கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மழை நேர மழலைக் குரல்

Puvana Chandrasekaran

Moderator
Staff member
மழை நேர மழலைக் குரல்

அதிகாலை நேரம். இருள் பிரிந்தும், பிரியாமலும் இருந்த நேரம். காற்றில் ஈரத்தின் மணம். மேகங்கள் சூல் கொண்டு கருத்த உடல்களுடன் அலைந்து கொண்டிருந்தன. வாசல் வரை வந்து விட்டு வீட்டுக்குள் நுழையலாம், வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு தயங்கி நிற்கும் விருந்தாளி போல மழை பொழியலாமா, வேண்டாமா என்று வானம் யோசித்துக் கொண்டிருந்த காட்சி.
சிலுசிலுவென்ற காற்று உடலை ஊடுருவிச் செல்லும் போது உடல் சிலிர்த்தது.

சென்னையின் புறநகர்ப் பகுதியில் நிறைய ஃப்ளாட்டுகள் இல்லாமல், தனித்தனி வீடுகளாக இருந்த ஒரு சிறிய ஊரின் நட்ட நடுப் பகுதியில் ஓர் அமைதியான தெரு, காலை நேரப் பரபரப்புக்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டு மக்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்த நேரம். தெருவின் கோடியில் ஒரு குப்பைத் தொட்டி.

குப்பைத் தொட்டியில் குப்பைகளுடன் ஒரு சிசு, பழைய துணியில் சுற்றப்பட்டுக் கிடந்தது.‌ குப்பையைக் கிளற அங்கே வந்த ஒரு தெருநாய் குழந்தையைப் பார்த்து விட்டு பலமாகக் குரைக்க ஆரம்பித்தது.

வாசலைத் தெளித்துக் கோலம் போட வந்த அந்தப் பெண்ணின் வீட்டு வாசலின் எதிரே தான் அந்தக் குப்பைத்தொட்டி இருந்தது. தற்செயலாக அந்தப் பெண்ணின் பார்வை குழந்தையின் மீது பட, வீலென்று அலறினாள். அந்த அலறலைக் கேட்டு அங்கே சிறிது நேரத்தில் ஒரு கூட்டமே கூடி விட்டது.

" இழு யாழு போட்டுழுப்பா?" கையில் இருந்த டூத் ப்ரஷ்ஷால் பல்லைத் தேய்த்துக் கொண்டே எட்டிப் பார்த்தார் எதிர்வீட்டு ஏகாம்பரம்.

" என்னண்ணா இது! கலி முத்திப் போயிடுத்து! பொறந்த கொழந்தையை இப்படிக் கொண்டு வந்து குப்பைத் தொட்டில போட்டிருக்காளே? என்ன ஜன்மங்களோ? மனசில ஈரமேயில்லையே!" இது அம்புஜம் மாமி. அடுத்த வீட்டுக்கு சொந்தக்காரி.

" யாராவது போலீஸுக்கு ஃபோன் செய்யுங்க. பாவம், பச்சைக் குழந்தை!" இது மாடி வீட்டு ஸ்கூல் டீச்சர் சின்னப்பன். பேர் தான் சின்னப்பன். உருவம் மகாப் பெரிய உருவம். உருவத்துக்கு சம்பந்தமே இல்லாத சன்னமான குரல். அவர் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், அவர் உருவத்தைக் கண்டு முதலில் பயப்பட ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர் வாயைத் திறந்து பேச ஆரம்பித்ததும் சிரிப்பை அடக்கிக் கொண்டு தலை குனிந்து உட்கார்ந்திருந்தார்கள். ஒரு மாதிரி பெண்மை கலந்த அவருடைய குரலைக் கேட்டு குபீரென்று சிரித்து விடுவோமோ என்ற பயம்.

இத்தனை அமர்க்களத்திலும் அம்புஜம் மாமி வீட்டில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வசிக்கும் இளைஞனான மகேஷ் தனது மொபைலில் குழந்தையை வேறு வேறு கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் யூ ட்யூப்பில் வீடியோவைப் போட்டு,

"குப்பைத் தொட்டியில் சிசு;
கொடூரத்தின் உச்சம்;
மனிதமே மரித்து விட்டதோ?"

என்று பெரிய கேப்ஷன் போட்டு அப்லோட் செய்துவிட்டு லிங்கைத் தனக்குத் தெரிந்த வாட்ஸப் க்ரூப்களிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிட வேண்டுமே? ஒரு நாளில் இந்த ந்யூஸுக்கு எத்தனை லைக், எத்தனை ஷேர், எவ்வளவு வைரலாகிறது இவற்றையெல்லாம் பார்த்தாக வேண்டுமே?

இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் பாபு தன் ஐந்து வயது மகனுடன் வந்து எட்டிப் பார்த்தான்.

" அப்பா, இது ரொம்பக் குட்டிப் பாப்பாவா இருக்குப்பா. எனக்குத் தான் தம்பி, தங்கையே இல்லையே? நம்ம வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடலாம்பா" என்று அந்தச் சிறுவன் பாசத்துடன் அப்பாவைக் கேட்டான்.

" இருடா, இது யார் குழந்தை என்னன்னு தெரியாம அப்படில்லாம் தூக்கிட்டுப் போக முடியாது. அதைப் பாரு. குப்பைத் தொட்டியில் கெடக்கு. அதைக் கையால் தொட்டுத் தூக்கின நமக்கு இன்ஃபெக்ஷன் வந்துரும். பேசாம வாயை மூடிட்டு நில்லு" என்று எரிச்சலுடன் மகனை அதட்டினான் பாபு.

" அது தான் நம்ப வீட்டில டெட்டால், ஸானிடைஸர்லாம் இருக்கே? கையை நல்லா சுத்தம் பண்ணிக்குவேன். பாப்பாவையும் அம்மாட்டச் சொல்லி , டிவி அட்வர்டைஸ்மெண்டில வருமே, அந்த சோப்பைப் போட்டுக் குளிச்சு விடச் சொல்லலாமே?" என்று மீண்டும் அந்தச் சிறுவன் அனத்த, 'இதுக்கு மேல இவனோட இங்க நின்னா ஆபத்து' என்று நினைத்த பாபு, மகனை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய்க் கதவைச் சாத்தினான்.

சைக்கிள் பெடலை அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு அங்கே ஏட் கண்ணப்பன் வந்து சேர்ந்தார்.

' காலங் காத்தால ஆற அமர உக்கார விடாம பெரிய தொந்தரவான வேலையா வந்து வாச்சிருக்கே?' என்ற எரிச்சல் அவருடைய முகத்தில் தெரிந்தது.

" தள்ளுங்க, தள்ளுங்க, என்னைக் கொஞ்சம் பாக்க விடுங்க" என்று கூட்டத்தை விலக்கி விட்டு அந்தப் பச்சிளங்குழந்தையைப் பார்த்தார். கண் கூடத் திறக்காமல் கிடந்தது அந்தக் குழந்தை.

" உசுரு இருக்கா இல்லையா தெரியலையே?" என்று அவர் சத்தமாகக் கேட்கத் தனது உடலை லேசாக அசைத்து உயிரோடு தான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னது அந்தக் குழந்தை.

" யார் மொதலில பாத்தது? யாரு எங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் செஞ்சது? வாங்க, வரிசையாகத் தகவல் சொல்லுங்க" என்று பேசிக் கொண்டே அரசுத் துறையால் நிர்வகிக்கப் படும் அனாதைக் குழந்தைகளுக்கான இல்லத்திற்குத் தகவல் தெரிவித்து அடுத்து ஆக வேண்டிய செயல்களைப் பார்க்க ஆரம்பித்தார்.

இவ்வளவு நேரமாக மழைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த பூந்தூறலை, வானத்தாய் பூமிக்கு அனுப்பக் குழந்தையின் முகத்தை மழைத்துளி வந்து தொட்டது. உடனே அந்த சிசு தனது முகத்தைச் சுருக்கிக் கொண்டு க்ஷீணமாக அழ ஆரம்பித்தது.

அந்த அழுகைக்குரலைக் கேட்டு அந்த ஆலமரத்தடியில் சுருண்டு கிடந்த அந்தப் பைத்தியக்காரப் பிச்சி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

கிழிந்த ஆடையுடன் பிச்சையெடுத்துப் பிழைக்கும் அவள் வயிற்றில் எவனோ ஒரு கயவனின் கரு வளர ஆரம்பித்து, வயிற்றைத் தள்ளிக் கொண்டு திரிந்து கொண்டிருந்தாள் அந்தக் கிறுக்கி. ஆமாம், அது தான் அந்தத் தெருவினர் அவளைக் கூப்பிடும் பெயர்.

நேற்று தான் பிரசவ வலியில் துடித்த அவளை யாரோ மருத்துவமனையில் சேர்க்கக் குழந்தை பிறந்து உடனே இறந்தும் போனது. நேற்று மாலையே அங்கிருந்து அவளை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பினார்கள். தளர்ந்த உடலுடன் மரத்தடியில் கிடந்தாள்.

வேகமாக வந்து அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்தவளின் மனதின் ஈரம், தாய்ப்பாலாகச் சுரந்து வழிந்து சிசுவின் உதட்டைத் தொட்டது.

வானத்தில் இடி, மின்னலுடன் மழை சோவென்று கொட்ட ஆரம்பித்தது. எல்லோரும் அவரவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ள, ஏட்டையா, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துப் போய் நின்றார்.

புவனா சந்திரசேகரன்,
14/08/2021
 
Top