கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 20

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 20



தோழியிடமும், கார்த்திக்கிடமும் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பியவளுக்கு ஏகப்பட்ட குழப்பம். பிரச்சனையின் தீர்வு என்னவோ புலப்படவில்லை.



ஈஸ்வரை ஒருபக்கம் நம்பினாலும், அந்த நம்பிக்கை ஏனோ முழுமனதாய் இப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை. கேள்விப்படுவதெல்லாம் அவன் மீதான சந்தேகத்தை அதிகரிக்க வைத்தது. ஜீவாவோ தான் சொல்லுவது அனைத்தும் சத்தியம் என்று அடித்துச் சொல்கிறான். ஆனாலும், அவன் தங்கைக்கு ஏற்பட்ட நிலை எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இதில் இவர்கள் ஆஸ்ரமத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரி வராதே? இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு இவள் பாடு அல்லவா இப்போது திண்டாடமாக இருக்கிறது?



இன்று கார்த்திக் பேசியது அதிகக் குழப்பத்தை வரவழைத்தது. மொத்தத்தில் தலைவலியோடு வீட்டுக்குத் திரும்பினாள்.



அதே மனநிலையில் அவள் வீட்டுக்குள் நுழைய அங்கே அனைவரும் கூடி ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ஏனோ, தான் மட்டும் தனிப்பட்டு நிற்பது போல அவளுக்குத் தோன்றியது.



அவள் மனநிலையை உணர்ந்தாற்போல் அவள் பாட்டி அவளை உணவருந்தப் பரிவுடன் அழைக்க, முகம், கை காலைக் கழுவிக்கொண்டு, தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.



அமைதியாக உணவை முடித்துத் தனதறைக்குள் செல்ல விழைந்தவளை அவள் தந்தை கமல்நாத் நிறுத்தினார்.



“பாப்பா, நாங்க ஒரு முடிவுக்கு வந்தாச்சு. இன்னும் இருபது நாள்ல உனக்கும் ஈஸ்வருக்கும் கல்யாணம் செய்யலாம்னு நாங்க முடிவெடுத்தாச்சு. ரொம்ப உனக்கு அவகாசம் கொடுத்தாச்சும்மா. இனி காத்திருக்க முடியாது. நீயும் தயாராகிடு பாப்பா..”



“காவேரி, கொஞ்சம் நேரம் முன்னாடி தான் நம்ம ஜோசியர் நாள் குறிச்சிக் கொடுத்துட்டுப் போனாங்க. உனக்கும் ஈஸ்வருக்கும் நல்ல பொருத்தமாம்..”



“அண்ணி, அப்போ நாம இந்த வாரக்கடைசியில மஞ்சள் இடிச்சி, குலதெய்வம் பூஜை செஞ்சிட்டு, கல்யாணப் பட்டெல்லாம் வாங்க காஞ்சீபுரம் போகலாமா? இல்லை நம்ம கடையிலேயே எல்லாத்தையும் வீட்டுக்கு எடுத்துட்டு வரச் சொல்லிடலாமா?”



“புது மோஸ்தர் நகையெல்லாம் ஒரு செட் எடுத்துட்டு வரச் சொல்லணும்..”



“காவேரி கல்யாணத்துக்கு எங்களுக்கும் தலா ஒரு வைர செட்டாவது நீ வாங்கிக் கொடுக்கணும் அண்ணா..”



“நம்ம தொழிற்சாலையிலோ, இல்லை ஈஸ்வரோட ஆஸ்ரமவளாகத்தில் கூட கல்யாண மண்டபத்தை செட் செஞ்சி ஜாமாய்ச்சிடலாம்..”



ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தனர்.



காவேரியின் மனதை ஒவ்வொருவரும் கடப்பாறையால் குத்தி ரணகாயப்படுத்தினர். அவளுக்கும் இதில் விருப்பம்தானே என்ற வார்த்தைகள் மாத்திரம் எவரிடமிருந்தும் வரவில்லை. இதயத்திலிருந்து தோன்றித் தொண்டை வரை வந்த இரணவலியை மெல்ல மென்று விழுங்கியவளின் கண்களோ, லேசாய்க் கலங்கத் தொடங்கின.



ஆனாலும் தன் மனதை சரிபடுத்திக் கொண்டாள். முடிவெடுக்க வேண்டிய நேரமிது. தனக்குள் ஏதோ தீர்மானித்துக் கொண்டாள்.



“உங்க விருப்பம் போலச் செய்யுங்கப்பா..”



அவ்வளவுதான். இனி எதுவும் செய்ய முடியாது. தன் ஒப்புதலைத் தந்தாயிற்று. இதற்கு மேல் அவளும் போராட முயற்சிக்கவில்லை. நடப்பது நாராயணன் செயல் என்று போகிற போக்கில் போக முடிவெடுத்தாள்.



“உண்மையாத் தானேமா சொல்லற?”



தலையாட்டினாள் காவேரி. அங்கிருந்து மனம் கனக்க நகர்ந்தாள்.



“நீங்க வேற அண்ணா, அதான் சம்மதம் சொல்லிட்டா இல்ல, மனசு மாறுவதுக்கு முன்னால சட்டுபுட்டுன்னு கல்யாண வேலையைத் தொடங்குவோம்..” ஹேமா அத்தையின் வார்த்தையில் இருந்த குதூகலம் காவேரியின் மனதுக்குக் கசந்தது.



******



“சொல்ல வந்த விஷயத்தை சொன்னீங்கன்னா கேட்டுட்டு நான் போயிட்டே இருப்பேன். வெட்டிப்பேச்சுப் பேச எனக்கு நேரமில்லை..”



ஆஸ்ரமத்தில் நடக்கும் குழப்பத்தோடு, அவள் கல்யாணச் செய்தியால் விளைந்த குழப்பமும் சேர்ந்து தலைவலியோடு காய்ச்சலும் இழுத்து விட்டுக்கொண்டவள், இன்றுதான் அவளது ஆஸ்ரமப் பள்ளிக்கு வந்திருந்தாள்.



மதிய வேளையில் அவள் முன் நின்றிருந்தான் ஜீவா. ஜீவாவிடம் தான் கோபப்பட்டுக் கொண்டிருந்தாள்.



“அதுவும் சரிதான். மாதாஜிக்குக் கல்யாண வேலைகள் நெட்டி முறிக்கும் தான். என் ஃபோன்காலை எடுக்கக் கூட டைம் இருக்காது தான். உன்னைத் தேடி இரண்டு நாட்களா நானும் ஆஸ்ரமத்துக்கு வந்துட்டுப் போறேன். நீ வேலைக்கு வரலைன்னு சொன்னவங்க, கூடுதலா உனக்கும், குருஜிக்கும் கல்யாணம்னு தகவலும் சொன்னாங்க. இனி என்னையெல்லாம் நினைக்கத் தோணுமா என்ன? அப்புறம் எப்படி நேரம் இருக்கும்? சொல்லு காவேரி நான் கேள்விப்படுவது உண்மையா?..”



அவளை அதட்டியவன் உதடுகளோ கோபத்தில் வளைந்தன. அடர்ந்த மீசையோ அவன் கோபத்தைக் கண்டு அஞ்சி தானாகவே துடிக்கத் தொடங்கின.



ஜீவாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் காவேரிக்கு வரவில்லை. ஆனாலும், இது வரும் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இவ்வளவு விரைவில் அவளுடைய திருமண விஷயம் அவன் காதை எட்டும் என்று ஏனோ அவள் எதிர்பார்க்கவில்லை.



“ஆமாம்”, என்று அவன் முகம் பார்த்தவள் சட்டெனத் தலை குனிந்தாள். ஏனோ என்ன முயன்றும் அவன் கண் பார்க்கத் தயங்கினாள்.



“வெட்கமாயில்ல உனக்கு? அவனைப் பத்தி அவ்வளவு தெரிஞ்சும், அவனைக் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லற? ஏன் காவேரி? என்னைப் பழிவாங்க நினைக்கிறியா? எதுக்கு இந்த திடீர் முடிவு? என் மனசுல இன்னும் யாருமில்லன்னு சொன்னவ இப்ப எப்படி முடிவெடுத்த? சொல்லு காவேரி, என்னைக் கல்யாணம் பண்ண விருப்பமில்லைன்னாலும் பரவாயில்ல, அதுக்காக நீ புதைகுழியில சிக்கப் போறது எனக்குப் பிடிக்கல..”, சீறினான் ஜீவா.



“நான் புதைகுழியில சிக்கறேன், இல்ல சிக்காமப் போறேன். எங்க கல்யாணம் முடிவாயிடுச்சு, அவ்வளவு தான். உங்களுக்கு எதுக்குங்க அந்தக் கவலையெல்லாம்?..”, காவேரியோ பதிலடி கொடுத்தவள், முகம் திருப்பினாள்.



முகம் பார்க்க மறுக்கும் தன் காதலியை, எப்படியும் தனக்கானவள் இவள் தான் என்று இறுமாப்புடன் இத்தனை நாளாய் அமைதி காத்தவன் இப்பொழுது அடுத்து என்ன என செய்வதறியா நிலையில் அவளை வெறித்தான். என்ன செய்து அவளை தனக்காகத் தக்க வைத்துக் கொள்வது என்று புரியாமல் குழம்பித் தலை குனிந்து தன்னை உதாசீனப்படுத்துபவளை சில நொடிகள் பார்த்தவனுக்குள் ஏதோ பந்தம் அறுந்த உணர்வு.



‘ச்.சீ இந்த பழம் புளிக்கும் என்று தூக்கி எறிய அவள் ஒன்றும் அஃறிணைப் பொருள் இல்லையே! தன் உணர்வுள் கலந்தவள் இல்லையா?. அவளுக்கு இல்லை போலும்!.’ தலையாட்டிக்கொண்டவன், தன்னைச் சமன்படுத்த நீண்ட நெடிய மூச்சை வெளியிட்டவன், ஜெல் போட்டும் படிய மறுக்கும் தன் சிகையைத் தன் கைகளால் அழுத்தித் தடவிக் கொண்டான்.



“அதுவும் சரிதான். நீ யாரோ? எவரோ? எப்படியோ போ. எனக்கு எதுக்கு வம்பு? உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு இன்னிக்கு என் தங்கச்சியின் வாழ்வு கேள்விக்குறியாய் நிக்க வச்சிருக்கு? எனக்கென்ன கவலை மா? நான் எதுக்கு உனக்காகக் கவலைப்படணும் சொல்லு. நீ ஹாப்பியா அந்த சாமியாருக்கு ஜோடி போட்டுட்டு சாமியாரிணியாத் திரி. இல்லை திரியாமல் போ. ஆனால், என் தங்கச்சிக்கு நியாயம் சொல்லிட்டு ஹாப்பியா அவனோடு மணையில உக்கார்ந்து தாலியை வாங்கு..”



“ஜீவா..”, அதிர்ந்து நின்றவளை வார்த்தைகளால் சாடத் தொடங்கினான் ஜீவாவோ.



“நீ எதுக்கு எனக்கு நியாயம் சொல்லணும் சொல்லு? உன்னைப் பார்த்தவுடன் காதலில் விழுந்த பைத்தியக்காரன் நாந்தானே? காதல்ல விழுந்தவன் சும்மா இருந்தேனா சொல்லு? அவனவன், பொண்ணுங்களை பூவா பாத்துக்கறேன், கண்ணுல வைச்சிக்கறேன்னு சொல்லிட்டு, கொஞ்சம் நாட்கள் அவ பின்னாடி சுத்தி ஜாலி பண்ணிட்டு, ஃபோட்டோ ஃபோட்டோவா எடுத்திட்டு, காரியம் ஆனதும் கழட்டி விட்டுட்டுப் போயிட்டே இருப்பான். ஆனா, நானு..”



“ஜீவா..” அதட்டினாள் பெண்ணவள்.



“ஆனா, நானு, கௌரவமா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டுட்டு உன் வீடு தேடி வந்து பெத்தவங்களோடு நின்னேன். உன் மனசுல நான் வருவதற்கு என்னவெல்லாம் பண்ணியிருப்பேன். சே. கடைசி வரை உனக்கு எங்க புரிஞ்சுது? என்னையும் புரியல, என் மனசையும் புரியல. உன் மனசுல நானும் இல்ல. போகட்டும். ஆனா, உண்மையைச் சொல்லு காவேரி, உன்னால தானே காவேரி, என் தங்கையை இங்க அழைச்சிட்டு வந்தேன்? நீ இங்க இருக்க, அவளை பார்த்துப்பேன்னு நம்பினேனே? அந்த நம்பிக்கைக்கு என்ன நியாயம் செய்யப் போற காவேரி?..”



‘எனக்கான பதிலை சொல், எனக்கென்ன நியாயம்?’ என்று நின்று கொண்டிருந்தவனுக்கு பதில் சொல்ல முடியாமல் குழம்பித் தவித்தாள் காவேரியோ.



“என்ன காவேரி? குழப்பமா இருக்கா? குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும். நீ கேள்விப்பட்டது இல்ல? ஆனா, நீ குழப்பமா இல்ல. நல்ல தெளிவாத் தான் இருக்க. ஆனா அந்தத் தெளிவுக்கான முடிவு தான் எடுக்க முடியாமல் இன்னும் இருக்க. உனக்கு உங்க குடும்பத்தைத் தாண்டி எந்த அடையாளமும் கிடையாதா? இல்லை அடையாளம் வேண்டாம்னு இருக்கியா?..”



வாதாடிக் கொண்டிருந்தான் ஜீவா.



“ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருப்பது தானே குடும்ப அமைப்பு? அப்போ அது தப்புன்னு சொல்ல வர்றீங்களா ஜீவா? அவங்க அவங்க இஷ்டத்துக்கு இருந்தா வாழ்க்கை எப்படி சீரா இருக்கும்? தடம் மாறின இரயில் தண்டவாளம் மாதிரி ஆகிடும். அந்த இரயில் கூட தடம் மாறித் தண்டவாளம் மாறினாலும் ஒரு கோட்டுல எங்கேயாவது இணையுது. எங்க குடும்பம் எங்க அடையாளம். நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கோம். அதைத் தப்புன்னு சொல்ல வர்ரீங்களா? அவங்க எடுத்த முடிவுக்கு நான் கட்டுபட்டுத்தான் ஆகணும்..”



“அப்பா பிள்ளைனாலும் வாயும் வயிறும் வேறு தான்..”, அவனோ வாதிட்டான்.



"நீ எதிர்பார்த்தது நடக்கல. உன் மனசாட்சியைக் கேட்டுப் பாரு. ஒருமுறை கூடவா நான் உன் மனசைத் தொடலை? எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு தெரியலையா? இல்லை என் அன்பை நான் சரியா வெளிப்படுத்தலையா? விடு இதுக்கு மேல பேசிப் பிரயோஜனமில்லை. கண்ணிருந்தும் குருடா இருப்பேன்னு சொல்லற நீயும் எனக்கு வேண்டாம். என் தங்கைக்கான நியாயம் கிடைத்தால் மட்டும் போதும். நாளைக்கு நான் மீண்டும் வருவேன், உன்னை மணமுடிக்க நினைத்த காதலனாக இல்லை, என் தங்கைக்கு அண்ணனாக வருவேன்..”



கனிவாக சொல்ல ஆரம்பித்தவன் கடுமையாய் முடித்தான்.



“உங்களையும் தானே விமர்சிக்கிறார்கள்?..”



“செய்யட்டும். அதைப்பற்றி நான் எதற்குக் கவலை பட வேண்டும்? தப்பு செஞ்சவன் தான் பயப்படுவான்.. நான் கண்ணாடி மாதிரி. என்னோடு நான் மட்டும் தான் அதிக நேரம் செலவிடுகிறேன். அப்படிப் பார்த்தால் என்னை விட யார் என்னை அதிகமாய் விமர்சிக்க முடியும். எனக்கு நான் தான் அதிபதி..”



“எல்லோருக்கும் எல்லாம் கிடைக்காதது. சர்வம் கிருஷ்ணாப்பணம். என்னைப் பொறுத்தவரை எந்த ஸ்ட்ரேட்டஜியும் இல்ல. சூழ்நிலையைப் பொறுத்து எல்லாமே அமைகிறது..”





“ஜீவா. எங்க மேல எந்தத் தப்புமில்ல.. நம்புங்க பிளீஸ்..”, என்று கைகளை நீட்டி மீண்டும் தொடங்கியவளை, கைகளை உயர்த்தி நிறுத்தினான்.



“போதும் இந்தப் பேச்சு. எனக்குச் சில இன்ஃபார்மேஷன் வேண்டியிருக்கு. நாளை சந்திப்போம். பை..”



அவளின் யாசிப்பைக் கண்டுகொள்ளாமல் வேகமாக நகர்ந்தவனை வெறித்துக் கொண்டிருந்தாள் காவேரியோ.





‘இல்ல நிறைய யோசிச்சாச்சு.. இனி எப்படி வேண்டுமானாலும் தன் வாழ்வு போகட்டும்’ ஒரு பெருமூச்சு விட்டவள் மனம் கணக்க அங்கிருந்து நகர்ந்தாள்.



வீட்டுக்கு வந்த ஜீவாவோ தன் முடிவைப் பெற்றவர்களிடம் சொன்னான். தனக்கு திருமணத்திற்காக வேறு பெண்ணைப் பார்க்கச் சொல்லி விட்டான்.




 
Top