கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 6

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 6

"டீச்சர் ஆச்சி! டிவியில, பேப்பர்ல ஏதோ ஜோதிகா பேச்சால் சர்ச்சை அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்களே? அது என்ன டீச்சர் ஆச்சி?" என்று வசந்தாவின் டியூஷனில் படிக்க வந்திருந்த பெரிய பெண் ஒருத்தி கேட்டாள். அவ்வப்போது இப்படி நடப்புச் செய்திகள், அரசியல் இவற்றையும் அவர்கள் அலசுவது உண்டு.

"அதுவா? கோயிலுக்கு தானம் குடுக்கிறது, கும்பாபிஷேகம் பண்றது.. அதுக்குப் பதிலா பிள்ளைங்க படிக்கிறது மாதிரியான நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் அப்படின்னு அவங்க கருத்தைச் சொல்லி இருக்காங்க.. அவங்க என்னமோ சாதாரணமா தான் சொல்லி இருக்காங்க.. அதுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு கோஷ்டி பிரிஞ்சுகிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க" என்றார் வசந்தா.

"ஆச்சி! நீங்க என்ன சொல்றீங்க ஆச்சி? எது கரெக்ட்டு?" என்று அதே சிறுமி பதிலுக்குக் கேட்க,

"அவங்க சொல்றது ஒரு விதத்தில் சரி. வீணா யார் பாக்கெட்டுக்காவது போறதுக்காக கோயிலுக்கு நன்கொடை குடுத்து பணத்தை இழக்காம, அதை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.. உண்மையிலேயே கோயில், குளம் எல்லாம் பொதுமக்களுடைய பாதுகாப்புக்காக ஏற்பட்ட ஒண்ணு தான். எல்லா ஊர்கள்லயும் பாத்தீங்கன்னா கோயில்தான் உயரமான பெரிய கட்டிடமா இருக்கும். பாதுகாப்பானதாவும் இருக்கும். மழை, வெள்ளம் போல கஷ்ட காலங்கள் வந்தா மக்களெல்லாம் அதுல போய் பத்திரமா உட்கார்ந்துக்கலாம்.. அந்த காலத்துல கோயில்கள் பள்ளிக்கூடமா செயல்பட்டிருக்கு.. நிறைய கோயில்கள்ல திருக்குறள் சங்கப்பாடல்கள் அதெல்லாம் எழுதிப் போட்டிருப்பாங்க. கோபுர கலசத்தில் எல்லா விதமான தானியங்களும் இருக்கும். பஞ்சம் வந்தா அதை எடுத்து பயன்படுத்தலாம். பல வடக்கே உள்ள மாநிலங்கள்ல கோயில்களைத் தான் தங்களோட அரண்மனை மாதிரி ராஜாக்கள் பயன்படுத்தியதாவும், கோயில்னு இல்ல.. சர்ச்சு, மசூதி மாதிரியான முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் எல்லாத்துலயும் அந்த மாதிரி சமூக நலக்கூடங்களாத் தான் பயன்படுது.. செலவழிக்கிற பணத்தை நல்லபடியா பயன்படுத்தலாம்ங்குறது தான் என் கருத்து" என்றார் வசந்தா.

"டீச்சர்! நாங்க திருச்செந்தூருக்குப் போனோம் டீச்சர்! அங்கே நிறைய மண்டபமும் தங்கும் விடுதியும் இருந்துச்சு.. ஒவ்வொரு ஊர் பெயர் போட்டு கட்டடம் கட்டி வச்சுருக்காங்க" என்றான் ஒருவன்.

"ஒரு குழுவைச் சேர்ந்தவங்க, ஒரு ஊரைச் சேர்ந்தவங்க அவங்களுக்குள்ள காசு போட்டு இப்படி முக்கியமான வழிபாட்டுத் தலங்கள்ல சத்திரம், தங்கும் விடுதி கட்டி வச்சுருக்காங்க.. அதுல அவங்க உறவினர்கள், நண்பர்கள் போய் தங்கிக்கலாம். சாமி கும்பிட்ட மாதிரியும் ஆச்சு.. சின்ன சுற்றுலா போன மாதிரியும் ஆச்சு.. ரெண்டுமே மனசுக்கு அமைதி தர்ற விஷயம்தான். யாரோட மத நம்பிக்கையையும் புண்படுத்தாம அதே சமயத்துல நல்ல காரியத்துக்கும் அதை பயன்படுத்தணும். கோயில்ங்கிறது சாமி கும்பிடுற இடம் அப்படிங்கறதை விட, ஒரு கலையின் வடிவம். எப்படி எல்லாரும் எல்லா வேலையும் பார்த்து முடிச்சிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறோம், மாசத்துக்கு ஒரு தடவை படம் பாக்குறோம், அப்பப்ப தீபாவளி பொங்கல் கொண்டாடுறோம், அதே மாதிரி கோயில்ல இருக்கிற சிற்பங்களை ரசிச்சு, அங்க இருக்கிற மரங்களோட காத்துல சுகமா நின்னுட்டு, இனிமையான இசையைக் கேட்டுட்டு வர்றதும் திருவிழா கொண்டாடுறதும் மக்களுக்கு ஒரு மனமாற்றம் தான். கோயிலுக்கு செய்றதுனால சாமி சந்தோஷப்படுதோ இல்லையோ.. நிச்சயம் மனுஷனுக்கு சந்தோஷம் தான்" என்று தெளிவாகச் சொன்னார் வசந்தா.

"ஏன் ஆச்சி! நீங்க டிவியில வந்து இதெல்லாம் சொல்ல மாட்டேங்கறீங்க.. இப்படி தெளிவாப் பேசாம, குழப்பமாப் பேசி சண்டை போடுறாங்களே?" என்று கேட்டான் முகுந்தன்.

"டிவிக்காரங்க நம்மகிட்ட வந்து கேட்டா நாம கருத்து சொல்லலாம்.. இப்ப நீங்க கேட்டீங்க. நான் சொன்னேன்.. இன்னைக்கு முதல்லேயே கதை பேசியாச்சு.. அதனால கடைசில சொல்ற கதை இன்னைக்கு கேன்சல்.. வாங்க.. உங்கள் பாடத்தைப் பார்ப்போம்" என்றார் வசந்தா.

"டீச்சர் ஆச்சி, எங்க தாத்தா காசு சேக்குறாரே.. கோயில்ல தங்க கலசம் வைக்கிறதுக்குன்னு.. அது நல்லதா கெட்டதா?" என்று முகுந்தன் கேட்க, அதைப் பத்தி அப்புறம் பேசுவோம். இப்ப படிப்பைப் பார்ப்போம்" என்றார் வசந்தா.

கோயிலுக்குத் தங்கக் கலசம் வேண்டும் என்று கோவில் சார்ந்த ஒரு குழுவினர் சில வருடங்களாகப் பேசிக் கொண்டிருப்பதும், அதற்காக அவர்கள் தங்கமாரியம்மன் மேல் அதீத பக்தி கொண்டவர்கள் பலரைத் தொடர்பு கொண்டு வருவதையும் வசந்தா அறிவார். தங்கமாரியப்பன் ஒரே மூச்சாகப் பணம் சேர்த்துக் கொண்டு இருப்பதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்றாவது அந்தப் பேச்சு வரும் போது, தங்கக்கலசம் வேண்டாம், ஒரு கல்யாண மண்டபம் கட்டலாம், இல்லை ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு சில வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கலாம் என்ற தன் கருத்தை கூற வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம். அவ்வப்போது லேசாக அதைத் தங்கமாரியப்பனிடம் சொல்லியும் வைத்திருந்தார்.

ஆனால் ஓங்கிச் சொன்னால் ஏதாவது எதிர்ப்பு கிளம்பி விடுமோ, 'நீயே பம்பாய்க்காரி! உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்டு விடுவார்களோ என்ற தயக்கத்தில் பேசாமலே இருந்தார். ஏற்கனவே முற்போக்கான கருத்துக்கள் கொண்டவள் என்பதால் மதத்திற்கு எதிரானவர் என்பதை போன்ற ஒரு பேச்சும் அவரைப் பற்றி உலவுவதைத் தெரிந்து வைத்திருந்தார் வசந்தா. கடவுள் நம்பிக்கை அவருக்கும் இருக்கத்தான் செய்தது. எது சரியோ, அதைத் தங்கமாரியம்மனே நடத்திக் கொள்வாள், தனக்காகவா செய்யப்போகிறாள்.. தன் பக்தர்களுக்கு எது தேவையோ அதைச் செய்வாள் என்ற எண்ணம் தோன்ற தன் மனப்போராட்டத்தை அப்படியே கைவிட்டார் வசந்தா.

அன்றைய பாடத்தை முடித்துவிட்டு, "சரி எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க!" என்று வசந்தா விடை கொடுக்க, "ஒரே ஒரு குட்டிக் கதை சொல்லுங்க ஆச்சி!" என்று அவரைக் கேட்டனர் குழந்தைகள். அன்று கதை சொல்லும் மனப்பான்மை இல்லை அவருக்கு. அதனால், "தினமும் நானே கதை சொல்றேனே.. இத்தனை வருஷமா கதை சொல்லிருக்கேன்.. நாளைக்கு நீங்க யாராவது கதை சொல்லணும்.. இனிமேல் வாரம் ஒரு தடவை உங்க முறைதான். யாராவது ஒருத்தர் சொல்லுங்க. அவங்களுக்கு நான் ஒரு சின்னப் பரிசு குடுப்பேன். ஆனா இதுவரைக்கும் நான் சொல்லாத கதையா இருக்கணும்" என்று கூறி வகுப்பை முடிக்க,

"எனக்கு ஒரு சிங்கம் கதை தெரியும்! நான் ஏரோப்பிளேன் கதை சொல்லுவேன்! டோரா கதை சொல்லலாம்!" என்று தங்களுக்குள் பேசியபடி கலைந்து சென்றார்கள் குழந்தைகள். அந்த முன்னிரவு நேரத்தில் அவர்களது சந்தோஷக் குரல்கள் அந்த வளாகத்தை நிரப்பின.
 
Top