கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 21

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 21



கதிரும், சத்யாவும் பார்ட்டி முடிந்து இரவு வீட்டுக்கு வந்த பொழுது, சத்யாவின் பெற்றோர்கள் திரும்பி வந்ததற்கான அடையாளமே இல்லை.. தன்னிடம் இருந்த சாவியினால் கதவைத் திறந்த சத்யா, கதிரை கண்டு கொள்ளாமல் தன்னறைக்குள் நுழைந்தாள்.



காரிலும் அவர்களுக்குள் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் இல்லை.. கதிர் தன்னுடைய காரை எடுத்து வந்ததினால் அவனுடன் பயணிக்க வேண்டியாதி விட்டது சத்யாவிற்கு..



பிரகாஷுடன் வீட்டுக்குத் திரும்பி வரலாம் என்று ஆவலுடன் இருந்தவளுக்குப் பிரகாஷ் அவளைக் கதிருடன் அனுப்பி வைத்ததில் உடன்பாடு இல்லையென்றாலும், வேறு வழியில்லாமல் அவனுடன் கிளம்பியவள்.., வழி நெடுக்க ஒற்றை வார்த்தை கூடப் பேசவில்லை.



கதிர் அவளிடம் கேட்ட கேள்விகளுக்கும் வெறும் தலையாட்டலோ இல்லை உதட்டைப் பிதுக்குதல் என்றபடி அலட்சியமாக தன் செல்போனில் புதையல் எடுத்துக் கொண்டிருந்தவளைக் கண்டவனுக்கும் எரிச்சல் அதிகமாகி அவளிடம் பேசுவதை நிறுத்தினான்.



ஆனால் எத்தனை நேரம் மௌன விரதம் இருக்க முடியும்.. அதற்கும் ஒரு முடிவு வந்தது.



சத்யா தன் அறைக்குள் நுழைந்து நேராகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டவள்.., மீண்டும் திரும்பி வந்த பொழுது இரவு உடையில் வந்தவள் அவனைக் கண்டு கொள்ளாமல் கட்டிலில் படுத்தாள்.



"எனக்குத் தூக்கம் வருது.. உங்களுக்கு வேலை எதுவும் இல்லைன்னா லைட்டை அணைச்சிட்டு படுக்கிற வழியைப் பாருங்க.."



'உ ..ம்.. ஆமாமாம் ராத்திரி வேலைல எனக்கு வேறு என்ன வெட்டி முறிக்கிற வேலை இருக்கப் போவுது?.. பொண்டாட்டியை கட்டி பிடிச்சி கொஞ்சவா முடியுது.. பாரு எப்படி வந்து படுத்திருக்கா.. நல்லா இப்ப பரிச்ச தக்காளி போல ஃப்ரெஷ்ஷா.. தளதளன்னு.. குளிச்சிருப்பா போல.. முகத்தை சரியா துடைக்கலையோ.. முத்து முத்தா அங்கங்கே தண்ணி மினுமினுக்குது.. இப்ப அப்படியே அவளை...' தன் எண்ணங்களுக்குத் தடை போட்டவன்.. பெருமூச்சு விட்டான்.



காலையில் புறப்படும் போதுதான் அப்பத்தா சொல்லி அனுப்பி இருந்தார்கள்.. பேத்திக்கு வேலை முடிஞ்சாச்சுன்னா கையோடு கூட்டி வரணும் என்று..



அப்படியே வேலை மிச்சமிருந்தாலும் ஒன்றும் பெரிய விஷயமில்லை.. இனி முடியாது என்று சொல்லிவிட்டு வந்து விடச் சொல்லி.. இப்படி ஒரு மாதம் புது மணத் தம்பதிகள் பிரிந்து இருப்பது நல்லது இல்லையாம்..



ஏற்கனவே அக்கம் பக்கத்தில் கல்யாணம் ஆகி மறுவீட்டுக்குப் போன பொண்ணுக்கு இன்னும் என்ன பட்டிணத்தில் வேலையென்று பேச்சு வந்துவிட்டதாம்.. அதனால் சத்யாவை கட்டாயம் அழைத்து வந்து விட வேண்டும் கட்டளை இட்டு இருந்தார் கதிருக்கு.



கதிர் அப்பத்தாவிடம், அவன் மறு வீட்டுக்கு வந்த போது நடந்த விஷயங்களை மறைத்திருந்தான்.. அவளுக்கு அவசர வேலை, முடித்து விட்டு பின்னர் வருவாள் என, சமாதானம் சொல்லி இருந்தான்.. சரி இனியாவது தங்கள் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று எண்ணியே மீண்டும் அவளைத் தேடி வந்திருந்தான்.



ஆனால் இங்கேயோ.. நிலைமை விபரீதமாகத்தான் தோன்றியது அவனுக்கு.. எப்படியாவது அவளைக் கூட்டி சென்று விட்டால் அவளும் மறந்து போவாள்.. அவள் ஒன்றும் கெட்ட பெண் இல்லையே.. ஏதோ ஒரு ஆத்திரம் அவள் அறிவை மறைக்கிறது..



மெல்ல நயமாய் பேச்சைத் தொடங்கினான்.



"சது குட்டி.. நாளைக்கு நாம் ஊருக்குக் கிளம்புவோமா.. எனக்கும் அங்கே நிறைய வேலை இருக்கும்மா.. பிரகாஷ் இந்தப் பார்ட்டிக்கு அழைச்சதுனால அப்படியே வேலையெல்லாம் நடுவில விட்டுட்டு வந்திட்டேன்..”



"அத்தோடு உங்க அம்மாவும் அப்பத்தாகிட்ட சொன்னாங்களாம் அடுத்த வாரம் உன்னை அழைச்சிட்டு வருவதாக.. அதான் அப்பத்தா எதுக்கு அவங்களுக்குச் சிரமம்ன்னு என்னையே கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க.. நாளைக்குக் கிளம்பலாமா?.."



அவனுக்கு மறுபுறம் திரும்பி படுத்திருந்தவள்.. சட்டென உருண்டு அவன் புறம் திரும்பிப் படுத்தாள்.. அவள் திரும்பியவுடன் அவள் அணிந்திருந்த மேல்சட்டை பேண்டிலிருந்து அப்படியே ஒரு இஞ்ச் மேலே ஏறி அவளுடைய வழுவழுத்த இடையை அப்பட்டமாகக் காட்டியது.



கதிரின் பி.பி. எகிறியது.. ‘கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு.. இவளுக்குக் கூச்சமே இல்லையா?.. திமிர்.. தான் அழகிங்கிற திமிர்..' என்று நினைத்தவனுக்கோ கண்களைத் திருப்ப பிரம்மபிரயத்தினம் செய்ய வேண்டியதாயிற்று.



அவளோ அதைப் பற்றிக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல்..



"வேலை இருந்தா கிளம்புங்க.. அதுக்கு எதுக்கு என் கிட்ட சொல்லணும்.. என்னைக் கேட்டுட்டுதான் வந்தா மாதிரி என்ன பாவ்லா இது?.." தன் கைகளைத் தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு காலை நீட்டிப் படுத்திருந்தவளுக்கு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.



'வந்தால் வா.. வராவிட்டால் போ..' என்ற அலட்சிய மனப்பாங்கு.. அவளின் இந்த ஒதுக்கத்தில் கதிருக்கு இப்பொழுது இன்னும் பி.பி. ஏறி நெற்றியில் நரம்புகள் புடைக்கத் தொடங்கின.. தன்னை அடக்கிக் கொண்டவன்..



"சத்யா.. போதும்.. அன்னிக்கு வேலை இருக்குன்னு சொன்னே.. நீ எடுத்திட்ட வேலையை நீயே முடிக்கணும்.. அதுதான் உன்னோடு பாலிசின்னு சொன்னே.. ஓ.கே.. நானும் அதுக்குச் சம்மதித்தேன்.. ஏன்?.. நீ சொல்லறதில ஒரு நியாயம் இருந்தது.. நீயும் என்னை மாதிரிதான்.. எடுத்த வேலையை முடிப்பவள்ன்னு நினைச்சேன்.. அடுத்தவர்களை நம்பாமல் தன்னிச்சையா செயல்படுகிறவள்னு பெருமையாகவும் இருந்தது..”



"அப்போ எனக்கு நீ மறுவீடு முடிஞ்சி என்னோடு வரலையேன்னு கொஞ்சம் கோபம் வந்தாலும்.. உன்னைப் புரிஞ்சிட்டு விட்டுக் கொடுத்தேன்.. இனி அப்படி முடியாது.. நாளைக்கு நாம ஊரைப் பார்க்க கிளம்பறோம்.." அழுத்தமாகச் சொன்ன அவன் குரலில் இப்பொழுது கண்டிப்பு மறைந்திருந்தது.



கட்டளையாகவும் இருந்ததோ..



சடாரென்று எழுந்து அமர்ந்தாள் சத்யா..



"ஓ.. இது என்ன மிஸ்டர். கதிரோடு ஆர்டரோ?.. இல்லைன்னா.." ஏளனமாகக் கேட்டவளை..



"அடிச்சு பல்லை பேர்த்திடுவேன்.. என்னடி மிஸ்டர் கதிரா?.. கொழுப்பாடி?.. கட்டினவனை ஒண்ணு அத்தான்னு சொல்லு.. இல்லை மச்சானோ, மாமான்னோ சொல்லு.. இரண்டும் சொல்லப் பிடிக்கலைன்னா.. எப்பவும் உங்க பட்டிணத்து வழக்கப்படி கதிர்ன்னு பேரை சொல்லு.. நான் வேண்டான்னேனா?.. அது என்னடி மிஸ்டரு மிஸ்டர்.. போனா போகுதுன்னு பார்த்தா.."



அவனைக் கண்டு கொண்டால் தானே.. "ம்.. கதிர்.. நான் வரலைன்னா.."



நீ என்ன செய்ய முடியும் என்னை என்ற அகம்பாவ மனப்பான்மையில் அவனைத் திமிராகப் பார்த்தாள் சத்யா.



“அப்படின்னா.. இதுக்கு என்ன அர்த்தம்.. அதையும் நீதான் சொல்லி விடேன்..” கட்டிலில் அமர்ந்திருந்த கதிர் அருகே மேசையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தன் வாயில் கவிழ்த்துக் கொண்டான்.



அடக்கப்பட்டிருந்த கோபத்தைத் தண்ணீர் குடித்துத் தணித்துக் கொண்டானோ?..



“ஹலோ.. இங்க என்ன வார்த்தை போட்டியா நடக்குது?.. நீ சொல்லு.. நான் சொல்லுன்னு.. உங்களுக்குப் புரியுது இல்ல.. அப்புறம் என்ன?.. சரி.. ஒருவேளை புரியல்லைன்னாலும் நானே சொல்லறேன்.. நான் உங்களோடு வரமாட்டேன்.. எனக்கு வரப் பிடிக்கலை.. இதுதான் அதற்கு அர்த்தம்.. போதுமா?.. இல்லை இன்னும் கொஞ்சம் நல்லா விம் போட்டு விளக்கட்டுமா?..”



இப்பொழுது அதிர்ந்து நின்றான் கதிர்.. இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்.. இவள் என்ன சொல்ல வருகிறாள்..



‘புலி வருது.. புலி வருது’ என்று இதை அவன் அன்றே எதிர்பார்த்திருந்தான்.. அன்று எதையோ காரணம் சொல்லி வரப் போவதை தள்ளி வைத்தவள் இன்று இனி முடியாது என்று ஒரேடியாகச் சொல்லியே விட்டாள்.. மனம் பாரமாகிப் போனது.



யாருக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்.. திருமணமான இரண்டு மாதங்களுக்குள் உன்னுடன் வாழ்ப் பிடிக்கவில்லை என்று சொல்லும் பெண்டாட்டி..



ஆனால் இன்னும் அவள் சரியாக.. விளக்கமாகச் சொல்லவில்லையே.. சரி வருவது வரட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று அவனுக்குத் தோன்றியது.



“இதுக்கு என்ன அர்த்தம் சத்யா.. நீ புரிஞ்சிதான் பேசிறீயா?.. நீ சொல்லவதை பார்த்தால்..” அவன் வாயால் அவனுக்குச் சொல்ல பிடிக்கவில்லை..



“மிஸ்டர்.கதிர்.. நான் இப்படி அழைப்பதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. நான் பேசறது ஒண்ணும் புரியாத பாஷையில்ல.. அதுக்கு ரொம்பப் படிச்சிருக்கணும்ன்னு அவசியமும் இல்ல.. நீங்க படிச்ச அந்த அறைகுறை படிப்பே இதைப் புரிஞ்சிக்கப் போதும்..” என்றவள் அந்தச் சமயத்திலும் அவன் படிக்காதவன் என்று சொல்லி நோக அடித்தாள்.



“திரும்பவும் சொல்லறேன் கேட்டுக்கங்க.. எனக்கு உங்களோடு வரப் பிடிக்கலை.. நீங்கள் நாளைக்கு ஊருக்குக் கிளம்பலாம்.. எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை..”



“வரப் பிடிக்கலையா?.. இல்லை வாழப் பிடிக்கலையா?.. அதையும் சொல்லிட்டா எனக்கும் கிளம்புறதுல எந்தவித ப்ராப்ளமும் இல்லை..” ஆத்திரத்தில் கதிரும் வாயைத் திறந்தான்.



இனி என்ன நடந்தால் என்ன?.. எப்போ இவ்வளவு தூரம் போய் விட்டாளோ இதற்குப் பிறகு என்ன போயிற்று என வார்த்தைகளை விட்டான்.



“ஷ்.. என்ன சும்மா..சும்மா ஏற்கனவே நான் சொல்லியாச்சு.. இது வார்த்தை விளையாட்டு இல்லைன்னு.. எனக்கு உங்களோடு வாழவும் பிடிக்கலை.. வரவும் பிடிக்கலை.. போதுமா?.. இதைத்தானே என் வாயால சொல்லணும்னு நீங்க எதிர்பார்த்தீங்க.. பரவாயில்லை.. நானே இந்தப் பந்த்திலிருந்து ஓதுங்கிக் கொள்கிறேன்..”



“ம்.. ரொம்பப் பெரிய மனசு.. சத்யா மேடம் உங்களுக்கு.. தாராள மனசு.. நீங்க ஒதுங்க்கிறீங்க?.. புருஷனோடு வாழப் பிடிக்கலைன்னு சொல்லி விட்டு விவாகரத்து கொடுப்பதற்கு.. கொஞ்சம் நேரம் முன்னால வாங்கின பாராட்டு, பட்டமெல்லாம் வேஸ்ட்டு.. உங்களுக்கு இன்னும் பெரிய பெரிய பரிசெல்லாம் தரலாம்.. நான் வேணா அதுக்குப் பரிந்துரை பண்ணவா?..”



“கதிர்.. திஸ் இஸ் தெ லிமிட்.. எனஃப்.. போதும்.. டீசன்ட்டா நான் சொன்னா உங்களுக்கு நக்கலா இருக்கா?.. வாழப் பிடிக்கலைன்னு சொல்லறேன்.. எதுக்கு இப்படி அசிங்கமா பேசிட்டு.. விட்டு விட்டு போங்களேன்..”



‘சத்யாவுக்கு எரிச்சலாக வந்தது.. படிக்காத பட்டிக்காடு..’ சலிப்பாக இருந்தது அவளுக்கு.



“எதைடி விட்டுடுட்டு போகணும்.. ஊரறிய நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்திருக்கு.. சொந்தபந்தம் முன்னால நமக்குக் கல்யாணம் நடந்திருக்கு.. உங்கப்பா என் அப்பாகிட்ட கேட்டுட்டு இந்தக் கல்யாணம் நடந்திருக்கு.. அன்னிக்கே நான் சொன்னேன் தானே.. உனக்கு இந்தக் கல்யாணம் சரிபடுமான்னு.. உங்கப்பா தானே சொன்னாரு.. என் பேச்சை என் பொண்ணு கேட்பான்னு.. இப்ப எப்படிடி வாழ பிடிக்கலைன்னு சொல்லறே?.. எப்படிடி நடுவில விட்டுட்டு போக முடியுது உன்னால..” ஆத்திரத்தில் குரலை உயர்த்தினான்.



“ஹேய்.. என்ன சும்மா சும்மா கல்யாணம்ன்னு நடந்திச்சின்னு சொல்லாதே.. என்னைக் கேட்டாங்களா யாராவது?.. என் பொண்ணு என் பேச்சை கேட்பான்னு சொன்ன எங்கப்பாவும் என்னை உனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கான்னு கேட்கலை.. கூட இருந்த அம்மாவோ அவர் முகத்தைப் பார்த்திட்டு வாயை மூடிட்டு இருந்திட்டாங்க.. என்னைப் பத்தி நினைச்சாங்களா?..”



“சரி அவங்க தான் நினைக்கலை.. வாயை விட்டாச்சு.. சொன்ன சொல்லை காப்பாத்தணும்ன்னு பிடிச்சிட்டு தொங்கிட்டு இருந்தாரு.. சரி போகட்டும் விடு.. நீங்க.. வாழப் போற பொண்ணுகிட்ட உனக்கு ஓ.கே.வா.. இந்தக் கல்யாணத்தில் உனக்கு விருப்பமான்னு நேரடியா கேட்கத் தோணிச்சா.. இல்லையே?..”



“யாருக்காகவது ஒருத்தருக்காவது என்னைப் பத்தி நினைக்கத் தோணிச்சா.. பொண்ணுன்னா என்ன போகப் பொருளா?.. இல்லை ஆம்பளை வர்க்கத்துக்கு அடிமையா?..



“சரி.. அதெல்லாம் போகட்டும்.. கல்யாணம் தான் முடிஞ்சாச்சே.. சரி வாழ்ந்து பார்க்கலாம்ன்னு நினைச்சாலும்.. என்ன இருக்கு அந்த ஊர்ல.. பட்டிக்காட்டு ஜனங்கள்.. சரி அது கூடப் பரவாயில்லை.. அட்ஜஸ்ட் பண்ணலாம்.. நான் படிச்ச படிப்புக்கு நான் அங்க உட்கார்ந்து என்ன பண்ண முடியும்..”



“உங்க காலேஜ்ஜை பார்த்துக்கலாம்ன்னு நினைச்சாலும் அதுக்கும் தடங்கல் போடுது உங்க அப்பத்தா.. அவங்களையும் மீறி போனாலும் எனக்கு அந்த லைன் பிடிக்கணும் இல்லையா?.. எனக்கு இந்த ஊர் தான் ஒத்து வரும்ன்னு இந்த ஒரு மாசத்தில தெளிவா புரிஞ்சிட்டேன்.. எனக்கு அங்கே பிடிக்கலை.. இனி என்னால முடியாது.. அதனாலதான் இப்போ தைரியமா எதிர்க்கத் தொடங்கினேன்..”



“அன்னிக்கு உங்க இஷ்டத்துக்கு நீங்க எல்லோரும் ஆடினிங்க.. இன்னிக்கு ஆட்டம் என் கையில.. நான் இப்போ காயை நகர்த்தறேன்.. நவ் தெ பால் இஸ் இன் மை கோர்ட்..” என்றாள் கர்வமாய், பின்,



“என்ன புரியலையா?.. இந்தச் சின்ன ஃப்ரேஸ் கூட உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே.. அப்ப என்னோடு மனசு எப்படிப் புரியும்.. இதிலிருந்தே தெரியலை உங்களுக்கும் எனக்கும் ஏணி வைச்சா கூடப் பொருந்தாதுன்னு..”



“போதும் உங்களோடு நான் வாழ்ந்தது.. நம்ம இரண்டு பேருக்கும் இனி ஒத்து வராது.. டீசன்ட்டா விலகிக்கலாம்..”



“சத்யா.. நீ பேசினது எல்லாம் எனக்குப் புரியாமல் இல்லை.. இதோ பாரு.. உன் கிட்ட தான் பால் இருக்கு புரியுது?.. சரிதான்..”



“வாழ்க்கை கூட ஒரு கூடை பந்துதான்மா.. அதைத் தூக்கி நெட்டுல போட்டாதான் நீ ஜெயிக்க முடியும்.. உன் கையில வைச்சிருக்கிறதுனால எந்தப் பிரயோஜனமுமில்லை.. சொல்லும்மா.. நீ பந்தை தூக்கி போட்டு ஆடப் போறீயா.. இல்லை கையில கிடைச்ச பந்தை உருட்டி தவற விடப் போறியா?..”



தன் கோபத்தை அடக்கிய கதிர், அப்பொழுதும் தானே தழைந்து அவளுக்கு எடுத்துச் சொல்ல முயன்றான்.



“கதிர்.. ப்ளீஸ்.. ஷட் அப். எதையாவது சொல்லி என்னைத் திசை திருப்பாதே.. ஐயாம் ஜஸ்ட் பிஸ்ட் ஆஃப்..” என்றவள்..



“நம்ம ரெண்டு பேருக்கும் எதிலையும் பொருத்தம் இல்லை.. சரி படிப்புதான் சரியில்லைன்னு வைச்சிட்டாலும்.. நமக்கு உடல் பொருத்தமும் இல்லையே.. ஒரு கல்யாணத்துக்குத் தேவையான முதல் அம்சமே அழகுதான்.. ஏன்னா அரேஞ்ச்ட் மேரேஜிலே உருவம் முதல்ல மனசுலே பதிஞ்சா தான், மீதியெல்லாம் சரிவரும் அதுவே இங்க மைனஸ்..,” என்று புது விளக்கம் கொடுத்தாள் இன்றைய நாகரீகத்தின் பிரதினிதி போல.



“சரி அதுதான் போகட்டும்ன்னு நினைச்சாலும் வேற என்ன இருக்கு உங்களுக்கு ப்ளஸ்ன்னு சொல்ல.. ,



“படிப்பு இல்ல.. அழகு இல்லை.. பணம் வேணா இருக்கலாம்.. ஆனால் அது மட்டும் வாழ்க்கைக்குப் போதாதே?.. இதுக்கு மேல மனசுன்னு ஒண்ணு இருக்கு.. அது சுத்தமா எனக்கு உங்க மேல இல்லை.. என் மனசு உங்க மேல பொருந்தலை..”



முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சத்யா.. இனி வேறு வழியில்லை.. மனதை கல்லாக்கிக் கொண்டாள்.. பொருந்தாத இந்தத் திருமணப் பந்தத்தை மேலும் இழுக்க அடிக்கப் பிடிக்காமல் கத்திரிக்க நினைத்தாள்.



அது தான் சத்யா.. அவள் வளர்ந்த முறை இதுதான்.. தனக்குச் சரிபட்டு வரவில்லையா.. அதை விடுத்து அடுத்தற்குப் போய் விடத் துடிப்பவள்.. என்றுமே தனக்குப் பிடிக்காததை செய்து பார்க்க முயற்சி எடுக்கக் கூடப் பிடிக்காதவள்.. அதே போக்கில் தான் இன்று தன் வாழ்க்கையையும் தொலைக்க நினைக்கிறாள்.



கதிருக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை.. ‘இப்படி எடுத்தேன்.. கவிழ்த்தேன் என்று புரியாமல் பேசுபவளை.. மிரட்டலாம்.. எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைத்தாலும்.. அதற்குக் கூட ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கப் பிடிக்காதவளை என்ன சொல்லுவது..’



‘நீ எனக்குப் பொருத்தமில்லை என்று சொன்னதற்குப் பிறகு, இனி தழைந்து போவதில் அர்த்தமில்லை.. அது ஒரு ஆண்மகனான அவனுக்கு அழகில்லை’ என்று தீர்மானித்தவன்.. மீண்டும் வார்த்தைகளை விட்டான்.



“என் மேல மனசு பொருந்தலையா?.. இல்லை உன் மனசை எங்கையாவது தொலைச்சிட்டு இப்படி மாத்தி பேசி என்னை வருத்த நினைக்கிறியோ?..” இளக்காரமாகக் கேட்ட கதிரை..



இப்பொழுது நிமிர்ந்து நின்றாள் சத்யா.. அவள் இதழோரத்தில் சின்னப் புன்னகை குடி கொண்டது.



‘சராசரியான ஆண்மனம்.. வேறு என்ன சிந்திக்கும்.. அவனைப் பிடிக்கவில்லை என்றதும் இப்படி கீழ்தரமாய் எண்ண வைக்கிறதோ……..’



“ம்.. ஏற்கனவே தொலைந்த மனதுதானே?.. இன்னும் எத்தனை முறை தொலையும்.. என்ன.. அப்படி அதிர்ச்சியா பார்க்கிறே.. உன்னை வருத்தப்படுத்தன்னு நான் இதை சொல்லலை.. என் மனசு உங்ககிட்ட படியலை.. எஸ்.. எனக்குப் பிரகாஷை தான் பிடிக்கும்.. இதைச் சொல்லறதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை.. ஐ லைக் பிரகாஷ்.. ஹி இஸ் மை சாய்ஸ்..” என்று அவனைக் குத்தி குதறி இன்னும் குருதி வழிய விட்டவள்..



“சின்ன வயசிலேர்ந்து நாங்க ஒண்ணா வளர்ந்தவங்க.. ஒத்த மனசை உடையவங்க.. இதுல என்ன தப்பு.. நாங்க விருப்பப் பட்டோம்.. நான் அவனைக் காதலிச்சேன்.. இதைச் சொல்ல நான் எதுக்கு வெட்கப்படணும்.. அதான் எல்லாரும் சதி செஞ்சி மொத்தமா எங்களைப் பிரிச்சாச்சே..”



அவனைக் காயப்படுத்த நினைத்துத் தன்னைத் தாழ்த்திக் கொண்டாள் சத்யா.., அது எதில் கொண்டு போய் விடப் போகிறதென்று உணராமலேயே..



“ச்.சீ.. உனக்கு வெட்கமா இல்லை.. இப்படி இன்னொருத்தியின் புருஷனை காதலிக்கிறேன்னு சொல்ல..” அவளைப் புழுவை விடக் கேவலமாகப் பார்த்தான் கதிர்.



அவள் முகம் வேதனையைப் பிரதிபலித்தது.. ‘நான் பிரகாஷை காதலிச்சேன்னு தான் சொன்னேன்.. அதில் என்ன தப்பு?.. ஆனால் அதுக்காக இவன் என்னைக் கேவலமா பார்ப்பதா?.. இவனுக்கு நான் இப்போ மனைவி.. என் மனசைப் புரிந்து கொள்கிறானா?.. அந்தப் பிரகாஷ் என்னடாவென்றால் பிடிக்காத பெண்டாட்டின்னாலும் அவளுக்காக அவன் மன்னிப்பு கேட்டு வந்தான்.. ஆனால் இவன்..’



தப்பு தப்பாகவே யோசித்தாள் சத்யா.



நினைக்கவே கசந்தது அவளுக்கு.. பொருந்தாத பந்தத்தை இனி தொடர்ந்து என்ன லாபம் என்று நினைத்தவள்..



“ஹலோ.. இதுல என்ன தப்பு இருக்கு.. ஆமாம்..இப்போ அவன் அடுத்தவள் புருஷன் தான்.. அதுக்கென்ன இப்போ.. அதுக்காக நான் காதலிச்சது இல்லைன்னு ஆகிடுமா?.. இதெல்லாம் இந்தக் கார்ப்பரேட் வெர்ல்டல சகஜம்.. வெட்டி விடறதும்.. சேர்ந்துக்கறதும் இங்கே அடிக்கடி நடக்கிரதுதான்.. அடுத்து என்ன நடக்கும்ன்னு யாருக்கு என்ன தெரியும்..”



“அடிப்பாவி.. இதை விட ஒரு பெண்ணுக்கு என்னடி கேவலம் வேணும்.. கார்ப்பரேட் கல்ச்சராம் கார்ப்பரேட் கல்ச்சர்.. இது என்ன நாகரீகம்டி.. இப்படி அவுத்து போட்டு ஆடுவதும்.. அடுத்தவன் புருஷனோடு அலையறதும் தான் நாகரீகமா?.. உன்னெயெல்லாம்.. உனக்கு அவ கொடுத்த அடி பத்தாதுடி.. கொலை பண்ணாக் கூட தப்பில்லைடி..”



அதுவரை கடைப்பிடித்த நிதானத்தை இழந்தான் கதிர்.. கண்கள் ரத்தமென ஜொலிக்கக் கதிர் உச்சஸ்தாயில் நரம்புகள் புடைக்கக் கத்தினான்.



“ஷ்.. எதுக்கு இப்படி இண்டீசன்டா பிஹேவ் பண்ணி கத்திறீங்க.. இப்போ தெரியுது?.. கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல்..”



“அவதான் வெட்கம் கெட்டு என்னை அடிச்சா.. கொஞ்சமாவது படிச்சிருந்தா புரிஞ்சிருக்கும் அவளுக்கும்.. படிக்காத பட்டிக்காடு.. ஜஸ்ட் அன்பா அவன் எனக்குக் கிஃப்ட் கொடுத்ததுக்குச் சின்ன டோக்கன் ஆஃப் லவ்.. கன்னத்துல முத்தம் கொடுத்தேன்.. என்னவோ லிப்பி அடிச்ச மாதிரி.. ஓங்கின கையை உடைச்சிருக்கணும்..”



“அவளை நான் சும்மா விட்டு இருக்கக் கூடாது.. எல்லாம் உன்னாலதான்.. நீ தடுக்கலைன்னா அவளை அந்த இடத்திலேயே வெட்டி போட்டு இருக்கணும்.. பொண்ணா அவ.. கேடு கெட்டவ..”



இப்பொழுதும் சத்யாவும் கத்தத் தொடங்கியிருக்க..



‘ம்.. இப்போ யார் அசிங்கமா கத்தறது?.. விட்டா எங்க அப்பத்தாவையே சண்டையில தோற்க அடிச்சிடுவா போல.. இதுல இந்தம்மா என்ன சொல்லுது..’ அந்தச் சமயத்திலும் அவனுக்கு இப்படி நினைக்கத் தோன்றியது.



“அடுத்தவன் புருஷனை அபகரிக்க நினைக்கறவ எல்லாம் பொண்ணுன்னா.. உன்னை மாதிரி அடங்காப்பிடாரிகளைத் தட்டி கேட்க அடிச்ச அவளும் பொண்ணுதான்..” என்றான் தன் கோபத்தை மீண்டும் அடக்கிக் கொண்டு.



“சரி.. அவ்வளவுதானே.. ரொம்ப நல்லது.. அவளே பொண்ணாவே இருக்கட்டும்.. நான் பேயாவே இருக்கேன்.. ஆளை விடுங்கடா சாமி.. உங்களால என்னோடு வாழ்க்கை வீணானதுதான் மிச்சம்.. இவ்வளவு பரிஞ்சிட்டு வருகிறவருக்கு உங்க பொண்டாட்டியை அடுத்தவ அடிக்கிறான்னு தெரிஞ்சும் ரோஷம் பொத்திட்டு வரலையே?.. அந்தச் சமயத்தில் நீயும் இல்லை என்னை விட்டுக் கொடுத்து கேவலப்படுத்தினே.. ம்.. இதுலேர்ந்தே தெரியலை நமக்குச் சரிபடாதுன்னு..”



“போதும் கதிர்.. இதுக்கு மேல எனக்குப் பேசப் பிடிக்கலை.. நாளைக்கு நீங்க கிளம்புங்க.. உங்களுக்கு வேணுமின்னா டிவோர்ஸ்க்கு நான் எழுதி கொடுக்கறேன்.. உங்க மனசுக்கு பிடிச்ச.. உங்க லெவலுக்கு ஏத்தா மாதிரி பொண்ணைப் பார்த்துக்கங்க..” என்று கைகளைக் கூப்பினாள் சத்யா.



இதற்கு மேல் என்ன சொல்லி அவளைப் புரிய வைப்பது?.. எப்படிச் சொன்னாலும் திருப்பிப் பேசுபவளிடம் பேசி என்ன லாபம்.. அவன் தான் எனக்கு வேண்டும் என்பவளை, வாழப் பிடிக்கவில்லை வாழப் பிடிக்கவில்லையென்று சொல்பவளை அவனுடன் அழைக்க அவன் என்ன பைத்தியமா..



ஒரு தீர்மானத்துக்கு வந்தான் கதிர்.



“சரி அது தான் உன்னிஷ்டம்ன்னா.. நானும் ஒதுங்கிக்கறேன்.. இனி உன் வாழ்க்கை உன் இஷ்டம்..



“போ.. போ.. அந்தப் பிரகாஷிடமே போ.. உன் அக்கா புருஷன் தான் உனக்கு வேணுமின்னா நான் உன்னைத் தடுக்கலை.. இதெல்லாம் உங்க கார்ப்பரேட் என்ன.. எங்க ஊரிலும் சகஜம் தான். அக்காவும், தங்கையும் ஒருத்தனை கட்டறதுன்னு..”



“ஒண்ணை மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோ.. உன் விருப்பம் இதுதான்னு நான் வேணா ஒதுங்கலாம்.. ஆனா நீ சொல்லற பட்டிக்காடுதான் உன் அக்காவும்.. அவளும் என்னை மாதிரி விட்டுக் கொடுப்பாளே ஒழிய உன்னைத் தன் புருஷனோடு ஒரு காலும் பங்கு போட விரும்ப மாட்டா..”



“அதுதான்டி எங்க பட்டிக்காட்டு நாகரீகம்.. தன் புருஷன் தனக்கு மட்டும்ன்னு நினைக்கிற கவரிமான் பரம்பரையில் வந்தவங்க நாங்க.. போ.. போடி.. அவகிட்ட உன் புருஷன் வேணும்ன்னு கெஞ்சு.. அவ அவளோடு புருஷனை பிச்சைப் போட்டா, போய் எடுத்துக்கோ..” என்று ஏளனமாகச் சொன்னவன்..



“இங்க பாருடி சத்யா.. இதை ஒரு நாள் நீ நினைச்சி பார்க்கிற காலம் வரும்.. அப்போ காலம் கடந்து விடும்.. அன்னிக்கு நீயா நினைச்சாலும் இந்தக் கதிர் உனக்குக் கிடைக்க மாட்டான்.. அதை மட்டும் மனசில வைச்சிக்கோ..” என்ற கதிர் தன் வேதனையைச் சற்றும் முகத்தில் காட்டாமல் கம்பீரமாக..



“நான் வர்றேன்.. இல்லை போறேன்.. இனி.. பை ஃபார் எவர்..” என்று அமைதியாகச் சொல்லிவிட்டு எதுவுமே நடக்காதது போலக் கம்பீரமாக அங்கிருந்து அகன்றான் கதிர்வேல்.



‘உ.ம்.. இங்கிலீஷ்..’ அப்பொழுதும் நக்கலாகத்தான் நினைக்கத் தோன்றியது சத்யாவிற்கு.. முகத்தைத் திருப்பிக் கொண்டு நீ போனால் எனக்கென்ன என்று தன் கட்டிலில் விழுந்து போர்வையை எடுத்தாள்.



‘இவனை நினைச்சி ஏங்கும் காலம் வருமாம்?.. அப்படியே வந்திட போகுது?.. அப்படி வந்தாலும் அவன் கிட்ட போகிறதுக்கு நான் செத்தே போகலாம்..’ இளக்காரமாக நினைத்த சத்யா..



அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கண்ணயர்ந்தவளுக்குக் கதிர் தன் காரை எடுத்தது காதில் உரைத்தாலும் கருத்தில் நிற்கவில்லை.



கதிர் உள்ளம் கொதித்தது.. இப்படிக் கூட உலகத்தில் ஒருத்தி இருப்பாளா?.. கட்டியவனிடமே நான் அடுத்தவனைக் காதலிக்கிறேன்.. அவனிடம் போகிறேன் என்று சொல்லும் அளவுக்கு.. என்ன பட்டிணத்து நாகரீகமோ.. மனம் கசந்தது..



தன் மண வாழ்வுக்கு இப்படி ஒரு முடிவு வர வேண்டுமா என்று எண்ணியவனுக்கோ.. இனி அடுத்து என்ன.. தன் வாழ்வில் இனி என்ன?.. ஒன்றும் புரியவில்லை..



இதற்குத்தானா அவளைக் கை பிடித்தேன்.. அவள் என்னை ஒதுக்க ஒதுக்க அவளையே என் மனம் நாடுகிறதே.. கொஞ்சம் கூடவா அவளுக்குப் புரியவில்லை.. எப்பொழுது பார்த்தாலும், படிப்பு, அழகு.. அது ஒன்றுதான் அவளுக்குத் தெரியுமா?.. என்ன பெரிய பட்டிணத்து நாகரீகம்..



இதெயெல்லாம் மீறி மனம் என்று ஒன்று இருக்கிறதே.. அவளை என் இமை போலப் பாதுகாக்க வேண்டும் என்று திருமணத்தன்று நினைத்தேனே?.. கட்டாய திருமணம் என்றாலும், எனக்கு இனி இவள் தான் என எண்ணினேனே?.. ஆனால் என்னை வேண்டாம் என ஒதுக்குபவளை… இனி..



அவன் கைகளில் கார் பறந்தது.. மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.



அடுத்த நாள் மதியத்திற்கு மேல் எழுந்த சத்யா எப்பொழுதும் போலத் தயாராகிக் கீழே இறங்கி வந்தாள்..



“சத்யா.. மாப்பிள்ளை வந்திருக்காரா?.. அவரோடு கார் நின்னு இருந்திச்சு?.. ரொம்ப லேட்டா வந்தோமா அதான் நீங்க தூங்கி இருப்பீங்கன்னு நான் விசாரிக்கலை.. இப்போ காலையிலிருந்து அவர் காரை காணமே?.. எங்கேயாவது போயிருக்காறா?.. எப்போ வருவாரும்மா?.. ஏதாவது சொன்னாராம்மா?..”



அடுக்கடுக்காய் கேள்விகளைத் தொடுத்த அன்னையைக் கண்டு எரிச்சல் வந்தது சத்யாவுக்கு.. காலங்கார்த்தாலே அவனைப் பத்தி கேள்விதானா?..



“உம்.. எனக்கு என்ன தெரியும்?.. அவன் வருவானா இல்லை ஒரேடியா போனான்னு போன் போட்டு கேளுங்க..” என்றவள் நேராகப் பிரகாஷின் வீட்டை நோக்கி நடந்தாள்.



சத்யாவின் பதிலில் திகைத்து விட்டார் ரேவதி.. இது என்ன மாதிரியான பதில்..



“ஏய்.. நில்லுடி.. என்ன பேச்சு ஒரு மாதிரியாக இருக்கு.. எங்கடி மாப்பிள்ளை.. மரியாதையா பதில் சொல்லு..”



“மாம்.. ப்ளீஸ்.. எனக்கு நிஜமாகவே தெரியாது.. இனி அவனோட வாழ பிடிக்கலைன்னு சொல்லிட்டேன்.. அவன் காரை எடுத்திட்டு ராத்திரியே கிளம்பி போனான்.. இன்னும் ஏதாவது விளக்கம் வேணும்ன்னா.. அவன் கிட்டேயே கேட்டுக்கோ.. ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்..”



அதற்கு மேல் அங்கே நிற்காமல் விரைந்தவளை திகைத்துப் போய்ப் பார்த்தனர் ரேவதியும், ராஜ்குமாரும்..



அவளைப் பொருத்தவரை கதிர் என்பவன் அவள் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிப் போனான்.. அவ்வளவுதான்..



“சத்யா.. சத்யா..” சட்டெனச் சுதாரித்துக் கொண்ட ராஜ்குமாரும், ரேவதியும் அவள் பின்னாலேயே கத்தியபடி விரைந்தனர்.



*****************************************************************************

 
Top