கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 2

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 2



“நீ ஒரு பைத்தியக்காரி”



“தாங்க்ஸ் ஃபார் யுவர் காம்பிளிமெண்ட். பட் மிஸ்டர் ஜீவா. இப்போதான் நான் இன்னும் தெளிவா இருக்கேன்னு நினைக்கிறேன். பைத்தியக்காரின்னு என்னைச் சொன்ன உங்களுக்கு, முதல்ல நீங்க யாருன்னு புரியுதா? முதன்முதலா இன்னிக்குத்தான் பாக்கிற பொண்ணுக்கு கிட்ட இப்படிப்பட்ட கேள்வியைக் கேக்கறவங்களைத் தான் எங்க ஊருல அப்படி நீங்க சொன்னதைச் சொல்லுவாங்க..”



பொங்கி எழுந்த சிரிப்பைத் தனக்குள் அடக்கிக் கொண்டாள் காவேரி.



“அப்படியா.. எங்க ஊருல முதன் முதலா பொண்ணு பார்க்கப் போனா மாப்பிள்ளைக்கும், பொண்ணுக்கும் பிடிச்சிருக்கான்னுதான் ஃபர்ஸ்ட்டு கேப்பாங்க..”



அவளின் சிரிப்பைக் கண்டு கொள்ளவில்லை ஜீவானந்த்.



இவன் என்ன சொல்ல வருகிறான் என்று இப்பொழுது புரியாமல் விழித்தாள் காவேரியோ. அவள் முகத்தில் சிரிப்பு மறைந்து குழப்பம் தோன்றியது.



காவேரிக்குப் பைத்தியக்காரிப் பட்டம் சூட்டிய ஜீவாவோ தன் வரை மிகவும் தெளிவாகவே இருந்தான்.



“என்ன ரொம்பக் குழப்பறேனா? உன்னைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆச்சரியமா இருக்கு. பணக்கார மாப்பிள்ளை கிடைக்காதான்னு ஒவ்வொரு பொண்ணும் ஏங்கி நிக்கிறாங்க. நீயோ, அது தானா காலடியில வந்து விழும் பொழுது அதை எட்டி உதைக்கிற..”



“அப்படியா? சரிங்க மிஸ்டர், ஆனா எனக்குப் பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். நான் இப்பப் பணக்கார மாப்பிள்ளையை எனக்காக தேடிட்டும் இருக்கல. சோ எட்டி உதைக்க வேண்டிய அவசியமும் எனக்கு வராது. இன்னொண்ணு எனக்குப் பணம் பிரதானமில்லை. எங்ககிட்டயும் பணம் போதிய அளவு தாரளமாவே இருக்கு. சோ பணக்கார மாப்பிள்ளை வேணும்னு கேக்கற பெண்ணைப் பார்த்து நீங்க இந்த கேள்வியைக் கேட்கலாம்..”



நக்கலாய்ச் சிரித்த காவேரியை சுவாரஸ்யமாய் இப்பொழுது பார்த்தான் ஜீவாவோ! அவன் இதழ்களில் லேசான புன்னகை உதிர்த்தது. மாறாய் காவேரிக்கோ அவன் தன்னை கேலியாய்ப் பார்த்து சிரிப்பதாகவே இப்பொழுது தோன்றியது.



“பணம் முக்கியமில்லைன்னா, அதுக்காகப் பணமே வேண்டாம்னு நான் சொல்ல வரலை. இன்னிக்கு அந்தப் பணத்துக்காகத் தான், உங்க முன்னாடி நான் நிக்கறேன். உங்க மனதுள் ஓடுவது எனக்குப் புரியுது. அதை தானே நீங்க சொல்லிக் காட்டறீங்க? அதுக்கு சில காரணங்கள் இருக்கு..”



பணமிருந்தாலும், அவர்கள் குடும்பத்தினர் ஓரளவுக்கு மேல் இவர்களுக்காக நிதி ஒதுக்கத் தயாராக இல்லையே!! சின்னவர்களும் அவர்களிடமும் இருந்து தனித்து சுயமாய்த் தங்கள் சேவையைச் செய்வதாய் அல்லவா திட்டமிட்டு இதை தொடங்கினார்கள்?



இல்லை என்று அவனோ ஒரேடியாகத் தலையாட்டி மறுத்தான்.



“ம். என்ன நம்ப முடியலையா? நிச்சயம் அந்த மாதிரி நான் நினைக்கல. நீ இன்னிக்கு என் முன்னாடி டொனேஷன் கேட்டு நிற்பது வேறு ஒரு காரணத்துக்காக. ஐ அப்ரிஷியேட். இந்தச் சின்ன வயசுல இந்த மாதிரி என்.ஜி.ஓ எல்லாம் நடத்திப் பணம் கலெக்ட் பண்ணி உதவறது எல்லாம் வேற லெவல். அதுவும் இந்தமாதிரி மன இறுக்கம்(ஆட்டிசம்) உள்ள குழந்தைகளுக்காக சேவை செய்ய முன்வருவது, பாராட்ட வேண்டிய விஷயம்மா..”



அவள் முகமோ அவமானத்தில்! தன்னைப் பணத்துக்காக வந்து நின்றவள் என்று எண்ணுகிறானோ என மீண்டும் மனதுள் நினைத்து இறுகி இருக்க, வெளியே அமைதியாய் மறுகி நின்றாள்.



அவன் என்ன நினைத்தால் தனக்கு என்ன என்று ஏனோ யோசிக்க விழையவில்லை.



ஒருவேளை யோசித்திருந்தால், அவன் மனதை இந்த நொடியே சரியாக கணித்திருப்பாளோ!!



“இங்க பாரு, நீ என்னை ஏதோ தப்பா எடை போடறே.. என்னைப் பொருத்தவரை நிறைய பொண்ணுங்களைப் பார்த்திருக்கேன். பழகியிருக்கேன். ஆனா, வாழக்கையில் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்ட முதல் பெண்ணும் நீ தான், கடைசிப் பெண்ணும் இனி நீ தான்.. நீ நம்பணும்..”



“ஹேய் உடனே தப்பா யோசிக்காதேம்மா. தொழில் முறையில் ஆண் பெண் நட்பெல்லாம் சகஜம் தான்.. உனக்கும் தெரிஞ்சிருக்கும். இல்லைன்னா நீயும் இப்போ என் முன்னாடி பிசினஸ்க்காக வந்திருக்க மாட்ட.. ஃப்ரெண்டிலியாத் தான் பொண்ணுங்க கிட்டப் பழகியிருக்கேன். நான் ரொம்ப நல்ல பையன். பிசினஸ் உலகில் யாரைக் கேட்டாலும் சர்டிஃபிகேட் கொடுப்பாங்க.. நம்பும்மா..”



தனக்காகச் சான்றிதழும் தரத் தவறவில்லை ஜீவானந்த்.



காவேரியோ, இப்போழுது கோபமாக அவனை முறைத்தாள். இவனிடம் பேசுவது வீண், இவனுடைய டொனேஷனே வேண்டாம் என்று முடிவெடுத்தவள்,



“இங்க பாருங்க மிஸ்டர்.ஜீவானந்தன். முதலோ, கடைசியோ எது வேணா இருந்துட்டுப் போகட்டும். நான் என்ன நினைச்சாத்தான் உங்களுக்கென்ன? என்னைப் பொருத்தவரை, ஐ யாம் நாட் இன்ட்ரெஸ்ட்டட். எனக்காக ஈஸ்வர் ரெடியாக இருக்கான்..”



தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி மறுத்திருக்கலாம், அதை விடுத்துத் தனக்காக வேறொருவன் காத்திருக்கிறான் என்று எதற்கு சொன்னாள் என்று பின்னாளில் பலமுறை தனக்குள் கேட்டு இருக்கிறாள் காவேரி.



இருப்பினும் எதிர்பாரா நேரத்தில் திடீரென்று தன்னை மணக்கக் கேட்பான் என்று அவள் மட்டும் கண்டாளா என்ன? சட்டென தனக்குத் தோன்றியதைச் சொல்லித் தன் மறுப்பைப் படாரெனச் சொல்லி விட்டாள்.



இப்போது அவளைக் கூர்மையாக நோக்கினான் ஜீவாவோ. காவேரியும் அவன் பார்வையை தைரியமாகவே எதிர்கொண்டாள்.



சட்டென சுதாரித்த ஜீவாவோ, “யாராக வேணாலும் அவன் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு என்ன பதில் அதைச் சொல்லுங்க காவேரி..”, என்றபடி கண் சிமிட்டினான்.



‘அடப்பாவி, கண்ணைச் சிமிட்டறானா?’ அவளால் அனுமானிக்க முடியவில்லை.



தனியாகத் தன்னால் சமாளிக்க முடியும் என்று காலையில் ஈஸ்வரிடம் சவால் விட்டது ஏனோ இந்த நேரத்தில் ஏடாகூடமாய் ஞாபகம் வந்து அவளை சங்கடப்படுத்தியது. ‘தனித்து இவனிடம் வந்திருக்கக்கூடாதோ’, அவளுள் கேள்வி எழுந்தது.



ஆறடிக்கும் சற்றே கூடுதலான உயரமும், கண்களை உறுத்தாத பொருத்தமான உடற்கட்டும், மாநிறத்துக்கும் கூடுதலான நிறமும், அடர்ந்த புருவத்தைப் பளிச்சென எடுத்துக் காட்டும் புத்திசாலி எனக் காட்டும் விசாலமான நெற்றியும், எதிராளியை சரியாய் எடைபோடும் கவர்ச்சிகரமான கண்களும், தீர்க்கதரிசி எனச் சொல்லும் மூக்கும், அடர்த்தியாய் மேலுதடை மறைக்கும் அட்டகாசமான கருமீசையும், எவ்விதக் கெட்ட பழக்கங்களுக்கும் நான் ஆளில்ல என்று சொல்லும் சிவந்த தடித்த இதழ்களும், என ஆணழகானாய், கதைகளில் வர்ணிக்கும் அனைவரும் ரசிக்கும் கதாநாயகனாய் தான் அமர்ந்திருந்தான் ஜீவானந்தன்.



அவள் தன்னை அலசி ஆராய்வதை அவனும் அறிந்தானோ? அவன் கண்கள் மீண்டும் ஒளிர்ந்தன.



சட்டெனத் தன்னைச் சுதாரித்துக்கொண்ட காவேரி, தன் பார்வையை அவனிடமிருந்து விலக்காமல்..,



“நீங்க எப்படிக் கேட்டாலும் என் பதில் ஒண்ணு தான். ‘நோ’. அவ்வளவுதான். எனக்கு நீங்க வேண்டாம். நீங்க சொசைட்டியில் பெரிய மனுஷர், அதனால தான் இப்போ உங்க கிட்டப் பொறுமையா பேசிட்டு இருக்கேன். இல்லைனா அசிங்கப்பட்டிருப்பீங்க மிஸ்டர். ஜீவானந்தன்..”



“ஹாங்க்.. என்னைக்கும், எனக்கு எங்க குடும்ப ஒத்துமை ரொம்பவே முக்கியம். அவுங்க சந்தோஷம் தான் எங்க இரண்டு பேருக்கும் முக்கியம். அதுக்கு நான் ஈஸ்வரைத் தான் கல்யாணம் பண்ணணும். இப்போ நல்ல விளக்கமாகவும்கூட என் மறுப்பைச் சொல்லியாச்சு. சோ, இதுக்கு மேல தேவையில்லாமல் இந்தப் பேச்சு இனி வேண்டாம். உங்க டொனேஷனும் எங்களுக்கு வேணாம் சார். போதும், இங்கே வந்ததே வேஸ்ட்.. பை, சீ யூ நெவர்..”, என்றாள் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன்.



வெளிக்கதவை நோக்கி நிமிர்வுடன் நகர்ந்தவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ஜீவா. ஆனால், அவளைத் தடுத்தாக வேண்டுமே!!



“அப்ப நீ மத்தவங்களுக்காகத் தான் அவனை, அதான் அந்த ஈஸ்வரனோ, இல்லை பெருமாளோ எதோ ஒண்ணு. கல்யாணம் பண்ண நினைக்கிற.. குடும்ப ஒற்றுமைக்குன்னு சொல்ல வர்றே.. உனக்காக, உன் சந்தோஷத்துக்காக இல்லை, அப்படித் தானே..”



அவன் முகத்தில் சிரிப்பின் சாயலைக் கண்ட காவேரியோ பொங்கி எழுந்து சீறி பாயத் தொடங்கினாள்.



“ஹலோ, கல்யாணம்கிறது ஜஸ்ட் லைக் தட் பிடிச்சிருக்கு, பண்ணிக்கிறியான்னு உங்கள மாதிரி ஆளுங்களுக்கு வேணா ஈசியா இருக்கலாம். நாட் ஃபார் அஸ். எங்க குடும்பங்களைப் பொருத்தவரை, ஒரு பெண்ணும், ஆணும் திருமண பந்தத்தில் இணையறது இரு குடும்பங்கள் காலம்காலமாக அந்தத் திருமண பந்தத்தின் மூலம் தொடரணும். வாழையடி வாழையா இருக்கணும்.. கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் சார்..”



‘ஆயிரம் காலப் பயிர்’ என்று சொன்னவளுக்கு ஏனோ உறைத்தது, ஈஸ்வரிடம் தனக்கு அந்த மாதிரியான ஃபீல் வரவில்லை என்று காலையில் தன் தோழியிடம் அறைகூவல் விட்டது!



இதோ இவனிடம் ஏதோ ஸ்பார்க் தெரிகிறது என்று மட்டும் அவளுக்குத் தோன்றியது. ஆனால், தன்னை மணக்கக் கேட்கும் இவன் தான் தனக்கானவா என்றால், நிச்சயம் இப்போதைக்கு இவனும் இல்லை என்றே அவளுக்குள் தோன்றியது.



அவனைக் கண்டதும் வெள்ளை தேவதைகள் ‘லா லா’ பாடவில்லையே..



“சோ, நீ தியாகம் செய்யக் கிளம்பிட்ட. அப்போ ஆயிரம் காலத்துக்குப் பயிரிடப் போறியா?..”, என்றவாறு அவனோ அவளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நிதானமாய் அளவிட்டான்.



அவனுடைய அந்தப் பார்வையில் ஏனோ மின்சாரம் பாய்ந்தாற்போல் உணர்ந்தவள், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் திணறத் தொடங்கினாள். உடம்பில் ஒரு புதுவித உணர்வு எழுந்ததை உணர்ந்து, தன்னை நினைத்தே சற்று பயந்து தான் போனாள். சட்டெனத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், தன் மன உணர்வுகளை உடனேயே கட்டுக்குள் கொண்டு வந்தாள்.



“மிஸ்டர், கொஞ்சம் மதிச்சிப் பேசினா, பேசிட்டே போவீங்களா? இதுல கிண்டல் வேறு. நான் தியாகம் செய்யறேன், இல்லை, என்னவோ பண்ணறேன். இதோட இனி நாம் சந்திப்போமோ, இல்லையோ. எதுக்கு இந்த வெட்டி விவாதம்? பை.பை. ஆள விடுங்க..”, என்று அவனை அதட்டித் தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.



“அப்போ, நான் கொடுத்த ஆஃபர்?..”



“உங்க டொனேஷனே வேண்டாம்கிறது போது உங்க ஆஃபரும் கேன்சல்ட்..”, என்ற காவேரி, விட்டால் போதும் என்று பயந்து போய், எதற்குத் தேவையில்லா வீண்வம்பு என்று, அவன் கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாய் வெளியேறினாள்.



ஆனால் விதி வலியது. அவர்களை மீண்டும் சந்திக்க வைக்க எண்ணி இருக்கிறதே!!
 
Top