கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள் அத்தியாயம் ----4l

sankariappan

Moderator
Staff member
முற்றத்தில் விழுந்த மழைத துளிகள்



அத்தியாயம்---4



சரவணன் பார்த்திருந்த அப்பார்ட்மெண்டில் மூன்று அறைகள் இருந்தன. வசதியான அடுப்படி. சுத்தமாகவும் நவீனமாகவும் இருந்தது. செல்வி கேட்டபடி கூடுதல் அலமாரிகள் வடிவமைத்துக் கொடுத்தான். இரண்டு பால்கனி. அவற்றில் தொட்டிகள் வைத்து....ரோஜாச் செடி வைத்தான். இன்னும் சில பூச்செடிகளும் துளசியும் இருந்தது. சின்ன வயதில் அம்மா துளசிச் செடியை பூஜித்து வந்தாள். அது மனசை நிறைவிக்கும். செவ்வாய் வெள்ளி விரதமிருந்து விசேஷமாக பூஜிப்பாள் அகிலா.

“துளசி அவ்வளவு மகிமை வாய்ந்ததா அம்மா..?” என்று கேட்பான்.

“ஆமாண்டா...துளசிச் செடி இருந்தால் துஷ்ட சக்திகள் வீட்டினுள் நுழையாது. துளசியை பூஜிப்பவர் வீட்டில் மகாலட்சுமி நித்திய தவம் செய்வாள்...” என்று சொல்வாள். அவன் துளசிச் செடிக்கு மாடம் அமைத்துக் கொடுத்து மனைவி செல்வியிடம் தினந்தோறும் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டினான்.

“நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே

நமோ மோஷ்ப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.”

இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்லி வழிபடணும் என்று கற்றுக் கொடுத்தான். செல்வியும் அதை மனப்பாடம் பண்ணி பூஜை செய்யத் தொடங்கினாள். அவள் நன்றாக தெளிச்சியுடன் இருக்கிறாள் என்று சரவணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கடவுளுக்கு நன்றி சொன்னான்.



ஒரு முறை சம்பத் மகனைப் பார்க்க வந்தார். அவர் முகத்தில் கலக்கம் இருந்தது. செல்வி மாமனாருக்கு காப்பி கொடுத்தாள். அவள் துளசி பூஜை செய்வது பற்றி சொல்லி பெருமைப்பட்டான் சரவணன். சம்பத் முகத்தில் மகிழ்ச்சி.

“சரவணா...நீ இல்லாமல் வீடு வீடாக இல்லை. நீ அங்கேயே வந்திடுடா. செல்வி தான் சரியாகிவிட்டாளே”

“நோ சான்ஸ். உங்க மகள் தானே உங்களுக்கு முக்கியம்? அங்கு நாங்க வந்தால் மீண்டும் பிரச்சனை வரும். செல்வியை நம்பமாட்டாள் மஞ்சு. ஏதாவது ஏடாகூடமாகச் சொல்வாள். குழந்தை நல்லபடியாகப் பிறக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்..” என்று விட்டான். செல்வியின் அம்மா காவேரி அங்கு அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வதாக சொன்னான்.

“எல்லாம் சரிதாண்டா....இருந்தாலும் இப்படி நீ தனியாக வந்தது மனசுக்கு ஒரு மாதிரியாக இருக்கு சரவணா...யோசிச்சு சொல்லு...”

“இதிலே யோசிக்க என்ன இருக்கு? அமைதியான குருவிக் கூடு மாதிரி இருக்கு எங்க வீடு...மஞ்சு நுழைஞ்சா அது பாழாயிடும்...என்னை நிம்மதியா இருக்க விடுங்க. அப்பா ப்ளீஸ்...நான் என்ன செத்தாப் போயிட்டேன்? இங்கே தானே இருக்கேன்...” சரவணன் இப்படி பேசவும் செல்வி குறுக்கிட்டாள்.

“என்னங்க இப்படி பேசறீங்க? அவங்க உங்க அப்பா....அவர் ஆசை நியாயமானது தானே? மாமா...கூடிய சீக்கிரம் நாங்க அங்கு வருவோம். இவர் மனசை சமாதானப்படுத்தி கூட்டி வரேன்...” என்றாள். சம்பத் உற்சாகம் அடைந்தார். வெப்பம் நிறைந்த பாலைவனத்தில் ஒரு சிறு புல் முளைத்தது போல் இருந்தது செல்வி அவரிடம் பேசியது. கூடிய சீக்கிரம் புல்வெளி படரும். செல்வி நம்பிக்கை கொடுத்திருக்கிறாள். சரவணனின் முகம் அவர் கனவுகளில் வருகிறது. இரவில் பெய்யும் தூறல் போல....விரைவில் அவன் வருவான் என்று நம்பிக்கை கொள்கிறார். பெற்ற தகப்பனுக்கு வேறு என்ன வேணும்?

“அப்ப நான் வரேன் அம்மா. நீயும் எனக்கு மஞ்சு மாதிரி தான். அவள் இப்ப தான் சொன்னாள் அவளின் தோழியின் அண்ணன் போதை...” சொல்ல வாய் எடுத்தவரை தடுத்தான்.

“அப்பா...இங்கிருந்து போறீங்களா? என்ன பேசிட்டு இருக்கீங்க?...”

“இல்லடா....அதான் அவள் உன்னிடம் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள். இப்ப அதுக்காக வருத்தப்படறாடா...அதை சொல்ல வந்தேன்...”

“உங்க மகள் மேலே தப்பில்லை. அதை சொல்லத் தானே வந்தீங்க. நான் கூட ஏதோ பாசத்திலே தான் வந்தீங்கன்னு நினைச்சேன்....எனக்கு ஏதாவது நன்மை செய்யனும்னு நீங்க நினைச்சா இனிமே இங்கு வராதீங்க..”

“சரிடா...நான் இன்னொரு நாள் வரேன். அம்மா செல்வி உடம்பை பர்த்துக்கோம்மா...” அவர் வாங்கி வந்து மேஜை மேல் வைத்திருந்த பழங்கள் பலகாரங்களை காட்டி .”இதையும் எடுத்திட்டுப் போங்க...” என்றான்.

சம்பத் ஸ்தமித்து நின்ற போது செல்வி ஒடி வந்தாள்.

“இருக்கட்டும் மாமா...எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். நான் மசக்கையிலே என்ன சாப்பிடணும்னு நினைச்சேனோ அதை தான் வாங்கி வந்திருக்கீங்க...” என்று ஆதரவாக பேசி அவரை அன்புடன் வழியனுப்பி வைத்தாள். சம்பத் படியிறங்கி போனதும் செல்வி கணவனிடம் சொன்னாள்.

“எதுக்கு பெரியவர் மனசை புண்படுத்றீங்க? அவர் என்ன உங்களிடம் பணமா கேட்டார்? நீங்களும் உங்க தங்கச்சியும் ஒத்துமையா இருக்கணும்னு சொல்ல வந்தார். நான் தப்பு செய்தேன்...அதுக்கு அவ கொஞ்சம் கடுமையா

பதலடி கொடுத்தா. இது ஒரு தப்பா? விடுங்க. சீக்கிரம் நாம ஒண்ணாப் போயிடணும். இப்படி மனசை கல் மாதிரி வச்சுக்காதீங்க.”

“இல்லே செல்வி....அவளுக்கு சதா குறை சொல்லும் பழக்கம்...அதான்.”

“சின்னப் பெண் தானே? வேண்டுமென்றே அவள் குறை சொல்லவில்லையே.”

“செல்வி....உன்னுடைய தெளிவு கடலின் நீலம் போல் அழகா இருக்கு. உன் மனசை எனக்குத் தாயேன்...”

“கடவுளோட வலது கை ஆதரவா இருக்குமாம். இடது கை கடுமை காட்டுமாம் அப்படின்னு தாகூர் சொல்லியிருக்கார். இப்ப நான் வலது கை மாதிரி...இடது கையா மாறிடக் கூடாதேன்னு பிரார்த்தனை பண்ணிட்டு இருக்கேன்...என் மனசு அலைபாயாமல் காக்கும் கடவுள் நீங்க தான்..”



சம்பத் வீட்டுக்கு வந்ததும் மஞ்சு ஓடி வந்தாள்.

“அப்பா...அண்ணாவை பார்த்தீங்களா? அண்ணி எப்படி இருக்காங்க? நான் திட்டினது அவங்களை இல்லை அவங்க பழக்கத்தைன்னு சொன்னீங்களா?”

சம்பத் அவளின் ஆர்வமான முகத்தைப் பார்த்ததும் நிஜம் சொல்ல தயங்கினார். இந்த குழந்தை முகம் வாடிவிடுமே.

“எல்லாம் சொல்லிட்டேன்ம்மா. உங்க அண்ணி ரொம்ப சந்தோஷப்பட்டாள். இப்ப நல்ல தெளிவா இருக்கா. ஒண்ணும் பயமில்லை. “ இதுவரை நிஜம் சொன்னவர்..”உன் அண்ணன் உன்னை பார்க்கணும்னு சொன்னானம்மா.”

என்று புளுகினார். மஞ்சு சந்தோஷமடைந்தாள். ஒரு நாள் போறேன்ப்பா என்று சிரிப்புடன் சொன்னாள்.

“சரி அப்பா...வாங்க சாப்பிடலாம். அங்கே சாப்பிட்டிட்டீங்களா?”

“ஆமாம்மா...இட்லியும் தேங்காய் துவையலும்...ஜோர்.....உங்க அண்ணி சமைக்க கத்துக்கிட்டா.”

பொய் சொல்லி அன்று காலை பட்டினி கிடந்தார். சில பொய்கள் அவர் மனசுக்கு நிம்மதி தருகிறது. ஆனால் வயத்துக்கு வஞ்சனை செய்கிறது. அவர் பேசும் பாஷை மகனுக்குத் தெரியலை. தங்கை பேசும் பாஷை அண்ணனுக்குத் தெரியலை. இருவருக்கும் பாலமாக இருக்க முயன்ற அவருக்கு அவர்கள் பாஷை புரியவில்லை. எதுக்கு சண்டை? கோபம்?

சலிப்பு.....ஈகோவா? வரட்டுப் பிடிவாதமா? அவர் மன சிலட்டில் விழுந்த இந்தக் காயத்தை அவர் பாசம் என்னும் அழிப்பானால் அழித்துவிட்டார். நாளை புதிய எழுத்துக்கள் வரும். கவிதை வரும்...இருட்டு என்னும் இரவை மூடினால், புடைத்துக் கொண்டு காலை வெளிச்சம் வராமலா போய்விடும்?



ரோஜாச் செடி பூக்க ஆரம்பித்துவிட்டது. செல்வி முதலில் பூத்த ரோஜாவை பறித்து வந்து சரவணனிடம் கொடுத்தாள். “என் வாழ்வை வானவில் ஆக்கியதுக்கு...உங்க கையால் நீருற்றி வளர்ந்த செடி உங்களைப் போல் வாசனையான பூவை தந்துவிட்டது. உங்களுக்கு நன்றி சொல்கிறது.”

சரவணனுக்கு செல்வியின் முகமே ரோஜா போல் தோன்றியது. போதை அரக்கனிடமிருந்து அவள் மீண்டது அவனாலா இல்லை அவள் வயிற்றில் வளரும் குழந்தையாலா? அவர்களின் ஆசைகள் எல்லாம் புது மெருகுடன் சுகம் பரப்புகிறது. இதுவரை மூடு பனியாக இருந்த வாழ்க்கை அவர்கள் காதலால் பல வண்ணம் கொன்ட வானவில்லாக இல்லற ஆகாயத்தை அலங்கரிக்கிறது. சரவணன் எவரெஸ்ட் உச்சியில் இருந்தான்.



செல்வி மேலும் சில பூச்செடிகளை கொண்டு வந்து வைத்தாள். செம்பருத்தி அரளிப் பூ, நந்தியாவெட்டை என்று அவை பூக்க ஆரம்பித்தது. கடவுள் கூட இந்தப் பூக்களைப் பார்த்து ஏங்குகிறார் மாலையாக கேட்கிறார் என்று சரவணனிடம் சொல்வாள் அவள்.

“அவர் கொடுத்த பரிசை அவருக்கே போடுவது அவருக்கு சந்தோசம் என்று நினைக்கிறேன். அதான் உன்னையும் குழந்தையும் நல்ல பார்த்துக்கிறார்...”

என்பான் அவன். காவேரி அம்மாளுக்கு ஒரே சந்தோசம். மகள் நல்லபடியாக குடித்தனம் பண்ணுகிறாள் என்று பரவசம். செல்விக்கு ஆறு மாசம் ஆன போது வளைகாப்பு வந்தது. செல்வி தன் வளைகாப்பை மாமனார் வீட்டில் தான் வைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டாள். ஒரு வாரம் முந்தியே வந்துவிட்டாள். காவேரியும் பத்ரிநாதனும் வளைகாப்பு பலகாரங்களுடன் வந்துவிட்டனர். செல்வியின் அக்கா வைஜந்தியும் அவள் கணவர் சோமநாதனும் கூட வந்திருந்தனர். வைஜயந்திக்கு மூன்று வயது பெண் குழந்தை உமாவும் ஆறு மாத ஆண்குழந்தை செந்திலும் இருந்தார்கள். குழந்தை செந்திலை தூக்கி தூக்கி வைத்துக் கொண்டாள் மஞ்சு.

“தலையை பிடிச்சுக்கனும்டி...துள்ளிடுவான் கிழே போட்றாதே..”

என்று பயத்துடன் அறிவுறுத்தினாள் வைஜயந்தி.

விளக்கு ஏற்றப்பட்டது. தாம்பாளத்தில் வாழைப் பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு திராட்சை என்று பரப்பப்பட்டு இருந்தது. பழங்கள் சுவையானவை. பூக்கள் மாலையாக தாம்பாளத்தில் இருந்து மணம் பரப்பியது. செல்வி கழுத்திலும் ஒரு மாலை அவள் தோளை அலங்கரித்தது. சடங்குகள் ஆரம்பமாயின. சந்தனம் பூசி, குங்குமம் இட்டு நலங்கு எடுத்து ஒவ்வொருவராக ஆசீர்வாதம் செய்தனர். செல்வி தங்கப் பதுமை மாதிரி இருந்தாள். மஞ்சு பட்டுப் பாவாடை அணிந்திருந்தாள். சரவணன் எடுத்துக் கொடுத்தது. அண்ணனும் தங்கையும் ராசியாகி விட்டார்கள். “மஞ்சு...இங்கே வா. அடுத்த வீட்டு மாமி வந்திருக்காங்க பார். அவங்களை கவனித்து சாப்பிடச் சொல்லு.”

“சரி அண்ணா. நீ சீக்கிரம் போய் குளித்து புது ஷர்ட், ஜரிகை கரை வேட்டி கட்டிக்கோ...” பத்து வயது மஞ்சுவுக்கு கால் தரையில் பாவவில்லை. பறவைக்கு சிறகுகளை கொடுத்த கடவுள் அது பறப்பதை தான் பார்க்க ஆசைப்படுவார். இன்று மஞ்சு என்ற சிறிய பறவைப் பெண்ணுக்கு அவர் சிறகுகளை இரவல் கொடுத்துவிட்டார் போலும். அவள் வீடெங்கும் ஓடி ஆடி

ஆனந்தத்தை பரப்பிக் கொண்டிருந்தாள்..

“அப்பா...என்ன சும்மா நின்னுட்டு இருக்கீங்க? வந்து உங்க மருமகளை ஆசீர்வாதம் பண்ணுங்க..” என்று உற்சாகத்துடன் சொன்னான் சரவணன். சம்பத் மனம் பஞ்சு போல் இருந்தது. இன்று அவர் மன சிலேட்டில்

“என்னை உங்க மனசில் வைத்துக் கொள்ளுங்கள்..” என்று மல்லிகைப் பூக்கள் ரகசிய வரி எழுதிவிட்டுப் போயிருந்தது. அவர் மனசெல்லாம் பூ வாசம். பாசம். இதை விட என்ன வேண்டும்? மகள் மஞ்சுவின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர் பார்த்து பார்த்து ரசித்தார். இது நாள் வரை எங்கே வைத்திருந்தாள் இந்த மகிழச்சியை? அப்பொழுது அவள் சிறகுகள் தங்கத்தால் நெய்யப்பட்டிருந்ததோ? அதான் பாரம் தாங்காமல் அவள் பறக்க முடியவில்லையோ? தங்கம் என்ற சொத்து கணக்கத்தான் செய்யும். இப்பொழுது அவளுக்கு மயலிறகால் ஆன லேசான சிறகுகள் முளைத்திருந்ததோ?... பாரமில்லை அதான் அவள் சுலபமாகப் பறக்கிறாளோ! மனசில் பாசம் என்னும் சொத்து இருந்தால் கணம் இருக்காதல்லவா? அகிலா இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!...என்று அவர் மனம் நினைத்தது. உறவினர் கூட்டம் நிறைய உதவி செய்தது.

“ஏண்டா சம்பத்....உனக்கு சம்பிரதாயங்கள் தெரியாது. அகிலா இருந்தால் நான் சொல்லவேண்டி இருக்காது. அவள் இல்லாததாலே நான் சொல்றேன்..உனக்கு ஆட்சேபனை இல்லையே..” என்று கேட்டாள் பாக்கியம் பாட்டி.

“பேஷா சிறுசுகளை வழி நடத்துங்கோ...எல்லாம் என் பாக்கியம்..நீங்கள்ளாம் வந்து சிறப்பிச்சு கொடுக்கறேள்..” என்றார் சம்பத். அவர் மனசில் திருப்தி முட்டி மோதியது.



சற்றே மேடிட்ட வயிருடன் செல்வி அவள் பிறந்த வீட்டார் வாங்கித் தந்த கருநீல பட்டுப் புடவை உடுத்தி மனையில் வந்து உட்கார்ந்தாள். அய்யர் சின்ன சின்ன மந்திரங்கள் சொல்லி முடித்தார். செல்விக்கு முகமெல்லாம் பூரித்து இருந்தது.

“எல்லோரும் இப்போ ஆசீர்வாதம் பண்ணலாம் என்றார்...”

ஐய்யர். முதலில் மஞ்சு அத்தை காப்பு அணிவிக்க வந்தாள்.

“அண்ணி...கையை நீட்டுங்க...” என்று சொல்லி தங்கக் காப்புகளை அணிவித்தாள். “பாப்பா பிறந்ததும் அதுக்கும் நான் தான் அத்தை காப்பு அணிவிப்பேன்.” என்று சிரித்தாள் அவள். பூரித்துப் போனார் சம்பத். பின் செல்வியின் ஒன்று விட்ட அண்ணன் மனைவி குமுதா அவள் சார்பில் தாய்மாமன் காப்பு அணிவித்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். செல்வியை ஆசீர்வதித்து சந்தனம் தடவி குங்குமம் வைத்து பின் தங்கப் காப்புகளை அணிவித்தாள். அடுத்து யார் வரணும் என்று விழாவினை நடத்திச் சென்ற பாட்டியம்மா சொல்படி அணைவரும் ஒவ்வொருவராக வந்து செல்விக்கு தங்கள் ஆசீர்வாதத்தை அளித்தனர். சரவணன் முகம் புதுப் பொலிவுடன் பிரகாசித்தது. மனைவியை பெருமையுடன் பார்த்தான்.

“உங்க அண்ணியை பார்....அப்படியே அம்மன் சிலை மாதிரி இருக்காயில்லே?”

“ஆமாண்ணா...சும்மாவா குட்டிப் பாப்பாவை சுமந்துக்கிட்டிருக்காங்க இல்லே. பாருங்க அவங்களுக்கு பொண்ணு தான் பிறக்கும். அந்தக் கடவுளே வந்து பெண்ணாப் பிறப்பார்....ஆஷான்னு பேர் வைக்கணும் அண்ணா.” ஒரு குழந்தை வீட்டில் தவழப் போகிற மகிழ்ச்சியில் சொன்னாள்.

“அதென்ன ஆஷா? உனக்கு அந்தப் பேர் பிடிக்குமா?”

“அண்ணா...ஆஷான்னா நம்பிக்கை....உயிரோட்டம்...ஆசை என்று பொருள். ஹீப்ரு மொழியிலே ஆஷான்னா சந்தோஷம்...எப்படி? நம்ம வீட்டின் நம்பிக்கை நட்சத்திரம் அந்தக் குட்டிப் பாப்பா...” என்றாள். தங்கையின் தலையை அன்புடன் கோதினான் சரவணன். சந்தோஷத்தில் திளைத்து இருந்த அந்தக் குடும்பத்துள், சரியாக அந்த நேரம் ஒரு குட்டிப் பாம்பு நுழைந்தது ஒரு பெண்ணின் உருவத்தில்...அவள் தான் நாகு...கூந்தல் பறக்க வலது புஜத்தில் நாகம் தலை உள்ள வங்கி அணிந்து சிரிப்பு என்ற சாயம் பூசி

கருநாகத்தின் விஷம் தேக்கி வந்தாள் நாகம்மா...அவளைக் கண்டதும் மனையிலிருந்து எழுந்து ஓடிப் போய் வரவேற்றாள் செல்வி... அவளைப் பார்த்ததும் உற்சாகத்துடன் பேசினாள். ஆனால் மஞ்சு கத்தினாள். அடிவயிற்றிலிருந்து வந்த கத்தல்.

“உன்னை யாருடி வரச் சொன்னது.? திரும்பி போ...இங்கு வராதே..” என்று கத்தினாள் மஞ்சு...நாகு சிரித்தாள்.

அவளின் வலது கையைப் பிடித்து உள்ளே இழுத்தாள் செல்வி.

இடது கையைப் பிடித்து வெளியே தள்ள யத்தனித்தாள் மஞ்சு.

மஞ்சுவின் கையை உதறிவிட்டு நாகு, செல்வியின் பின் வெற்றி நடை போட்டு உள்ளே நுழைந்தாள்.

“அண்ணி அவளைப் போகச் சொல்லுங்கள்..”

சரவணன் ஓடி வந்தான். “மஞ்சு என்ன பண்றே? அவங்க நம்ம விருந்தாளி. அறிவிருக்கா உனக்கு?”

“இல்லேன்னா...அவ உயிரை எடுக்கும் கருநாகம்....”

சம்பத் மகளை பார்த்து சொன்னார். ஏன் பிரச்சனை பண்ணுகிறாள் மஞ்சு? அவருக்குப் புரியவில்லை. மீண்டும் கலவரமா?

“மஞ்சு அது உன் அண்ணியின் தோழியாம். கொஞ்சம் நாகரிகமா நடந்துக்கோ.” என்று சமாதானமாகப் பேசினார்.

மஞ்சு கேட்கவில்லை. நாகுவை தர தரவென்று இழுத்துக் கொண்டு போய் வெளியே விட்டாள். செல்வி ஓடி வந்தாள்.

“அவள் என் தோழி..நீ யாரு அவளை வெளியே விரட்ட?” என்று சொல்லி மஞ்சுவின் கன்னத்தில் தன் அஞ்சு விரலும் பதியும்படி அடித்துவிட்டாள். கூட்டம் திக்பிரமித்து நின்றது.



மழை விழும்.
 
Top