கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 11

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 11

‘காதல் என்பது சுயநலம் கலந்த கலவை தானே.’



அவள் மனம் இனி யாரையும் ஏற்காது என்று புரிந்து போனது.



கடந்த ஒரு வாரமாகவே வீட்டில் அவள் அதிகம் யாருடனும் பேசுவதில்லை. இவள் ஒதுக்கத்தை யாரும் கண்டு கொண்டதாய்த் தெரியவில்லை.



அமிர்தாவுக்கு இவளை கவனிக்க நேரமில்லை. கணவனோடு தங்கள் டெக்ஸ்டைல் பிசினஸ்க்குச் செல்வது, மற்ற நேரத்தில் வீட்டு நிர்வாகம், தன்னுடைய லேடீஸ் மீட், இப்படிப் பொழுது பறந்து கொண்டிருந்தது.



ஓய்வில்லாத உழைப்பு. ஒருவழியாக எடுத்துக் கொண்ட வேலையை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முடித்திருந்தாள்.



இரண்டு நாட்களாக நிம்மதியாகச் சாப்பாடு, தூக்கம் என்று ஓய்வெடுத்தாள்.



அன்று காலை குளித்து விட்டு காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு முடித்து எழுந்தவள், தந்தையின் கேள்வியில் மீண்டும் திகைத்து அமர்ந்தாள்.



"சொல்லும்மா, உன் திருமணத்தைப் பற்றி என்ன முடிவாய் யோசிச்சு வைச்சிருக்க?.."



‘என் கல்யாணத்திற்கு இப்பொழுது என்ன அவசரம் வந்தது? தனக்கு அவகாசம் கொடுப்பதாகச் சொன்னாரே!’



"இதோ பாரும்மா. உன்னை நாங்க ராஜகுமாரியாட்டம் தான் வளர்த்திருக்கோம். இதுவரை நீ கேட்ட எதுவும் இல்லைன்னு எங்க வாயில் வந்ததில்லை. இந்த வீட்டுக்கு ஒத்தைப் பெண் குழந்தை நீ. மஹாலக்ஷ்மின்னு சொல்லிச் சொல்லி, இந்த வீட்டுப் பெண் தெய்வமாகத் தான் உன்னை எல்லோரும் பாக்கறோம். அதுவும் உன் தாத்தா பாட்டி, தங்கள் உசிரா உன்னை நினைக்கிறாங்க. ஆனாலும் நம்ம வீட்டுக்கு மஹாலக்ஷ்மின்னாலும் அடுத்த வீட்டு கிரஹலட்சுமியா போய்த் தானே ஆகணும். அது தானே பெத்தவங்களுக்கு பெருமை..”



"அதுக்குத் தானே நாங்க காவேரியை நம்ம வீட்டு கிரஹலட்சுமியா இங்கேயே வைச்சிக்கலாம்னு சொன்னது. நீதானேப்பா குட்டையைக் குழப்பி விட்டது..”



ஹரிசந்திரநாத், சமயம் பார்த்துத் தன் அதிருப்தியை மகனிடம் வெளியிட்டார்.



தலையாட்டிக் கொண்ட கமல்நாத்தோ,



"என்ன இருந்தாலும் வாழப் போறது நம்ம பொண்ணு தானேப்பா? அவளுக்குப் பிடிச்ச வரனைத் தேர்ந்தெடுக்க அவளுக்கும் உரிமை இருக்கே!"



"அப்ப நாம சின்ன வயசிலிருந்தே என் மகனுக்குத் தான் உன் மகள் என்று சொல்லி வளர்த்து இருக்கக் கூடாதுண்ணா..”



நியாயம் கேட்டாள் ஹேமா.



'அப்படி நாங்க சொல்லலையே? நீயும் உங்க அம்மாப்பாவும் சொல்லிச் சொல்லி என் பொண்ணைக் குழப்பி வைச்சீங்க? எங்க வீட்டு சொந்தத்துல ஆயிரம் பையன்ங்க க்யூவுல நிக்கறாங்க காவேரியைக் கட்டிக்க. ஆனா ஒருத்தனையாவது இந்த வீட்டுக்குள்ள நெருங்க விட்டிருப்பீங்களா?'



மனதுள் மாமியாரை வறுத்தெடுத்தாள் அமிர்தா. தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களை அண்ட விடாத காண்டு. அவளுமே ஒற்றை மகள் தான். ஆனால் அவளின் ஒன்று விட்ட அண்ணன்கள் முறையில் நிறைய முறைப் பிள்ளைகள் காவேரிக்கு வரனாய் வந்தவை எல்லாமே. நேரடி முறையில் மாப்பிள்ளை தயாராக இருக்கும் போது அவர்களுக்கு இங்கே இடமில்லை என்று ஒதுக்கி அனுப்பி வைத்த மகராசி ஆயிற்றே அவள் மாமியார்.



"உன் பேச்சு நியாயம் தான் ஹேமா. ஆனாலும் என் பொண்ணு தன் விருப்பத்தைச் சொல்லட்டும்..”,



அமரிக்கையாய்த் தன் இதழ்களை வளைத்தாள்.



"சொல்லும்மா, நீ விருப்பப்பட்டபடி அந்த ஜீவாத் தம்பி கம்பெனியில வேலையும் செஞ்சாச்சு. உனக்கு யாரைப் பிடிச்சிருக்கு. ஈஸ்வரையா இல்லை பொண்ணு கேட்டு வந்து நின்ன அந்தத் தம்பி ஜீவாவையா? எங்களுக்கு யாரா இருந்தாலும் சம்மதம் தான்..”



"அண்ணா எங்களுக்குன்னு எங்களை எல்லாம் கூட்டு சேர்க்காத.. என்னைக் கேட்டா இப்படி சாய்ஸ் தந்து கேக்கறதே தப்பும்பேன்..”



"அண்ணி, அவர் சொன்னது என்னையும் அவரையும் தாங்க. பெத்தவங்க நாங்க தானே.. பொண்ணோட விருப்பத்தை நாங்க கேக்கணும்..”



அமிர்தாவுக்கு தன் பிறந்த வீட்டு வரன் இல்லையென்றான போது அசல் வரன் ஏனோ சரியெனப்பட்டது. அதனாலேயே ஜீவாவைத் தன் மகளுக்கேற்ற வரனாய் ஆதரித்தாள்.



"சொல்லும்மா.."



தன் பதிலுக்குக் காத்திருந்த தந்தையையும், ஈஸ்வரை எப்படியாவது மறுத்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்போடு தன்னை ஆவலாய் நோக்கிய தாயையும் கண்டவள், இனி வேறு வழியில்லை தன் மனதைத் திறந்து சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தவள் வாயைத் திறந்தாள்.



"எனக்கு இரண்டு பேரையும் பிடிச்சிருக்கு..”



"அடிப்பாவி" இது பாமா.



"அக்கா? என்னக்கா?” கேள்வியாய் ஹரீஷ்..



"இது எந்த ஊரு நியாயம். ஒரு ஆம்பிளை ரெண்டு பெண்டாட்டியைக் கட்டுவான் கேள்விப்பட்டிருக்கேன். அப்ப நீ ரெண்டு புருஷனைக் கட்டுவியா? ச்சீ ச்சீ. அசிங்கம்”



"காவேரி" அமிர்தா இப்பொழுது அதட்ட.



"என்னம்மா இது?” பாட்டி ரத்னா தலையைப் பிடித்துக் கொண்டாள்.



"ஷ். கொஞ்சம் எல்லாரும் சும்மா இருங்க. முதல்ல அவ மனசுல இருக்கிறதைத் தெளிவாச் சொல்லட்டும். தேவையில்லாத பேச்சு வேண்டாம்..”



ஹரிசந்திரநாத் தன் பேத்தியின் வார்த்தைகளில் குழம்பிப் போனார்.



"பாப்பா என்னம்மா இது? நீ என்ன பேசறேன்னு புரிஞ்சி தான் பேசறியா? உன் பேச்சு, தப்பான யூகங்களுக்கு இடம் கொடுக்குது பாரு.."



இதே வார்த்தைகளைத் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவனும் சொன்னான். ஒவ்வொரு பெண்ணுக்கும், அவள் தந்தை தானே முதல் ஹீரோ. அப்பாவைப் போல தனக்குக் கணவன் வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைப்பது இதனால் தானோ!



“காவேரி நீ என்ன பேசறேன்னு யோசிச்சுத் தான் பேசறயா? உனக்கு ரெண்டு பேரையும் பிடிச்சிருக்குன்னு சொல்லறது எப்படி சரிவரும்? தப்பான யூகங்களுக்கு இது இடம் கொடுக்கும்..”



“எனக்கு உங்களோட நேர் அணுகுமுறை பிடிச்சிருக்கு. அதே சமயத்தில எங்க ஈஸ்வர் அத்தானோட வாழ்வியல் முறையும் பிடிச்சிருக்கே..”



அவன் முகம் கோபத்தில் கொந்தளித்ததோ! வார்த்தைகளை எடுத்து திராவகமாய் வீசினான்.



“அப்ப அவனோட போய் வாழ்ந்து பார். வாழ்வியல் நல்லாவே புரியட்டும். குட் பை. இனி நீ இங்கே வர வேண்டாம். நீ செஞ்ச வேலைகளுக்கு செக் அனுப்பி வைச்சிடுவோம். தாங்கஸ் அண்ட் பை. பை தெ பை, நீங்க வாழப்போற வாழ்வியல் முறையான உங்க ஆஸ்ரமத்துக்கு எனக்கு நன்கொடை கொடுக்கப் பிடிக்கல. யூ கேன் கோ நவ்..”, என்றவன் அவளை அப்படியே கத்திரித்துவிட்டுச் சென்றிருந்தான்.



“தப்பு, சரியெல்லாம் அவரவர் கண்ணோட்டம் தான்ப்பா. என்னைப் பொருத்தவரை இன்னும் எனக்கு கிளாரிட்டி வரலை..”



இதைத் தான் அவனுக்கும் அவள் சொல்ல விழைந்தாள். ஆனால் காது கொடுத்துக் கேட்க அவன் அங்கே நிற்கவில்லையே!



தன் மனதைப் புரிந்து கொள்ள யாருமே விழையவில்லையே!



அதை நினைத்தவளுக்கு இப்பொழுது கண்கள் கரித்து வர, கண்களைச் சிமிட்டி தன்னை அடக்கிக் கொண்டாள்.



“இப்ப நீ என்னதான் சொல்ல வர? அந்த ஜீவாத் தம்பியை பிடிச்சிருக்குங்கிற மாதிரியில்ல உன் நடவடிக்கை இந்த இரண்டு மாசமா இருந்திச்சு. இப்ப எதுக்கு இந்தக் குழப்பம்?”



“அண்ணி அவ குழம்பல. நீங்க ரெண்டு பேரும் பேசிப் பேசி அவளைக் குழப்பி விடறீங்க..”, என்ற ஹேமா,



“நீ சொல்லுடா தங்கம், உனக்கு உன் ஈஸ்வரத்தானைத் தானே பிடிச்சிருக்கு? எதுக்கு மனசைப் போட்டு குழப்பிக்கற? எம் புள்ள உன்னைக் கண்ணுல வைச்சிக் கையில பார்த்துப்பான்மா. சின்ன வயசிலேர்ந்து உன்னைப் பார்த்து உங்கூடவே வளர்ந்தவன். உன் மனசை அவனைத் தவிர யாரால புரிஞ்சிக்க முடியும்? சொல்லுமா, தைரியமா ஈசுவைத்தான் உனக்குப் பிடிக்கும்னு..”



“சே ஒரே கொசுத் தொல்லை..”, இல்லாத கொசுவைக் கைகளால் விரட்டினான் ஹரீஷ்.



‘பின்னே ஈசுவாம் ஈசு. சரியான கொசு’



“சின்ன வயசுலேர்ந்து பார்த்த ஈஸ்வர் அத்தானுக்கும் இப்பப் பார்க்கிற ஈஸ்வர் அத்தானுக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கு அத்தை. நிச்சயமா எனக்கு ஈஸ்வர் அத்தானைப் பிடிச்சிருக்கு தான். கொஞ்சம் நாள் முன்னாடி வரை அவரை நான் ஒரு காமெடி பீசுன்னு நினைச்சிட்டு இருந்தேன். பொறுப்பில்லையோன்னு கூட யோசிச்சு இருக்கேன்..”



அவள் பேச்சில் ஈஸ்வரின் முகம் சுருங்கியதைக் கண்டாள்.



அதற்குள் ஹரீஷ் முந்திக்கொண்டான். “அப்படின்னா, ஈஸ்வரத்தானை இப்பப் பிடிக்கலை தானே..”, தமக்கைக்கு எடுத்துக்கொடுத்தான்.



“டேய், நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? பெரியவங்க பேசறப்ப சும்மாக் குறுக்கக் குறுக்கப் பேசிகிட்டு? மத்த பசங்களைப் பாரு. எல்லாம் வாயை மூடிட்டு நின்னுட்டு இருக்காங்கயில்ல..”



ஹரிசந்திரநாத் தன் பேரனை அதட்டினார். ‘ஏற்கனவே தங்கள் செல்லப் பேத்தி, தங்கள் செல்லப் பேரனை கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறாள்! இதில் இந்த சுண்டைக்காய்ப் பயல் வேறு!’



“இது எங்க அக்கா வாழ்க்கை, நானும் கேக்கலாம் தாத்தா..”, ஹரிஷின் பேச்சை அங்கே யாரும் சட்டை செய்யவில்லை.



“காமெடியா நினைச்ச அத்தான் கொஞ்சம் நாளா என் மனசுல ஹீரோவா உயர்ந்து நிக்கிறாங்க. அன்னிக்கு நான் ஆஸ்ரம் போனப்ப தான் அவரோட உண்மையான உயரம் புரிஞ்சிது. நிஜமா அவரோட பேச்சு ஒவ்வொண்ணும் அருமையா இருக்கு. வாழ்வியல் கல்வியை நான் அன்னிக்குத் தான் படிச்சேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் அங்க போகத் தொடங்கினேன். நிறையத் தெரிஞ்சிக்கிட்டேன். ஹீ இஸ் ரியலி கிரேட் பா. நிச்சயம் இளைய தலைமுறைகளுக்கு அவரை மாதிரி சிந்திக்கிற ஒருத்தர் வேண்டும்..”



காவேரியின் பேச்சில், சற்று முன்னர் வாடியிருந்த ஈஸ்வரின் முகம் இப்பொழுது மலர, கமல்நாத் யோசனையாய் அவளைப் பார்த்தார். அமிர்தாவுக்கும் தன் மகளின் பேச்சு குழப்பமாய் இருந்தது.



“அப்ப ஜீவாத்தான்?”



“ஜீவாத்தானா?..”, ஷங்கரும், அருணும், தருணும் ஒரே நேரத்தில் ஹரீஷைப் பார்த்தனர்.



“எப்படி ஈஸ்வர் எனக்கு அத்தானோ, அதே ரேஞ்சில்தான் நான் ஜீவா சாரையும் அத்தானா யோசிக்கிறேன்..”



ஹரீஷை மற்றவர்கள் அறியாமல் முறைத்தான் ஈஸ்வரும் கூட.



“ஹரீஷ், நீ கொஞ்சம் சும்மாயிரு..”, காவேரி தன் தம்பியை அதட்டினாள்.



“ப்ளீஸ் யாரும் என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. எப்படி எனக்கு ஈஸ்வர் இப்ப வித்யாசமா தெரிகிறாரோ, அதே போலத் தான் ஜீவாவும் தெரியறாங்க. இவர் அணுகுமுறை ஒரு விதம் என்றால், அவரோடது வேறயா இருக்கு. ஈஸ்வரத்தான் நாட்டுக்காக, மத்தவங்களுக்காக நல்லது யோசிக்கிறாங்க. ஜீவாவும் அப்படித்தான். ஆனால், வீட்டில் இருக்கிறவங்க சந்தோஷமா இருக்கணும்னு முதல்ல நினைக்கிறாங்க. வீட்டில் இருந்து தான் மத்ததெல்லாம் வரணும்னு யோசிக்கிறாங்க.



அவரோட சித்தி பொண்ணுக்கு அவர் பார்த்துப் பார்த்துச் செய்யறதை நான் பார்த்திருக்கேன். அது ஒண்ணே போதும், அவர் எப்படிப்பட்டவர்ன்னு எடுத்துச் சொல்ல. எது செஞ்சாலும் நேர் வழியில செய்யணும்னு என்னை மாதிரி சிந்திக்கிறாங்க. ஜஸ்ட் டொனேஷனுக்காகத் தான் நான் அங்க போனேன். ஆனா அதைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி, நிஜம்மா அந்தப் பணம் சரியான முறையில பயன்படுகிறதான்னு ஆராய்ஞ்சு பார்த்துத்தான் முடிவை எடுக்கிறாங்க.”



“எனக்கு அவரின் அணுகுமுறை ரொம்பவே பிடிச்சிருக்கு. எதோ பணம் கேட்டாங்களா, கொடுத்துட்டுப் புண்ணியத்தைக் கட்டிப்போம்னு இருக்கல. நாம் கொடுக்கும் பணம் சரியாப் போய்ச் சேருதான்னு நூறுதரம் பார்க்கிறாங்க. அவங்க ஆபிசில் ஒர்க் பண்ணற ஒவ்வொருத்தரும் எப்படி ஏங்கறாங்க தெரியுமா? அந்த அளவுக்குத் தனிப்பட்ட கவனிப்பு, அணுகுமுறை, ஒர்க் ஃப்ரீடம், ஒரே குடும்பங்கிற ஃபீல், பாசம், பந்தம்... இப்படி சொல்லிட்டே போகலாம்..”



“சரி காவேரி கடைசியில் அப்படிப்பட்டவர் நம்ம ஆஸ்ரமத்துக்குப் பணம் கொடுக்க விருப்பமில்லைன்னுயில்ல சொல்லிட்டாரு. நீயும் தானே நம்ம ஆஸ்ரம வேலைகளைப் பாக்கிற. நாம ஒண்ணும் எதுவும் தப்பாச் செய்யலையே. அப்படியிருக்க தனக்கு இங்கே கொடுக்க விருப்பமில்லைன்னு அவர் சொல்லிட்டதா நீயே வந்து எனக்குத் தகவல் சொல்லிட்ட. பின்ன எப்படி அவர் நேர் வழியில நடக்கிறதா நீ யோசிக்கணும்? இதில் அவரையுமில்ல பிடிச்சிருக்குன்னு சொல்லற?..”



ஈஸ்வரின் இந்தக் கேள்வி நியாயமானது தான். ஏனோ ஜீவானந்தனுக்கு ஆஸ்ரமப் பணிக்குப் பணம் நன்கொடையாய்க் கொடுக்க விருப்பமில்லை. நிச்சயம் அதற்கு நியாயமான ஒரு காரணம் இருக்கும். அவளுக்கே அது புரியாத புதிர் தான். ஆனாலும் அவனைத் தனக்குப் பிடித்திருக்கிறதே!’



‘அப்படியென்றால் அவன் மீது தனக்கு காதலா? அப்படியென்றால் காதல் நிச்சயம் சுயநலமானது தான். அவனுக்காகப் பரிந்து கொண்டு வருகிறதே!’



“சொல்லுமா, என் கேள்விக்கு என்ன தான் பதில்? உன் முடிவு தான் என்ன?..”



“அப்பா, எனக்குத் தெரியல. எப்படி எனக்குக் கூடவே இத்தனை வருஷமா நம்மோடு சேர்ந்து இருக்கிற ஈஸ்வரைப் பிடிச்சிருக்கோ, அதே மாதிரிக் கொஞ்சம் நாள் தான் பழகின ஜீவாவையும் நிச்சயம் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா?..”



அவளே சொல்லட்டும் என்று இப்பொழுது அனைவரும் அவள் முகத்தையே பார்த்தனர்.



ஹரீஷ் தான் எப்பவும் போல் தன் செல்ல அக்காவை மனதுள் வைது கொண்டிருந்தான்.



‘இந்த லூசு அக்கா தானும் குழம்பி, எல்லாரையும் குழப்பறாளே! ஜீவாவைப் பிடிச்சிருக்குன்னு சொல்லித் தொலையேன்க்கா.’



காவேரி தெளிவாய்த் தன் மனதை எடுத்துரைத்தாள்.



“எனக்கு இவங்க ரெண்டு பேரையும் ஒரு ஃப்ரெண்டா தான் அவுங்களைப் பிடிச்சிருக்கு. ஆனா, ஹஸ்பெண்டாப் பார்த்தா, என் பதில் நோ தான். ஏனோ எனக்கு இரண்டு பேரையும் என் ஹஸ்பெண்டா யோசிச்சுப் பார்க்கப் பிடிக்கல. காரணம் கேட்டா, எனக்கு இப்போதைக்குச் சொல்லத் தெரியல. ஒரு சமயத்துல ஈஸ்வர் எனக்கு சரிவருவாங்கன்னு தோணுது, ஆனா உடனே ஜீவா எனக்கு பெஸ்ட் சாய்ஸ்ன்னு என் மனசு சொல்லுது..”



“மொத்தத்துல நீ அரை லூசுன்னு நாங்க சொல்லறோம்க்கா..”



“எப்படி வேணா வைச்சுக்கங்க, ஆனா, இப்பக் கல்யாணம் செய்ய வேண்டாம்னு தெளிவா நான் சொல்லறேன். என் மனசு கொஞ்சம் நாட்கள் எல்லாத்தையும் தள்ளிப் போடுன்னு சொல்லுது. யார் எனக்கு பெஸ்ட் பார்ட்னர்னு எனக்குக் கண்டு பிடிக்க முடியல. என் தராசுல இரண்டு பேரும் சரிசமமாக நிக்கறாங்கப்பா. ஐ யாம் கன்ஃப்யூஸ்ட். அதனாலேயே எனக்கு இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்னு தோணுது. ப்ளீஸ்ப்பா, என் மனசுக்குப் பிடிக்காததை நான் செய்ய விரும்பல. கல்யாணம்கிற பெரிய கமிட்மெண்டெல்லாம் இப்ப எனக்கு வேண்டாமே. ப்ளீஸ்பா, எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாமே!. புரிஞ்சிக்கொங்க ப்ளீஸ்..”



கெஞ்சத் தொடங்கினாள். பின், லேசாகச் சிரித்தாள். தன் தீர்மானத்தைச் சொல்லிவிட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.





“அண்ணா, காவேரி பேச்சைப் பெரிசா எடுத்துக்காதீங்க. கொழந்தைப் பொண்ணு அது. அவளுக்கு அவ மனசே புரியல. அதான் நம்ம ஈசுவைப் பிடிக்குதுன்னு சொல்லறா இல்லையா? பேசாமக் கல்யாணம் செஞ்சி வைச்சிடலாம். அப்புறம் அந்த ஜீவாப் பயலை எதுக்கு நினைக்கப் போறா?..”



“டேய் கமல், ஹேமா சொல்லறது தான் சரின்னு எனக்கும் படுது. நாம பார்த்து வளர்த்த குழந்தைடா அவ. இன்னும் குழந்தையாத் தான் நடந்துக்கறா. நாம் தான் குழந்தைக்கு எது சரி, எது தப்புன்னு பார்த்துச் செய்யணும்..” ரத்னாவும் ஒத்து ஊதினாள்.



“எனக்கும் இதுதான் சரின்னு படுது அண்ணா. காவேரி சின்னப் பொண்ணு. அவ மனசை அந்தப் பையன் கலைச்சிருப்பான்னு தோணுது..அப்பா, அம்மா சொல்வது போல செய்வோம்..”, பாமாவும் எடுத்துக்கொடுக்க..



“கமல், அது குழந்தைப் பொண்ணு. உலகம் புரியாமல் பேசுது. கண்ணுல படாதது கருத்துல நிக்காதும்பாங்க. நீ ஈஸ்வரோட அவ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு. அந்த பையனை அதுக்கப்புறம் அவ எங்க பாக்கப் போறா?..”, ஹரிசந்திரநாத் தன் பேச்சே தீர்ப்பு என்பது போல முடித்தார்.



காவேரி இவர்களின் பேச்சில் திகைப்பாய்ப் பேச்சற்று நின்றாள். உதடு கடித்து தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.



இதயத்தில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல உதிர்ந்து போகத் தொடங்கியது. இந்தப் பேச்செல்லாம் வரும் என்பதற்காகத் தானே கடந்த ஒரு வாரமாக ஒதுங்கி இருந்தாள்?



கண்களில் குளம் கட்டத் தொடங்க, ஒருவித நிராசையுடன் அருகே நின்றிருந்த தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டாள்.



இத்தனை நாட்களாக எதற்கும் தாயைத் தேடாமல் தனிச்சையாய் வளர்ந்த குழந்தை தன் தோள் சாயவும், பெற்ற மனம் பாகாய் உருகிப் போனது. அது அந்தத் தாயின் வார்த்தைகளில் வெளி வந்தது.



“இங்க பாருங்க, இனி இந்தக் கல்யாணப் பேச்சு வேணாம். எனக்கு என் குழந்தையின் வாழ்க்கை தான் முக்கியம். அவ மனசு போல வாழணும். அதுக்குத் தடையா நாங்க இருக்க மாட்டோம். அவ யாரை, எப்பக் கல்யாணம் செஞ்சிக்கப் பிரியப்படறாளோ அப்போ செஞ்சிக்கட்டும். அதுவரை நாம எல்லோருமே கொஞ்சம் விலகி அவளுக்கு வழி விடுவோம். அவளுக்குப் பிடிக்காததைச் செய்ய நாங்க விருப்பப்படல. அவள் இன்னும் கொஞ்சம் நாள் நம் குழந்தையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என்னங்க, நான் சொல்லறது சரிதானே..”, அமிர்தா தன் கணவனைப் பார்க்க..



“ம். சரிதான். இன்னிக்குத் தான் உன் பொண்ணுக்கு நல்ல தாயா யோசிச்சிருக்க அமிர்தா. நிச்சியம் என் பொண்ணு மனசு போலவே அவள் திருமணம் நடக்கட்டும். இனி இந்த பேச்சைக் கொஞ்சம் நாட்களுக்கு எடுக்க வேண்டாம். இப்போதைக்கு இது தான் என் முடிவும் கூட..”



கமல்நாத்தின் இந்த முடிவில் மற்றவர்கள் முகம் சுருங்கியது என்றால், ஈஸ்வரின் முகமோ ஏனோ பூடகமாய் யோசனையில் மலர்ந்தது.



தடியால் அடித்த பழத்தை விட, தானாகக் கையில் வந்து விழுந்த கனி என்றுமே ருசிதானே! வற்புறுத்தி திருமணம் செய்து என்ன சாதிக்கப் போகிறேன்! வாழ்க்கை வாழத்தானே!



“மாமா, அத்தை, நானும் இப்படிச் சொல்லத் தான் நினைச்சேன். காவி என்னைப் பிடிச்சி, தானா வந்து கல்யாணம் செய்யணும். அப்பத்தான் வாழ்க்கையும் ருசிக்கும். நான் காத்திருப்பேன் மாமா. எனக்கு நம்பிக்கையிருக்கு. அதே சமயத்தில் அவளுக்கு ஜீவாவைப் பிடிச்சாலும் நான் விலகித்தான் நிப்பேன் மாமா. நிச்சயம் அவ மனசு போல நடக்கட்டும்..”, என்றபடி காவேரியைப் பார்த்து புன்னகைத்தான்.



காவேரியோ, ‘தாங்க்ஸ் அத்தான், என் மனசை நல்லாவே புரிஞ்சி வைச்சிருக்கீங்க. இதுக்காவே உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்குது.’, எனக் கண்களால் தன் நன்றிப்படலத்தை அவனுக்கு எழுதத் தொடங்கினாள்.



‘திருட்டுப்பூனை.’ பெற்றவர்களின் பேச்சில் மலர்ந்த ஹரீஷின் முகம் இப்பொழுது ஈஸ்வரின் பேச்சில் சுருங்கியது. ஏனோ ஈஸ்வரின் பேச்சில் நம்பிக்கை வரவில்லை ஹரீஷுக்கு..



காலம் காவேரியின் வாழ்க்கையில் என்ன வைத்திருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!


 
Top