கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 12

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 12



அடுத்து நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடமும் கழிந்திருந்தது. காவேரி ஜீவாவை மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பம் அதுவரை வாய்க்கவில்லை..



என்றைக்கு வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி வந்தாளோ, அவனும் நாசூக்காய் ஒதுங்கிக் கொண்டவன், அதற்குப் பிறகு அவள் புறம் திரும்பியும் பார்க்கவில்லை.



அமிர்தா மட்டும் புலம்பியபடியே இருந்தாள், ஊரில், நாட்டில் இல்லா விசேஷமாய்த் தன் வீட்டில் மட்டும் தான் இது போலெல்லாம் நடக்கிறது என்று. காவேரி எதையும் சட்டை செய்யவில்லை. ஓயாது உழைத்துக் கொண்டிருந்தாள் தன் இலக்கு நோக்கி.



முதலில் தயங்கிய பலர் தற்போது ஈஸ்வருக்குத் தோள் கொடுக்கக் களமிறங்கவும், திரும்பிப் பார்க்கும் முன், சென்னைக்கு மிக அருகிலேயே தன்னுடைய கனவுத் தொழிற்சாலையான, ‘மனமே மந்திரம்’, ஆஷ்ரமத்தைத் தொடங்கியும் விட்டான்.



ஈஸ்வரின் விடாமுயற்சியாலும் ஹேமாவின் விடா நச்சரிப்பாலும், சென்னைக்கு மிக அருகில் அதுநாள் வரை எதுவும் செய்யப்படாமல் தரிசாக இருந்த நிலத்தை தன் மகள் பெயருக்கு மாற்றிய கமல்நாத், அதை ஈஸ்வர் உபயோகித்துக் கொள்ள அனுமதி கொடுத்தார். பல ஏக்கர் நிலம் மிக எளிதில் ஈஸ்வரின் கை வந்து சேர்ந்தது.



வேறு எங்காவது தொலைவில் ஊரில் ஆசிரமம் அமைத்தால், தன் மகளைப் பிரிய நேரிடும் என்று கணக்கிட்டவர், தன் மகளுக்காக யோசித்து இந்த முடிவெடுத்தார்.



இதில் ஈஸ்வரின் தாய் ஹேமாவின் பங்கும் அதிகம் என்றே சொல்லலாம். விடாமல் காவேரியை நச்சரித்து, எப்படியோ காவேரியின் சிபாரிசில் அதை ஈஸ்வர் உபயோகித்துக் கொள்ளத் தன் தமையனிடம் இருந்து அனுமதியும் வாங்கியிருந்தாள்.



காவேரி ஈஸ்வருக்கு அந்த நிலத்தில் ஆசிரமம் வைக்க அனுமதி கொடுத்ததோடு, அங்கேயே, தன் மன விருப்பப்படி மனநலம் குன்றிய பிள்ளைகளுக்கான ஒரு சிறப்புப் பள்ளியையும் தொடங்கியிருந்தாள்.



ஏனோ அவளை அறியாமல், ஜீவாவின் சகோதரியின் தரணியின் முகம் அடிக்கடி வந்து போகும் அவளுக்கு.



அன்றைக்கும் அப்படித் தான், ஆசிரமப்பணிகளை பார்த்து விட்டு அப்படியே ஒதுக்குப்புறத்தில் இருந்த பயிற்சிக்கூடத்தை அடைந்தவள், அங்கே ஒரு சிறு பெண்குழந்தை ஏதோ பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருக்கக் கண்டாள். சட்டென ஏனோ தரணியின் நியாபகம் வந்து போனது. அவளும் இப்படித்தான் ஓயாமல் ஏதோ ஒன்று வரைந்தபடி அமர்ந்திருப்பாள்.



அபி என்ற அந்த பெண்குழந்தையின் அருகில் சென்றவள், "அபிக் குட்டி, என்ன செய்யறீங்க, எனக்குக் காண்பிக்கிறீங்களா?..", என்று மெல்லக் கேட்க,



அந்தப் பெண்ணும், சிரித்தபடி பேப்பரைக் காட்டியது. அழகாய் நேர்த்தியாய், ஜியாமெட்ரிக்கல் டிசைன் என்று சொல்லுவார்களே அதுபோல் ஏதோ ஒரு பாணியில், கோலம் போல் வரைந்து கொண்டிருந்தாள்.



கொஞ்சம் உற்றுப் பார்க்கவும் அது கிட்டத்தட்ட, ஒரு நேர்த்தியான மண்டலா பாணி வரைதலாகத் தோன்றியது.



பொதுவாகவே இவை அமைப்பில் அடிப்படையான வடிவத்தில், மண்டலங்கள் ஒரு சதுரத்திற்குள் இருக்கும் வட்டங்களாகவும், அனைத்தும் ஒற்றை, மையப் புள்ளியைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகளாகவும் அமைக்கப்பட்டிருக்கும். மண்டலா ஓவியம் புத்திஸத்திலிருந்து பிறந்து இருக்கிறது.



மண்டலா ஓவியங்கள் பொதுவாகக் காகிதம், மரம் மற்றும் துணிகள் மற்றும் சுவர்களில் வரையப்படுகின்றன. இந்த தனித்துவமான கலைப் படைப்பு அசாதாரணமானது என்றாலும், மண்டலங்கள் அவற்றின் துடிப்பான தோற்றத்திற்குக் குறியீட்டு மற்றும் தியான சிந்தனையின் அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இவ்வகை ஓவியங்கள் வரையும் போது நம் மனம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மனிதர்களின் எண்ண ஓட்டங்களின் வேறுபாட்டை பிரதிபலிக்கின்றன.



நாம் வரையும் கோலங்கள் கூட ஒருவித கலைப்படைப்பு தான்..இவை அனைத்துமே ஒரு விதமான சின்னங்கள் தான். இவை முறையே சக்கரம், மணி, முக்கோணம், தாமரை மற்றும் சூரியன் போன்ற வடிவங்கள் உணர்த்தும் வண்ணமாக இருக்கும். ‘ஒவ்வொன்றிற்கும் ஒரு தாத்பர்யம் உண்டு’, என்பதை ஈஸ்வர் சொல்ல இவள் கேட்டிருக்கிறாள்.



இவையுமே ஒரு வித தியான வழிபாடாக அவன் அனைவருக்கும் போதிக்கிறான். இது மனித மூளையின் நினைவாற்றலையும், கூர்மையையும் மேம்படுத்த ஒரு எளிய வழி என்று சொல்லுவான்.



சட்டென்று அவளுக்கு ஒரு எண்ணம் உதித்தது, இந்தப் பிள்ளைகளுக்கு, எண்கள், கணக்கு என்று நினைவுக்கு வைத்துக் கொள்வதற்கு நிரம்ப ஞாபகசக்தியும் புத்திக் கூர்மையையும், இந்த மாதிரியான ஒரு கலை வடிவத்தின் மூலம் கூட அதிகரிக்கச் செய்யலாம் என்று எண்ணியவள், அங்கிருந்த ஆசிரியரைக் கூப்பிட்டு, தினமும், குழந்தைகளுக்கு ஒரு அரைமணிநேரம் இந்தக் கலைவடிவத்தில் பயிற்சி கொடுக்கச் சொல்லி விட்டு, மீண்டும் ஆசிரமம் இருந்த பக்கம் செல்லத் தொடங்கினாள்.



ஈஸ்வர் அந்த பக்கம் ஒரு சொற்பொழிவாற்றும் மேடையில் அமர்ந்துகொண்டு கீழே அமர்ந்திருந்த பலதரப்பட்ட சிஷ்யகோடிகளுக்கு தன்னுடைய அருளுரையை வழங்கிக் கொண்டிருந்தான்.



கிட்டத்தட்ட ஒரு பாதி சந்யாசி போல் ஒரு தோற்றம். வெள்ளை வெளேர் என்று கதர் ஜிப்பா, பருத்தி வேட்டி, மற்றும், அங்கவஸ்திரம், கழுத்தில் பெரிய உருத்திராட்சங்கள், தங்கத்தில் கோர்க்கப்பட்டு கையிலும் கழுத்திலும் அணிந்திருந்தான். ஆனாலும் அவன் காவி அணிந்து முழுத் துறவியாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் தானும் ஒரு சராசரி மனிதன் தான் என்பது போல் தானிருந்தான்.



அன்றைக்குப் பார்த்து சரியாக மண்டலங்களைப் பற்றித்தான் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தான்,



"மண்டலமானது பண்டைய ஆசிய கலாச்சாரங்களில் ஓர் ஆன்மீகச் சின்னமாகும். இது இரண்டு வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. வெளிப்புறத்தில் பிரபஞ்சத்தின் காட்சி பிரதிநிதித்துவம் அல்லது தியானம் உட்பட பல பண்டைய ஆசிய மரபுகளில் நடக்கும் பல நடைமுறைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. இந்து மதம் மற்றும் புத்த மதத்தில், மண்டலாவுக்குள் நுழைந்து அதன் மையத்தை நோக்கிச் செல்வதன் மூலம், பிரபஞ்சம் நம்மை துன்பத்தில் இருந்து மகிழ்ச்சியாக மாற்றும் வானியல் அண்ட செயல்முறை மூலம் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள் என்பது நம்பிக்கை. உலகின் பல்வேறு கலாச்சாரங்களில் பல வகையான மண்டலங்கள் பயன்படுத்தபடுகின்றன. அவை கலை ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன..", என்றவன்,



“இன்றைக்கு மூன்று முக்கிய வகை மண்டலங்கள் மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம்..”, என்றான்.



அடுத்து வந்த சில நிமிடங்களில். ‘கற்பிக்கும் மண்டலம், குணப்படுத்தும் மண்டலம், மற்றும் மணல் மண்டலங்கள்’ பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.



கேட்கக் கேட்க காவேரிக்குப் பலவிதமான எண்ணங்கள் தோன்றின, இதை இப்படியும் செய்யலாமோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.



"தோழமைகளே! கற்பிக்கும் மண்டலங்கள் முக்கியக் குறியீடாகும், இதன் வடிவம், கோடு மற்றும் வண்ணம் ஒரு தத்துவ அல்லது மத அமைப்பின் வேறுபட்ட அம்சத்தைக் குறிக்கிறது. வடிவமைப்பு மற்றும் கட்டுமானக் கொள்கைகளின் அடிப்படையில் மாணவர் தனது சொந்த மண்டலத்தை உருவாக்குகிறார், அவர்கள் கற்றுக்கொண்ட எல்லாவற்றின் காட்சி அடையாளத்தை முன்னிறுத்துகிறார். கற்பிக்கும் மண்டலங்கள் அவற்றின் படைப்பாளர்களுக்கான வண்ணமயமான, அழகுமிக்க மன வரைபடங்களாகச் செயல்படுகின்றன..”



“அடுத்து குணப்படுத்தும் மண்டலங்கள் நல்ல ஞானத்தை வழங்குவதற்கும், அமைதியான உணர்வுகளைத் தூண்டுவதற்கும், கவனம் தொடர்பான நோக்கம் கொண்டவை.”



“கடைசியாக மணல் மண்டலம். இதைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் புத்த பிக்குகள் மற்றும் "நவாஜோ" கலாச்சாரங்கள் நீண்ட காலமாக மணல் மண்டலங்களை ஒரு பாரம்பரியமிக்க, மதக் கூறுகளாகப் பயன்படுத்துகின்றன. இந்தச் சிக்கலான வடிவமைப்புகள் மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் குறிக்கின்றன.”



“அதே மாதிரிதான் மண்டலச் சின்னங்களும்..”



“எட்டு ஸ்போக்குகள்-கோடுகள் கொண்ட சக்கரம்:

ஒரு சக்கரத்தின் வட்ட இயல்பு சரியான பிரபஞ்சத்தின் கலையைப் பிரதிநிதித்துவமாக குறிக்கிறது. எட்டு ஸ்போக்குகள் புத்த மதத்தின் எட்டாம் மடங்கு பாதையைக் குறிக்கின்றன, இது விடுதலை மற்றும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும் நடைமுறைகளின் அர்த்தமாகும்.



மணிச் சின்னம்.. ஞானம், தெளிவு, தெளிந்த மனதை அடையும் இலட்சியத்தை குறிக்கின்றன.



முக்கோணச் சின்னம்.. அதிலும் மேல் நோக்கி எதிர்கொள்ளும் முக்கோணங்கள் செயல் மற்றும் ஆற்றலைக் குறிக்கின்றன. கீழ்நோக்கி எதிர்கொள்ளும், முக்கோணங்கள் படைப்பாற்றல் மற்றும் அறிவின் நாட்டம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.



தாமரைச் சின்னம்.. பௌத்த மதத்தில் தாமரை ஒரு புனிதச் சின்னம், தாமரையின் சமச்சீர் சமநிலையைக் குறிக்கிறது. தாமரை நீருக்கடியில் இருந்து வெளிச்சத்தை எட்டும் நிகழ்வைப் போன்று மனிதனும் ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் அறிவொளியை அடைகிறான் என எடுத்துரைக்கிறது.



சூரியன்..நவீன மண்டலம்



இவ்வாறு பலவித சின்னங்களும் நமக்கு உணர்த்து பொருளை இன்றைக்குப் பார்த்தோம். நாளை மீதி என்ன என்பதைப் பார்ப்போம்..”



“கடைசியாக உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.. நாம் பேசுவதை விட அதிகமா மத்தவங்களை கவனிக்கணும்.. மத்தவங்க கஷ்டத்தை நம்மிடம் சொல்ல வரும் போது காது கொடுத்துக் கேட்கணும், மாறாக நம்ம கஷ்டத்தைச் சொல்லக் கூடாது.. அப்போ தான் நம் பிரச்சனை ஒண்ணுமேயில்லன்னு புரியும்.. நம் பிரச்சனைக்கும்ஸதீர்வு தெரியும்..”, என்றவன், அப்போது தான் காவேரியைப் பார்த்த மாதிரி,



"வாங்க காவேரி மாதாஜி. சொல்லுங்க.. உங்கள் நாள் இன்று எப்படி போகிறது?”



"சந்தேகம் இருந்தது குருஜி, இப்போது அனைத்தும் தீர்ந்தது.. எல்லாம் நல்லபடியாகப் போகிறது..", என்று மென்முறுவல் பூத்தாள் காவேரி.



ஆம். இப்போதெல்லாம் காவேரியும் கூட அவனை குருஜி என்று தான் கூப்பிடுகிறாள்.



மனதுள் எப்போதும் போல் ஒரு நெருடல். ‘குருஜி என்று கூப்பிடுபவனை எப்படித் திருமணம் புரிய முடியும்?’



ஒரு பெரிய மலர் மாலையை எடுத்து அவன் மீது போட வந்த ஒருவரிடம் அதை மறுத்தவன்,



"நல்லது.. இதெல்லாம் வேண்டாம். இங்கே நான் ஒரு கருவி மட்டுமே. எனக்குத் தெரிந்ததை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கிறேன், அவ்வளவே. வாழ்வை எப்படி முறையாக நேர்த்தியாக வாழலாம், துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்பதற்கான ஒரு சின்ன வழியைக் காட்ட நினைக்கிறேன் அவ்வளவே. மற்றபடி, என்னை ஏதோ கடவுள் மாதிரி எல்லாம் நினைக்க வேண்டாம். இங்கே எல்லோரும் சமம்..”, என்று அனுப்பி வைத்தவன்,



காவேரியுடன் மெல்ல வெளியே நடக்கத் தொடங்கினான்.



"குருஜி, இன்னிக்கு எனக்கு வீடு திரும்ப நேரமாகும். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். ஸ்கூட்டியில் போகலாம்னு இருக்கேன். எப்பவும் காரில் போய்ட்டு வந்துகிட்டு முடியலை. நல்ல காத்து முகத்தில் வீச, வண்டியோட்டிட்டு நானே வரேன். அம்மா கிட்ட சொல்லிடுங்க. மெசேஜ் போட்டேன். ஆனாலும், அத்தையும், தாத்தாவும் உங்க கூட ஏன் போகலைன்னு கேப்பாங்க. கொஞ்சம் சமாளிச்சிடுங்க..", என்று சொல்லிவிட்டு, சிடியில் இருந்த ஒரு மாலுக்குச் சென்றாள்.



அங்கே நேரம் போவது தெரியாமல் ஒரு மிகப்பெரிய ஸ்டேஷனரி கடையில் மண்டலா பெயிண்டிங்க் சம்பந்தமாக சில புத்தகங்களையும் டிசைன்கள் அடங்கிய அட்டைகளை வாங்கிக் கொண்டவள், யாரோ தன்னை மெல்ல அழைக்கக் கண்டு திரும்பியவள் திகைத்தாள்.



அங்கே ஜீவாவின் தாய் நின்றிருந்தார்.


 
Top