கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவாள்

நெற்பயிர்க்கு இணையாய் பசுமை நிறைந்த அழகில் ஜொலிக்கும் இளம் மஞ்சக் கன்றுகளும் அதற்கு அருகிலேயே மஞ்சள் நிற பூக்களை அழகாய் உடுத்தி தானும் இருக்கிறேன் என்பதைப் போல் செழித்து நிற்கும் நிலக்கடலைப் பயிரும், அதற்கு இடையில் நானும் ஊடுபயிராய் வளர்ந்திருகிறேன் என நிமிர்ந்து நிற்கும் நீருள்ளியுமே (வெங்காயமுமே) கூறியது அவ்வூரின் செழுப்பை...

அழகு எப்போதும் ஆபத்து எனும் பழமொழிக்கு ஏற்ப இயற்கை அழகுடன் இருக்கும் அவ்வூரின் பெயர் பிரம்மதேசம்....பெயருக்கு ஏற்ப பல மர்மங்களை தன்னுள் புதைத்திருக்கும் அவ்வூரின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது என்பதைப் போல் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தப்படி வந்தவன்

"வர்ஷா.. இம்முட்டு அழகா இருக்கு ஊரு...என்னத்துக்கு இவ்வளவு வேகமா போற.. கொஞ்சம் நிதானமா போ..." எனக் கூறிய தன் நண்பனிடம்

"ஸ்பீடா போற மாதிரியா இருக்கு மச்சான்.. நான் நார்மலா தானே போறேன்.." எனக் கூறியவனின் குரலில் நடுக்கம் இருந்தது

"என்னடா ஆச்சு ஏன் இப்படி பேசற..." என வர்ஷாவின் தோளை அழுந்தப் பற்ற

"அது ஒன்னுமில்லை மச்சி... உன்னை வேற வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். என் தங்கச்சி கத்திக் கித்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவளோன்னு கொஞ்சம் பதட்டமா இருக்கு..." என்றவனிடம்

"மச்சி மச்சி... அந்த இடத்தைப் பாரு ரொம்ப அழகா இருக்கு..ஒரு நிமிஷம் இரு..." என கூறும் முன்பே அந்த இடத்தை கடந்திருந்தான்.

"ஏண்டா எருமை இவ்வளவு வேகமா போற.. சரி நாளைக்கு இதே இடத்துக்கு வந்து ஒரு செல்பி எடுக்கணும்..." எனக் கூறியவனிடம்

"ஹான் சரிடா..." என்ற வர்ஷாவின் குரலில் தற்போது முன்பிருந்த பதட்டம் இல்லை, என்பதையும் அவன் நண்பன் உணர்ந்தே இருந்தான்.

"ஆமா உன் தங்கச்சி ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டாங்கன்னு சொன்ன, இப்ப ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்கன்னு சொல்ற..." என சந்தேகமாகக் கேட்டத் தன் நண்பனிடம்

"நான் அப்படியா சொன்னேன்.. உன்னைப் பாத்தா தான் ஆர்ப்பாட்டம் பண்ணுவான்னு சொன்னேன்..." எனக் கூற

"ஓஹ்.. சரிடா... அவங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லு.. எனக்கு ட்ரேட்மெண்ட் கொடுக்க ஈஸியா இருக்கும்..." எனக் கேட்டவனிடம்

"அதான் போன்லையே சொன்னனே சுரேஷ்... கல்யாணமான மூணு மாசத்துல என் மச்சான் இல்ல, சரி இரண்டாவது கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கும் போது இரண்டு மாசக் குழந்தையை வயித்துல சுமந்துட்டு நின்னா.. சரி அதை அழிச்சுட்டு உன் வாழ்க்கையை பாருன்னு சொன்னா, அதை அழிக்க மாட்டேன்னு சொல்லிட்டா.. அதுக்கு அப்பறம் குழந்தை பிறந்தா,நல்லா இருந்த குழந்தை தான்.. ஐஞ்சு வயசு வரைக்கும் நல்லா ஓடியாடி விளையாடிட்டு இருந்த குழந்தை தீடீர்னு ஒருநாள் கிணத்துல செத்துக் கிடைந்துச்சு... அப்ப இருந்து என் தங்கச்சி இப்படி பித்து பிடிச்சவ மாதிரி ஆயிட்டா டா..." எனக் கூறியவனின் குரல் கரகரத்தது.

"ஹ்ம்ம்.. சரி மச்சி.. இது ஒன்னும் பெரிய வியாதி இல்லை, சரி பண்ணிடலாம்..." என சுரேஷ் ஆறுதலாகக் கூற

"அட ஏண்டா, எனக்கு அந்த நம்பிக்கையே இல்லை..ஏதோ வீட்டு பெரியவங்க ஆசைப் படறாங்கன்னு தான் வெளிநாட்டுல இருந்த உன்னை இங்க பிடிச்சுக் கூட்டிட்டு வந்தேன்... " என வர்ஷா சலிப்பாகக் கூற

"பிடிச்சுட்டு வந்தீயா.. அடப்பாவி..." என வாய்விட்டே புலம்பியவனை பார்த்து சிரித்த வர்ஷாவோ

"போக போக உனக்கே தெரியும் சுரேசு..." என கூறியவன் சாலையில் கவனத்தை செலுத்தினான்...

******

ஊருக்குள் நுழைந்ததும் அனைவரும் கூடிக் கூடி பேசிக்கொள்ள அனைவரையும் பொதுவாகப் பார்த்தவன்

"என்ன இவனுங்க,வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல வர லாஸ்ட் ஸீனை லைவ்வா காட்டறானுங்க..." என முனகியபடியே வந்தவன் வண்டி நின்றதும்

"என்னாச்சு மச்சி..." என வர்ஷாவிடம் கேட்க

"மச்சி வீடு வந்துருச்சு..." எனக் கூறியவன் சட்டென இறங்கி வேறெங்கும் கவனிக்காது உள்ளே நுழைய

"இப்ப நான் உள்ள போகனுமா வேண்டாமா..." யோசித்த சுரேஸோ வெளியே நின்றான்...

"ஷ்...ஷ்...தம்பி..தம்பி.." என மெல்லிய குரல் கேட்க

"எவன் அவன் பீகரை கூப்பிடற மாதிரி கூப்பிடறது..."என முனகியவன் குரல் வந்த திசையைப் பார்த்தான்.. வெற்று மேனியில் வெள்ளை நிற அழுக்கு துண்டைப் போட்டப்படி ஒரு பெரியவர் நின்றார்..

"என்னங்க தாத்தா..." எனப் பணிவாகக் கேட்டவனின் அருகில் வந்தவர் சுற்றி முற்றிப் பார்த்தபடி

"நீங்க பைத்தியக்கார டாக்டர் தானே தம்பி..." எனக் கேட்டவரை மேலிருந்து கீழாக பார்த்தவன்

"ஹிம்ம்.." என ஹிம்ம் இல் அழுத்தத்தை கூட்டித் தலையாட்ட

"தம்பி உன் நல்லதுக்கு தான் சொல்ற இங்கிருந்துப் போயிடு...இல்லைன்னா உன்னையும் காவு வாங்கிடும் அந்த குட்டி சாத்தான்..." என மெல்லக் கூறவும், அந்த பெரிய வீட்டின் நாய் ஊளையிடவும் சரியாக இருந்தது

"தம்பி இங்கிருந்து போயிடு தம்பி.. இந்த இரண்டு வருஷத்துல எத்தனையோ உயிரை அந்த குட்டி சாத்தான் குடிச்சு இருக்கு.. நீயும் அதுல ஒருத்தன் ஆயிடாத...உன்னோட நல்லதுக்கு தான் சொல்ற" எனக் கூறிய பெரியவர் அங்கிருந்து நில்லாது ஓட,நாய் ஊளையிடும் சத்தம் அடங்கியது.. ஊளையிடும் நாயைப் பார்த்து நன்றியுடன் சிரித்தது ஒரு ஜீவன்..

"என்னங்கடா, எல்லா பேய் படத்துல வர ஸீனையும் என்கிட்ட பிரீ ஷோவா காட்டிட்டுப் போறீங்க...' என சத்தமாக பேசியவனின் பின்னாலிருந்து ஒரு கரம் அவனைத் தொடப் பக்கென்றானது சுரேஸிற்கு.... தன் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடுப் பட்டவன் பின்னால் திரும்ப அங்கு தன் நண்பனே நின்றுருந்தான்...

"காட்டேரி...என்னைக் கூப்பிட்டுட்டே வர வேண்டியது தானே, இப்படி வந்து பேய் மாதிரி நிக்கற..." என திட்ட

"நான் கூப்பிட்டேன் டா, நீ தான் என்னவோ யோசனையில இருந்த அதான் கிட்டக்க வந்தேன்..." எனக் கூறிய நண்பனிடம்

"நல்லா கிட்டக்க வந்த டா நீ..." என முனகியவன் தன் கைப் பையை தோளில் மாட்டியப்படி அந்த வீட்டை பார்த்தான்...

"இவ்வளவு சொத்துக்கும் ஒரே ஆண் வாரிசு நீ மட்டும் தானே மச்சான்.. எங்கயோ மச்சம் இருக்குடா உனக்கு..." எனக் கூறியவனைப் பார்த்து சிரித்தவன்

"என்ன பணம் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு.. காசு இருக்கற அளவுக்கு சந்தோசம் இல்லையே...' எனக் கூறியவனிடம்

"அதான் நான் வந்துட்டேன்ல மச்சி.. இனி பாத்துக்கலாம்... சந்தோசம் எப்படி வராம இருக்கும்னு நானும் பாக்குற..." எனக் கூறிய நண்பனை தழுவிக் கொண்டான் அவன்...

இவர்களை ஏளன புன்னைகையோட ஓர் உருவமும் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தது...

***********
காற்றில் தன் இறக்கையை விசியபடி செல்லும் புல்லினங்களும், அதே காற்றை மாசுபடுத்தியப்படி செல்லும் ஆறு அறிவுள்ள மனிதர்களும் தங்களின் இருப்பிடத்தை நோக்கி செல்லும் அந்தி சாயும் நேரமிது.. அதே சமயம் மாநகரங்களில் பள்ளி முடித்து வீட்டிற்குள் அடைப்பட்டு கிடக்கும் குழந்தைகளை போல கிராமத்தில் உள்ள குழந்தைகள் இருப்பதில்லை என்பதே உண்மை... பள்ளி முடிந்தும், முடியாது சீருடை கூட மாற்றாமல் விளையாடும் குழந்தைகள் இங்கு ஏராளம்.. அதில் பத்து வயது சிறுமி தான் பௌர்ணமி... பெயருக்கு ஏற்றார் போல் அழகிய முகமும், மெல்லிய சிரிப்பும் என்றும் இதழில் தவழவிடும் சின்னசிறு குட்டி தேவதை...

சிரிப்போடு விளையாடி கொண்டிருப்பவளை சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்தவனின் கண்கள் எதையோ நினைத்து நின்றது என்னவோ சில நிமிடங்கள் தான்.. பின் வக்கிர சிரிப்போடு குழந்தையிடம் சென்றவன்

"பௌர்ணமி.. உங்கம்மா உன்னை கூப்பிட்டு இருக்கு, உனக்கு காது கேட்கலயா..." என அவன் சொல்ல

"எங்க மாமா...எனக்கு கேட்கலையே.."அதே சிரிப்போடு பௌர்ணமி கேட்க

"இதோ அங்க தான், வாயேன் நானே கூட்டிட்டு போறேன்..."

"இல்லை மாமா... நானே போயிடுவேன்..." என்றவள் முன்னால் நடந்தாள். அவளின் பின்னால் மெல்ல நடந்தவனை யாரோ அழைக்க சட்டென்று நின்றான்...

"மாமா..." என்ற குரலில் சுற்றி முற்றி பார்த்தவனின் கண்களில் எவரும் தென்படவில்லை

"என்னை உங்களுக்கு தெரியலையா மாமா.. நான் தான்..." என்ற குழந்தையின் குரலில் இதுவரை இருந்த மயக்கம் தெளிந்து தலையை சிலுப்பி கொண்டவன் மீண்டும் கண்களை சுழல விட எவரும் இல்லையென முடிவெடுத்தவனாய் மீண்டும் பௌர்ணமி சென்ற இடத்தை நோக்கி நடந்தான்..

யாருமில்லா சந்து என்பதால் குழந்தையை வளைத்து பிடித்து விடலாம் என எண்ணியவன் அங்கு செல்ல மீண்டும்

"மாமா..." என்ற குழந்தையின் குரலில் நின்றவன் மெல்ல திரும்பி பார்க்க, இதுவரை அமைதியாக இருந்த வாயு பகவானும் தற்போது பலமாக வீச பயந்தே போனான்.. யாருமில்லா சந்தில் தற்போது இருள் சூழ்ந்து கொள்ள தொண்டை வறண்டு எச்சிலை விழுங்கியப்படி

"யாரு.. யாரு..." எனக் கேட்கவும் அவனின் சட்டையை சிறுக் கை பின்னாலிருந்து இழுக்கவும் சரியாக இருந்தது.

வருவாள்....

 
Top