கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே27

Akila vaikundam

Moderator
Staff member
‌‌27.

விக்கி என்னோட குடும்பம் ரொம்ப பணக்கார குடும்பம் எல்லாம் கிடையாது ஒரு அடித்தட்டு நடுத்தர குடும்பம் தான்.

சொல்லப்போனா இப்போ இருக்கற வசதி கூட நான் படிச்ச காலத்துல கிடையாது.

சின்னதா வாடகை வீடு,அப்பா வருமானம் மட்டும் தான் ரொம்ப கஷ்டமான ஜீவனம் தான்.

பெரிய அண்ணா வேலைக்கு போற வரைக்கும் முக்கியமான செலவுக்கு கூட இழுபறி தான் இருக்கும்..ஆனா எனக்கு மட்டும் எந்த குறையும் இல்லாம பாத்துகிட்டாங்க..

பெரியண்ணா படிப்பை முடிச்சு வேலைக்கு போன பிறகு தான் கொஞ்சம் பெரிய வீட்டுக்கே நாங்க குடி போனோம் .


அதுக்கப்புறம் பெரிய அண்ணாவோட கல்யாணம் அண்ணாக்கு பொண்ணு பார்க்கும்போதே அண்ணி வீட்ல ஒரே பொண்ணு பையன் வீட்டோட மாப்பிள்ளை வரணும்னு சொல்லிட்டாங்க..பெரிய அண்ணாக்கு இதுல விருப்பம் போல எதிர்ப்பு இல்லாம கிளம்பிட்டாங்க



அம்மாக்கு துளி கூட விருப்பம் இல்லை.. எனக்கும்தான் ரொம்ப அழுதேன்.. உனக்கு தெரியுமா என் சின்ன அண்ணனை விட பெரிய அண்ணனை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .


அவர் நான் குழந்தையா இருக்கும் போது என்னை கீழே இறக்கி விட்டதே கிடையாது..அவ்ளோ செல்லமா என்னை பாத்துப்பாரு..ஆனா அவருக்கான வாழ்க்கை வரும் போது எங்களையெல்லாம் சுலபமா மறந்திட்டதா எனக்கு தோணிச்சி.. அதான் என் ரெண்டாவது அண்ணாக்கு கல்யாணம் பண்ணலாம்னு பேசும் போது கொஞ்சம் கலக்கமா இருந்தது.


சின்ன அண்ணாவும் கல்யாணத்துக்கு அப்புறம் எங்களை விட்டுட்டு போயிடுவாரோனு எல்லாருமே பயந்தோம்..அதனால அம்மா அண்ணாக்கு முன்ன எனக்கு கல்யாணம் பண்ணிடனும்னு தீவிரமா இருந்தாங்க.

ஆனா நான் அப்போதான் யூஜி முடிஞ்சிட்டுட்டு பிஜி கோர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருந்ததால நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல.




அண்ணாவும் எனக்கு கல்யாணம் ஆன பிறகுதான் நான் பண்ணிப்பேன்னு உறுதியா சொல்லிட்டாங்க.. ஆனா அண்ணாக்கு வயசு ரொம்ப ஆயிடுச்சின்னா பொண்ணு கிடைக்காதேன்னு அம்மா அதுக்கும் பயந்தாங்க..

எல்லா கோபத்தையும் அம்மா என்மேல காட்டவும் நான் அண்ணாகிட்ட அவர் கல்யாணத்தை பத்தி பேசினேன்.


அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த கேசவனிடம் தயங்கியபடி வந்து நின்றாள் கௌசல்யா.

அண்ணா…

என்ன கௌசி சீக்கிரமா சொல்லு என்றபடி அவனது முழுக்கை சட்டையின் கை பட்டனை போடுவதில் முனைப்பாக இருந்தான்.

அது வந்து..என இழுக்கவும்..
பணம் ஏதாவது வேணுமா..?
இல்ல வெளிய போறியா.. அம்மாட்ட பர்மிஷன் வாங்கி தரனுமா..எதா இருந்தாலும் சீக்கிரமா சொல்லு..என்ற படி அவனது பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தான்.


அதை கவனித்தவள் அய்யோ அண்ணா பணமெல்லாம் வேணாம்..என்றவள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

அண்ணா எனக்கு மேல படிக்கணும்னு ஆசையா இருக்குன்னா..

அதுக்கு என்னடா தாராளமா படி அப்ளை பண்ணியிருக்கல்ல..? அதே காலேஜ் தானே..? என கேட்டபடியே அவனின் ஆடைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

ம்ம்..

அப்புறம் என்ன சீட் கிடைக்காதுன்னு பயப்படுறியா அதெல்லாம் பிரச்சனை இல்லை நீ நல்லா படிக்கிற பொண்ணு அப்படியே மெரிட்ல கிடைக்கலைன்னா கூட செல்ஃ பினான்ஸ்ல பாத்துக்கலாம் நீ ஒரி பண்ணிக்காம இரு என்று அவளின் கன்னம் தட்டி வெளியே செல்ல போக அவனின் கைப்பிடித்து நிறுத்தியவள் கலக்கமாக.


பிரச்சனை அது இல்லண்ணா எனக்கு அந்த காலேஜ்லேயே மெரிட்ல சீட் கிடைக்கும்.. இப்போ அம்மா தான் பிரச்சினை..

என்னை மேல படிக்க வேணாம் கல்யாணம் பண்ணிக்கோனு கட்டாயப்படுத்தறாங்கண்ணா என்று சொல்லவும்.

சரி நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன் நீ பயப்படாம போ..

இல்லண்ணா நீ அம்மா கிட்ட போய் பேசினாலும் அம்மா அதுக்கும் என்னதான் திட்டுவாங்க அதனால எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா..?

ஹெல்ப் பா..? என்னமா தங்கச்சி அண்ணன் கிட்ட பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க என்ன பண்ணனும்னு சொல்லு அண்ணன் செய்யப் போறேன்..அதுக்கெதுக்கு உதவி என்கிற பெரிய வார்த்தையெல்லாம் எடுக்கிற என்றவன் அவளின் முகத்தை இருக்கைகளாலும் தாங்கிக் கொண்டு என்னடா வேணும் கேளு என்று சொல்லவும்.



நீ கல்யாணம் பண்ணிக்கிறியா ப்ளீஸ் நீ இப்போ பண்ணிக்கிட்டா அம்மா எப்படியும் என்னை ரெண்டு மூணு வருஷத்துக்கு தொல்லை பண்ண மாட்டாங்க அதுக்குள்ள நானும் படிச்சு முடிச்சிட்டு ஒரு வேலை தேடிப்பேன் ப்ளீஸ் அண்ணா..

இல்லடா வேற ஏதாவது கேளு இதை என்னால செய்ய முடியாது.

அண்ணா ப்ளீஸ் நீ இப்போ கல்யாணம் பண்ணிக்கலன்னா உடனே யாராவது ஒருத்தர் புடிச்சு அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க..


கல்யாணத்துக்கு அப்புறம் படி..உன் புருஷன் சம்மதம் இருந்தா வேலைக்கு போன்னு என்னை கன்வின்ஸ் பண்ணுவாங்க ப்ளீஸ் அண்ணா..

அம்மு உனக்கு எதார்த்தம் புரியல்ல.. பெரிய அண்ணாவை பாத்தல்ல.. அது போல என்னால சுயநலமா இருக்க முடியாதுடா..

கல்யாணம்ங்கறது பெரிய கமிட்மென்ட் அம்மு.. அதை பண்ணிக்கிட்டா என்னை நம்பி வரப் போறவளை நான் நல்லா பாத்துக்கணும் .


அவளுக்கு என்ன பிடிக்குதோ அப்படித்தான் நான் நடந்து கொள்ளனும்..


ஒருவேளை மஞ்சு அண்ணி மாதிரி வந்துட்டா.. அதான் என் கடமை முடிச்சிட்டு அப்புறமா கல்யாணம் செஞ்சிக்கறேன்.

அப்போ நான் உனக்கு கடமையா அண்ணா..?

அப்படி அர்த்தம் இல்லடா..நீ என் பொறுப்பு…ம்ப்ச் நீ சின்னப் பொண்ணு இதெல்லாம் உனக்கு புரியாது.. நான் அம்மாகிட்ட பேசறேன் நீ படிக்கற வழியை மட்டும் பாரு..

இல்ல நீ அம்மா கிட்ட எதுவும் பேச வேண்டாம்.. நானே என் படிப்பை நிறுத்திக்கிறேன் எனக்கு படிப்பு வேணாம் ஒன்னும் வேணாம் அம்மா சொன்ன மாதிரி யாரையாவது ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறேன்..அவர் விருப்பப்பட்டா படிக்கறேன்…இல்ல எப்படியோ போறேன்..உனக்கு கடமையும் முடிஞ்சது. உன் பொறுப்பும் உன்னை விட்டு போய்டும் என்று கோபமாக வெளியேறப் போனவளின் கைகளை பிடித்து தடுத்தவன் .


என்னடா அம்மு அண்ணன் சொல்ல வர்ற விஷயத்தை புரிஞ்சுக்கலையே..


நீ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குற.. என் படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு.. அதுக்கப்புறமா எனக்கு கல்யாணம் ஆகி உன் ஜாதகத்தை எடுத்தா உனக்கு இன்னும் வயசாயிடும்னு அம்மா பயப்படறாங்க..
அதுக்காக தான் அம்மா என்னை இவ்வளவு கஷ்டப்படுத்தறாங்க.


ஒண்ணு நீ கல்யாணம் பண்ணனும் இல்ல நான் கல்யாணம் பண்ணனும் நீ பொறுப்பு கடமைனு பேசற அதனால நீ பண்ணிக்க வேண்டாம் நானே பண்ணிக்கிறேன் அதுக்கப்புறம் உடனே நீயும் பன்னிக்கோ..என்னால என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகாம இருக்குங்கற கெட்ட பேராவது எனக்கு வராம இருக்கட்டும்.

அம்மு கோபப்படாதே, அம்மா கிட்ட தான் நான் பேசுறேன்னு சொல்றேன்ல.


இந்த சமாளிப்பு எல்லாம் வேண்டாம் அண்ணா நீ அம்மா கிட்ட என்ன பேசினாலும் அதுக்கும் சேர்த்து என்னை தான் குற்றம் சொல்லுவாங்க என்னால மறுபடியும் மறுபடியும் திட்டு வாங்க முடியாது.

அம்மா தான் என்ன புரிஞ்சுக்கல நீயாவது என்னை புரிஞ்சிப்பனு வந்தேன்..நீயும் உன்னோட சுயநலத்துல தான் உறுதியா இருக்க.



இந்த வீட்ல எல்லாருமே சுயநலம் பிடிச்சவங்க என்று சற்று வருத்தத்துடன் கூறியபடி அங்கிருந்து சென்றாள்.

வருத்தத்துடன் செல்லும் தங்கையை பார்த்து புன்முறுவலுடன் அம்மு நீ ஆளு தான் வளர்ந்திருக்க..உன் செயல் எல்லாமே குழந்தை தனமாவே தான் இருக்கு என்றபடி தாயை சந்தித்து சென்றான்.


ம்மா.ம்மா என்று அழைக்கவுமே.

இங்க இருக்கேன் கேசவா என லட்சுமி பின்பக்கமாக இருந்து குரல் கொடுத்தார்.

என்னடா கேசவா ஆபீஸ் கிளம்பிட்டியா? ரெண்டே நிமிஷம் இரு டிபன் எடுத்து வைக்கிறேன் என்றபடி அலசிக்கொண்டிருந்த துணிகளை அப்படியே விட்டு படி வரவும் அம்மா பரவால்ல நீங்க உங்க வேலைய பாருங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றபடி அங்கிருந்து திண்ணையில் அமர்ந்தான்.

சொல்லுடா கேசவா ரொம்ப முக்கியமான விஷயமா என்றபடி புடவை முந்தியில் கையை துடைத்தபடியே அவன் அருகில் வந்து அவரும் அமர்ந்தார்.

ஆமா அம்மா மா என்றவன் சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு எதுக்காக மா நம்ம அம்முவை கல்யாணம் பண்ண சொல்லி பாடா படுத்தி எடுக்குறீங்க அவளுக்கு கல்யாணம் பண்ற வயசா இது.படிக்கணும்னு ஆசைப்படறா.. இன்னும் ரெண்டு வருஷம் தானே படிக்கட்டுமே அதுக்கப்புறம் கல்யாணம் செஞ்சு வச்சுக்கலாம்..

காலையில என்கிட்ட தலைய தலைய ஆட்டிட்டு உன்கிட்ட வத்தி வச்சாளா..அவளை என்று பற்களை கடித்தவர்.. பிறகு சுதாரித்துக் கொண்டு கேசவா நீ இதுல தலையிடாத நான் பாத்துக்கறேன்.

என்னம்மா இப்படி பேசறீங்க நான் அவ அண்ணன் நான் தலையிடலன்னா வேற யார் தலையிடனும்னு சொல்லறீங்க…ராகவன் அண்ணாவா..?இல்ல அப்பாவா ? சொல்லுங்க நான் அவங்க கிட்டயே பேசிக்கிறேன் என்றபடி கோபமாக எழவும் கை பிடித்து தடுத்தவர்.

டேய் கேசவா நீயும் ஏன்டா டென்ஷன் பண்ற ஒரு பக்கம் பெரியவன் ஏதேதோ சப்ப காரணத்தை சொல்லிட்டு அவன் பாதையை பார்த்துட்டு போயிட்டான்.

உன் அப்பாவால சுத்தமா குடும்பத்தை பார்த்துக்க முடியல வருமானம் வர்றது வாய்க்கும் வயித்துக்குமே பத்தல.. அதுல இந்த வீட்டுக்கு வாடகையும் கொடுத்துட்டு அவளையும் படிக்க வைக்கறதுக்கு நான் படற பாடு எனக்கு தான் தெரியும்..

அப்போ நான் இந்த குடும்பத்துக்காக எதுவுமே செய்ய வரலைன்னு மறைமுகமாக சொல்ல வரீங்களா அம்மா.

டேய் நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க எனக்கு தெரியாதா இந்த வாடகை வீட்டை விட்டுட்டு சொந்த வீட்ல எங்க எல்லாரையும் உட்கார வைக்கணுங்குறதுக்காக தான் உன் பணத்தை சேர்த்து வைக்கிறேன்னு..


இதுக்கு நடுவுல உன் கல்யாணத்தை பார்க்கணும் அவ கல்யாணத்தை பார்க்கணும் இந்த கவலை எல்லாம் எனக்கு..

ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்குடா உன் அலமேலு சித்தி வழியில இருந்து..வயசு கொஞ்சம் அதிகம் தான்..ஆனா அதை பெருசா எடுத்துக்க கூடாது கேசவா..


பையன் ரொம்ப நல்லா இருக்கான்.. கௌசியை கூட ஏதோ பங்க்ஷன்ல பார்த்திருக்கான் பார்த்ததுமே அவனுக்கு பிடிச்சு போச்சு அரசாங்க வேலையில் இருக்கான்டா நகை நட்டு எதுவுமே வேணாம் என்கிறான்.


பெருசா சீர்வரிசை கூட எதிர் பாக்கல அவளை அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா நம்ம கையையும் பெருசா பிடிக்காது அவளும் போற இடத்துல நல்லா இருப்பாடா மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகம் என்கிறதால என் வீட்டுக்கு வந்து படிக்கட்டும் நானே அவளுக்கு அரசாங்க உத்யோகம் வாங்கி தந்திடறேன்னு வாக்கு தர்றாரு..விட மனசில்ல அதான் அவளை கொஞ்சம் கட்டாயப்படுத்தினேன் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வர்றது தெரியாம உன்கிட்ட வந்து உளறி வச்சிருக்கா..



நீங்க சொல்றது ஓத்து வர்றது போல தான் இருக்கு ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் படிக்க வைக்கிறேன்னு சொல்றது பெருசா தெரியல ஆனா அரசாங்க வேலை கிடைக்கும்னு சொல்லறது தான் நம்பமுடில..


டேய் அவர் உறுதியாக சொல்லறாரு எப்படி இருந்தாலும் வேலை வாங்கி கொடுத்துடுவேன்னு..

ஓ அதனாலதான் பொண்ணுக்கு நகை நட்டு சீர் செனத்தி எதுவும் வேணாம்னு சொல்லறாரோ என்று நக்கலாகவே கேட்டான்.


இருக்கலாம் கேசவா.. நாளைக்கு நம்ம கௌசிக்கு வேலை கிடைச்சா சம்பாதித்து மாப்பிள்ளை கையில தானே கொடுக்க போறா.. அதும் அரசாங்க உத்தியோகம் எனும் போது சம்பளம் நல்லாவே வரும்.


அதை கூட மனசுல வச்சுட்டு அந்த பையன் சொல்லியிருக்கலாம் அதனால இதையெல்லாம் பெருசு படுத்தாம உன் தங்கச்சியை கொஞ்சம் வழிக்கு கொண்டுவர பாருடா..


அம்மா நீங்க சொல்ற இடம் நல்ல இடமா இருந்தா நானே போய் பேசுவேன் ..ஆனா முன்னுக்கு பின் முரணா இருக்கேம்மா…


என்னடா அம்மாவை பயமுறுத்தற..


பின்ன கொஞ்சம் யோசிச்சி பாருங்க…வயசை கூட விட்டுத்தள்ளுங்க..ஒரு அரசாங்க வேலையில் இருக்கிறனவரு எப்படி இவளுக்கும் அரசாங்க வேலை உறுதியா வாங்கித் தர முடியும்..


ஒன்னு அவர் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்த்து விடுவாரு.. அப்படி இல்லனா வேலை தரக்கூடிய ஆபிஸர்கள் கூட நெருக்கமா இருக்கனும்…ரெண்டாவது கொஞ்சம் கஷ்டம்..முதலாவதுன்னா லஞ்சம் கொடுக்க தயார்ன்னா லஞ்சம் வாங்கவும் தயாரா தான் இருப்பார்..ஓரு வேளை அவர் ஆசைப்பட்டபடி அம்முக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கலன்னா நம்ம பாப்பாவோட வாழ்க்கை காலம் பூரா நரகம் ஆயிடாதா..?.



இது சரியா வராதும்மா ..இந்த சம்பந்தம் வேண்டாம் இதுக்காக நீங்க அம்முவை கஷ்டப்படுத்தினதை நினைக்கும் போது உங்க மேலே எனக்கு கோபம் வருது இனிமே எதையும் தீர விசாரிக்காம கல்யாணம் பண்ணுனு அம்முவை டார்ச்சர் பண்ணாதீங்க என்று உறுதியாக கூறினான்.


கவலையான லட்சுமி..அப்போ அலமேலு கிட்ட என்னனு சொல்லறது..

ம்ம்…என் பொண்ணுக்கு இப்போதான் இருபத்தியொரு வயசு ஆகுது அதனால இந்த மாதிரி வயசான மாப்பிள்ளை எல்லாம் கூட்டிட்டு வராதீங்க கம்மி சம்பளமா இருந்தாலும் நல்ல பையனா கூட்டிட்டு வாங்க அதுவும் இப்போ வேணாம் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுன்னு சொல்லுங்க..

விளையாடறியா கேசவா..?

யாருமா விளையாடுறது நீங்கதான் கௌசியோட வாழ்க்கையில விளையாட பாத்துட்டு இருக்கீங்க.. நான் ரொம்ப சீரியஸா தான் பேசிட்டு இருக்கேன்.


டேய் இப்பவே உனக்கு இருபத்தி ஆறு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி அப்புறம் உனக்கு பொண்ணு பார்க்கும்போது உனக்கு முப்பதை தாண்டிடும்டா..அப்புறம் யாருடா உனக்கு பொண்ணு கொடுப்பா.


இப்போவே இவளுக்கு பண்ணினா தானே இன்னும் ஒரு வருஷம் கழிச்சி உனக்கு பண்ண முடியும்..


அப்போ அந்த கல்யாணத்தை முதல்ல அண்ணனுக்கு பண்ணிடுங்க எனக்கு இருபத்தி ஒன்னு தான் ஆச்சு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சா எனக்கு வெறும் இருபத்தி மூனு வயசு தான் ஆகியிருக்கும் ஆனா அண்ணனுக்கு வயசு இருபத்தி எட்டு ஆகிடும்..அப்புறமா அண்ணாவையும் பாத்து மாப்பிள்ளைக்கு ரொம்ப வயசு ஜாஸ்தின்னு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க என்று இடையில் புகுந்தாள்.கௌசல்யா.


ம்ப்ச் கௌசி இது என்ன பெரியவங்க பேசும்போது இடையில் வந்து பேசுற பழக்கம் என்று அண்ணனாக கேசவன் கண்டித்தான்.

நான் ஒன்னும் குட்டி பாப்பா கிடையாது அண்ணா என்று கோபத்துடன் கூறினாள்.


அதுக்காக நீ பெரிய பொண்ணும் இல்ல புரிஞ்சுதா என்று சொல்லவும்.

அப்புறம் எதுக்காக எனக்கு கல்யாணம் பேச்சு எடுக்குறீங்க நான் பெரிய பொண்ணு இல்ல தானே என்று திருப்பி பதில் கொடுத்தாள்.

இவர்கள் சண்டையில் லட்சுமிக்கு அப்பொழுதுதான் ஒரு உண்மை உரைத்தது மகளின் வாழ்க்கைக்காக மகனின் வாழ்க்கையை பணயம் வைக்கின்றோமோ என்று.


ஆனாலும் இளையவனும் திருமணம் முடிந்த கையோடு மருமகளின் பின்னே சென்று விட்டாள் இந்த பெண் பிள்ளையின் கதி என்ற பயமும் கூடவே ஒட்டிக்கொண்டது.
 
Last edited:
Top