கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 40

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 40



"ஏய்.. நில்லுடி.. எதுக்குடி இப்படிச் சிரிக்கறே?.. என்னைப் பார்த்தா உனக்குக் கேணையா இருக்கா..? நானும் பார்க்கிறேன் அது என்னடி எப்பப்பாரு என்னைப் பார்த்தால் உனக்குச் சிரிப்பு வருது.. வது.. உன்னை..”



அவனிடம் இருந்து தப்பிக்கப் பால்கனியை நோக்கி சிரித்துக் கொண்டே ஓடினாள் வேதா அங்கே போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.



அந்த இடம் அவளுக்குப் பிடித்தமான ஒன்று.. அங்கே தானே அவள் நாயகன் பிரகாஷ் முதன் முறையாகத் தன் மனம் திறந்தான் என்பதாலோ என்னவோ..



பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்த அந்தக் கள்வன் பிரகாஷோ, அவளைப் பிடித்து இழுத்து அவளைத் தன் மடியில் இருத்திக் கொண்டவன், அவளைப் பார்த்து வெற்றிக் களிப்பில் புருவத்தை உயர்த்தினான்.



அதைக் கண்டு கொண்டாலும் மீண்டும் கலகலவெனச் சிரித்தவளைக் கண்டவன் முகத்திலும் இள நகை அரும்பியது.. அதன் காரணத்தை அவனும் அறிந்திருந்தான்.



சட்டென அவள் இதழை நோக்கிக் குனிந்தவன் மீண்டும் நிமிர அடுத்த ஐந்து நிமிடங்கள் ஆகின.



“மாமா.. என்ன இது.. எப்பப்பாரு.. இப்படிப் பொசுக்கு பொசுக்கு முத்தம் வைச்சிட்டு.. உங்களை..” என வெட்கத்துடன் சிணுங்கிய வேதாவை கண்டவனுக்கோ.. மீண்டும் அவளை முத்தமிடத் தோன்றியது.



விடுவானா அவன்.. கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்.



“போங்க மாமா.. இப்பத்தானே….” அவனைத் தள்ளி விட முயன்றவளோ, முடியாமல் அவன் மார்பிலேயே அடைக்கலம் புகுந்தாள்.



ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு இளைப்பாறிய அந்த அதிகாலை வேளையில் மெய் மறந்திருந்த நேரத்தில் அவனுடைய செல்ஃபோன் அழைக்க..



“இது ஒண்ணு.. வேளை கெட்ட நேரத்தில்..” என்று எடுத்தவனோ..



“அப்பா டி.. “ என்றவன் அவள் வாயில் மீண்டும் முத்தமிட்டுவிட்டு.. “யெஸ் டாட்.. இதோ இன்னும் ஐந்து நிமிஷத்தில் கீழே வந்து விடுகிறோம்.. யா.. ரெடியாகிட்டோம்.. ம்.. ஓ.கே..” எனக் காலை கட் செய்தவன்…



“என்ன மாமா.. மாமா கூப்பிட்டாரோ?.. சரி வாங்க கிளம்பலாம்.. லேட்டாகிடுச்சோ?..”



“இருடி.. எல்லாம் அப்புறமா கிளம்பலாம்..முதல்ல என் கேள்விக்குப் பதிலை சொல்லு.. அது சரிடி .. நீ என்னையும் மாமாங்கறே.. எங்கப்பாவையும் மாமான்னு அழைக்கிறே?.. இது சரிபடாதே?.. முதல்ல இதுக்கு ஒரு வழி பண்ணனும்… பேசாமல் நீ என்னைப் பிரகாஷ்ன்னு சொல்லு.. இல்லை செல்லமா டியர்.. டார்லிங்க்..” என அவளை வம்பிக்கிழுத்து அவளை இறுக்கிக் கொண்டு அவள் கழுத்து வளைவில் புதைந்து கொள்ள முயல..



“போங்க மாமா.. நான் உங்களை மாமான்னு தான் சொல்லுவேன்.. அந்த மாமா வேற.. இது வேற… இதுக்குப் போய்.. முதல்ல என்னை விடுங்க.. ம்.. அய்யோ.. என் புடவையெல்லாம் கசங்குதே..” என்றவளை லட்சியம் செய்தால் தானே..



அதற்கு மேல் அவளும் அவனைத் தடுக்காமல் அவன் போக்குக்கு வளைந்து கொடுத்தவளுக்கு அவன் ஏக்கம் புரியாமலில்லை.. அவனுக்கேற்ற வகையில் அவளும் நெகிழ்ந்து கொண்டிருந்தாள்..



சற்று நேரம் கழித்து அவளை விடுவித்தவனோ தாபத்தில் தவித்துக் கொண்டிருந்தான்.



“வது.. டார்லிங்க்.. எனக்கு இப்பவே நீ வேணும்டி.. என்னால இனிமேல் முடியாது?.. அப்புறம் என்னைக் குத்தம் சொல்லாதே..”



அவனை அறிந்து கொண்ட பாவையோ அவனை இறுக்கிக் கொண்டவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.



“ப்ளீஸ் மாமா.. எனக்குப் புரிகிறது.. ஆனாலும்……இத்தனை நாள் பொருத்தாச்சு.. ப்ளீஸ்..” என அவன் கன்னத்தைத் தடவியவளை விட மனசில்லாமல் அவள் கைகளில் இதழ் ஒற்றியவன்..



“ஓ.கே டி.. எனக்கு உன் மனசு தெரியாதா?.. ஆனாலும் சில சமயங்களில்… சரி சரி முறைக்காதே தாயே.. வா.. வா போகலாம்.. இல்லைன்னா அடுத்து அப்பா இங்கே வந்தாலும் வந்திடுவார்..” என்றவன்..



‘முதலில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. இனி இவளை விட்டு ஒரு கணம் பிரிந்து இருக்க முடியாது..’



‘சத்யா… கதிர் மச்சான் கிட்ட பேசணும்.. இல்லைன்னா இவள் என்னை ஆயுசுக்கும் பட்டினி போட்டாளும் போடுவாள்’ என நினைத்துக் கொண்டே தன் மடியில் அமர்ந்திருந்தவனின் காலை பற்றி முத்தமிட்டவன் பின்னர் அவளை விடுவித்தான்.



அவனிடமிருந்து எழுந்த மங்கையோ அவனைக் கண்டு சிரித்தவள்,



“மாமா.. நான் ஏன் சிரிச்சேன்னு கேட்டீங்களே.. இதுக்குத்தான்..” எனத் தன் கால்களைக் காண்பிக்க…. புரிந்து கொண்டவனுக்கும் சிரிப்பு வந்தது..



இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வர..



அவர்களைக் கண்ட ராஜேந்திரனும், ருக்மணியும் புன்னகை புரிந்தனர்.



“டேய் பிரகாஷ்.. என்னடா.. கடைசில நீயும் என்னை மாதிரி தானா?.. மருமக பொண்ணு உன்னைப் பெட்டி தூக்க வைச்சிட்டாளா?...” என ராஜேந்திரன் கிண்டலடிக்க..



“அப்பா.. தந்தை எவ்வழியோ..மகனும் அவ்வழி தானே.. லைஃப்ல இதெல்லாம் சகஜமப்பா..” எனச் சிரிக்க.. வேதாவும் அவனுடன் இணைந்து கொண்டாள்.



அங்கே ராஜேந்திரனும், பிரகாஷ் போலக் கைகளில் இரண்டு பெட்டிகளுடன் பிரயாணத்துக்குத் தயாராக நின்று கொண்டிருந்தார்.



அதைக் கேட்ட ருக்மணியும், ராஜேந்திரனும் சிரித்தனர்..



‘இப்படி நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிட்டே இருக்கணும் மா.. எங்களுக்கு வேறு என்ன வேண்டும் சொல்லு..” என வேதாவின் கன்னத்தை வழித்துத் திருஷ்டி கழித்த ருக்மணியை அன்புடன் பார்த்தாள் வேதா.



ஆம்……………..அவர்கள் இன்று சங்ககிரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.. வெற்றிவேலின் திருமணத்திற்குக் கிளம்பி கொண்டிருந்தவர்கள்.. அப்படியே வேதாவின் மறு வீட்டு விருந்துக்கும் போவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



நெடுந்தூர பயணத்திற்கு ஏற்ப இன்னோவா காரை டிரைவர் ஓட்டி வர, வசதியாக நடுவில் இருந்த இருக்கைகளில் ராஜேந்திரனும், ருக்மணியும் அமர்ந்து கொண்டவர்கள் சற்று நேரத்தில் கண்களை மூடி உறக்கத்திற்குச் சென்று விட.. பின்னிருக்கையில் வேதாவும், பிரகாஷும் தங்களுக்குள் சீண்டிக் கொண்டு பேசியபடியே வர சௌகரியமாகப் போனது.



பிரகாஷின் தோள்களில் சாய்திருந்த வேதாவுக்கு அவன் தலையை வருடியது சுகமாக இருக்க.. அவள் நினைவுகளும் நடந்து முடிந்ததை நோக்கி சென்றது.



அன்று……..வேகமாகத் தன்னறைக்குள் நுழைந்த பிரகாஷ்.. அங்கே தன் பெட்டியை ரெடி செய்து கொண்டிருந்த வேதாவை கண்டவன்…..சட்டென அதைப் பிடுங்கி எறிந்து விட்டு அவளைத் தரதரவெனப் பால்கணிக்கு இழுத்துக் கொண்டு சென்றான்.



அவனை எதிர்பாராத வேதாவோ, அவன் கைகளைப் பிடித்து இழுத்ததும் திடுக்கிட்டவள்..



“பிரகாஷ்.. என்ன பண்ணிறீங்க.. விடுங்க.. என்னாச்சு..” எனப் பதற்றமாகக் கேட்க,



அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல்.. அவளை ஊஞ்சலில் அமர வைத்தவன்.. ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்தான்.



“என்னாச்சு.. பிரகாஷ்…” என வேதா எழுந்து கொள்ளப் போக..



அவள் தோள்களைப் பற்றிய பிரகாஷ்.. சட்டென்று அவள் காலடியில் அமர்ந்து கொண்டவன் அவள் கால்களை இறுக பற்றிக் கொண்டான்.



“அய்யோ.. என்ன இது.. விடுங்க.. என் காலை எதுக்கு…..” பதட்டமான வேதாவோ அவன் தலையைப் பிடித்துத் தூக்க முயல… முடியாமல்….. அந்தச் செய்கையை எதிர்கொள்ள முடியாமல் திணறியவள்……



“பிரகாஷ்….ப்ளீஸ்….. காலை விடுங்க.. எனக்கு என்னவோ போல இருக்கு..” என்றாள் மெல்ல..



மெல்ல தலை நிமிர்ந்தவனும், அவள் கால்களை விடாமல் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.. பின்னர்….



“வேதா… என்னை மன்னிச்சேன்னு சொல்லு.. நான் ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன்.. அதைத் தப்புன்னு கூடச் சொல்ல முடியாது.. பெரிய குத்தம்தான்.. உன்னைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்கலை.. எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை.. உனக்கு நான் செஞ்சதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்..”



“ஷ்.. பிரகாஷ்.. என்ன இது.. முதல்ல காலை விடுங்க.. எழுந்திருங்க.. அப்புறம் பேசலாம்..” எனக் கண்டிப்புடன், ஆனால் கறாராகச் சொன்னாள் வேதா.



“ம்ஹீம்.. முடியாது.. நீ என்னை மன்னிச்சேன்னு சொல்லு.. அதற்கப்புறம் பார்க்கலாம்..”



“பிரகாஷ்.. நீங்க என்ன மன்னிக்கக்க கூடிய தப்பா செய்திருக்கீங்க.. இப்படிக் காலில் விழுந்தால் இத்தனை நாளாக நீங்க நடந்து கொண்டது மாறி விடுமா?..” என்று குத்தலாக சொன்னவள், அவன் தோள் பற்றி அவனை எழுப்பி விட முயன்றாள்.



அதற்குள் பிரகாஷே எழுந்து கொண்டவன் அவளருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.



இருவர் அமரக்கூடிய அந்த ஊஞ்சலில் அத்தனை நெருக்கமாக அமர்ந்தவனை ஒன்றும் செய்ய முடியாமல் வேதாவோ மெல்ல தள்ளி உட்கார முயல.. அதை அறிந்தவனும் விடாமல் அவள் பக்கத்திலே அமர்ந்து கொண்டு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.



“வேதா.. எனக்குப் புரியுது.. எனக்குத் தெரியும்.. உன்னால் மன்னிக்க முடியாதுன்னு.. ஆனாலும் வேறு வழியில்லை.. நீ மன்னிச்சித்தான் ஆகணும்.. இல்லைன்னா நான் விட மாட்டேன்..”



பக்கெனச் சிரித்து விட்டாள் வேதா.. அதைக் கண்ட பிரகாஷும் அவளுடன் இணைந்து கொண்டான்.



சில நொடிகள் கழித்து…..



“இது என்ன ப்ளாக் மெயிலா?.. தப்பைல்லாம் செய்வீங்க?.. அப்புறம் நான் திருந்திட்டேன்.. மன்னிச்சுக்க அப்படின்னா என்ன அர்த்தம்.. அப்போ இத்தனை நாளா நீங்க நடந்து கொண்ட விதத்துக்கு என்ன விளக்கம் சொல்லப் போறீங்க?..”



தன் கைகளை அவளிடம் இருந்து எடுத்த பிரகாஷ், முடியை கோதிக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்தான்.



“என்ன சொல்லணும் வேதா.. என்னமோ பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டேன்னு சொல்லலாம்.. சின்ன வயசிலிருந்து எனக்குதான் சத்யா என்று வளர்ந்து வந்தேன்.. அது இல்லை என்று ஆனபிறகு அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் என் கோபத்தை.. என் இயலாமையை உன்னிடம் காட்டினேன் என்று சொல்லலாம்..”



“எங்களைக் கேட்காமல் முடிவெடுத்த என் தந்தையைச் சொல்லலாம்.. நான் இங்கே பட்டிணத்தில் வளர்ந்த முறையைச் சொல்லலாம்.. நீ படிக்கவில்லை, பட்டிணத்து நாகரீகம் தெரியவில்லை என்று மூடத்தனமாய் எனக்குள் எதையோ நினைத்துக் கொண்டு.. உனக்குச் சந்தர்ப்பமே கொடுக்காமல் அதையே சாக்காய் வைத்துக் கொண்டு முட்டாள்தனமாய் நடந்து கொண்டேன் என்று சொல்லலாம்.. கையில் கிடைத்த புதையலை நழுவ விட்ட கிறுக்கன் என்றும் விளக்கம் சொல்லலாம்…..”



“இப்படி இத்தனை விளக்கங்கள் சொன்னாலும், நடந்தது இல்லை என்று ஆகி விடப் போவதில்லை.. நான் உணர்ந்து விட்டேன்.. என் தப்பை திருத்திக் கொள்ளப் பார்க்கிறேன்.. வேறு என்ன சொல்ல முடியும் சொல்லு..”



“எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பாயா வது?.. இத்தனை நாட்களாக நான் உனக்கு இழைத்த கொடுமையைச் சரி செய்ய, என் தப்பை திருத்திக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு அளிப்பாயா?.. என்னை உன் கணவனாக ஏற்றுக் கொள்வாயா?..”



“இனி வரும் என் வாழ்க்கையை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. என்னை ஏற்றுக் கொள்வாயா?..” எனச் சட்டென மீண்டும் அவள் கால்களைப் பிடித்துக் கொண்டான்.



“அய்யோ மாமா.. என்ன இது விடுங்க?.. நீங்க போய் என் கால்களில் விழுவதா?.. எவ்வளவு கம்பீரமாக இருப்பீங்க?.. பெண்டாட்டி காலில் புருஷன் விழக் கூடாது மாமா.. எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.. என்னைக் காய்ச்சி எடுத்திடுவாங்க..” எனக் கலகலவெனச் சிரித்தவளை கண்ட பிரகாஷுக்கும் புன்னகை அரும்பியது.



எழுந்து கொண்டவன், அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, “அப்போ என்னை மன்னிச்சிட்டியா?.. நிஜமா?..” பாவமாக அவளைப் பார்க்க



வேதாவுக்கோ தப்பு செய்த சின்னபிள்ளை தாயிடம் மன்னிப்பு கேட்பது போல இருந்தது அவனது செய்கை.



“உ.ம்.. வேற வழி.. இப்படி நீங்க பொசுக்கு பொசுக்குன்னு காலை பிடிச்சா மன்னிச்சுத்தான் ஆகணும்..” என்று சிரித்தவள்..



“அது சரி நான் மன்னிக்கலைன்னா என்ன பண்ணியிருப்பீங்க?..”



“ம்.. என்ன பண்ணி இருப்பேன்.. சரி.. உன் வாழ்க்கை உன் இஷ்டம்.. நீ சந்தோஷமா உனக்குப் பிடிச்சா மாதிரி வாழு..”



“ஹாங்க்..” திருதிருவென விழித்தவளைப் பார்த்து பிரகாஷுக்குச் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு..



“ஓ.. அப்படிச் சொல்லுவேன்னு நினைச்சியா?.. அதான் இல்லை.. அப்படியெல்லாம் உன்னை விட்டு விட முடியாதும்மா.. நீ மன்னிச்சேன்னு சொல்லற வரை உன் காலை பிடிச்சுப்பேன்..” என்றான் பிரகாஷ் சீரியஸ்ஸாக.



“ஆனா.. எனக்கொரு டவுட்.. நீ என்னை மன்னிக்கலைன்னா இப்படி மாமான்னு கூப்பிட மாட்டியே?..”



கப்பெனச் சிரித்து விட்டாள் வேதா.. பரவாயில்லை கண்டு கொண்டானே..



“மாமா.. உங்களை….. நான் மன்னிக்கலாம் மாமா.. அது பெரிய விஷயமில்லை.. ஏன்னென்றால்.. எங்க அம்மா எனக்கு வாழ்க்கையைப் பத்தி சொல்லித்தான் இருக்காங்க.. நான் உங்களைக் கல்யாணம் பண்ணி வரும் பொழுதே இதெல்லாம் எதிர்பார்த்துத் தான் வந்தேன்..”



“எனக்குத் தெரியும்.. என் வாழ்க்கை பாதை முள் பாதையாகத்தான் இருக்கும் என்று.. போராடணும் என்று நினைச்சேன்.. என்ன ஒண்ணு கொஞ்சம் நீங்க எனக்கு எடுத்து சொல்லி இருந்தீங்கன்னா நானா உங்களுக்கேத்த மாதிரி மாறி இருப்பேன்.. ஆனாலும் எனக்கும் அப்போ மனசுக்குள்ளே ஏன் என்னை அப்படியே ஏற்றுக்கிட்டா என்ன என்று இருந்திருக்கும்..”



“இப்போ எனக்கும் எல்லாமே தெரிந்து விட்டது.. நீங்க என்னிக்கும் என்னைப் பிடிக்கலைன்னு சொல்லலியே?.. என்ன பார்க்கிறீங்க மாமா.. நான் சொல்ல வந்தது.. ஒரு மனைவியா உங்களுக்குப் பொருத்தமில்லைன்னு சொன்னீங்க.. மத்தபடி என்னிக்கும் நீங்க, உங்க அத்தை பெண்ணாகத்தானே பார்த்தீங்க.. எனக்கு அதற்கு உரிமை உண்டு என்று தானே சொன்னீங்க..”



“நானும் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.. இப்படிக் கல்யாணமானப் பெண் கோவிச்சிகிட்டு வெளியே போகலாமா?.. இருந்து போராடி இருக்கணும்.. இங்கேயே தங்கி சாதிச்சி காட்டி இருக்கணும்.. அந்தச் சமயத்தில் எனக்கும் உங்க மேலே கோவமாதான் இருந்தது.. போகட்டும் விடுங்க.. என்னையும் மன்னிச்சிடுங்க மாமா..”



“வது.. யூ ஆர் ரியலி கிரேட்.. இது உன் நல்ல மனசை காட்டுது.. என்னோடு தப்பையும் குறை சொல்லாமல் உன் மேலே பழி போட்டுக் கொள்கிறே பார்.. உண்மையில் நீ மனைவியா கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும்.. யாருக்கு இப்படி ஒரு மனசு வரும் சொல்லு..”



“நான் நடந்து கொண்ட விதத்துக்கு இன்னொருத்தியா இருந்தால் இத்தனை நேரம் விவாகரத்து வரை போயிருக்கும்.. நீ ரொம்ப நல்லவ வது.. உன்னை இனிமேல் என் உயிரா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்..” என ஏதோ சொல்லிக் கொண்டே போனவனை..



“போதும் மாமா.. தப்பு செய்யாத மனுஷன் யாரும் இல்லை.. ஆனாலும் செஞ்ச தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டீங்களே அப்பவே நீங்க உயர்திட்டீங்க.. எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு.. எனக்கு இதுவே போதும் மாமா.. இதுக்கு மேல நீங்கள் உங்களையே வருத்திக்காதீங்க..



“ஆனா ஒண்ணு மாமா.. முதல்ல.. சத்யாவை நல்லபடியா வாழ வைக்கணும்.. பாவம் அவள்.. உங்க மேல ரொம்ப ஆசை வைச்சிருந்தா.. நான் நடுவில நந்தி மாதிரி வந்து உங்கள் வாழ்க்கையைக் கெடுத்து.”.



“யெஸ் வேதா.. ஐ நோ.. சத்யாவுக்கு என் மேல் விருப்பம் இருந்திருக்கலாம்.. எனக்கும் அவளை அப்போ பிடித்தது.. ஷ்.. உடனே உன் முகம் மாறுது பார்த்தியா?.. இரு நான்.. பேசி விடுகிறேன்..”



“அன்னிக்கு அவ கட்டி பிடிச்சி முத்தம் வைச்ச உடனேயே அடிச்சியே.. அன்னிக்கே என் மனசு எனக்குப் புரிஞ்சி போச்சு..”



“என்ன அப்படி முழிச்சி பார்க்கிறே?.. சட்டுன்னு நீ அடிச்சவுடன் எனக்குக் கோபம் வந்தாலும், அந்தச் சமயத்தில் சத்யா உன்னை அடிக்கக் கையை உயர்தினப்போ கதிர் மச்சான் அவ கையைப் பிடிச்சாரே”



“சத்யா.. என்னை முத்தமிட்டதை அவர் பார்த்திருக்கணும் என்று தோன்றியது.. நீ அவளை அடிச்சி உன் எதிர்ப்பைக் காட்டினே.. அவரோ அவளைப் பொருத்துக் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டதாக எனக்குப் பட்டது..”



“என்னிக்குமே நான் உனக்குத் துரோகம் செய்ய நினைக்கலை.. எப்போ நமக்குள் கல்யாணம் ஆச்சோ.. அப்பவே என் வாழ்க்கையில் சத்யா இல்லை என்று தெரிந்து விட்டது.. ஆனாலும் உன்னையும் ஏத்துக்கப் பிடிக்காமல் எதையோ செய்து விட்டேன்..”



“அப்போ.. அன்னிக்கே அவளைக் கண்டிச்சிருக்கலாமில்லே.. அவ உங்களை முத்தமிட்டான்னு மகிழ்ச்சியா இல்லை இருந்தீங்க?..” அவன் வருந்துவது பிடிக்காமல் பேச்சை மாற்ற எண்ணியவள் முடியாமல் மீண்டும் அதைப் பற்றியே பேசினாள்.



“போடி.. லூசு.. நீ நினைக்கிறா மாதிரி அவ இல்லை.. அவளுக்குப் பிடிக்கலைன்னா அப்படியே ஒதுக்கி தள்ளிடுவா.. அவளும் என்னைப் போலத்தான் கொஞ்சம் ஸ்ட்ராங்க் பெர்சனாலிட்டி.. அவளா இப்போ உணர்ந்து கொண்டிருப்பா.. இத்தனை நாளில் அவ சரியாகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை..” என்றவன்..



“வேதா.. என்னை நீ மன்னிச்சாலும்.. கொஞ்சம் நாள் காத்திருக்கணும்.. நீ கேட்டியே சத்யாவுக்கு என்ன பதில் என்று.. நான் உன்னைப் புரிஞ்சிட்ட்து போல, அவளும் என்னை மாதிரி கதிரை புரிந்து கொண்டு வாழ தொடங்கணும்.. அதுவரை..”



“மாமா.. நானும் அதைத்தான் உங்க்கிட்ட சொல்ல நினைச்சேன்.. கதிர் மாமாவும் நல்லவர்தான்.. சத்யாவை புரிந்து கொள்வார்… ஆனால் சத்யா என்ன நினைக்கிறாளோ?..”



“அவ நினைக்கிரது இருக்கட்டும்.. இனி நீ என்னை மட்டும் நினைம்மா.. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என்ற பிரகாஷ் சிரித்துக் கொண்டே அவளைத் தன்னருகில் இழுத்தவன் தன் முதல் முத்திரையை அவள் நெற்றியில் பதித்தான்.. மெல்ல அவள் முகமெங்கும் முத்தமிட்டு அவளைச் சிவக்க வைத்தவன்.. அவள் கால்களில் முத்தமிட்டு நிமிற..



“ஆனாலும் மாமா.. நீங்க இப்படி இருப்பீங்கன்னு நினைக்கலை.. என் காலை பிடிச்சிட்டு.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை..” என வேதா அவனைப் பிடித்து இழுக்க..



“பின்னே.. எங்கப்பா சொன்னாரே?.. டேய் வேதா உனக்கு வேணுமின்னா அவ கையைப் பிடிப்பியோ.. இல்லை கால்களில் விழுவியோ.. போடா போய் உன் வாழ்க்கையைத் தக்க வைச்சிக்கோன்னு சொன்னாரே?..”



“உனக்குத் தான் தெரியுமே.. நான் எங்கப்பா பேச்சை மீறாதவன்னு.. இல்லைன்னா நீ எனக்கு மனைவியா கிடைச்சிருப்பியா வது டார்லிங்க்..” எனச் சிரித்தவனுடன் இணைந்து கொண்டவள்..



“அப்போ நீங்க மியாவ்வா……”



“ம்… மியாவ்…மியாவ்” எனச் சத்தமிட்டவன் தன் உதடுகளை நாக்கால் தடவி கொண்டு, மீசையை முறுக்கிக் கொண்டவன்.. தன்னருகே அவளை இழுத்துக் கொண்டான் அந்தக் கள்ளன்.



சட்டெனச் சுகமான நினைவலைகள் அறுபட.. நிமிர்ந்த வேதா பிரகாஷைப் பார்க்க.. அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..



கண்களாலேயே அவளைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தவனின் தாபத்தை அறிந்தவளுக்கு அதற்குப் பின்னால் இருந்த அவன் காதலும் புரிந்தது.. அவன் பார்வையை எதிர் கொண்டு, அவனுக்கிணையான காதலை பொழிந்தவளின் மனதிலும் நேசம் கொட்டிக் கிடந்தது..



அவர்கள் பிண்ணிப் பிணைந்த அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. எதிர்பார்ப்புகள் காத்திருந்தன.. ஆசைகள் அடங்கி இருந்தன..



“ஐ லவ் யூ வது..” என்றவனுக்கு “மீ டூ..” என வெட்கத்துடன் முணுமுணுத்து அவன் தோள் சாய்ந்தாள் பாவை அவள்.





**********************************************************


 
Top