கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 5

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 5





கதிரின் அழுத்தமான பிடியில்.. அவனை முறைத்தபடி, தன்னிச்சையாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் சத்யா.



'அஃது'.. அவன் பார்வையில் வெற்றி பெற்ற கர்வம் இருந்ததோ..



சத்யாவிற்கு கோபம் கோபமாக வந்தது.. ஏற்கனவே காரில் பாட்டியின் லொள்ளை தாங்க முடியாமல் வாய் மூடி மௌனித்தவள், வீட்டுக்குள் நுழைந்து அக்கடாவென்று எப்பொழுது இந்த மாலையையும், கசகசக்கும் பட்டுப் புடவையையும் கழட்டி எறிந்து விட்டு குளியல் போடலாம் என்று எண்ணி அவசரமாகக் காரிலிருந்து இறங்கியவளை..



பிடித்து நிறுத்தும் வகையில் அவளை ஆலம் சுற்றி வரவேற்க என்று ஐந்து நிமிடங்களைக் கடத்த வைத்து வாசலிலேயே நிறுத்தி வைத்த கோபத்தில் இருந்தவள்..



இப்பொழுது, விருப்பமில்லா கல்யாணத்தில் அவளைத் தள்ளிய அந்தக் கிழவிக்கு முக்குடைக்கும் வகையில் ‘அவர் வலது காலை’ என்று ஆரம்பிக்கும் முன்னரே வேண்டுமென்றே தன் இடக்காலை எடுத்து வைத்து, அது முடியாமல் அவன் ஒற்றை வார்த்தையில் தன்னையறியாமல் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்ததில் அவளே கடுப்பாக இருந்த போது, அவனது வெற்றிப் பார்வை அவளைக் கோபப்படுத்தியதில் எந்தவித சந்தேகமும் இல்லை.



இந்த லட்சணத்தில் அவன் வேறு அவர்கள் பணப் பெருமையைக் காட்டும் வகையில் ஒரு பவுன் காயினை எடுத்து அள்ளி வீசுகிறான்.. இவன் அப்பா என்னடாவென்றால் ஊர் முழுக்கத் தங்கள் சொத்துக்களைப் பறை சாற்றிப் பெருமிதம் கொள்ளுகிறார்..



பெரிய மகாராஜா பரம்பரைன்னு நினைப்புதான்.. இப்படிப் புதுப் பொண்டாட்டி முன்னால் அலட்டிக் கொண்டால் நான் என்ன மயங்கி விடுவேனா?.. பணத்தைப் பார்த்து மயங்குபவள் இந்தச் சத்யா அல்லவே.. என்னிடம் இல்லாத பணமா?..



அலட்சியமாக முகத்தைத் திருப்பினாள் சத்யா.



அவளது மனப்போக்கை நன்கு அறிந்திருந்த கதிர் அவளைக் கண்டு கொள்ளாமல் தன் அப்பத்தாவை அடுத்து என்ன என்று பார்க்க..



அவன் பார்வையின் பொருளை உணர்ந்த கண்ணாத்தா.. ஒத்தை வார்த்தையில் தன் பொண்டாட்டியை அடக்கிய தன் பேரனை மெச்சிக் கொண்டார்.



அவர் அறியாதவரா என்ன??.. பேரன் மனைவியை அந்தத் திருமண மண்டபத்தில் முதன் முதலாக நுழைந்த போதே பார்த்தவராயிற்றே?.. ஒரு வித அலட்சியத்துடன் தன் பேரனை அவள் சீண்டுவதைக் கண்டு கொண்டவர்.. அங்கே வாய் மூடி மௌனித்தார்..



அப்பொழுதே அவளை ரெண்டு வார்த்தை கேட்டிருப்பார்.. தேவையில்லாமல் பட்டிணத்துப் பெண்ணை.. அதுவும் அவள் யார் என்று அறிந்து கொண்டபின், அவளைச் சின்னப் பெண்.. போகட்டும்.. அவமானப் படுத்தித் தான் தரமிறங்கி வாதாட வேண்டாம் என்று விட்டு வைத்தவர்..



எதிர்பாராத விதமாக அவளே தன் பேரன் மனைவி என்று ஆனப்பின் இனி அவளைத் தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவளாக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்..



என்னதான் இருந்தாலும்.. படித்த பட்டிணத்துப் பெண்.. தன் தந்தையின் ஒற்றைப் பார்வையில் தலை குனிந்து தன் பேரனை மணக்கச் சம்மதித்ததே அவருக்குப் பெரும் சந்தோஷமாக, அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.



காரில் பேரனையும், தன்னையும் அவள் சீண்டிய போது கூட அதை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார்.. போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்தவர்.. இப்பொழுது ஏட்டிக்குப் போட்டியாக அவள் நடக்க முயன்ற போது.. பேரன் சொன்னதுக்கு அவள் பணிந்து போனதைக் கண்டவர் இனி அவன் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதி அடைந்தார்.



இல்லையென்றால் இந்தக் கண்ணாத்தா விட்டுவிடுவாளா எண்ண.. 'நோக நொங்கெடுத்துட மாட்டேன்.. யாருகிட்ட..'



"ஆத்தா.. என்னாச்சு.. இப்படிச் சமைஞ்சி போய் நிக்கறே??.. மவனும், மருமவளும் உள்ளே போயாச்சு.. மருவளோட அம்மா, அப்பா எல்லாம் வந்தாச்சு.. அவங்களை வாங்கன்னு வாயார கூப்பிடாம என்ன கனவு காணுறீயா?.."



தன் மகன் சக்திவேலின் குரலில் நிகழ்வுக்கு வந்தார் கண்ணாத்தா.



அப்பொழுதுதான் அனைவரும் உள்ளே நுழைந்து நடு முற்றத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டவர்.. தன் எண்ணப் போக்கை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டவர்..,



"ஹாங்க்.. காடு வாவாங்குது.. வீடு போபோங்குது.. ஆற வயசுக்கு எனக்குக் கனவு ஒண்ணுதான் பாக்கி.. ஏலேய் சக்தி.. இன்னும் என்னவே எல்லா நான் சொல்லணும்னு எதிர்பார்க்கிறவன்.. உனக்கு மருமவளும் வந்தாச்சு.. வந்தவங்களை வாய் நிறைய வாங்கன்னு சொல்ல மாட்டிகளோ?.. இதுக்கும் இந்த ஆத்தாதான் வரணுமோ?.. என்ன புள்ளையோ?.." என்று நொடித்துக் கொண்ட கண்ணாத்தா,



"வாம்மா தாயி.. வாப்பா ராஜ்குமாரு.. பொண்ணைக் கட்டி கொடுத்திட்ட.. வாப்பா.. நல்லா நம்ம வீட்டை சுத்தி பாரு.. நம்ம நிலம், நீச்சு, காடு கழனி எல்லாம் சுத்தி பொறவு பாரு.. நம்ம வீட்டுல ஒரு வாரமாவது தங்கிடணும் சொல்லிட்டேன்.. நல்லா விருந்து சமைச்சி போட சொல்லுறேன்.. சந்தோஷமா, இந்த வீட்டு மருமவளை.. என் பேத்தியை ஒப்படைச்சிட்டு போவணும்..”



"எதுக்குச் சொல்லுறேன்னா.. திடீர்ன்னு இந்தக் கல்லாணம் நிச்சயமாகிப் போச்சு.. பேச்சோடு பேச்சா இல்லாம.. குமரேசு ஏதோ சொல்லப் போக.. அந்த ஒத்த வார்த்தைக்கு மதிப்பளிச்சு உன் பொண்ணை என் பேரனுக்கு முடிச்சிட்டே.. யாருக்கப்பா இப்பேர்பட்ட மனசு வரும்..”



"என்ன தான் இருந்தாலும், பட்டிணத்து பொண்ணு.. படிச்சவ.. இந்தச் சின்ன டவுனுல குப்ப கொட்ட நீ சம்மதிச்சது பெரிய விஷயமில்லையா?.. உனக்குப் பெரிய மனசுப்பா..



"அதுக்குத்தான் சொல்லுறேன்.. இருந்து தங்கிட்டு உம்ம பொண்ணு புகுந்திருக்க வீட்டை பத்தி, தெரிஞ்சிட்டு.. அவ வாழப் போற வாழ்க்கையும் பார்த்திட்டுச் சந்தோஷமா போவணும்.. என்னதான் இருந்தாலும் பொண்ணைப் பெத்தவன்.. முன்னே பின்னே தெரியாமல் கட்டி கொடுத்தியே.."



கண்ணாத்தா தன் பாணியில் பேசிக் கொண்டு போக..



அதற்குள் ரேவதி முந்திக் கொண்டார்.



"பெரியம்மா.."



"அம்மாடி ரேவதி.. பெரியாத்தான்னே சொல்லு.. இல்லே என் மவன் சத்தி மாதிரி ஆத்தான்னாலும் சரி.. இல்லை என் பேரன் மாதிரி நீயும் அப்பத்தான்னு சொன்னாலும் எனக்கு டபுள் ஓ.கே தான்.."



"வாவ் பாட்டி இங்கிலிஷ்.." அத்தனை நேரமாகக் கண்ணாத்தா பேசியதை கேட்டுக் கொண்டிருந்த கேட்ட சத்யா இடையிட..



"என்னடி என் பேரனோட பொண்டாட்டி.. என்னைய என்ன நினைச்சே?.. எனக்கும் நாலு வார்த்தை இங்கிலீசு பேச வரும்.. நீ போகப் போகப் புரிஞ்சிப்பே.. நான் என் பேராண்டி மாதிரி இங்கிலீசுன்னா காத துரம் ஓடறவ இல்லை.. அண்டருஸ்டாண்டு.."



"அப்பத்தா.. நீயே என் மானத்தை வாங்குறீயே.." என்று பல்லை கடித்த கதிர்.. "அது அண்டர்ஸ்டாண்ட்" என ஸ்டையிலாகச் சொன்னான்.



"இல்லைடா.. எதோ ஒரு ஸ்டாண்டு.. சைக்கிள் ஸ்டாண்டு.. விடுவியா.."



ரேவதி வாய் விட்டுச் சிரிக்க.. ராஜ்குமார் நிம்மதி அடைந்தார்.



தன் மகள் நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டிருப்பதைக் கண்டவர்.. இனி அவள் எல்லாவற்றையும் சரிபடுத்திக் கொள்வார் என்று நம்பிக்கை அடைந்தார்..



வரும் வழியிலேயே காரோட்டி சொன்ன அவர்களது சொத்து பத்து விவரங்களும், பிரம்மாண்டமான அவர்களது வீடும், அத்துடன் வெள்ளை மனதுடன் இருக்கும் கண்ணாத்தாவையும், ஏற்கனவே அவருடைய நண்பரான சக்திவேலையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் இருந்தது.. தன் முடிவு சரி என்றே இருந்தது.. இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டார்.



ரேவதிக்கும் அதே எண்ணமே.. முதலில் தன் கணவன் மேல் கோபம் இருந்தாலும், திருமணம் என்று மகளுக்கு ஆன பின்னால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்போக்கில் இருந்தவள்.. இப்பொழுது கண்ணாத்தா பாட்டியின் அன்பான வரவேற்பிலும், பேச்சிலும் கவர்ந்திழுக்கப்பட்டவள்.. தன் மகளுக்கு இந்தக் குடும்பம் பொருத்தமே என்று மகிழ்ந்து போனார்.



சத்யாவுக்குத்தான் கடுப்பாக இருந்தது.. 'அய்யோ சாமி.. என்ன குடும்பமடா.. ஒத்தை வார்த்தை இங்கிலிஷுக்கே இப்படிப் பூரிச்சி போறாங்களே..'



"அம்மாடி.. சத்யா.. போம்மா போய் விளக்கேத்தி சாமி கும்பிடு.. உங்கம்மாவை கூப்பிட்டுப் போய்ச் சொல்லிக் கொடுக்கச் சொல்லும்மா.. என் மருமவ இப்போ இருந்தா எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பா தெரியுமா?.. அவளுக்குத்தான் கொடுப்பினை இல்லையே.. கதிரு.. போப்பா.. புள்ளைக்குச் சாமி ரூமை காட்டுவியாம்.." கண்ணாத்தா எடுத்துக் கொடுக்க..



தன் அப்பத்தாவின் சொல்லை அப்படியே பின் பற்றினான் கதிர்வேல்.



சத்யாவின் கையைப் பிடித்தவன், அவள் உதறுவதைப் பொருட்படுத்தாமல் தங்கள் வீட்டு பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றான்.



பின்னர் சத்யாவின் தாயார் சொன்னபடி, சாமி விளக்கேற்றி அங்கே குடி கொண்டிருந்த தெய்வ படங்களுக்குப் பூப்போட்டு, சாமிப் படங்களோடு கீழே வீற்றிருந்த தெய்வமாகி விட்ட கதிர்வேலின் அன்னையின் படத்திற்கும் பூப்போட்டு இருவரும் வணங்கி எழுந்தனர்.



வெளியே வந்தவர்களை விடாமல் கண்ணாத்தா பிடித்து அந்தப் பெரிய முற்றம் .. அதுதான் அவர்கள் வீட்டு வரவேற்பறை.. அங்கிருந்த பிரமாண்டமான சோபாவில் அமர வைத்தார்.



சத்யாவுக்கோ.. பரவாயில்லை வில்லேஜ்ஜுன்னாலும், நல்ல ரிச்சான பர்னிச்சர்தான் இருக்கு.. நல்ல ராஜா கால பாணியிலான அந்த நாற்காலிகள் அவள் கண்ணைக் கவர்ந்தது.. நம்ம வீட்டுல கூட இத்தனை லுக் இல்லை என்று சற்று மெச்சத் தோன்றியது.



"அடியே.. எழிலு.. பாலும் பழமும் ரெடியா.. ஜல்தியா எடுதிட்டு வா.." கண்ணாத்தா அதட்டல் போட..



அதற்குள்ளாகவே அந்த வீட்டின் சமையலாள் எழிலரசி ஒரு பெரிய தாம்பாளத்தில் ஒரு சின்னச் சைஸ் குடம் அளவிலான சொம்பில் பாலும், ஒரு டஜன் வாழைப்பழமும் எடுத்து வந்தாள்.. அத்தோடு பெரிய சைஸ் லோட்டா ஒன்றும் உடன் வந்தது.



"பேராண்டி.. முதல்ல கொஞ்சம் பாலை குடிச்சிட்டு பேத்திக்கும் கொடுப்பியாம்.. அப்படியே வாழைப்பழத்தையும் கொடுத்திடு.."



தலையாட்டிய கதிரோ அந்தப் பெரிய சைஸ் சொம்போடு பாலை எடுக்க..



"அய்யோ.. இவ்வளவு பெரிய சொம்பா.." என வாயைப் பிளக்க.. அவள் பிளந்த வாயப் பார்த்தவன் சிரித்தபடி அப்படியே சொம்போடு பாலை தன் வாயில் கவிழ்த்துக் கொண்டான்.



அருவருப்பில் முகம் சுளித்த சத்யாவை பார்த்தவன்.. என்ன தோன்றியதோ அந்தத் தாம்பாளத்தில் இருந்த பெரிய லோட்டாவை எடுத்து பாலை நிரப்பிக் கொடுத்தான்.



"எச்சில்.." என முணுமுணுத்தவளைக் கண்டுகொள்ளாமல் "உம்.." என லேசாக உருமி அவள் வாயருகே கொண்டு போக..



வேறு வழியில்லாமல் நாசூக்காகக் கொஞ்சம் பாலை தூக்கிக் குடித்து விட்டு மிகுதியை அவனிடமே கொடுத்து விட்டாள்..



கதிரோ அவள் கொடுத்த மிகுதி பாலை கண்டு கொள்ளாமல் ஒரு மடக்கில் சர்ரென்று லோட்டாவிலிருந்து உறிஞ்சிக் குடித்திருக்க..



'எருமை மாடு கழனி பானையில தலையை விட்டா போல.. ச்சீ..’ முகம் சுளித்தாள் சத்யா.



"பேராண்டி.. அந்த மிச்ச பாலையும் குடிச்சிட்டுப் பழத்தை பேத்திக்குக் கொஞ்சம் கொடுப்பியாம்.." செல்லம் கொஞ்சிய கண்ணாத்தா கிழவியை வெட்டிப் போடலாமா என்று தோன்றி விட்டது சத்யாவிற்கு.



"அதுக்கென்ன அப்பத்தா.." என்றபடி அப்படியே சொம்பை வாயில் கவிழ்த்தவனை என்ன செய்யலாம் என்று புரியவில்லை சத்யாவிற்கு.



போத்தாதற்கு இரண்டு பெரிய சைஸ் வாழைப்பழங்களைப் பிய்த்தவன், அப்படியே பிரித்து ஒன்றை தன் வாயில் போட்டுக் கொண்டு.. அடுத்ததைப் பிரித்துக் கால் பழத்தை அவள் வாயில் சட்டென்று போட்டு விட்டு மிகுதியை அவன் வாயில் அடக்கிக் கொண்டான்.



சத்யாவுக்கு வெறுத்தே போனது.. தன் தந்தையைத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஆயாசமாக வந்தது.. இந்த நிலைக்கு என்னைத் தள்ளி விட்டீர்களே என அவள் பார்வை குற்றம் சாட்டியது.. அவரோ முகத்தைத் திருப்பிக் கொள்ள.. தன் தாயை பார்த்தாள் சத்யா.



ராஜ்குமாருக்கும் கதிர்வேலின் செயல்கள் சற்று சங்கடமாக இருந்தாலும், கிராமத்து மக்களின் வெள்ளந்தியான போக்கை அறிந்திருந்திருந்தவர் மகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்.



ரேவதிக்கோ நாசூக்காக வாழ்ந்து பழகிய தன் மகளுக்கு இவன் பொருந்துவானா என்ற கவலை மீண்டும் பிடித்துக் கொண்டது.. காசு, பணம் இருந்தாலும் அதற்கேற்ற நாகரீகம் இவர்களுக்கு இல்லையோ?.. என முதல் முறையாக அச்சம் தோன்றியது.. தன் கணவரிடம் பிடிவாதம் பிடித்து இந்தத் திருமணத்தை நிறுத்தி இருக்கலாமோ என்று எண்ணமும் தோன்றியது.



பொறுத்துக் கொள் என்று மகளுக்கு விழிகளாலேயே சமாதானம் செய்தார் ரேவதி.



"பாட்டி.. நீங்க சொன்னபடி பூப்போட்டாச்சு.. விளக்கும் ஏத்தியாச்சு.. லோட்டா பாலும் குடிச்சாச்சு.. இனி மேலாவது நான் எங்க ரூமுக்கு போகலாமா?.." சத்யா வெறுத்துப் போய்க் கேட்டாள்.. அவளுக்கு இந்தப் பார்மாலிடீஸ் எல்லாம் அலுப்பாக இருந்தது..



நிச்சயம் அவளது அன்னையும், தந்தையும் உதவப் போவதில்லை என்று ஆன பின்னால் நேரடியாகத் தன் கணவன் குடும்பத்தவருடன் பேசத் தொடங்கினாள் சத்யா.



"ஆத்தி.. பேத்திக்கு அவசரத்தை பாரு.. ராசாத்தி எல்லாத்திக்கும் நேரம் காலம் வரணுமுடா.. இப்போ போய் உன் ரூம்ல சித்த உறங்கி எழுந்து வா.. இராத்திரிக்கு முறைப்படி என் பேரன் ரூமுக்கு அனுப்பி வைப்போம்.." தன் முகவாய்பட்டையைத் தோளில் இடித்துபடி சொன்ன கண்ணாத்தாவை பார்த்து..



கொல்லென அங்கிருந்த கூட்டம் சிரித்து வைக்க.. கதிரும் அவர்களோடு இணைந்து அடக்க முடியாமல் சிரித்தான்.



அவனை முறைத்தாள் சத்யா.. சட்டென வாயை மூடிக் கொண்டு, ஒன்றும் அறியா பிள்ளை போலப் பாவமாக அவளைப் பார்த்தான் கதிர்.



"பாட்டி...." எனப் பல்லைக் கடித்தாள் சத்யா..



"ஏய் எல்லோரும் அடங்குகடி.. புள்ளையைப் பார்த்து இப்படியா சிரிச்சி வைப்பீங்க.. அது சின்னப் பொண்ணு.. யதார்த்தமா சொல்லிடிச்சு.. அம்மாடி சத்யா.. கீழே உங்க எல்லோருக்கும் அறை தயாரா இருக்கு.. உன் அம்மாவோட போம்மா.. எழிலு எல்லாம் காட்டுவா.." என்றவர்..



"அத்தோட இனிமே உனக்கும் நான் அப்பத்தா தான்.. பாட்டியாவது பூட்டியாவது.. என் பேரன் பொஞ்சாதி என்னை அப்பத்தான்னு வாய் நிறைய அழைச்சாதான் எனக்குப் பெருமை.." என்று அவளை உச்சி முகர..



அதற்கு மேல் வாயைக் கொடுத்து வம்பு வளர்க்க பையித்தியமா என்ன சத்யாவுக்கு..



யாருக்கும் காத்திராமல் இரவுப் பொழுதும் வந்தது.. கிராமத்து முறையில் நல்ல விருந்தும் படைக்கப்பட்டு.. சத்யாவை அந்த இரவுக்காகத் தயார் படுத்தினர்.



பெரியவர்கள் சொன்ன அதிகப்படியான அறிவுரைகளைச் செவி மடுக்காமல் தன் விதியை நொந்தபடி தாய் கையில் திணித்த பால் சொம்புடன் மாடியில் இருந்த கதிரின் அறைக்குள் நுழைந்தாள் சத்யா.



தொட்டி கட்டி வீடான அந்த வீட்டு மாடியில் கதிரின் அறை இருந்தது.



உள்ளே நுழைந்த சத்யா முதலில் திகைத்தாள்.



சினிமாக்களில் காணப்படும் முதலிரவு அறைகள் போல ரோஜாவும், மல்லியினாலும் ஜோடிக்கப் பட்டு கம்மென்ற நறுமணத்துடன் திகழ்ந்தது.. இதெல்லாம் போதாதென்று அறையில் ரூம் ஸ்பேரயரின் மணம் வேறு கமழ்ந்து கொண்டிருந்தது..



அந்தப் பெரிய அறையில் ஆறு பேர் படுத்து உருளக் கூடிய அளவில் தேக்கு மரக் கட்டில் பிரத்யேகமான மலர் அலங்காரங்களுடன் வீற்றிருக்க.. அதனருகில் சின்ன டேபிளில் பழங்களும், ஸ்வீட் வகையறாக்களும் அடிக்கி வைக்கப் பட்டிருந்தது அவள் கண்ணில் பட்டது.



இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல்.. டங்கென்று பால் சொம்பை டேபிளின் மீது வைத்தாள்.



'எங்க போனான் நம்ம குண்டன்.. நாம பால் சொம்போட உள்ளே வருவேன்னு தெரியாதோ?.. ம்ம்.. இப்ப என்ன செய்யறது?.. சரி பேசாமல் படுத்துக் கொள்ளலாமா?.. ஆனால் இந்தப் புடவையைக் கட்டிட்டு எப்படித் துங்கறது?.. சரி கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணுவோம்.."



என்று நினைத்தவள் கட்டிலில் போடப் பட்டிருந்த பூக்களைச் சற்று தள்ளி விட்டு அப்படியே விஸ்ராந்தியாகப் படுத்துக் கொண்டாள்.



"ஹாய்.."



டமாலென்று எழுந்து உட்கார்ந்தாள் சத்யா.. அவன் வெண்கலத் தொண்டையில் அதிர்ந்து போனவள் நிமிர்ந்து பார்த்தாள்.



"சத்யா.. பயந்திட்டியா.." என்ற கதிரின் குரலில்..



"ஓ.. நீங்க இங்கே இருக்கிங்களா?.. நான் கட்டிலுக்குப் பக்கத்துல ஏதோ பீரோ நிறுத்தி வைச்சிருக்காங்கன்னு இல்லே நினைச்சேன்.. இப்படியா பயமுறுத்துவது?.." என்றாள் அலட்சியமாக.



"ம்.. லொள்ளு.. நான் இங்கே நிக்கறதே நீ பார்த்தேன்னு எனக்குத் தெரியாது பாரு?.."



உண்மையில் சத்யா அவன் ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தாள் தான்.. வேண்டுமென்றே அலட்சியமாக கட்டிலில் படுத்துக் கொண்டாள்.. அதை ஒப்புக் கொள்ள இப்போ மனமில்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



அவள் முகத் திருப்பலை கண்டவன்.. ஒன்றும் சொல்லாமல் கட்டிலில் அவளருகே சென்று அமர்ந்தான்.



சடக்கென்று எழுந்து விட்டாள் சத்யா..



'என்னாச்சு..' பார்வையால் வினவியவனுக்கு..



"இல்லே.. பயமா இருந்திச்சு.. கட்டில் உடைஞ்சிட்டா.. அதான் எதுக்கும் முன் ஜாக்கிரத்தையா எழுந்திட்டேன்.."



"ஏய்.. உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே.. நானும் போனாப் போகுது சின்னப் பொண்ணுன்னு பார்த்தா.. விட்டா பேசிட்டே போறே??.. உனக்கு இன்னிக்கு என்ன நாளுன்னு எதுவும் சொல்லிக் கொடுத்து அனுப்பலியா பெரியவங்க??.." என்றான் கோபமாக.



உ ..ம்.." அவனை ஏற இறங்கப் பார்த்தவள் அவன் சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்துதான் இருந்தாள்.. ஆனாலும் கண்டு கொள்ளாமல்,



"ம்.. எங்கம்மா எதுவும் எனக்குச் சொல்லலை.. ஆனா உங்கள் அப்பத்தா போன உடனே உன் கையில் இந்தப் பால் சொம்பை கொடுக்கச் சொல்லிச்சு.. காலையில கொடுத்த அளவு இப்ப இல்லைன்னாலும் இதுவும் கொஞ்சம் பெரிய சைஸ் சொம்புதான்.. அதனால அப்படியே நல்லா உறிஞ்சி குடிச்சிட்டு, அதோ அங்கே வைச்சிருக்கற ஸ்வீட்டு, பழங்கள் எல்லாத்தையும் ஒரு மொக்கு மொக்கிட்டு அப்படியே கவுந்தடிச்சி குப்பற படித்துத் தூங்குவியாம்.. இதான் உங்க அப்பத்தா எனக்கு ரகசியமா சொல்லிச்சு.."



அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்புதான்.. எருமைமாடு மாதிரி கழனி தண்ணியில் விழுந்து புரளுகிறதென்று சொல்லிட்டு அப்புறம் யார் இந்தக் குண்டனிடம் வாங்கிக் கட்டுக் கொள்வது..



அத்தோடு அவன் அப்பத்தா வேறு அறிவுரை என்ற பேரில் 'பேராண்டியோடு சந்தோஷமா இருந்திட்டு அடுத்தப் பத்தாவது மாசத்தில கையில குழந்தையோடு நிக்கணும்..' சொன்னதை அவள் இப்பொழுது எடுத்துச் சொன்னால் அவள் சட்டினிதான்.



அவள் ஒன்றும் அறியாத பாப்பா இல்லையே.. கல்யாணம் ஆனவர்கள் முதலிரவு அறையில் என்ன செய்வார்கள் என்று தெரியாமல் இருக்க..



"ஏய்.. என்ன கொழுப்பாடி.. அப்படியே ஓங்கி மிதிச்சேன்.. நீ சட்டினி தான்.." என்ற கதிர் ஆத்திரம் மிக..,



"எங்கப்பத்தாவை பத்தி தெரியாம வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கட்டிக்காதே.. கொஞ்சம் நாக்கை அடக்கிப் பேசு.. அப்பத்தா உன் குடலை உருவி மாலை போட்டுடும்.." என்றான்.



பக்கெனச் சிரித்தாள் சத்யா.. அவளும் அதையே தானே நினைத்தாள் சற்று முன்.. பரவாயில்லை.. உருவ ஒற்றுமை இல்லையென்றாலும் ஒரு மாதிரி சிந்தனை இருக்கே..



'அடச்சே.. ஒரு சட்டினின்னு சொன்னதுக்கே இப்படியா?.. என்னமோ அதுக்குள்ள ரெண்டு பேர் தாட்ஸும் ஒரே லைன்லா இருக்குன்னு மெச்சிக்கிறேன்.. அடங்கு சத்யா அடங்கு.. முதல்ல அவனை அடக்கி ஒடுக்கி மூலையில உட்கார வை.. இல்லைன்னா உன்னைக் கைமா பண்ணி.. தொட்டுக்குவான்..'



"சே.. என்ன இது ஒரே குக்கிங்க் டைப்ல யோசிக்கிறோம்..' தன்னை அடக்கிக் கொண்டு..



"உ ம்.. பண்ணூவாங்க பண்ணுவாங்க.. நாங்க வாயை மூடிட்டு வாங்கிக் கட்டிப்போம் பாரு.. அதெல்லாம் இந்தச் சத்யா கிட்ட நடக்காது மிஸ்டர்.. பார்த்திட்டே இருங்க யார் யார் வாயை அடக்கி.. குடலை உருவி மாலை போட்டுக்கப் போறாங்கன்னு.. ரொம்ப லொள்ளு பண்ணுது.. கொஞ்சம் சொல்லி வைங்க.. நம்ம டைப்பே வேற..



"காலையில என்னடான்னா ரூமுக்கு போகவான்னு கேட்டா.. என்னவோ உங்களோட ஜோடி போட்டுட்டு உங்க ரூமுக்கு நான் பர்ஸ்ட் நைட் கொண்டாட நான் பறக்கர மாதிரி கேலி பண்ணி ஜோக் அடிக்குது.. இந்தச் சத்யா எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டா.. அவங்க கிட்ட சொல்லிடுங்க.. என் லைன்ன கிராஸ் பண்ண வேண்டாம்ன்னு.."



சத்யா படபடக்க..



ஹா ஹா வென அதிரடியாகச் சிரித்தான் கதிர்.



அவனை வினோதமாகப் பார்த்தவள்.. "ஹலோ கதிர்.. ஸ்டாப் இட்..முதல்ல உங்க சிரிப்பை நிறுத்துறீங்களா.. இந்தக் கட்டடமே இடிஞ்சி விழுந்தாலும் அதிசயமில்லே.."



அவள் அதட்டலில் சிரிப்பை நிறுத்தியவன்..



"ஹா ஹா.."என மீண்டும் சிரித்தான்..



முறைத்த அவளைக் கண்டு கொள்ளாமல் அவனாகவே சிரிப்பை நிறுத்தி விட்டு.. "நீ எங்க அப்பத்தாவை.. மாலையா போட்டுப்பே.. நல்ல ஜோக்குதான்.. அது யாருன்னு உனக்கு இன்னும் தெரியலை.." என்றவன்,



"அது சரி.. நீ நல்ல படிச்ச பொண்ணுன்னு நினைச்சேன்.. கடைசில நீயும் பக்கா லோக்கல்ன்னு பேசி ப்ரூவ் பண்ணுறே?.. எதுக்கும் பார்த்து நடந்துக்கோ பாப்பா.."



"பாப்பாவா?.." முகத்தைச் சுளித்தாள் சத்யா.



"பின்னே.. பீப்பாவா.. அது வேணா உன் பாஷையில நான்னு சொல்லலாம்.. என்ன பொருத்த வரைக்கும் நீ சின்னப் பாப்பா மாதிரிதான் இருக்கே.. அழகான சின்னப் பாப்பா.. ஆனா இப்போ மலர்ந்து நிற்கிற பெரிய பாப்பா.."



தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது சத்யாவிற்கு.. அவனவன் பொண்டாட்டியை பூவே.. மணியே.. கண்ணே.. ரோஜா மலரேன்னு வர்ணிப்பான்.. இவன் என்னடாவென்றால் பாப்பா.. பீப்பான்னு.. இதில சின்னப் பாப்பாவாம்.. பெரிய பாப்பாவாம்.."



"உங்க அப்பத்தாவோடு சேர்ந்து நிறைய டிவி சீரியல் பார்ப்பீங்களோ?.." நிதானமாகக் கேட்டாள்.



"இல்லையே.. அதுக்கெல்லாம் எனக்கெங்கே நேரம் இருக்கு.. நமக்கு வயலு, வரப்பு, நம்ம ரைஸ் மில்லு, பாக்ட்டரி இப்படிப் பார்க்கறதுக்கே நேரம் பத்தலையாம்.. இதுல டிவியாவது சீரியலாவது.."



புரியாமல் பார்த்தான் கதிர்.. எதுக்கு டிவியைப் பத்தி இப்போ கேக்குறா??..



பராவாயில்லை அந்த மட்டும் தப்பித்தோம்.. இன்னும் இங்கே டிவி மோகம் வரலைப் போலும் என்று எண்ணியவள் தலையில் குண்டை தூக்கிப் போட்டான் கதிர்.



"ஆனா எங்க அப்பத்தா காலையிலிருந்து ராத்திரி படுக்கிற வரை நிறைய சீரியல் பார்க்கும்.. ஏன் நீயும் பார்ப்பியோ.. அதுக்குத்தான் கேட்டியா?.."



இல்லை என்று தலையாட்டினாள்.. தன் தலைவிதியை நொந்தபடி.. இவனிடம் போய்ப் பேச்சை எடுத்தோமே என்று..



"சரி.. அப்புறம்.. நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு.. நீ விரும்பியோ, விரும்பாமலோ என்னை மணந்துக்க வேண்டியதா போச்சு.. இனி.. இந்தச் சூழலுக்கு ஏத்தபடி உன்னைப் பழக்கிக்கோ.. உனக்கு என்ன வேணுமோ என்னைக் கேளு.. நான் ஏற்பாடு பண்ணித் தாரேன்.."



அவனுக்கு அவளிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை.. பொதுப்படையாகப் பேச்சை துவக்கினான் கதிர்.



"எப்படி.. என்னை மாத்திட்டு அதுக்கப்புறம்.. உனக்கேத்தா மாதிரி உன்னோட குடும்பம் நடத்தி புள்ள குட்டி பெறணுமா?.." ஒரு மாதிரியாகச் சத்யா கேட்க..



அவள் குரலின் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாத கதிரோ..



"அதானே உலக வழக்கம்.. கல்யாணம்.. அடுத்து புள்ளை குட்டி.. இதுல என்ன இருக்கு.." வெள்ளந்தியாகச் சொன்னான் கதிர்.



"ஹலோ.. அதுக்கு வேறு ஆளை பாருங்க மிஸ்டர்.. நமக்குக் கல்யாணம் ஆச்சுன்னு உடனே உங்களோடு கட்டில புரளணுமோ?.. இதுல புள்ள குட்டி வேற?.. இதுக்கெல்லாம் நீங்க அந்த வேதாவை கல்யாணம் பண்ணி இருக்கணும்.. இந்தச் சத்யா சரிபட்டு வர மாட்டா.. தெரிஞ்சிக்கங்க.."



சட்டென அங்கே அமைதி சூழ்ந்தது..



அத்தனை நேரமாக ஏதோ பொழுதை கடத்த பேசிக் கொண்டிருந்தவன்.. அவள் இந்தச் சூழ்னிலைக்குத் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்று இலகுவாகப் பேசியவன்.. இப்பொழுது சத்யா இப்படிப் பேசவும் அவனுக்கும் முணுக்கென்று கோபம் வந்தது. ஏற்கனவே கருத்த முகம் மேலும் கோபத்தில் கருக்க,



"ச்சீ.. இப்படிப் பேச வெட்கமாயில்ல உனக்கு.. பாவம் அந்தப் பொண்ணு.. உன்னோட அக்காதானே.. வேறு ஒருத்தனுக்கு மனைவியா போயிட்ட பின்னால இப்படி இணைச்சி பேசுவியா?.. என்ன பொண்ணு நீ.. இதான் நீ படிச்ச பட்டிணத்து நாகரீகமோ?.. இதை நான் உன் கிட்ட எதிர்பார்க்கலை சத்யா.." பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான் கதிர்.



சத்யாவிற்குமே தான் சொன்னது அப்பொழுதுதான் உரைத்தது.. அவள் பேசியது இப்பொழுது அதிகப்படிதான்.. நேரடியாக அவனிடம் தன் விருப்பம் இல்லாமையைச் சொல்லி இருக்கலாம்.. அதை விட்டு விட்டுத் தேவையில்லாமல் தன் அக்கா வேதாவை இதில் இழுத்து..



பாவம் அவள் மட்டும் என்ன செய்வாள்?.. காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவளை அப்படிப் பேச வைத்து விட்டது.. பிரகாஷுடன் சின்ன வயதிலிருந்தே அவளை இணைத்துப் பேசிவிட்டு, இப்படித் திடீரென மாப்பிள்ளையை மாற்றினால்..



இன்று பிரகாஷ் இருக்க வேண்டிய இடத்தில் இப்பொழுது கதிரை வைத்ததால்.. தாள முடியாமல்.. தன்னையறியாமல் வாயை விட்டாள்.



"உங்களுக்கு எதுக்கு அப்படிக் கோபம் வருது?.. இந்தக் கல்யாணத்துக்கு முன்னால அவளோட கடலை போட்டவர் தானே நீங்கள்?.. ஒழுங்கா தைரியமா அவளைக் கல்யாணம் பண்ணறதை விட்டுட்டு.. எதையோ குழப்பி.. அவளைக் கோட்டை விட்டுட்டு.. இப்போ என்னோடு வாழ நினைச்சா..



"நீங்க சரியா சண்டை போட்டு வேதாவை சரிகட்டி இருந்தா.. நான் நிம்மதியா பிரகாஷை கல்யாணம் பண்ணி என்னோட வாழ்க்கையைத் தொடங்கி இருப்பேன்.. எல்லத்துக்கும் நீங்க தான் காரணம்.. உங்களோட கோழைத்தனம் தான் காரணம்.. யூ ஆர் எ கவர்ட்.. சீட்.. வேதாவை ஏமாத்திட்டீங்க.. காலையிலிருந்தே உங்க பிஹேவியர் சரியில்லை.. வேணும்ன்னு எங்கிட்ட வம்பிழுத்தீங்க.. இதெல்லாம் ப்ளான் பண்ணீங்களான்னு எனக்குச் சந்தேகம் கூட இப்ப வருது.."



"ஏய்.. நிறுத்து.. என்ன விட்டா பேசிட்டே போறே.. இங்க பாரு சின்னப் பொண்ணுன்னு நான் பேசாம இருந்தா பேசிட்டே போவியோ??.." என்றவன்..



"நான் ஓண்ணும் யாரையும் ஆசைக் காட்டி மோசம் பண்ணலை.. எங்க அப்பத்தாவுக்கு வேதாவை எனக்குக் கட்டணும் ஆசைதான்.. சொந்தம் விட்டு போகக்கூடாதுன்னு பேசினாங்க.. அவங்க அப்பாவுக்கு இஷ்டமில்லைன்னா அதுக்கு நாங்க என்ன பண்ணறது?.. தேவையில்லாம அடுத்த வீட்டுக்கு வாழ போன பொண்ணை வம்புக்கு இழுக்காதே..



“உனக்கே இது ஓவரா இல்லை.. நான் ப்ளான் பண்ணி உன்னைக் கட்டினேனா?.. விட்டா வேதா கல்யாணத்தை நானே நிறுத்தினேன்னு கூட நீ சொல்லுவே?.. உன்னைப் பிரகாஷ்கிட்டேர்ந்து பிரிக்க இதெல்லாம் செய்தேன்னு சொன்னாலும் ஆச்சர்யமில்லை.. உன் புத்தி போகுதே?..”



“ஓ.. இப்படி ஒரு மேட்டர் இருக்கோ.. நீ இப்படிச் சொன்னத்துக்குப் பிறகு ஏன் அப்படி இருக்கக் கூடாதென்று எனக்குத் தோன்றுகிறது.. ஏன் கதிர் எதுக்கு இப்படியெல்லாம் செஞ்சே?.. எல்லாம் உண்மைதானே?..” என்ற சத்யாவை கண்ட கதிருக்கோ ஆயாசமாக வந்தது.



இந்தப் படித்த, பட்டிணத்துப் பெண்ணை மணக்க வேண்டியிருக்கே.. நமக்குச் சரி வருமா என்ற சந்தேகத்துடன் தாலி கட்டியவன்.. சரி மனைவி என்று ஆகிவிட்டாள்.. அவளுடன் தான் இனி தன் வாழ்க்கை என்ற தீர்மானத்துடன் தான் முதலிரவு அறைக்குள் வந்தான்.



ஆனால் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் சற்று வெறுத்துத்தான் போனான்.. இப்படி முன்னுக்குப் பின் முரணாய் பேசுபவளிடம் என்ன பேசுவது..



"சரி விடு.. அந்தப் பேச்சை.. இப்ப நம்ம மேட்டருக்கு வர்றேன்.. நீ என்னதான் சொல்ல வர்றே?.." என்று கேட்டான் கதிர்.



என்னோட வாழத் தயாரா என்று நேரடியாகக் கேட்க எதோ ஒன்று அவனையும் தடுத்தது..



இந்தத் திடீர் அவசர திருமணத்தில் அவள் பாதிக்கப்பட்டிருப்பதை அறியாதவனா அவன்.. மற்றவர்களுக்காக எதையும் பார்ப்பவன், தான் தாலி கட்டியவளைப் பார்க்க மாட்டானா.. அவளுக்கு அவகாசம் அளிக்கவே விரும்பினான்.. ஆனாலும் அவள் மனநிலையை அறிந்து கொள்ள எண்ணியே அவளிடம் தன்னுடன் அவள் வாழத் தயாரா எனப் பூடகமாகவே இப்பொழுது கேட்டான்.



"உ..ம்.. சுரைக்காய்க்கு உப்பில்லைன்னேன்.. நீங்க கேட்க வர்றது எனக்குப் புரியாமல் இல்லை.. நான் படிச்சவள் தான்.." என்றவளை..



இதற்கும் படிப்புக்கும் என்ன சம்மந்தம் என அவன் மனம் கேள்வி கேட்டது.. ஆனாலும் அதை அடக்கி விட்டுப் பேசாமல் அவளைப் பார்த்தான்.



"உங்க மரமண்டைக்குப் புரியாது.. அதனால நான் நேரடியாவே சொல்லுறேன்.. எனக்கும், உனக்கும் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லை.. நடை, உடை,பழக்க வழக்கம், படிப்பு இப்படி எதுவுமே பொருத்தமில்லை.. சரி இதெல்லாம் போகட்டுமுன்னு பார்த்தா.. பேசிக்கா.. நம்ம உருவ பொருத்தத்தைப் பாருங்க.. உங்க கலர் என்ன.. என்னோட கலர் என்ன.. சரி கலரை விடுங்க.. நம்ம ரெண்டு பேரோட சைஸை பாருங்க.. பார்த்தாலே தெரியலையா?.. சொல்லுங்க.. எப்படி நமக்குள்ள சரி வரும்.. டிஸ்கஸ்டிங்க்.. அருவருப்பா இருக்கு.."



முகம் கருத்தான் கதிர்.. அவனை யாரும் இந்த அளவுக்கு அவமதித்ததில்லை.. மனம் கொள்ளா வேதனையை வெளியே காட்டி விடாமல் இருக்க அவன் பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருந்தது.. அவள் சொல்லுவது சரி தானே.. உண்மை என்றும் கசக்கும்.



"என்ன பேச்சு புரியலையோ?.. சிம்பிளா சொல்லுறேன்.. பேப்பர் தெரியுமில்லே பேப்பர்.. அது மேல பேப்பர் வெயிட்டை வைக்கலாம்.. ஆனால் பேப்பர் வெயிட் மேல பேப்பரை வைக்க முடியுமோ?.. பறந்து போயிடாது.. இப்போ புரியுதா.. உங்களுக்கும் எனக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை.." என்று முகத்தைத் திருப்பினாள் சத்யா.



சட்டெனத் தன் ஆறடி உயரத்துக்கும் மேலே கம்பீரமாக நிமிர்ந்து நின்றான் கதிர்.



"புரியுது.. நல்லாவே புரியுது.. ஆனா ஒன்றை நீ புரிஞ்சிக்கணும் சத்யா.. தப்பா யோசிச்சு ஆனா சரியான விளக்கத்தைச் சொல்லிட்ட.. நீ பேப்பர்தான்.. நான் பேப்பர் வெயிட் தான்.. பேப்பர் மேலேத்தான் பேப்பர் வெயிட் வைக்க முடியும்.. அதுவரைக்கும் நீ உன் வாயாலேயே சரியாத்தான் சொல்லிட்டே.. உன்னை நானும் என்னை நீயும் தாங்கப் போற நாள் கூடிய விரைவில் வரும்.. நீ சொன்ன எல்லாப் பொருத்தமும் உனக்கு அப்போ பெரிசாவே தோணாது.. நீயா உணருவே.. நானும் உனக்காகக் காத்திட்டு இருப்பேன்.."



கர்வத்துடன் சொன்ன கதிரை முதல் முறையாகத் தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தவள் மனதில் சற்று உதறல் எடுத்தது.. இவன் நினைச்சா என்ன வேணுமானாலும் செய்யலாம்.. ஆனாலும் தன் சுய மரியாதையை இழக்க விரும்பாமல் மீண்டும் வாயை விட்டாள்..



"ஓ.. தப்பான எக்ஸாம்பிளோ?.. இட்ஸ் ஆல்ரையிட்.. நீங்க பேப்பர் வெயிட் தான் அதுல எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை.. ஆனால் நான் வெத்து பேப்பர் இல்லை.. நீங்க தாங்கறத்துக்கு.. நான் நோட் புக்.. வெயிட் வைக்க அவசியமும்மில்லை.. என் மனசு லேசானது இல்லை.. பெரிய பாறாங்கல்லு.. நீங்க நினைச்சாலும் மாத்த முடியாது.. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.. இந்தச் சத்யாவும் அப்படித்தான்.. பிடிக்கலைன்னா யாருக்கும் தலை வணங்க மாட்டாள்.." என்றவள்..



"இப்போ எனக்கு டயர்ட்டா இருக்கு.. தூங்கணும்.. அதுக்கு முன்னால எனக்கு டிரஸ் சேஞ் பண்ணனும்.."



"உ..ம்.. பரவாயில்லை.. உனக்கு தோணினதெல்லாம் பேசிட்டே.. போ போய் தூங்கு.." என்றவன்..



அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் அந்த அறையுடன் இணைந்திருந்த பக்கத்து அறையைக் காட்ட.. அவனைக் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.



அவள் மனக் கதவையும் பூட்டினாளோ?..



அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிரும் ஒரு பெருமூச்சை விட்டபடி.. 'இனி அடுத்து என்ன..' என்று புரியாமல் கட்டிலில் விழுந்து புரண்டான்



அலங்கரித்த கட்டில் அவனைப் பார்த்து இளித்தது.. தூவப் பட்டிருந்த பூக்களோ அவன் அழுத்தத்தில் நசுங்கி அழுதது.



பொருத்தமில்லை என்று ஒதுக்கித் தள்ளியவளும், அவளுக்குப் பொருத்தமில்லாதவன் என்று சொல்லப்பட்டவனும் அப்போது அறியவில்லை..



மனப் பொருத்தம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்று.



காலத்தின் ஆட்டத்தில் எல்லாம் மாறும் என்றும்..





************************************************************************************
 

Jothiramar

Moderator
Staff member
இவங்க நிலை இப்படி இருக்கே!! அங்கே வேதாவோட நிலை??
 

VPR

Member
சபாஷ். டென் தௌசண்ட் வாலா ஆரம்பிச்சாச்சு
 

Chellam

Well-known member
சத்யா பேசியது கொஞ்சம் அதிகம் படி தான்.அவ்விடம் எப்படியோ பிரகாஷ் அவளை எப்படி படுத்துகிறானோ.
 
Top