கல்யாணம் முடிந்த கையோடு இரவு எட்டு மணிக்குச் சென்னையை வந்தடைந்தனர்..
வாசலில் ஆலதட்டோடு காத்திருந்தவர்கள் ஆலம் சுற்றி திருஷ்டி கழிக்கத் தன் வலது காலை எடுத்து அந்தப் பெரிய பங்களாவினுள் வைத்தாள் வேதா..
மனதுள் ஆயிரம் எண்ணங்கள் ஓடின.. 'கடவுளே இது நான் வாழ வந்த இடம்.. இங்கே என் எதிர்காலம் இருக்கிறது.. அது நல்லவிதமாய் அமைய அருள் புரி.. அனைவரையும் அனுசரித்துப் போகும் பொறுமையைத் தா.. எல்லோரும் என்னை நல்ல விதமாய் ஏற்றுக் கொண்டு என் வாழ்வு சிறக்க வேண்டும்.. அதற்கு என்ன அவசியமோ அதைத் தா எனக்கு', என்று வேண்டியபடி குத்து விளக்கை ஏற்றினாள் வேதா.
"வேதா உன் புகுந்த வீடும் பிறந்த வீடும் செழிக்கணும்னு நல்ல வேண்டிக்கோம்மா..", என்று கண்ணீர் மல்கச் சொல்லிய கல்யாணி, தன் அண்ணனைப் பார்த்து..
“அண்ணே இனி இவள் உன் பொறுப்பு.. உன் பொண்ணா நினைச்சு எல்லாம் செய்யுங்க.. அவளுக்கு நல்லது கெட்டது எல்லாம் இனி இங்கேதான்.. ஏதோ கிராமத்தில் வெள்ளந்தியா வளந்துட்டா.. அவளுக்கு இத்தனை பட்டணத்து நாகரீகம் தெரியாது.. அண்ணியும் நீயும் தான் தாயா தகப்பனா இனி இருந்து எல்லாம் சொல்லித் தரணும்..” என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்தாள்.
"ஏய் கல்யாணி.. என்ன இது.. அதான் நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துட்டா இல்ல.. அப்புறம் என்ன கவலை.. விடு.. நாங்க பாத்துக்கிறோம்.. நீயும் மாப்பிள்ளையும் இனி எந்த விசனமும் இல்லாமே இருங்க..", என்று தன் தங்கையைத் தேற்றினார் ராஜேந்திரன்..
பற்களைக் கடித்தான் பிரகாஷ்.. 'பெரிய சிவாஜி சாவித்திரி.. பாசமலர் சினிமா ஓட்டறாங்க பாரு.. அவ ஏன் இங்கே நல்லா இருக்க மாட்டா.. நல்ல மொட்டை வெயிலிலே எருமை மேச்சுட்டு வரட்டி தட்டிட்டு இருந்தவ தானே.. என்னமோ பெரிய ஃபாரீன் ரிடர்ன் மாதிரி சீன் போடுது இந்த அத்தை....’
‘பாவம் அத்தைன்னு நான் நினைச்சதுக்கு என்னையே அய்யோ பாவம் ஆக்கிட்டாங்க ஆத்தாவும் மகளும்.. மை காட்.. இந்த அடக்க ஒடுக்க ரூரல் டால் கிட்டேயிருந்த எனக்கு எப்போ எஸ்கேப்?.. எல்லாம் இந்த அப்பாவாலே'.., என்று ஆத்திரப்பட்டான்..
அவ்வளவுதான் செய்ய முடியும் அவனால்.. மெல்ல லேசாய் வேதாவைப் பார்த்தான்..
நல்ல மாநிறத்தில் மூக்கும் கண்ணும் நன்றாய் எடுப்பாய் பார்ப்பதற்கு நல்ல லட்சணமாய்த் தெரிந்தாள்.. மற்றபடி பெண் நன்றாய் இருக்கிறாள் என்று சொல்லக் கூடிய அளவில் இருந்தாள்.. மற்றபடி சத்யாவைப் போல் பளீரென்ற பேரழகி இல்லை.. ஆனால் சாட்டைப் போல் இடுப்பளவு நீண்டிருந்த கூந்தல் ஒரு பிளஸ் பாயிண்ட்.. அவ்வளவுதான்..
இப்போது இன்னமும் கோபம் அதிகமாயிற்று பிரகாஷுக்கு.. 'சே.. என்ன மாதிரி ஒரு வாழ்க்கை கிடைத்திருக்க வேண்டியது.. அதுவும் சது எம்.டெக்.. என்னுடைய ஃபீல்டே தான்.. என் பிசினெசில் இப்போதுதான் நுழைந்தாள்.. நன்றாய் மேலுக்கு வரும் முன்னர் இப்படி ஒரு அவசரக் கல்யாணம்.. எல்லாவிதத்திலும் எங்கள் இருவருக்கும் என்ன மாதிரி பொருத்தம், நிறமாகட்டும் அழகாகட்டும்.. படிப்பாகட்டும், அந்தஸ்தாகட்டும்.. எல்லாம் இப்போ வேஸ்ட்.. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டி.. ரேசில் முந்திக்கொண்டது இந்தப் பட்டிக்காடு ம்ம்..’
பெருமூச்சுவிட்டவனைப் பார்க்க சகிக்கவில்லை அவன் தாய்க்கு..
'அய்யோ.. என் மகன் பரிதவிக்கிறானே.. இந்தப் பாழாப் போன மனுஷன் இப்படிக் கழுத்தருத்துட்டாறே.. எப்படிப் பொருந்தும் என் பையன் அழகுக்கும் படிப்புக்கும் தகுதிக்கும்.. இப்படி ஒரு ப்ள்ஸ் டூ ஃபெயிலை கல்யாணம் செஞ்சி வெச்சுட்டாரே.. கடவுளே...', என்று மனம் வெறுத்துப் போய்..
"அண்ணி.. எனக்குத் தலையை வலிக்கிற மாதிரி இருக்குது.. ராத்திரி டின்னரை மணி செஞ்சி ரெடியா டேபிளில் வெச்சிட்டாரு.. மத்தபடி ரூமெல்லாம் கேர்டேகர் ராஜு கிட்ட சொல்லியிருக்கேன்.. அவர் எல்லோருக்கும் ரூமை காண்பிப்பாரு.. பிரகாஷ் ரூமை ரெடி செஞ்சு வக்க சொல்லிட்டேன்.. வேதாவோட சாமானெல்லாம் பிரகாஷ் ரூமிலே வெக்க சொல்லியிருக்கு.. எல்லாம் வளர்ந்த பசங்க அவங்களுக்குத் தெரியாதா என்ன.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போறேன்.. ராஜ்.. நீங்க பார்த்துக்கங்க..", என்று சொல்லிவிட்டு தலையைப் பிடித்தபடி மாடியேறி போனாள் ருக்மணி..
அண்ணிக்கு பெரிய இஷ்டம் இல்லை இந்தத் திருமணத்தில் என்பதை கல்யாணி அறிந்து தான் இருந்தாள்.. ஆனாலும் கூட இப்போது நேரடியாய் அதிருப்தியைக் காணவும் மனது லேசாய் ஆடியது அவளுக்கு..
'ஆண்டவனே.. அவசரவசமாய் அள்ளித் தெளித்த கோலம் போல் என் மகள் வாழ்வு ஆகி விடக் கூடாது.. காப்பாற்றிக் கரை சேர்", என்று இறைவனிடம் மனதுள் இறைஞ்சத் தொடங்கினாள்.
தங்கையின் முகத்தில் கலக்கத்தைப் படித்த ராஜேந்திரன், "நீ கவலைப் படாதே கல்யாணி.. பெரியவங்க ஆசீர்வாதம் பூரணமா இருக்கு வேதாவுக்கு.. எந்தக் கெடுதலும் வராது.. போம்மா.. சாப்பாடு ஆனதும் வேதாவை தயார் படுத்து..", என்று நாகரீகமாக ஒதுங்கினார்.
அடுத்த சில நிமிடங்களில் உணவு முடிந்து தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தன் மகளைத் தயார் படுத்தத் தொடங்கினாள் கல்யாணி.
மகளை நல்ல மாம்பழக் கலரில் அரக்கு பார்டர் வைத்த பட்டு சேலையை உடுத்தச் சொல்லி.. நல்ல கெம்பு வைர நகைகளைப் பூட்டி அலங்கரித்தாள்.. தலை கொள்ளா மல்லிகைப் பூப்பந்து வேறு....
நடுநடுவே தன் மகளுக்கு அறிவுரைகள் சொல்லவும் மறக்கவில்லை.. எப்படிப் பதவிசாக அனைவரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்பதில் தொடங்கி.. காலையில் எழுந்தவுடன் எப்படிப் பணியைத் துவக்க வேண்டும் என்பது வரை சொல்லி முடித்தாள்..
அனைத்தையும் மண்டையை உருட்டி உருட்டி கேட்டுக் கொண்டாள் அவள் பெற்ற மாணிக்கம்..
அனைவரின் அறிவுரைகளையும் தன் மண்டையில் ஏற்றிக் கொண்டு மெல்லப் பால் சொம்பை எடுத்துக் கொண்டு தன் கணவனைத் தனிமையில் சந்திக்கச் சென்றாள் வேதா..
அறைக்குள் நுழைந்து தாளிட்டவளை எதிர் கொண்டது காலி கட்டில்.
மெல்ல பால்கனிக் கதவு வழியாய் எட்டிப் பார்த்த வேதாவுக்கு நன்றாய் தெரிந்து போனது பிரகாஷுக்கு இந்தத் திருமணத்தில் நிச்சயம் இஷ்டம் இல்லை என்ற உண்மை.. ஆனால் என்ன செய்வது இவன் அப்பா அப்படி நினைக்கவில்லையே.. மாமா பாவம் தன் தங்கைக்காக இப்படிச் செய்துவிட்டார்.. பிரகாஷுக்கும் கொஞ்சம் தனிமை இப்போது நிச்சயம் அவசியம்..
இப்படித் திடீர்க் கல்யாணம் நிச்சயம் அவன் எதிர்பார்த்திருக்கமாட்டான்.. கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம் மாறுவதற்கு என்று நினைத்தவள், ஒன்றும் பேசாமல் ஓசைப்படாமல் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க முயன்றவள் அதில் வெற்றியும் பெற்றாள்.
ஆனால் வெளியில் அமர்ந்திருந்த பிரகாஷுக்கோ ஏமாற்றம்.. ‘தன்னைக் கூப்பிடுவாள் வந்து தானாகப் பேசுவாள்.., வரட்டும் வந்து பேசினால் நன்றாய் முகத்திலடித்தார் போல் கொடுக்க வேண்டும்’ என்று நினைத்திருந்தவன் முதலில் அவள் வராதது புரியவில்லை..
'இந்த மஞ்சக்கயிரு மேஜிக்கெல்லாம் என் கிட்டே எடுபடாது.. இவளோடு நான் சேர்ந்து வாழ்வது என்பது இந்த ஜென்மத்தில் கிடையாது.. என் கனவையெல்லாம் ஒரு நிமிஷத்தில் நாசமாக்கிவிட்டார்கள்.. எவ்வளவு காலமாக இந்தத் திருமண இரவுக்காக அதுவும் என் மனம் கவர்ந்த சத்யாவுடன் செலவழிக்கப் போகும் இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தேன்..’
ஒரே நிமிஷத்தில் என் கனவை சிதிலமாக்கிவிட்டாளே.. இவளுடன் நான் வாழுவது என்பது நிச்சயம் கிடையாது..', என்று நினைத்து ஒரு அரை மணிநேரம் வேறு திசையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன்..
சத்தம் ஏதுமின்றிப் போனவுடன் சந்தேகப்பட்டு மெல்ல தலையைத் திருப்பி அறையைப் பார்த்தவனுக்கு முகத்தில் அசடு வழியத் தொடங்கியது..
'அடிப்பாவி.. எந்தவித சிந்தனையுமில்லாமல் எப்படித் தூங்குறா.. கும்பகர்ணனுக்குத் தங்கச்சியோ?.. கருமம்.. இதெல்லாம் என் விதி..', என்று நொந்தபடி மெல்ல அறைக்குள் நுழைந்தவன் அதற்குமேல் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தானும் கட்டிலின் அடுத்த பக்கத்தில் படுத்துத் தூங்க முயன்றான்.
தூக்கம் வருவேனா என்றது.. புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாய் விடியற் காலையில் கண்ணயர்ந்தான்..
இரவு போய்ப் பகலும் வந்தது..
விடியலில் எழுந்த வேதா நன்கு உறங்கும் கணவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தாள். அவள் இதழில் புன்முறுவல் அரும்பியது..
'பாவம் மாமா நான் சண்டை போடுவேன் என்று நினைத்திருப்பார்.. ஆனால் நான் வாய்த் திறக்காமல் தூங்கிவிட்டது அவருக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும்.. ஆனாலும் என்ன செய்ய முடியும் சில சமயங்களில் விதி நமக்குச் சாதகமாக இருக்காது தான்.. ஆனால் அந்த விதியையும் நம் மதியால் எதிர் கொள்ள முடியும் தானே.. அதற்குத்தானே நமக்கு அறிவைப் படைத்திருக்கிறான் ஆண்டவன்..’
‘அம்மாவும் பிள்ளையும் என்னை ஒரு வேலைக்காரி ரேஞ்சில் பார்ப்பது எனக்குப் புரியாதா என்ன?.. பொருத்து பார்க்கட்டும் எப்படி இவர்கள் வாயாலேயே நான் தான் வேணும் என்று சொல்ல வைக்கிறேன்..', என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டு.. ஒட்டியிருந்த அறையில் சென்று தன் பொருட்களை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்..
அடுத்த சில நிமிஷங்களில் குளித்து முடித்து ரூமிற்கு வெளியே வந்தவள் யாரும் இன்னமும் உறக்கம் கலையாதிருக்கக் கண்டவள், வெளியே கதவைத் திறந்து கொண்டு வாசலுக்குப் போனாள்..
அப்போது தான் வாசலில் வீட்டை பெருக்கித் துடைக்கும் வேலைக்காரி வள்ளி வருவதைக் கண்டு.. அவளிடம் கோலமாவைக் கேட்டு பெற்றுக் கொண்டவள் அடுத்த அரை மணிநேரம் பிசி..
வாசலில் வண்ண மயமாய்க் கோலம் மிளிர்ந்தது..
அழகாய் பூங்கொடிகளில் கிளிகள் கொஞ்சின..
"சின்னம்மா சூப்பர்.. நான் ஏதோ பேருக்கு இரண்டு இழுப்பு இழுத்திட்டு போவேன்.. இம்மாம் பெரிய கோலமெல்லாம் இந்த ஏரியாவிலே யாரு வூட்டிலேயும் போடுறது கிடையாது.. சூப்பரா இருக்கு", என்று வீட்டில் சமையல் மேல் வேலை, மற்றும் கடைகண்ணிகளுக்கு வெளியே செல்லும் தமிழரசி மெச்சிக் கொண்டாள்..
அதற்குள் டிராக் சூட்டில் வாக்கிங்க் சென்ற இரண்டு பெரிசுகள் நின்று கோலத்தை ரசித்தன..
"சூப்பர்மா.. நல்லாயிருக்கு.. காலங்கார்த்தாலே கண்களுக்கு விருந்து.. இந்த சிடி யில் எல்லாமே ஷார்ட்தான்.. ரொம்ப நாளாச்சு இப்படிப் பார்த்து.. கீப் இட் அப்..", என்று சொல்லி விட்டுச் சென்றனர்..
"வாங்கம்மா அம்மா பார்த்தா கோவிச்சுக்குவாங்க.. அவங்களுக்கு இந்த மாதிரி புது மனுசங்ககூட நின்னு பேசினா பிடிக்காது.. உள்ளார வந்துடுங்க..", என்று துடைப்பத்தையும் கோலமாவையும் அவள் கையிலிருந்து பறித்துக் கொண்டாள் வள்ளி.
"என்ன சொல்லறீங்க.. இப்போ தூங்கி எழுந்திருக்கிற டைம் தானே ஆச்சு.. அதான் எழுப்பினேன்.. எங்களுக்கெல்லாம் காலையில் ஆறு மணிக்குள்ளே தயாராகிடணும்.. அதான்.."
"ம்ம்.. ஆறு மணிக்கே தயாராகி என்ன கலெக்டர் உத்தியோகம் பார்க்க போவியா?.. ஆளைப் பாரு..எருமையைக் குளிப்பாட்ட கூட்டிடுடு போறதுக்கு ஆறுமணிக்கு போனா என்ன அப்புறமா போனா என்ன... மூஞ்சியைப் பாரு..", என்று எரிந்து விழுந்தான்..
சுர்ரென்று கோபம் தலை தூக்க, "ஏன்.. என் மூஞ்சிக்கு என்ன குறைவு வந்துடுச்சு.. என்ன சத்யா மாதிரி நிறம் தூக்கலா இல்லை.. ஆனா என் சினேகிதிங்க எல்லாம்.. நான் நடிகை சினேகா மாதிரி இருக்கேன்னு சொல்லுவாங்க தெரியுமா?"
"அது நடிகை சினேகாவுக்குத் தெரியுமோ.. பாவம்.. அவங்க நிலை இப்படி ஆகியிருக்க வேணாம்.. நீயே ஒரு மொக்க பீஸு..கருப்பு.. இதிலே மூஞ்சிக்கு என்ன கிரீம் அப்பிகிட்டே..?"
"இல்லையே.. நான் சோப்பு போட்டு குளித்து மஞ்சள் பூசிகிட்டேன் அவ்வளவுதான்.. மேலே லேசா பவுடர் போட்டேன்.. அம்மா தான் சொன்னாங்க.. சுமங்கலிப் பொண்ணுங்க எல்லாம் மஞ்ச பூசி குளிச்சா புருஷனோட ஆயுள் விருத்தியாகும்.. மங்களகரமா இருக்கும்ன்னாங்க.. அதான்..", என்றாள் கூலாக..
உள்ளூர..
'மவனே.. உங்களுக்கு நம்ம கிராமத்து பழக்க வழக்கங்கள்னா சினிமாவிலே என்ன காமிக்கிறாங்களோ அதான்னு நினைப்பு இல்லையா.. இருக்குடா உனக்கு.. நாங்களும் இப்போல்லாம் காலத்துக்கு ஏத்தா போலே எங்களைக் கவனிச்சிகிறோம்.. இன்னமும் நம்ம பாட்டி காலத்துலே இருந்தாப் போலயா நாங்க இருக்குறோம்..
‘எல்லா இடத்துலேயும் டி.வி.. இருக்கு எல்லாத்தயும்தான் நாங்களும் பார்க்குறோம்.. என்ன மினி ஸ்கர்டு.. ஷார்ட்சுன்னு போடறது இல்லையே தவிர நாங்களும் சுடிதார், நைட்டிக்கு மாறி ரொம்ப வருஷமாகுது மாமா.. என்னவோ நினைப்பு உங்களுக்கெல்லாம்..’
‘என்ன கோபுரங்கள் சாய்வதில்லை சுஹாசினி ரேஞ்சுக்கு எங்களை நினைச்சிருக்கீங்க இல்லை.. இருங்கடா.. உங்க வாயாலேயே.. இந்தக் கெட்டப்பே நல்லாத்தான் இருக்குன்னு சொல்ல வைக்கிறேன்..', என்று நினைத்தவள்..
"ஏன் மாமா கொஞ்சம் அதிகமா மஞ்ச பூசிட்டேனோ?" , என்று அப்பாவியாய் முகத்தை வைத்தபடி கேட்க,
"ம்ம்.. கொஞ்சம் அதிகம் இல்லைம்மா.. ரொம்ப.. உன் கருப்புக்கு மஞ்ச கலர் பூசி மேலே பவுடர் போட்டு அது அங்கங்கே திட்டுத் திட்டா காஞ்சு.. கூத்தில வேஷம் கட்டற கோமாளி மாதிரி.. இப்போ பச்சையா ஆகிடுச்சு.. கருமம் போய் முகத்தைக் கழுவிட்டு வா..", என்று சொல்லிவிட்டு படக்கென்று காஃபியை அவள் கையிலிருந்து வாங்கி மடமட என்று குடித்து விட்டுக் கப்பை அவள் கையிலேயே திணித்துவிட்டு ரூமை விட்டு வெளியே போனான்.
வெளியே ஹாலில் அவன் தாய் தனியே அமர்ந்திருக்கக் கண்டவன்,
"மாம்.. கொஞ்சம் மாடிக்குப் போய் வேதாக்கு எப்படி டிரெஸ் செஞ்சுக்கறதுன்னு சொல்லிக் கொடும்மா.. போம்மா.. கருமம் தாங்கலை.. அவளும் அவ வில்லேஜ் மேக்கப்பும்..", என்று சொல்லிவிட்டு தோட்டத்திற்குள் நுழைந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் மாடியிலிருந்து கீழே வந்த வேதாவைப் பார்த்த ருக்மணிக்கு ஒன்றும் வித்தியாசமாய்த் தோன்றவில்லை..
நல்ல கருத்த பச்சை ப்ரிண்டட் சில்க் புடவையில் நன்றாய் தான் இருந்தாள்.. முகத்தில் மேக்கப் எதுவும் இல்லாமல் திருத்தப்பட்ட புருவங்களுக்கு மத்தியில்.. ஒரு சின்ன வட்ட பொட்டு வீற்றிருக்க, வகிட்டில் தீட்டப்பட்ட குங்குமமும் என ஒரு களையான பெண்ணாகத்தான் தெரிந்தாள்..
"என்னத்தைப் பாக்குறீங்க அத்தை.. இந்தச் சேலை நல்லா இருக்குதா....சரி காஃபி குடிச்சிங்களா?..அம்மா எங்கே காணலை..", என்று கேள்விகளை அடுக்கியவளைப் பார்த்தவளுக்கு..
'அவன் ஏன் அப்படிச் சொன்னான்.. அல்டிரா மாடர்ன் பொண்ணு இல்லை.. அடக்கமாத்தானே தெரியுறா.. ஒருவேளை சத்யா மாதிரி பளீர்னு இல்லன்னு நினைக்கிறானோ.. வரட்டும் அவனையே கேட்டுடலாம்..', என்று நினைத்தவள்..
"எல்லாம் ஆச்சு வேதா.. அதிருக்கட்டும்.. நீ தான் இன்னிக்குக் கோலம் போட்டியா வாசலில்.. அதுக்குள்ளே எனக்கு மூணு ஃபோன் கால் வந்துடுச்சு.."
"ம்ம்.. ஆமாமாம்.. ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. அப்படியே உன் வீட்டு வேலைக்காரிகிட்டே சொல்லி எங்க வீட்டுக்கும் முறை வாசல் செய்ய அனுப்புறையான்னு கேட்டுட்டாங்க இந்தக் காலனியிலே..", என்று விஷமமாகச் சொன்னாள் ருக்மணி..
முதலில் புரியாவிட்டாலும்.. அத்தை தன்னை ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணளவில் தான் மதிப்பீடு செய்து வைத்திருக்கிறார் என்பது சட்டென்று புரிய.. 'ஓ நீங்க அப்படி வரீங்களா.. இருங்க உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு..', என்று நினைத்துக் கொண்டு நின்றவள் அத்தை அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னேயே மாமா வருவதைப் பார்த்து..
"மாமா.. அத்தை ரொம்பக் கிரேட்.. பாருங்க நான் வந்த உடனேயே.. எனக்கு ஒரு வேலையை ரெடி செஞ்சி வச்சுட்டாங்க.. சொல்லக்கூடாது அத்தையோட சினேகிதிங்க எல்லாரும் சூப்பர்.. எனக்குப் போரடிக்குமேன்னு வந்த அன்னிக்கே வேலைத் தயார் செஞ்சிட்டாங்க..", என்று நைச்சியமாய்ப் போட்டுக் கொடுத்தாள் மாமனிடம்..
அதற்குள் ருக்மணியின் முன் பக்கமிருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தபடி..
"சூப்பர் ருக்கு.. அப்படி என்ன வேலை மருமகளுக்குப் பார்த்து வச்சிருக்கே நீ?.. அதுவும் இந்தக் காலங்கார்த்தலே..?", என்று ராஜேந்திரன் கேட்டதும் ஜன்னியே வந்துவிட்டது ருக்மணிக்கு. ..
மனதுள், ‘இதுதான் கிராமத்து குசும்போ.. போட்டாடி கொடுக்கிறே பாவி மகளே’, என்று மனதுள் வைதபடி முகத்தை மலர்ச்சியாய் வைத்துக் கொண்டு,
"அதில்லங்க.. என் சினேகிதி சொன்னா.. வந்து.. வந்து.. ஆங்.. அதாங்க நம்ம மருமகள் சூப்பரா கோலம் போட்டதைப் பார்த்த யாரோ ஒருத்தர்.. இவ டிசைன்களைப் புத்தகமா போடலாம்னு.. சொன்னாங்க அதான் வேதாகிட்ட சொல்லிட்டிருந்தேன்..", என்று பூசி மெழுகினாள்..