கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி நிற்கின்றாய் நீ....! (4)

யாதுமாகி நிற்கின்றாய் நீ....! (4)

சென்னை,

ஒருவாறாக போரா விக்ரம் இருவரிடமும் பேசி சமாளித்துவிட்டு வீட்டுக் வந்தார் பேராசிரியர் தசரதன் களைப்புடன்.

மனைவி பர்வதம் கலங்கிய விழிகளுடன் நிற்பதைப் பாரத்து அதிர்ந்தவர், "என்னம்மா.... என்னாச்சு....? ஏன் அழற....?" கேட்க,
விழிகளில் வெள்ளிப் பெருக்குடன், "உ... உங்க உயிருக்கு ஏதோ ஆ...பத்து... ன்னு செல்பேசில சொன்னாங்க.... அதான்...." என்றவர் முந்தானையால் துடைத்தும் நிற்கவில்லை.

பொங்கி வந்துக் கொண்டே இருந்தது.

"ஹாஹ்ஹா.... பத்திரிக்கைல வர்ற உன் எழுத்துகளப் பார்த்திட்டு பாரதி கண்ட புரட்சிப் பெண்ணுன்னு உன்ன நினைச்சா.... இப்படி அனாமத்தா வர்ற ஃபோன் காலுக்கெல்லாம் பயந்து அழுதிட்டு இருக்க.... ஹைய்யோ.... ஹைய்யோ...."


சிரித்தவரை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை நெருங்கியவர், "அடி அசடே.... நான் கட்டினத் தாலிக்கு வலு அதிகம்டி.... இன்னும் ஒரு நூறு வருசம் உன் கூட இந்த மாதிரியே மகிழ்ச்சியா வாழப் போறேன்டி பர்வதக் குட்டி என அணைத்துக் கொண்டவரின் காதலை எண்ணி பெருமிதம் கொண்டார் பர்வதம் விரைவில் வரப் போகும் விபரீதம் அறியாமல்.

"சரி... சரி.... சாப்பாடு எடுத்து வைம்மா.... நிரம்பப் பசிக்குது...."
" இதோ .... ரெண்டே நிமிசம் .... நீங்க போய் ஃப்ரஷ் அப் ஆகிட்டு வாங்க..." என உணவுப் பதார்த்தங்களை மேசை மேல் கொண்டு வந்து வைத்தவர் திருக்கிட்டார் தசரதன் காலிலிருந்த சிராய்ப்பைப் பார்த்ததும்.

"எ... என்னங்க இது காயம்...?" எனப் பதறிட,
"எங்க ...?" எனக் கேட்டவருக்கு சற்று முன் நிகழ்ந்தவைகள் நினைவில் நிழலாடிட,

" அட .... இது ஒண்ணுமில்ல பர்வதம்.... பிரின்சிபல் அறையிலிருந்து வெளியே வரும் போது கொஞ்சம் தடுக்கிட்டேன்.... அதான்...." என சமாளித்தவரை சந்தேகத் தொனியில் பார்த்த பர்வதத்தின் விழிகளை நோக்கிடாமல் கைலியை கட்டிக் கொண்டு வந்து அமர்ந்தார் உணவருந்த.

"ம்ம்... சரி.... சரி.... நம்பிட்டேன் சார்....இப்பெல்லாம் என்கிட்ட எதையும் முழுசா சொல்றதே இல்ல.... என் மேல பாசம் குறைஞ்சிடுச்சு போல.... க்கும் ...." என சங்குத் தொண்டையை செருமியவர் அடுக்களைக்குப் போக எத்தனிக்க,

"ம்ம்.... நீ நினைச்சத உடனே சாதிச்சாகணும்ல.... சரி... சரி.... இப்படி உட்காரு.... சொல்றேன்...." என அவருக்கு மிகவும் பிடித்த அந்த பிரட் அல்வாவை வாயில் போட்டபடி சொல்லத் தொடங்கினார் சற்று முன் நிகழ்ந்த அந்த கொடூரச் சம்பவத்தை.

எரிச்சலின் உச்சத்தில் எழுந்த பர்வதம், "சும்மாவா விட்டீங்க அந்த அயோக்கியன....? நானா இருந்தா வெட்டி பொலி போட்டிருப்பேன்.... பொண்ணுன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா அவனுக்கு.... இருங்க அவன....!?" என அர்ச்சிக்கத் தொடங்கினார் ஆற்றாமையால்.

"சரி... சரி.... நீ கோபப்பட்டு உன் உடல்நிலைய கெடுத்துக்காத பர்வதம்.... விடு.... அவன சட்டத்துக் கிட்ட ஒப்படைச்சிடலாம்.... அவங்க பாத்துப்பாங்க...."

"அட.... நீங்க வேற .... இவன மாதிரி பெரும்புள்ளி லாம் சுலபமா சட்டத்துல இருக்கற ஓட்டை வழியா தப்பிச்சு வந்து நம்ம கிட்டயே டாடா காட்டிட்டு போயிடுவானுங்க...."

" அப்படிலாம் அபினவ்வால முடியாது பர்வதம்....வலுவான ஆதாரம் ஒண்ணு என்கிட்ட இருக்கு.... நான் அவன இம்முறை ஒரு கை பாக்காம விட மாட்டேன்...." என தன் பற்களைக் கடித்தார்.

"என்ன ஆதாரம்ங்க.... நான் பாக்கலாமா....?"
" உனக்கு காட்டாமலா....? இந்தா இதப் பாரு ...." என அவர் முதல்வர் அறையில் அபினவ் அலட்சியமாகப் பேசியதை வீடியோவில் பதிவு செய்ததை எடுத்துக் காட்டினார்.

முழுவதுமாகப் பார்த்த பர்வதம், "சூப்பர்.... சூப்பர்ங்க.... இது ஒண்ணு போதும் அவன வசமா பிடிச்சு உள்ள வைக்க..." என அவரின் வலக்கையைப் பற்றிக் குலுக்கினார்.

பின் ஏதோ யோசித்தவராய், "ஆமாம்... அப்ப இதுக்கு தானா உங்களக் கொன்னுடுவேன்னு செல்பேசில மிரட்டினாங்க....?"

"ம்ம்... ஆமாம்.... இதிலென்ன சந்தேகம் பர்வதம்....?"

"அப்படியா சொல்றீங்க....? இல்ல.... எனக்கென்னமோ நெருடலாவே இருக்கு...."

"என்ன நெருடலா இருக்கு....? நீ ஒரு கதாசிரியர்ங்கறதுக்காக ரொம்ப கற்பனைலாம் பண்ணி குழப்பிக்காத....அந்த திமிரு பிடிச்சவன் அபினவ்க்கு வேண்டியவன் எவனாவது சும்மா கால் போட்டு மிரட்டி இருப்பான்.... விடுவியா....? இதப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு.
"சரி.... சரி.... சீக்கிரம் சாப்பிடுங்க .... நான் பத்திரிக்கை அலுவலகத்துக்கு வேற போகணும்...."

"ம்ம்... அப்படியா.... சரி.... நீ போய் கிளம்பு.... நான் கொண்டு வந்து விடறேன்...."

"ரொம்ப நன்றிங்க...." என அவர் பளிங்கு நிறக் கன்னத்தில் செவ்விதழ் பதித்து விட்டு உடை மாற்றச் செல்கையில், அவர் செல்பேசி மீண்டும் அழைத்தது.

" ஏங்க.... அழைக்கறது யாருன்னு பாருங்க....?"
எடுத்துப் பார்த்தவர் ,

"ஏதோ புது நம்பரா இருக்கும்மா...." என்றிட,

" எடுத்துப் பேசுங்க.... எழுத்தாளர் லட்சுமி நூற்றாண்டு சிறுகதைப் போட்டியப் பத்தி எதுனா சந்தேகம் கேட்கத் தான் ஃபோன் பண்ணி இருப்பாங்க..." என்றார்.

அவரும் ஆமோதித்தபடி செல்பேசியை தன் செவியில் வைக்க, எதிர்முனையில் ஒரு கரகரத்தக் குரல். திக்குமுக்காடிப்போனார்.
"ஹேய்.... யா .... யாரது....?"
"ஹாஹ்ஹா....என்ன தசரதன்.... சொன்னதெல்லாம் மறந்துடுச்சா....? இன்னும் நாலு வாரந்தான் அவகாசம்.... அதுக்குள்ள முடிக்கலன்னா.... ஹாஹ்ஹா....அப்புறம்...." என்று முடிக்கு முன் துப்பாக்கி சத்தம் வெகு அருகில் கேட்க,

சத்தமில்லாமல் உயிரை விட்டிருந்தான் எவனோ.

" இ ... இல்ல .... மு .... மு .... முடிச்சிடறேன்...." என்றவரின் சுவாசப்பை ஆக்சிஜனை தேடிக் கொண்டு மூச்சிரைத்தது வியர்வைக் குளத்தில்.

உடை மாற்றி வந்து நின்ற பர்வதம் இவரைப் பார்த்ததும், ஏதோ விபரீதம் என தெளிவாகப் புரிந்துக் கொண்டவராய் செல்பேசியைப் பார்க்க, ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. படித்தவர் முகம் வெளிறத் தொடங்கியது.

அகத்தியர் மலையில்,

அமிழ்தன் காணிப் பழங்குடியினரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்க, மலைச்சாமி காட்டின் எல்லைக்கே போயிருந்தான்.

தான் நம்பி வந்த சாமியாரிடம் புலம்பிக் கொண்டிருக்க, அவரின் ஆறுதல் மொழி கேட்டு சற்றே மகிழ்ந்தவன் பதறித்தான் போனான் எதிரில் அவனை நோக்கி வந்த வேலைக்கம்பைக் கண்டதும்.

இமைக்கும் நொடியில் அதைப் பாய்ந்துப் பிடித்தான் கடம்பன்.

"ஹேய் செம்பா.... என்னடி இது கூத்து....? ஏன் அவன் மேல ஏறிஞ்ச....?"

"அடச்சே.... இப்படி பண்ணிட்டியே மாமா.... இவன மாதிரி வல்லூறுகள துவம்சம் பண்ணி எல்லைல உள்ள கரட்டு மேட்டுல தலைகீழா தொங்க விட்டாதான் எவனும் நம்ம காட்டுக்குள்ள காலெடுத்து வக்கவே யோசிப்பான்...." என முழங்கியவளை உச்சி முகர்ந்த முதுகிழவர்,"அப்படிச் சொல்லடி என் ராசாத்தி.... கேட்டுக்கங்கடா...."

"ஆமாம் தாத்தா.... நீங்க வேற .... சும்மாவே ஆடுவா.... சலங்கைய வேற கட்டி விடுறீங்களோ....? செத்த வாய வச்சுகிட்டு சும்மா இருக்க முடியலயோ....?" கடம்பன் முறைக்க, கப்சிப் ஆனார்.

"அடியே செம்பா .... இவன் வஜ்ரகேது கோவில் கருப்பனுக்கான படையல்டி .... அவனப் போய்க் காயப் படுத்தப் பாத்தியேடி...." என்றிட, பவ்யமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவள்,


"அச்சச்சோ.... தெரியாது மாமா.... மன்னிச்சிடு.... இனிமே இப்படிப் பண்ணவே மாட்டேன்...." என்றாள்.

அவளின் குழந்தைத் தனமான செய்கையால் சிரிப்பு தான் வந்தது கடம்பனுக்கு.

இவர்களை நோக்கிக் கொண்டிருந்த கொம்பனைப் பார்த்த கடம்பன், "டேய்... இங்கென்ன வேடிக்க....? வெரசா கிளம்புங்கடா.... சீக்கிரமா போய் நாகப் பொதிகைல இருக்கற வஜ்ரகேது கோவில் கருப்பன் முன்னாடி உள்ள கொன்றை மரத்துல இவன கட்டி வச்சிட்டு திரும்பிப் பார்க்காம வந்திடணும்.... புரிஞ்சதா...?" என மீண்டும் ஒரு முறை எச்சரித்தான்.

"ஆமாம்டா..... திரும்பி கிரும்பிப் பாத்திடாதீங்க.... அப்புறம் கருப்பன் உங்கள சின்னாபின்னமாக்கி பாறா கழுகுக்கு இரையாக்கிடுவான்.... சாக்கிரத...." என முதுகிழவர் சொல்ல, இருவருக்கும் தொண்டையை அடைத்தது.

அமிழ்தனிடம் எந்தச் சலனமும் இல்லை.
கூட்டாளி செங்கனுடன் கொம்பன் கிளம்பினான் அமிழ்தனை நீட்டு மூங்கில் கழியில் பன்றியைத் தொங்க விடுவது போல் தூக்கிக் கொண்டு.

ஒரு மலையைக் கடந்திருப்பார்கள், "டேய் செங்கா.... என்னடா இவன், பாக்குறதுக்கு நோஞ்சானா இருக்கான்.... ஆனா, பொணம் கனங் கனக்குறான்...." என இறக்கி வைத்த கொம்பன், தன் தோளில் மாட்டி இருந்த சுரைக் குடுவையில் உள்ள மதுவை சற்றே அருந்தினான்.

"ஆமாம் டா கொம்பா.... எனக்கும் கொஞ்சம் குடு..... இந்தப் பயலத் தூக்கத் தெம்பு வேணாமா....?" என வாங்கியவன் ஒரு மிடறு விழுங்கிட, அவன் தோளைத் தட்டினான் அமிழ்தன்.

" எனக்கும் கொஞ்சம் கொடுங்கடா...." கேட்ட அமிழ்தனை முறைத்தபடி,
"ஆமாம்.... இவரு பெரிய தொரை.... ஏற்கனவே இந்த கணம் கணக்கற.... இன்னும் போதையில மல்லாந்துட்டா அப்புறம் எங்க கதி அதோ கதி தான்டோய்.... இன்னும் ரெண்டு மலை அப்புறம் காட்டருவியத் தாண்டனும் இன்னும் ஒரு மணிக்கூறுக்குள்ளற.... அதுக்குள்ள படையலக் கொண்டு போகலன்னா, தெய்வக் குத்தமாகிடும்...." புலம்பினான் கொம்பன்.

"ஹாஹ்ஹா.... நல்ல ஹாஸ்யம்டா.... உங்களலாம் நினைச்சா வேடிக்கையா தான்டா இருக்கு.... படையலாம் தெய்வக் குத்தமாம்.... ஐய்யோ.... ஐய்யோ...." என சிரித்த அமிழ்தனைக் காண எரிச்சல் பீறிட்ட செங்கன் சினத்தின் உச்சத்தில் ஓங்கி அறைந்தான் கீழே மூங்கில் கழியில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தவனை.

"என்னடா கிண்டலா ....? நீ கருப்பன் படையலா போயிட்ட இல்லாங்காட்டி இந்நேரம் உன்னைக் கண்டந்துண்டமா வெட்டி உப்புக் கண்டம் போட்டிருப்பேன்...." சினந்தான் கொம்பன்.

அமிழ்தனுக்கு தற்போது தெளிவாகப் புரிந்தது இவர்களை பேச்சுக் கொடுத்து முட்டாளாக்க முயற்சித்து தப்பிப்பது குதிரைக் கொம்பென்று.


அதனால், அமைதியே அதிசிறந்த மருந்து என மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

அவர்கள் மறுபடியும் இவனை சுமந்துக் கொண்டு மலையேறத் தொடங்கினர். இரண்டாம் மலையின் பாதி ஏறிய சமயம், கருப்பன் கோவில் இருக்கும் திசையில் பயங்கரமாக ஒரு இடிச்சத்தம் கேட்க துணுக்குற்றனர்.

பதட்டத்தில் செங்கனன் இடைக் கச்சையில் கட்டியிருந்த கொக்கரையை எடுத்து முழங்கச் செய்திட காட்டில் சலசலப்பு கூடியது.

அதே சமயம், தில்லை விருட்சத்திலிருந்து பறந்து வந்த அந்த பெரிய கருங்கோட்டான் (கரிய ஆந்தை) கொம்பனின் வலது விழியைப் பதம் பார்க்க, "ஐயோ கண்ணு.... அகத்தீசுவரா.... என்னையக் காப்பாத்து....!" எனக் கீழே விழுந்து துடிக்கலானான்.

(தொடரும்)

யாழ்க்கோ லெனின்
நெய்வேலி
ஜூன் 2022
 
Top