கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 25

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 25



அனுசூயா நல்ல கைதேர்ந்த சமையல்காரிதான்.. என்ன ஒரே ஒரு கெட்டப் பழக்கம் அவளுக்கு.. வாயில் வெற்றிலையையும் புகையிலையை எப்போதும் அதக்கிக் கொண்டு தான் வருவாள்..



அவள் வரும்போதே அந்தப் புகையிலை நெடியும் போட்டி போட்டுக் கொண்டு அவள் முன்னே வரும்.. மற்றபடி நேர்த்தியாய் உடை உடுத்தி நல்ல படியாய்த் தான் வருவாள்.



முதல் இரண்டு நாளிலேயே ராஜேந்திரன் முகம் சுளிக்க ஆரம்பித்து விட்டார்..



"ருக்கு வாட் இஸ் திஸ்.. இந்த லேடி இப்படிப் புகையிலை போட்டுட்டே இருக்கு.. ஒரே நாத்தம் குடலைப் புடுங்குது.. போதாததுக்குப் 'புளிச் புளிச்சுன்னு' வாஷ் பேசின் முழுக்கத் துப்பி வச்சிருக்கு.. என்னதான் அது தண்ணியைத் திறந்து கிளீன் செஞ்சா கூட..”



“அந்தப் பக்கம் போகும் போதே நாத்தம் தாங்கலைம்மா.. அவ கிட்ட கொஞ்சம் சொல்லி இந்தப் பழக்கத்தை விடச் சொல்லு..எவ்வளவோ செய்யறீங்க உன் கிளப்புலே.. இதை ஒரு டி அடிக்ஷன் புராஜெக்டா எடுத்துக்கோயேன்..", என்று கிண்டலடித்தார் ருக்குவை.



அவ்வளவுதான் வந்ததே கோபம் ருக்குவுக்கு, "சொல்ல மாட்டிங்க ராஜ்.. இவளைப் புடிக்கறதுக்கே நான் வெயிடிங்க் லிஸ்டில் இருந்தேன்.. எப்படியோ இவளை எனக்கு அனுப்பி வச்சாங்க.. அதுவும் நம்ம வீட்டில் தொடர்ந்து ரெண்டு மூணு பேர் உடனுக்குடன் நின்னுட்டதுனாலே அன்னிக்கு அந்த ஏஜென்சியிலே இருந்து வந்து பார்துட்டு வேறு போனாங்க..



“ஏதோ நாம இவங்களை இல்டிரீட் செய்யுறோமோன்னு கண்காணிக்க.. எல்லாம் என் கெட்ட நேரம் இப்படி அவஸ்தைப் படறேன்.. இதுலே உங்களுக்கு நான் இந்த மாதிரி செர்வீஸ் வேற செய்யனுமா", என்று கணவனைக் கடிந்து கொண்டாள்.



அதற்குள் கையில் ஒரு ஜூஸ் பாட்டிலுடன் அங்கு வந்த சத்யா, "ஹாய் குட் மார்னிங்க் அத்தை.. ப்ரெக்ஃபாஸ்ட் ரெடியா.. நான் இன்னிக்குச் சீக்கிரம் ஆஃபிஸ் போகணும்..", என்று டேபிளுக்கு அருகில் வந்த சேரை இழுத்து உட்கார்ந்து கொண்டாள்.



"அனுசூயா.. டிபன் எடுத்து வா", என்று அதிகாரமாய்க் குரல் கொடுத்தாள் சத்யா..



"இதோ வந்துட்டேன்மா.. "இதோ ஜூடா தோசையும் தக்காளிச் சட்டினியும் செஞ்சிருக்கேன்.. இந்தா கொண்டாந்துடறேன், என்று வாயில் வெற்றிலையும் புகையிலையும் குதப்பியபடி பேச.. ஸ்ப்ரே மாதிரி எச்சில் துகள்கள் தெளித்தது..



"இதோ ஒன் நிமிட்டுலே கொண்டாறேன்", என்று சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் உள்ளே சென்றாள்..



அறுவறுப்பில் முகம் சுளித்த ராஜேந்திரன், "ருக்கு டியர், நான் ஆஃபிஸில் சாப்பிட்டுக்கறேன்.. இப்போ எனக்குப் பசியில்லை” என்று சொல்லிவிட்டு,



"ருக்கு அது தக்காளி சட்டினியோ இல்லை புகையிலை சாஸோ.. எனக்கு வேண்டாம்ப்பா இந்தக் கொடூரம்", என்று சொல்லிவிட்டு வெளியேறினார்..



போகும் கணவரை சற்று குழப்பத்துடன் பார்த்தவாறு இருந்த ருக்கு,



"இதென்னடி இவர் இப்படிச் சொல்லிட்டு போறாரு?.. உனக்கு எதாவது விளங்குதா?..", என்று தன் அண்ணன் மகளிடம் கேட்க,



"இல்லை அத்தை.. அதான் அந்த அனுசூயா வாயைத் திறந்தா ஸ்ப்ரே செய்யுறாளே அதைத் தான் மாமா இப்படிச் சொல்லிட்டு போறார்.. ",



அதற்குள் அனுசுயா வந்து சேர்ந்தாள் ஒரு ஹாட் கேசில் தோசைகளுடனும் இன்னொரு பாத்திரத்தில் தக்காளி சட்டினியுடனும்.



"இந்தா பாப்பா.. நல்லா சூப்பரா மொறு மொறுன்னு தோசை ஊத்தியிருக்கேன்.. சாப்பிடு..", என்று சொல்லி பாத்திரத்திலிருந்து தோசையும் சட்டினியும் எடுத்து வைத்தாள்..



பயந்து கொண்டே தோசையையும் சட்டினியையும் உண்டனர், அத்தையும் மருமகளும்..



மெல்ல அனுசூயாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி, "ஏன் அனுசுயா..நீ சுமார் எத்தனை வருஷமா இப்படி வெத்தலை பாக்கு புகையிலை போடுறே?", என்று மெல்ல நூல் விட்டுப் பார்த்தாள்.



"ம்ம்.. அதுவா பாப்பா.. சின்னப்பவே ஆரம்பிச்சிட்டேன்..ஹி..ஹி.. விட முடியலை", என்று தன் காவிப் பற்களைக் காட்டி ஈ என்று இளித்தாள்.



'சகிக்கலை', என்று நினைத்த சத்யா.. “இல்லை அனுசுயா இதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு அரசாங்கத்திலே சொல்லிட்டே இருக்காங்களே..அதெல்லாம் உனக்குத் தெரியாதா?"



"ம்ம்.. நான் என்ன பீடி சிகரெட்டா குடிக்கிறேன்.. சும்மா அப்பப்போ கொஞ்சம் பொகையிலை இதோ.. இத்துணூண்டு போடுறேன்.. இதிலே என்னம்மா தப்பு வந்துட போகுது.. இதெல்லாம் ஒண்ணுமில்லே கண்ணு", என்று சொல்லியபடி வாயில் விரலை வைத்து "தூ", என்று பேசினில் துப்பிவிட்டு வாயைத் துடைத்தபடியே வந்து சேர்ந்தாள்.



தாங்க முடியவில்லை சத்யாவுக்கு..



"ஏய் அனுசுயா.. இனிமே வாயிலேப் புகையிலை வெச்சிகிட்டு இங்கே வராதே.. இல்லாட்டி உன்னோட ஏஜென்சியில் நான் கம்ப்ளையிண்ட் செய்வேன்", என்றாள் கோபமாய்.



அவ்வளவுதான் வந்ததே ஆத்திரம் அனுசுயாவுக்கு.. "இத பாரு பாப்பா.. இப்படியெல்லாம் பேசப்படாது.. உங்களுக்கு என்ன வேணும்.. நல்ல சாப்பாடு.. நான் சமையல்காரி..உங்களுக்குச் சுத்த பத்தமா சமைச்சி தாரது தான் என் வேலை..அதுக்குத்தான் எங்க ஏஜென்சியிலேயிருந்து என்னை அனுப்பிச்சாங்க..”



“இதுக்கு முன்னாடி ரெண்டு பேர் ஓடிட்டாங்களாமே.. ஏன்?,, எதையும் நான் கேக்கலை..ஆனா ஒரு வூட்டு வேலை செய்ய முடியாததுனாலே தானே இப்படி ரெண்டு நல்லா வளர்ந்த பொம்பளைங்க இருந்தும் இப்படி எங்களை வேலைக்குக் கூப்பிட்டீங்க.. எங்களுக்கும் அலுப்புச் சலிப்புக் களைப்பு எல்லாம் உண்டு.”



“ஏதோ ஆம்பளைங்க பீடி புடிப்பாங்க.. தண்ணி போடுவாங்க.. நாங்க என்ன அதெல்லாமா செய்யுரோம்.. வேலை செய்யாம இருக்குற சமயத்தில் சும்மா கொஞ்சம் போயிலை போடுறேன்..இதுக்குப் போயி.. கம்பிலைனு அது இதுன்னு ஏதோ சொல்லுரே..நல்லாயில்லை கேட்டுக்கோ..என்னா பெரீம்மா.. சொல்லிப்போடு உன் மருமவளுக்கு", என்று முறைத்தாள்.



'அய்யோ..அனுசூயாவுக்குக் கோவம் வந்துடுச்சே.. இவளும் போயிட்டா என் நிலை', என்று பயந்த ருக்கு அனுசூயாவை சமாதானப்படுத்தும் பொருட்டு,



"ஏய் சது அதான் அவ சொல்லறா இல்லை.. ஏதோ கொஞ்சம் டென்ஷன் குறையக் கொஞ்சம் போலப் புகையிலை போடுறான்னு..விடும்மா.. அவளுக்குத் தெரியாதா என்ன அது உடம்புக்கு நல்லது இல்லைன்னு.. என்ன அனுசுயா.. சரிதானா.. சத்யா ஏதோ உனக்கு உடம்பு கிடம்பு வந்துடப் போகுதேன்னு ஒரு அக்கறையிலே சொல்லுறா?.. இல்லை?", என்று சத்யாவை பார்க்க, அவளோ முகத்தை வேறு பக்கம் திரும்பியபடி அலட்சியமாய்ப் பார்த்தபடி இருந்தாள்



"ஏன்மா..பெரீம்மா..இதோ உங்களுக்காகத் தான்மா நான் இருக்கேன்.. நானும் வந்ததுலேந்து பார்க்குறேன் இந்தப் பாப்பா ஏதாவது ராங்காத்தான் பேசிட்டு இருக்கு.. ஏதோ உங்க மூஞ்சிக்காகத்தான் பொறுத்து போறேன்.. சரியா..", என்று சத்யாவை ஒரு முறை முறைத்துவிட்டு கிச்சனுக்குள் போய் மறைந்தாள்.



"பேபி.. உனக்குக் கொஞ்சம் கூடப் பொறுமையே இல்லைம்மா.. இவங்க மாதிரி பீப்பிள் கிட்டெல்லாம் நாம் கொஞ்சம் பார்த்து பதமா நடந்துக்கணும்.. இந்த ரேவதியை சொல்லணும் உனக்கு ஒண்ணுமே சொல்லித் தரலை போலே..", என்று சாதாரணமாய்த் தான் சொன்னாள்..



அடுத்த நொடி சத்யாவிற்குக் கோபம் தலைக்கு மேல் விறு விறு என்று ஏற ஆரம்பித்தது..



"அத்தை இன்ஃப்.. ஒரு சமையக்காரி வேறு எனக்குச் செர்டிஃபை செய்யனுமா.. நான் பொறுமையானவளென்று.. போதும்,, வெறுப்பா இருக்கு அவ மூஞ்சியைப் பார்த்தாலே..என் அம்மாவோ இல்லை என் மாமியார் விட்டிலோ என்னை வீட்டு வேலை செய்ய அலவ் செஞ்சதேயில்லை.. இவ என்னடான்னா நல்லா வளந்த பொம்பளை வேலை செய்யலைன்னு நக்கலடிக்கிறா.. இதெல்லாம் சரியில்லே சொல்லிட்டேன்..", என்று கறாராய் தன் அத்தையிடம் பேசினாள்..



ருக்குவுக்கு ‘இதென்னடாயிது இன்னிக்கு எனக்கு நாள் நல்லாயில்லை போலே.. அவ அவ என்னை வறுத்து வாயிலே போட்டுக்கறா..’ என்று நினைத்தபடி,



"இல்லம்மா சது பேபி..நான் பொதுப்படையா சொன்னேன்.. நீ போம்மா.. டைம் ஆச்சுன்னு சொன்னியே", என்று மருமகளைக் கிளப்பி விட்டாள்.



"சரியத்தை பை", என்று சொல்லிவிட்டு அவள் சென்றதும்



'உஃப்', என்று மூச்சுவிட்டு அமர்ந்தாள் ருக்கு..



அடுத்தச் சில நாட்கள் தாங்க முடியாததாகத்தான் கழிந்தது.. ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டு அறைக்கு வருவதற்கே பயப்படத் தொடங்கினாள் ருக்கு.. இன்றைக்கு என்ன வெடிக்குமோ என்று பயப்படத் தொடங்கினாள்.. தினமும் ஏதாவது பிரச்சனை.. இது போதாது என்று எதற்கும் ரூல்ஸ் பேசத் தொடங்கினாள் அனுசூயா..



இப்படியிருக்க அடுத்த அணுகுண்டாய் தமிழரசி அடுத்தச் சில மாசங்களுக்கு.. குறைந்த பட்சம் ரெண்டு மாதங்களுக்காவது வேலைக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாள்.



அவள் பையன் ஏதோ டைஃபாயிடு ஜுரம் வந்து வீட்டில் படுத்திருக்கிறான்.. அவனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவள் வீட்டில் தங்க வேண்டிய நிலைமை ஆகிப் போனது.. அவள் புருஷன் ஆட்டோ ஓட்டுவதால் பணத்துக்குப் பிரச்சனை இல்லை..



மேலும் அவர்கள் சங்கத்தில் உதவித் தொகையும் கிடைக்கும் என்று சொல்லி ஏஜென்சியிடம் சொன்னால் வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புவார்கள் என்று சொல்லி சென்று விட்டாள்..



அடுத்த நாள் முதல் பிடித்தது சனி ருக்குவுக்கு.. ஏற்கனவே வீட்டை பெருக்கித் துடைக்கும் வள்ளியும் நின்றிருக்க, இப்பொழுது தமிழரசியும் கை விரிக்க.. இதற்கெல்லாம் ஆள் உடனடியாய் கிடைத்துவிடுமா?..



அடுத்த சில தினங்கள் ஏஜென்சியைத் தொடர்பு கொண்டால்.. “என்ன மேடம் எப்போ பார்த்தாலும் உங்க வீட்டுலே இதுக்கு ஆள் அதுக்கு ஆள்ன்னு கேட்டுட்டே இருக்கிங்க.. உங்களுக்கு முன்னாடியே இங்கே நிறையப் பேர் கியூவில் இருக்காங்க.. அந்த மாதிரி எல்லாம் வரிசை மாற்றி அனுப்ப முடியாது", என்று கடுப்படித்தாள் அந்த ரிசப்ஷன் பெண்.



வேறு வழியில்லாமல் மெல்ல வீட்டைப் பெருக்கி மட்டும் வைக்கத் தொடங்கினாள் ருக்கு.. பாத்திரம் துலக்க முடியலை..



இதில் அனுசூயாவிடம் பாத்திரமும் துலக்கித் தருமாறு கேட்டால், "மேடம் இதெல்லாம் நான் செய்ய முடியாது.. என் வேலை சமைத்து போடுவது மட்டும் தான்.. அதுவும் சாயந்திரம் ஆறு மணிக்கு நான் வீடு திரும்பணும்.. அதுக்கு முன்னாடி சமையக்கட்டிலே ஏதாவது வேலை.. இல்லையில்லை.. சமைக்கிற வேலை இருந்தா செய்யுவேன்.. அவ்வளவுதான்", என்று கறாராய் சொல்லிவிட்டாள்.



"இல்லை இல்லை அனுசூயா.. பிரச்சனை கொஞ்சம் பெரிசு.. என்னாலேயோ எதுவும் செய்ய முடியலை.. கொஞ்சம் முதுகு வலி பிரச்சனை.. அதான்.. சும்மா கேட்டேன்.. ஏஜென்சியிலே சொல்லியிருக்கேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் ஒத்தாசையா..இல்லை வேணுமின்னா நான் டபுளா தந்துடறேன்....”



“ஒரு வேளை நீ பாத்திரம் துலக்கித் தந்தால் கூடப் போதுமே.. நீ தானே இங்கே சமைக்கவும் செய்யற.. அதான் உங்கிட்டயே முதலில் கேட்டு ஃபர்ஸ்ட் சாய்ஸ் உனக்கே தரலாம்னு கேட்டேன்.. யாருக்கோ கொடுக்கிறதை உனக்குக் கொடுக்கலாமே.. அதான்.. என்ன சொல்லறே.. இந்த நாலஞ்சு நாளுக்குத் தான்” என்று நைச்சியமாய்ப் பேசி அனுசூயாவையே பாத்திரம் தேய்க்க வைத்தாள் ருக்கு..



ஏதோ போனால் போகிறதென்று.. "நீஙக் ஏஜென்சியிலேயும் ஒரு தபா சொல்லிடுங்கம்மா.. இல்லாட்டி போனா. என் பேரை அடிச்சிடுவாங்க.. நாங்களா இந்த மாதிரியெல்லாம் முடிவு எடுத்து செய்தாக்க அவ்வளவுதான்..”



“ஏதோ இப்போ நாங்க தனியா செய்யறதை விடக் கூடுதலா நல்லா சம்பளம் கிடைக்குது.. இதே நான் தனியாப் போனா.. எந்த வீடு வருமோ.. எப்படி இருப்பாங்களோன்னு கவலைப் படணும்..”



“ஆனா இங்கே எங்களுக்கு ஏதாச்சு ஒன்னுன்னா பார்த்துக்க இவங்க இருக்காங்க பாரு.. அதான்..நீங்க ஃபோன் போட்டு அவங்ககிட்டே சொல்லிடுங்க", என்று பெரியமனதாய் கண்டிஷனுடன் ஒத்துக் கொண்டாள்.



அடுத்த நாலைந்து தினங்கள் ஓரளவு சுமாராகவே போனது.. எப்போதும் வீட்டில் ஒரே ஒட்டடையும் தும்பும் தூசியுமாய் இருந்தது.. ராஜேந்திரனுக்குக் தான் கோபம் அதிகமாய் ஆனது..



"இதென்ன மனுஷங்க வாழற வீடா இல்லை பேய் வாழுற பாழடைந்த பங்களாவா.. வீட்டில் ரெண்டு லேடிஸ் இருந்தும் கூட எங்கே பார்த்தாலும் டஸ்ட்.. எதை எடுத்தாலும் தூசி ஒரு லேயர் படிந்து கிடக்கிறது.. ஆள் இல்லை என்பதற்காக அப்படியே விட்டுடலாமா.. நம்ம வீடு இல்லை இது.. அசிங்கமா கிடக்குதேன்னு ஒரு பொருப்பில்லாம எப்பவும் கிளப், எலெக்ஷன் அது இதுன்னு.. ருக்கு.. ஐ டோண்ட் லைக் திஸ்..", என்று சத்தமிட்டார்.



பதவிசாய் தன் கணவனிடம், "இல்லை ராஜ் இன்னும் டூ டேஸ் லே ரீப்லேஸ்மெண்ட் வந்துடும்.. அதுவரைக்கும் மேனேஜ் செய்யணும்.. பாத்திரம் தேய்த்து சமையலையும் நம்ம அனுசூயா தான் பார்த்துக்கிறா.. அவளாலே பெருக்கித் துடைத்து டஸ்டிங்க் முடியாது", என்றவளிடம்..



"எதையோ செஞ்சித் தொலைங்க.. ஏன் உன் அருமை மருமக இருக்காளே மகாராணி ஒண்ணும் செய்யமாட்டாளோ.. இதே வேதாவா இருந்தா எல்லாம் பளிச்சுன்னு பார்த்து பார்த்து கவனிச்சிருப்பா.. பாரு..”



“இன்னிக்குப் பிரகாஷ் ஏதோ மீட்டிங்குக்குப் போனும்னு வெள்ளை சட்டை போட்டுட்டுப் போறான்.. அதிலே பின்னாடி ஏதோ கறை.. பாவம் அவன் கவனிக்கலை.. நான் தான் சொன்னேன்.. பெண்டாட்டின்னு ஒருத்தி பொறுப்பா இருந்தா எல்லாம் நல்லா இருந்திருக்கும்.. நீங்களாம் காசுக்கு வேலை செய்யுறவங்கதானேன்னு அவங்களை நடத்தினா.. இவ்வளவுதான் கிடைக்கும்.. புத்திகேத்த சுகம்.. போ போய் நம்ம பாத்ரூமைப் பார்.. தாங்க முடியலை..", என்று கடுப்படித்துவிட்டுப் போனார்.



அழாக் குறையாய் தன் பாத்ரூமிற்குக் கழுவிவிடச் சென்றாள் ருக்கு..



அன்றைக்கு ஏதோ அவசர மீட்டிங்க் பிரகாஷ் முதலிலேயே சென்றுவிட.. இவள் சீக்கிரம் எழாததால் அவசரமாய்த் தயாராகி நல்ல வெள்ளை சட்டையும் கறுப்பு ஃபார்மல் பேண்டும் அணிந்து காலை உணவுக்காக டேபிளுக்கு வந்த சத்யாவிற்கு அங்கு வைக்கப் பட்டிருந்த பீங்கான் தட்டை பார்த்தது கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. தட்டில் ஏதோ பிசுக்கு ஒட்டிக் கொண்டு சரியாய் கழுவப் படாமல் இருந்தது.. அனைத்திலும் சுத்தம் எதிர்பார்க்கும் சத்யாவிற்கு வந்ததே கோபம்,



"அனுசூயா", என்று கத்தினாள்..



அதற்குள் கிச்சனிலிருந்த அனுசூயா,'ஆரம்பிச்சிடுச்சுடா இந்தப் பொண்ணு.. இன்னிக்கு என்ன குத்தம் சொல்லப் போகுதோ’ என்று வெற்றிலை சாற்றைத் துப்ப பேசின் பக்கம் போக நினைக்கையில்,



மீண்டும் உரக்க ஒலித்தது குரல்,



"ஏய் அனுசூயா.. எங்க போயிட்டே",



அவசர அவசரமாய் ஓடி வந்த அனுசூயா, அவளருகில் வந்து நின்று, வாயின் ஓரத்தில் என்னதான் வெற்றிலை சாற்றை அதக்கிக் கொண்ட பொழுதும்,



"என்ன பாப்பா", என்று கேட்டது தான் தாமதம்..



சத்யாவின் வெள்ளை சட்டையில் வெற்றிலை சாற்றின் ஸ்ப்ரே..



வந்ததே கோபம் சத்யாவிற்கு, ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் பீங்கான் தட்டை 'டனால்', என்று கீழே ஆத்திரத்துடன் வீச, அது சுக்கு நூறாய் நாலா பக்கமும் சிதறியது..



"ஸ்டுபிட்.. பாத்திரம் துலக்கியிருக்கிற லட்சணத்தை பார்.. பணம் மட்டும் டபுள் பங்கு வாங்குறே இல்லை.. வேலை நல்லா இருக்க வேணாம்.. போதாததுக்கு எப்பவும் இந்த வெத்திலை பாக்கு ஸ்ப்ரேய்..சீ.. வெரி பேடு.. நீயும் உன் மூஞ்சியும்.. ஒரு காரியத்தையும் உருப்படியா செய்ய முடியலை.. உன்னையெல்லாம் அனுப்பினாங்களே ஒரு ஏஜென்சி..அவங்களைச் சொல்லணும்", என்று கத்தினாள்..



இந்த முறை அனுசூயாவுக்கும் பொறுமை இல்லை..'என்ன இந்தப் பொண்ணு எப்பவும் கத்திட்டே இருக்கு.. அதோ சின்னத் தப்பு அதுக்குப் போய்..அதான் ..', என்று ஏதோ நினைத்துக் கொண்டு..



"இப்போ தெரியுது நீ ஏன் வாழா வெட்டியா இங்கே உக்காந்துருக்கேன்னு..என்ன முறைக்கிறே.. எல்லாம் எனக்கும் தெரியும்.. பொம்பளைன்னா பொறுமை இருக்கணும்.. அது சுத்தமா இல்லை உனக்கு..”



“அன்னலட்சுமியா இருக்க வேண்டிய பொண்ணு இப்படி அடங்காப்பிடாரியா இருந்தா?.. வெளங்கிடும் போ.. இதிலே நீ மத்தவங்களை விரட்டுறே.. இப்போ சொல்லறேன் கேட்டுக்கோ.. இனி நீங்க தங்கமா வந்து என் கிட்ட கொட்டினாலும் நான் இந்த வூட்டிலே வேலை செய்ய மாட்டேன்..”



“இன்னிக்கு மதிய சமையலையும் முடிச்சிட்டேன்.. ராத்திரிக்கு நீயே சமைச்சிக்கோ.. இப்போ நான் கிளம்பறேன்.. எங்க ஏஜென்சியிலே நான் போயி கம்ப்லைன் செய்யப் போறேன்.. நீங்க வீட்டு வேலை செய்யுறவங்களைக் கொடுமைப் படுத்தறீங்கன்னு..", என்று சொல்லிவிட்டு திரும்பியும் பாராமல் கிளம்பினாள்.



"ஏய்.. நில்லு.. நில்லு", என்று கத்திய சத்யாவை துளியும் லட்சியம் செய்யாமல் போயே விட்டாள் அனுசூயா.



சத்யாவின் கூச்சலிலும், தட்டு உடைந்த சத்தத்திலும், பதிலுக்கு அனுசூயாவின் கூச்சலிலும், பாத்ரூமை சோப்பு போட்டுக் கழுவி கொண்டிருந்த ருக்கு பதட்டத்துடன் சோப்பில் கால் வைத்து ஓடி வர எத்தனிக்க.. அவ்வளவுதான் 'சர்' என்று வழுக்கியபடி "அம்மா", என்று அலறியபடி, பாத்ரூமின் வாசலில் வந்து விழுந்தாள்..



*********************************************************************


 

Kothaisuresh

Well-known member
சூப்பர் இப்படித்தான் ஏழரை சனி ஓரே நேரத்தில் படுத்தணும்.
 

Jothiramar

Moderator
Staff member
அடுத்த அப்டேட்டையும் போட்டா இன்னும் ஹேப்பியா இருக்கும் அக்கா
 
Top