கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 1

Akhilanda bharati

Moderator
Staff member
1.

"உங்க அம்மா நல்லா காப்பி போடுவாளே.. எனக்கு ஒரு அரை டம்ளர் போடச் சொல்லு" என்று உரிமையாகக் கேட்டபடி வாசலில் வந்து அமர்ந்தார் தங்கமாரியப்பன்.

"அம்மா போய் ஆறு வருஷம் ஆகுது மறந்துட்டீங்களா தாத்தா.. நானும் அப்பாவும் இப்போ எடுப்புச் சாப்பாடு தான்.. வீட்ல ஒன்னும் பொங்குறது இல்லை.. எப்பவாது லேசா சூடு பண்றதுக்குத் தான் அடுப்பைப பத்த வைக்கிறது" என்று பதில் கூறினாள் பழனி.

அப்படியா தவறிட்டாளா? என்று ஒரு கணம் யோசித்த தங்கமாரியப்பன் பழனியின் அம்மா பெயர் என்ன என்பதை நினைவில் கொண்டு வர முயன்றார். ஒரு நிமிடம் முழுவதுமாக யோசித்தும் அது பிடி படாததால், "எப்பவும் உங்க வீட்டு திண்ணையில் வந்து உட்கார முன்னாடி மூக்குல காப்பி வாசம் வந்து போகும்.. எனக்கு நாக்கு கொண்டா கொண்டாங்குது.. நீ என்ன இப்படிச் சொல்லுத.. பாவம் சின்ன வயசுக் காரி.. இப்படிப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டாம்.. பேரென்ன.. பார்வதி தானே.. இல்ல.. லட்சுமி" என்றபடி தன் வரவு செலவு நோட்டைத் திறந்து அருகில் வைத்தவர், கண்டக்டர் பை போல் இருந்த தன் கைப்பைக்குள் இருந்து நான்காக மடிக்கப்பட்ட ஒரு மஞ்சள் பையை எடுத்து மடியில் வைத்தார் தங்கமாரியப்பன் தாத்தா.

வீட்டினுள் இருந்து வந்த பழனியின் அப்பா மாடசாமி, "வாங்க சித்தப்பா! நேத்தே விளக்கு முன்னாடி வாடகை பணத்தை கரெக்டா எடுத்து வச்சுட்டேன்.. இந்தாங்க!" என்றபடி கையில் இருந்த பணத்தை பவ்யமாக நீட்டினார்.

எதிரில் இருந்த திண்ணையை மாடசாமியிடம் காட்டி, "உக்காரேன் டே!" என்றவாறு அதை வாங்கி என்ன முயன்றார் தங்கமாரியப்பன். இருக்கட்டும் சித்தப்பா என்று மாடசாமி அதே பவ்யத்துடன் மறுக்க, பணம் எண்ணுவதற்கு விரல்கள் ஒத்துழைக்காமல் போகவும் பாதி எண்ணியதுடன் நிறுத்திவிட்டு மீண்டும் ஒருமுறை எண்ணப் போனவர், பழனியிடம் நீட்டி, "இந்தா! நீ ஒரு தடவை சரி பாரு!" என்றார்.

அவன் எண்ணிப் பார்த்துவிட்டு, "சரியா இருக்கு தாத்தா!" என்றபடி கொடுக்க, அதில் நூறு ரூபாயைத் தனியாக பிரித்து ஒரு மஞ்சள் பையில் வைத்து விட்டு, வரவு செலவு நோட்டில் வீடு எண் 1 என்று எழுதியிருந்த பக்கத்தில் 'ஆகஸ்ட் மாத வரவு 2000' என்று எழுதிக் கொண்டார்.

முந்தைய மாதங்களிலும் சரியாக 5ஆம் தேதி முறையாக வரவு வைக்கப்பட்டிருந்தது மாடசாமியின் பக்கத்தில். "நீ இப்ப என்ன படிக்க? மெக்கானிக்கல் தானே? அதைப் படி.. அதைப் படிச்சாத் தான் நல்ல வேலை கிடைக்கும்ன்னு சொலலுதாங்க" என்று மாரியப்பன் கூற,

"நான் தான் படிச்சு முடிச்சுட்டு வாத்தியார் வேலைக்குப் போறேனே தாத்தா.. மறந்துட்டீங்களா?" என்றான் பழனி.

"அப்போ ஐடிஐல மெக்கானிக்கல் படிச்சது யாரு? உன் தம்பியா?" என்று கேட்க, "நான் ஒத்த புள்ள தானே தாத்தா? மாத்தி மாத்தி சொல்றீங்களே.." என்று கூறிய பழனியின் குரலில் சிறிது சலிப்பு தொற்றியிருந்தது. அந்த சலிப்பைக் கண்டுகொண்ட மாடசாமி,

"என்னடே ஏட்டிக்கி போட்டி பேசிக்கிட்டுருக்க? சித்தப்பாக்கு கொஞ்சம் மறதி ஆயிப் போச்சு.. சித்தப்பா வடையும் காப்பியும் வாங்கிட்டு ஓடியாரட்டா? ஒரு நிமிஷம் இருங்க" என்றபடி வீட்டிற்குள் பாத்திரம் எடுக்க நுழையப் பார்த்தார் மாடசாமி.

"காப்பியா? காப்பி இப்பதான் குடிச்சுட்டு வந்தேன்" என்று தங்கமாரியப்பன் கூற,

"இப்ப கேட்டீங்களே தாத்தா?" என்றான் பழனி.

"நான் எங்க கேட்டேன்.. வீட்டுல மருமக காலைலயே இட்லி எடுத்துட்டா.. அதை அப்படியே சாப்பிட்டுட்டு காப்பியும் குடிச்சுட்டு வந்தேன்" என்று கூறிவிட்டு மஞ்சள் பையை அதிலிருந்த ரூபாய்களுடன் அப்படியே மடித்து கைப்பையை வைத்துவிட்டு, இரண்டாயிரத்தில் மீதம் இருந்த பணத்தை தனியாகப் பையில் வைத்து எழுந்த தங்க மாரியப்பன், அடுத்ததாக இரண்டாம் வீட்டை நோக்கி நகர,

"அவருக்குத்தான் ஒரு வருஷமாவே புத்தி நிதானத்துல இல்லைன்னு தெரியுதுல்ல.. அப்புறம் ஏன் அவர்கிட்ட போய் பதிலுக்கு பதில் பேசிக்கிட்டிருக்க?" என்று கடிந்து கொண்ட மாடசாமியின் குரல் பின்னணியில் கேட்டது.

முன்புறம் ஏழும் பின்புறம் ஏழுமாக பதினான்கு வீடுகள் அடங்கிய லைன் வீட்டு காம்பவுண்ட் அது. தங்கமாரியப்பன் கொத்தனாராக வேலை பார்த்த காலத்தில், அவருக்குக் கொடுக்க வேண்டிய கூலிக்குப் பதிலாக அந்த ஐந்து சென்ட் இடத்தை அவர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார் ஒரு முதலாளி.

'ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம்.. எனக்குத் தெரிஞ்சு முப்பது வருசமா இப்படித்தான் இருக்கு.. என்னைக்கு இந்த ஏரியா முன்னேறுறது.. ஒரு காசுக்குப் பெறாது.. இதைப் போய் அத்தா பெரிய கட்டடம் கட்டுனதுக்கு ஈடா எழுதி வாங்கிருக்கியே.. உனக்கு புத்தி இல்லை?' என்று சக கொத்தனார்கள் மாரியப்பனைத் திட்டத் தான் செய்தார்கள்.

"எப்பேர்பட்ட முதலாளி அவரு.. இதுவரைக்கு அவருக்கே அஞ்சு கட்டடம் கட்டிக் குடுத்திருக்கேன்.. ஏதோ இந்த முறை கைப்பிடித்தம் ஏற்பட்டுருச்சு போல.. அவர் ஒண்ணும் சும்மா விட்டுறலியே.. அஞ்சு சென்ட் இடத்தை மொத்தமா எழுதிக் குடுத்துட்டாருல்ல.. இதுவரை ஒருநாளும் பாக்கி வைக்காத ஆளுல்லா" என்று சமாதானம் சொல்வார் மாரியப்பன்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் செலவழித்து ஒரு வணிக வளாகத்தைக் கட்டி முடித்த நேரம். அவ்வப்போது வெகு குறைவான செலவுகளுக்கு மட்டுமே பணம் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்த முதலாளி.

'இவர் இப்படித்தான் சப்பைக்கட்டு கட்டுவாரு.. ஏமாந்துட்டு வந்து நிக்கிறாரு.. விவரமா அந்த முதலாளி இப்பவே கட்டுற கடையில பாதியை விலைக்குப் பேசி முடிச்சாச்சு.. லட்சம் லட்சமா அட்வான்ஸ் வாங்கிருக்காரு.. ஆனா கொத்தனாருக்குக் குடுக்க மனசில்லை' என்ற ரீதியில் பிற தொழிலாளர்கள் பேசிக் கொள்வார்கள். இருந்தாலும் அவர்கள் மத்தியில் நிலவிய சிறு பொறாமையால், 'போதாதா? ஏற்கனவே நிறைய சொத்து சேர்த்துட்டாரு தங்கம் அண்ணாச்சி.. போதும்போதும் அவருக்கு..' என்றும் அவர்கள் எண்ணாமல் இல்லை.

தனக்குக் கீழ் மூன்று கொத்தனார்களையும் ஏழு சித்தாட்களையும் வைத்துக்கொண்டு அப்பொழுது பெரிய பெரிய கட்டிடங்களைக் கட்டியிருந்தார் தங்கமாரியப்பன். அந்த சிறு நகரத்தில் தங்கம் கொத்தனார் என்றால் வெகு பிரபலம்.

"அவர் வந்தாத் தான் வீடு கட்டணும்", "பக்கத்துல ஒரு ரூம் எடுக்க வேண்டியதிருக்கு.. தங்கம் கொத்தனார் இருக்குற வேலையை முடிச்சுட்டு வர ஆறு மாசமாகுமாம். அவர் கட்டினாத் தான நல்லா இருக்கும். ரூமைக் கட்டி முடிச்ச பிறகுதான் மகனுக்குக் கல்யாணம் வைக்கணும்.. கல்யாணத்தையே ஒரு வருஷம் தள்ளிப் போட்டுட்டேன்" என்று சர்வசாதாரணமாகக் கூறுபவர்கள் உண்டு. அதுதான் அவரது தொழில் திறமைக்குச் சான்று. ஒரு கட்டிடத்தில் கூட ஒழுகுகிறது என்றோம் விரிசல் விட்டு விட்டது என்றோ இதுவரை யாரும் புகார் கூறிப் பழக்கமில்லை.

அப்படி அன்று அவரது உரிமைக்கு வந்த சிறிய இடத்தில் அவ்வப்போது கிடைக்கும் பணத்தை வைத்து வரிசையாக சிறிய சிறிய வீடுகளாகக் கட்டி, பதினான்கு வீடுகள் முடித்து ஒவ்வொன்றையும் வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீடுகளைக் கட்டி இருபது வருடங்களுக்கு மேலாக இருக்கும்.. பெரும்பாலானோர் அந்த இருபது வருடங்களும் அதே வீட்டில் இருப்பவர்களே. வெறுமனே 200 ரூபாய் வாடகை வாங்க ஆரம்பித்து தற்போது இரண்டாயிரத்தில் வந்து நிற்கிறது.

அந்தக் பகுதியும் எதிர்பாராத அளவு வேக வேகமாக முன்னேறி இப்போது அடுக்குமாடி குடியிருப்பு போன்ற பல கட்டிடங்களே அங்கு வந்துவிட்டன. அந்தக் காலத்து டைல்ஸ்ஸில் வண்ணமயமாக பூப்பூவாய்ப் படம் போட்ட தரை, எல்லா வீட்டு வாசலிலும் இருபுறமும் அமர்ந்து பேச இரண்டு சிறிய திண்ணைகள், வாசலில் ஒன்று போல் சமதளமாய் சிமெண்ட் தரை, கையால் தோண்டி அமைக்கப்பட்ட இரண்டு ஆழ்துளை கிணறுகள், அவற்றில் இருந்த அடி பம்புகள் என்று அந்த ஐந்து சென்ட் இடத்தையும் எவ்வளவு நறுவிசாக பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு அழகாக பயன்படுத்தி, தன் மொத்த அனுபவத்தையும் கொட்டி கட்டி இருந்தார் தங்க மாரியப்பன். இதுதான் முதலில் கட்டிய கட்டிடம். இதேபோன்ற வேறு இரண்டு லைன் வீடுகளும் ஊரில் வேறு பகுதிகளில் இருந்தன. ஐந்தாம் தேதி வடக்குக் காம்பவுண்டு என்று கூறப்படும் இந்தப் பகுதிக்கு வாடகை வாங்க வந்து விடுவார் தங்கமாரியப்பன்.

"ஹவுஸ் ஓனர் வர்றாரு!" என்று இரண்டாம் வீட்டில் குரல் கேட்க, "சிவகாமி! கொத்தனார் தாத்தா வந்துட்டாராம்.. அந்த வாடகை ரூபாயை எடுத்துட்டு வா!" என்றார் இரண்டாம் வீட்டில் இருந்த உலகநாதன்.


தொடரும்
 
Top