கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -24

Akila vaikundam

Moderator
Staff member
24.


வீட்டில்...கதவிற்கு வெளியே நின்று அனைத்தையும் கேட்டு கலங்கி நின்ற காமாட்சியிடம்..
இப்போ என்ன நடந்துபோச்சின்னு
இப்படி ஓப்பாரி வைக்கற என்ற படி எரிந்து விழுந்தார் சிதம்பரம்…இன்னும் என்னங்க நடக்கணும்... அதான் எல்லாத்தையும் நடத்தி முடிச்சிட்டீங்களே…
படிச்சிட்டு இருந்த என்னை விடாம தொல்லை பண்ணி எல்லார் முன்னாடியும் ஏதோ நீங்க இல்லாம என்னால வாழவேமுடியாதுங்கற மாதிரி ஒரு பிரம்மையை ஏற்படுத்தி...எனக்கு வாய்ப்பே குடுக்காம கட்டாய கல்யாணம் செஞ்சிகிட்டீங்க..சரி நாம ஆசைபட்டது போல நமக்கு வாழ்க்கை துணை கிடைக்கலனா என்ன …!கிடைச்ச துணையை நமக்கானவரா ஏத்துக்கலாம்னு இத்தனை வருஷம் உங்களோட வாழ்ந்துட்டு தானே இருக்கேன்…பத்தாதுன்னு இப்போ என் பையனோட வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்கறீங்களே இது எந்த வகையில் நியாயம்... அந்தப்பொண்ணு என் அண்ணன் ஜாடையில இருக்குதுங்கற ஒரே காரணத்துக்காக அந்த பொண்ணு பின்னாடி உளவு பார்க்க ஆள் அனுப்பறது சரியா சொல்லுங்க…ஒருவேளை அது என் அண்ணன் சொல்ற மாதிரி அவர் பொண்ணாவே இருந்தாக்கூட இதுக்கு நீங்க சந்தோஷம் தானே படனும்... தீ விபத்தில அண்ணியையும் குழந்தையும் இழந்து என் அண்ணன் எவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு...
எல்லாம் தெரிந்தும் கூட யாரோ மாதிரி நடந்துக்கறீங்க…


என்னைக் கல்யாணம் செஞ்சதுக்கு அப்புறம் உங்களோட சுய கௌரவமும் மரியாதையும் கெட்டுப் போறது மாதிரி என்னைக்கு நான் நடந்திருக்கேன்.சித்தி சொல்ற மாதிரி எல்லாத்துக்கும் நீங்க என்கிட்டயா வந்து நிக்கறீங்க…? நீங்க என்ன முடிவு எடுக்கிறீங்களோ அதுக்கு தானே கட்டுப்பட்டுகிட்டு இருக்கேன்…இப்போ என்னவோ எல்லா அதிகாரமும் என் கையில் இருக்கிற மாதிரியும் நீங்க என்கிட்ட அடிமையா இருக்கிற மாதிரியும் பேசிகிட்டு இருக்கீங்க எப்படி உங்களால இப்படி எல்லாம் பேச முடியுது…ஒருவேளை ராகா என் அண்ணன் மகளாக இருந்தாலும் அந்த பொண்ணு லண்டன்ல செட்டில் ஆகப் போறா‌..
அவ எதுக்காக இங்க வந்து சொத்துக்களை கேட்கப் போறா... எப்பவும் போல நாம தானே ஆண்டு அனுபவிக்க போறோம் அப்படி இருக்கும்போது எதுக்காக உங்க ரெண்டு பேருக்கும் இவ்ளோ பயம்…


ரெண்டு பேருக்கும் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க... இங்க இருக்கிற சொத்துக்கு என்னைக்குமே என் அண்ணன்க உரிமை கொண்டாடிட்டு வரமாட்டாங்க ….


திடீர்னு அவங்களுக்கு ஒரு வாரிசு இருக்கணும் வந்து குதிச்சா கூட அப்பவும் கேட்க மாட்டாங்க போதுமா…. கூறிக்கொண்டிருக்கும் போதே சிதம்பரத்தின் அலைபேசி ஒலித்தது….


எதிர்முனையில் கூறியவற்றிக்கெல்லாம் ம்ம்...ம்ம்...என்று கேட்டுக்கொண்டவர் ஒரு நிமிஷம்
...லைன்ல வெயிட் பண்ணு அக்கா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்... என்றவர் சகோதரியின் அருகில் வந்து அக்கா அன்னைக்கு வேலை செஞ்சவங்களை புடிச்சி தெளிவாக விசாரிச்சாச்சி... அவங்க கண்ணுல கூட குழந்தையை பார்க்கலையாம்…குழந்தை பிறந்ததுமே காணாம போயிடுச்சாம்... இவங்க கலைகிட்ட போகும்போதே அவ செத்துப் போய்டாலாம்... நம்ம ஆளுக அவ அம்மாவை மட்டும் தான் கொலை பண்ணியிருக்காங்க அதுக்கப்புறமா போலீஸ் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு தீ வச்சிட்டு கிளம்பிட்டாங்க…


அது மட்டும் இல்ல இங்க வந்திருக்கிற பொண்ணு ராஜாவோட பொண்ணா இருக்க நிறைய வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க….ராஜாக்கும் சந்தேகம் வந்திடுச்சி... அதான்
அவர் மகளானு தெரிஞ்சிக்க அந்த பொண்ணை ஆஸ்பத்திரிக்கு பொய் சொல்லி கூட்டிட்டு போயிருக்கான்...


இன்னும் கொஞ்ச நேரத்துல ரிப்போர்ட் கிடைச்சிடுமாம் ...என்ன செய்யறதுன்னு ஹாஸ்பிடல்ல இருக்கற நம்ம ஆளு கேக்கறான்...என்றவர் காமாட்சி என்ற ஜீவன் நிற்பதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அக்காவிடம் கூறிக் கொண்டிருந்தார்.


அங்கேயே இருந்து ரிப்போர்ட்ல
என்ன முடிவு வந்திருக்கணும் கேட்டு உடனே நம்மகிட்ட சொல்ல சொல்லு..
என்றார்...அதை அப்படியே சிதம்பரம் ஒப்பிக்க... கேட்டுக்கொண்டிருந்த காமாட்சி அதிர்ச்சியில் செய்வதறியாது சிலையாக நின்றது என்னமோ ஒரு நிமிடத்திற்கும் குறைவான வினாடிகள் தான்...


உடனே சுதாரித்துக்கொண்டவர் சிதம்பரத்தின் சட்டையை கொத்தாக பிடித்தபடி பாவி மனுஷா உனக்கு நானும் என் குடும்பமும் என்ன பாவம் செஞ்சோம் எதுக்காக எங்களுக்கு இத்தனை அநியாயம் செஞ்ச…


அன்னைக்கு நடந்தது தீ விபத்துன்னு தானே நினைச்சுட்டு இருக்கேன் ...அது நீங்க பண்ணின சதி தானா... அநியாயமா என் அண்ணியையும் அவங்க அம்மாவையும் கொன்னுட்டாங்களே என்னோட அண்ணனோட வாழ்க்கையையே நிர்மூலமாக்கிட்டீர்களே என்று உலுக்கத் தொடங்கினார்.அசால்டாக கைகளைத் தட்டி விட்டவாறு இங்கே பாத்துக்க அந்த கிழவியை கொன்னது மட்டும் தான் நாங்க... உன் அண்ணியை கொன்னது நீதான்... கடைசி நாள் நீ தான அவளுக்கு ஆசையா சமைச்சு கொடுத்து அனுப்பின…. அதுல நாங்க கொஞ்சம் விஷத்தை கலந்தோம்... அவ்ளோ தான் என்று சொல்லவும் நெஞ்சோடு அடித்துக்கொண்டு அழ தொடங்கினார்.ஐயோ எவ்வளவு ஆசையாக என் அண்ணிக்கு
சமைச்சு கொடுத்தனுப்பினேன் அதுல போய் விஷத்தை கலந்து என்னையும் பாவி ஆக்கீட்டீங்களே... நீங்க நல்லா இருப்பீங்களா என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே காமாட்சியின் சித்தி வடிவு அவரைத் தாக்குவதற்காக குறி பார்த்தபடி பின்பக்கமாக வர அதை உணர்ந்தவர் தாக்குவதற்கு முன் அவர் கையில்
இருந்த இரும்புக் கம்பியைப் பிடித்தபடி …


ஏன் சித்தி இப்படியெல்லாம் செஞ்சீங்க... உங்களுக்கு இந்த குடும்பம் என்ன பாவம்...செஞ்சது...
ஒரு பொம்பளையா இருந்துகிட்டு எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் செய்ய மனசு வந்தது ...நீங்களும் ஒரு பொண்ணு தானே... அநியாயமா கர்ப்பிணிப் பெண்ணுக்கு விஷம் கலந்து குடுத்திருக்கீங்க…


மனசாட்சியே இல்லாம ஹாஸ்பிடலுக்கு தீ வச்சி இருக்கீங்க உங்களுக்கு அப்படி என்ன பணத்து மேல மோகம்…பணம் தான் வேணும்னு சொல்லியிருந்தா என் அண்ணா மொத்த சொத்தையும் உங்க கால்ல வந்து போட்டிருப்பாரே…அதை விட்டுட்டு அநியாயமா அவர் வாழ்க்கைல விளையாடிட்டீங்களே…
உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என சாபம் விடவும் கம்பியோடு அப்படியே பின்புறமாக காமாட்சியை தள்ளிவிட்டார் வடிவு….நாங்க செஞ்ச கொஞ்சம் தப்புக்கே எங்களுக்கு நல்ல சாவு வராதுன்னு சாபம் கொடுக்கற... அப்போ உன் குடும்பம் எனக்கு செஞ்ச அநியாயத்துக்கு எந்த மாதிரி சாவு வரும் சொல்லு…


ஊரெல்லாம் சொல்லும்...நான் தான் உன் அப்பனை பணத்துக்காக மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ஆனா எனக்கு நடந்த அநியாயம் உனக்கு என்னனு தெரியுமா…சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவை இழந்து தனி ஒரு பொண்ணா என் மூனு தம்பிகளை படிக்க வைக்க கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன்….அப்போ தான் மலைமேலே தேயிலைத் தோட்டத்திலே கை நிறைய சம்பளத்தோடு மூனு வேளை சாப்பாடும் போடறாங்க,குழந்தைக படிக்கவும் வசதி செஞ்சி தர்றாங்கன்னு ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து என் தம்பிகளோட அந்த மலைக்கு பல எதிப்பார்ப்புகளோட போனேன்.அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது அங்க எந்த பள்ளிக்கூடமும் இல்லை… எங்களுக்கு மூனு வேளை சோறும்..
கிடைக்காதுனு…சரி எப்படியாவது அங்கிருந்து தப்பித்து வந்துடலாம்னு பார்த்தா எங்களுக்கு அதற்கான வாய்ப்பே கிடைக்கல…


சரி உயிர் வாழ்ந்தா போதும்னு... நானும் என் தம்பிகளும் அவங்க கொடுத்த வேலைகளை செஞ்சுகிட்டு போடுறதை சாப்பிட்டுகிட்டு அங்கேயே இருக்க ஆரம்பிச்சோம்...


அப்போ தான் என் என் கூட வேலை செய்ற பழனியோட அறிமுகம் கிடைச்சது ‌…கொஞ்ச நாள்லயே ரெண்டு பேரும் உயிருக்குயிராய் நேசிக்க ஆரம்பிச்சோம்... ஒருத்தர் இல்லன்னா இன்னொருத்தர் இல்லங்கற அளவுக்கு எங்க காதல் ரொம்ப ஆழமா இருந்தது இப்படியே எத்தனை நாளைக்கு கண்ணாலயே பேசறதுன்னு... ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்க நினைச்சோம்…அதை அங்க இருக்கறவங்க கிட்ட சொல்லவும்..சந்தோஷமா எங்களுக்கு கல்யாணம் செஞ்சி வச்சாங்க... ஆனா அது ரெண்டு நாள் கூட நிலைக்கல...என்று அழுதவர்..கண்களை துடைத்தபடி பேச ஆரம்பித்தார்…


தெரிந்தோ தெரியாமலோ கல்யாணம் பண்ண ரெண்டாவது நாளே உன் அப்பன் கண்ணுல நான் வந்து மாட்டிக்கிட்டேன்…அப்போ என் வயசு என்னனு தெரியுமா….உன் பெரிய அண்ணனோட வயசு...


மக வயசுல இருக்கேன்னு யோசிக்கல….
அடுத்தவன் பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னை அடையணும்னு பல முயற்சிகள் செஞ்சான்... எதுவுமே நடக்கலனு தெரிந்ததும் கடைசியாக என் மூன்று தம்பிகளையும் பிடிச்சி வச்சிகிட்டு அவங்க உயிரோடு இருக்கணும்னு நீ என்கிட்ட வந்தே ஆகணும் என்னை மிரட்டினான்…அப்போ கூட மானத்துக்கு பயந்த நான் தம்பிக செத்தாலும் பரவாயில்லை உங்க அப்பன்கிட்ட வர மாட்டேன்னு போராட தான் செஞ்சேன் …ஆனா கடைசியில என் வீட்டுக்குள்ளேயே வந்து என் புருஷனை அடிச்சு போட்டுட்டு அவர் முன்னாடியே என்ன பலாத்காரம் பண்ணினான்...அதோட விட்டிருந்தா கூட பரவாயில்லை என் புருஷனை அவனோட ஆளுகளை விட்டு என் கண்ணு முன்னாடியே அடிச்சுக் கொன்னான்... அதுக்கப்புறமும் என்னை தூக்கிட்டு போயி எத்தனை நாள் பலாத்காரம் பண்ணினான் தெரியுமா…


புருஷனும் போயிட்டான் தம்பிக எங்க இருக்கிறாங்கன்னு தெரியல... தினம் தினம் உன் அப்பனோட கொடுமை வேற…. தாங்கமுடியாம செத்துப் போயிடலாம்னு நினைக்கும் போதுதான் நான் மாசமா இருக்கிற விஷயம் தெரிஞ்சது…என்றவர் அவரின் வயிற்றையே இயலாமையால் வருடி விட்டார்.வாய் மட்டும் முனுமுனுக்க கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது….
என் வயித்துல நாற்பத்தி எட்டு நாள் கரு...வாழ்க்கைல கடவுள் குடுத்த வரம்…என்னை வாழவைக்க போற மந்திரம்….அது என் புருஷனோட தா…. இல்ல உங்க அப்பனோட தான்னு கூட எனக்கு தெரியாது …ஆனா நான் தாய்மை அடைச்சேன் அது மட்டும் நீஜம்….நான் மாசமா இருக்கிற விஷயத்தை சொன்னாலாவது என்ன பாவம் பார்த்து விட்டிடுவான்னு நினைச்சு உன் அப்பா கிட்ட சொன்னேன்…
ஆனா அந்த மனசாட்சி இல்லாதவன் அது என் புருஷனோட குழந்தைனு நினைத்து என்வயித்துல உதைச்சே அதை கலைச்சான்…. வலியில துடிச்சேன்….கதறினேன்... காலை பிடித்து கெஞ்சினேன்... அனா அவன் விடல... அவனோட கண்ணு முன்னாடியே என் வயிற்றுக்குள்ள இருந்த கரு உதிரமா வெளிய வர்றதை பாத்ததுக்கு அப்புறம் தான் திருப்தியாகி என்னை விட்டான்…அன்னைக்கு அந்த கரு மட்டும் அழியல... என் கனவும் சேர்ந்து அழிஞ்சது….என்னோட கருப்பை முழுசா சேதம் ஆயிடுச்சி…
என்னைக்குமே நான் தாய்மை அடையவே தகுதி இல்லாதவளாவும் போயிட்டேன்...அப்போ தான் முடிவு பண்ணினேன் இவன் கிட்ட போராடி சாகறதை விட புத்திசாலித்தனமாக வாழலாம்னு நினைச்சேன்…அவனுக்கு பிடிச்ச மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்... என் தம்பிக எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு அவங்களை என்னோட வச்சுக்கிட்டேன் ‌….ரொம்ப சாமர்த்தியமாக காய் நகர்த்தி இந்த வீட்டுக்குள்ள வந்தேன்…சொத்துக்கள் எல்லாம் யார் பேர்ல இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன் ...அந்த சொத்துக்களை உன் தாத்தா பேரபிள்ளைகளுக்குன்னு எழுதி வச்சதால வேற வழி தெரியாம என் கடைசி தம்பியை விட்டு உனக்கு ஆசை வார்த்தை காமிச்சு உன்னை கல்யாணம் பண்ணி வைச்சேன்…என் தம்பி மூலமா பிறக்கற குழந்தைக்கு எல்லா சொத்தும் வரனும்னு முடிவெடுத்தேன்...எப்படி என் வயிற்றில் கரு தங்க விடாமல் பண்ணினானோ அதே போல உன் அப்பனுக்கு கொல்லி போட பேரப்புள்ளைகளே இல்லாம செஞ்சேன்…
தெரிஞ்ச வைத்தியர் மூலமா கருத்தடை மருந்து வரவழைச்சு இன்னைக்கு வரைக்கும் உன் நாலு அண்ணன்களும் சாப்பிடற சாப்பாட்டுல அந்த மருந்தை கலக்கி கொடுத்துக்கிட்டே‌ தான் இருக்கேன்தப்பிச்சது உன் கடைசி அண்ணன் மட்டும்தான் நான் இங்க வரும்போது அவன் வெளியூர்ல படிச்சுட்டு இருந்தான்... நீ கல்யாணம் ஆகும் போது அவன் வெளிநாட்டில படிச்சிட்டிருந்தான் இங்க வந்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மலையில போய் செட்டில் ஆயிட்டான் …இப்போ வரைக்கும் வீட்ல உட்கார்ந்து சாப்பிடாததால அவனுக்கு மட்டும் என்னால எதுவும் பண்ண முடியல...அவன் மட்டும் எஸ்டேட்க்கு போகாம இருந்திருந்தா உன் கடைசி அண்ணி வயித்திலேயும் புளு பூச்சி வராம பண்ணியிருப்பேன்…
எப்படியோ தப்பிச்சிட்டான்…அதான் அவளை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம் அவளுக்கு பலவிதமா பயத்த காண்பிச்சோம்…தூங்கும்போது படுக்கையில் பாம்பு தூக்கிப் போடறது...நடக்கும் போது எண்ணெய் கொட்டி வைக்கறது... மாட்டுக்கு வெறிபுடிக்க வைச்சி அவுத்து விடறதுன்னு…
ஆனால் எல்லாத்தையும் ரொம்ப சுலபமா தப்பிச்சிட்டா... அதோட மட்டும் இல்லாம அவ புருஷன் கிட்டேயும் இங்க ஏதோ சரியில்லை நான் இருக்க மாட்டேன்னு நச்சரிக்க ஆரம்பிச்சிட்டா…


பொண்டாட்டி பேச்சை காது கொடுத்து கேட்டவன் பிரசவத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடியே யார்கிட்டயும் சொல்லாமல் ஒரு ஆஸ்பத்திரில தங்க வச்சிகிட்டான்…அவன் இங்க இருந்தா அவனோட மனைவியை கண்டுபிடிக்கமுடியாது நினைச்சு நாங்க பக்காவா திட்டம் போட்டு உன் பெரியப்பா மூலமா அவனை வெளிநாடு அனுப்பி வெச்சோம் அதுக்கு அப்புறம் அவ எங்க தங்கி இருக்கிறானு உன்னை விட்டே கேக்க வச்சி...இடத்தை கண்டுபிடிச்சோம்…கடைசி நாள் உன்கையால சமைக்க வைச்சி அதுல விஷத்தை கலங்கி உன் மூலமாவே குடுத்து விட்டோம்…நீயும் குடுத்துட்டு வராம ஊட்டியே விட்டுட்டு வந்தே...


அவ செத்துருவான்னு எதிர்பார்த்தா அவ சாகல…. அதான் ஹாஸ்பிடலுக்குல போய் அங்க இருக்கறவங்க எல்லாம் தாக்க ஆரம்பிச்சோம்…ஆனா அவ எங்க கிட்ட இருந்து தப்பிச்சு கடைசியில யாருக்கும் தெரியாம ஒரு குழந்தையும் பெற்றெடுத்து யார்கிட்டயோ குடுத்து விட்டிருக்கா... நாங்க அனுப்பின ஆளுகளும் குழந்தையோட கலை செத்துப் போயிட்டானு எங்க கிட்ட பொய் சொல்லி எங்களை நம்ப வைச்சி கழுத்தறுத்திருக்காங்க…
அது தெரியாம இத்தனை நாளா நாங்களும் குழந்தையும் அவளும் தீயில கருகினதா நம்பிக்கிட்டிருக்கோம்... என்று கூறி முடித்தார்.


காமாட்சிக்கு அவரின் சித்தி வடிவு கடைசியாக கூறியது எதுவுமே காதில் விழவில்லை தனது அண்ணிக்கு தனது கையால் தான் விஷத்தை கொடுத்து இருக்கிறேன் என்று தெரியவும் தாங்கிக் கொள்ள முடியாமல் அமர்ந்து வாக்கிலேயே அழுது கொண்டிருந்தார்.


பிறகு... உங்களுக்கு என் அப்பா செஞ்சது மிகப்பெரிய அநியாயம் தான் அதுக்காக என் அண்ணன்களுக்கு வாரிசு இல்லாம செஞ்சீங்க ...என்னோட பெரியப்பா பசங்க என்ன செஞ்சாங்க... அவங்களுக்கு ஏன் வாரிசு இல்லாம செஞ்சீங்க…சொத்துக்காகவா…?சொத்தும்... ஒரு காரணம் வறுமை இருந்ததால தானே மத்தவங்க கிட்ட பசிக்காக கையேந்தற நிலைமையை அந்த கடவுள் எங்களுக்கு கொடுத்தாரு…அதானால எல்லா சொத்தும் என் தம்பிக்கே வரனும்னு முடிவு செஞ்சதால அதை செஞ்சோம்...அது மட்டும் கிடையாது...உன் பெரியப்பா நினைச்சிருந்தா எனக்கு நடந்த அநியாயத்துல பாதியாவது குறைந்திருக்கும் ஆனா அவர் அதை செய்யல…அவருக்கு உன் அப்பா செய்கிற எல்லா அநியாயங்களும் தெரியும்... சொல்லப்போனா உன் அப்பா என்னை தூக்கிட்டு போய் கொடுமை செஞ்சப்போ கூட தெரிஞ்சி மௌனம் சாதிச்சாரு...என்னை காப்பாத்தல... காரணம் தம்பியை அடக்கினா... மறுபடியும் சொத்தை ரெண்டு பங்கு வைக்க சொல்லிடுவானோன்னு பயந்தார்... அவரோட சொத்து பிரியறதை அவர் விரும்பல…என் தம்பிகளை கடத்தி வைத்திருந்தப்போ அவர் எஸ்டேட்ல தான் இருந்தாரு….அவர் கால்ல விழுந்து கெஞ்சினேன்... அதுக்கு அவர் ரொம்ப கூலா எங்களோட ஜமீன் வம்சத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் நீ என் தம்பிய அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு சுகபோகமாக வாழ பழகிக்க...


ஒன்றுமில்லாத விஷயத்திற்கு எல்லாம் இப்படி என் முன்னாடி வந்து நிற்காதன்னு எனக்கு தான் புத்தி சொன்னாரே தவிர உன் அப்பாவை அவர் கண்டிக்கல... அதற்கான தண்டனை தான் அவருக்கும் வாரிசில்லாம செஞ்சது…. எந்த சொத்து அவரோட பேர பிள்ளைகளுக்கு மட்டும் வரணும்னு நினைச்சாரோ அதில ஒத்த ரூபா கூட அவரோட பேரப்பிள்ளைகளுக்கு போக கூடாது …என் தம்பிக்கு தான் வரணும் அதான் அப்படி செஞ்சேன் .சரி அந்தக் எஸ்டேட்டில் இருக்குறவங்க என்ன பாவம் செஞ்சாங்க ஏன் உங்க ரெண்டு தம்பிகளை விட்டு இன்னும் அங்க இருக்கறவங்களை கொடுமைப்படுத்திட்டு இருக்கீங்க….


என் அப்பா, பெரியப்பா ரெண்டு பேரும் எப்பவோ திருந்தீட்டாங்க... தொழிலாளர்களுக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சிட்டு இருக்கும்போது நீங்க இப்படி செய்கிறது எந்த வகையில் நியாயம்…அவங்க கஷ்டம் தெரிஞ்ச
நீங்களும் அந்த மக்களை கொடுமை தானே செஞ்சுகிட்டு இருக்கீங்க…


அது அந்த மக்களோட தலை விதி... எனக்கு அந்த எஸ்டேட்ல அநியாயம் நடந்தப்போ அத்தனை பேருமே வேடிக்கைதான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க…. அது மட்டும் கிடையாது என் தம்பிகளை எங்க கடத்தி வச்சிருந்தாங்க தெரியுமா…?


அந்த எஸ்டேட்டில் வேலை செய்யறவங்க வீடுகள்ல தான்... தினம் தினம் என் தம்பிகளை காணோம்னு பைத்தியக்காரி மாதிரி அந்த மலையையே சுத்தி வந்தேன் ஆனா ஒருத்தர் கூட பாவம் பார்த்து உன் தம்பிக எங்க கிட்ட தான் இருக்கறான்னு சொல்லவே இல்ல... முதலாளிக்கு பயந்து தானே அவங்க வாயை மூடிக்கிட்டு இருந்தாங்க... கடைசி வரைக்கும் அப்படியே இருக்கட்டும்…இப்போ அவங்களோட முதலாளி நான்தான் யார் வீட்டில அடுப்பு எரியனும்...யார் வீட்டு அடுப்பங்கரையில பூனை தூங்கனும்னு முடிவு எடுக்க வேண்டியது நான் தான் …என் தம்பிகளை‌ வச்சிருந்த ஒருத்தரை கூட நான் விட்டு வைக்கலையே மூணு தம்பிகளையும் ஒளித்து வைத்திருந்த எல்லா குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக கொன்னு நாய்க்கு போட்டாச்சி...
இன்னும் எனக்கு வெறி அடங்கல…அவ்வளவு கோபம் அந்த எஸ்டேட் மக்கள் மேல…எதை வேணாலும் என் கைய் விட்டு போறதுக்கு ஒத்துக்குவேன்... அந்த எஸ்டேட் மட்டும் எங்க கை விட்டுப் போகவே கூடாது…


பூபதிக்கு எந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்களுக்கு தெரியும்…


எங்க பேச்சை கேட்டு எங்களுக்கு அடங்கி இருக்கிற பொண்ணை தான் நாங்க கட்டி வைப்போம்…நல்லா படிச்சிட்டு வெளிநாட்டில இருந்து வந்தவளை கட்டி வச்சா
நாளைக்கே வரவு செலவு கணக்கு கேட்பா…


அங்க என்ன நடக்குதுன்னு பாக்கணும்னு ஆசை படுவா... அதுக்கப்புறம் என் மனசுல எரிஞ்சிகிட்டு தீயிலே நான் தான் எரியனுமே தவிர ‌என்னால வேற எதுவும் செய்ய முடியாது...


அதனாலதான் அவளை அப்படியே துரத்தி விடலாம்னு நாயை அவுத்து விட்டோம்... அவளுக்கு கொடுத்த சாப்பாட்டை நாய்க்கு போட்டோம்….ஆனா எதுவுமே நடக்காம... இப்போ இந்த குடும்பத்துக்கே வாரிசுங்கறது போல வந்து நிற்கறா…
என்று கூறவும்…


எப்பவும் பதிலுக்கு பதில்... பழிக்குப் பழின்னு போனா நமக்கு நியாயம் கிடைக்காது சித்தி ...உங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நீங்க மௌனமாய் இருந்து அதுக்கான நியாயத்தை தேடி இருக்குமே தவிர இப்படி அராஜகத்தில இறங்கி நியாயத்தை தேடக்கூடாது …உங்களுக்கு நடந்த அநியாயத்தை விட அடுத்தவங்களுக்கு நீங்க அதிகமா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கூறவும் கால்களைத் தட்டி விட்டபடி சாதாரணமாக அங்கிருந்து சென்றார்.
உடனே கணவரிடத்தில் வந்து என்னங்க உங்களுக்கு பையன் மேல பாசம் இல்லையா சொல்லுங்க அவன் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம் ... அவன் ஆசைப்பட்ட பொண்ணோட வாழ்ந்தா தாங்க அவனுக்கு சந்தோஷம்…அவன் சந்தோஷமா இருந்தாதானே நாமளும் சந்தோஷமா இருக்க முடியும்.. என்று கூற …நீ சந்தோஷமா இருப்பன்னு சொல்லு காமாட்சி நான்...இருக்க மாட்டேன்... உண்மைய சொல்லனும்னா எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிற குடும்பமும் வேற பிள்ளைகளும் வேற என்று கூறினார் .யோசனையாக அவரின் முகத்தை பார்க்க என்ன பாக்கற ஜமீன் வம்சத்தில மட்டும்தான் ரெண்டு பொண்டாட்டி மூணு பொண்டாட்டி வைக்கனும்னு ஏதாவது சட்டம் இருக்கா... எங்கள மாதிரி ஆளுங்களும் வைக்கலாம்ல என்றார்‌அதிர்ச்சியாக அவரைப் பார்க்க ஆமா எனக்கு இனியோரு பொண்டாட்டி இருக்கா ரெண்டு ஆம்பளை பசங்க இருக்காங்க …சென்னைல ‌சொகுசா வாழறாங்க...அவங்க காலத்துக்கும் அதே போல வாழனும்னா இந்த வீட்டுக்கு உன் பையன் மட்டும் தான் வாரிசா இருக்கனும்…அப்படி இல்லாம எல்லாத்தையும் நேத்து வந்தவ சுருட்டிட்டு போனா நாம் பெற்ற இரண்டு பிள்ளைகளும் நடுத்தெருவுல தான் நிக்கனும்...என்று சொல்லவும்...
அதிர்ச்சியாக வடிவைப் பார்த்து சித்தி என்ன சொல்றாங்க…. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா…ஆமா தெரியும்... சொல்லப்போனா நான்தான் அந்த பொண்ணை பார்த்துக் கட்டியே வெச்சேன்... உங்கப்பன் என்னோட வாழ்க்கையை கெடுத்தான்...
அதான் நான் உன் வாழ்க்கையை என் தம்பியை விட்டு கெடுத்தேன்... கணக்கு இப்போ சரியா போச்சி என்றார்.அதுவரை அவர்களிடம் தன்மையாக பேசிக்கொண்டிருந்த காமாட்சி இப்பொழுது ஆவேசமாக கணவரை சரமாரியாக நெஞ்சினில் அடிக்கத் தொடங்கினார் .


நான் உன்னை எவ்வளவு நல்லவன்னு நம்பினேன் ஏமாத்திட்டியே... உனக்கு நான் என்னடா பாவம் செஞ்சேன் உன்ன நல்லவன்னு நம்பினதால தானே தைரியமா கல்யாணம் செஞ்சுக்கிட்டேன் இப்படி எனக்கு துரோகம் செஞ்சிட்டியே…


நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க... இப்பவே போய் நீங்க பண்ணின அத்தனை அநியாயத்தையும் பெரியப்பாகிட்டயும் அண்ணன்கிட்டயும் சொல்லறேன் அதுக்கப்புறம் அவங்க வந்து உங்களுக்கு சரியான கூலியை கொடுப்பாங்க என்று முன்னோக்கிச் செல்ல... அவரின் முடியை கொத்தாக பிடித்து இழுத்த சிதம்பரம் இத்தனை கதையையும் உன்கிட்ட சொல்லிட்டு உன்னை உயிரோட விடுவேன்னு எப்படி எதிர்பார்க்கலாம் காமாட்சி என்னைக்குமே நீ எனக்கு தேவை பட்டதே இல்ல…இந்த சொத்து மட்டும் இல்லன்னா இந்த கருப்பட்டி அழகியை நான் திரும்பி கூட பாத்திருக்க மாட்டேன் என்ற படி அவரின் கூந்தலை பிடித்தபடியே சுவற்றில் முட்டினார்…


நெற்றியில் அடிபட்டு ரத்தம் ஓழுக...வடிவை பார்த்த காமாட்சி...சித்தி தப்பு மேல தப்பு செய்யறீங்க... எனக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுனா என்னோட ராஜா அண்ணாவும் பூபதியும் உங்களைச் சும்மா விட மாட்டாங்க நீங்க என்ன கதை சொன்னாலும் அவங்க நம்ப மாட்டாங்க …என் அப்பா உங்களுக்கு பண்ணின கொடுமைகளுக்காக நான் உங்களை மன்னிச்சு விடுறேன்...
உங்க ரெண்டு பேரோட உயிரையும் காப்பாற்றிகோங்க…


இங்கிருந்து எங்கயாவது போங்க... நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் நானும் என் புள்ளையும் எங்க வாழ்க்கையே பாத்துக்குறோம் என்று கூறவும் இப்பொழுது கீழே கிடந்த கம்பியை எடுத்த வடிவு காமாட்சியின் நடு முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார்... ம்மா...ஆஆஆஆ... என்று கத்தியபடி கீழே சாய்ந்தார் காமாட்சி.


அப்பொழுது சிதம்பரத்தின் அழைப்பேசி மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது கையில் பிடித்திருந்த காமாட்சியை கீழே விட்டவர்... பேச ஆரம்பித்தார் எதிர்முனையில் கூறிய வார்த்தைகளை கேட்க கேட்க அவரின் முகம் மாறத்தொடங்கியது .யோசிக்காமல் கீழே கிடந்த காமாட்சியின் கழுத்தில் காலை வைத்து நசுக்க ஆரம்பித்தார் …


என்ன ஆச்சுடா...ஏன் இவ்ளோ கோபம் என்று பதட்டமாக வடிவு கேட்கவும் அக்கா இங்கு வந்திருக்கறது அவனோட பொண்ணுதானாம்…டெஸ்ட் ரிப்போர்ட் சொல்லுதாம் என்ன செய்யறது…இப்போ அவனும் பொண்ணும் எங்க போய் இருக்காங்க என்று கேட்டார் .நம்ம எஸ்டேட்டுக்கு தான் போய்கிட்டு இருக்கிறதா நம்ம ஆளுக சொல்றாங்க…


அப்போ நாமளும் எஸ்டேட் போகலாம்..
ஒழுங்கா அப்பவே ஓடிப்போய் இருந்தா அவ உயிராவது மிஞ்சி இருக்கும் இப்போ அவ மட்டும் இல்ல இப்போ அவ அப்பனும் சேர்ந்து சாகப் போறான்…
அங்கயே பெரிய குழி தோண்டி அப்பனையும் பொண்ணையும் புதைச்சிட்டு வரலாம் கிளம்பு என்று கூறவும்...எழக்கூட முடியாமல் கீழே கிடந்த காமாட்சி வடிவின் கால்களை பிடித்து கெஞ்சினார்.சித்தி அவங்களை விட்டிடுங்க... உங்களை கஷ்டப்படுத்தின அந்த எஸ்டேட் மட்டும் இல்லை இங்க இருக்கிற எல்லா சொத்துக்களையும் நீங்களும் உங்க தம்பிகளுமே அனுபவிங்க..


தயவு செஞ்சு அந்தப் பொண்ணையும் என் அண்ணனையும் விட்டிடுங்க அந்தப்பொண்ணோட நம்ம பூபதி எங்காவது ஒரு கண்காணாத இடத்துல சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்... நான் யார்கிட்டேயும் கடைசிவரை வாய் திறக்க மாட்டேன்... கண்டிப்பா உங்களுக்கு நடந்த அநியாயத்திற்காக அப்பாவையே வேணாலும் நான் ஒதுக்கி வைக்கறேன்...உங்க முடிவை மாத்திக்கோங்க சித்தி…தயவு செஞ்சு அவங்களை எதும் செய்யாதீங்க... என் அண்ணன் கிட்ட நான் பேசுறேன்.. எல்லாத்தையும் உங்க பேர்லயே எழுத வைக்கறேன் வேணாம் சித்தி விட்டிடுங்க...என்றார்.


கால்களை உதறியவர்...டேய் என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க... மண்டையிலேயே ஒன்றை போட்டு அந்தப் பக்கம் தள்ளி விடு என்று உத்தரவுகளை பிறக்கவும் சிதம்பரம் கையில் வைத்திருந்த கனமான கம்பியைக் கொண்டு காமாட்சியின் தலையில் போட்டவர் கைகளைப்பிடித்து இழுத்து அறைக்குள் போட்டார்...பிறகு அறையை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு அவரும் அவரின் அக்காவும் வேகமாக வெளியே சென்றார்கள்.
 
Top