கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே!...அத்தியாயம் 4

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
யாதுமாகி என்னுள் நிறைந்தவனே!...அத்தியாயம் 4
யாதுமாகி என்னுள் நினைந்தவனே!!!


அத்தியாயம் - 4



மரத்தில் தலைகீழாக தொங்கியபோதும் சரி பின் காலில் அடிப்பட்ட போதும் தன் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு வருவதை தைரியமாக எதிர்கொண்ட அந்த சிறுவனின் துணிவு கார்த்திக்கை மிகவும் கவர...

“உன்னிடத்தில் சங்கி இருந்திருந்தால் அவள் கத்தற கத்தில் இந்த ஏற்காடே அதிர்ந்திருக்கும்… ஆனால் நீ எப்படி இத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு இருந்தாய் என்று ஆச்சரியமாக இருக்கு” என்றான் தோளிலிருந்த சிறுவனை மெச்சும் விதமாக.

“எனக்கு வலித்தாலோ இல்லை யாராவது திட்டினாலோ இல்லை எனக்கு எப்ப அழ வேண்டும் என்று தோன்றினாலும் என்னுடைய தனி அறைக்குச் சென்று அழலாமே தவிர வேற எங்கேயும் அழுதுகொண்டு நிற்க கூடாது என அம்மா சொல்லி இருக்காங்க” என்று கிளிப்பிள்ளையாக அம்மாவின் வார்த்தையை உதிர்த்தாள்.

ஒருவேளை “பையன்” என்பதால் தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லி இருப்பாங்களோ? என்று தீவிரமாக யோசித்தபடி “ஓ!!!” என்று கூறிய போதும் ஏனோ மனத்தில் இனம் புரியாத நெருடல் ஏற்பட்டது.

அடுத்த ஐந்து நிமிடம் மௌனமாக கரைய.. தன்னை தூக்கிக்கொண்டு முதலில் விரைவாக நடந்தவனின் வேகம் படிப்படியாக குறைந்து எறும்பு ஊர்வது போல் நடந்துகொண்டு இருந்தவனின் நடவடிக்கை உணர்ந்தவள்…. அப்பொழுது தன்னை மரத்திலிருந்து காப்பாற்றியதோடு மட்டும் நில்லாது பொதி கழுதையாக சுமந்துக்கொண்டு செல்பவருக்கு தான் இன்னும் நன்றியைத் தெரிவிக்கவில்லை என்று புரிய “ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்றாள் நிரல்யா சற்றே முன்னால் தலையை நீட்டியப்படி.

காதில் விழுந்த மாமா என்ற பதத்தால் தன் எண்ணத்திலிருந்து மீண்ட கார்த்திக்.. விசுக்கென்று தலையைத் திருப்பி “எடுத்தவுடன் மாமாவா?? ஏன் அண்ணா சொல்லி நன்றாக பழகிய பின் மாமா, மச்சி சொல்லும் இல்லையா??” என்றான் வெடுக்கென்று.

அவனின் கேள்விக்கான பொருள் புரியாது “அண்ணான்னு உங்களை அழைக்க கூடாதுன்னு போன தீபாவளி அன்று அத்தை சொன்னாங்களே!!!” என்றாள் பணிவாக.

“அத்தை என்றால் என் அம்மாவா?”

“ம்ம்…”

“அது என்ன போன தீபாவளி?”

நன்றாக கார்த்திக்கின் முதுகில் சாய்ந்துக்கொண்டு பேசுவதற்காக அவனின் தோளில் தன் சென்னியை வைத்தவள்.. “எனக்கு நீங்க மாமாவானது போன வருடம் தீபாவளி அன்று” என்று தன் வலியை மறந்து அவன் கேட்ட கேள்விக்கு மிக துல்லியமாக பதில் சொன்ன திருப்தியில்… “பலகாரம் கொடுக்க உங்க வீட்டிற்கு அப்பாவோடு வந்தபோது… நீங்க வாசல் வழியாக வர விடாது பட்டாசு கொளுத்திப் போட்டுக்கொண்டு இருந்திங்களா… பயந்து போய் பின் வழியாக வீட்டுக்கு வந்த என்னைப் பார்த்த அத்தை ஏன் இப்படி வந்தேன்னு கேட்டாங்க.. அப்போ சங்கியோட அண்ணான்னு சொன்னேனா… உடனே அத்தை அவன் சங்கிக்கு தான் அண்ணன் உனக்கு மாமா இனி மாமாதான் அழைக்கணும் சொன்னாங்க. ஆனா...” என்று இழுத்து நிறுத்தினாள்.

“என்ன ஆனால்?”

“சங்கி மங்கி சண்டை போட்டுக்கொள்ள காரணமாக இருக்கும் கார்த்திக் மாமாவா? இல்ல வந்த சண்டையை முடித்து வைக்கும் பத்ரி மாமாவா? சண்டைக்கு பின் இருவரையும் சமாதானப்படுத்த ஐஸ் கீரீம் வாங்கி கொடுக்கும் ஆர்யா மாமாவா? இதில் எந்த மாமா நீங்க??” என்று தன் வயதிற்கு மீறி கேட்ட அந்த சிறுவனின் அறிவு கூர்மையைக் கண்டு கார்த்திக்கால் வியக்கத்தான் முடிந்தது!!!

சங்கி, மங்கிக்கு மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள் என்று தோழிகள் பேச்சில் அவர்களின் பெயரையும் தெரிந்து வைத்திருந்தாளே தவிர நேருக்கு நேராக பார்த்ததோ, பேசியதோ இல்லை.

“ம்ம்… நொந்த மாமா” என்று முணுமுணுத்தவன்.. “இனி ஒரு தரம் என்னை மாமா.. கீமான்னு சொன்ன உடையாத காலை உடைத்து அனுப்புவேன் புரியுதா?” என்று மிரட்டினான் கார்த்திக்.

“சரி கூப்பிட மாட்டேன்” என்று அவசரமாக அவன் சொன்னதற்கு ஒத்துக்கொண்டவள் “அத்தை உங்களை அண்ணான்னு கூப்பிட கூடாதுன்னு சொல்லிவிட்டாங்களே அப்ப இனிமேல் உங்களைப் பார்த்தால் சங்கியோட அண்ணான்னு கூப்பிடவா?” என்று அவனை எப்படி அழைப்பது என்பதைப் பற்றி விடாது கேட்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

விட்டால் சித்தப்பான்னு அழைக்கவா என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று மனதில் நொந்துக்கொண்டவன் “இதோ பார் நான் உனக்கு மாமாவும் இல்லை நீ எனக்கு மச்சானும் இல்லை… இனி என்னை கார்த்திக் என்று பெயர் சொல்லியே கூப்பிடு. வீட்டில் யாராவது கேட்டால் நான் தான் இப்படி அழைக்க சொன்னேன்னு சொல்லு…. போதுமா?” என்றான் அதிகாரமாக.

“சரி” வேகமாக தலையை ஆட்டி ஒப்புக்கொண்டாள் அவள்.

விடாமல் தொணதொணப்பான் என்று எதிர்பார்த்தவனுக்கு பதிலாக மிக சாதாரணமாக சரி என்று வந்த பதிலைக் கண்டு “நீ யார் என்ன சொன்னாலும் உடனே ஆமாம் என்று தலையை ஆட்டி விடுவாயா?” என்றான் கார்த்திக்.

“ம்ம்.. நம்மை விட வயது பெரியங்க எது சொன்னாலும் அப்படியே கேட்கணும் என்று அம்மா சொல்லி இருக்காங்க..”

வாயைத் திறந்தாலே அம்மா அம்மா என்று விடாது பாடம் ஓதும் அவளை லேசாக திரும்பிப் பார்த்து “நீ அம்மா செல்லமா?” என்றான் விளையாட்டாக.

“செல்லமா?? செல்லம் என்றால் என்ன?” என்று அவனையே திருப்பிக் கேட்க… அந்த குரலில் எதிரொளித்த அறியாமை அவனைத் திகைக்க வைத்தது என்றால் சிறுவனால் கேட்கப்பட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று புரியாத தன்மை அவனை யோசிக்க வைத்தது.

“செல்லம் என்றால்…. என்றால்… உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்… நீ என்ன சொன்னாலும் செய்வாங்க..” என்றான் ஒரு ஐந்து நிமிடம் யோசித்து பின் விளக்கி விட்ட வெற்றி களிப்பில்.

“ஒ!!! அப்ப நான் அப்பா செல்லம்” என்றாள் தீவிரமாக யோசித்தபடி.

பெருமூச்சை சத்தம் போட்டு விட்டவன் “மூச்சுக்கு மூன்னூறு தடவை அம்மா.. அம்மான்னு சொல்லிவிட்டு இப்ப அப்பா செல்லம் என்றால் என்ன அர்த்தம்???”

“அப்பா தான் என்னிடம் நீ அம்மா சொல்ற பேச்சைக் கேட்டு நடக்கணும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் அம்மா எது சொன்னாலும் கேட்பேன்” என்று மொழிய கார்த்திக்கிற்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை!!!

“சங்கியோடு ப்ரெண்டு இல்லை.. இப்படி தான் பேசுவாய்” என்று அவன் சொல்லி முடிக்கவும்..

“அப்ப… கார்த்திக்.. இன்று முதல் இருந்து நீ என்னோட செல்லம் ஆகிட்ட தானே?” என்று சற்றே உல்லாசமான குரலில் அறிவிக்க.. எடுத்த அடியை அப்படியே நிறுத்திவிட்டு பக்கவாட்டில் முகத்தைத் திருப்பி திடுக்கிட்டுப் போய் பார்த்தான்.

காலிலிருந்த வலியைத் தாண்டி அந்த சிறுவனின் கண்ணில் தெரிந்த சந்தோஷம் அவனைக் குழப்ப “ஏய்.. இப்ப என்ன சொன்ன?? என்ன சொன்ன….. நான் உன்னோட செல்லமா??” என்று அதட்டலாக கேட்டான்.

அவன் சினத்தைக் கண்டு அஞ்சாத போதும் கண்ணில் தெரிந்த சந்தோஷம் மறைய.. தான் என்ன தப்பு செய்தோம் என்று தெரியாது.. “நீ.. நீங்க…. தானே கார்த்திக் சொன்ன… செல்லம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. எது சொன்னாலும் கேட்பாங்கன்னு..”என்றாள் தடுமாற்றமாக.

மிரட்டலாக “ஆமாம்… அதுக்கு??”

“உங்க.. நெற்றியில் ரத்தம் வழிந்த போதும் கூட அந்த மரத்திலிருந்து என்னை கீழே இறக்கி விட்டு… உங்க முதுகில் உப்பு மூட்டைச் சுமந்து வரும் உன்னை எனக்கு பிடிக்கும் தானே?? இனி நீ எது சொன்னாலும் நான் கேட்பேனே…. அப்படின்னா நீ என் செல்லம் தானே?” என்று புது வித விளக்கும் கொடுத்தாள்.

“செல்லம் வெல்லம் என்று இந்த மாதிரி யாரிடமாவது வெளியே உளறி வைத்தன்னு வை.. இப்ப தொங்கின மாதிரியே மரத்தில் தலைகீழா கட்டி தொங்க விடுவேன் புரியுதா?” என்று கண்களை ஊருட்டி மிரட்டினான் கார்த்திக்.

“ம்ம்.. சொல்ல மாட்டேன்” என்று மீண்டும் அவன் சொன்னதை ஒப்புக்கொண்டவள்… கிசுகிசுப்பாக “அப்ப செல்லம் என்றால் பெட் வாட்டா?”

விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிய வேதாளம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அந்த ராஜாவை பாடாய் படுத்திய மாதிரி இவனின் முதுகில் ஏறிய இந்த குட்டி பிசாசு நிம்மதியாக மூச்சு கூட விட முடியாது அவனிடம் அடுக்கடுக்காய் கேள்வி கேட்டு தினறடிப்பதை எண்ணி வெகுண்டவன்.. இவனை எப்படி சமாளிப்பது என்று வேகமாக யோசிக்கும் போதே..

தன் அண்ணன்கள் தன்னிடம் சொல்லித் தப்பித்துக்கொள்ளும் தத்துவ வார்த்தை இப்போ வரப்பிரசாதமாக ஞாபகத்திற்கு வர.. “இப்ப சின்ன கிலாஸ் தானே படிக்கிற…. அதனால் தான் சொன்னாலும் புரியாது…. பெரிய கிலாஸ் போனதுக்கு அப்புறம் எல்லாமே தானா புரியும்” என்றான் நிம்மதி பெருமூச்சுடன்.

“ஒ!!! அப்ப எந்த கிலாஸ் வந்தால் இது எல்லாம் புரியும்?”

“இப்ப நீ எந்த கிலாஸ் படிக்கிறன்னு சொல்லு அதை வைத்து இன்னும் எத்தனை வருடம் பிடிக்கும் என்று சொல்கிறேன்” என்று எதிர் கேள்வி கேட்டான்.

“இப்போ ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். அடுத்த மாசத்திலிருந்து ஆறாம் வகுப்பு பாடத்தை ஆரம்பிப்பேன்.”

“நீ தப்பா சொல்ற பார்… இப்ப எழுதினதிற்கு பெயர் டர்ம் எக்ஸ்சாம்…. அதை எழுதி முடித்தால் கூட ஐந்தாம் வகுப்பு தான் படிப்பாயே தவிர ஆறாம் வகுப்பு போக மாட்டாய். ஆறாம் வகுப்பு போக இன்னும் ஆறு மாதம் இருக்கு” என்று விளக்கிய கார்த்திக்… “ஆனால் உன்னைப் பார்த்தால் ஐந்தாம் வகுப்பு படிப்பது போல தெரியவில்லையே… சரியான குள்ள கத்திரிக்காயா நீ??” என்று நம்பாத தன்மையுடன் பார்த்தான்.

“ஓ!!!” என்று இழுத்தவள் “ஆனால் நான் ஸ்கூலில் படிக்கவில்லையே”

“ஸ்கூலில் படிக்காது அப்புறம் எப்படி ஐந்தாம் வகுப்பு படிக்க முடியும்??” என்று கேட்கும் போதே மூளையில் மணி அடித்தது.

“ஏன் ஸ்கூலுக்கு போய் தான் படிக்கணும்?? நானே தனியாக வீட்டில் இருந்தபடியே படித்துக்கொள்வேனே.. எப்பயாவது அப்பா சொன்னால் டீச்சர் வீட்டிற்கு வருவாங்க” என்று கூறி முடிக்கும் முன்…

பள்ளிக்கே வராது வீட்டிலேயே இருந்தபடி கற்பது யார் என்று அந்த ஊரில் இருக்கும் அனைவரும் அறிவர்!!!

அந்த உண்மை முழுமையாக மனதில் இறங்க அவனுக்கு தோன்றிய முதல் கேள்வி…

“நீ.. நீ.. கேர்ளாளா??” என்றான் அலறிக்கொண்டே அவளைக் கீழே போட்டு உடைத்தான் கார்த்திக்……

புல் தரையில் பொத்தென்று நிரல்யா விழுந்ததைக் கூட பொருட்படுத்தாது அவளைப் பார்த்து முறைத்தான் கார்த்திக்.

அந்த கேள்வியின் பொருள் புரியாது… வலியால் கண்கள் லேசாக கலங்க “ம்ம்…” என்று எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள் நிரல்யா.

“இதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை?” என்றான் ஆத்திரம் பொங்க.

“நீங்க பாய் என்று என்னிடம் சொல்லவில்லை.. அதனால் நானும் கேர்ள் என்று சொல்லவில்லை… ஏன் ஸ்கூலில் நீ பாய் நான் கேர்ள் என்றா அறிமுகப்படுத்திக்கொள்விங்க?? பெயர் சொல்லி கிடையாதா?” என்று அவள் கண்களை விரித்து தொண்டையை அடைக்க கேட்டாள் அந்த சிறுமி.

வேறு யார் இந்த கேள்வியைக் கேட்டிருந்தாலும் அடி முட்டாள் என்று நினைத்திருப்பான் ஆனால் அவள் கேட்ட அந்த கேள்விக்கு பின்னால் இருந்த அறியாமை அவனை அமைதி பெற செய்ய… அதே சமயம் அந்த கேள்வியின் தன்மை “குபீர்” என்று சிரிப்பையும் பொங்க செய்ய… அதைச் சிரம்பட்டு அடக்கிய கார்த்திக்…

“பெயர் சொல்லித்தான் அறிமுகப்படுத்திக் கொள்வோம்… ஆனால் பார்த்த முதல் பார்வையிலேயே அவர்களின் உடை கேர்ள், பாய் என்று வித்தியாசம் தெரிந்துவிடும்.. ஆனால் உன்னுடைய ஹேர் ஸ்டைல்… பேன்ட்.. ஸ்வேட்டர்.. ஸூ என்று பார்த்தவுடன் பையன் என்று நினைத்துக்கொண்டேன்” என்றான் விளக்கமாக.

“இந்த ஹர் ஸ்டைல்லை பார்த்தால் என்னை பையன் மாதிரி தெரியுதா?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே அரை இன்ச் முடியுடன் இருந்த தன் தலை முடியைத் தொட்டுப் பார்த்தாள்.

“தெரியுதா என்று சந்தேகமாக கேட்காதே.. அச்சு அசல் பையனேதான்” என்று எப்பையும் போல் மனதில் பட்டத்தை அப்படியே மொழிந்தான்.

அந்த பதிலைக் கேட்ட மாத்திரத்தில் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் இறங்க…

“ஏய்.. ச்சீ வாயை மூடு… எருமை மாடு மாதிரி கனத்த உன்னைச் சிரமம் பாராது இத்தனை தூரம் முதுகில் சுமந்து வந்தால் உன்னை அடித்த மாதிரி ஏன் அழுற??” என்று மிரட்டியபடி அவள் தலையில் ஓங்கி கொட்டு வைத்தப்பதற்காக நெருங்கியவன் அப்பொழுதுதான் அவனின் பேச்சிற்காக அழவில்லை.. கீழே போட்ட வேகத்தில் முன்பு அடிப்பட்ட காலிலேயே மீண்டும் அடிப்பட அந்த வலி பொறுக்க மாட்டாது கண் கலங்குகிறாள் என்று அவள் வாய் விட்டுச் சொல்லாமலே புரிந்தது!!!

நேராக வாய் விட்டுச் சொன்னாலே கார்த்திக்கு புரியாது. இந்த நிலையில் அந்த சிறுமி படும் வலியின் வேதனையை எப்படி தன்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது என்று புரியாத புதிராக இருந்தது!!!

நியாயப்படி பார்த்தால் அவள் தான் அவன்மேல் கோபப்படனுமே தவிர அவன் இல்லை.

ஏற்கனவே மரத்திலிருந்து கீழே இறக்குகிறேன் என்று விழ வைத்து காலில் அடிப்பட வைத்தான் என்றால் இம்முறை வா தூக்கிச் செல்கிறேன் என்று தானாக முதுகில் ஏற்றி கீழே போட்டு உடைத்தவன் அவன். முதல் முறை தெரியாது நடந்தது என்றாலும் மறுமுறை தெரிந்தே செய்த தவறு… என்ற போதும் ஏன்டா கீழே போட்டாய் என்று கோபமாக கேட்கவோ, இல்லை பார்வையால் கூட அவனைக் குற்றம் சாட்டாது... கண்ணீர் உகுத்த அந்த சிறுமியைக் கண்ணுற்றவனுக்கு உள்ளே குற்ற உணர்வு எழ அவனையும் அறியாது அவளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி எழுந்தது!!

அடிக்கடி தன் தங்கைகளுடன் விளையாட வரும் பாண்டியன் மாமாவின் இரண்டாவது மகள் ஒரு அறிவு ஜீவி. சங்கி, மங்கியை விட வயதில் இளையவள் என்பதைத் தவிர வேறு எதுவும் அவன் அறியான்!!!

தன்னைக் கட்டுப்படுத்த முடியாது வெளியே முனுக்கு என்று கூட சத்தம் வராது அழுவதைக் கண்டவன் ஒரு நிமிடம் தயங்கி நிற்க.. தலை குனிந்து அவன் பார்க்காத வண்ணம் அழுதுகொண்டு இருந்தவளிடம்..

“ஐயம் சாரி… ரியலி ஐயம் சாரி..” என்றபடி கையைப் பிசைந்தபடி நின்றான்.

தன் அம்மா சொன்னதற்கு இணங்க.. அந்த சிறுமி தன் அழுகையை மறைக்கவும், கட்டுப்படுத்த முடியாது போராடுவது புரிய.. அவளின் அவஸ்தையைப் பார்த்தவன், மெல்ல குனிந்து அவளை அப்படியே குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு பத்தடி தூரத்திலிருந்த சரிவான பாறையில் அமர்த்தி அடிப்பட்ட காலை மெல்ல நீட்டி வைத்து விட்டு தானும் அதில் ஏறி அவள் அருகில் அமர்ந்தான்!!!

கீழே விழுந்து அடிப்பட்டதில் இருந்து இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை தன்னை மீறி கட்டுப்பாடு இல்லாது கண்ணிலிருந்து கொட்ட.. அவன் முன்னால் அழுவதைத் தெரிந்தால் அம்மா என்ன சொல்லுவாங்களோ என்ற பயம் இன்னும் அழுகையைக் கிளப்ப, என்ன செய்வது என்று தெரியாது திணறியவள் அடிப்படாத தன் காலை மடக்கி அதில் முகம் புதைத்து அவன் முன்னே தன் அழுகையை மறைக்க முயன்றாள் அந்த புத்திசாலி சிறுமி!!!

இதுவரை தன் தங்கைகளை சீண்டி அழ வைத்து தான் பழக்கமே தவிர சமாதானப்படுத்தி இல்லை… அதற்கு அவர்கள் அவகாசமே கொடுக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.. பின்ன அப்படியே சைரனை ஒத்து இருக்கும் சங்கியின் அழு குரலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தலை தெறிக்க ஓடி வர… அதன் பின் அவனுக்கு அங்கே என்ன வேலைக்கு இருக்க முடியும்??

அழுகை என்றாலே அப்படி பார்த்து பழகியவனுக்கு இந்த சிறுமியின் சத்தமே வெளியே வராத கண்ணீரும்.. அதை அவள் மறைக்கும் முறையும் விசித்திரமாக இருக்க.. என்ன சொல்லவது இல்லை செய்வது என்று புரியாது தலையை சொரிந்தவனுக்கு மின்னலாய் ஏன் தன் முகத்தை மறைக்கிறாள் என்பதைப் புரிந்து விட..

“உங்க அம்மா சொன்னது போல தான் என் அண்ணனும் ஒன்று சொன்னான்…. எனக்கு அழுகை வந்தாலோ, இல்லை ஏதோ ஒரு காரணத்திற்காக தூக்கம் வரவில்லை என்றாலோ எந்த நேரமாக இருந்தாலும் ஆரி அண்ணாவின் அறைக்கு வந்து விட வேண்டுமே தவிர எந்த காரணத்தைக் கொண்டும் தனியா மட்டும் இருக்க கூடாது என்று என்னிடம் சொன்னான்” என்று அவனின் சின்ன வயதிலிருந்து ஆரி சொல்லி வரும் விஷயத்தை அவளிடம் தெரிவித்தான்.

எதற்காக இதை தன்னிடம் சொல்கிறான் என்று புரியாத போதும்… கண்ணில் நீர் வடிய அவன் பேச்சிற்கு “ம்ம்” கொட்டியவள் “ஏன்?” என்றாள் நிரல்யா.

இவளால் மட்டும் எப்படி பதிலே சொல்ல முடியாத கேள்வியை கேட்க முடிகிறது??

சிறு வயதில் இருந்து அப்படி சொல்லியே வளர்க்க பட்டதாலோ என்னவோ அண்ணன் ஏன் அப்படி சொல்கிறான் என்று இதுவரை யோசித்தது கூட இல்லை… அந்த வலியிலும் அவன் சொன்னதைக் காது கொடுத்துக் கேட்டதோடு மட்டும் அல்லாது வலியைப் பொருட்படுத்தாது கேள்வியை கேட்டவளை பார்த்தவனுக்கு மீண்டும் வேதாளம் முருக்கை மரம் ஏறியது என்பது இதுதானா? என்று மனதில் கேள்வி எழ… இப்படி கேள்வியை கேட்டு கொல்வதால் தான் பள்ளிக்கு அனுப்பவில்லையோ என்ற எண்ணமும் தானாக வந்தது!!!

ஐந்து நிமிடமாக பதில் சொல்லாது வாய் அடைந்த போய் இருந்தவனை பார்த்து …

“பதில் தெரிவில்லை என்றால் பரவாயில்லை கார்த்திக்” என்று அவனை சமாதானம் செய்த அந்த சிறுமியின் மேல் இரக்கம் ஏற்பட..

“ரொம்ப கால் வலிப்பதற்காக அழுகிறாய் என்றால் பரவாயில்லை… நீ அழுது முடிக்கும் வரை நான் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறேன் ஆனால்… உன் அம்மா இதை அறிந்தால் என்ன சொல்வார்களோ என்று பயந்து அழுகிறாய் என்றால்… பயப்படாதே இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். ரகசியமாக வைத்துக்கொள்கிறேன்” என்று உறுதி அளித்தான் கார்த்திக்.

“ரகசியமா?? ஆனால்.. அம்மா.. என் ரூம்மில் தான் அழணும் என்று சொல்லி இருக்காங்களே” என்று பொய்யே பேச வராத நிரல்யா கண்ணில் நீர் திரையோட.. தொண்டை அடைக்க கேட்டாள்.

“உன் அம்மா பேச்சை விட மாட்டியா?” என்று கேட்டவன் “நான் தான் ரகசியம் என்று சொல்லி விட்டேனே யாரிடமும் சொல்ல மாட்டேன், அப்படியே நீயும் சொல்லாதே..” என்று விளக்கும் போது தான் அவள் சொன்ன வாக்கியத்தின் முழு பொருள் விளங்க… “உன் அம்மாவிடம் நீ பொய் சொன்னதே இல்லையா என்ன?” என்றான் அதிர்ச்சியாக.

விக்கியபடியே “நான் அம்மாவிடம் மட்டும் இல்லை யாரிடமும் பொய் சொன்னது இல்லை.”

“ஏன்?”

அழுகை முழுமையாக நிற்காத போதும் “ஏன்னா… ஏன்னா… பொய் சொல்லக் கூடாதுன்னு புக்கில் போட்டு இருந்ததே, அப்பாவும் அது தான் சொல்லி இருக்கார்” என்றாள் அவனுக்குப் புரிய வைக்கும் முயற்சியில் சிறுமி.

அவளின் பதில் கேட்டு அவனுக்குத் தலை சுற்ற… “நீ சங்கி பொய் சொல்லி பார்த்ததே இல்லை?”

“ம்ம்.. ஆனால் உங்க பாட்டி பொய் சொன்னா தப்பு இல்லை.. என்று சங்கியிடம் சொன்னார்களாம் ஆனா என் அப்பா தப்பு என்று சொன்னாரே” என்றாள் வடிந்த கண்ணீரை துடைத்தபடி.

“பொய் சொல்லக் கூடாது என்று சொல்லும் உன் அப்பா இதுவரை பொய்யே சொல்லி இருக்க மாட்டாருன்னு நம்பறியா??”

“ம்ம்” என்றாள் சர்வ நிச்சயமாக.

உலக நடப்பை விட்டு எத்தனை தூரத்தில் தள்ளி இருக்கிறாள் என்று அவனுக்குத் தெள்ள தெளிவாகப் புரிய… இவளிடம் பேசி ஒன்னும் ஆக போவது இல்லை என்று உணர்ந்தவன்… அவளின் அழுகையை நிறுத்த எண்ணி..

“உன் அம்மா ரூம்மிற்கு உள்ளே போய் தனியா தானே அழ சொன்னாங்க…??” என்று கேட்டான்.

“ம்ம்..” என்றப்படி மூக்கை ஊருஞ்சினாள்.

அவளின் அழுகையைப் பார்க்க சகிக்காது சிறிது யோசித்தவன்… “அதாவது உன் ரும்மில் அழுதாள்.. அவர்களிடம் நீ சொல்லாவிட்டாலும் அது பொய் சொன்னதாக ஆகாது தானே?” என்று சச்சிதேவ்வாக கேள்வி கேட்டான்.

“ம்ம்.. ”

“அதில் மாற்றம் இல்லையே??”

“ம்ம்..”

“அப்ப என்னை உன் ரூம்மாக நினைத்துக்கொள்” என்று மிகுந்த திடதாக கார்த்திக் மொழிந்தான்.

அவன் சொல்வதின் அர்த்தம் புரியாது தன் கண்கள் அகல விரித்து என்ன என்பது போல் பார்த்தாள் நிரல்யா.

“உன் அம்மா... அறையில் சென்று கதவைச் பிறகு தானே அழலாம் என்று சொன்னாங்க…?? என்னை உன் அறையில் இருக்கும் சீக்ரெட் சாம்பராக நினைத்துக்கொள்.. உன் சீக்ரெட் சாம்பரில் நீ பேசுவது சிரிப்பது அழுவது எதுவும் யாருக்கும் வெளியே தெரியாது… போதுமா??” என்று அவளின் அழுகையை எப்படியாவது நிறுத்த வேண்டுமே என்ற குறிக்கோளோடு அவளின் ரகசிய அறையாக அவனை நினைத்துக்கொள்ள சொன்னான் கார்த்திக்.

அத்தனை நேரம் தாரை தாரையாக கண்ணீர் வடித்தவளின் விழிகள் முதல் முறையாக நிற்க… மெல்ல “ஹாரி போட்டரில் வருமே அந்த மாதிரி யாரும் அறியாத சீக்ரெட் சாம்பரா??” என்றாள் கண்கள் விரிய.

அவளின் வலி மற்றும் பயத்திலிருந்து கவனம் திரும்பியதே பெரும் நிறைவாக இருக்க… சென்ற இரண்டு மாதமாக ஹாரி போட்டர் புக்கை அக்கு வேறு ஆணி வேறாக படித்துக்கொண்டு இருந்த தங்கைகளுக்கு மனதார நன்றி கூறியவன்..

“ஆமாம்” என்று தலை ஆட்டினான்.

“பிங்கி ப்ராமிஸ்” என்று தன் சுண்டு விரலை நீட்டினாள் நிரல்யா.

சங்கி மங்கியிடமிருந்து அதைக் கற்று இருக்கிறாள் என்று புரிய.. லேசாக சிரித்தபடி “பிங்கி ப்ராமிஸ்” என்றான் கார்த்திக்.

“செல்லம்” என்றால் என்ன என்று பொருள் கேட்ட நிரல்யா அவளின் சீக்ரெட் சாம்பராக நினைத்துக்கொள் என்பதன் பொருள் என்னவென்று கேட்கவில்லை. அவன் எதுவும் விளக்காமலேயே அந்த சிறுமிக்கும் புரிந்தது என்னிடம் நீ பேசலாம், சிரிக்கலாம், அழலாம், எனக்கு எந்த தடையும் இல்லை என்று அவன் சொன்ன விதம் மிக மிக ஆழமாக பதிய… வாழ்க்கையில் முதல் முறையாக அவள் கேட்காமலேயே கிடைத்தரிய பரிசாகத்தான் தோன்றியது அவனின் நட்பு!!!

அவளின் அழுகையை எப்படியாவது நிறுத்தவென்று சொன்ன வாக்கியத்திற்கு நேர் எதிர்மறையான விளைவை தரும் என்று சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக்கின் கழுத்தை தன் பிஞ்சு கைகளால் சுற்றி வளைத்த நிரல்யா… அவன் தோளில் முகத்தை வைத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

ஒரு நிமிடம் அரண்டு போய் உறைந்தவன் அவளின் அழுகை சட்டையை நினைத்ததோடு சிறுமியின் கைகள் கழுத்தையும் இருக்க.. அவசரமாக அவளின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க எண்ணி கையை உயர்த்தும் போது தான் அந்த சிறுமியின் அழுகைக்கு இடையே “பாட்டி.. பாட்டி” என்று மிக மெல்லியதாய்.. அவளின் பிதற்றல் காதில் விழ.. தன்னை கழுத்தைச் சுற்றி வளைத்து இருந்த கையைப் பிரித்து எறிவதற்காக ஓங்கிய கை… அப்படியே அந்தரத்தில் நின்றது!!!

பாட்டி.?? பாட்டி?? என்றால்.. யாரைச் சொல்கிறாள் என்று அவனின் மனம் அலசி ஆராயும் போதே.. மூன்று மாதத்திற்கு முன்பு பாண்டியனின் தாய் பெயிரில் பள்ளி இருந்தது என்பதால் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பள்ளி விடுமுறை அளித்தது ஞாபகத்திற்கு வந்தது!!!

இன்று காலையில் தான் பாட்டி இறந்து போன செய்தி கேட்டது போல் பிழிந்து பிழிந்து அழுதவளை எப்படி தேற்றவது என்று தெரியாது அமைதியாக அமர்ந்திருந்தான் கார்த்திக்.

கடந்த மூன்று மாதம் இதே போல் தான் தினமும் அவள் அறையில் அழுதுக்கொண்டு இருக்கிறாளா என்ற எண்ணமே அவனைச் சங்கடப்படுத்த.. என்ன செய்வது என்று தெரியாது.. ஓங்கிய கையை கீழே இறங்கியவன் பின் எதுவும் சொல்லாது அப்படியே அமர்ந்திருந்தான்!!

நினைவு தெரிந்த நாளிலிருந்து அழும்போது அவளின் பாட்டிக்கு அடுத்தபடியாக அவளுக்கு ஆறுதல் படுத்திய ஒரே ஜீவன் என்றால் அது கார்த்திக் தான்!!!

அதை நினைக்கவே இன்னும் கண்கள் கண்ணீர் வெகு அதிகமாக சுரக்க.. அருவியாக வழிந்த கண்ணீர் கார்த்திக்கின் கழுத்தை நனைத்தது.

அடுத்த பத்து நிமிடம் பத்து யுகங்களாக கழிய.. சேர்ந்தார் போல் ஐந்து நிமிடம் கூட ஒரு இடத்தில் நிற்காது காலில் சக்கரம் கட்டிக்கொண்டு திரியும் கார்த்திக்கின் கழுத்தை கட்டி உட்கார வைத்து விட்ட சிறுமியைப் பார்த்தவன்…

அழுது முடிக்கும் அறிகுறியே தெரியாது விக்கி விக்கி அழ.. “ஏய்….” என்று அவளின் பெயரை கூப்பிட வாயை திறக்கும் போதே அவளின் பெயர் என்னவென்று யோசித்தவன்… மூளையை என்ன கசக்கியும் பெயர் ஞாபகத்திற்கு வராது போக…

இவனின் சரித்திரத்தை அறிந்து வைத்திருந்தவளின் பெயரைக் கூட தெரியாது இருப்பதை மானக்கேடாகத் தோன்ற…

“உன் பெயர் என்ன??” என்றான் யோசனையாக.

அவனின் கேள்வி காதில் விழ.. அவசரமாக தன் கண்களைத் துடைத்துக்கொண்டு விலகியவள் அவனை ஆச்சரியமாகப் பார்த்து..

“என் பெயர் தெரியாதா??” என்று கேட்கும் போதே…

“நிரு… நிரு” என்று கத்திய மங்கியின் குரல் காதில் விழ… இவளைக் காணாது இவளுடைய சகாக்கள் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கார்த்திக்குப் புரிந்தது.

“இங்கே…. பாறைக்குப் பின் பக்கத்தில் இருக்கிறாள் மங்கி…” என்று உரக்கக் கூவினான் கார்த்திக்.

அவன் கூறி முடிக்கும் முன் தடதடவென்று கால்கள் ஓடி வரும் சத்தம் கேட்க… ஐந்தாவது நிமிடம் சங்கி, மங்கி இருவரும் புழுதி கிளப்பிக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தனர்.

மூச்சையிரைக்க வந்த சங்கி பாறையில் அமர்ந்திருந்த தன் அண்ணணின் கையைப் பிடித்து கீழே இழுத்து தரையில் தள்ளிவிட்டதோடு.... வேகமாக ஒரு தாவில் அந்தப் பாறையில் ஏறி நிருவின் பக்கத்தில் நின்றவளின் கண்களுக்கு கட்டு போட்டு இருந்த கால்களைப் பார்த்ததும் “என்னாச்சு என்னாச்சு?” என்று பதறியபடி கேட்டவள்… நிரல்யாவின் பதிலைப் பற்றி அக்கறையின்றி “ஓ!!!” வென்று அலறி ஓலமிட்டாள் சங்கி!!!

அவளின் ஒப்பாரிக்கு ஸ்ருதி சேர்க்கும் விதமாக ஓலமிட தொடங்கிய மங்கியும் ஒரே தாவாக நிருவின் மறுபுறம் அந்த பாறையில் ஏறி சேர்ந்துக்கொண்டாள். சங்கியின் ஒருத்தியின் சைரன் சத்தமே காதை கிழிக்கும் என்றால் இருவரின் சத்தமும் அந்த குட்டி மலை பிரதேசத்தை பூகம்பம் வந்தது போல் அதிர செய்ய…

“ஏய்… ச்சீ.. வாயை மூடு…” என்று ஏம்பி இருவர் தலையிலும் ஒரு குட்டு வைத்தவன் “அடிப்பட்டவள் அமைதியாக இருக்கிறாள் எதுக்கு டீ இந்த ஏற்காடே கிழியற மாதிரி அலர்றிங்க??” என்று அவர்களுக்கு மேலாக இவன் கத்தினான்!!! பின்ன இவனின் குரல் அவர்கள் காதில் விழ வேண்டுமே!!!

வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு தன் அண்ணனை ஆத்திரமாக முறைத்த சங்கி…

“ரத்தம் வந்தால் கூட வலிக்கிறதுன்னு வாய் விட்டு அழமாட்டாள். அதனால் எப்பயும் அவளுக்காக நான் தான் கத்தி அழுவேன்… எனக்கு துணையாக மங்கியும் அழுவாள்” என்று தங்களின் செயலுக்கான விளக்கத்தைக் கொடுத்தாள் அந்த சங்கியாகப்பட்டவள்.

“நீயும் உன் விளக்கமும்” என்று அவன் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இவளைப் போலவே நிரல்யாவை தேடிக்கொண்டு வந்த தோட்டத்து ஆட்கள் சங்கி, மங்கியின் அழுகுரலைக் கேட்டு அங்கே வந்து சேர.. அதற்கு மேல் பேச எந்த இடமும் இல்லாது போனது.

அவளிடம் சத்தியம் செய்தது போல் என்ன நடந்து என்று யாரிடமும் வெளியே சொல்ல வில்லை தான்... ஆனால் அந்த நிகழ்வை தொடர்ந்து கார்த்தக் பஞ்சாயத்து வைத்த நபர் வேறு யாரும் இல்லை நிரல்யாவின் அப்பாவான பாண்டியன்!!! அன்று கார்த்திக் அரங்கேற்றிய நாடகம் நாட் நாட் செவனையே அதிர்ச்சிகுள்ளாகியது என்றால் வீட்டில் இருந்த மற்றவர்களை பற்றி கேட்கவும் வேண்டுமா?!?


தொடரும்…….


அடுத்த பதிவு - வெள்ளி கிழமை.



DEAR READERS…

வந்தோமா, படித்தோமா என்று போகாது.. கதை எப்படி இருக்கிறது என்று உங்களின் மேலான கருத்துக்களை யாதுமாகி என்னுள் நினைந்தவனே கருத்து திரியில் பதிவிடவும்...
 
Status
Not open for further replies.
Top