கிளம்பறேன்.. ருக்மணியை வேறு இன்னிக்கு அவ லேடீஸ் கிளப்புல டிராப் பண்ணணுமாம்.. அவ கார் செர்வீஸ்க்கு போயிருக்காம்..” அவளுக்குத் தலையாட்டி விட்டு தன் போக்கில் எழுந்து சென்றார் ராஜேந்திரன்.



‘முதல்ல இந்தச் சத்யாவை ஊருக்கு அனுப்ப வேண்டும்.. அதற்கு ரேவதியிடமும், ராஜ்குமாரிடம் பேச வேண்டும்..’ என்று நினைத்துக் கொண்டார்.



நாட்கள் விரைந்தன.. அந்த வார இறுதியில் சத்யாவை அவள் புகுந்த வீட்டுக்கு அனுப்பலாம் என்று தீர்மானித்த ராஜ்குமார் தம்பதியருக்கு அது முடியாமல் போனது.



அந்த வாரக் கடைசியில் புது ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி ஒரு சின்னப் பார்ட்டி ஒன்றை அந்த ஃபாரீன் கன்சல்டன்சி அதிகாரிகளுக்காக அரேஞ் செய்திருப்பதாகப் பிரகாஷ் சொல்லி விட்டு சத்யாவும் அதற்கு இருக்க வேண்டும் என்று சொன்னான்.



போதாதற்கு.. அந்த வாரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் ராஜ்குமாருக்கும், ராஜேந்திரனுக்கும் அதே நாளில் அழைப்பு வந்திருந்தது.



ஆகையால் சத்யா புகுந்த வீட்டுக்குச் செல்லுவது தள்ளிப் போனது.. அதில் ரேவதிக்கு மன வருத்தம் என்றாலும்.. சத்யாவுக்கு அப்போதைக்கு நிம்மதியாகவே இருந்தது..



சனிக்கிழமை மாலை யாருக்கும் காத்திராமல் அந்தக் கம்பெனி பார்ட்டியும் வந்தது..



பிரகாஷ் ஏற்கனவே வேதாவிடம் சொல்லி விட்டான்.. மனைவி என்ற முறையில் அன்று அவளும் அந்த விருந்துக்குப் பங்கேற்க வர வேண்டும் என்று.. திருமணமானவர்கள் கட்டாயம் பாட்னருடன் செல்ல வேண்டிய கட்டாயம் என்று வலியுறுத்தி இருந்தான்.



தயங்கிய வேதாவின் மேல் அவனுக்குக் கோபமாக வந்தது.. ‘இதற்குத்தானே இந்தக் கல்யாணமே வேண்டாம் என்றேன்.. ஆஃப்ட்டர் ஆல் ஒரு சின்னப் பார்ட்டிக்கு வருவதற்கே இவளுக்கு இந்தத் தயக்கம்.. இந்த லட்சணத்தில் இவள் எப்படி எனக்கு ஈக்வலாக மாறி..’ திட்டி விட்டுச் சென்றிருந்தான்.



சத்யாவின் கணவன் என்ற முறையில் கதிருக்கும் அழைப்பு விடுத்திருந்தான் பிரகாஷ்.. ஆனால் அவனும் வருவது சந்தேகம் என்று சத்யா சொல்லிவிட.. பின்னர் அதைப் பெரிதாக அவன் நினைக்கவில்லை.



மதியமே ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதற்காகச் சத்யாவுடன் சென்று விட்டான் பிரகாஷ்.



தன் தந்தையிடம் வேதாவை விழா நடக்கும் ஹோட்டல் வளாகத்தில் அழைத்து வந்து விடச் சொல்லி இருந்தான்.



“வேதா.. ரெடியாம்மா.. போகலாமா?.. உன்னை விட்டுட்டு நாங்க எங்க கிளப்புக்கு கிளம்பணும்.. ஏற்கனவே ராஜ் பாமிலி போயாச்சு..” என்ற ராஜேந்திரன் குரலில் அவசராவசரமாகத் தன்னறையில் இருந்து வந்தாள் வேதா.



“மாமா.. நான் ரெடிதான்.. கிளம்பலாமா?..” என்றவள் கையில் ஒரு சின்ன மணி வேலைப்பாடுகள் செய்த பர்ஸ் மட்டுமே இருந்தது.



“வாம்மா வேதா.. நல்லா இருக்கே.. இந்தப் புடவை உனக்கு நல்லா சூட்டாகுது.. பொருத்தமா அழகான பர்ஸ் வேற.. பாரு இன்னிக்கு என் பையன் உன்னைப் பார்த்திட்டு அப்படியே ப்ளாட்டுதான்..” எனச் சிரித்தார் ராஜேந்திரன்.



“மாமா.. நான் கட்டாயம் அந்தப் பார்ட்டிக்கு போகணுமா?.. எனக்குப் பயமா இருக்கு.. எனக்கு அப்படியெல்லாம் போய்ப் பழக்கமில்ல..” தயங்கினாள் வேதா.



“ஆமாம்டிம்மா.. உனக்கு எதுதான் பழக்கம்.. எல்லாம் எங்க நேரம்.. இப்படி ஒரு சின்னப் பார்ட்டிக்கு போறதுக்குப் பயந்தா.. நாளைக்கு என் பையன் ஆபிஸ் விஷயமா பாரின் எல்லாம் போவான்.. அப்ப என்ன பண்ணுவியோ.. இதுக்குத் தான் அன்னிக்கே நான் தலையா அடிச்சிட்டேன்.. என் பேச்சை யார் கேட்டா?.. இந்தப் பட்டிக்காட்டை என் பையன் தலையில கட்டி..”



“ஷ்.. என்ன ருக்கு.. எல்லாம் அவ பழகிப்பா.. நீ வாம்மா.. ஒண்ணும் பயமில்லை.. அங்க வர்றவங்களும் மனுஷங்கதான்.. நீ சகஜமா இரு..”



“ஏய்.. நில்லுடி.. இது என்ன கண்ணராவின்னு இப்படிப் புடவையைச் சுத்தியிருக்க.. ஒரு அனார்கலியோ.. இல்லை.. அழகா லாங்க் ஸ்கர்ட் இப்படிப் போடாமல்?.. இது என்னடி இது.. நீ என்ன கல்யாணத்துக்கா போற?.. பார்டிக்குடி.. கையில என்ன ஊசி மணி பர்சு.. சகிக்கலை..”



“அத்தை அதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை.. ஏன் அத்தை இந்தப் புடவை நல்லா இல்லையா?.. அம்மா எப்பவும் ரொம்பக் கண்டிப்பு.. எங்கையாவது வெளியில விஷேசத்துக்குப் போனா பட்டுப் புடவை கட்டணும்ன்னு.. அவங்களும் அப்படித்தான்.. நான் வேணா.. இன்னும் நல்ல கெட்டி சரிகை போட்ட புடவை கட்டவா?.. இந்தப் பர்ஸ் கூட நான் செஞ்சதுதான் அத்தை.. மேட்சா இருக்குமேன்னு எடுத்துக் கொண்டேன்..”



அப்பாவியாகக் கேட்ட வேதாவை என்ன செய்வது என்று தெரியாமல் முறைத்தார் ருக்மணி.



உண்மையில் வேதா அழகான மயில் கழுத்து பட்டுப் புடவையில் சரிகை வேலைப்பாடுகள் இல்லாமல் வெறும் த்ரெட் வொர்க் செய்த பார்ட்டிகளுக்கேற்ற புடவையைத் தான் அணிந்திருந்தாள்.. பொருத்தமான சிம்பிள் டெரகோட்டா ஜுவல்லரி அவளே அவள் கையால் செய்ததை அணிந்திருந்தாள்.



காதில் ஆடிய மயில் ஜிமிக்கியும், கழுத்தில் தொங்கிய மயில் பெண்டண்டும் கண்ணைக் கவர்ந்தது.



“ஏன் ருக்கு.. நல்லா தானே இருக்கு.. நீ கூட இப்படிச் சிம்பிள்ளான பட்டு புடவை பதவிசா கட்டி இருக்கலாம்.. இந்த டிசைனர் புடவை ரொம்ப மெல்லிசா இருக்கு பாரு..”



“ஏன் உங்க மருமக மாதிரி இப்பவே நான் அம்மாமி வேஷம் போடணுமா?.. உங்களுக்கென்ன தெரியும் இந்த டிசைனர் புடவை பத்தி.. இருபதாயிரம் ரூபாய் புடவை.. இதோ லுக்கே தனிதான்.. அதைத்தான் உங்க மருமகளுக்குச் சொல்ல வந்தேன்.. பார்டிக்கு எல்லாம் இப்போ இந்த மாதிரி ரிச் ஒர்க் டிசைனர் சாரி வித் மேட்சிங்க் காஸ்டியூம் ஜுவல்லரிதான் பொருந்தும்..”



“இந்தப் பட்டுபடவை கான்சப்ட் எல்லாம் பட்டிக்காட்டு விருந்துக்குப் பொருத்தமா இருக்கும்.. இல்லை கல்யாணங்களுக்குப் பொருந்தும்.. இங்க ஜுவல்ஸ் கூட நம்ம தகுதிக்கு ஏத்தா மாதிரி இருக்கணும்.. என்னைப் பாருங்க டயமன்ட் செட் போட்டு இருக்கேன்.. இவ.. புடவைதான் டிசைனர் இல்லைன்னாலும்.. ஜுவல்ஸ் நம்ம ஸ்டேச்சுக்கு ஏத்தா மாதிரி போடாமல்.. இப்படிப் பீத்தல் களி மண்ணைப் போட்டுட்டு.. பாசிமணி, ஊசிமணின்னு.. குறத்தி கெட்டா.. எல்லாம் என் பிரகாஷோட நேரம்.. இவளை கட்டிட்டு..”



முகம் சுருங்க.. தலையைக் குனிந்து நின்றிருந்தாள் வேதா.. ஏற்கனவே பார்ட்டி என்றதும் பயந்து இருந்தவள்.. இப்படித் தன் மாமியார் அவள் அதற்குத் தகுதியே இல்லை என்று பேசத் தொடங்கியதும்.. தன்னம்பிக்கையை இழந்து தலை கவிழ்ந்தாள்.. இவர்களே இப்படிச் சொன்னால், இன்னும் பிரகாஷ் என்ன சொல்லப் போகிறானோ?..



“விடு ருக்கு.. நேரமாச்சு.. பிரகாஷ் லேட்டா போனா அப்புறம் திட்டுவான்.. நெக்ஸ்ட் டயம் நீயே அவளுக்கு இதெல்லாம் சொல்லி கொடு..”



“வேறு வழி..” அதற்கும் நொந்து கொண்டவரை.. கண்டு கொள்ளாமல் மருமகளே கண்ணாலேயே தைரியப்படுத்திக் காரை எடுத்தார் ராஜேந்திரன்.



எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன்.. தைரியமாக இருக்கும் வேதாவுக்கு இன்று ஆரம்பமே பயத்தைக் கொடுத்தது.



முதல் முறையாகக் கணவனுடன் விருந்துக்குச் செல்கிறாள்.. ‘முதலிலேயே என்ன உடை அணிய வேண்டும் என்று அவனிடம் கேட்டிருக்கலாமோ?.. திட்டப் போகிறானா?..அய்யோ என்ன நடக்கப் போகுதோ..’



அந்த ஏசியிலும் காரில் அவளுக்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது.



ருக்மணியோ அவளைக் கண்டு கொள்ளாமல் யாரிடமோ செல் போனில் பீட்டர் விட்டுக் கொண்டிருந்தாள்.



அந்தப் பிரம்மாண்டமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் வளாகத்தை அடைந்து காரை நிறுத்திய ராஜேந்திரன்.. மருமகள் இறங்க கார் கதவை திறந்து விட்டு.. மனைவியிடம் அவளைக் கொண்டு விட்டு வருவதாகச் சொல்ல..



ருக்மணி.. தன் போனை ஒற்றைக் கையால் மூடியபடி.. அங்கே எல்லாரும் வந்தாச்சாம்.. பிரசிடென்ட் நம்மளை எங்கே கேட்டாராம்.. சீக்கிரம் போகணும்.. ரேவதி போன் பண்ணா.. எங்கண்ணனும் அவளும் ஏற்கனவே போயாச்சாம்.. ஒண்ணு பண்ணுங்க.. அங்கே ரிசப்ஷன்ல இவளை அழைச்சிட்டுப் போகச் சொல்லுங்க.. நமக்கு டயமாச்சு.. க்விக்..” எனப் போனில் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.



அத்தையிடம் போய் விட்டு வருகிறேன் என்று தலையாட்டிய வேதாவை அவள் கண்டு கொண்டால்தானே..



“மாமா.. நீங்க வேணா போங்க.. எந்த இடம்ன்னு சொன்னா நானே போயிக்கிறேன்.. அத்தைக்குக் கோபம் வந்துட போகுது..”



“இல்லம்மா.. இருக்கட்டும்.. புது இடம்.. உனக்குத் தெரியாது.. உங்கத்தைச் சொன்னா போல ரிசெப்ஷன்ல சொல்லிட்டு போகிறேன்..”



என்ற ராஜேந்திரன் வேதாவை அங்கிருக்கும் சோபாவில் அமர சொல்லிவிட்டு ரிசெப்ஷனில் அமர்ந்திருந்தவரிடம் அவளைப் பார்ட்டி நடக்கும் ஹாலில் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டு அவளிடமும் ஜாக்கிரதையாகத் தைரியமாகச் செல்லும்படி சொன்னவர்.. நன்றாகச் சந்தோஷமாக இரு என்றும் மறக்காமல் சொல்லி விட்டுச் சென்றார்.



திருதிருவென திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி முழித்துக் கொண்டிருந்த வேதாவிடம் வந்தான் அந்த வரவேற்பு ஆண்.

 

Jothiramar

Moderator
Staff member
ஆத்தி என்ன நடக்க போகுதோ? கதிர் வருவானா?
 
Top