முற்றத்தில் விழுந்த மழை துளிகள் .
அத்தியாயம்--6
சம்பத் நூல் நிலையத்துக்கு போனார். அங்கே தான் அவருக்கு ஒரு சிம்மாசனம் காத்திருக்கும். என்னை எடுத்துக் கொள்...இல்லை இல்லை என்னை எடுத்துக் கொள்...என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் அவரிடம் கெஞ்சும். அவர் தான் ராஜா...தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு மட்டும் தான். ஒன்றை விட்டு வேறொன்றை எடுத்தாலும் அவை கோபித்துக் கொள்ளாது. அதனால் புத்தகங்களே அவரின் நண்பர்கள். இன்று இயற்கையை பற்றி ஒரு கவிதை தொகுதியை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். இதில் விசேஷம் என்னவென்றால் அது சிறுவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தது தான். அப்படியே மெய்மறந்து போய்விட்டார். அவரே சின்னப் பையனாக மாறிப் போயிருந்தார்.
வழக்கமாக அவர் அமரும் நாற்காலியில் உட்கார்ந்தார். அது தான் அவரின் சிம்மாசனம். இன்று இந்தப் புத்தகம் தான் அவர் ராஜ்ஜியம். அவர் ஆளப் போகிறார்.
ஆர்.எல். ஸ்டீவென்சன் எழுதிய ஒரு கவிதை தொகுப்பை அவர் படித்தார். நன்றாக இருந்தது.
விளையாடும் காற்று பற்றி சிறுவன் வியந்து சொல்கிறான்.
“காற்றாடியை நீ மேலே பறக்க விடுவதை பார்த்தேன்
பறவைகளை வானத்தில் நீ தூவிவிடுவதை பார்த்தேன்
நீ அங்கும் இங்கும் வீசிக் கொண்டு போவதைப் பார்த்தேன்
சிறுமியின் பாவாடை புல்லில் உரசிப் போவது போல்
அது அழகாக இருக்கிறது...”
தென்றலை, மெதுவாகப் நடந்து போகும் நிறை மாத கர்பிணிக்கு
ஒப்பிட்டு பாடியது தமிழ் இலக்கியம். அவர் படித்திருக்கிறார். அது போல் ஆங்கிலக் கவிஞன் இவன்---காற்றை புல்வெளியில் புல்லை உரசிக் கொண்டு ஓடும் சிறுமியின் பாவாடை சலசலப்புக்கு ஒப்பிடுகிறான்! பேஷ் பேஷ்...அவர் மனம் பாராட்டியது.
“காற்றே நீ என்னென்னவோ செய்கிறாய் பார்த்தேன்
நீ என்னைவிட வலிமையான சிறுவனா?”
சின்னச் சின்ன விஷயங்களை கவிஞர்கள் பார்க்கும் விதமே தனி.
அடுத்து அவர் படித்த கவிதை “ஒரு விஷ மரம்” வில்லியம் பிளேக் எழுதியது. பதினெட்டாம் நூற்றாண்டின் சிறந்த கவிதை அது. அந்தக் காலக் கட்டத்தில் கோபத்தை மனதுக்குள் வளரவிட்டு வெளியே சிரித்து பேசுவது தான் பண்பாடு என்று கருத்தப்பட்டதாம். அது தவறு என்று காட்டவே இக்கவிதை எழுதப்பட்டதாம்.
“என் நண்பனிடம் கோபம் கொண்டேன்
அதை அவனிடம் சொன்னேன். என் கோபம் போயிற்று.
என் பகைவனிடம் கோபம் கொண்டேன்
அதை அவனிடம் சொல்லவில்லை. என் கோபம் மரம் போல் வளர்ந்தது.”
அந்தக் கோபத்தை எப்படியெல்லாம் வளர்கிறாராம் அவர்?
“பயம் என்னும் தண்ணீர் ஊற்றி
இரவும் பகலும் கண்ணீர் விட்டு
போலி சிரிப்பென்னும் சூரிய ஒளி காட்டி....”
அந்தச் செடி மரமாகிறது.....
அந்த மரம் ஒரு ஆப்பிள் கனியை கொடுக்கிறது. பளபளப்பான அந்த ஆப்பிளை திருட அவரின் எதிரி வருகிறான். மறுநாள் அவன் மரத்தின் அடியில் உயிரற்று கிடக்கிறான்.
“அதை நான் மகிழ்ச்சியுடன் பார்த்தேன்.” அடுத்தவன் வலியில் மகிழ்ச்சி அடைவது எவ்வளவு இழிவான செயல்! இதுக்கெல்லாம் காரணம் கோபத்தை உடனே வெளிபடுத்தாமல் மறைத்து வைத்தது தான். கோபமே இல்லாதது போல் நடித்தது தான். இந்த அளவில் முடிகிறது கவிதை.
இதிலிருந்து பெறப்படும் நீதி----எதிர்மறை எண்ணங்களை கோபம் என்னும் உணர்வால் தூண்டப்பட்டு வளர்க்கக் கூடாது. அப்படி வளர்ப்பின் அழிவு தான் முடிவாக இருக்கும். உடனுக்குடன் வெளிப்படுத்தி கோபத்தை நேசமாக்கணும். அழகான கண்ணதாசன் வரி இருக்கிறதே.
“பேசி கலந்துவிட்டால் கோபம் மாறி நேசமாகுது.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..”
உற்சாகமாக படித்துக் கொண்டிருந்த சம்பத்....இந்த விஷ மரம். எனும் கவிதையை படித்து சஞ்சலம் அடைந்தார்.
வளைகாப்பு முடிந்து, நடந்த கலாட்டாவில் வீடே போர்க்களம் ஆயிற்று. நாகுவின் விஷ வருகை இந்த விஷ மரம் போன்றது தானே என்று எண்ணினார். பாலில் ஒரு சொட்டு விஷம் மாதிரி.
“அம்மா செல்வி...தாயில்லாப் பெண், அவளை இப்படி ஓங்கி அடிச்சிட்டியே? நீயம் தாயாகப் போறவள் தானே? பாரு பிள்ளை கன்னம் சிவந்து வீங்கிடுச்சு.”
சம்பத் அமைதியாகப் பேசினாலும் அவர் உள்ளம் குமுறுவதை அந்தக் குரல் காட்டிக் கொடுத்தது. செல்வியின் கோபம் சற்று தணிந்தது. வெட்கி தலை குனிந்தாள்.
“தப்பு தான்...ஸாரி. இனி என் விஷயத்தில் தலையிடக்கூடாதுன்னு சொல்லுங்க அவளிடம்...” என்றபடி நாகுவை கை பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே போனாள் செல்வி.
“ஏண்டி...அறிவிருக்கா உனக்கு? எதுக்கு புள்ளைதாச்சிப் பெண்ணிடம் போய் மல்லுக்கு நிக்றே? அவ ப்ரெண்டை ஏன் வரக்கூடாதுன்னு சொல்றே? உனக்கு சேட்டை தானே? சின்னப் பெண்ணா லட்சணமா நடக்க மாட்டியா?”
தமையன் கடிந்து கொண்டபோது மஞ்சு வீறிட்டு அழுதாள்.
“என் கன்னம் சிவந்து வீங்கிப் போச்சு. அது பத்தி ஏதாவது கேட்டியா? பொண்டாட்டிக்கு பரிஞ்சு பேசிட்டு வரே? நீயெல்லாம் ஒரு அண்ணனா?”
“ரொம்பப் பேசாதே...அப்புறம் நானும்...”
“ஒ...அடிப்பியா? அதுக்குத் தான் எங்கம்மா என்னை பெத்துப் போட்டாங்களா?”
“உனக்கு செல்வியை ஆதியிலிருந்தே பிடிக்கலை. எப்படியாவது அவளை அவமானப்படுத்தனும்னு அலையறே....உனக்கேன் அவள் சிநேகிதியை பார்த்து காண்டு? எதுக்கு அவளை வரக் கூடாதுன்னு ஆடினே?”
“ஏன்னா...அவளைப் பத்தி எனக்குத் தெரியும். அவ தான் என் தோழி விமலாவோட அண்ணன் ரகுவுக்கு போதை மருந்து பழக்கத்தை கத்துக் கொடுத்தது....அண்ணிக்கும் அவள் தான் பழக்கியிருப்பான்னு...”
“என்ன இது சம்பத்? உன் பொண்ணு இப்படி சொல்றா? செல்வி அப்படிப்பட்ட பொண்ணா? இது என்ன கூத்தா இருக்கு?”
கூட்டம் கசமுசா என்று பேச ஆரம்பித்தது. செல்வி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். செல்வியின் பெற்றோர் காவேரியும் பத்ரியும் எகிறி குதித்தனர்.
“என் பொண்ணு ஒழுக்கத்தை பற்றி தாறு மாறா பேசறா, நீங்க பார்த்திட்டு சும்மா இருக்கீங்க?...” ச்சே..இந்தப் பெண் இப்படி போட்டு உடைத்துவிட்டாளே?
சம்பத் அங்கும் இங்கும் ஓடி சமாதானப் புறா பேச்சு பேசினார். அவர் பேச்சை செல்வி வீட்டார் கேட்பதாக இல்லை. உண்மையை சொல்லிவிட்டாள் என்றாலும் சபையில் அதை ஒத்துக் கொள்ளவா முடியும்? மஞ்சு மேல் அபாண்டமாக குற்றம் சாட்டினர். இந்த சின்ன வயதிலேயே பொல்லாத்தனம், விஷக் கொடுக்கு, குடும்பத்தை பிரிக்க வந்த கோடாரி காம்பு...என்றனர்.
“நிறுத்துங்க...என் பொண்ணு பொய் சொல்ல மாட்டா...அவளை வாய்க்கு வந்தபடி பேச விடமாட்டேன்..” சம்பத் கொதித்தார்.
“ஒ...மகளோடு சேர்ந்து நீங்களும் பழி போடறீங்களா? ரொம்ப நல்லாயிருக்கு. மாப்பிள்ளை....உங்க தங்கச்சி இப்படி ஒரு விஷக் கொடுக்கா இருப்பான்னு நாங்க நினைக்கலை...கிளம்புங்க எல்லோரும்...சாப்பாடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்....”
செல்வியும் பெட்டியில் துணிகளை அடுக்க ஆரம்பித்தாள.
“எப்படியும் வளைகாப்பு முடிந்ததும் கூட்டிக் கொண்டு போவது சம்பிரதாயம் தானே? நீங்க கூட்டிப் போங்க..ஆனா சம்பந்தி இப்படி கோபத்தோடு போகாதீங்க. சாப்பிட்டுவிட்டு ஆற அமரப் போங்க..”
காலில் விழாத குறையாக சம்பத் கெஞ்சவும் ஒரு வழியாக சாப்பாடு முடிந்ததும் கிளம்பினார்கள். சரவணன் செல்விக்கு ஆறுதல் சொல்லி வழி அனுப்பினான். செல்வி கணவன் மார்பில் முகம் பதித்து அழுதாள்.
“என்னை உங்க தங்கச்சி அவமானப்படுத்த துடிக்கிறா? எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்குமோ என்னவோ?”
“அப்படி எல்லாம் சொல்லாதே செல்வி. அவளை நான்
கண்டிக்கிறேன். நீ சந்தோஷத்தோடு போணும். நம் குழந்தைக்காக...எங்கே சிரி..”
சம்பத்தும் மருமகளை சமாதானப்படுத்தினார். அறை குறையாக சமாதானமாகி கிளம்பிப் போனாள் செல்வி. அவளோடு நாகுவும் கிளம்பினாள். செல்வியும் அவளுடன் அவள் குடுபத்தினரும் காரில் ஏறிக் கொண்டிருந்தார்கள். சரவணன் பெட்டிகளை டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தான். நாகு தனியாக வந்து கொண்டிருந்தாள். பிடித்துக் கொண்டாள் மஞ்சு.
“ஏய் துரோகி...நீயேண்டி இங்கே வந்தே? பொறுக்கி ராஸ்கல். சீ..நீயெல்லாம் ஒரு பொண்ணா? எங்க அண்ணிக்கு ஏதாவது கெடுதல் செஞ்சே உன்னை கொன்னுடுவேன்...அப்படியே ஓடிடு...”
“உங்கண்ணியை நான் ஒன்னும் பண்ணமாட்டேன். அதை அந்த போதை மருந்து பார்த்துக்கும்...வரட்டா...” நாகு சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு ஓடிப் போய் காரில் ஏறிக் கொண்டாள். மஞ்சு உள்ளம் வெடிக்க செய்வதரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கடவுளே...எங்க குடும்பத்தை அந்த நாசகாரியிடமிருந்து காப்பாத்து.” என்று வேண்டினாள். வேறு என்ன செய்வது? சிறு பெண் அவள்...அவள் சொல்வதை யாரும் நம்பவில்லை. அவள் தான் குற்றவாளியாக நிற்கிறாள்.
எல்லோரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. அண்ணன் அருகில் போய் மெல்ல சொன்னாள் மஞ்சு.
“அண்ணா...அந்த நாகு என்ன சொல்லிட்டு போனா தெரியுமா?...அண்ணியை போதைக்கு அடிமை ஆக்குவாளாம்...”
சரவணன் அவளை முறைத்துப் பார்த்தான். அவன் மனம் கொந்தளித்தது. எல்லோர் முன்னும் அவமானப்பட்டது அவன் மனைவி அல்லவா? அவனுக்கு பொறுக்க முடியவில்லை. செல்வி போதை மருந்து பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டாள். இப்ப போய் மஞ்சு சபையில் உண்மையை போட்டு உடைத்து விட்டாளே! எவ்வளவு அவமானம்!
“செல்வி என்ன முட்டாளா? அவளுக்கு அவள் குழந்தை மேல் அக்கறை இருக்காதா? நாகு வந்தாலும் சரி ராகு வந்தாலும் சரி அவளை ஒன்னும் பண்ணமுடியாது. நீ பிரச்சனை பண்றதை இத்தோடு விடு. உன்னோடு இனி நான் பேசப் போறதில்லை.”
தங்கையிடம் அவன் பேசுவதை நிறுத்திக் கொண்டான். மஞ்சு பாவம் எவ்வளவோ முயன்றும் முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டான். வீடே புயல் வந்த பூமி மாதிரி இருந்தது.
இத்தனை களேபரங்கள் வீட்டில் நடந்தது குறித்து சம்பத்துக்கு மனம் இடிந்து போயிருக்கும். உடைந்து போயிருக்கும். அவர் பிள்ளைகளுக்காக தன் மனதை தாங்கிப் பிடித்து தேற்றிக் கொண்டார். அவரே உடைந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டால் பிறகு தாயில்லாப் மகள், தகப்பனும் இல்லாமல் அநாதை ஆகிவிடும். அண்ணன் என்ற முட்டாள் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஒரு மாதம் ஒடிவிட்டது. இன்னும் வீட்டில் கலகலப்பு இல்லை. நூலகமே கதி என்று இருந்தார். அந்த விஷ மரம் கவிதை எழுதின கவிஞனுக்கு வாயில் சர்க்கரை தான் போட வேண்டும்.
எவ்வளவு அழகாக சொல்லியிருக்கார்.! சரவணன் கோபத்தை உள்ளுக்குள் வைத்து வளர்த்துக் கொண்டிருக்கிறான். அவரும் கடவுளிடம் தான் வேண்டிக் கொண்டார். என் அருமை தெய்வமே ப்ளீஸ்...கருணை காட்டு...என் குடும்பத்தை சிதச்சிடாதே.. கடவுள் பார்த்துப்பார் என்று .மனசுக்கு அறுதல் கூறியபடி வீட்டுக்கு வந்தார் சம்பத்.
“அப்பா...செல்வியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்களாம்...”
அவன் கண்ணில் கண்ணீர். சம்பத் மனம் திடுக்கென்றது.
“என்னடா ஆச்சு? குழந்தைக்கு ஒன்னுமில்லையே.?..”
“அப்படித்தான் நம்பறேன்...போன் வந்தது அத்தையிடமிருந்து...”
“சரி வா போலாம்...பார்த்திட்டு வருவோம். ஒன்னும் இருக்காதுடா
கவலைப்படாதே...வா..”
“நானும் வரேனப்பா...” என்றாள் மஞ்சு.
இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தவன் அன்று வாயைத் திறந்து சொன்ன வார்த்தைகளை மஞ்சு மறக்கவேயில்லை.
“துக்கிரி...நீ வாயை வச்சே...கரு நாக்கு. வராதே போ.”
மஞ்சு அன்று அழவில்லை. கண்ணீர் வற்றிவிட்டது.
மகளின் கன்னத்தில் முத்தமிட்ட சம்பத் சரி சரி விடு என்றார்.
ஆஸ்பத்திரியில் செல்வி போதை மருந்தை அதிகம் எடுத்துக் கொண்டதால் மயங்கிக் கிடந்தாள். செல்வி என்ற கொடி அறுந்து விடுமோ என்று பயந்தனர்.
மழை விழும்