கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள் . அத்தியாயம்--13

sankariappan

Moderator
Staff member
முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள்



அத்தியாயம்---13



கனிகா கிளம்பிக் கொண்டிருந்தபோது ‘போறாளே பொண்ணுத் தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு’...என்ற பாடலை நிறுத்திவிட்டு வந்தான் சரவணன். இப்ப தான் வீடே சகஜ நிலைக்கு வந்திருக்கு. அதற்குள் கனிகா போகப் போகிறாளா?



“அப்பா...என்னாச்சு? எதுக்கு கனிகா போறேன்னு சொல்றா?” என்று படபடவென்று கேட்டான். சம்பத் தயங்கினார்.



“இல்லேப்பா...வந்து...”



“அப்பா...எதுவானாலும் கனிகா இங்கிருந்து போகக் கூடாது.”



“சின்ன சாமி..போன் வந்திருக்கு. செல்வியம்மா உங்க கூட பேசணுமாம்.”



“என்னது செல்வியா? அந்த கழிசடை எதுக்கு என் கூட பேசணும்? போதை ஏத்த காசில்லையாமா.? பேப்பரிலே அவ போட்டோ வந்து ஊரெல்லாம் நாறடிச்சது பத்தாதாமா? எல்லா அவமானமும் முழுங்கிட்டு இப்ப தான் நிம்மதியா இருக்கோம்...இப்ப எதுக்கு பேசணுமாம்? முடியாதுன்னு சொல்லுங்கப்பா.” அவன்

ஆத்திரத்துடன் சொன்னான்.



“அண்ணா...என்ன ஏதுன்னு கேப்போமே. இங்கே வரவேண்டாம்னு சொன்னாப் போச்சு. விஷயம் தெரிய வேண்டாமா? அன்னிக்கு ஒரு சான்ஸ் கொடுப்போம்” என்றாள் மஞ்சு.



“இத பாருங்க...நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அவங்க இந்த வீட்டு மருமகள். அவங்க திருந்தி இருக்கலாம். தவறு செய்தவங்களை மன்னிக்கணும். அது தானே முறை. ப்ளீஸ் பெரிய சாமி நீங்களாவது எடுத்து சொல்லுங்க உங்க மகனுக்கு.” என்று சொன்னாள் கனிகா. சம்பத் வாய் திறக்கும் முன் சரவணன் குதித்தான். காட்டுக் காதல் போட்டான்.



“தேவையில்லை. அவள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? அவளுக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை. மறுபடியும் அந்த நாகுவோட சேர்ந்து ஆட்டம் போடவா? போதும் காது புளிச்சுப் போற அளவு ஏச்சும் பேச்சும் கேட்டு அவமானப்பட்டாச்சு. இனிமே முடியாது. எவ்வளவு நம்பினேன்...”



“நான் இங்கிருந்து போனால் தான் உங்களுக்கு அவங்க எவ்வளவு தேவைங்கறதை புரிஞ்சுப்பீங்க. நான் கட்டாயம் நாளை போயிடறேன். அவங்க இங்கு வரணும்.” கனிகா தீர்மானமாக சொன்னாள்.அவள் குரலில் உறுதி இருந்தது.



“நீ போனே, அப்புறம் நான் இங்கிருக்க மாட்டேன். ஏதாவது ஆஸ்ரமத்துக்கு போயிடுவேன். கனிகா இந்த பாலைவனத்தை சோலைவனம் ஆக்கிட்டு இப்ப மீண்டும் பாலைவனம் ஆக்கணும்னு முடிவு பண்ணிட்டியா.?”

கனிகாவின் உடமைகளை எடுத்து உள்ளே வைத்தான். அதற்கு மேல் அவள் எப்படி போகத் துணிவாள்.? யோசனையுடன் வீட்டினுள் சென்றாள். செல்வி ஜெய்பூரில் இருக்கிறாள் என்றும். அவள் நன்றாக இருக்கிறாள் என்றும். தன் மகளை பார்க்க அனுமதி கேட்கிறாள் என்றும் ஷாந்தா ராம் குறுஞ் செய்தி அனுப்பி இருந்தான். அதை பார்த்த சரவணன் பதிலுக்கு அடித்தான்.



“அவளை நாங்க பார்க்க விரும்பலை. என் மகளை அவள் பார்க்க அனுமதி இல்லே. அவள் இனி எங்கள் வாழ்வில் இல்லை..” அப்புறம் தான் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது.



குறுஞ்செய்தியை செல்வி சாந்தா ராமிடம் காட்டினாள்.

“நீங்க எதுக்கு மெசேஜ் அடிச்சீங்க? நான் தான் சொன்னேனே அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று.”



“முயற்சி செய்வதில் தவறில்லையே செல்வி. எறும்பு ஊற அம்மியும் தேயும்னு சொல்வாங்களே.” ஷாந்தாரம் சொன்னது கேட்டு சிரித்தாள்.



“எறும்பு ஊர அம்மி வேணா தேயலாம் மலை தேயாது. என்னைப் பொறுத்தவரை எல்லாமே எப்பவோ முடிந்துவிட்டது. என் குழந்தை பார்வை இழந்துவிட்டது என்ற போது வாழணும்கற என் ஆசையும் அற்றுப் போனது. இந்த ஆஸ்ரமத்தில் பெண்களுக்கு கல்வி அறிவு புகட்டும் வேலை மட்டும் தான் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல், லட்சியம் எல்லாம். படிக்கத் தெரியாத அபலைப் பெண்களுக்கு கல்வி அறிவு கொடுக்கும் போது என் மனம் நிறைவடைகிறது. இதுவும் ஒரு நல்ல வாழ்க்கை தானே.?”



“உன் குழந்தைக்கு பார்வை கிடைக்குமா என்று நீ ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது? நான் ஒரு நல்ல கண் டாக்டரிடம் உங்களைப் பற்றி சொல்கிறேன். ஆஷாவை அங்கு அழைத்துக் கொண்டு போய் காட்டு செல்வி.”



“என்னைத் தான் உள்ளேயே விட மாட்டார்களே. நான் எப்படி ஆஷாவை அழைத்துக் கொண்டு போகமுடியும்?”



“இப்படி சொன்னால் எப்படி செல்வி? உன் மகளல்லவா? எப்படியாவது முயற்சி செய்து கூட்டிப் போ. இந்தா டாக்டர் அருணகிரியின் விசிடிங் கார்ட். அவரிடம் ஆஷாவை அழைத்துக் கொண்டு போய் காட்டு...” ஷாந்தா ராம் விசிடிங் கார்டை அவளிடம் கொடுத்தான்.



அன்றிரவு விசிட்டிங்க கார்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் செல்வி. அவளுக்கு தூக்கம் வரவில்லை. ஒரு பக்கம் சீதாவின் உடல் நல குறைவு. இன்னொரு பக்கம் அவளையும் அஞ்சனாவையும் பிரித்து வைத்திருக்கும் பாவம்...இதற்கிடையில் அவள் மகளின் கண் தெரியா அவலம். இதை சரிபண்ண முடியுமா? கரிய மேகத்தில் மின்னல் வெட்டுவது போல் ஒரு உதவி அவளைத் தேடி வந்தது.



“செல்வி அக்கா...அய்யாவோட போனை திருடி நான் இந்த குறுஞ்செய்தியை அனுப்பறேன். பகல் பூரா யாரும் வீட்டில் இருக்க மாட்டாங்க. என்னையும் ஆஷாவையும் தவிர. நீங்க ஆஷாவை அப்ப வந்து பார்க்கலாம். சனி ஞாயறு வரவேண்டாம். நான் ஆஷாவை பார்த்துக்கும் ஆயா---கனிகா.”

செல்வி முகத்தில் ஒரு பரவசம். உடனே பதில் செய்தி அனுப்பினாள்.



“ஆஷா என்னை பார்க்க விரும்புவாளா?”



“தாய் பசுவை பார்க்க கண்ணுக் குட்டிக்கு என்ன தயக்கம்? என்ன பயம்.? அவள் என்றும் உங்கள் மகள் தானே.? தைரியமா வாங்க.”



“வீட்டில் உள்ளோருக்கு தெரிந்துவிட்டால்.?”



“தெரியாமல் நான் பார்த்துக்கிறேன். எப்ப வறீங்க.?”



“வரலாம்னு சொல்றியா...பயமா இருக்கு.”



“அஷாவை தொட்டு தூக்கி உச்சி முகரவேன்டாமா.?...வாங்க...”



“சரி வரேன்...எப்ப.?”



“இந்த வாரம் புதன் கிழமை வாங்க. இரண்டு அய்யாவும் சேலம் போறாங்க. மஞ்சு கல்லூரி கேம்ப் போறாள். உங்களை பார்க்க ஆவலா இருக்கேன்.”



“நன்றி...வரேன்.”

செல்வி உள்ளம் துள்ளியது. அவள் குழந்தையை அவள் பார்க்கப் போகிறாள். யார் அந்த கனிகா.? அவளுக்கு எவ்வளவு நல்ல மனசு.? கடவுளே...இது மட்டும் நல்ல படியா நடந்துட்டா நான் உனக்கு பாலாபிஷேகம் பண்றேன். பழனி முருகா...” என்று வேண்டிக் கொண்டாள்.



சாந்தா ராமிடம் சொன்ன போது அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். கண்டிப்பா டாக்டர் அருணகிரியிடம் கூட்டிப் போங்க என்று ஞாபகப்படுதினான். சீதாவை தான் பார்த்துக் கொள்வதாக சொன்னான். சீதாவிடம் சொல்லிக் கொண்டு செல்வி கிளம்பினாள். அவள் தன் புகுந்த வீட்டில் நுழைந்த போது அவளை எதிர்கொள்ள கனிகா தயாராக ஓடி வந்தாள்.



“வாங்க...ஆஷாவை பாருங்க...ஆஷா அம்மா வந்திருக்காங்க.”

செல்வி முதல் முதலாக ஆஷாவை பார்க்கிறாள். அவள் கண்களில் பொங்கி வந்தது அன்பா? அழுகையா? முகம் கூட பார்க்காமல் பிரிந்த வலியா? இந்தப் பிரிவுக்குக் காரணம் தான் தான் என்ற அவமானமா?—எது?---எல்லாமே...



“ஆஷா...கண்ணே என்னை மன்னிச்சிடும்மா...” குழந்தையை வாரி அணைத்து மனம் குலுங்க அழுதாள். இந்த அழுகையில் ஒரு விடுதலை உணர்வு வந்ததை அவள் உணர்ந்தாள். ஆஷா பதில் சொல்லாமல் அம்மாவின் பிடியில் சிக்குண்டு திணறினாள். கனிகா கண்களில் ஈரம் படர்ந்தது. பிறகு மெல்ல சுதாரித்து செல்வி ஆஷாவிடம் கேட்டாள்.



“ஆஷா...நான் ஒரு நல்ல அம்மா இல்லை தான். ஆனா உன்னை இப்ப கண் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போறேன் வருவியா.?”



“அப்பா நிறைய தரம் கூட்டிப் போயிருக்காங்க. யாராவது கண் தானம் செய்தா கண் பார்வை கிடைக்கும்னு சொல்லியிருக்கார் டாக்டர். எனக்கு கண் பார்வை கிடைக்க மூணு வருஷம் கூட ஆகுமாம். என் பெயர் லிஸ்ட்டிலே இருக்கு. வரிசை பிரகாரம் கிடைக்கும்.” என்றாள் ஆஷா தெளிவாக.



“பரவாயில்லை...என் கூட வா. நான் டாக்டர் அருணகிரியிடம் கூட்டிப் போறேன். அவர் பெரிய ஸ்பெஷலிஸ்ட்....வேறு வழி இருக்கான்னு கேக்கலாம்.” செல்வி சொன்னதும் ஆஷா கனிகாவின் பதிலை எதிர்பார்க்கிறாள் என்று தெரிந்தது. கனிகா ஆஷாவிடம் கனிவுடன் சொன்னாள்.



“போய் விட்டு வா ஆஷா. உன் அம்மா கூட போற பாக்கியம் உனக்கு கிடைச்சிருக்கு. மிஸ் பண்ணிடாதே.”

ஆஷாவுக்கு செல்வி வாங்கி வந்திருந்த புதிய உடையை அணிவித்து, செல்விக்கு பாயாசத்தோடு விருந்து பரிமாறி பின் வழி அனுப்பி வைத்தாள் கனிகா.



“உங்க உதவிக்கு ரொம்ப நன்றி கனிகா...”



“அக்கா...மாலை ஆறு மணிக்குள் வந்திடுங்க. மஞ்சு வந்திடுவாங்க.”



தலையாட்டினாள் செல்வி. அம்மாவும் மகளும் கிளம்பினார்கள். சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கனிகா.



கனிகாவுக்கு மனசாட்சி இருந்தது. அதான் அவளால் செல்வியை வரவழைக்க முடிந்தது. சரவணன் கனிகாவிடம் அன்று இரவு விரிவாகப் பேசினான். நிலா காயும் அர்த்த ராத்திரியில் இவர்கள் பால்கனியில் நின்று என்ன பேசுகிறார்கள் என்று சம்பத் வியந்தார். அவரால் யூகிக்க முடிந்தது. ஆனால் தன் யூகம் சரியானது தானா என்று அவரால் உறுதியாக நினைக்க முடியவில்லை. எது நடக்கணுமோ அது நல்லதாக நடக்கட்டும் என்று வேண்டிக்கொண்டார். அவர் படுக்கையில் போய் படுத்துக் கொண்டார். மஞ்சு நல்ல உறக்கத்தில் இருந்தாள். சரவணன் கனிகா சந்திப்பு முக்கியமான முடிவுகளை வரவழைத்தது.



“கனிகா...உன் கிட்டே ஒண்ணு கேக்கப் போறேன். அனுமதி உண்டா.?”



“என்ன கேக்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும்.”



“அப்ப என் வேலை சுலபமாயிற்று. உன் பதில் என்ன.?”



“கேள்வியே தப்பா இருக்கும்போது விடை எப்படி சரியா இருக்கும்.?”



“தவறான வாழ்கையை நான் வாழ வேண்டியதாகிவிட்டது. அதை சரி பண்ண ஆசைப்படுறேன். அதான்..நேரடியா கேக்றேன். நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்றியா.?”

நிலவை பார்த்தாள் கனிகா. கருநீல வானத்தில் ஒரு மஞ்சள் பொத்தான் தைத்து விடப்பட்டது போல் இருந்தது. மேகங்கள் இல்லை. சுற்றி நட்சத்திரங்கள் இல்லை. நான் தனிமையில் இருக்கிறேன் என்கிறதா நிலவு.?



“கனிகா...என்ன வானத்தை பார்த்திட்டிருக்கே.? பதில் வானத்திலிருந்து குதித்து வரப்போகிறதா.? என் கண்ணைப் பார்த்து நேரடியாகச் சொல். உனக்கு என்னை பிடிக்கிறதா இல்லையா.?”



“உங்களுக்கு என்னை ஏன் பிடிச்சிருக்கு.? செல்வி அக்கா கூட பேசாத நீங்க...என் கூட ஜோடி சேர எப்படி நினச்சீங்க.? அவங்க இன்னும் உங்க மனைவி தானே.? அதுக்குள்ளே இன்னொரு துணையா.?”



“ஒ...அது தான் உன் பிரச்சனையா.? நீ சம்மதித்த பின் அவளிடம் சொல்லி டிவோர்ஸ் வாங்கிடறேன். அப்புறம் முறைப்படி நாம் திருமணம் செய்து கொள்ளலாம். என்ன சொல்றே.? ஆஷாவை உன்னைத் தவிற யாரும் பார்த்துக்க முடியாது. அதிலும் ஒரு சுயநலம் தான்.”



“சுயநலம் ஒரு ஜூரம் மாதிரி. வந்த வேகத்தில் போய்விடும். தேவை தீர்ந்ததும் தவறுகள் புரியும். மாட்டிக் கொண்டோமே என்று தோணும். நான் ஒரு பட்டிக்காடு. படிப்பறிவு இல்லாதவள். செல்வி தான் உங்களுக்கு பொருத்தமான மனைவி. அவங்க நிச்சயம் இப்ப திருந்தி இருப்பாங்க. அவங்களை கூப்பிட்டு சேர்ந்து வாழ முயற்சி பண்ணுங்க. இது தான் என் பதில். உங்க வாழ்க்கை தெளிவா இருக்கு, அந்த வானமும் நிலவும் மாதிரி. குழப்பம் என்ற மேகமே இல்லை. அப்புறம் எதுக்கு குட்டி நட்சத்திரங்களிடம் தஞ்சம் அடைய நினைக்கிறீங்க.? இத்தனை நாள் செல்வி எங்கே இருக்காங்கன்னு தெரியாம இருந்துச்சு. இப்ப தான் வந்திட்டாங்களே....ஆஷாவோட அம்மா இருக்கும் போது...”



“கனிகா உன்னிடம் நான் ஒன்றும் அறிவுரை கேக்க வரலை. உனக்கு பிரியமா இல்லையா சொல்லு...அவ்வளவுதான்...”



“பழைய வீட்டை பெயின்ட் அடித்து புதுசா மாத்தலாம். அதுக்காக ஆட்களையும் புதுசா தேர்ந்தெடுத்து மாத்தமுடியுமா.? உங்க எண்ணம் தப்பு.”



“சரி..உன் முடிவு அதுவென்றால் நான் வற்புறுத்த முடியாது. செல்வி என் மனசை பங்க்சர் பண்ணிட்டா. இந்த வீட்டை நிமிர்த்தியது நீ தான். உன்னை ஏனோ பார்த்த அன்றே எனக்குப் பிடித்துவிட்டது. நீ தான் எனக்கானவள் என்று முடிவு செஞ்சிட்டேன். செல்வியை என்னால் மன்னிக்க முடியாது. அவள் என்று குழந்தை பிறந்தவுடன் குழந்தை முகத்தை கூட பார்க்காமல் ஓடினாளோ அன்றே அவள் என் நெஞ்சை விட்டி ஓடிவிட்டாள். உடைந்த பானை ஒட்டாது கனிகா. நீயும் என் உள்ளத்தை உடைக்க திட்டமிட்டுவிட்டே..உன் இஷ்டம். நீ மறுத்தால் நான் உடனே செல்வியோடு வாழ்வேன் என்று அர்த்தமில்லை. உனக்காக காத்திருப்பேன்...”



“அர்த்தமில்லாம ஏதாவது சபதம் செய்யாதீங்க. என்னால் முடிந்தவரை உங்களையும் செல்வியும் சேர்த்து வைக்கவே பாடுபடுவேன்.”



அவர்கள் பேச்சு நின்றது. சரவணனின் மனசும் நின்றது. கனிகாவிடம் தன் மனசை சொல்லலாம் என்று அவன் நினைத்த போது தானா செல்வி வந்து குட்டையை குழப்பவேண்டும்.? அவன் அவளால் எத்தனை இரவுகள் தவித்திருப்பான்? விழித்திருப்பான்.? தங்கை மஞ்சுவை கூட சந்தேகித்திருப்பான்? அவ்வளவைம் பொருளற்றதாக ஆக்கிவிட்டு போதை என்ற அரக்கனை தேடி ஓடியவளை எப்படி அழகான குடும்பம் என்ற கூட்டுக்குள் சேர்க்க முடியும்.? ஆஷாவின் பார்வையற்ற தோற்றம் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு பொறுப்பற்ற ஒரு தாயின் கொடுமை தானே தெரிகிறது.? கனிகா நீ தான் என் வாழ்கைக்கு மருந்து.



கனிகா மனசுக்குள் தன்னையே திட்டிக் கொண்டாள். லட்டு மாதிரி சந்தர்ப்பம் உனக்கு கிடைச்சுதே...சரி சொல்ல என்ன கேடு உனக்கு.? நீயும் தான் அவரை உன் மனதின் மணவாளனாக பார்க்க ஆரம்பிச்சிட்டியே..பிறகென்ன.? செல்வி வந்துவிட்டாள்.....இந்த வீட்டின் அம்மன் வந்துவிட்டாள். சிறு விக்ரகம் விலகவேண்டியது தானே முறை.? கனிகா தன் நெஞ்சுக்கு நீதி வழங்கவில்லை. ஆனாலும் அவள் செய்தது சரி என்று அவளை நீதி தேவதை வணங்கினாள். காதல் தேவதை அவளை கோபித்துக் கொண்டாள். ஒரு கண்ணில் புன்னகையும் ஒரு கண்ணில் கண்ணீரும் என்று அடக்கி, மெல்ல உறங்கிப் போனாள் அந்தப் பேதை. நல்ல மனசுகள் பளிங்கு மாதிரி. களங்கமில்லாதது. அதிலிருந்து கவிதைகள் தான் வரும்.



மழை விழும்.
 
Top