கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வரவு நல்ல உறவு (முடிவு)

Rajasree Murali

Moderator
Staff member
அடுத்த வந்த மூன்று நாட்களும் வீடு அமர்க்களப்பட்டது. பாக்கியம் சொல்லிக்கொடுத்தபடி காயத்ரி பொறுமையுடனும் ஆசையுடனும் பார்த்து பார்த்து எல்லாம் செய்தாள். இரண்டாம் நாள் கருப்பு எள்ளுடன் வெல்லம் சேர்த்து சிம்லி உருண்டை நந்திதாவிற்கு கொடுத்தாள். மூன்றாம் நாள் உளுத்தம்பருப்பை வடைமாவு பதத்திற்கு அரைத்து சின்ன சின்ன குனுக்குகளாய் எண்ணெயில் பொறித்து கெட்டியான வெல்ல பாகில் ஊற வைத்து கொடுத்தாள்.

இதற்கு நடுவே காயத்ரியும் கிருத்திகாவும் கடைக்கு சென்று நல்ல மாம்பழ கலரில் பச்சை பார்டர் போட்ட பாவாடை, சட்டை, தாவணி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மாலை மற்றபடி மருதாணி எல்லாம் வாங்கி வந்தனர். நான்காம் நாள் காலை புட்டு செய்து நல்ல நேரம் பார்த்து நந்திதாவை உட்கார வைத்து நலங்கு இட்டு, ஜல்லடை வைத்து தலைக்கு தண்ணீர் விட்டு புது பாவாடை சட்டையை அணிவித்து மனையில் உட்கார வைத்து எளிமையாகவும் அமர்க்களம் இல்லாமலும் பங்ஷனை நடத்தி முடித்தார்கள்.

காயத்ரிக்கு உறவு என்று யாரும் கிடையாது. அப்பாவை சிறு வயதிலேயே இழந்தவள். அம்மாவும் இரண்டு வருடத்திற்கு முன் தவறிவிட, குழந்தை நந்திதா வருத்தப்படுவாள் என்பதால் வேறு யாரையும் அழைக்காமல் மாமியார், நாத்தனார், அவளுடைய கணவர், குழந்தைகள் அஷ்மிதாவும், அபினவும் மட்டுமே. எல்லாம் நல்லபடியாக முடிந்து பருப்பு, மோர்க்குழம்பு, வாழைக்காய் பொடிமாஸ், பீன்ஸ் பருப்புசிலி, புளிப்பு கூட்டு, ரசம், தயிர் வடை, அப்பளம், பால் பாயசம் என்று கிருத்திகாவும் காயத்ரியும் தடபுடலான மெனு செய்து அமர்களப்படுத்தினார்கள்.

இன்னும் குழந்தையாகவே நந்திதா அஷ்மிதாவுடன் விளையாடி கொண்டிருந்ததை பார்த்து காயத்ரி அவளை கூப்பிட்டு கொஞ்சம் நல்லது கெட்டது சொல்லிக்கொடுங்கம்மா என்றவளை பாக்கியம், அவ சின்ன குழந்தை. நாம எதையும் சொல்லி கொடுத்து பயமுறுத்த வேண்டாம். தானே தெரிஞ்சுப்பா. இந்த காலத்து குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள். கூடுமானவரை குழந்தைகளை அதட்டி மிரட்டாமல் பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிஞ்சுப்பா. அதற்கு இன்னும் கொஞ்ச நாளாகட்டும். குடும்பம், உறவுகள் முக்கியத்தைப்பத்தி நிறைய சொல்லிக்கொடு. அவளுடன் நட்பாக தோழி போல பழகு. முக்கியமாக அவள் வளர வளர தனக்கு என்ன பிரச்சினை என்றாலும் பயம், தயக்கம் இல்லாம உன்னிடம் வந்து சொல்லுமளவுக்கு நீதான் அவளுக்கு நம்பிக்கை கொடுக்கனும். கேட்டுக்கொண்டிருந்த காயத்ரிக்கு கண்களில் திடீரென கண்ணீர் வழிய மன்னிச்சுக்கோங்கம்மா, அன்னிக்கு நான் அப்படி நடந்துன்டு இருக்கக்கூடாது என்றாள். உடனே பாக்கியம், சீ அசடு கண்ணை துடை ச்சின்டு எழுந்து போய் காபி போடும் வேலையை பாரு. கிருத்திகா எங்கிட்ட இப்படி நடந்துண்டா நான் கோவிச்சுப்பேனா. எனக்கு நீ வேற அவ வேற இல்லை புரிஞ்சுதா. உள்ளே வந்த காயத்ரியின் கண்களில் தினசரி காலண்டரில் இருக்கும் வாசகத்தை பார்த்தாள் "வயதானவர்கள் வீட்டில் இருப்பது ஒரு நூலகத்திற்கு சமம்" என்று இருந்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள். அவர்களின் அனுபவங்களை கேட்டு அதன்படி நடந்தாலே போதும். வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

(முற்றும்)
 
Top