கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோகரா- 12

hamsa

New member
இல்லறம்-12

பெற்றோர் பிரச்சனை பற்றி யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தாள். தன் நெருங்கிய தோழியிடம் பகிர்ந்து கொண்டாள். ஆனால் அவளும் எல்லாம் சரியாகிடும் கவலைப்படாத என்று மட்டும் தான் கூற முடிந்தது. தீர்வு கூற முடியவில்லை.
"அம்மா அப்பா நாந்தான் சம்பாதிக்கறனே? நீங்க வேற ஒரு வீட்டுல இருக்கலாமே ?"
"இல்ல! அது நன்னாருக்காது. நாளைக்கே நீ புள்ள உண்டாகிட்டா உனக்கு நாங்க செய்யணும். நீ காலம்பூரா எங்களுக்காக வேலைக்கு போக வேண்டி இருக்கும். அப்பாவோட பென்ஷன் பணம், மருந்து, சாப்பாடு, வாடகை எல்லாத்துக்கும் பத்தாது. அவன் என்ன சொன்னா என்ன ?நாங்க பெத்தவா தானே?"
ரேவதி எவ்வளவோ கூறியும், அவர்கள் வர மறுத்து விட்டனர்..
எத்தனைதான் மனோவும் அவன் பெற்றோரும் இவளிடம் அன்பாக இருந்தாலும், தன் வீட்டு அவல நிலையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல், தவித்தாள்.இந்த மானக் கேடான விஷயத்தை எப்படி அவர்களிடம் சொல்ல முடியும் ?
இது அவள் நினைத்தது. ஆனால் .........
மனோவுக்கோ, இல்லை அவன் பெற்றோருக்கோ இது அத்தனை பெரிய விஷயமாகத் தெரியவில்லை.வீட்டுக்கு வீடு வாசப் படி .யாரில் வீட்டில்தான் பிரச்சனை இல்லை?
ஒருநாள், அலுவலக சம்பந்தமாக மனோவுக்கு வெளியில் செல்ல வேண்டி இருந்தது .
சென்று விட்டு வரும் வழியில், மிக அருகிலேயே தான், தனது மாமனார் வீடு இருப்பதால், இத்தனை தூரம் வந்தவனுக்கு அவர்களையும் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது. அவர்களின் சம்பந்திதான் கதவைத் திறந்தார். இவனுக்கு சரியான வரவேற்பு இல்லை. ரேவதி இந்த விஷயத்தை பற்றி எதுவும் கூறாததால், இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன மாமி வெங்காயம் நறுக்கிட்டேளா? நீங்க உள்ள போகலாம்". சமையலறையில் இருந்து சொல்லிக்கொண்டே சம்பந்தி மாமி வந்தார். பதட்டத்தில் அவர் கையை நறுக்கிக் கொண்டார். மாப்பிள்ளையின் முன் தன் நிலை உணர்ந்தவருக்கு, கண்ணில் தண்ணீர் கொட்டியது. வந்த ஒரு சில நிமிடங்களிலேயே, நிலைமையை இவன் ஓரளவு ஊகித்து விட்டான்.

அவரின் கண்ணீரை இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக மனோ அவர்களின் கண்ணீரை போக்கினான்.
" மாமா! மாமி! நீங்க கொஞ்ச நாளைக்கு எங்காத்துலதான் வந்து இருங்களேன். ரேவதிக்கும், கொஞ்சம் சந்தோசமா இருக்கும்" எல்லாமே வெளிப்படையாக தெரிந்தாலும் மனோ அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவன் அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

"என்ன மாப்பிளை இது, சம்பந்தி வீட்டுல வந்து எப்படி? மாமாதான் தயங்கினார். எந்த விஷயமாக இருந்தாலும் தன்னோடே போகட்டும். பெண்ணை கட்டிக் கொடுத்த இடத்தில் தெரியக் கூடாது என்று நினைத்தார்கள்.

"அதான் அவர் கூப்புடறாரே , நீங்களும் அங்க போய் இருக்க வேண்டியதுதானே?" சிறிதும் கூச்சமே இல்லாமல் அவர்களின் சம்பந்தி மாமா பெரியதாக வம்பளந்தார்.

"சம்பந்தி வீட்டுல வந்து இருக்கறதெல்லாம் ஒரு விஷயமே இல்ல" தீர்க்கமாய் அவரை பார்த்தவாறு மனோ சொன்ன விதத்தில் சம்பந்தி மாமாவுக்கு விழுந்தது கொட்டு.

நேரடியான இந்த தாக்குதலைக் கூட உணராதது போலவே இருந்தார்.

"மாமா! நானும் உங்களுக்கு மகன்தானே? சரி, வேண்டாம். ரேவதி? அவாத்துக்கு நீங்க வர்றதுல என்ன? குரல் அத்தனை பாசம். அத்தனை குழைவு . "உங்களுக்கு வேற சாயிஸ் இல்ல. நான் வெயிட் பன்னேறேன். அங்க நம்மாதுக்கு போகலாம்" இப்போது அந்த வார்த்தையில் அத்தனை அழுத்தம் இருந்தது.

இவன் வெளியில் காத்திருந்தான். அதற்குள் இவன் தன் பெற்றோரிடம் விஷயத்தை சொல்லி இருந்தான்.
"அதனால் என்ன? வரட்டுமே ?" தன் தந்தையை நினைத்து பயந்திருந்தவனுக்கு இந்த வார்த்தை நிம்மதியை தந்தது.

ஆனால் பாவம் இதை பற்றி யாருமே ரேவதிக்குதான் சொல்ல வில்லை. அவள் அலுவலகத்தில் இருக்கும்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டனர்.

இவனும், அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டான்.

வீட்டில்,

"வாங்கோ! வாங்கோ! "வரவேற்பு நன்றாகவே இருந்தது. இவர்களுக்குத்தான், சம்பந்தியை பார்க்க வெட்கம் பிடுங்கியது.

"வாங்கோ மாமி, இது நம்பாம்(நம்ம வீடு)"

"இதோ அந்த ரூமுல நீங்க இருந்துக்கலாம். காபி போடவா, டிபன் சாப்பிடறேளா ? இன்னிக்கு நீங்க கம்ப்ளீட் ரெஸ்டுல இருங்கோ. நாளைலேர்ந்து சேர்ந்து ஆத்து வேலைய பாத்துக்கலாம். இதோ கொஞ்ச நேரத்துல ரேவதி வந்துடுவா"

"உங்களுக்கு ரொம்ப தொந்தரவு" ரேவதியின் அன்னைக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது .

"என்ன இப்படி பேசறேள் ?" லஷ்மி மெதுவாக அவர் கண்களை துடைத்தார்.

"என்னோட தம்பி குடும்பம் எப்படியோ அப்படிதான் நீங்களும். நீங்க வந்ததுல எனக்குதான் ரொம்ப நல்லது. அட்லீஸ்ட் சம்பந்தி எதிர்க்க எம்பொண்டாட்டி என்ன அடிக்க மாட்டா !" மனோவின் தந்தை தான் பேச்சை மாற்றினார்.
அவர்கள் முகத்தில் சிரிப்பு எட்டிப் பார்த்தது. லஷ்மிதான் முறைத்தாள்.

ரேவதிக்கு இது ஆச்சர்யம்தான். தான் அத்தனை சொல்லியும் வராத பெற்றோர் கணவன் சொல்லை தட்டாத மர்மம்தான் என்ன?

அதை அவர்களே சொன்னார்கள். பையனா இருந்து அவர் கூப்புடும் போது எங்களால தட்ட முடியல. ஏதோ மெஸ் மரிசம் பண்ண மாதிரி இருந்தது.
அவன் தன் அன்பாலேயே அவர்களை ஆட்கொண்டான்.

அன்றைய இரவு,

"ரேவதி ! அவாளை ஒன்னும் சொல்ல கூடாது. வர்ற சண்டே மாடி ரூமை க்ளீன் பண்ணிடறேன். இனிமே அவா அங்கேயே இருக்கட்டும். நீயே அவாளை பார்த்துக்கோ. முதல்ல கொஞ்ச நாளைக்கு அவாளுக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கும். போக போக சரியா போய்டும்"

"நீங்க அவாளை பார்க்க போனேள் சரி, என்னத்துக்கு இங்க கூட்டிண்டு வந்தேள் ? நான் எப்படி உங்க அப்பா அம்மா மூஞ்சில முழிப்பேன்?"

பெருமூச்சு விட்டான். "இதை நீ கண்டிப்பா தப்பா நினைக்க கூடாது" .அங்கு நடந்ததை சொல்லலாமா?கூடாதா? மனைவியிடம் மறைக்க வேண்டுமா? இதனால் ரேவதிக்கும் ஹரிக்கும் பிரச்சனை வந்தால்? யோசித்தான் மனோ.

"அவா என்னோட பேரன்ட்ஸ்" ரேவதியின் குரல் கலைத்தது.

"இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது. ப்ராமிஸ் "

"ப்ராமிஸ்"

"நான் அங்க போன போது அங்க உங்க அப்பா அம்மாக்கு துளி கூட மரியாதை இல்லன்னு, புரிஞ்சுது. என்ன பார்த்ததும் அவாளுக்கு வாய் நிறையா வாங்கோன்னு கூப்புடனுன்னு ஆசை. ஆனா வாயே திறக்க முடியல" சற்று தயங்கினான்.

எதுவா இருந்தாலும் சொல்லுங்கோ.

"உங்க அம்மாக்கு கைல கத்தி பட்டுடுத்து . அதை பார்த்ததும், கேவி கேவி அழ ஆரம்பிச்சுட்டா .இந்த வயசுல இதெல்லாம் நடக்க கூடாது. மனுஷனுக்கு,மரியாதையும், தன் மானம் ரொம்ப முக்கியம். அது தான் மன தைரியம் கொடுக்கும். ஆனா அவாளுக்கு அதுவே போயிடுத்து . என்னால அத பார்த்துண்டு சும்மா இருக்க முடியல ரேவதி .
இந்த மாதிரி வயசான காலத்துல அவளால எந்த அவமானதையும் தாங்க முடியாது. அதுக்கான அவசியமும் இல்ல. உங்க அண்ணா எப்படியோ அதே மாதிரிதான் நீயும். உனக்குன்னு பொறுப்புகள் இருக்கு. உன்னோட பொறுப்புகள் என்னோடதும்தான்" நட்சத்திரங்களை பார்த்த படி சொன்னான்.
இதை விடவும் ஒரு மனைவிக்கு வேறு என்ன வேண்டும்? உன்னுடைய பொறுப்புகள் என்னுடையதும் என்று சொல்லும் கணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஏனோ தன்னுடைய சொந்தங்களை மனைவிகள் தன் சொந்தமாக ஏற்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் மனைவி வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் உன் வீடு என்று பிரித்துதான் பேசுவார்களாம். ரேவதியின் அலுவலக தோழிகள் சொல்லி இருக்கிறார்கள். உனக்காக நான் என்று பொதுவில் அத்தனை பேர் முன்பும் சொல்லும் ஆண் மகனின் கம்பீரம் மனோவைத் தவிர யாருக்கு வரும்?
"நான் இவருக்காக என்ன தந்துருக்கேன்? வண்டி வண்டியா திட்டும், மட்டம்தட்டுதல்களும் தான். ஆனா இவர்?"
அவனை ஓடி வந்து பின்புறமாய் கட்டிக் கொண்டாள் .
"என்ன மன்னிச்சுடுங்கோ! நான் உங்கள எவ்ளோலாம் பேசியிருக்கேன். என்ன மன்னிச்சிடுங்கோ " இதற்கு மேல் அவளுக்கு தாங்க முடியாது. அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

"எனக்கு முன்னாடியே ஓரளவு தெரியும். இந்த விஷயத்தை யாரு கிட்ட சொல்லறது என்ன பண்ணறதுன்னு தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்"

"எனக்கு தெரியும்"

கணவனின் பதிலில் விருக்கென தலை நிமிர்த்தினாள்.

"எப்படி?" அவன் கண்களை ஆழ்ந்து நோக்கினாள் .

"இதுதான் விஷயம்னு தெரியாது. ஆனா ஆபீசுல பிரச்சனைன்னா ஒன்னு நீ சொல்லி இருப்ப, இல்ல, சூர்யா சொல்லி இருப்பான். எதுவுமே இல்ல. அப்ப சொந்த விஷயத்துலதான் பிரச்னை இருக்குன்னு நினைச்சேன். அதுனாலதான் அவாளை பார்த்தே ஆகண்ணுண்னு அங்க போனேன்"

நெஞ்சில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள் ரேவதி.
"நீ எதுக்கு அழற ? ஏ ! இரு அழாத" அவனால் தாங்க முடிய வில்லை

"இல்ல! இல்ல! நான் பண்ணதெல்லாம் தப்பு. உங்க மனச புரிஞ்சுக்காம நான் எப்டிலாம் வார்த்தையால குத்தி கிழிச்சுருக்கேன்"
தலையில் அடித்து முகம் மூடி கேவி கேவி அழுதாள்.

"நான் முன்னாடியே உங்ககிட்ட விஷயத்தை சொல்லி இருக்கணும்"

அவளை இழுத்து கட்டிக் கொண்டான். அப்படியே அழுது கொண்டிருந்தவள் சிறிது நேரத்திலேயே சமாதானம் ஆனாள்.

"அவாள மாதிரியே நானும் இங்கையே இருக்கட்டுமா ?"

"ம்! இரேன்"

"நான் சொன்னது ஹவுஸ் பத்தி இல்ல"

"வேற ?"

"இன்கனா, இங்க" அவன் நெஞ்சில் கை வைத்து சொன்னாள்.

"நீ அங்கதான இருக்க?'

"அப்ப ஏன் வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னேள் ?"

"உன்னோட சந்தோஷத்துக்காக !"

"அடுத்து வர்றவர் உங்கள மாதிரி என்ன பார்த்துப்பாரா?"

"தெரியல"

"நெய் போட்டு பருப்பு சாதம், மிளகு ரசம் இதெல்லாம் போடுவாரா? ஹார்லிக்ஸ் கலந்து தருவாரா?"

"சமையல் தெரிஞ்சவரா இருந்தா பண்ணுவார்"

"அப்டியா ?"

"சரி! அது போகட்டும். அவ அம்மா அப்பா என்ன அவா பொண்ணாட்டம் பார்த்துப்பாளா ?இல்ல ! வர்றவர் என்னோட பேரண்ட்ஸை தன்னோட பேரண்ட்ஸா பார்த்துப்பாரா?"

"இதுக்காகவெல்லாம் நீ என்ன பொறுத்துக்க வேண்டிய அவசியம் இல்ல"

"நாந்தான் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டேனே?" மீண்டும் கண்ணீர் குளம் கட்டியது .

"ஒரே ஒருதடவை உனக்கு என்ன புடிச்சிருக்குனு சொல்லேன். காலம் பூரா தாங்கிக்கறேன்"

"எனக்கு ஒரே ஒரு முத்தம் தாங்களேன். என்னோட காதல உங்களுக்கு அள்ளி தரேன்" இருவரும் மனதில் நினைத்தது வேறு. வார்த்தைகளை உதிர்த்தது வேறு.

"உங்களுக்கு என்ன புடிக்கலையா?"

"இல்ல! அப்படி இல்ல. நீ சொன்ன காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கு? காலம் பூரா இது மாறாது" மனதின் வலிகள் வார்த்தைகளாய் வந்தது.

"ஆமா! நான் சொன்ன காரணங்கள் அப்படியே தான் இருக்கு. நான் ஒத்துக்கறேன். ஆனா நா மாறி இருக்கேன். எனக்கு அழகுன்னா என்னன்னு இப்பதான் புரியறது. உங்களோட இந்த அழகான மனசு வேற யாருக்கு வரும்? என்னோட மனசுல நீங்கதான் இருக்கேள் . அங்க வேற யாராலயும் வர முடியாது"

இவன் அமைதியாக இருந்தான்.

அந்த அமைதி இவளை கொன்றது.

"எனக்கு இந்த நெத்தி, இந்த கண்ணு , இந்த காது, இந்த உதடு எல்லாமே வேணும்"முத்தங்களால் அடையாள படுத்தி கொண்டிருந்தாள்.

இப்போது அவளுக்கு எதை பற்றியும் கவலை இல்லை. அவளுக்கு அவன் தான் வேண்டும். இந்த நிமிடம் அவன் மட்டும் தான் வேண்டும். அவனின் கொஞ்சல்கள், முத்தங்கள்,தாபம்,ஆசை,காமம் இவற்றிற்காக காத்துக் கொண்டிருக்கிறாள் .
மனோ என்ன சொல்வான்?
நாமும் ரேவதியுடன் காத்துக் கொண்டிருப்போம்........
மயக்குவான் மனோ........
 
Top