கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோஹரா-8

hamsa

New member
மணாளனே மனோஹரா-8
இல்லறம்-8

"ஏண்டி பேரு தான் லவ் மேரேஜ். என்னிக்காவது ஒரு நாள் இந்த மாதிரி நீ சொல்லி இருக்கியா ?"
"உன் பொண்டாட்டி மட்டுமில்லடா, என் பொண்டாட்டியும்தான்" என்றார் மாமா.
மாமியாரும் மருமகளும் சேர்ந்து ஒருங்கே பத்ர காளி அவதாரம் எடுக்க, ரேவதியோ மனோவின் தோளில் முகம் புதைத்து வெட்கத்தை மறைக்கத் தெரியாமல் மறைத்தாள்.
வீட்டிற்கு வந்ததன் பிறகும் அவள் முகம் புதைத்த வாசம் அப்படியே இருந்தது. விரும்பியோ, விரும்பாமலோ நடந்தது. இதோ இப்போதும் அவனைக் கட்டி கொண்டுதான் அவள் உறங்குகிறாள். சுகமாக. ஆனால் இவனுக்குத்த்தான் அவளை தள்ளவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல் கஷ்டமாக இருந்தது.
இதோ அதோ வரலஷ்மி நோன்பும் வந்து விட்டது. லஷ்மி மாமி என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று ரேவதியின் பெற்றோர் சீர் வைத்து விட்டார்கள். முதல் நாளே அம்பாளை அழைத்து பாட்டு பாடி பாயசம் வைத்து எல்லாம் செய்தார்கள். அலுவலகத்தில் இருந்து வந்தவனுக்கு வாயிலில் போட்டிருந்த இழை கோலமும் வண்ண விளக்குகளும் மனதிற்கு இதமாக இருந்தது. மாவிலையும் , தோரணமும் உங்கள் வீட்டில் இன்று விசேஷம் என்று அனைவருக்கும் ஆல் இந்தியா ரேடியோ போட்டது.
ரேவதி வருபவர்களுக்கு கொடுக்க வளையல்களைக் கட்டிக் கொண்டிருந்தாள். தாம்பூல பை ரெடி பண்ணுவது, அம்மனுக்கு பூ தொடுப்பது, அலங்காரம் பண்ணுவது என்று நேரம் போனதே தெரியவில்லை.
லஷ்மிக்கும் தான் முடியவில்லை. மூன்று நாட்கள் விசேஷமாயிற்றே! அதிலும் நோன்பு அன்று லஷ்மி வெற்றிலை பாக்கு வாங்க பலரை அழைப்பது வழக்கம்.
மறு நாள் விடியலிலேயே வீட்டில் வேலைகள் ஆரம்பித்திருந்தன. இப்போதும் அவர்கள் யாரும் ரேவதியிடம் பெரிதாக பேசுவதில்லை. அவள் ஏதாவது கேட்பாள். அதற்கு பதில் வரும். காலையில் குளித்து விட்டு வந்தவள், தன் அறையின் கதவை தட்டினாள் . மாமியாருக்கு பதில் கணவன் வந்தான்.
"அம்மா இல்லையா?" கதவுக்கு பின்னிருந்து மறைந்து கொண்டு கேட்டாள் .
"என்ன வேணும் சொல்லு. அம்மா அடுப்புல பாயசம் பண்ணிண்டு இருக்கா"
"இல்ல மடித் துணி வேணும்"
"சரி இரு! கொண்டு வரேன்."
"ன்ன! அங்கையே என்னோட மத்ததும் போட்டுருக்கேன். அதுவும் வேணும்"
பதில் சொல்லாமல் வெளியேறி இருந்தான். இவளுக்குத்தான் கூச்சமாக இருந்தது.
கொண்டு வந்து கொடுத்தவனிடம், "கொஞ்சம் அம்மாவை அனுப்பறேளா?"
"எதுக்கு?"
"இல்ல எனக்கு மடி கட்டிக்க தெரியாது. அதுதான்!"
பெரு மூச்சு விட்டவன் போனில் யூ டியூப் விடியோவை போட்டுக் கொடுத்தான்.
இதன் அர்த்தம் என்ன? எங்கம்மா ஒனக்கு ஒன்னும் வேலைக்காரி இல்ல. சொல்லாமல் சொல்லி விட்டான். கண்ணை கரித்தது. அம்மனை வைத்துக் கொண்டு கண் கலங்கக் கூடாது. முழுங்கினாள்.
"அம்மா! நான் என்ன பண்ணனும்?"
"முந்தியை சரி சமமாகி சொருகிக் கொண்டு வந்தவளை பார்த்தவன் அசந்து போய் விட்டான். திருமணத்தின் போதே மயங்கியவன் தானே. லஷ்மிக்குமே அவளை பார்த்ததும் திருஷ்டி கழிக்க வேண்டும் போலத் தான் இருந்தது. ஏனோ காதில் தொடப்பக்கட்டைக்கு பட்டு குஞ்சலமா? கேட்கத்தான் செய்தது.
மருமகளுக்கு எதுவும் பதில் சொல்லவில்லை.
"அம்மா ! அம்பாளுக்கு பால் நைவேத்யம் பண்ணட்டுமா? பசிக்குமே ?"
சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்தாள் மாமியார்.
"சரி" ஒற்றை பதில்.
இவள் உதவி செய்ததில் வெகு விரைவாகவே சமயலுடன் சேர்த்து நைவேத்தியமும் தயாராகி விட்டது. மனோ மந்திரம் சொல்ல சொல்ல இருவரும் திருப்பி சொல்லி பூஜை செய்தார்கள்.
லஷ்மிக்கு பழக்கமானதால் வேகமாக சொன்னாலும், ரேவதிக்கு சிலது வாயில் நுழையவில்லை. அவர்கள் வீட்டில் வாத்தியார் வந்து மந்திரம் சொல்லுவார். அவள் அன்னை பூ போடுவார். வெகு விரைவாகவே முடிந்து விடும்.
இங்கு சற்று நேரம் அதிகமானலும் இவளுக்கு மனதிற்கு ஏதோ விதமான நிம்மதியா? ஆனந்தமா புரியவில்லை. மாமியாரின் அம்பாள் வயதான பழுத்த சுமங்கலி போல இருந்தாள் . இவள் அம்பாள் இவளைப் போலவே புதிதாக திருமணமான சின்ன பெண் போல இருந்தாள் .
பூஜை முடிந்தது. சரடு கட்டிக் கொண்டார்கள். திருமாங்கல்ய சரடும் மாற்றிக் கொண்டார்கள். இந்த முறையும் கணவனே மூன்று முடிச்சிட்டான். இப்போதும் அவள் தலை குனிந்துதான் இருந்தது. பெரியவர்கள் காலில் விழுந்தார்கள். தீர்காயுசா இருங்கோ. சொல்லி விட்டு லஷ்மி தன் அறைக்கு சென்று விட்டார். பின்னோடே கணவனும் மகனும் சென்றனர்.
"என்னாச்சு லஷ்மி?"
"என்னங்க இது? நல்ல நாள் அதுவுமா நம்ம கால்ல குழந்தைகள் விழறா . அவாளுக்கு நான் என்ன சொல்லணும்? தீர்க்க சுமங்கலியா இரு. ஆத்துல சீக்கிரம் குழந்தை சத்தம் கேக்கணும். இதெல்லாம் நம்மால சொல்ல முடியுமா? இத்தனை வருஷமா நானும் இந்த அம்பாளுக்கு பூஜை பண்ணிண்டு வரேன். ஏன்னா! நம்ம குழந்தைக்கு இப்டி?இந்த மாதிரி ஒரு நல்ல புள்ளை எங்கையாவது உண்டா? தினம் தினம் குடிச்சுட்டு பொண்டாட்டிய அடிக்கறவனுக்கு காலம் பூரா பாத்துக்கற பொண்டாட்டி கிடைக்கறா. நம்ம புள்ளைக்கு என்ன குறைச்சல்? அவ சொல்லற மாதிரி அழகா? உங்கப்பா சுமார். உங்கம்மா ரொம்ப அழகு.இவனும் தாத்தாவை கொண்டு வந்துருக்கான். அதுக்கு என்ன பண்ண முடியும்? விவகாரத்துங்கறது அத்தனை சின்ன விஷயமா? என்னால தாங்க முடியலைன்னா"
மாமியார் உள்ளே அழுவது இவளுக்கும் கேட்டது.
யாரிடமும் எதுவும் பேசவில்லை. துணி துவைக்கும் கல்லில் சென்று அமர்ந்து கொண்டாள் .
அனைவரும் லஷ்மியை சமாதானபடுத்தி உண்டு முடிப்பதற்கும் ஒவ்வொருவராக வீட்டிற்கு வருவதற்கும் சரியா இருந்தது.
முதலில் நாராயணனும் சுந்தராம்பாளும் வந்திருந்தனர். அவர்களே இவர்களுக்கு உணவு பரிமாறினார்கள். மகளையும் மருமகனையும் அந்த கோலத்தில் பார்த்தவர்களுக்கு மனதிற்கு நிறைவாக இருந்தது.
பிறகு ஒவ்வொருவராக வர வர பேசிக் கொண்டும் தாம்பூலம் கொடுத்ததும் நேரம் போனதே தெரியவில்லை. வந்தவர்கள் பெரும்பாலும் கேட்டது. விசேஷம் உண்டா?
"இல்ல! இனிமேதான்"
இத்தனை பேரும் மனோவுக்கு விவாகரத்து என்றால் எப்படி எல்லாம் பேசுவார்கள்? மனம் யோசித்தது.
"நீ என்ன வேண்ணா பிளான் போடு. நான் நினைக்கறதுதான் நடக்கும்" அம்பாள் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் .
அன்றைய இரவு தன்னை பெற்றவளிடம் மாங்கு மாங்கு என்று சண்டை போட வந்த லஷ்மிக்கு கண்ணில் தண்ணீரே கண்ணீராய் கொட்டியது. மனதில் ஆயிரம் கேள்விகள். கேட்கத்தான் வேண்டும். முடியவில்லை. தன்னுடைய அலங்காரத்திலும் அழகான புன்னைகையிலும் அனைத்தையும் மறக்கடித்து விட்டாள் .
"நான் ஒரு விளையாட்டு பொம்மையா? ஜெகன் நாயகியே உமையே உந்தனுக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"
"நீ என்ன வேண்ணா பிளான் போடு. நான் நினைக்கறதுதான் நடக்கும்" அம்பாள் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் . யாரை பார்த்து?
விவாகரத்து தானே என்று பலரும் இப்போது ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் ஏற்றுக் கொள்ள கூடிய அத்தனை சுலபமான விஷயமா? எங்கோ எதிலோ விட்டுக் கொடுக்கக்
கூடிய சில விஷயங்களில் பல விஷயங்கள, பெரிய விஷயங்கள் அடக்கம். சகிப்புத் தன்மையால் அடையக் கூடிய சந்தோஷங்கள் எப்படியோ?ஆனால் இழப்புகள் குறைவாகவே இருக்கும் என்பது நிச்சயம்.
ரேவதியிடம் மாற்றங்கள் வரத் தொடங்கின.
ரேவதியின் உண்மையான மாறுதலை , மாமனார், மாமியார் புரிந்து கொள்ளும்படி ஒரு நிகழ்வு வந்தது.
வழக்கம்போல அவள் இரவில் பாத்ரூம் போக எழுந்து கொள்ளும்போது, ஹாலில் விளக்கு எரிவதை பார்த்தாள் .
அங்கே லஷ்மி சோர்வுடன் அமர்ந்திருந்தாள் .
"அம்மா என்னமா இங்க உட்கார்ந்திருக்கேள்?"
"முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு ?" தன் கையாலேயே முகத்தில் இருந்த வியர்வையைதுடைத்து விட்டாள் .
"என்னன்னே தெரியல. என்னவோ வயத்தை வலிக்கறது" அடி வயிற்றை பிடித்துக் கொண்டே சொன்னாள் .
"ஒரு வேளை கேஸ் ப்ராபளமா ?"
"இல்லடி! என்னவோ தூரமாணா வர்ற மாதிரி இருக்கு"
"எதுக்கும் பெருங்காயம் போட்டு மோர் குடிங்கோ" ஓடி சென்றவள் மோர் டம்ளரை தந்தாள்.
அப்பாட்ட சொன்னேளா ? நான் வேண்ணா கூப்பிடவா ?"
"இல்ல! அவர் பாவம் இப்பதான் தூங்க ஆரம்பிச்சுருப்பார். தொந்தரவு பண்ண வேண்டாம். போ நீயும் போய் தூங்கு"
"இல்லம்மா! நீங்க தூங்குங்கோ அப்புறமா போறேன்" இரவு முழுவதும் அவளுடனே உட்கார்ந்திருந்தாள்.
தனக்காக அருகிலேயே உட்கார்ந்து கொண்டு சிறிது தூக்கமும் சிறிது முழிப்புமாக தள்ளாடியவளை பார்க்க லக்ஷ்மிக்கு பாவமாக இருந்தது.
மறு நாள் காலை கணவனிடம் தலை குனிந்தபடியே,
" நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்"
"என்ன" என்பது போல பார்த்தான்.
"அது வந்து உங்க அம்மாக்கு ராத்திரியெல்லாம் ரொம்ப வயத்தை வலி. ரொம்ப கஷ்டப்பட்டுட்டா . பெருங்காயம் போட்டு மோர் குடுத்தேன். கொஞ்ச நாழி கழிச்சு தூங்கிட்டா. இருந்தாலும் ஒரு லேடி டாக்டரை பார்த்துட்டு வரல்லான்னு தோன்றது "
"தேங்க்ஸ், நான் அப்பாகிட்ட பேசறேன்"
மருத்துவரிடம் சென்று பார்த்து போது,
மாதவிடாய் நின்றுவிட்டாலும், வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமா என்று பார்த்துவிடலாம் என்று ஒரு முறை ஸ்கேனும், டீ எம் சியும் செய்து பார்த்தார்கள். மாமியாருக்கு ஒன்றும் இருக்க கூடாது என்று மஞ்ச துணியில் குல தெய்வத்திற்கு முடிந்து வைத்தாள் .இவளை பார்த்த மாமனாருக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. மாமியாரின் சமையல் அறை பொறுப்புகளை முழுவதுமாக இவளால் செய்ய முடியவில்லை என்றாலும், ஓரளவேனும் இவளால் செய்ய முடிந்தது.
ஆனால் மறந்தும், மனோ இவள் கையால் தண்ணீர் கூட அருந்தவில்லை. மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரியாமல் பார்த்துக் கொண்டாலும், இவளுக்குத்தான் தெரியுமே. அவனின் நிராகரிப்பு இவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வரும். சில சமயம் கண்ணை துடைத்துக் கொள்வாள். பல சமயங்களில் முழுங்கி விடுவாள்.
மயக்குவான் மனோ........
 
Top