கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 18

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 18





ரிசெப்ஷன் ஹாலில் விட்டுச் செல்லும் தன் மாமாவை சில நொடிகள் பார்த்தபடி இருந்தவளின் கவனத்தை மெல்லக் கலைத்தான் அந்த உதவியாளார்.



"யெஸ் மேம் ஷால் வீ ப்ரொசீட் டு தெ பார்டி ஹால்..", என்று கேட்டவனிடம், வெறும் தலையை மட்டும் ஆட்டியவள், அவன் முன்னே செல்லவும் பின் தொடர்ந்தாள்..



அவள் சுற்றி முற்றிப் பார்த்தபடி நடப்பதைக் கண்டவுடன் அந்த உதவியாளருக்கு என்ன சந்தேகம் வந்ததோ அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.. சட்டென்று நின்று திரும்பியவன்,



"மேம் வுட் யூ லைக் டூ விசிட் தெ ரெஸ்ட் ரூம் பிஃபோர் யூ ப்ரொசீட் டு தி ஹால்?..", என்று மேடம் மேக்கப் சரி செய்வதற்கு இடம் பார்க்கிறார் போலும் என்று நினைத்து தன்மையாய் கேட்டவரைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்த வேதாவுக்கு ஒன்றும் புரியவில்லை..



'அய்யோ ஆண்டவா இவன் எதுக்கு நம்மை ரெஸ்ட் எடுக்கச் சொல்லுறான்.. வீட்டிலேயே நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தாச்சே.. இப்போ என்ன செய்யுறது..', என்று நினைத்தவள், மெல்லத் தலையாட்டி..



"தாங்க்கியூ", என்றாள் அப்பாவியாய்..



அடுத்தச் சில நொடிகளில் லேடிஸ் ரூமில் அவளை விட்டுவிட்டு "மேம் வென் யூ ஆர் டன் கோ ஸ்ட்ரையிட் அண்டு டேக் தி லிஃப்ட் டு செகண்ட் ப்ளோர்", என்று சொல்லிவிட்டு விடை பெற்று சென்றே விட்டார் அந்த உதவியாளர்..



முதலில் ஒன்றும் புரியாமல் ரெஸ்ட் ரூமில் நுழைந்தவளுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலானது.. ‘ம்..சே.. டாய்லெட்டை தான் இப்படிச் சொன்னானா?.. வித விதமா பேரை டிசைன் டிசைனா மாத்துறாங்களே.. நாம எங்கே கண்டோம் இந்த மாதிரி ஓட்டலை எல்லாம்..’



‘நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆரிய பவனும் வசந்த பவனும் தான்.. வெளியே பொம்பளை படம் போட்டிருந்தாக்கா ஈசியா நானே கண்டு பிடிச்சிருப்பேனே.. என்னமோ வேற இல்ல எழுதி இருந்துச்சு.. சரி வந்தது தான் வந்தோம் நம் அலங்காரம் நல்லா இருக்கான்னு பார்த்துட்டு போவோம் என்று நினைத்து கண்ணாடி முன் நின்று திரும்பிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள்.



சரி கையைக் கழுவுவோம் என்று குழாயின் கீழே கையை வைத்து குமிழைத் திருகலாம் என்று அடுத்தக் கையைத் தூக்கியது தான் தாமதம் ஆட்டோமாடிக்காக நீர் பாய்ந்து வரவும் திகைத்துப் போனாள்..



'அட.. இதென்ன இதெல்லாம் ஆடொமாடிக்கா.. சரிதான் என்னனென்னவோ கண்டுபிடிச்சிட்டாங்க இனிமே பல்லு விளக்கறதுக்குக் கூட இங்கே ஒரு கைமாதிரி மிஷினை வச்சுடுவாங்க போலே',



‘ஜனங்களைச் சோம்பேறி ஆக்குறதுக்குன்னே கூட்டம் கூட்டமா திரியுறாங்க போலே', என்று நினைத்தபடி அந்த ரூமை விட்டு வெளியே வந்தாள்.



அவள் பின்னேயே வந்த ஏதோ ஒரு வெளிநாட்டுக்காரி வேதாவின் ஜடையைப் பார்த்து "வாவ் சோ நைஸ்.. ஹவ் ஐ விஷ் ஐ ஹாட் அ லாங்க் ஹேர் லைக் திஸ்..", என்று வியந்து பாராட்டியபடி தன் குட்டை கிராப்பை தடவி விட்டுக் கொண்டாள்..



மீண்டும் ஒன்றும் சொல்லாமல் நிச்சயம் ஜடையைத் தான் புகழ்கிறாங்க போல இருக்கு என்று நினைத்து.. முறுவலித்து, "தாங்க்கியூ..ஒரிஜினல்.. நோ சவுரி..மை அப்பத்தா கோக்கனட் ஆயில் மசாஜ்.. லாங்க் ஹேர் க்ரோ..", என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அளக்க..



அந்தப் பெண்மணிக்கு என்ன புரிந்ததோ அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் அவர் அதற்கு, "ஒஹ் யு கிவ் டவுரி..ஃபார் ஹேர் குரோயிங்க்.. ஐ டிண்ட் நோ திஸ்.. வெர் டு யு கெட் திஸ் அப்டா ஹேர் ஆயில்?, ஐ வாண்ட் டு டேக் இட் ஃபார் மை டாட்டர்..", ஹேர் ஆயில் கடையின் விலாசத்தைக் கேட்க திருத் திரு என்று விழித்தவள், மெல்லச் சுதாரித்து..



அப்பத்தாவை அப்டா ஹேர் ஆயில் என்று நினைச்சிகுச்சு போலே இந்தம்மா..சரி போகட்டும்..இப்போதைக்கு.. ஏதாவது கடை பேரை சொல்லி விடலாம் என்று, "ஆல் டிபார்ட்மெண்ட் ஷாப்..எவ்ரி ப்ளேஸ்", என்று சொல்லி விட்டு..



"ஐ கோ டூ கம்பனி பார்டி.. டோண்ட் நோ அட்ரெஸ்..", என்று அவளிடமே தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்க..



"ஐ யாம் ஆல்சோ கோய்ங்க் ஃபொர் ஆர்.ஆர்.டெக். பார்டி.. இஸ் தட் வேர் யூ வாண்ட் டு கோ", என்று கேட்க



‘அப்பாடி ஆஹா நம் கணவனின் கம்பெனி பெயரை சொல்லுதே இந்தம்மா.. இவங்களும் அங்க தான் போறாங்க போலே.. கூடவே ஒட்டிக்குவோம்’, என்று நினைத்து..



"யெஸ் மேடம்.. ஐ கம் தாங்க்யூ..", என்று சொல்லிவிட்டு அவருடனேயே நடக்கத் தொடங்கினாள் வேதா.. அடுத்த ஐந்தாவது நிமிடம் பார்டி ஹாலில் இருந்தார்கள் இருவரும்.



ஹாலின் வாசலிலேயே மலர் கொத்துக்களுடன் அழகிய பெண்கள் நின்றிருந்தனர்..



இவர்கள் நுழைவதைப் பார்த்ததும் எங்கிருந்தோ ஓடிவந்தனர் பலர்..



வேதாவுக்குத்தான், 'இதென்னடாயிது நான் வாரதுக்கா இத்தனை பேர் ஓடி வராங்க.. யாருக்கும் தெரிய கூடத் தெரியாதே இங்கே நான் தான் பிரகாஷின் மனைவின்னு.. அப்புறம் எப்படி?.. ஒரு வேளை..', என்று எண்ணியபடி



பிரகாஷே வந்து விட்டான் வரவேற்க..



அதற்குள் எங்கிருந்தோ ஒரு வெளிநாட்டுக்காரரும் வந்து அந்தப் பெண்மணியின் அருகில் வந்து நின்றார்..



"வெல்கம் வெல்கம்", என்று தன் கையிலிருந்த மலர்கொத்தை அந்தப் பெண்ணிடம் தருவதைக் கண்ட வேதாவுக்கு இப்போ தான் எப்படி உள்ளே நுழைவது.. பிரகாஷ் தன்னைக் கவனித்தாலும் ஏதோ அவள் அங்கே இல்லாதது போல் பாவித்து அந்த வெளினாட்டு தம்பதியரை அழைத்துக் கொண்டு உள்ளே பார்டி ஹாலுக்குள் நுழைந்தான்..



உள்ளே நாலு எட்டு எடுத்து சென்ற அந்தப் பெண்மணி, சட்டென்று நின்று திரும்பி வேதாவைப் பார்த்து, "ஹேய் ப்ரிட்டி லேடி, கம்.... திஸ் இஸ் தி பிளேஸ் யூ வெர் செர்சிங்க்..", என்று கூப்பிட்டாள்.



அப்போது தான் பிரகாஷ் வேதாவை முழுமையாய் கவனித்தான்.. கண்டவனுக்கு ஆத்திரம் பிய்த்துக் கொண்டு வந்தது.



அழகிய மயில் வண்ண பட்டுப்புடவையில் ஏதோ கல்யாணத்துக்குக் கிளம்பி வந்திருக்கிறார் போல் அலங்காரமாய் நின்றவளைக் கண்டவன் முகம் அவமானத்தில் சிறுத்தது..



'பட்டிக்காடு எப்படி வந்த பூவும் பட்டுமாய் நிக்குது பாரு.. இதில் நம்ம சீஃப் கெஸ்டின் மனைவியிடமே வழி கேட்டிருக்கு.. இந்த அம்மாவும் அப்பாவும் எங்கே போனாங்க?', என்று அவள் பின்னால் எட்டி பார்த்தான் பிரகாஷ்..



"இல்லை மாமா நா மட்டும் தான் வந்திருக்கேன்.. மாமா என்னய வாசலிலே விட்டுவிட்டு போனாங்க.. நானே கண்டு பிடிச்சு வந்தேன்.. இந்த மேடம் தான் கூட்டி வந்தாங்க..", என்று வேதா உரைக்கக் கேட்டவன்..



அதன் மேல் இவளை இப்போது யாரும் அதிகம் இல்லாமல் இருக்கும் சமயமாய் இவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே நல்லது என்று நினைத்து..



"ஜார்ஜ், ஜென்னி...ஷி இஸ் மை வைஃப்....வேதா..", என்று மெல்ல அறிமுகப்படுத்தினான்..



கையை நீட்டிய ஜார்ஜீற்கு அழகாய் கை கூப்பி வணக்கம் சொன்ன வேதாவை லேசாய் வியப்புடன் பார்த்துவிட்டு தானும் தன் கையை வயிற்றுக்குக் குறுக்காய் மடித்து, "ஹலோ வீடா ஹவ் டு யு டூ", என்றார் ஜார்ஜ்..



"ஒஹ்.. டோண்ட் மைண்ட் ஷி இஸ் அ லிட்டில் பிட் ட்ரடிஷனல்..", என்று விளக்கம் கொடுத்த பிரகாஷை பார்த்த ஜென்னி,



"ஹெய் ப்ரகாஷ்.. கம் ஆன்.. யு ஆர் ரியல்லி லக்கி டு ஹவ் எப் பியூடிஃபுல் வைஃப்.. அண்ட் அ ரியல் சார்மிங் கர்ல்..", என்று வேதாவை தோள் சேர்த்து அணைத்துக் கொண்டாள் ஜென்னி..



கூச்சத்தில் வேதா நெளியக் கண்ட பிரகாஷுக்கு இன்னமும் ஆத்திரம் பிய்த்துக் கொண்டு வந்தது..



நல்லவேளையாய் அவர்கள் பிரகாஷுடன் சேர்ந்து முன்னே நடக்கத் தொடங்கி உள்ளே சென்றனர்...



அதற்குள் எங்கிருந்தோ வந்தாள் சத்யா..



வந்தவள் வேதாவைக் கண்டதும் ஏதோ கூத்தில் கோமாளி நிற்பது போல அவளுக்குத் தோன்றியது.. 'அய்யோ பட்டுப்புடவை, பூ, ஜடை.. என்ன ஒரு கெட்டப்', என்று தன்னையே ஒரு கணம் குனிந்து பார்த்து கொண்டவளுக்குக் கர்வம் பொங்கியது..



அதே சமயம், 'பாவம் பிரகாஷ்.. இப்படி ஒரு பட்டிக்காட்டுடன் எப்படிக் குப்பை கொட்ட போறாரோ..', என்று நினைத்து அவனுக்கு உதவுவதாக எண்ணி..



"ஹேய் வேதா.. வா வா.. என்ன இது கோலம்.. பூ புடவை கெட்டப்.. இது ஆஃபிஸ் பார்டிம்மா.. என்னதான் ஃபேமிலின்னு போட்டாலும் இந்த மாதிரி அலங்காரமெல்லாம் நம்மை மாதிரி சின்னவங்களுக்குப் பொருந்தாது.. ஓல்ட் ஆண்டிசெல்லாம் தான் இப்படிப் பட்டு சேலை கட்டுவாங்க.. ஏன் உங்கிட்ட நல்ல சல்வார், சுடியெல்லாம் கிடையாதா.. அதில் ஏதாவது ஒண்ணை போடக் கூடாது..”



சங்கடமாய் நெளிந்த வேதா, 'அய்யோ இவ வேற எதையாவது கொளுத்திப் போடாம இருக்கணும்.. ஏற்கனவே பிரகாஷுக்கு என்னைக் கண்டால் இளப்பம்..' என்று எண்ணி,



"அது ஒண்ணுமில்லை சத்யா, எங்கப்பாவுக்கு இந்த மாதிரி மாடர்ன் டிரெஸ்செல்லாம் அவ்வளவா பிடிக்காது.. சல்வாரே உடம்பு தெரியாம நல்லா மூடி இருக்கதுனாலேதான் போட விட்டாரு.. எல்லாம் அப்பா ஆசைப்படித்தானே அங்கே....”



“அதான்.. இந்த மாதிரி உடுப்பெல்லாம் நமக்குச் சரிவராதுன்னு சொல்லிட்டாரு.. நானும் டி.வி யிலே இதெல்லாம் பார்த்திருக்கேன்.. ஆனா கூட நம்ம ஊரிலே இப்படிப் பேண்ட் சட்டை போடுற பொண்ணுங்க யாரும் இல்லை.. காலேஜுலே வேணா ஒருக்கா போட்டுப்பாங்களோ என்னவோ எனக்குச் சரியாத் தெரியலை..", என்றாள் நயமாய்..



"ஏய்.. நீ என் அக்கான்னு சொல்லவே நல்லா இல்லைடி.. பழைய கண்ணாம்பா சாவித்திரி ரேஞ்சிலே இருக்குற.. உனக்கு வயசு இருபத்தினாலுன்னு சத்தியம் செஞ்சா கூட ஒத்துக்க முடியாது.. அப்படியே ஒரு முப்பத்தஞ்சு நாப்பது வயசு ஆண்ட்டி மாதிரி இருக்கு உன்னோட கெட்ட்டப்.. ஆனா இந்த ஊரிலே அவங்க கூட உன்னை விட நல்லா டிரெஸ் செஞ்சுப்பாங்க.. ஸ்டைலா.."



"என்ன சத்யா.. நான் ஒண்ணும் பெருசா காடியா செஞ்சுக்கலையே.. இதையே இப்படிச் சொல்லுற.. பாரு அங்க கூடச் சிலர் சேலை கட்டிட்டுதான் இருக்காங்க.. ஏன் கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கூட நிறையப் பேரு சல்வார் தான் போட்டுருக்காங்க.. கொஞ்சம் பேரு தானே இப்படிக் கவுனும் பேண்ட்டும் போட்டிருக்காங்க..”



“ரொம்ப என்னவோ லண்டனிலேயே பொறந்து வளர்ந்தாப்போலப் பேசுறே.. நீயும் நம்மூருதான் மறந்துடாதே.. அதோட நம்ம மானத்தை மறைக்கவும், நாம யாரு நம்ம கவுரவம் என்னன்னு மத்தவங்களுக்கு எடுத்து நம்ம பாரம்பரியத்தைச் சொல்ல வேணும் உடுப்பு.. மத்தபடி நாம என்ன இங்கே விளம்பரத்துக்கா மாடல் செய்யுறோம்...", என்று சூடு கொடுத்தாள் வேதா.



‘இதென்ன மண்புழு துள்ளுது..', என்று நினைத்தபடி, "அம்மா தாயே.. நம்ம கவுரவம் நாம யாருன்னு உன்னோட உடுப்பு சொல்லனும்ன்னா.. நீ தூக்கி சொருகின சேலையோட அழுக்கு புடவையோட தான் நிக்கணும்.. அதைத்தானே நீ இப்போ செஞ்சிட்டு இருக்கே..வீட்டு வேலை செய்யறவங்களோட டிரெஸ் கோடே அதானே..", என்றாள் ஏளனமாய்..



"சத்யா.. உனக்கு இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்குக் கிடையாது.. உன் கண்ணோட்டத்தில் வீட்டு வேலை செய்யுறது கேவலமின்னா இருந்துட்டு போகட்டும்.. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை..”



“ஆனா நீயும் என் புருஷன் கிட்டச் சம்பளத்துக்குத்தான் வேலை செய்யறேன்னு மறந்துடாதே.. உனக்கு நான் மொதலாளி ஸ்தானத்துலே இருக்கேன்", என்று சொல்லிவிட்டு அதிர்ந்து அவமானத்தில் முகம் சிவந்து போய் நின்றிருந்த சத்யாவை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து அவளும் உள்ளே சென்றாள்.



அங்கே பார்ட்டி களை கட்டிக் கொண்டு இருந்தது..பிரகாஷ் பம்பரமாய்ச் சுழன்றபடி அனைவரிடமும் அவரவர்க்குத் தகுந்தபடி பேசிக் கொண்டு இருந்தான்..நடு நடுவே சத்யாவும் அவனும் நிறையப் பேரிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள்..



எல்லோரும் சந்தோஷமாய் இருக்க வேதாவுக்கு மட்டும் தான் தனிமைபோ படுத்தப்பட்டு விட்டோமோ என்று வருத்தம் மேலிட்டது...



ஒரு ஓரமாய்ப் போட்டிருந்த வடிவ மேஜையுடன் அமைந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்..



அவளை மாதிரியே அங்கே ஒரு சிலர் பொருந்தாமல் இருந்தார்கள்.. ஆனாலும் அவர்கள் அவரவர் குடும்பத்துடன் வந்திருந்ததனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாய் அந்தச் சூழ்னிலயை அனுபவித்தபடி இருந்தனர்..



புராஜெக்ட் முடிந்ததிற்கென்று ஒரு பெரிய கேக்கை கட் செய்தனர்.. பிரகாஷ் கேக் கட் செய்ய அவனருகில் ஏதோ தானே அவன் மனைவி போல நின்று கொண்டிருந்தாள் சத்யா.. ஆனால் உடமைக்காரி வேதாவோ தள்ளி நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்..



வெட்டிய கேக் பீசை கையில் எடுத்த பிரகாஷ் ஜார்ஜுக்கு கொடுக்க முயல அவரோ நாசூக்காய்..அதை மறுத்து.."தட் இஸ் நாட் மைன்.. இட் பிலாங்க்ஸ் டு யுவர் பெட்டர் ஹாஃப்..” என்று சொல்லி சுற்றும் முற்றும் பார்த்து வேதாவைத் தேடினார்..



அவமானமாய்ப் போய்விட்டது பிரகாஷுக்கு.. 'எங்கே போய்த் தொலைந்தது இந்தப் பட்டிக்காடு..பக்கத்தில் இல்லாமல் எங்கேயோ பராக்கு பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறது போல்', என்று நினைத்து அவளை மனதுள் வைதபடி, வெளியே செயற்கையாய் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்,



"ஒஹ் ஷி வாஸ் ஹியர்.. வெய்ட்.. ஐ வில் கிவ் இட் டு ஹெர்.. ஷி இஸ் அ ஷை டைப்..", என்று வேதா மேலேயே பழியைப் போட்டவன் அவளைத்தேடி ஒரு மூலையில் அமர்ந்திருந்தவளிடம் சென்று கேக் துண்டை கொடுத்தான்..



"நோ.. நோ.. நீங்க தான் அவள் வாயில் ஊட்டவேண்டும்..", என்ற ஜென்னியின் கோரிக்கையை ஏற்று அவள் வாயருகே எடுத்துச் சென்றவனின் கையைப் பற்றித் தானே வாங்கிக் கொண்டாள் வேதா..



"தாங்க்யூ..", என்று சொல்லி கேக்கை தானே கையில் வாங்கிக் கொண்டவளை முறைத்தபடியே சென்றான் பிரகாஷ்.



அதற்குள் கூட்டத்தின் கவனம் வேறு எதிலோ போய்விட மீண்டும் தனித்து விடப்பட்டாள் வேதா.



யாரோ மைக்கை பிடித்துப் பாட வேறு தொடங்கிவிட்டார்.. திடீரென்று ஒரு குரல் “மேடம் ப்ளீஸ் நீங்க ஒரு பாட்டு பாடுங்க..", என்று யாரோ ரிக்வெஸ்ட் வைத்தார்கள்..



ஒரு கணம் வேதாவுக்குப் புரியவில்லை.. தன்னைத் தான் கேட்கிறார்களா இல்லை.. வேறு யாரையாவது கேட்கிறார்களா என்று புரியவில்லை..



சுற்றும் முற்றும் பார்த்தவளின் அருகில் வந்த பாடகர் "உங்களைத்தான் கேட்கிறேன்..ப்ளீஸ்..", என்று அவள் மறுக்க மறுக்க மைக்கை வேறு கையில் கொடுத்துவிட்டார்..



ஒரு வழியாய் தன்னைச் சுதாரித்துக் கொண்டவளுக்கு முதலில் என்ன பாடுவது என்று புரியவில்லை.. அவள் தந்தை அவளைத் தற்போது வெளி வரும் படங்களுக்கெல்லாம் அனுப்பியது கிடையாது..



டி.வியில் கூட ஒரு சில சேனல்களில் வரும் படங்களைத்தான் அவளும் விரும்பிப் பார்ப்பாள்.. சற்று பழைய படங்கள் தான் அவள் விருப்பமும் கூட.. சற்று யோசித்தவள் தனக்குப் பிடித்த,



"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ", என்று இனிமையான குரலில் அரதப் பழசான பாடலை பாடியதும்..,



இஞ்சியைத் தின்ற குரங்கு போலாகியது பிரகாஷின் முகம்..



'மை ஃபுட்.. ஏதாவது லேட்டஸ்டா பாடித் தொலைக்காம.. நாலு மாமாங்கத்துக்கு முன்னாடி வந்த பாட்டைப் பாடுதே', என்று நினைத்தவன் கடைசியில் அந்தக் குரல் இனிமையில் அவனும் தன்னை மறந்து மூழ்கிப் போனான்..



குரல் தேனாய் குழைந்து சர்க்கரை பாகாய் உருகி ஓடியது.. நடுநடுவே ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு வேதாவை ஆக்கிரமிக்க மெல்ல தன் கணவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்..



அந்த நேர்ப்பார்வை பிரகாஷையும் ஏதோ ஒரு விதத்தில் அசைக்கத்தான் செய்தது.. ஏனோ அவன் மனதில் ஒரு சிறு சஞ்சலம் தலைதூக்கியது..



ஆனாலும் ‘இவள் என் வாழ்க்கையில் வேண்டும் என்பது என் முடிவல்லவே..', என்ற பிடிவாத குணமும் தலைதூக்கி இளகிய மனதை மீண்டும் கடினமாக்கியது..



'என்ன நினைத்துக் கொண்டு இப்படிப் பாடுகிறாள்..இதெல்லாம் பாடினால் நான் அப்படியே மயங்கிவிடுவேனா.. இந்த அப்பா தான் இந்த மாதிரி பித்துக்குளி ஐடியாவெல்லாம் கொடுத்திருப்பார்..’



‘அவர் நைஸாய் இங்கு வராமல் எஸ்கேப்பானதிலிருந்தே தெரிந்து விட்டது எங்களைத் தனிமையில் விடப் பிளான் செய்திருக்கிறார் என்று.. நானா அசருவேன் இதற்கெல்லாம்.. இப்போதும் எனக்கு வேதா மேல் எந்த வெறுப்பும் இல்லை,. ஆனால் இவள் எனக்குச் செட்டாக மாட்டாள்..', என்று நினைத்து வலுக்கட்டாயமாகத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரகாஷ்.



தன் கணவனின் பாராட்டை ஆவலுடன் எதிர்நோக்கி அவன் பக்கமாய்ப் பார்த்தவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை..



‘படபட’ என்ற கைதட்டலுடன் அனைவரும் பாராட்டவும் நிஜமாகவே வெட்கமாகிப் போனது வேதாவுக்கு.. போதாதற்குப் பிரகாஷிடம் ஜார்ஜ் வேறு..



"பொருள் தெரியாவிட்டாலும் எனக்கு இக்குரலின் இனிமையும் அந்த மெலடியும் ரொம்பப் பிடித்தது.. நிச்சயம் காதல் வசப்பட்டவர்கள் தான் இந்தக் குழைவை குரலில் கொண்டு வர முடியும்” என்று வேறு சொல்லிவைத்தார்..



சத்யாவுக்கோ எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடித்தது.. எவ்வளவு கஷ்டப்பட்டுத் தான் புராஜ்ஜெக்டை முடித்துத் தந்திருக்கேன்.. என்னைப் பற்றித் துளியும் புகழாமல் பேசாமல் இந்தப் பட்டிக்காட்டு வேதாவை முன்னிறுத்திக் கொண்டாடுகிறார்களே.. என்று ஆத்திரம் பொங்கியது..



எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று அலைந்தபடி இருந்தவளுக்கு அந்த அறிவிப்பு அல்வா உண்டது போல் மயக்கத்தைத் தந்தது..



"ஹலோ ஃப்ரெண்ட் டான்ஸ் ஃப்ளோர் இஸ் ரெடி.. வாங்க.. வாங்க...ஷேக் யுவர் லெக்ஸ் ஃபொர் திஸ் பெப்பி நம்பர்..", என்று அறைகூவல் விடுத்தவாறு இருந்தார் இவெண்ட் மேனேஜர்..



சத்யாவுக்கு நன்றாய்த் தெரியும் வேதாவுக்கு இதுபோல் ஆடுவது எல்லாம் சுட்டுப்போட்டால் கூட வராது என்று..



ஏதோ ஒரு வெறி, தன்னை வாழ்க்கையில் ஜெயித்த வேதா மூஞ்சியில் கரியைப் பூச வேண்டும் என்று உந்தித் தள்ள, தன் பிறப்பு வளர்ப்பு, கலாசாரம் அனைத்தையும் மறந்தவள், வேதாவை எரிச்சல் படுத்தி மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில், பிரகாஷிடம் ஓடிச் சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு,



"வா ப்ரகு, எவ்வளவு நாளாச்சு நாம் ரெண்டு பேரும் இப்படி எஞ்சாய் செஞ்சு.. வா பிரகு டான்ஸ் ஆடலாம்..", என்று முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு கெஞ்சுதலாய் பார்த்தாள் சத்யா.



ஏற்கனவே வேதா மேல் இருந்த ஆத்திரத்தில் பிரகாஷும் சம்மதித்தான்.. அவனுக்கு எப்படியாவது வேதா அவனை வெறுத்து ஓட வேண்டும்.. அவனுக்கு அவள் தகுதியில்லை என்று உணர வேண்டும் என்பதே..



"கம் பேபி டால்..", என்று அவளுடன் டான்ஸ் ஃப்ளோருக்கு இணைந்து சென்றான்..



கம்பெனியில் அனைவருக்கும் சத்யா அவன் முறைப்பெண் என்பது தெரியுமாதலால் யாரும் வாயைத் திறக்கவில்லை.. என்ன ஒரு சிலர் வேதாவைத் தான் பரிதாபமாய்ப் பார்த்தார்கள்.. இப்படிக் கூட ஒரு ஏமாளி இருக்குமா என்பது போல்..



அடுத்து அனைவருக்கும் சத்யா திருமணமானவள் என்பதும் தெரியும்.. இதோ ப்ராஜெகெட் முடிந்தவுடன் போய்விடுவாள் என்பதும் தெரியும் என்பதால் இதை ஒரு பெரிய விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை..



இருவரும் அடுத்தச் சில சில நிமிடங்கள்.. ஆட்டத்தில் களித்தனர்.. பிரகாஷுக்கு இயற்கையிலேயே இதெல்லாம் ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவனுக்கு ஈடு கொடுத்து ஆடிய சத்யாவுடன் உற்சாகமாகவே ஆடினான்..



வேதாதான் தவித்துப் போனாள்.. என்னதான் மறைக்க முயன்றாலும் ஏமாற்றமும் அருவருப்பும் முகத்தில் அவ்வப்போது வந்து போனது.. ஆனாலும் தனியாய் எங்கேயோ போய் இவர்கள் ஆடியிருக்கலாமே.. தன் முன்னே இப்படி எல்லோர் முன்னேயும் பகிங்கரமாய் இருக்கிறார்கள்..



தவறு சொல்ல முடியாதே.. நான் பொறாமை படுவதாகத் தான் தோன்றும் இவர்களுக்கு.. உண்மையும் அதுதானே..ஒழிந்து போகட்டும் என்று நினைத்தபடி பழையபடி ஒரு ஜூஸ் டம்ப்ளருடன் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒருவித கையாலாகாதத் தனத்துடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்..



ஒரு வழியாய் ஆட்டம் பாட்டம் கேளிக்கை முடிந்து கடைசியாய் நன்றி நவிலலும் வந்தது.. உரிமையாளாரின் மனைவி என்ற அந்தஸ்த்தில் பிரகாஷ் அருகே நின்றாள் வேதா.



பிரகாஷ் அந்தப் புராஜெக்டை சிறப்பாய் முடித்துத் தந்த சத்யாவை கௌரவிக்கும் பொருட்டு அவர்கள் கம்பெனி சார்பில் ஒரு பாராட்டுப் பத்திரமும் ரிவார்டும் கொடுத்தான்.. அதிலும் கேஷ் ரிவார்டு..



சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை புரியவில்லை சத்யாவுக்கு.. என்ன செய்கிறோம் என்பதை மறந்து எப்போதும் போல் பிரகாஷ் என்னவன் என்ற உரிமை உணர்வு தலை தூக்க, சட்டென்று கட்டிப் பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு,



"தாங்க்யூ டியர்", என்று சொன்னது தான் தாமதம்..



"பளார்", என்று அவள் கன்னத்தில் விழுந்தது ஒரு அறை..



*******************************************************************

 
Top