கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 38

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 38



ருக்மணி அதிர்ந்து நின்றது ஒரு நிமிடம் தான்.. அடுத்த சில நொடிகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவர்..



"டேய்.. என்னடா சொல்லறே பிரகாஷ்.. உண்மையாவா சொல்லறே?.. நம்ம வேதாவா அந்தச் சங்கத்தின் தலைவி.. அட.. இது எப்பத்திலிருந்து?.. உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்.." என்று ஆச்சர்யமாகக் கேட்டவர்..



"வேதா.. என்னம்மா.. பிரகாஷ் என்னென்னவோ சொல்லறானே?.. நிஜமாவாம்மா?.. சொல்லும்மா.. அப்போ எதுக்கும்மா எங்ககிட்ட மறைச்சே?.. சொல்லி இருந்தால் நானும் சந்தோஷப் பட்டிருப்பேனே?.. என் மருமகள் கூட ஒரு சங்கத்தின் தலைவின்னு.."



"அம்மா.. நான் தான் சொல்லறேனே?.. இன்னும் என்ன நிஜமா?.. உண்மையான்னு அவகிட்ட கேட்கிறீங்க?.. அது சரி, நீங்க பெருமையடிக்கலேன்னு யார் இப்போ அழுதா?.. அதான் நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டு, தெரிஞ்சிக் கொண்டு தான் வந்திருக்கேன்.." என இடக்காகச் சொன்ன பிரகாஷ்..



அவன் அவளைப் பற்றித் தெரிந்து கொண்ட விதத்தையும் சொன்னான்.. காலையில் அவன் ப்ளம்பருக்காகப் பேசும் பொழுது, வேதா போன் காலை எடுத்ததில் அவள் குரலை வைத்துக் கண்டு பிடித்ததாகவும்.. அத்தோடு சற்று நேரத்திற்கு முன்னால் அதே ப்ளம்பர் சொன்ன வார்த்தைகளை வைத்தும் என்று சொல்லிவிட்டு..



"வேதா.. இதுக்கு மேலே நீ உண்மையை மறைக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.. சொல்லு.. ஏன் இப்படிச் செய்தே?.." என்றான் அமைதியாக, ஆனால் உள்ளடக்கிய கோபத்துடன்.



'அவனுள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.. எவ்வளவு ஈசியாகத் தங்களை இந்தப் படிக்காத பட்டிக்காட்டுப் பெண் ஏமாற்றி இருக்கிறாள்.. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்..’



இத்தனை நாட்களாக வேலைக்காரர்கள் பிரச்சனை என்று அனைவரும் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, இவள் என்னடாவென்றால் அவர்கள் சங்கத்தின் தலைவியாம்..



‘வேண்டுமென்றே இப்படி எதையோ செய்து, எங்களைப் பழிவாங்க என்று குடும்பத்தில் கலகம் விளைவிக்க இப்படிச் செய்திருப்பாளோ?.. இதற்கு முன்னால் இப்படிப்பட்ட சங்கமெல்லாம் இல்லையே?..'



அவனையே பார்த்துக் கொண்டிருந்த வேதாவுக்கு உள்ளுக்குள் சின்ன நடுக்கம் ஓடினாலும், தைரியமாக அவன் பார்வையை எதிர் கொண்டாள்.. அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் அவளுக்குப் புரியாமலில்லை.



"வேதா.. உன்னைத்தானே?.. என்ன தயக்கம்?.. எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல்லும்மா?.." என ருக்மணியோ அன்பொழுகக் கேட்டார்.. இதே முன்பிருந்த ருக்மணியாய் இருந்தால் இப்படிப் பேசவரா என்ன?.. இதற்காக ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்திருக்க மாட்டார்.



"என்னவென்று சொல்லுவது அத்தை?.. இதில் என்ன இருக்கிறது?.. சரி.. சொல்லுகிறேன்.. ஆமாம் 'ஹோம் செர்வீசஸ்' என்னுடையதுதான்.. நான் தான் அதை நடத்துக்கிறேன்.. அதற்கு என்ன இப்போ?.."



அவள் சொன்ன விதத்தில் தோன்றிய அலட்சியத்தைக் கண்டு வெகுண்ட பிரகாஷோ..



"அப்போ.. இத்தனை நாளா இப்படி ஒரு அசோசியேஷன் ஒண்ணை நடத்திட்டு இருந்திருக்கே?.. எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்னு கூடத் தோணலை இல்லை.. நீ வேணுமின்னே மறைச்சிருக்கே?.. உன்னை நாங்க நடத்திய விதத்துக்குப் பழி வாங்கும் நோக்கம் தானே?.. வீட்டை விட்டுப் போய்.. எல்லோரையும் கலங்கடிச்சி.." என



"ப்ச்.. இதில் என்ன பழி வாங்குறது இருக்கு?.. அப்படியெல்லாம் எனக்கு எந்தவித எண்ணமும் இல்லை.. நீங்க பேசறது உங்களுக்கே சின்னப் புள்ளைத்தனமா இல்லை.. அது சரி நான் கிளம்பி போய் விட்டேன்னு யார் அப்படிக் குறை பட்டா.."



அவளது இடக்குப் பேச்சைக் கண்டு கொள்ளாமல் அதை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டு..



"அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னா.. இத்தனை நாளா பார்த்திட்டு தானே இருந்தே?.. வீட்டில சரியான செர்வெண்ட்ஸ் இல்லாமல் அம்மா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்கன்னு.. சொல்லி இருப்பியே?.. எதுவும் செய்யாமல் வேடிக்கைத்தானே பார்த்தே?.. இவங்க நல்லா கஷ்டப்படட்டும்னு?.. காலையில் அந்த ப்ளம்பருக்குச் சொல்வதில் கூட நீ ஒதுங்கிக் கொண்டு பழி வாங்க நினைக்கலை..", மீண்டும் எகிறினான் பிரகாஷ்.



"வேதா.. அவன் சொல்லுறதில என்ன தப்பும்மா?.. நான் கால் ஒடிஞ்சி கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்.. வீட்டில எல்லாச் செர்வெண்ட்ஸும் மக்கர் பண்ணினாங்க.. நீதான் இந்தச் சங்கத் தலைவின்னா எதையாவது பண்ணி இருக்கலாமே?.. ஏம்மா சும்மா இருந்தே?.. அப்போ நாங்க கஷ்டப்படணும்னு நினைச்சி இதெயெல்லாம் செய்தியா?.." ருக்மணியோ ஒருவித இயலாமையுடன் கேட்டார்.



வேதாவுக்கு இதை எப்படி எடுத்துச் சொல்வது என்று யோசனையாக இருந்தது.. அவர்கள் மனம் புண்படாமல் பேசிய வேண்டிய தருணம் அல்லவா?.. உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதென உணர்ந்தவள் தன் மாமா ராஜேந்திரனை பார்க்க..



அவரோ இதையும் நீ தைரியமாக எதிர்கொள் எனக் கண்களை அமர்த்தினார்.



அந்தப் பார்வை பரிமாற்றத்தை சட்டெனக் கண்டு கொண்டான் பிரகாஷ்.



"அப்போ.. அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியும்.. இதில் நானும், அம்மாவும் தான் ஏமாளின்னு சொல்லுங்க?.. இன்னும் என்னவெல்லாம் ரெண்டு பேரும் சேர்ந்து மறைச்சாங்கன்னு கேளுங்கம்மா?.. ரெண்டு பேரும் எல்லாவற்றிலும் கூட்டோ?.." கோபத்தில் அவன் கண்கள் சிவந்ததோ..



"டேய் பிரகாஷ்.. என்னடா.. ரொம்பத்தான் எகிறறே?.. இப்போ என்ன தெரியணும் உனக்கு?.. அதான் அவள் வாயாலேயே சொல்லி விட்டாளே சங்கத்தின் தலைவின்னு.. இன்னும் எதுக்குத் தேவையில்லாமல் மடக்கி மடக்கி கேள்வி கேக்கறே?.. பின்னே எப்படி இருப்பா?.. நீ போன்னு சொன்னா உடனே காலம் முழுக்கக் கண்ணீர் விட்டுட்டு மூலையில் உட்கார்ந்திருப்பாளோ?.. ஒரு வேளை அதுதான் உன் எண்ணமோ?.." என ராஜேந்திரனும் பதிலுக்கு எகிற..



"மாமா.. வேண்டாம் மாமா?.. நீங்க எதுக்குப் பேசறீங்க.. விடுங்க.. நானே சொல்லுறேன்.." என வேதா இடையில் புகுந்தாள்.. தன்னால் தந்தைக்கும், மகனுக்கும் பிளவு வந்து விடக் கூடாதென உத்யேசத்தில்..



"பிரகாஷ்.. நான் ஒண்ணு கேட்கலாமா?.." என்றவள்.. அவன் பதிலுக்குக் காத்திருக்காமல்,



"ஏன் பிரகாஷ்?.. நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க?.. நான் சங்கத்தின் தலைவியா இருந்தால் என்ன.. இல்லை யாராய் இருந்தால் தான் என்ன?.. அதைப்பத்தி உங்களுக்கென்ன?.. முதல்ல நீங்க யார் என்னை இப்படிக் கேள்வி கேட்பதற்கு?..



"ஓ.. கணவன் என்ற உரிமையோ?.. மாமா.. அத்தை.. என்னை மன்னிச்சிக்கங்க.. நான் இப்படி உங்கள் மகனை நிறுத்தி வைத்துக் கேட்பதற்கு.." என்றவள்..



"சொல்லுங்க பிரகாஷ் மாமா.. நான் ஒரு முட்டாள்.. பிரகாஷ் மாமான்னு அழைக்கிற உரிமையைத்தான் எனக்கு நீங்க கொடுக்க விரும்பலையே?.. சாரி பிரகாஷ்.. அதான் சொல்லிட்டீங்களே?.. உங்களுக்கும், எனக்கும் சரிவராதுன்னு.. உங்களுடைய மனைவியாய் இருக்க நான் தகுதி இல்லைன்னு.. இதுக்கும் மேலே எந்த உரிமையில் நீங்க என்னைக் கேள்வி கேக்கிறீங்கன்னு எனக்குப் புரியலை?.. நீங்களே சொல்லுங்கள் பிரகாஷ்..”



"ஓ.. இவ பட்டிக்காட்டு படிக்காதவதள் தானே?.. இவளை நிறுத்தி கேள்வி கேட்கலாம்னு நீங்களே நினைச்சிட்டீங்களோ?.. சாரி பிரகாஷ்.. நான் மறைச்சேன், மறைச்சேன்னு சொல்லுகிறீர்களே?.. அப்படியே மறைச்சால் தான் என்ன தப்பு?.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் உண்மையாய் இருக்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது.. சொல்லுங்கள்..” எனப் பிரகாஷை பார்க்க..



‘அடிப்பாவி.. ஒன்றுமே இல்லையா?.. இன்றைக்குக் காலையில் நடந்ததை மறந்து விட்டாயா?.. அப்படி நமக்குள் எதுவும் இல்லையென்றால் நான் உன்னைக் கட்டி பிடித்திருப்பேனா?.. இல்லை நீ தான் என் அணைப்பில் மெய் மறந்திருப்பாயா?..’ என்று நினைத்தவனுக்கு..



‘அது சரி.. நான் உன்னிடம் முன்பு நடந்து கொண்ட விதத்திற்குப் பின்னே நீ என்னைப் பற்றி நினைத்துத்தான் பார்த்திருப்பாயா?..’ தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.



அவன் நினைப்பையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு வேதா அப்பொழுது இல்லை.. அவளுக்கு இப்பொழுது அவன் மேல் கோபம் வந்திருக்க.. அத்தனை நாளாக உள்ளுக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு புழுங்கிக் கொண்டிருந்தவள், இப்பொழுது கொட்டித் தீர்த்தாள்.



"என்ன பார்க்கிறீங்க பிரகாஷ்.. சொல்லுங்கள்.. நாம இரண்டு பேரும் உட்கார்ந்து பேசும் அளவுக்கோ, இல்லை எதைப் பற்றியாவது விவாதிக்கும் அளவுக்கோ அப்படி ஒரு உறவோ, நட்போ இருப்பது போல நமக்குள் தெரியவில்லையே?..”



"ஒரு மனைவியாய் என்னை மதித்துப் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை.. உங்களுக்கு மனைவியாக நான் பொருத்தமில்லை என்று நான் ஒத்துக் கொள்கிறேன்.. போகட்டும்..



“ஆனால்.. ஒரு உறவினளாக.. உங்கள் அத்தை பெண் என்ற நிலையிலாவது என்னுடன் என்றாவது பேசிப் பழகி இருக்கிறீர்களா?.. இல்லையே?.. அப்படி இருக்கும் போது.. அதுவும் போகட்டும்.. ஒரு சக மனுஷியாக, என்றாவது பேசி இருக்கிறீர்களா?..”



“வேதா.. என்ன இது.. நான் எதையோ கேட்டேன்.. நீ எதையோ பேசுகிறே?.. நான் ஏன் விஷயத்தை மறைத்தாய் என்று ஒரு ஆதங்கத்தில் தான் கேட்டேன்.. நீ என்ன இப்படிப் பேச்சை திசை மாத்துகிறே?..” எனப் பிரகாஷ் மீண்டும் நடுவில் குரல் கொடுக்க..



அவனைக் கண்டு கொண்டால்தானே.. வேதாவோ இவனை இன்று விடுவதில்லை என்பது போலப் பேசிக் கொண்டே போனாள்..



பிரகாஷ் அதை கண்டு கொண்டவன் அவள் பேசும் வரை பேசட்டும் என்று வாயை மூடிக் கொண்டவன், கையைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தான்.



"நான் ஒன்றும் பேச்சை மாத்தவில்லை.. சரியாகத்தான் சொல்லுகிறேன்.. அதான் அன்றே என்னை வீட்டை வீட்டுப் போகலாம் என்று சொல்லி விட்டீர்களே?.. அதற்குப் பின்னால் நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன?.. எப்படி வாழ்ந்தால் தான் என்ன போச்சு?.. எந்த அதிகாரத்தில் நீங்க என்னை இப்போ கேள்வி கேட்கிறீர்கள் பிரகாஷ்?..



“ஆக்சுவலாகப் பார்த்தால் மிஸ்டர்.பிரகாஷ் னு சொல்லணும்.. ஆனாலும் என்னால் அப்படித் தள்ளி நிறுத்த முடியவில்லை.. ஏன்னா நான் உறவுகளை மதிக்கிறேன்.. என்னதான் இருந்தாலும் நீங்கள் என் மாமன் மகன்.. அந்த உறவை மதித்து உங்களைத் தள்ளி நிறுத்தாமல் பிராகாஷ் என்று அழைக்கிறேன்.. உங்களுக்குத்தான் மாமா, அல்லது மச்சான் இதெல்லாம் பிடிக்காதே.. அதனால் தான் பெயர் சொல்லி அழைக்கிறேன்..”



“நீங்கள் நினைக்கலாம் இவ்வளவு பேசுகிறவள் எதற்கு இந்த வீட்டுக்கு மறுபடியும் வந்தாள் என்று..”



“என்ன செய்வது பிரகாஷ்.. இங்கிருந்து சென்றபின் நான் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாமென்று நினைத்தேன்.. என் பிறந்த வீட்டுக்குப் போக முடியாது.. என்னைப் பெற்ற என் தாயோ ஏற்கனவே சொல்லிவிட்டார்.. நான் ஊருக்கு வருவதாக இருந்தால் எப்பொழுதும் என் புருஷனுடன் தான் வர வேண்டும் என்று..”



“மறு வீட்டுக்குக் கூடப் பிறந்த வீட்டுக்குப் போகாதவள் ஆயிற்றே நான்?.. வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.. அதான் எனக்குத் தெரிந்த.. நீங்கள் எப்பொழுதும் சொல்லுவீர்களே.. நான் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கு என்று.. நல்ல சமையல்காரியாய் இருக்கலாம் என்றெல்லாம்..”



“அதான் தீர்மானித்து விட்டேன்.. ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்’ என்று நம்ம காந்தி தாத்தாவே சொல்லி இருக்கிறாரே?.. எனக்குத் தெரிஞ்ச தொழில் சமையல் தான்.. அத்தோடு நல்லா வீடு கூட்டுவேன்.. பாத்திரம் துலக்குவேன்.. துணை துவைப்பேன்..”



“ஹாங்க்.. இன்னும் ஒண்ணு மறந்து விட்டேனே?.. நல்லா முறைவாசல் பண்ணுவேன்.. இல்லையா அத்தை?..” என்ற வேதாவின் கண்களில் வேதனை மறைந்திருந்தாலும், அதையும் பெருமையாகவே சொன்னாள்.



“வேதா.. சாரிம்மா.. என்னை மன்னிச்சிடுடா தங்கம்.. நான் உன்னைப் புரிஞ்சிக்கலை.. தப்புத் தப்பா பேசி இருக்கேன்.. இப்போ நான் உணர்ந்திட்டேன்மா.. உன்னைப் பார்த்தா இப்போ பெருமையா இருக்கும்மா?..”



“ஒரு வீடு நல்ல இல்லறமாக, மகிழ்ச்சியாக, இருக்க வேண்டுமென்றால் அது அந்த வீட்டை ஆளும் மகாலட்சுமி கையில தான்மா இருக்கு.. இதை நான் இப்போ உணர்ந்து சொல்லுகிறேன்..”



“வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் இளக்காரம் இல்லை.. அதைப் போல வெளியில் சென்று வேலை செய்வதால் அவர்கள் உசத்தியும் இல்லை..



“ஒரு வீடு வீடாக இருக்க.. படிப்போ, அழகோ, இல்லை பட்டிணத்து நாகரீகமோ தெரிந்த பெண்தான் வேண்டும் இல்லை.. நல்ல குணவதியாக, அனைவரையும் அரவணைத்து, கட்டிக் காக்கும் கிரஹலட்சுமி இருந்தால் அந்த வீடே நல்ல இல்லறமாகும் என இத்தனை நாட்களில் நான் புரிந்து கொண்டேன்..



“என்ன செய்வது?.. எனக்கு ஒரு நல்ல தாயாக, மாமியார் கிடைத்தார்கள்.. ஆனால் நான், உன்னை மகள், மருமகள் என்ன ஒரு சக மனுஷியாகக் கூட மதிக்காமல் என்னென்னவோ செய்து விட்டேன்.. எனக்குப் புத்தியில் அடித்துச் சொல்ல இன்று என் மருமகள்தான் மீண்டும் வர வேண்டியதாகப் போச்சு.. என் காலை உடைத்து என் தலையில் அடித்துச் சொல்ல வைத்துவிட்டான் அந்த ஆண்டவன்..”



“என்னை மன்னிச்சிடும்மா.. ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன்.. சாரிடா தங்கம்.. இந்த லூசு அத்தையை மன்னிசிடுவியா?..” என ருக்மணி தன் வீல் சேரை உருட்டிக் கொண்டு வேதாவின் அருகே சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.



“அத்தை.. சாரி அத்தை.. மன்னிப்பு இப்படிப் பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க.. உங்களை வருத்தப்பட வைக்கவென்று நான் அப்படிப் பேசவில்லை..”



“எனக்கு வீட்டை விட்டு போனப் பின்னால் முதலில் செத்து போகலாமா என்று கூடத் தோன்றியது..” என்று வேதா சொன்னவுடன்..



“அய்யோ.. என்னம்மா..” என ருக்மணியும், பிரகாஷும் ஒரு சேர அலறினர்.



“அத்தை.. பிரகாஷ்.. இதில் பதட்டப்பட ஒண்ணுமில்லை.. அன்றைய நிலையில் அப்படி எண்ணினேன்.. அவ்வளவுதான்.. அதை விடுங்கள்..”



“உண்மையாகவே நீங்கள் அன்று சொன்னீர்களே முறைவாசல் செய்யக் கூப்பிட்டாங்கன்னு.. நான் இங்கிருந்து போன போது அதுதான் எனக்குச் சட்டென ஞாபகத்தில் வந்தது.. இன்று நான் இந்தளவுக்கு உயர்ந்ததற்கு நீங்கள் தான் காரணம் அத்தை..” என்றவள்.. நடந்ததைச் சொல்லுவதற்கு விழைந்தாள்.



“பட்டிணத்தில் இதற்கெல்லாம் ஏகப்பட்ட கிராக்கியென்று எனக்குத் தெரிஞ்சது.. எனக்கு இங்கே யாரையும் தெரியாது.. அந்த ராத்திரி வேளையில் எங்கே போவது என்று யோசித்துக் கொண்டு வெளியே போன பொழுது தமிழரசியைக் கடையில் கண்டேன்.. நான் அந்தச் சமயத்தில் அங்கே நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஓடி வந்து விசாரித்தவளிடம்.. எனக்குக் கொஞ்சம் நாட்கள் அவள் வீட்டில் தங்க முடியுமா எனக் கேட்டேன்..”



“விவரம் எதுவும் கேட்காமல் என்னை அவள் வீட்டுக்கு கூட்டிச் சென்றாள்.. அவளை மாதிரி வீட்டு வேலையோ, இல்லை சமையல் வேலையோ, இல்லை ஏதாவது ஏற்பாடு செய்யச் சொன்னேன்.. அந்தச் சமயத்தில் இந்தக் காலணியில் இதற்காக ஒரு சங்கம் இருக்கு என்று சொன்னவள் என்னை அங்கே அறிமுகப்படுத்தினாள்..”



“ஒரு வாரம் அவள் வீட்டில் இருந்து கொண்டு வேலைக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. திடீரென மாமா ஒரு நாள் தமிழரசியுடன் அங்கே வந்து விட்டார்..” என நிறுத்தினாள்.



“அப்போ ராஜ்.. உங்களுக்கு வேதா எங்கே இருந்தாள் என்று முதலிலேயே தெரியுமா?.. ஆனாலும் நீங்களுமா?..” என ருக்மணி கேட்க.. பிரகாஷோ இன்னும் என்னென்ன மறைத்து வைத்தீர்கள் என்ற ரீதியில் அவளைப் பார்த்தான்.



வேதா அவனைக் கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்ப.. ராஜேந்திரனோ..



“ஆமாம் ருக்கு.. எனக்கு வேதா காணாமல் போன கொஞ்சம் நாளிலேயே விஷயம் தெரிந்து விட்டது.. நான் வேதாவை பற்றித் தனியாகத் தேடிக் கொண்டிருந்தேன்.. ஒரு நாள் தமிழரசி என்னிடம் உண்மையைச் சொல்லி விட்டாள்.. இப்படி உங்க வீட்டு மருமகள் வீட்டு வேலை செய்யப் போகிறாள்.. நீங்கலெல்லாம் என்ன பெரிய மனுஷனென்று என்னிடம் சத்தம் போட்டாள்..”



“நான் வேதாவை நேரடியாகச் சென்று பார்த்தேன்.. அவளோ இங்கே வர மறுத்து விட்டாள்.. அவள் இருக்கும் இடத்தைப் பற்றிச் சொன்னால் ஏதாவது செய்து கொள்வேன் என்று சொல்லி என்னை அடைத்து விட்டாள்.. தனக்கென்று தமிழரசி வீட்டுப் பக்கத்தில் ஒரு சின்ன வீட்டை பார்த்துக் கொண்டு விட்டாள்.. நான் எவ்வளவு சொல்லியும், கெஞ்சியும் வர மறுத்து விட்டாள்.. நான் என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருந்தேன்.



“அந்தச் சமயத்தில் தான் அந்தச் சங்கம் பற்றித் தெரிந்தது.. வேதா வேலைக்கு விசாரிக்கச் சென்ற பொழுது அதை இழுத்து மூடப் போவதாகச் சொல்லி விட்டு அவர்கள் விலகிக் கொள்ள.. ஏன் நம்ம வேதா இதை எடுத்து நடத்தக் கூடாதுன்னு நான் யோசித்தேன்.. மெதுவாக வேதாவுக்கும் எடுத்துச் சொன்னேன்..”



“அவர்களுக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டியதாக இருந்தது.. வேதாவோ என்னிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை.. தன் நகைகள் சிலவற்றைக் கடனாக வைத்து இந்த ஹோம் செர்வீசஸை தொடங்கிவிட்டாள்..”



“பாரு.. இந்த ஆறு மாசமாக அவளுக்கு ஏறுமுகம் தான்.. ஆனால் சொல்லணும் வேதாவுக்காக தமிழரசி நிறையச் செய்திருக்கிறாள்.. இந்த மாதிரி வேலைக்கு அவர்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்து ஆட்களைக் கூட்டி வருவது.. இப்படி.. லோக்கல் போலீஸும் வேதாவுக்கு உதவியாக இருந்தது..”



“நம்ம ஏரியா பணக்கார ஏரியா என்பதால் எல்லார் வீட்டுக்கும் இவர்கள் வழியாகத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பது மாதிரி ஒரு ஏற்பாடு செய்தோம்.. இப்போ வேதா இந்த மாதிரி நாலு இடங்களில் சங்கம் தொடங்கி இருக்கிறாள்.. அதைத்தவிர இன்னும் பத்து ஏரியாவில் அவளுக்கு அழைப்பு வந்திருக்கிறது..”



“இவர்கள் நம்பகமான ஆட்களை அனுப்புவதாகப் போலீஸ் மூலம் தகவல் சொல்லப் பட்டு வருகிறது.. அதுதானே நம்ம மாதிரி பணக்காரர்களுக்கும் வேண்டும்.. நம்பிக்கையான ஆட்கள்.. சரியான ஊதியம்.. வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பு..”



“இப்பவும் நீங்கள் நினைக்கலாம்.. என்ன இது ஒரு பெரிய விஷயமா என்று.. வேலைக்காரிக்கு ஏற்ற வேலை என்று.. ஒன்றை நீங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்கணும்.. வேலைக்காரர்கள் அவர்களும் மனுஷங்கதான்.. அவங்க அவங்க சூழ்னிலைதான் அதற்குக் காரணம்..”



“அவங்களுக்காகவும் பார்க்கணும் என்ற நோக்கத்தில் தான் வேதா இந்தச் சங்கத்தை ஆரம்பிச்சா.. ஆனால் அத்தோடு அவள் நிற்கலை.. இப்போ ஷார்ட் டைம் கோர்ஸ் ஒண்ணை ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் எடுத்திருக்கிறாள்.. இப்போ சின்னச் சின்னப் பார்ட்டிகளையெல்லாம் நட்த்தத் தொடங்கி இருக்கா..”



“ருக்கு.. ஒரு மாசம் முன்னால நீ உங்க கிளப் செக்கரட்டரி வீட்டுக் குழந்தையோடு பர்த்டே பார்ட்டி அட்டென்ட் பண்ண முடியலேன்னு சொல்லிட்டு இருந்தியே?.. நம்ம வேதாதான் அதை ஹோஸ்ட் பண்ணிணாள் தெரியுமா?.. இப்பல்லாம் வேதா இப்படிக் குட்டீஸோடு பர்த்டே பார்ட்டியை கிராண்டா, குழந்தைகளுக்கு ஏற்ப செய்வதில் எக்ஸ்பெர்ட்ன்னு ஒரே டிமான்ட்தான் போ.. இப்போ ஸ்போக்கன் இங்க்லீஷ் கிளாஸ் வேற ஜாயின் பண்ணியிருக்கா..” எனப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார் ராஜேந்திரன்.



“எனக்கு அப்பவே தெரியும்.. நம்ம வேதாகிட்ட ஏதோ ஒரு ஸ்பார்க் இருக்குன்னு.. என்ன கொஞ்சம் நான் கண்டு பிடிப்பதற்கு லேட்டாயிடுச்சு.. இல்லையா ராஜ்..” என ருக்மணி சிரித்து வைக்க..



“அது சரி.. ருக்கு நீ டுயூப் லைட்ன்னு நீயே சொல்லிக்கிட்டா எப்படி?.. அதை நாங்க இல்லை சொல்லணும்..” என ராஜேந்திரனும் அவளுடன் இணைந்து சிரித்தார்.



பிரகாஷுக்கு தன் அன்னையை நினைத்துச் சிரிப்பு வந்தாலும்.. வாயை மூடிக் கொண்டு வேதாவை மெச்சுதலாகப் பார்த்தான்.. ஆனாலும் அவனுக்கு உள்ளுக்குள் கோபம் இருக்கத்தான் செய்தது.. இப்படித் தங்களை ஏமாளி ஆக்கி விட்டாளே என்று.



‘வேதாவோ இந்தப் பாராட்டெல்லாம் எனக்கு எதுக்கு?.. எங்கு ஜெயிக்க வேண்டுமோ அங்கே தோற்று நிற்கிறேனே?..’ என உள்ளுக்குள் குமிறிக் கொண்டிருந்தாள்.



சிரித்து முடித்த ராஜேந்திரன்,



“இப்போ என்னடா சொல்லறே பிரகாஷ்.. வேதா இப்போ என்டர்பிரைசிங்கா இருக்காளா?.. நீ.. வேலைக்காரி..வேலைக்காரின்னு, சொல்லி சொல்லி அவளைக் குத்தினேயே?.. அவங்க இல்லாமல் நம்மால் இருக்க முடியுதா?..”



“ஒரு பொண்ணு நினைச்சால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் பிரகாஷ்.. எதுக்கும் ஒரு வரைமுறை இருக்குப்பா.. வாய் இருக்கேன்னு பேசிடக் கூடாது.. நீயும் சரி உங்க அம்மாவும் சரி அந்தப் பெண்ணை எப்படியெல்லாம் பேசி வாட்டி எடுத்திருக்கீங்க.”



“நீ ஒரு மாதிரி அவளை டார்ச்சர் கொடுத்தால், உன் அம்மாவோ அவளைக் குத்தி பேசி தன்னம்பிக்கையை இழக்க வைத்து.. கண் முன்னே புருஷன் எதிரில் இன்னொருத்தியை வீட்டில் உலாவவிட்டு.. அவளை வேதனை அடையச் செய்து….”



“ஒண்ணை நீங்க புரிஞ்சிக்கலை.. யாருமே பிறக்கும் போதே எல்லாம் தெரிஞ்சி கொண்டு பிறப்பதில்லை.. அவரவர்கள் வளரும் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் தான் அவர்கள் உருவாகக் காரணமாய் இருக்கு.. என்ன வேதாவுக்குக் கொஞ்சம் படிப்பு குறைச்சல்.. அவ்வளவுதானே?.. அது கூட அவளுக்குக் கணக்கும், அறிவியலும் அலர்ஜி.. அவள் இருந்த ஊரில் வேறு படிக்க அப்போ சந்தர்ப்பமில்லை..”



“வாழ்க்கையில் படிக்க எத்தனையோ படிப்பு இருக்கு?.. இப்பப் பாரு.. அவளுக்குப் பிடிச்சத்தைப் படிக்கத் தொடங்கி இருக்கா.. தனக்கு என்று ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு விட்டாள்..”



“உன்னை மாதிரியோ.. இல்லை.. சத்யா மாதிரி இஞ்சினியரீங்க் படிச்சால் தான் படிப்பு இல்லை.. மனசு இருந்தால் எந்தத் தொழிலும் கௌரவமாகச் செய்யலாம்.. படிப்பும் படிக்கலாம்.. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்..” எனப் பெரிய ஒரு லெக்ச்சரே கொடுத்தார் ராஜேந்திரன்.



“யெஸ் டாட்.. எனக்குப் புரிகிறது.. கங்கிராட்ஸ் வேதா.. ஐ யாம் சாரி ஃபார் எவ்ரிதிங்க்.. சாரி வேதா..” எனப் பிரகாஷ் மன்னிப்பை வேண்ட.. எதையும் அதன் போக்கில் எடுத்துக் கொள்பவன், வேதாவிடம் மன்னிப்பு கேட்கவும் தயங்கவில்லை.. அதே சமயம் அவள் வெற்றியையும் பாராட்டினான் மறக்காமல்.



ருக்மணியோ, “என்னையும் மன்னிச்சிடு வேதா..” எனத் திரும்பவும் மன்னிப்பை வேண்டினார்.



“பரவாயில்லை பிரகாஷ்.. அத்தை நீங்களும் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்கணும்னு அவசியமில்லை.. நடந்தது நடந்து போச்சு.. அதை விடுங்கள்.. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்..” என்ற வேதா..



“அத்தை..மாமா.. இனி நான் வந்த வேலை முடிந்து போச்சுன்னு நினைக்கறேன்.. அத்தையால் ஒரளவு இப்போ சமாளிக்க முடியும்.. அனுசூயா சமையலை பார்த்துப்பா.. தமிழரசியும் நாளையில் இருந்து வந்து விடுவதாகச் சொல்லி விட்டிருக்கா.. சோ.. நான் இங்கிருந்து கிளம்பலாம்ன்னு பார்க்கிறேன்..” என்ற வேதா மெல்ல அடுத்தக் குண்டை இல்லையில்லை அணுகுண்டை இறக்கினாள்.



“வாட் நான்சென்ஸ்..” எனப் பிரகாஷ் குரல் உயர்த்தினான்.. இவள் மனசில் என்ன தான் நினைச்சிருக்கா..



“என்னம்மா.. நீ எதுக்கு இப்போ போகணும்..” என ருக்மணி படபடக்க..



“எதுக்கும்மா இப்போ திடீர்ன்னு நீ போகணும்.. வெண்ணைய் திரண்டு வரும் போது தாழி உடைஞ்ச கதையாய்?..” ராஜேந்திரன் சற்று அலுத்துக் கொள்ள..



அவர்கள் மூவரையும் பார்த்து வேதாவோ..



“இல்லை.. நான் சரியாகத்தான் முடிவெடுத்திருக்கிறேன்.. நான் வந்த வேலை முடிந்து விட்டது.. இத்தனை நாட்களாக உங்களுக்கு உதவி என்று தானே வந்தேன்.. என் வேலை முடிந்ததும் கிளம்புவதுதானே முறை அத்தை..”



“ரொம்ப முறையைக் கண்டே?.. ஏன் டி.. அப்போ கிளம்பறேங்கறவ எதுக்குடி அத்தைன்னு சொல்லறே?.. உண்மையா என்னை அத்தைன்னு மதிச்சிருந்தா நீ இப்படிக் கிளம்புவியா சொல்லு..” என்ற ருக்மணி..



“ராஜ்.. என்ன நீங்க பார்த்திட்டு இருக்கீங்க.. தாய் மாமா தானே நீங்க.. எடுத்து சொல்லக் கூடாதா?..அப்போ இந்தப் பொண்ணு எங்களை மன்னிக்கலைன்னு தானே அர்த்தம்..” ருக்மணி பதட்டத்துடன் புலம்பத் தொடங்கினாள்.



“அத்தை.. ப்ளீஸ்.. எதுக்காக டென்ஷன் ஆகிறீங்க.. உங்களையெல்லாம் மதிக்கறதுதாலேதான் நான் போகிறேன் என்கிறேன்..”



“மேடம் அப்படின்னு தானே நான் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.. நீங்கள் தானே என்னைத் திரும்பவும் அத்தைன்னு கூப்பிடுன்னு சொன்னீங்க.. அத்தோடு அத்தை.. நீங்களும், மாமாவும் என்னிக்குமே என்னோடு சொந்தம் தானே.. என் அம்மாவோடு கூடப் பிறந்தவர் மாமா.. அவர் மனைவி நீங்கள்.. அந்த உறவு முறையில் தான் உங்களை அப்படிக் கூப்பிடுகிறேன்..”



“பிரகாஷோடு மனைவியா எனக்கு இங்கு உரிமையில்லை அத்தை.. நம்ம சொந்தத்திற்காக அந்த உறவை மதித்து உங்களுக்கு உதவத்தான் வந்தேன்.. என் சொந்த மாமி கால் உடைந்து கிடந்த போது.. என்னால் எப்படிப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும் சொல்லுங்க..”



“தமிழரசி வீட்டில் நடந்தவைகளை எல்லாம் வந்து சொன்னாள்.. அவளாலும் உங்களுக்கு அப்போ உதவமுடியவில்லை.. ஏஜென்சியில் இருந்து ஆள் அனுப்பினாலும் உங்களுக்குச் சரிபடவில்லை.. சரி என்று நானே துணிந்து வந்தேன்..”



“எத்தனையோ தெரியாதவர்களுக்கு வேலை செய்யப் போன நான்.. சொந்த உறவு உங்களுக்கு உதவ மாட்டேனா?.. நம் சொந்தம் இங்கே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்க என்னால் அப்படியே விடப் பிடிக்காமல், அந்த அடிப்படையில் தான் இத்தனை நாளாக இருந்தேன்..”



“இதுக்கும் மேலே எப்படி இருக்க முடியும் சொல்லுங்க அத்தை.. விருந்தும், மருந்தும் மூணு நாள்தானே.. நம்ம உறவு நிலைச்சி இருக்கணும் என்றால் நீங்க இப்போ எனக்கு விடை கொடுக்கணும்.. கட்டாயம் உங்க நாத்தி மகள் என்ற முறையில் நீங்கள் என்னிடம் இருந்து எந்த உதவியும் இனியும் எதிர்பார்க்கலாம் அத்தை.. நான் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.. ஆனால் பிரகாஷின் மனைவியாக.. இந்த வீட்டில்…..” சற்று நிறுத்தியவள்….



‘அதற்குத்தான் எனக்கு உரிமையில்லையே?.. அதைக் கொடுக்க வேண்டியவன் என்னை ஒதுக்கி விட்டானே?..’



“ஓ.கே.. இதற்கு மேல் எனக்கு இங்கே என்ன இருக்கு.. மற்றபடி வேறு எதுவும் இல்லையே நமக்குள்.. ப்ளீஸ்.. நான் ஏதாவது தப்பாகப் பேசி இருந்தால் தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க அத்தை.. இப்போ நான் போய் ரெடி ஆகி விட்டு வருகிறேன்..” என்றவள் சட்டென அங்கிருந்து வேகமாக அகன்றாள் வேதா.



அவளுக்குள் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது.. விட்டால் அவர்கள் எதிரில் அழுது விடுவோமோ என்று எண்ணியே அங்கிருந்து விரைந்து ஓடினாள்.



“ராஜ்.. என்ன இந்தப் பொண்ணு இப்படிப் பேசிட்டு போறா?.. எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணினேனே?.. டேய் பிரகாஷ்.. என்னடா.. வாயை மூடிட்டு இருக்கே?.. வேதா போறேன்னு சொல்லராளேடா?..” ருக்மணி ஒரு பெண்ணாய் பதறிக் கொண்டு இருந்தாள்.



“என்னம்மா பண்ண சொல்லறே?.. போறேன்னு சொல்லுகிறவளை என்ன காலில் விழுந்தா தடுக்க முடியும்?.. அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டமில்லையா?.. இங்கே இருக்கப் பிடிக்காதவளை நான் என்ன செய்ய முடியும் சொல்லு..” என்று அப்பொழுதும் தத்துவம் பேசிய பிரகாஷை முறைத்த ராஜேந்திரன்..



“சீ.. நீயெல்லாம் என் பிள்ளையா?.. உன்னை என் பிள்ளைன்னு சொல்லுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கு?..”



“அப்பா..” தன் குரலை உயர்த்தினான் பிரகாஷ்.



“என்னடா.. அப்பா.. கொப்பான்னு.. ஏன் நீ அவள் காலில் விழுந்தாலும் தப்பில்லை.. கையைப் பிடிச்சி கெஞ்சினாலும் குறையில்லை.. உன் மனசில என்னடா நினைச்சிட்டு இருக்கே?.. பெரிய கொம்பன்னா?.. அன்னிக்கு என்னமோ எனக்கு அவ ஈக்வல் இல்லைன்னே?.. இப்போ இன்னும் என்ன சொல்லப் போறே?..”



“தன்னாலும் முடியும்னு அவள் சாதிச்சி காட்டலையா?.. என்னடா அப்படிப் பார்க்கிறே?.. ஒரு சாதாரணச் சங்கம் தான் அது.. ஆனால் அதற்குப் பின்னாடி இருக்கும் அவர்கள் உழைப்பு இல்லைன்னா.. உன்னை மாதிரி ஆளுங்கலெல்லாம் கஷ்டப்பட வேண்டியதுதான்..”



“நாம ஒண்ணும் இவங்கலெல்லாம் தேவையில்லைன்னு வாழறவங்க இல்லை.. அவர்களைச் சார்ந்து தான் நாம் வாழ்கிறோம்.. நீ கேவலப்படுத்தியதையே கையில் எடுத்துக் கொண்டு வேதா சாதிச்சி இருக்கா இப்போ.. அத்தோடு விடாமல் இன்னும் தன்னை உயர்த்திக் கொண்டுதான் இருக்கிறாள்.. இன்னும் கொஞ்சம் நாளில் பெரிய பெரிய கம்பெனிக்கெல்லாம் அவள் விழாவுக்கு ஹோஸ்ட் பண்ணும் காலம் வரத்தான் போகிறது..”



“இன்னும் என்ன எதிர்பார்க்கிறே நீ?.. அடுத்து உன்னை மாதிரி அவளும் சாப்ட்வேர் ஃபீல்டிலே சக்சஸ் ஆகணும்னு சொல்லாதே?..”



“பாவம்டா அந்தப் பொண்ணு.. அவ அப்பா செஞ்ச தப்பு.. படிச்ச மாப்பிள்ளை வேணும்னு அடம் பிடிச்சி.. கடைசியில் நீ அவளைக் கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்னிலை.. அவ நீதான் வேணும்னு எதிர்பார்க்கலை டா.. சந்தர்ப்பம் அப்படி ஆகி விட்டது..”



“என் மேலேயும் தப்பிருக்கு.. உன் மனசை நான் பார்க்க தவறினேன்.. என் பிள்ளை என் பேச்சைக் கேட்பான் என்று நினைத்தேன்.. உனக்கு ஒரு மனசு இருக்கும் என்று அந்தச் சமயத்தில் யோசிக்கத் தோணலை.. என் தங்கை தான் அப்பொழுது எனக்குப் பெரிதாகத் தோன்றினாள்..”



“இதில் வேதாவின் தப்பு என்ன இருக்கு சொல்லு?.. உனக்குப் பிடிக்கவில்லை என்றதும், ஒதுங்கிதானே போனாள்.. ஏன் நீ போ என்றதும், வீட்டை விட்டும் போய் விட்டாள்.. உனக்காகத் தன்னையும் உயர்த்திக் கொண்டிருக்கிறாள்..”



“இன்னும் என்னடா எதிர்பார்க்கிறே?.. ஓ.. ஒருவேளைத் திரும்பவும் அந்தப் பெண் சத்யா வருவாள் என்று காத்திருக்கிறாயா?.. உன் மனசுல அப்படி ஒரு நினைப்பு இருந்தாலும் அந்தப் பொண்ணு விட்டு கொடுத்துப் போகும் குணவதிடா.. அதையும் தானே நீ எதிர்பார்த்தே?.. ” ஏளனமாகக் கேட்டார் ராஜேந்திரன்.



“ச்..சீ… அப்பா ஹௌ கேன் யூ?...... சத்யா கதிரின் மனைவி..” என முகம் சுளித்தான் பிரகாஷ்.



“அப்போ இப்போதான் தெரியுதாப்பா அவள் இன்னொருத்தருடைய மனைவின்னு.. தேவையில்லாமல் அந்தப் பெண்ணை வீட்டில் இருக்க வைத்து.. அவளுக்கு அப்படி ஒரு எண்ணத்தைக் கொடுத்து.. சொல்லவே கஷ்டமாயிருக்கு.. அவள் நல்ல பெண்தான்.. நான் இல்லைன்னு சொல்லலை.. ஆனாலும், ஒரு தப்பான யூகத்துக்கு வழி வகுத்து வைச்சிட்டீங்க தானே?..”



“என்ன சொல்லறது?.. உங்கம்மாவே அப்படித்தானே இருந்தா?.. நல்லவேளை அவள் வீட்டு மனுஷங்க நல்லவர்கள்.. அவள் வாழ்க்கை சரியாகிவிடும்.. ஆனால் நீ?.. உன்னோடு வாழ்க்கை?..”



“யோசி.. பிரகாஷ்.. யோசி.. இனியும் உன் வீண் பிடிவாதத்தால் உன் வாழ்க்கையைத் தொலைக்கப் போகிறீயா?.. இல்லை வேதாவுடன் வாழப் போகிறாயா?..”



“என்ன ராஜ்.. இப்படிப் பேசறீங்க?.. குழந்தை அவன் என்ன பண்ணுவான்?.. வேதாதானே போகப் போறதா சொல்லறா?.. அவளைச் சமாதானப் படுத்தாமல்…” என்று தொடங்கிய ருக்மணியை…



“ஷ்.. போதும் ருக்கு.. நிறுத்து உன் அதிகப்பிரசங்கித்தனத்தை.. அவன் வாழ்க்கையை நீ கையில் எடுக்காதே.. அவன் ஒண்ணும் சின்னப் பையன் இல்லை.. விடு.. அவன் யோசிக்கட்டும்..”



“பிரகாஷ்.. இனி வேதாவை தடுத்து நிறுத்துவது உன் கையில்.. போ.. என்ன செய்வியோ.. அவள் காலில் விழு.. இல்லை கட்டி பிடி. ஆனால் அவள் இங்கே இருப்பது என்பது உன் கையில் தான் இருக்கு.. நீ எப்போதும் சொல்லுகிறாயே அவங்க அவங்க வாழ்க்கை அவங்க அவங்க இஷ்டம்ன்னு.. உன் வாழ்க்கையும் இனி உன் இஷ்டம்” என்று கறாராகச் சொன்ன ராஜேந்திரன் ருக்மணியின் வீல் சேரை தள்ளிக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்.





*********************************************************************

 

Jothiramar

Moderator
Staff member
இன்னும் இந்த பிரகாஷ் ஈகோவோட சுத்துறானே
 

Chellam

Well-known member
பிரகாஷ் அப்பா சொன்னது போல் காலில் விழ வேண்டியது தானே.
 

Kothaisuresh

Well-known member
நேராமல் ரூமுக்கு போய் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிடு
 
Top