கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள் அத்தியாயம் --7

sankariappan

Moderator
Staff member
முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள்.



அத்தியாயம்---7



கண்விழித்த செல்வி சரவணனிடம் கேட்ட முதல் கேள்வி



“மஞ்சு வந்திருக்காளா? அவளை நான் பார்க்கணும்.?”



“அவளை எதுக்கு தேடறே? முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு சொல்வாங்க...அது சரியாப் போச்சு...இன்னும் வந்து என்னென்ன சொல்வாளோ? அவளை விடு...செல்வி டாக்டர் என்ன சொன்னார்? குழந்தைக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?” கேட்டான்.



“நான் தான் புத்தி கெட்டுப் போய் நாகுவை அனுமதிச்சேன்...நீங்க அதை தடுத்திருக்கணும். மஞ்சு சொன்னதயாவது கேட்டிருக்கணும்...இப்ப என் குழந்தையும் என்னோடு சேர்ந்து கஷ்டப்படுது....” பேசிவிட்டு அவள் மறுபடியும் மயங்கிவிட்டாள். சரவணன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான். மஞ்சுவை அனாவசயமாக கோபித்துக் கொன்டோமோ?



“டேய்...நாம டாக்டர் கிட்டே போய் பேசுவோம். நீ ஒன்னும் கவலைப் படாதே.” என்றார் சம்பத். இருவரும் டாக்டரைப் பார்த்துப் பேசச் சென்றனர்.



“டாக்டர்...செல்விக்கு இப்ப எப்படியிருக்கு? குழந்தைக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?” என்று கேட்டான் சரவணன்.

டாக்டர் மல்லிகா அவனைப் பார்த்த பார்வையில் கோபம் இருந்ததா இல்லை இரக்கம் இருந்ததா என்று சம்பத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை.



“ஆமா..இப்ப வந்து கேளுங்க. ஒரு கர்ப்பிணி பெண்ணை பார்த்துக்க துப்பில்லை. பேச வந்திட்டீங்க. டிரக் அடிக்ட் பேஷண்ட்டை பார்த்துக்க ஒரு தனி ஆள் போடணும். அதுவும் கர்ப்பமா இருக்கறவங்களை...தனியா எதுக்கு விட்டீங்க? “ என்று திட்டினாள்.



“அவள் அந்த பழக்கத்தை விட்டிட்டான்னு நினைச்சேன்...ஆனா நேத்து அவளுக்கு பிட்ஸ் வந்து மயங்கி விழுந்த பிறகு தான் பயந்து போய் இங்கு கொண்டு வந்தேன்...”



“அப்ப கூட அவங்க ட்ரக் யூஸ் பண்ணினது உங்களுக்கு தெரியலை. அவங்களுக்கு இப்ப ஏழு மாசம். இப்படி பண்ணிக்கிட்டிருந்தா அது குழந்தையை பாதிக்கும். குழந்தை குறையோடு பிறக்கலாம். அல்லது செத்தே கூட போகலாம். இனிமே அவங்க யூஸ் பண்ணாம பார்த்துக்கிட்டா ஒருவேளை குழந்தை நல்லபடியாகப் பிறக்க சான்ஸ் இருக்கு.”



“நல்ல பார்த்துக்குறோம் டாக்டர். இப்ப ஒன்னும் ஆபத்தில்லையே?”



“கஷ்டப்பட்டு குறை பிரசவம் ஆகாம பார்த்துக் கிட்டோம். இனிமே ட்ரக் யூஸ் பண்ணக் கூடாது. அவங்க ஆஸ்பத்திரியிலேயே கொஞ்ச நாள் இருக்கணும். ஏன்னா திடீரென்னு டிரக்ஸ் நிறுத்த முடியாது. டோஸ்சை படிப்படியா குறைக்கணும். வித்டிராயல் சிம்டம்ஸ் ரொம்ப கஷ்டப்படுத்தும். இவங்க ட்ரக் பயன்படுத்தறாங்கன்னு போலிஸ் கிட்டே சொன்னா அரெஸ்ட் பண்ணிடுவாங்க. குழந்தையை கொல்ல முயற்சி செய்தாங்கன்னு கேஸ் ஆயிடும். பிறகு சிக்கல் தான்...” என்றார் டாக்டர் கவலையுடன்.



“ஐயோ...அப்படியெல்லாம் கம்பிளேன் பண்ணிடாதீங்க டாக்டர்.”



“உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ் தரேன். இனிமே அவங்க இதிலிருந்து கிளீன் ஆகணும். ரிக்கவரி ஸ்டேஜ் வந்தா தான் டிச்சார்ஜ் பண்ணமுடியும். எக்காரனத்தைக் கொண்டும் அவங்க தனியா இருக்கக் கூடாது...மத்தபடி நர்ஸ் சொல்றத கேட்டு நடந்துக்கோங்க. இப்போதைக்கு சரி பண்ணிடலாம்னு நினைக்கிறேன். அவுட் ஆப் டேஞ்ஜர் என்று சொல்ல முடியாது...”



டாக்டர் அடுத்த பேஷண்டை பார்க்க ஆயுத்தமானார். சம்பத்தும் சரவணனும் மனகிலேசத்துடன் எழுந்து வந்தனர். செல்வியின் வார்டுக்குள் அவர்கள் நுழைந்த போது செல்வியின் அம்மா காவேரி யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். பார்த்தால் அங்கு மஞ்சு நின்று கொண்டிருந்தாள்.



“ஏய்...நீ எப்படி இங்கே வந்தே? நான் தான் வரக் கூடாதுன்னு சொன்னேனே.”



“அண்ணா...நான் சொல்லலை அந்த நாகு மறுபடியும் புகுந்து அண்ணியை ட்ரக் யூஸ் பண்ண பழக்கிட்டா. ப்ளீஸ் அண்ணா நான் பக்கத்திலே இருந்து அண்ணியை பார்த்துக்கறேன். அந்த நாகுவை உள்ளே நுழையவிடாம பார்த்துக்கிறேன். இந்த அம்மா என்னை துரத்தறாங்க.”



“சரவணன்...இப்பவாவது மஞ்சு சொல்றதை கேளு. நீ இவ்வளவு திட்டியும் அவ வந்திருக்கான்னா அவளுக்கு எவ்வளவு அக்கறை இருக்குன்னு...”



“மஞ்சு...என்னை மன்னிச்சிடு. நீ சொன்னது தான் சரி. நாம இனி செல்வியை தனியே விடவே கூடாது. நீ இங்கேயே ஆஸ்பத்திரியில் இரு. அத்தை அவளை தடுக்காதீங்க. உங்களுக்கு வயசாச்சு...உங்களுக்கு பிரச்சனையோட தீவிரம் தெரியலை. நீங்க வீட்டுக்குப் போங்க…..இல்லே மஞ்சுவுக்கு ஒத்தாசையா இருங்க...மஞ்சு நீ சின்னப் பெண்ணானாலும் விவேகமானவ. டாக்டர் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னாங்க. இல்லை செல்வியை அரெஸ்ட் பண்ணிடுவாங்களாம். குழந்தையும் செத்திடுமாம்..” தேம்பி அழுதான் சரவணன்.



“சம்பந்தி அம்மா..நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நாம எல்லோரும் சேர்ந்து செல்வியை இந்த பழகத்திலிருந்து விடுவிக்கணும்.நீங்க எப்படி அந்த நாகுவை உள்ளே விட்டீங்க? இன்னும் கவனமா இருக்க வேண்டாமா? இப்ப பாருங்க எவ்வளவு கஷ்டம்?” என்றார் சம்பத்.



காவேரி அம்மா மூக்கை சிந்தினாள். “எனக்கு என்ன தெரியும்? இந்த கன்றாவியெல்லாம் கண்டேனா? ஏதோ சினேகிதின்னு சொல்லி பேசினா. சரி புள்ளத்தாச்சி பொண்ணு மனம் சந்தோஷமா இருக்கட்டும்ன்னு விட்டேன். நான் கண்டேனா இப்படி திரிசமன் வேலை பண்ணும்னு.? இவளுக்கு புத்தி எங்கே போச்சு? பிள்ளை உண்டாகி இருக்கோமே என்ற நினைப்பு வேண்டாம்? இப்படியொரு மகள்...நான் செய்த பாவம்...மூதேவி...முளிக்கரத்தை பாரு...”



“சரி விடுங்க. நீங்க அசந்த நேரும் அந்தப் பேய் உள்ளே வந்திடப் போவுது. மஞ்சுவுக்கு இப்ப பள்ளி விடுமுறை தான். அவளும் இருந்து பார்த்துக்கட்டும்.”

நர்ஸ் அஸ்வதா உள்ளே வந்தாள். செல்வியின் பி.பி செக் செய்தாள்.



“இப்ப நார்மலா இருக்கு. அட்மிட் பண்ணியபோது எக்கு தப்பா பி.பி ஏறிடுச்சு. ரொம்ப டாமேஜ் ஆகியிருக்கும்னு நினைச்சோம். சமாளிச்சிடலாம்னு தோணுது. ஆனா இதோட இந்த ட்ரக்குக்கு முழுக்கு போடணும். இப்ப நாங்க இந்த டிரக்கின் வீரியத்தை குறைக்க சிகிச்சை செய்வோம்....அதை மருத்துவ ரீதியா தான் செய்ய முடியும். அதுக்கு தகுந்த மருந்து மாத்திரைகள் கொடுப்போம். பேஷண்டை ஜாக்கிரதையா பார்த்துக்கணும். வலி இருக்கும், மயக்கம் வரும்...சாப்பிட முடியாம திண்டாடுவாங்க. டோஸ் ஏத்திக்கனும்னு கத்துவாங்க ...ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. அப்ப நாங்க அதை எப்படி டீல் பண்ணணுமோ அப்படி டீல் பண்ணுவோம். எனவே ஆஸ்பத்திரியில் அவங்க பல வாரங்கள் இருக்கணும். புரிஞ்சுதா? நல்ல படியா தாயும் சேயும் இருக்கணும்னா நாங்க சொல்றதை ஸ்ட்ரிக்ட்டா பாலோ பண்ணனும்...எதுவான கூப்பிடுங்க நான் இங்கே தான் இந்த வார்டு பக்கம் இருப்பேன்..” அஸ்வதா சொல்லிவிட்டுச் சென்றாள்.



“ரொம்ப நன்றி நர்சம்மா..” என்றான் சரவணன். செல்வி மெல்ல கண்விழித்தாள். அவளுக்கு அடுத்த ட்ரக் டோஸ் தேவை என்று உடம்பின் பகுதிகள் முறுக்கேற அவள் கத்தினாள். “ட்ரக் ஊசி போடுங்க..போடுங்க..”



“அண்ணி...சத்தம் போடாதீங்க. இப்ப அதெல்லாம் வேண்டாம். உங்க குழந்தைக்கு ஆகாது.” என்று செல்வியை கட்டுப்படுத்தினாள் மஞ்சு. மஞ்சுவின் முகத்தை பிராண்டினாள் செல்வி ....தலை முடியை இழுத்தாள்.



“ச்சே போ..நீ யாரு என்னை கட்டுப்படுத்த? போ நீ...நாகு எங்கிருக்கே? வா. எனக்கு அடுத்த டோஸ் போடு..”



மஞ்சு முகத்தில் நகக் கீறலால் ரத்தம் கசிந்தது. தலை முடி இழுக்கப் பட்டதால் மண்டையில் வலி உயிர் போயிற்று. மஞ்சு பொறுத்துக் கொண்டாள். “அண்ணி...நாகுவை நான் வரச் சொல்றேன். நீங்க அமைதியா படுங்க. குழந்தை இசகு பிசகா புரண்டு தப்பாயிடப் போவுது.”

செல்வி பயத்துடன் தன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள்.



“ஆமா..பாப்பா இருக்கில்லே...ஸாரி மஞ்சு கீறிட்டேனா. நான் ஒரு பாவி..” விக்கி விக்கி அழுதாள்.



“சரி பரவாயில்லை அண்ணி. அதெல்லாம் சரியாப் போயிடும். நீங்க படுங்க.”



செல்வி படுத்தாள். மூச்சு விட திணறினாள். உடம்பு முறுக்கேறி வலித்தது. அவளோட கத்தல் கேட்கவே பரிதாபமாக இருந்தது. பார்க்க பயமாகவும் இருந்தது. எல்லோரும் பதறினர். உள்ளம் படபடவென்று அடிக்க நின்றார்கள். சரவணன் நர்சிடம் ஓடிப் போய் நிலைமையை சொன்னான்.



“ட்ரக் வலிமை உடம்பிலிருந்து போகணும். அதுக்கு தான் பாடு படறோம். இதுக்கு பேர் தான் டிடாக்ஸ். பயப்படாதீங்க...படிப் படியா இந்த சிம்டமஸ் போயிடும். நார்மலாயிடுவாங்க. இந்த கத்தலும் வலியும் இருக்கத் தான் செய்யும். மிக குறைந்த அளவில் நாங்களே இப்ப ட்ரக் டோஸ் கொடுப்போம்..” கேக்கவே ஷாக்காக இருந்தது. இதெல்லாம் புதிதான அனுபவம். மனசை சில்லாக்கும் அனுபவம். நர்ஸ் குறிப்பிட்ட டோஸ் போட்டதும் தான் செல்வியின் கத்தல் குறைந்து அவள் மயக்கமானாள். காவேரி அம்மாள் திட்டிக் கொண்டே இருந்தாள்.



“சனியன் செத்து தொலைந்தால் தேவலை. அவமான சின்னம்...பிறக்கும் பிள்ளை என்ன லட்சணத்தில் இருக்குமோ?” நர்சிடம் கேட்டாள்.



“எவ்வளவு நாள் இப்படி இருக்கும்?”


“அத அவங்க எடுத்துக்கிட்ட ட்ரக்கோட அளவு பொறுத்தது. நான் வந்து கவனிக்கிறேன். கவலைப்படாதீங்க.” நர்ஸ் ஆறுதல் சொன்னாள். அவள் போட்ட சிறிய டோஸ் டிரக் கொடுத்ததில் செல்வி உறங்கிப் போனாள்.



“உடனே இந்த ட்ரக்கை அடியோடு நிப்பாட்டமுடியாது. டாக்டர் சொன்ன அளவுபடி கொடுத்திருக்கோம். மெல்ல மெல்ல உடம்பின் முறுக்கேறுதல், வலி வாந்தி ஜுரம் எல்லாம் நிக்கும். எங்களுக்குத் தெரியாமலோ இல்லை உங்களுக்குத் தெரியாமலோ அவங்க மீண்டும் போதைய ஏத்தும் ட்ரக் எடுத்துக்கிட்டா அப்புறம் குறை உள்ள குழந்தை தான் பிறக்கும். சொல்லிட்டேன்....ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க.”



நர்ஸ் அஸ்வதா அவள் வேலையை கச்சிதமாக செய்தாள். என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறித்திவிட்டுப் போனாள்.



செல்வியின் அம்மா அங்கு பேருக்குத் தான் இருந்தாள். பாதி நேரம் சேரில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அதிக நேரம் உட்கார முடியவில்லை. சர்க்கரை நோய் பாடாய் படுத்த எந்நேரமும் களைப்பாக இருந்தாள். மஞ்சு அதை புரிந்துகொண்டு இரவு பகல் என்று பாராமல் செல்வியை கவனித்துக் கொண்டாள்.



சரவணன் காலையில் வந்து அவளை வீட்டுக்குப் போகச் சொல்வான். அப்போ தான் இரண்டு மணிநேரம் தூங்குவாள் மஞ்சு. உடம்பு ஓய்வுக்காக கெஞ்சும். நாம் சுணங்கி விட்டால் செல்வி கதி என்னாகுமோ என்று பதறி விழித்துக் கொள்வாள். சம்பத்துக்கு பாவமாக இருக்கும். சிறு பெண்...பாவம் அவள் தலையில் எவ்வளவு பெரிய பாரம்! அகிலா இருந்திருந்தால் இவள் இப்படி கஷ்டப்படவிட்டிருக்க மாட்டாள். என்ன செய்வது? இந்த செல்வி இப்படி பண்ணுகிறாளே!



“நீ இன்று பூரா ரெஸ்ட் எடு மஞ்சு...நான் போய் பார்த்துக்கிறேன்..”



“வேண்டாம்ப்பா. ஒரு வாரம் போயிடுச்சு. இப்ப தான் அண்ணி கொஞ்சம் சாந்தமாகிட்டு வராங்க. நீங்க அசந்த நேரம் அந்த நாகு குரங்கு வந்திடுச்சின்னா? பயமா இருக்குப்பா. பாப்பா நல்ல படியா பிறக்க வேண்டாமா? குறையோட பிறந்தா அண்ணனுக்கு எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்? அந்தக் குழந்தை என்ன பாடு படும். நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் சமாளிச்சிடுவேன்.”



சம்பத் கண்கள் கசியும். மனதில் ரத்தம் வழியும்.



“அகிலா நீ தான் மஞ்சு உடம்பில் புகுந்து இப்படி பாதுகாக்றியோ?”

என்று புலம்பிக் கொள்வார்.



வீட்டில் அவர் தான் சமையல். ஆஸ்பத்திரி உணவு வேண்டாம் என்று அவர் சமைத்ததை தான் கொடுத்து விடுவார். சரவணன் காலை ஆபிஸ் போகும் முன் அங்கு போய் இட்டிலி சாம்பார் சட்டினி என்று செல்விக்கும் அவள் அம்மாவுக்கும் கொண்டு கொடுத்து, பார்த்துவிட்டுப் போவான். பதினோரு மணி வாக்கில் மஞ்சு மதிய சாப்பாடு எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரி வந்துவிடுவாள். மாலை ஆறு மணிக்கு வரும் சரவணன் இரவு சாப்பாட்டோடு வருவான். இப்படியாக ஒரு வாரம் போயிருக்கும். செல்வி கொஞ்சம் சம நிலைமைக்கு வந்தாள்.



“நான் இப்ப நல்ல பீல் பண்றேன். என்னங்க பாவம் மஞ்சு சின்னப் பெண் இனி அவள் இங்கு வேண்டாம். அடுத்த வாரம் பள்ளி திறந்துவிடும். இனி அம்மா பார்த்துக்குவாங்க.” என்றாள். சரவணனுக்கும் சரி என்று தோண்றியது.



“மஞ்சு...டாக்டரிடம் கேட்டேன். எல்லாம் நார்மலா ஆகிட்டிருக்கு. பயப்பட வேண்டாம். குழந்தையும் நல்லா இருக்குன்னு சொன்னார். நீ பாவம் ரொம்ப கஷட்டப்பட்டுட்டே....தேங்க்ஸ் மஞ்சு. உனக்கு நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன். என் உயிரை காப்பாத்தி கொடுத்திருக்கே...வீட்டுக்குப் போ.”



“இல்ல அண்ணா...இன்னும் ஒரு வாரம் இருக்கு பள்ளி திறக்க. அது வரை இருக்கேன்..” கடமை உணர்வு மிக்க தங்கையின் அன்பு பார்த்து நெஞ்சு நெக்குருகிப் போனான் சரவணன். சம்பத் ஆரஞ்சு பழம் பிழிந்து கொடுத்துக் கொண்டிருந்தார். செல்வி எல்லோரிடமும் சகஜமாகப் பேசினாள்.



அன்றிரவு சந்தோஷத்தில் மஞ்சு நன்கு தூங்கி விட்டாள். சின்னப் பெண் தானே சென்ற வாரம் தூக்கமில்லமால் காவல் காத்ததில் களைப்பு அதிகமாகிவிட்டது. இரவின் மடியில் ஆஸ்பத்திரியே அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. செல்வியும் நன்கு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல உள்ளே நுழைந்த உருவம் ஒன்று செல்விக்கு கையில் ஒரு டோஸ் போட்டுவிட்டு ஓடி மறைந்தது. அது நாகு தான். பயன்படுத்திய ஊசியை மஞ்சுவின் கைப்பையில் திணித்துவிட்டுப் போய்விட்டது.



மூன்று நாள் இரவு இந்த கூத்து நடந்தது. நாலாம் நாள் செல்வி மறுபடியும் மயக்கம் ஜுரம் வாந்தி கத்தல் என்று கலாட்டாவில் இறங்கிவிட்டாள். நர்ஸ் அஸ்வதா வந்து சத்தம் போட்டாள்.



“யாரு அவங்களுக்கு ட்ரக் சப்ளை பண்ணியது? அவங்க எழுந்து போக வாய்ப்பே இல்லையே? படிச்சு படிச்சு சொன்னேன் இப்படி பண்ணிட்டீங்களே அம்மா. டாக்டர் திட்டப் போறார். செல்வி...என்ன காரியம் செஞ்சிருக்கே?”



“நான் நல்ல தூங்கிட்டு தான் இருந்தேன். யாரோ என் கையிலே சுருக்குன்னு குத்தின மாதிரி இருந்தது...இங்கு வேறு யாரும் வரலை. மஞ்சு தான் இருந்தாள். அம்மா குறட்டை விட்டு தூங்கறாங்க...மஞ்சு நீ யாரையாவது பார்த்தியா?” செல்வி பிரயத்தனப்பட்டு தலை சுற்றலை சமாளித்து குழறி பேசி முடித்தாள். காவேரி அம்மாளுக்கு சந்தேகம். மஞ்சு பையை ஆராய்ந்தாள். நான்கு ஊசி கூடுகள் கிடந்தன. ஆவேசமானாள்.



“அடி பாவி...உன் வேலை தானா? உதவி செய்யற மாதிரி செய்து நைசா குணமாகும் போது போதை ஊசிய போட்டு விட்டிட்டியே...பாவி பாவி..”



சரவணன்...பிறகு செல்வி என்று எல்லோரும் மஞ்சுவை திட்டி தீர்த்தனர்.



“உன்னை என் பெண் போல நினைச்சேனே மஞ்சு இப்படி பண்ணிட்டியே? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்? என் கண்ணே என்னை குத்துதே..”

என்று அழுதான் சரவணன். அஸ்வதா வந்து சொன்னாள்.



“இதோ பாருங்க நீங்க வேற ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க. ஒரு சலுகை கொடுத்தா அதை காப்பாத்திக்க முடியலை உங்களாலே. இனிமே இங்கு இருந்தா நாங்க போலிசுக்கு இன்பார்ம் பண்ணுவோம். வீட்டிலே போய் பார்த்துக்கோங்க டாக்டர் சொல்லிவிட்டார்...”





அன்றே அவர்களை பில் செட்டில் பண்ணச் சொல்லி துரத்திவிட்டார்கள்.



“நான் அப்படி செய்வேனா அண்ணா? அண்ணி நீங்களாவது சொல்லுங்க..”

என்று மன்றாடினாள் மஞ்சு. சம்பத்தை தவிர யாரும் அவளை நம்பவில்லை. விரக்தி அடைந்து விட்டான் சரவணன். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. சம்பத் சொன்னார்.



“இத பாருப்பா சரவணா...யாரோ இப்படி செய்துவிட்டு, மஞ்சு மேல் பழியைப்போட்டு தப்பிச்சிட்டாங்க. எப்படியோ அந்த நாகு தான் வந்திருக்கணும்...மஞ்சுவை குறை சொல்லி என்ன பயன்? அவள் நல்ல குழந்தையடா. வயதுக்கு மீறிய கடமை உணர்வு கொண்டவடா...”



நாட்கள் மாதங்களாகியது. செல்வியின் துன்பம் தீரவில்லை. செல்வி மஞ்சுவை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள். தன் தாய் வீட்டுக்குப் போனாள். ஒரு மாதம் லீவு போட்டுவிட்டு சரவணன் அவள் வீட்டுக்குப் போய் செல்வியை பார்த்துக் கொண்டான். செல்வியின் கத்தல், தலை சுற்றல்

எல்லாம் தொடர்ந்தது. ஒரு நாள் செல்வியின் மேஜை மேல் ஒரு குறிப்பு இருந்தது.



“என்ன செல்வி...ஆரோக்கியமா பிள்ளை பிறக்கும்னு நினைக்றியா? அய்யோ பாவம் ஏமாந்து தான் போவே. உனக்கு குறை பிரசவம் தான் ஆகும். நீயும் செத்து உன் குழந்தையும் சாகும். மஞ்சு எனக்கு உதவி செய்ததால் என்னால் இப்படி செய்ய முடிந்தது...குட் பை...”



டைப் அடிக்கப்பட்டிருந்தது. செல்வி எதையும் உணரும் நிலையில் இல்லை. தன் நினைவு இல்லாமல் பிதற்றியபடி கிடந்தாள். அப்பாவிடம் போனில் அந்த அனாமத்தேய கடிதம் பற்றி சொன்னான் சரவணன். மஞ்சு உதவி செய்திருக்கிறாள் என்று எழுதியிருந்ததை அவன் நம்பினான். ஆஸ்பத்திரியில் அவ்வளவு சுலபமாக யாரையும் உள்ளே நுழைய விட மாட்டார்கள். மஞ்சு உதவி இல்லாமல் நாகு வந்திருக்க முடியாது.



“மஞ்சு நான் திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு பழி வாங்குகிறாள்.” என்றான். சம்பத் சொன்னார்.



“யாரோ வேண்டுமென்றே செய்த சதி இது சரவணா. மஞ்சுவை போய் சந்தேகப்படறயே, உனக்கு வெக்கமா இல்லை? உனக்கு பயித்தியம் தான் பிடிச்சிருக்கு. மஞ்சு அப்படிபட்டவளில்லை புரிஞ்சுக்கோ..”

போனை கட் செய்தான் அவன்.



நான்கு நாள் கழித்து சரவணன் அப்பாவுக்குப் போன் செய்தான்.



“அப்பா...செல்விக்கு பிரசவ வலி எடுத்து பக்கத்தில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் சேர்த்தோம்...செல்விக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு..”



“அப்படியா...ரொம்ப சந்தோசம்ப்பா...கங்கிராட்ஸ்..இதோ....பார்க்க வரேன்.”



“அப்பா...இரண்டு பாட் நியுஸ். ஒண்ணு குழந்தை பிழைக்குமோ என்னவோ தெரியலை. அதுக்கும் ட்ரக்கோட வீரியம் இறங்கிடிச்சு. கத்திட்டே இருக்கு. சாதாரண குழந்தைகள் கத்தற மாதிரி இல்லை. செல்வி கத்துவாளே வலியில், அது மாதிரி..கேக்கவே பரிதாபமாக இருக்கு. அந்த குழந்தை என்ன பாவம் செஞ்சுதப்பா? இப்படி பிறக்கும் போதே தண்டனயோட பிறந்திருக்கு. இன்னொரு பாட் நியுஸ்...செல்வியை அரஸ்ட் பண்ண போலீஸில் புகார்

கொடுத்திடுச்சு ஆஸ்பத்திரி நிர்வாகம்...அதுக்கு பயந்து செல்வி காணாமல் போயிட்டா...அப்பா தலைக்கு மேலே வெள்ளம் போயிடுச்சு..”



“என்னடா சொல்றே? போலீஸ் புகார் யார் கொடுத்தா? இதிலே போலீஸ் எப்படி வந்தது? ஒன்னும் புரியலையே?”



“அப்பா...போதை மருந்து பயன்படுத்தி குழந்தை சாகும் நிலைமைக்கு கொண்டு வந்துட்டா என்று செல்வி மேலே புகார் கொடுத்திட்டாங்க ஆஸ்பத்திரி நிர்வாகம். அவள் போதையில் ஒன்றும் புரியாமல் குழந்தைக்கும் போதை ஊசியை போடப் போனதை நர்ஸ் அஸ்வதா பார்த்துவிட்டாள். எனவே உடனே புகார் கொடுத்திட்டாங்க. நாள பின்னே குழந்தையை அவங்க தான் சாகிற நிலைமைக்கு கொண்டு வந்திட்டாங்ன்னு அவங்க மேலே பழி போடுவோமாம். குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு டாக்டர் தான் பொறுப்புன்னு நாம கேஸ் போட்டிட்டா...அவங்க பயந்திட்டாங்க. முன் எச்சரிக்கை நடவடிக்கையாம்...செல்வி ஏம்ப்பா இப்படியெல்லாம் செய்றா?. என்னவோ போங்க தலை சுத்துது.” விரக்தியாகப் பேசினான் சரவணன்.



அவன் அழவில்லை. அளவுக்கு மீறிய துக்கத்தில் மனிதர்கள் உறைந்து போவார்கள். சரவணன், சம்பத், மஞ்சு அன்று அப்படிதான் ஆனார்கள்.



மழை விழும்.
 
Top