கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -22

Akila vaikundam

Moderator
Staff member
22.



அதே நேரம் ராஜா நேராக ராகா பிறந்த மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.



ராஜா ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட அருகில் பூபதி அமர்ந்து இருந்தான்.



அயர்வாக பின் இருக்கையில் சாய்ந்திருந்தவளிடம் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.



எல்லாமே அவளைப் பற்றிய சுயவிபரங்கள்...ராகாவிற்கு பதில் சொல்ல மிகவும் சலிப்பாகவும் சோர்வாகவும் இருந்தது... அவளுக்கு தெரிந்தவற்றை எல்லாம் பொறுமையாகக் கூறிக்கொண்டே வந்தாள்.



அவளைப் பொறுத்த வரைக்கும் அவளது வாழ்வில் எந்த ஒரு சுவாரசியமும் கிடையாது தந்தை ஒரு மருத்துவர் தாய் ஒரு விபத்தில் இவளை பெற்றுக் கொடுத்து விட்டு இறந்து விட்டார் .



இந்தியாவில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவள் அவ்வளவு தான் அவளுக்கு அவளைப்பற்றி தெரிந்தது…




தமிழ்நாட்டிற்கு வந்த பிறகுதான் தமிழ்நாடு இவ்வளவு பெரியது என்றும் அதில் இத்தனை மக்கள் வசிக்கிறார்கள் என்பது அவளுக்கு தெரியும் மத்தபடி அவளிடத்தில் கூறும்படி எதுவுமே கிடையாது.



இவளைப் பற்றி இனி நம்மால் வேறு எதுவும் தெரிந்துகொள்ள முடியாது என்று தெரிந்த ராஜா பேச்சை வேறு திசைக்கு மாற்றினார்….



உனக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியுமா…




நல்லா பேசுவேன் அங்கிள் ஆனா எழுதப்படிக்க தெரியாது...மம்மி கொஞ்ச நாள் சொல்லி குடுத்தாங்க... மறந்துட்டேன்…



என்னம்மா நீ தமிழ் பொண்ணா இருந்துகிட்டு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சொல்லுறியே எந்த நாட்டுல இருந்தாலும் நம்ம மொழியை விட்டு கொடுக்கலாமா...



நான் எப்போ அங்கிள் விட்டுக்கொடுத்தேன் எனக்கு எழுத படிக்க வராதுன்னு சொன்னேன்…என்று மறுப்பு தெரிவித்தாள்.




உன் அம்மா கொஞ்சநாள் சொல்லிக் கொடுத்தாங்க ஆனா மறந்துட்டேன்னு நீ தான சொன்ன அப்போ அது விட்டுக்கொடுத்ததுக்கு சமம் தானே…

என்று மடக்கினார்...பூபதி திரும்பி ராகாவை பார்க்க...



பாரு உன் அங்கிள் என்னை என்ன சொல்லறாருன்னு என்பது போல அவனை பார்த்தாள்.



உடனே அவன் மாமா என்னாச்சு உங்களுக்கு இன்னைக்கு‌... எல்லாமே ரொம்ப வித்தியாசமா பண்றீங்க ஹாஸ்பிடலுக்கு வரமாட்டேன்னு சொன்னவளை இழுத்துட்டு வந்ததோட இல்லாம ராகாவை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க பாவம் விடுங்களேன் என்று கெஞ்சுவது போல கூறினான்.



அதுக்கில்லடா மருமகனே... தமிழ் எழுதப்படிக்க கத்துக்கிட்டு அத மறந்துட்டேன்னு சொல்றா இல்ல அது தப்பில்லையா... அதை புரியவைத்தேன் அவ்வளவு தான்... சரி ஒன்னும் வேணாம் இப்போ நாம போறோம்ல்ல அந்த ஹாஸ்பிடல்லோட பெயரை படிச்சு சொல்ல சொல்லு நான் ஒத்துக்குறேன் அவளுக்கு மொழிப்பற்று இருக்கணும் என்றார்.



ஒகே அங்கிள் டன்..

என்று கட்டைவிரலை தூக்கி காண்பித்தாள்...பூபதி இருவரையும் ஆர்வமாக பார்த்தான்...



மருத்துவமனையில் வாசல் வரவும் அதன் பெயர் பலகை கொட்டை எழுத்தில் முன்புறமாக தமிழில் எழுதப்பட்டிருந்தது.




வந்திருச்சி பாரு படிச்சு சொல்லு என்று ராஜா கூறியபடி வாகனத்தை போர்ட் தெரிவது போன்ற இடத்தில் பார்க் செய்தார் ...தயக்கமாக பூபதியை பார்த்தவள் எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தாள்.




க...யா….ட்த்…. என படிக்க சிரமப்படவும்...பூபதி உதவினான்... காயத்ரி சீனிவாசன் அறக்கட்டளை..என்று வாயசைத்து காட்டவும்...ராகாவும் அதை புரிந்து கொண்டு பெயரை வாய்விட்டு கூறினாள்...


சிரித்த ராஜாவும் ஆமாம் சரிதான் காயத்ரி சீனிவாசன் அறக்கட்டளை தான்...என்றவர் கொசுறாக இங்க தான் நானும் பிறந்தேன்னு அம்மா சொல்லுவாங்க...என்று கூறினார்...



ஓஓஓ...என்று கேட்டுக்கொண்டவள் மீண்டும் அந்தபெயரை ஒவ்வொரு எழுத்தாக கூறியவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...பூபதி பாரு என்ன ஓரு கோ இன்சிடென்ட்னு...என் பாட்டி தாத்தா பேரு கூட இதான்...என்றாள்.



ஆச்சரியமாக ராகாவை பார்த்த ராஜா...ஆனா காயத்ரி சீனிவாசன் ரெண்டு பேருமே டாக்டர்ஸ்...நிறையா சேவைகள் செஞ்சிருக்காங்க...இவரோட பையன் வெளிநாடு போகும் போது அவங்க நினைவா ஹாஸ்பிடலை அறக்கட்டளையா ஆக்கிட்டாங்க... என்றார்.



இதுவும் கோ இன்சிடென்ட் தான் அங்கிள்...என்னோட பாட்டி தாத்தாவும் கூட டாக்டர்ஸ் தான்….



அப்போ அடுத்து உன்னோட அப்பாவும் டாக்டர் தான்... பேரு ராம்பிரசாத் அம்மா பேரு காவ்யானு சொல்லிடாத மா என்று கேலியாகப் பேசினார்.



அய்யோ அங்கிள் என்னோட அப்பாவும் டாக்டர் தான்... பேரும் அதேதான்...என்று கூறவும்... சந்தோஷமடைந்த ராஜா... ராம்பிரசாத்னா... நல்ல கலரா,கூர்நாசியோட... என்று அடையாளங்களை சொல்ல... சொல்ல...ராகாவும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள்…கடைசியாக அவரோட மனைவி கூட என்று இழுக்க…



யெஸ் அங்கிள்...மம்மி தவறிட்டாங்க என கூறிமுடித்தாள்.



டேய் பூபதி இந்த பொண்ணு நம்ம ஊர்க்காரர் பொண்ணு டா அதுவும் நம்ம குடும்பத்துக்கு வேண்டபட்டவங்க வீட்டு பொண்ணுடா என்று சந்தோஷம் கொண்டார்.



அதைவிட ராகா அதிக அளவில் சந்தோஷம் கொண்டாள்... அவளின் பிறந்த ஊர் தெரிந்து விட்டது...அதுவும் அவளின் குடும்பத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க போகிறாள்…



பூபதி இப்பவே இந்த விஷயத்தை நான் என் மம்மி கிட்ட சொல்லனும்...அவங்க கேட்டா ரொம்ப சந்தோஷப்படுங்காங்க...போனை குடேன்...பேசலாம் என ஃமொபைலை வாங்கினாள்.



பதட்டமான ராஜா...ராகாவிடம் இப்போ உடனே இதை சொல்லனும்னு என்ன அவசியம்... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…



ஏன் அங்கிள்...தடுக்கறீங்க...எத்தனை நாள் நான் ஏங்கிருக்கேன்னு தெரியுமா... நான் பிறந்த ஊர் எது..

என் பூர்வீகம் எதுன்னு தெரிஞ்சுக்க... இன்னைக்கு எல்லாமே தெரிஞ்சாச்சி...அதும் இங்க எங்களுக்கு சொத்து கூட இருக்கு... இந்த சந்தோஷத்தை நான் சொல்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தது...



எனக்கென்ன பிரச்சனை...இங்க ஒன்பதுமணின்னா...அங்க ஈயர்லி மார்னிங்...நல்லா அசந்து தூங்குவாங்க...ஏன் அவங்களை டிஸ்டர்ப் பண்ணனும்னு சொன்னேன்…



ஷ்ஷ்...ஆமால்ல...சாரி அங்கிள்...இது தெரியாம உங்கமேல கோபபட்டுட்டேன்...என்றவள் காரை விட்டு இறங்கி மருத்துவமனையின் முகப்பு நன்றாக தெரியும்படி ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.



அதன் பிறகு மூவருமே உள்ளே சென்றனர்... இவனைப் பரிசோதிப்பதற்காக கட்டணத்தை செலுத்திவிட்டு காத்திருக்க அங்கு இருப்பவர்களிடம் மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.



அவளுக்கு ஒரு சந்தேகம் இங்கே இவ்வளவு பெரிய மருத்துவமனை இருக்கும் விஷயத்தை ஏன் தந்தை இதுவரை தன்னிடம் கூறவில்லை... அறக்கட்டளை நடத்துவது என்றால் சாதாரண காரியம் கிடையாது…



கண்டிப்பாக இங்கே வாங்கும் குறைந்த கட்டணத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுத்து முடியாது... இதற்கு பின்புறம் இருந்து யாரேனும் உதவி வேண்டுமே யார் உதவுவார்கள் என்று தெரிந்து கொள்ள மெதுவாக அவளை பரிசோதிக்கும் இடத்தில் எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தாள்.பலனில்லை..




கடைசியாக இந்த அறக்கட்டளைக்கு நானும் உதவ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு செவிலியரிடம் விசாரித்தார்... அவர் நேராக மருத்துவமனையின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல...அங்கிருப்பவர் இந்த மருத்துவமனைக்கு சொந்தக்காரரிடம் இருந்து மாதமாதம் பணம் வருகிறது வேறு யாரிடம் இருந்தும நாங்கள் எதையும் வாங்குவதில்லை என்று திருப்பு அனுப்பு வைத்தார்.



ராகாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தை வாங்கும் சம்பளத்தை இங்கே சேவை மனப்பான்மையுடன் செலவு செய்து கொண்டிருக்கிறார்... ஆனால் அதைப்பற்றி இதுவரை வாய் திறந்தது இல்லை... அத்தோடு இவளை இந்தியா பக்கம் கூட வரக்கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார் எந்த வகையில் நியாயம்... இவர் மட்டும் சேவை செய்யலாம்..





ஆனால் மகள் நான் அதை தெரிந்து கொள்ளக்கூடாது... என் வாழ்க்கையில் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது இங்கிருந்து லண்டன் செல்வதற்குள் அதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று நினைத்தவள் அவளிடம் பேசியவருடைய ஃமொபைல் எண்ணை வாங்கியபடி அங்கிருந்து வந்தாள்.



அதற்குள் சில சோதனைகளுக்கான முடிவுகளை கொடுக்கப்பட பூபதி அவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்தான்.



கடைசியாக ராகாவை அழைத்துச் சென்று அவளிடம் ரத்த மாதிரிகளையும் உமிழ் நீரையும் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தனர் .




அவள் வெளியே வரவும் பின்னாலே அந்த அறைக்குள் ராஜா செல்லவும் யோசனையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வர பூபதி இருவரையுமே ஆச்சரியமாக பார்த்தான்.



ராகாவிற்கு உடல்நிலை சரியில்லை அதனால் அவள் எல்லாவிதமான சோதனைகளையும் மேற்கொண்டாள்... ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஏன் மாமாவும் அவரின் ரத்தம் மாதிரியை கொடுத்துவிட்டு வருகிறார் என நினைத்தவன் மனதில் வைத்துக் கொள்ளாமல் கேட்டும் விட்டான்.



அவரும் சமாளிக்கும் விதமாக நான் ப்ளட் டோனேட் பண்ணுவேன் இங்கே ஏதாவது தேவைப்பட்டா கொடுக்கலாம்னு சாம்பிள் கொடுத்துட்டு வந்தேன் என்றார்.



அதுக்கு ப்ளட் குரூப் தெரிஞ்சா போதுமே ...எதுக்கு ப்ளட் சாம்பிள் கொடுக்கணும்…என்று கேட்க‌ பதில் சொல்லத் தெரியாமல் ராஜா முழித்தார்.




அவருக்கு ராகாவைப் பார்த்ததுமே தன்னுடைய மகளாக இருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது... அதனால்தான் டிஎன்எ என்னும் மரபணுப் பரிசோதனை செய்வதற்காக முதல்நாளே இங்கு அப்பாயின்மென்ட் வாங்கி விட்டார்.



இருந்தாலும் ராகாவைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளவும் நினைத்தார் ...எங்கு பிறந்து இருப்பாள் ...அவளுடைய பெற்றோர்கள் யாராக இருப்பார்கள் என அவள் வாயாலே விடைகளை வாங்கிவிட்டார் …


அவருக்கு நன்றாக தெரியும் ராம்பிரசாத்தின் மனைவியும் குழந்தையும் இறந்த விஷயம் அப்படி இருக்கும் பொழுது ராகா எப்படி அவருடைய மகளாக இருக்க முடியும் ...அதுவும் அவளின் பிறந்த தேதியை பார்த்ததுமே சந்தேகம் உறுதியாயிற்று…




ராதாவின் வாழ்க்கையில் ஏதோ ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டார்... ஒருவேளை ராகா ராம்பிரசாத்தின் மகளாக இருந்து இவர் ஏதாவது தவறாக கூறி விட்டால் தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் உறவில் பிளவு ஏற்பட்டு விடும் அப்படி நடக்கக்கூடாது …



அதேசமயம் ராகா தன்னுடைய மகளாக இருந்தால் அதற்கு சரியான ஆதாரங்களைத் திரட்டிய பின்தான் ராம்பிரசாத்திடம் உரிமையாக சண்டையிட முடியும் இல்லை என்றால் கண்டிப்பாக அவர் மகளை கொடுக்க மாட்டார்…



பூபதி என்ன இது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம... அவர் பர்சனலா ஏதாவது ட்ரீட்மென்ட்க்காக ப்ளட் சாம்பிள் கொடுத்திருக்கலாம் அதை எல்லாம் கேட்டு ஏன் அவரை தர்மசங்கட படுத்துற என்று அவனை அடக்கினாள்.



பிறகு மடக்கிய கைகளை நீட்டியபடி... படியில உருண்டதுக்காக ப்ளட் சாம்பிள் வாங்கின முதல் ஹாஸ்பிடல் இதுவா தான் இருக்கும்.. ஆனால் எதுக்காக என்னோட உமிழ் நீரையும் வாங்கினாங்கன்னு தான் எனக்கு புரியவே இல்லை என்று பேச்சு வாக்கில் கூறியபடி காரில் ஏறினாள்.



என்ன உமிழ்நீர் கலெக்ட் பண்ணினாங்களா... எதுக்கா இருக்கும் என அவனும் யோசிக்க இடை புகுந்த ராஜா... நாய் பிராண்டி இருக்கில்லையா ப்ளட்ல ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆகி இருக்குமான்னு பாத்துப்பாங்க... அப்புறம் வாயில எல்லாம் புண்ணு இருக்கில்ல அங்கேயும் ஏதாவத் இன்ஃபெக்ஷன் இருக்கானு கூட பார்த்திருக்கலாம் என்று பேச…



சிரித்த ராகா டாக்டர் பொண்ணுகிட்டயே மெடிக்கல் லைன் பற்றி கிளாஸ் எடுக்குறீங்களா அங்கிள் எல்லாம் காசு புடுங்குற டிரிக்ஸ் தான் அதை விட்டுத்தள்ளுங்கள் இப்போ மதியம் தாண்டிடுச்சி... பசிக்குது ...இப்போ வீட்டுக்கு போலாமா இல்ல வெளியே சாப்பிடலாமா என்று இரு ஆண்களையும் பொதுவாக பார்த்து கேட்டாள்…




உடனே ராஜா... ரிப்போர்ட் இன்னும் மூன்று மணி நேரத்தில கொடுத்திடுவேன்னு சொல்லி இருக்காங்க எதுக்கு வீட்டுக்கு போயிட்டு மறுபடியும் வரணும் அதனால பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல சாப்பிடலாம்...அப்படியே ராகாவை எங்காவது கூட்டிட்டு போயிட்டு வரும் போது ரிப்போர்ட் வாங்கிட்டு வீட்டுக்கு போகலாமே என்று பூபதியிடம் அனுமதி கேட்டார்.



அவனுக்கும் அது சரி என்று தான் பட்டது சரி எங்க போகலாம்னு சொல்லுங்க என்று கூறவும்..

பக்கத்துல தென்காசிக்கு கூட்டிட்டு போகலாம்... குற்றாலம்... மணிமுத்தாறு பாக்கட்டும்... மழை இந்த வருஷம் அதிகம் அதனால எல்லா பக்கமும் தண்ணி நிறைய போகுது ராகாவிற்கு புதுவித எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்...என்றார்.



சரி என்றவர்கள் திருநெல்வேலியில் இருந்த ஒரு உயர்தர உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு நேராக குற்றாலத்தை நோக்கி வாகனத்தை இயக்கினார்கள். இப்பொழுது பூபதி வாகனத்தை இயக்க ராஜா ராகாவின் அருகில் அமர்ந்துகொண்டார்.



முதல் ஒரு மணி நேரம் வாகனத்தில் பாடலை ஓட விட்டு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த ராகாவிற்கு இப்பொழுது போரடிக்க தொடங்கிவிட்டது .



இடையில் ஓரு முறை பிரியாவிடம் பேசிவிட்டாள்...மருத்துவமனை பற்றி கூறவில்லை…ராஜாதான் தடுத்தது..



தந்தை உன்னிடத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி மறைக்கிறார் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கும் அதை நீ தெரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ள வேண்டாம்...நேரம் வரும் பொழுது அவரே உன்னிடம் கூறுவார் அப்பொழுது தெரிந்தது போல காட்டிக்கொள்... மற்றவர்களிடம் சொல்... எனக் கூறவும் அதிலிருந்து உண்மையை உணர்தவள் தலையாட்டிக் கொண்டாள்.



பூபதி ...இன்னும் எவ்ளோ நேரம் டிராவல்…என்று குரலில் சோர்வை காட்டினாள்.



கொஞ்ச தூரம் தான் ராகா…நீ வேணா கொஞ்ச நேரம் தூங்கு….



பூபதி இங்க வந்ததிலிருந்து தூங்க தான்ன் செய்யறேன் என்றவள் சைடாக ராஜாவைப் பார்த்து அங்கிள் உங்களோடது லவ் மேரேஜ்னு பூபதி சொன்னான்...

உங்க லவ் ஸ்டோரி பத்தி சொல்லுங்களேன் கேக்கறேன்…




ராகா என்ன இது விளையாட்டுத்தனம் அவர் என்ன அத்தையோட ஓகோன்னா வாழறாரு.... பாவம் மாமா ஃபீல் பண்ணுவாருன்னு தெரியாது... முதல்ல அவர்ட்ட சாரி கேளு..என்றவன்... திரும்பி ராஜாவைப் பார்த்து மாமா அவ சார்பாக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் அவ ஏதோ விளையாட்டா கேட்டுட்டா…



சாரி அங்கிள்…




இல்ல ராகா நீ கேட்டதுல தப்பில்லை... யார் தெரிஞ்சிக்கறாங்களோ இல்லையோ என்னோட லைஃப் பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் ..



நீ கேக்கலனா கூட நானே உன்கிட்ட சொல்லி இருப்பேன்... சொல்றேன் கேளு...என்றவர் கண்களை மூடியபடி கூறத்தொடங்கினார்.




.
 
Last edited:
Top