கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 7

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 7

"வா விநாயகம்! இவர்தான் நான் சொன்ன சாரு.. நம்ம வடக்குக் காம்பவுண்ட் இருக்குற இடத்தை விலைக்குக் கேட்டார்னு சொன்னேனே.. அவரு" என்று சின்னக்குட்டி அந்த மனிதரைத் தங்கவிநாயகத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். 'குட்டி கன்சல்டன்ஸி' என்று போர்டு போட்டுக் கொண்டு வெட்டியாக மூன்று, நான்கு பேர்கள் அமர்ந்து பொழுதெல்லாம் பாட்டு கேட்டுக் கொண்டும், கதை பேசிக்கொண்டும் இருக்கும் அந்த அலுவலகத்தைத் தான் 'என் ஆபீஸ்!' என்று பெருமையாகக் கூறுவான் சின்னக்குட்டி. அதுவும் தங்கமாரியப்பன் கட்டியிருந்த வளாகம் தான். 'உங்க பிரண்டுகளை மட்டும் தான் வாடகைக்கு வைப்பீங்களா? என் பிரண்ட்ஸ்க்கும் குடுப்பேன்' என்று விநாயகம் சண்டையிட்டதால், போனால் போகட்டும் என்று சின்னக்குட்டிக்கு ஒரு கடையை வாடகைக்கு விட்டிருந்தார் மாரியப்பன்.

அவன் அறிமுகப்படுத்திய மனிதர் டிப்டாப்பாக இருந்தார். காரில் வந்து இறங்கியிருந்தார். "சார் யாரு, அந்த இடத்தோட ஓனரா? இல்ல ப்ரோக்கரா?" என்று அமெரிக்கையான குரலில் அந்த மனிதர் கேட்க,

"என் இடம்தான் சார் அது!" என்றான் தங்கவிநாயகம். "இங்க பாருங்க! எனக்கு சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது. ஒரு கோடி குடுத்துடறேன்.. மூணு மாசம் டைம். முதல்ல 10 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தரேன். அதை வச்சு குடித்தனக்காரங்களை எல்லாம் ரெண்டு மாசத்துக்குள்ள காலி பண்ணிடுங்க.. அப்புறம் ஒரு மாசத்துல கட்டிடத்தை இடிச்சு சுத்தம் பண்ணித் தந்திடுங்க.. மூணாம் மாசம் ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்" இன்று கறாராகப் பேசினார்.

"ஒரு கோடி என்றதிலேயே வாயை பிளந்தான் தங்கவிநாயகம். அதற்குப்பின் அவர் கூறியதற்கு எல்லாம் தலையாட்டினான். சார் பத்து லட்சத்துல எப்படி சார் எல்லாத்தையும் காலி பண்ண வைக்க முடியும்? பதினாலு குடித்தனம் இருக்கு சார்.. திடீர்னு மொத்தமா காலி பண்ணச் சொன்னா பிரச்சனை பண்ணுவாங்க சார்.. அவங்க அட்வான்சைத் திருப்பிக் குடுக்கணும்.. கொஞ்சம் பாத்து செய்யுங்க சார்" என்று சின்னக்குட்டி கேட்க.

"அப்ப பன்னிரெண்டு லட்சம் குடுக்கிறேன்.. அதுக்கு மேல முடியாது" என்றார் அவர்.

"ஆளுக்கு ஒரு லட்சமாவது கேக்க மாட்டாங்களா? எல்லாருக்கும் புதுசா இடம் கிடைக்கணும்.. உடனடியா காலி பண்ணனும். எத்தனை விஷயம் இருக்கு?" என்று சின்னக்குட்டி பேரம் பேசினான்.

"நீங்க டாக்குமெண்ட் குடுங்க.. நான் எங்க வக்கீல் கிட்ட காட்டி, லீகல் ஒப்பீனியன் வாங்கிட்டு சொல்றேன். அதுக்கு அப்புறம் பேசிக்கலாம்" என்றபடி எழுந்தார் அவர்.

"சரிங்க சார்! சரிங்க சார்!" என்று பவ்வியமாகக் கூறினான் தங்கவிநாயகம். "உங்க நம்பர் சொல்லுங்க" என்று அதே அதட்டல் குரலில் கேட்டு தங்க விநாயகத்தின் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார் அந்த மனிதர்.

அந்தப் பெரிய வளாகத்தில் இருந்த கடைகளுக்கும், பக்கத்திலுள்ள கடைகளுக்கும் தண்ணீர் கேன் விநியோகிப்பதையும், டீ வாங்கித் தருவதையும், இடத்தைக் கூட்டி சுத்தம் செய்வதையும் தன் பணியாக வைத்திருக்கும் இளைஞன் சபரிக்கே கூட அந்த ஆளின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தது. தண்ணீர் குடத்தை நிரப்பி வைக்க வந்த சபரி, "சார்! வடக்கு காம்பவுண்டையா விலை பேசுறீங்க? அது இடமே ரெண்டு ரெண்டரைக் கோடி போகுமே சார்?" என்றான்.

அவன் கூறியதை விநாயகம் கவனிக்கவில்லை. தன் செல்போனில் கால்குலேட்டர் எடுத்து ஒரு கோடிக்கு எத்தனை சைபர் போட வேண்டும், பன்னிரெண்டு லட்சம் கழித்தால் எவ்வளவு வரும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

சபரி கூறியது சின்னக்குட்டியின் காதில் விழுந்திருக்க, 'தொலைத்து விடுவேன்' என்பது போல் அவனைப் பார்த்து ஒற்றை விரலை நீட்டினான் சின்னக்குட்டி. பின்பு அவனைத் தனியாக அழைத்து, "இதை முடிச்சுக் குடுத்தா நல்ல கமிஷன் வரும்.. உனக்கு வேணும்னா அம்பதாயிரம் வாங்கித் தாரேன்.. நீ எல்லாம் ஐம்பதாயிரத்தை என்னைக்காவது மொத்தமா வாழ்நாளில் பாத்திருக்கியா.. வாயை மூடிட்டு இரு" என்று கூற,

"அம்பதாயிரம் என்ன சார், அஞ்சு கோடியே தினமும் பாக்குறேன்" என்றான் சபரி. "எங்கே டா?" என்று சின்னகுட்டி ஆச்சரியமாகக் கேட்க,

"நம்ம ஸ்டேட் பேங்க் இருக்குல்ல சார்.. அதுக்கும் நான் தானே தண்ணி கேன் போடப் போறேன்.. அங்கதான் தினசரி பாக்குறேனே.. கட்டுகட்டாக எண்ணுறாங்களே" என்றான்.

"கொழுப்பெடுத்தவன் டா நீ.. கஞ்சிக் இல்லாத உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாது.. ஏதாவது வாயை வச்சே.. தொலைச்சுருவேன்.. தொலைச்சு!" என்று மிரட்டினான் சின்னக்குட்டி.

'கஞ்சி குடிச்சாலும் உழைச்சுக் குடிக்கிறேன்.. உன்னை மாதிரி ஏமாத்தி குடிக்கல' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அதை வாய்விட்டுக் கூறவில்லை. எப்போதாவது கொத்தனார் தாத்தாவைப் பார்த்தால் கேட்க வேண்டும், வடக்கு காம்பவுண்ட்டை கொடுக்கப் போகிறீர்களா என்று. ஏனென்றால் அது தாத்தாவிற்கு நெருக்கமானது என்று அவனுக்குத் தெரியும். அவ்வளவு எளிதாக விற்றுவிட மாட்டார், அப்படி விற்பதற்கான அவசியமும் இல்லை என்றே சபரி நினைத்தான். தங்கமாரியப்பன் தன் வாழ்க்கைப் பயணத்தில் சொத்துக்களை மட்டும் சம்பாதிக்கவில்லை, சபரி போன்ற நல்ல உள்ளங்களையும் தான் சேர்த்து வைத்திருந்தார்.
 
Top