கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 4

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 4



அடுத்த அரை மணி நேரத்தில் யாரையும் கேட்காமல் யாரையும் எதிர்ப்பார்க்காமல் நடந்தேறியது அந்த இளஞ்ஜோடிகளின் திருமணம்..



அட்சதைகளையும் மலர்களையும் தூவி வாழ்த்தினர் மணமக்களை..



நான்கு பேருக்கும் நான்கு விதமான சிந்தனைகள்.. ஒருவர் கூட அந்த நிகழ்வில் சந்தோஷப்படவில்லை.. பாவம்.. பெரியவர்களுக்காகத் தங்கள் வாழ்க்கையே பகடையாக்கிக் கொண்டனர் சிறியவர்கள்..



இதில் சத்யாவின் நிலை மிகவும் மோசமானதாகவே இருந்தது.. அவள் எதையோ எதிர்பார்த்திருக்க எதுவோ வந்து சேர்ந்தது அவளை மிகுந்த ஆத்திரத்தில் தள்ளியது..



அதுவும் அவள் தந்தையை நினைக்கும் போதே அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. என்னென்னவோ சொல்லி கடைசியில் ஒப்புக் கொள்ள வைத்ததை அவளால் தாங்கவே முடியவில்லை..



அடுத்து அடுத்து வந்த சடங்குகளில் மனம் லயிக்கவில்லை அவளுக்கு..



யாரோ குடத்தில் கையை விட்டு மோதிரத்தைக் கண்டுபிடிக்கும்படி தூண்டினார்கள்..



மெல்ல அருகில் அமர்ந்து குடத்தில் மோதிரத்தைத் தேட கையை விட்டவளைப் பார்த்தபடி, உடனே தானும் பானையில் கையைவிட்ட கதிரை அனல் பார்வைப் பார்த்தவள்..



பற்களை நன்றாய் கடித்தவாறு வார்த்தைகளை யாருக்கும் கேட்காமல் மென்று துப்பினாள்..



'இத்துனூண்டு குடத்தில் யானை தும்பிக்கையைப் போட்டது போல நீ கையை விட்டால்.. என் கையை நா எப்படிப் போட முடியும்..', என்று கடிந்தவளிடம்,



கூலாக ஒரு பார்வையை வீசிய கதிர், “உனக்கு வேணும்னா சொல்லு நான் விட்டுக் கொடுக்கிறேன்..அதுக்காக இப்படி நைசாக என் கையைப் பிடித்துக் கிள்ளாதே..உனக்குத் தெரியுமோ யானைக்குப் பெரிய நம்பிக்கையே அதன் தும்பிக்கைதான்".. என்று ஒரு போடு போட்டான்.



அவ்வளவுதான் சத்யாவுக்கு அந்த ஏ.சி ஹாலிலும் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டது.. படக்கென்று தன் முகத்தை வேறு பக்கமாய் ஒடித்துத் திருப்பிக் கொண்டாள்.



வேதாவோ எந்த ஒரு மனக் கிலேசமும் இல்லாமல் பிரகாஷை நல்ல விதமான மன நிலையில் தான் மணந்தாள்.. அவளுக்கு அவள் அருமை அப்பா எதைச் சொன்னாலும் வேத வாக்குதான்..



'நல்ல வேளை அந்தத் திமிர் பிடித்த பாரீன் மாப்பிள்ளையிடமிருந்து தப்பியாயிற்று.. அதிலும் அவன் அம்மா நிச்சயம் ஒரு பணம் பிடுங்கி ராட்சசி.. இவ்வளவு பேரம் பேசியிருக்கிறாள்.. பாவம் அப்பா.. எவ்வளவு செலவு செய்தார்.. அப்படிக் கூட அவர்களைத் திருப்தி படுத்த முடியவில்லை..’



‘போதாதற்கு.. வீட்டு வேலை செய்யத்தான் லாயக்கு என்று அந்த அருண் பேசியது நிச்சயம் அதிகப்படி.. ஆனாலும் அப்பா ஏன் கதிரை இவ்வளவு தீர்மானமாக வேண்டாம் என்றுவிட்டார்.. பாவம் கதிர் மாமா.. ஏமாந்து போனார்.. ஆனாலும் பரவாயில்லை.. சத்யாவை இப்படித் தடாலடியாக மணப்பார் என்று நினைக்கவில்லை..’



‘ஏதோ நான் புண்ணியம் தான் செஞ்சிருக்கேன் போல அதான் அந்த அமெரிக்கக் காரன்கிட்டருந்து தப்பித்தேன்.. அவனும் அவன் இங்கிலீசும்.. நமக்குப் பள்ளிக்கூடத்திலேயே இங்கிலீசுன்னா அல்ர்ஜியாச்சுதே..’



ஏதேதோ எண்ணமிட்டபடி அனைத்து சடங்குளையும் நல்லவிதமாகவே எதிர் கொண்டாள் வேதா..



எல்லாச் சடங்குகளிலும் சத்யா முரண்டு பிடிக்க வேதாவோ அழகாய் அனைத்தையும் செய்து கொண்டாள்..



பிரகாஷ் எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை.. என்ன தான் தன் சொந்த அத்தை பெண்ணாகவே வேதா இருந்தாலும் கூடத் தன் சிறு வயது முதல் மனைவி என்ற அந்தஸ்தில் நினைத்திருந்த இன்னொரு அத்தை மகளான சத்யாவை அவனால் மறக்க முடியவில்லை.. தங்கை பாசத்தால் தன் வாழ்க்கையைப் பகடையாக்கி உருட்டிய தந்தையை அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை..



அதற்குள் அடுத்தச் சில மணிநேரங்கள் கழிந்திருக்க.. மணமக்களை அவரவர் புகுந்த வீட்டுக்கு அனுப்பும் படலம் துவங்கியது..



“பொண்ணும் மாப்பிள்ளையும் புகுந்த வீட்டுக்குக் கிரகப் பிரவேசம் செய்யுங்கோ.. இன்னிக்கே நாள் நல்லாயிருக்கறதாலே சாந்தியையும் இன்னிக்கே வெச்சிட்டா நன்னா இருக்கும்..", என்று ஐயர் சொல்லிவிட்டார்..



தங்கள் அறையில் மாலையைக் கழட்டி வைத்த பிரகாஷ்,



"வாட்.. சாந்தியாவது பூந்தியாவது அது யாரு?.. இந்த ஒண்ணை என் தலையிலே கட்டிவச்சி கழுத்தறுத்தது போதாதா.. இதுலே இந்தக் கூத்து வேறா?..", என்று கடுப்படித்தான் பிரகாஷ் தன் அன்னையிடம்..



"டேய் பிரகாஷ்.. யூ நோ அபவுட் யுவர் டாட்.. அவர் ஒன்னு சொன்னா சொன்னதுதான்.. இத்தனை வருஷமா குப்பைகொட்டின என்னைகூட எதையும் கேக்காம உன்னை மணமேடை ஏத்திட்டார்.. நான் மட்டும் என்ன பிடிச்சா ஒத்துக்கிட்டேன்.. இதுவும் என் நாத்தனார் தான்.. ஆனா உன்னோட ரேவதி அத்தை மாதிரி இந்தக் கல்யாணி அத்தைக்கு அவ்வளவு விவரம் போதாது.. கிராமத்து லைஃப் ஸ்டைல் அவளுக்குப் பிடித்துப் போச்சு.. அதான் பொண்ணையும் அப்படியே வெளக்கெண்ணை மாதிரி வளர்த்திருக்கா..", என்று ஆதங்கப்பட்டாள் ருக்மணி..



"மாம்.. எனக்குக் கடுப்பா இருக்கு.. அதுவும் இந்தக் கிராமமும் இவர்கள் பேச்சும்..அப்பாவைப் பாரு இன்னமும் பட்டாபட்டி டவுசர் போட்டு வேட்டியை அதன் மேலே ராமராஜன் மாதிரி மடிச்சு கட்டாதது ஒண்ணுதான் குறைவு.. அப்படியே 180 டிகிரி திரும்பிட்டார்.. பேச்சும் இழுத்து இழுத்துப் பேசுறார்..”



“இத்தனை நாள் சிடி லைஃபில் இருந்த இவரே இப்படின்னா அப்போ வேதாவை யோசிச்சு பார்.. எனக்குத் தாங்கலைம்மா.. அந்த அருண் எப்படியெல்லாம் பேசினான்.. வீட்டு வேலை செய்யத் தான் லாயக்குங்கிற மாதிரி.. அவன் கூட எஸ்கேப் ஆகிட்டான்.. நான் தான் மாட்டினேன்..", கண்கள் வேதனையைக் காட்டின..



"கண்ணா.. வருத்தப்படாதேடா.. ப்ளீஸ்.. நான் மட்டும் என்ன செய்ய முடியும்.. எனக்குக் கூட வருத்தம்தான்.. என் லேடிஸ் கிளப்பில் எப்படி என் மூஞ்சியைக் காட்டுவேன் இனி.."



"சத்யா எங்கே வேதா எங்கே.. என் பிசினெசில் இப்போதான் சத்யா ஈடு படத் தொடங்கியிருக்கா.. எல்லாக் கிளையன்ட்சும் வேற வேற கண்டிரீஸ்.. இந்தக் கண்டிரீப்ரூட்டுக்கு.. இங்கிலிஷ்லே ஏ.பி.சி. கூட முழுக்கத் தெரியுமான்னு தெரியலை.. இப்படி என் தலையிலே கட்டி வச்சிட்டாரே..", என்று தலையில் கையை வைத்தபடி கட்டிலில் அமர்ந்துவிட்டான்..



"என்ன செய்ய? கல்யாணி அவ பொண்ணை அப்படி வளர்த்துட்டா.. இதே ரேவதியைப் பாரு அவ தங்கைதானே.. நல்ல வேளையா என் அண்ணன் இங்கே இருந்ததுனாலே அவள் இந்த லைஃப் ஸ்டைலில் அப்படி ஐக்கியமாகிட்டா.. இப்ப பேசி என்னாகப் போகுது.. மனசை தேத்து..", என்றபடி வெளியில் வந்தவள்.. அதிர்ந்தாள்



அங்கே அவர்கள் பேசிய அனைத்தயும் கேட்டபடி நின்றிருந்தாள் வேதா.. முகத்தில் எதையும் காண்பித்துக் கொள்ளாமல்,



"என்ன வேதா.. கூப்பிட்டாங்களா?", என்று அலட்சியமாய்க் கேட்டாள் ருக்மணி..



வேதாவுக்கு நம்பமுடியவில்லை.. 'காலையில் தன்னை அழகாய் அலங்கரித்து இனிமையாய் பேசி மேடைக்கு அழைத்து வந்த மாமியா இது என்று.. இது துவக்கம் தான் போல்.. இனி என்னாகுமோ.. பார்க்கலாம்..', என்று நினைத்தபடி..



"அத்தை.. கிளம்பணுமாம்.. மாமா உங்களைக் கூப்பிட சொன்னாங்க.. தயாரான்னு பார்த்து வர அனுப்பிச்சாங்க..", என்று திக்கித் திணறி பேசி முடித்தாள்..



அவளை ஏற இறங்கப் பார்த்த ருக்மணிக்கு துளி கூட அவள் மேல் பரிதாபம் தோன்றவில்லை.. மாறாகத் தன் பையனின் வாழ்க்கையைக் கெடுக்க வந்தவள் என்றே தோன்றியது.. இவளும் தன் நாத்தி மகள் தானே.. தான் பார்த்து பிறந்து வளர்ந்த குழந்தை என்று துளியும் பாசமோ பரிவோ தோன்றவில்லை.. என்ன செய்வது அவள் வாழ்வு முறை அப்படி .. நகரத்தின் செயற்கை பூச்சிற்கு அவள் அடிமை..



"சரி சரி.. போ வரோம்", என்று சொல்லிவிட்டு கதவை மீண்டும் மூடினாள்..



சிறிது நேரம் தயங்கி நின்ற வேதா அதன் பின் மூடிய கதவின் பக்கம் நின்று மேலும் அவமானப்படப் பிரியப்படாமல் அங்கிருந்து அகன்று சென்று ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.



வெளியே அழகிய மலர்களை ஒட்டித் தயாராய் நின்றிருந்த பெரிய ஸ்கார்ப்பியோ வண்டியில் கண்களில் நீர் பெருக ஏறி அமர்ந்தாள் சத்யா.. அவளருகில் ஏறி அமர்ந்தவனை ஆத்திரத்துடன் முறைத்தவள் ஜன்னல் கதவருகே நகர்ந்து ஒட்டி அமர்ந்துகொண்ட முகத்தைத் திருப்பியவளுக்கு வெளியே நின்றிருந்த அவள் அருமைத் தந்தையின் முறைப்பே பரிசாய்க் கிடைத்தது..



கண்களை மெல்ல மூடித் திறந்து பயப்படாமல் போ என்று செய்கை காட்டினாள் அவள் அன்னை.. காரின் முன் சீட்டில் கண்ணாத்தா கிழவி ஜம்பமாய் ஏறி அமர்ந்து கொள்ளக் காரை எடுத்தார் சக்திவேல்.



பின்னே வந்த காரில் அவள் பெற்றோர் ஏறி அமர்ந்தனர்.



முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொப்பளிக்கக் காரை நளினமாகக் கையாண்டார் சக்திவேல்.. அலுங்காமல் குலுங்காமல் தன் புது மருமகளை வீடு அழைத்துச் செல்லும் பொருட்டுக் கவனமாய்க் காரை ஓட்டினார்.



வழியெங்கும் தென்பட்ட வயல் வரப்புகளைத் தன் மருமகளுக்குக் காட்டியவர்..



"மருமகளே.. இதோ தெரியுற அத்தனை நிலமும் நம்மோடதுதான்.... அதோ கோடியிலே ரைஸ் மில்லு.. இருக்குது.. உங்க கல்யாணம் நடந்த சத்திரம் கூட நம்மோடதுதான்.. இன்னமும் நிறைய இருக்கு.. இதெல்லாம் இனி உன்னோடது.. திறம்பட நீ தான் பார்த்துக்கோணம்..



என் புள்ளை கதிரு தொழில்லே கெட்டிதான்.. ஆனாக்கா ரொம்பத் தாட்சண்யம் பார்ப்பான்.. கூடப் பெஞ்சாதின்னு ஒருத்தி லகானை இழுத்துப் பிடிச்சா தானே வழிக்கு வந்துட மாட்டான்.. அதுவும் நல்லா படிச்ச நீ அவனைக் கட்டிகிட்டது அதிர்ஷ்டம்.. உன் அத்தை அப்படித்தான் என்னைக் கட்டி போட்டு வச்சிருந்தா தன்னோட அன்பாலே..",, என்று பெருமிதமாய்த் தன் கடா மீசையைத் தடவி கொண்டார்..



'ஓஹ் மை காட்.. டிஸ்கஸ்டிங்க்.. குடும்பமே கொஞ்சம் லூசு போலே', என்று தனக்குள் நினைத்துக்கொண்டவள் ஒன்றும் சொல்லாமல் இளித்து வைத்தாள்.



"ஏம்மா பேரன் பெஞ்சாதி.. குளு குளு காத்து நல்லா வீசுதா உன் பக்கம்.. சத்தி.. அத கொஞ்சம் பெருசா சுத்திவிடு.. பாரு மருமகளுக்கு வேர்க்கிறது.. நல்லா வசதியா போகனோமின்னுதான் பெருசா இந்த வண்டியை வாங்கிப் போட்டான் என் பேரன்..", என்று தேவையில்லாமல் விவரம் சொன்ன கண்ணாத்தா ஆச்சியை நன்றாய் முதுகைப் பார்த்து முறைத்தாள் சத்யா..



'ஷிட்.. இந்தக் கிழவி ஒரே தொல்லை.. லேசுபட்டது கிடையாது இது.. நல்லா கேம் பிளான் போட்டு தன் பேரனுக்குக் கல்யாணம் முடிச்சிடுச்சு.. நினைச்சதை சாதிச்சிடுச்சு.. இதை மொதல்ல பேக் பண்ணனும்.. டார்ச்சர் பீஸ்..', என்று நினைத்தவள் அவளையறியாமல் டார்ச்சர் பீஸ் என்பதைச் சொல்லிவிட..



"என்னாத்த சொன்ன மருமவளே.. கொஞ்சம் சத்தமா.. சொல்லு..", என்று கொக்கி போட்டாள் கண்ணாத்தா ஆச்சி..



பதட்டத்தில் வியர்வை வழிய ஆரம்பித்தது சத்யாவுக்கு, ஒருவாறாய் சமாளித்துக் கொண்டு, "ஒண்ணுமில்லை ஆச்சி.. இன்னமும் கூடக் கொஞ்சம் பெருசா.. அதான் சின்ன யானைன்னு ஒரு குட்டி வண்டியை காம்பிக்கிராங்களே டி.வி.ல அதை வாங்கியிருந்தா இன்னும் கூட வசதியா இருக்கும்.. அதான் சொல்ல வந்தேன்..", என்று சிரிக்காமல் சொன்னாள்.



பக்கென்று சிரித்துவிட்டான் கதிர்.. 'பரவாயில்லை நல்லாவே காமெடி செய்யறா.. அப்பத்தாவுக்கு மட்டும் இவன் என்னைய வம்புக்கு இழுக்குறதுக்குப் பேசினான்னு தெரிஞ்சிச்சு அவ்வளவுதான்.. நேரே உப்புகண்டம்தான்..', என்று நினைத்தவன் மெல்ல திரும்பி பார்க்க, அங்கே சத்யா நிஜமாகவே சீக்கு வந்த கோழிபோல் மெல்லிதாக நாணல் போல் இருப்பதை கணடவனுக்கு இன்னமும் சிரிப்புத்தான் வந்தது..



'ஏற்கனவே இவ அப்படித்தான் இருக்கா.. இதில் இவ தோலை எப்படி உரிப்பது..நல்லா நூடுல்ஸ் மாதிரி இருக்கிரா..ம்ம்..நல்ல ஜோடிப் பொருத்தம்தான் நமக்கு..', என்று நினைத்துகொண்டு உல்லாசமாய்ச் சீட்டியடிக்கத் தொடங்கினான்..



ஆனால் கண்ணத்தா கிழவி என்ன சும்மாவா..மருமகளின் கிண்டலை புரிந்து கொண்டவள்.., "ஏட்டி.. சீமை சிறுக்கி.. என் பேரனையா ஜாடை பேசுரே.. என்ன நினைச்சே என் பேரனை.. அவன் கிட்டே நாலு லாரி கூட ஓடுது... இன்னும் சொல்லப்போன. ஒரு பஸ்ஸு கூட வாங்க பிரியந்தேன் எனக்கு.. நான் சொன்னா போதும் உடனே வாங்கிக் கட்டிபுடுவான் வீட்டிலே..நல்லா வசதியா என் கூட்டு சினேகிதிகளோட நான் யாத்திரை போலான்னு இருக்குறேன்.. பார்த்துடி..", என்று வார்னிங் கொடுத்தார் கண்ணாத்தா..



'ஆண்டவனே இந்தக் கிழவி அடுத்து நம்மை ஏதாவது வாயைக் கிண்டுறதுக்கு முன் நாம தூங்குவது போல் பாவ்லா செய்ய வேண்டியது தான்’ என்று கண்களை மூடிக் கொண்டாள் சத்யா..



அடுத்தச் சில நிமிஷங்களின் வீடு வந்து சேர்ந்திருக்க,



"வாம்மா இறங்கு தாயி..போ போயி உன் புருஷனோட சேர்ந்து சோடியா நில்லு..", என்ற குரலில் கண்களைத் திறந்தாள் சத்யா..



மெல்லக் காரை விட்டிறங்கி அந்தப் பிரம்மாண்டமான பெரிய வீட்டைப் பார்த்தவள் பிரமித்தாள்..



பழங்கால அரண்மனை போல் இருந்தது வீடு.. வாசலில் பந்தல் போட்டு ஒரு விழாவே நிகழ்த்தலாம் போல் ஒரு திறந்த வெளிப் பரப்பு.. ஆங்காங்கே நெல் மற்றும் வேறு சில தானிய வகைகள் உலர்ந்து கொண்டிருந்தன.. செக்கச் செவேல் என்று மிளகாய் வேறு..ஒரு அழகிய கிராமத்து பிண்ணனியை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த சத்யாவுக்கு முதன் முறையாய் நிஜமாகவே காட்சியாய்க் கிடைத்தது..



சுற்றும் முற்றும் பார்த்தபடி வீட்டினுள் செல்வதற்கு எத்தனித்தவளைக் கையைப் பிடித்து நிறுத்தினான் கதிர்..



'என்ன' என்பது போலப் பார்த்தவளை..ஆலம் எடுத்து வந்த பெண்களாய் ஜாடையாப் பார்த்தான்..



'ஓ, அடுத்த ஃபார்மாலிடியா', என்று நினைத்தவள் முகத்தைச் சுளித்தபடி நின்றாள்..



ஆலம் சுற்றிய பெண்களுக்குத் தட்சணையாய் பவுன் காசை கொடுத்தவன், அவளைப் பார்த்து,



“ம் இப்போ உள்ளே போ” என்றான்.



"வலது கா..", என்று கண்ணாத்தா ஆச்சி சொல்லி முடிக்குமுன் தன் இடது காலை அவசர அவரமாய் எடுத்து உள்ளே வைக்க உயர்த்தியவள், கதிரின் இறுகிய பிடியில் ஒரு கணம் நிதானித்துப் பின் வலது காலை எடுத்து வைத்து உள்ளே விடு விடு என்று சென்றாள்.

*************************************************************************************************************************




 

Chellam

Well-known member
வேதாவிடம் பிராகஷும் அவன் அம்மாவும் இன்னும் என்ன ஆட்டமெல்லாம் காட்ட போகிறார்களோ.
 
Top