கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே...6

ksk2022-writer

Well-known member
Ksk – 47

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே

அத்தியாயம் 6

துன்னாலைப் பிரதேசத்தின் இன்னுமொரு இடத்தில் அளவு பிசகாமல் நட்டு வைத்தது போல வரிசையாக வளர்ந்திருந்த பனைமரங்கள் இரு மருங்கிலும் ஓங்கி வளர்ந்து நிற்க, நடுவே ஊடறுத்துச் சென்ற மணற் பாதையின் முடிவில் வல்லியானந்தப் பிள்ளையார் என்ற பெயர் கொண்ட பிள்ளையார் கோவில் அமைந்திருந்தது.

கோவிலுக்கு இரண்டு பக்கத்திலும் காவல் அரண் போல நின்றிருந்த பனை மரங்கள் காற்று வீசும் திசைக்குத் தோதாக நர்த்தனம் ஆடுவது போல ஆடிக் கொண்டிருந்தன.

பகல் மெல்ல மெல்ல நகர்ந்து செல்ல இரவை வரவேற்பதற்காக மாலைப் பொழுது வானமெங்கும் செம்மஞ்சள் நிறத்துச் சாயத்தை லேசாகப் பூசிக் கொண்டு மிளிர்ந்து கொண்டிருந்தது.

சூரியன் மேற்கு மூலையில் மெல்ல இறங்கிக் கொண்டிருப்பது கோவிலுக்கு முன்னால் நின்ற பனைமரங்களுக்கு ஊடாக அழகாகத் தெரிந்தது.

வீட்டின் மொட்டைமாடியில் நின்றபடி பனைமரங்களின் அசைவையும் சூரிய அஸ்தமனத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஈழக்குமரன்.

அவனது கைகளில் இருந்த அவனது அலைபேசியைச் சுழற்றிச் சுழற்றி அதைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தவனின் மனதினுள் அவளுடன் பேசலாமா வேண்டாமா என்று ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது.

என்றுமில்லாத திருநாளாக இன்று அவனுக்கு அவளுடன் பேச வேண்டும் போலவே தோன்றிக் கொண்டிருந்தது.

பத்து முறைக்கும் அதிகமாக அவளுடன் பேசும் எண்ணத்தில் அலைபேசியை எடுத்து எடுத்து வைத்து விட்டானே தவிர அவனால் ஏனோ அவளுடன் பேச முடியவில்லை.

ஒருபக்கம்
“அவளாகப் பேச மாட்டாளாமா? அவ்வளவு திமிரா அவளுக்கு… தானாக வந்து பேசினால் குறைந்து போய் விடுவாளாமா?”
என்ற எண்ணமும்
மறுபக்கம்
“ஏன் நானாகப் போய்ப் பேசக் கூடாதா? எனக்கும் அப்படி என்ன திமிர் கூடி விட்டதா? முதலில் நானாகப் போய்ப் பேசினால் குறைந்து போய் விடுவேனா என்ன?”
என்ற எண்ணமும் அவனைப் பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டது.

மேற்கு மூலையில் சூரியன் முழுவதும் முழுகி முடிந்த வேளையில் அவளுடன் பேசி விட வேண்டியது தான் என்ற முடிவுடன் தன் அலைபேசியைக் கையில் எடுத்துக் கொண்டான் ஈழக்குமரன்.

தொடர்புப் பட்டியலில் அவளது பெயரைத் தேடியவன் சற்றே நிதானித்து, கடைசியாக அவளது பெயரை எப்படிப் பதிவு செய்தேன் என யோசித்தான். உடனேயே அந்தப் பெயர் நினைவுக்கு வரவே ‘ச' வரிசையில் அவளுக்கு அவன் வைத்த பெயரைத் தேடினான்.

முதலாவதாகவே ‘சண்டைக்கோழி' என்ற பெயர் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றது.

உடனே பகிரியினுள் சென்று அவள் நிகழ்நிலையில் நிற்கிறாளா இல்லையா என்பதைப் பார்ப்பதற்காக அவளது பகிரியின் முகப்போவியத்தைத் தட்டிப் பார்த்தான்.

அவனுக்கு எப்போதுமே அவள் தனது முகப்போவியத்தில் விட்டுக் கொள்கின்ற புகைப்படங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு உண்டு. அழகழகான இயற்கைப் படங்கள், ஓவியப் படங்கள் முதலானவற்றையே அவள் எப்போதும் தன் முகப்போவியமாக வைத்துக் கொள்வாள் என்பதே அதற்கான காரணம்.

அவளது முகப்போவியத்தை அவன் பார்த்தே கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. ஒரு சில சண்டைகள் ஒரு சில மனஸ்தாபங்கள் என்று இருவருமே இது நாள் வரை ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.

ஒரு வித ஆர்வத்துடன் அவளது முகப்போவியத்தைத் தட்டிப் பார்த்தவனது விழிகள் விரிந்தன.

முகப்போவியத்தில் என்றுமே தன் புகைப்படத்தை வைக்காதவள் அப்போது ஒரு பெண்குழந்தையை அணைத்தபடி இருந்த புகைப்படத்தை முகப்போவியத்தில் வைத்திருந்தாள்.

அவள் கட்டியிருந்த பாசிப்பச்சை நிறத்துப் புடவையில் கறுப்பு நிறத்துச் சரிகை வேலைப்பாடு செய்யப் பட்டிருந்தது. அவள் அணைத்திருந்த பெண குழந்தையும் அதே நிறத்தில் சரிகைப் பாவாடை சட்டை அணிந்திருந்தது.

மஞ்சள் தேய்த்துக் குளித்திருப்பாள் போல அவளது மாநிறத்து முகம் மாலை வெயில் பட்டு ஒரு வித பிரகாசத்தைத் தோற்றுவித்திருந்தது. அந்தப் பெண் குழந்தையும் அவளைப் போன்றே மாநிறமாகவே இருந்தது.

“குழந்தைக்குக் கிட்டத்தட்ட நான்கு வயது இருக்குமோ… யாராக இருக்கும் அந்தப் குழந்தை. இவள் இங்கே இருந்து சென்று மூன்று வருடங்கள் வரும் அதற்குள் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து முகப்போவியத்தில் விடும் அளவுக்குப் போய் விட்டாளா?”
என யோசித்தபடியே
அந்தப் புகைப்படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தவனுக்கு அவளது முகம் பார்த்த அந்த நொடியே அவளுடன் பேச வேண்டும் என்ற வேகம் வந்தது.

“அவளாகப் பேசுவாள் பேசுவாள் என்று காத்திருந்து காத்திருந்து இரண்டு மாதங்கள் ஓடியே போய் விட்டது. இப்படியே விட்டால் இரண்டு வருடங்கள் ஆனாலும் அவள் பேச மாட்டாள். நானாகவே பேச வேண்டியது தான்…”
என நினைத்தவன் தன் பகிரியின் முகப்போவியத்தை மாற்றித் தானும் சிலம்பரசியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்தான்.

தங்களது புகைப்படத்தை ஒரு தடவைக்கு இருதடவை பார்த்தவன் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டான்.

குறுஞ்செய்தியைத் தட்டி விட்டதும் அலைபேசியை மொட்டைமாடிச் சுவற்றில் வைத்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தவனுக்கு ஒவ்வொரு செக்கனும் கனமாய்க் கரைந்தது.

அந்த நேரத்தில் தன் வீட்டுச் சமையலறையில் இரவு உணவு தயாரிப்பதற்காக அரிசிமாப் பிட்டு அவித்துக் கொண்டிருந்த ஸ்ரீரங்கநாயகியின் அலைபேசியில்

“ஒரு பூவெழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும்… நதி நீர் எழுதும் கவிதை அலை ஓவியமாய் விரியும்...”
என்ற அழகான பாடல் போய்க் கொண்டிருந்தது.

அந்தப் பாடலுக்கு ஏற்றாற் போலத் தானும் பாடலை முணுமுணுத்தபடி பம்பரம் போல சுழன்று வேலை செய்து கொண்டிருந்தவளைக் குறுஞ்செய்தி ஒன்று வந்ததற்கான மெல்லிய ஒலி திரும்பிப் பார்க்க வைத்தது.

கையில் வைத்திருந்த தேங்காயை அப்படியே வைத்து விட்டு வெளிப் பக்கத்துச் சாளரக் கதவு மூடியிருக்கிறதா என்று பார்த்து விட்டு வந்து அலைபேசியைக் கையில் எடுத்தாள்.

“தேனுவக்காவுக்கு இப்போது தான் என்னிடம் பேசுவதற்கு நேரம் கிடைத்ததாமா”
என நினைத்தபடி அலைபேசியின் முகப்பைப் பார்த்தவளுக்குப் படபடப்பாக இருந்தது. கைகள் லேசாக நடுங்குவது போல இருந்தது. மெல்ல அருகில் இருந்த சுவற்றைப் பிடித்தபடி கீழே அமர்ந்து கொண்டவள் கண்களை இறுகமூடியபடி சமையலறைச் சுவற்றோடு சாய்ந்து கொண்டாள்.

மூடியிருந்த இமைகளினூடாகச் சூடான கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது.
அந்த உணர்வை ஒரு சில கணங்கள் கண்கள் மூடி அனுபவித்தவளோ கண்ணீரைத் துடைத்து விட்டு ‘முறைப்பு மன்னன்' என்ற பெயரில் வந்திருந்த குறுஞ்செய்தியைத் தட்டி உள்ளே சென்று பார்த்தாள்.

அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. இன்றாவது பேச வேண்டும் என்று தோன்றியதே என நினைத்தவள் அப்போது தான் அவனது முகப்போவியத்தைப் பெரிதாக்கிப் பார்த்தாள்.

பெண்குழந்தை ஒன்றை அணைத்தபடி இருந்த அவன் பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தான். அந்தக் குழந்தை பச்சை வண்ணச் சரிகைப் பாவாடை அணிந்திருந்தது.

அந்தப் புகைப்படத்தை நெடு நேரமாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன் பதிலுக்காகக் காத்திருப்பானே என்ற எண்ணம் அப்போது தான் வந்தது.

அதே நேரத்தில் மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த ஈழக்குமரன் பொறுமையிழந்து போய் அலைபேசியைக் கையில் எடுத்துப் பார்த்தான்.

அவனது குறுஞ்செய்தியை அவள் பார்த்து விட்டாள் என்பதற்கான அடையாளமாக நீல நிறக் கோடுகள் காட்டிக் கொண்டிருந்தன.

“ஒரு வேளை என் மீது ரொம்பக் கோபமாக இருக்கிறாளோ? ஏன் பார்த்து விட்டுப் பதில் ஒன்றையும் போடவில்லை…”
என நினைத்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அங்கே அவளோ
“இவன் ‘ஸ்ரீ’ என்று மட்டுமே அனுப்பியிருக்கிறான். இதற்கு என்ன பதில் போடலாம்”
என யோசித்து விட்டு ‘ஈழா…’ என்று அவனது பெயரையே தட்டி விட்டாள்.

அவள் பதில் அனுப்பிய உடனேயே
அவளது பதிலை அவன் பார்த்ததற்கான அடையாளமாக நீல நிற அடையாளம் காட்டியது.

அதைப் பார்த்ததுமே அவன் தனது முகப்போவியத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.

அவளை அறியாமல் அவளது உதடுகள் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.

அவளிடம் இருந்து வந்த ‘ஈழா…’
என்ற பதிலைப் பார்த்தவனுக்குத் தான் எப்படி உணர்கிறேன் என்று அவனுக்கு புரியவில்லை. மெல்லிய புன்னகையோடு தலைமுடியை அழுந்தக் கோதி விட்டு
“எப்படி இருக்கிறாய் நலமா?”
என்று அனுப்பினான்.
அவனது கேள்வியைப் பார்த்தவளுக்குத் தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல இருந்தது.

தன் பதிலுக்காக அவனை ரொம்ப நேரம் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக
“ம்ம்ம்… இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”
என்று பதில் அனுப்பி வைத்தவள் அடுப்பில் இருந்த உணவை எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்து விட்டுச் சமையல் மேடையில் இருந்தே ஈழக்குமரனுடன் பேசத் தொடங்கினாள்.

இருவரும் தங்களை மறந்து ஒருவருடன் ஒருவர் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்தனர்.

“ம்ம்ம்… நலமாக இருக்கிறேன்…”

“ம்ம்ம்…”

“ம்ம்ம்…”

“படத்தில் இருப்பது தான் நீங்கள் தத்தெடுக்கப் போகும் குழந்தையா?”

“ம்ம்ம்… ஆமாம்”

“ஓ…”

“உனக்கு எப்படித் தெரியும்?”

“என்ன?”

“நான் தத்தெடுப்பது பற்றி…”

“தேனுவக்கா தான் சொன்னார்கள்”

“ஓ… சரி…”

“குட்டிப் பொண்ணுக்குப் பெயர் என்ன?”

“சிலம்பரசி…”

“நிஜமாகவா?”

“சத்தியமாக…”

“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது…”

“நீ சொன்ன பெயர் தான்… நீ ஒரு குழந்தையைத் தத்தெடுத்தால் அந்தப் பிள்ளைக்குச் சிலம்பரசி என்று தான் பெயர் வைப்பேன் என்று சொன்னாய் ஞாபகம் இருக்கிறதா?”

“அதை எப்படி நான் மறப்பேன்”

“இல்லை நீ மறந்து தான் போனாய் ஸ்ரீ.”

“இல்லை நான் மறக்கவில்லை ஈழா…”

“அப்படியானால் நீ ஏன் இன்னும் ஒரு பிள்ளையையும் தத்தெடுக்க முன் வரவில்லை.”

“ஈழா…”


“ம்ம்ம்… சொல்லு நான் தான்”

“உங்களைப் பற்றி நான் தெரிந்து வைத்திருக்கிற அளவிற்குக் கூட நீங்கள் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லைப் போல…”

“அப்படி நான் என்ன உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை.”

“என் படத்தில் என்னுடன் இருக்கும் குழந்தையைப் பார்த்தீர்களா? அந்தக் குழந்தை யாரென்று தெரியுமா?”

“உன் படத்தில் இருக்கும் குழந்தையா அது பக்கத்து வீட்டுக் குழந்தை தானே…”

“இல்லை…”

“இல்லையா… அப்படியானால் யார்?”

“என்னுடைய மகள்.”

“என்னடி சொல்கிறாய்?”

“நான் தத்தெடுக்கப் போகும் என்னுடைய மகள்.”

“உண்மையாகவா ஸ்ரீ.”

“சத்தியமாக ஈழா…”

“உன்னை என்னவோ என்று நினைத்தேன் பரவாயில்லை கெட்டிக்காரி தான் நீ…”

“என்னவென்று நினைத்தீர்கள்?”

“அதெல்லாம் சொல்ல முடியாது போ…”

“தெரியும் தெரியும்… எப்படியும் என்னைப் பற்றி நல்ல விதமாக நினைத்திருக்க மாட்டீர்கள் நீங்கள்…”

“ஆமாம் நீங்கள் பெரிய ராணி மகாராணி உங்களைப் பற்றி நாங்கள் எப்போதுமே நல்லது மட்டும் தான் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டுமா…”

“நீங்கள் சொன்னாலும் சொல்லாது விட்டாலும் நான் ராணி மகாராணி தான்…”

“போடி இவளே…”

“என்னது டியா?”

“ஆமாம்டி இவளே…”

“போடா இவனே…”

“என்னது டாவா?”

“ஆமாம்டா இவனே…”

“இப்போது நேரில் வந்தேன் என்றால் தெரியும்.”

“ஆஹா அப்படியா? தைரியம் இருந்தால் வந்து தான் பாருங்களேன்…”

“இப்போது வர மாட்டேன் என்கின்ற கொழுப்பா?”

“தெரிந்தால் சரிதான்…”

“ஏய் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்… மாமாவிடம் எப்படி சம்மதம் வாங்கினாய்?”

“என் பெயரொன்றும் ஏய் இல்லை…”

“சரி தான் போடி இவளே…”

“நீ போடா…”

“சரி சரி சண்டை வேண்டாம்… தத்தெடுப்பதற்கு எப்படி மாமாவிடம் சம்மதம் வாங்கினாய்?”

“அதெல்லாம் பெரிய கதை ஈழா…”

“சரி சொல்லுக்
கேட்போம்…”

“நான் என்ன கதையா சொல்கிறேன்…”

“நீ தானே பெரிய கதை என்று சொன்னாய்…”

“ஆமாம் சொன்னேன்…”

“சரி அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்… குட்டிப் பொண்ணுக்கு என்ன பெயர்?”

“எங்கே கண்டு பிடித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்…”

“எப்படிக் கண்டு பிடிக்கட்டும்…”

“நான் சொன்ன பெயரை நீங்கள் வைத்து விட்டால், நான் எந்தக் பெயரை வைத்திருப்பேன்?”

“ஏய்…”

“ம்ம்ம்… சொல்லுங்கள் நீங்கள் நினைப்பது சரி தான்…”

“ஏய் நிஜமாகத் துளசிதேவியா?”

“ஆமாம் ஈழா…”

“எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஸ்ரீ”

“ம்ம்ம்…”

“ம்ம்ம்…”
எனப் பேசிக் கொண்டே இருந்தவர்கள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சம் வேலை இருக்கிறது என்ற சிறு பொய்யுடன் பேச்சை முடித்துக் கொண்டார்கள்.

பேசி முடித்த பின்னரே
“திருமண விடயம் பற்றி அவளிடம் கேட்டிருக்கலாமோ”
என்று அவனும்
“திருமணம் பற்றி அவர் ஏன் ஒன்றும் கேட்கவில்லை”
என்று அவளும் நினைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிக் கொண்டது மட்டும் மனதிற்கு நிம்மதியாக இருந்தது இருவருக்குமே…

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

செந்தில்குமரனின் பெரிய வீட்டினது வரவேற்பறையில் அமுதவாணி, செந்தில்குமரன், ஈழக்குமரன் அமர்ந்திருக்க செந்தில்குமரனின் மூத்த மகன் சந்தனக்குமரனும் அவனின் மனைவி தேனருவியும் அப்போது தான் உள்ளே வந்தார்கள்.

“பெரியண்ணாவுக்கும் பெரியண்ணிக்கும் இன்று தான் இந்தப் பக்கம் காற்று வீசுகிறது போல…”
என்று சிரித்த தன் கடைசித் தம்பி ஈழக்குமரனின் காதுகளை வலிக்காமல் திருகி விட்டுத் தானும் சிரித்தபடி அமர்ந்து கொண்டான் சந்தனக்குமரன்.

“மாமி… அம்மா உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்…”
என்றபடி தன் தாய் வீட்டில் இருந்து கொண்டு வந்த பலகாரப்பைகளை அமுதவாணியிடம் கொடுத்து விட்டு ஈழக்குமரனுக்கு அருகில் அமர்ந்து கொண்டு அவனிடம் குசலம் விசாரிக்க ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில் செந்தில்குமரன் அமுதவாணி தம்பதியினரின் இரண்டாவது மகனான எழில்குமரனும் அவனது மனைவி இசையருவியும் வீட்டினுள் வந்தார்கள்.

“என்னடா இது பெரியண்ணாவும் பெரியண்ணியும் வந்த நேரம் சின்னண்ணாவும் சின்னண்ணியும்
கூட வருகிறார்கள். ஒரு வேளை இருவரும் சொல்லி வைத்து வந்தீர்களோ…”
என்று கேட்ட ஈழக்குமரனின் காதுகளை இப்போது தேனருவி பிடித்துத் திருகினாள்.

“ஐயோ வலிக்கிறது அண்ணி…”
என்று நடித்த சின்னவனது செயலில் வந்த சிரிப்பை அடக்கியபடி
“வலிக்கட்டும் வலிக்க வேண்டும் என்பதற்காகத் தானே திருகுகிறேன்.”
என்று பதிலளித்த தேனருவி சில நொடிகளுக்குப் பிறகே அவன் காதில் இருந்து கைகளை எடுத்தாள்.

“அதிருக்கட்டும் ஏன் அண்ணி அவன் காதுகளைத் திருகினீர்கள் ஏதும் நக்கல் செய்தானா என்ன?”
என்று சிரித்தபடியே கேட்டான் எழில்குமரன்.

“இவன் பேசுகிற பேச்சில் எனக்கே எல்லாம் மறந்து போகிறது எழிலு… இரண்டு நாட்களுக்கு முன்னால் இவன் என்னிடம் பேசும் போது சொன்னான் ‘பெரியண்ணாவும் நீங்களும் உங்கள் அம்மா வீட்டுக்குப் போனதுமே சின்னண்ணி சின்னண்ணாவை அழைத்துக் கொண்டு அவர்களுடைய அம்மா வீட்டுக்குப் போய் விட்டார்கள்'
என்று… நானும் அதை அப்போது அப்படியா என்று அப்படியே விட்டு விட்டேன். இப்போது சொல்கிறான் ‘பெரியண்ணாவும் பெரியண்ணியும் வந்த நேரம் சின்னண்ணாவும் சின்னண்ணியும் வந்திருக்கிறார்களாம் ஒருவேளை இருவரும் சொல்லி வைத்து வந்தீர்களோவாம்…’ என்று… இவன் இப்படி சொன்னதைக் கேட்டதும் இந்த இசை ஏன் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவளுடைய அம்மா வீட்டுக்குப் போனாள் என்று நினைத்து விட்டேன் எழிலு…”
என்று விளக்கம் கொடுத்த தேனருவியைப் பார்த்து மற்ற ஆறு பேருமே சிரித்து விட்டார்கள்.

அதுவரை பேசாமல் சிரித்தபடி இருந்த இசையருவியோ
“ஐயோ அக்கா இவன் என்னையும் தான் இப்படி எல்லாம் தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்க வைப்பான் தெரியுமா… ஒரு இரண்டு கிழமைக்கு முதல் பெரியண்ணி அவர்கள் அம்மா வீட்டுக்குப் போய் விட்டார்கள் நீங்கள் உங்கள் அம்மா வீட்டுக்குப் போகவில்லையா என்று கேட்டான். நானும் ஒன்றையும் யோசிக்காமல் தேனுவுக்கு ஏதும் அவசர வேலை போல அது தான் அவளின் அம்மா வீட்டுக்குப் போய் விட்டாளாக இருக்கும் என்று சொன்னேன். அந்த நேரம் பார்த்து வந்த எதிர் வீட்டு மாமி ஏன்டி இசை நீயும் தேனுவும் சொந்த அக்காதங்கை தானே அல்லது ஒன்று விட்ட அக்காதங்கையா என்று கேட்டார்கள். நானும் சொந்த அக்காதங்கை தான் மாமி ஏன் ஒன்றும் தெரியாத மாதிரிக் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரோ நீ தானே இப்போது தேனு அவளின் அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள் என்று சொன்னாய் என்றார்கள். அதற்குப் பிறகு அந்த மாமி போகும் வரை நான் பட்ட பாடு இருக்கிறதே கடவுளே… இவன் வேறு என்ன சொல்வது என்றாலும் சிரிக்காமல் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு சொல்வான் தெரியுமா எனக் கே எல்லாம் குழம்பி விடும்…”
என்று சொல்லி விட்டு ஈழக்குமரனின் அடுத்த பக்கக் காதைப் பிடித்துத் திருகினாள்.

சிரித்தபடியே இருந்த செந்தில் குமரன்
“கிட்டத்தட்ட பன்னிரண்டு
வருடங்களுக்கு முன்னால் இவன் என்னிடம் ஓடி வந்து என்னுடைய அம்மாவுக்கு நீங்கள் உங்கள் மனைவிக்காக வாங்கி வைத்த பட்டுப் புடவை வேண்டுமாம் என்று சொன்னான். அவன் கேட்ட தினுசில் ஐயோ இவன் அம்மாவுக்குப் புடவையைக் கொடுத்தால் அமுதா கோபித்துக் கொள்வாளே என்று நானே யோசித்து விட்டேன் என்றால் பாருங்கள்…”
என்று சொன்னார்.

அதைக் கேட்ட மற்ற எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இப்படியே ஈழக்குமரனின் வீரப் பிரதாபங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த குடும்பம் இறுதியில் அவனது திருமணம் பற்றிய விடயத்தில் வந்து நின்றது.

மகன் அதைப் பற்றித் தெளிவாக முடிவு எடுத்து அதற்குச் சம்மதம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பேச்சைச் செந்தில்குமரனே தொடக்கி வைத்தார்.

“இவன் சரியான குறும்புக்காரன் என்பதால் தான் இவனுக்கு இணையான ஒருத்தியைத் தேடிப் பிடித்து இவனது வாழ்க்கைத்துணை ஆக்கி விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருப்பேன்…”
என்ற செந்தில்குமரனுக்கு ஆறுதல் சொல்வது போல
“அதற்கென்ன மாமா… இவனுக்கு என்று வருபவள் இனிமேலா பிறக்கப் போகிறாள். ஏற்கனவே பிறந்து நம் வீட்டுப் பிள்ளையைக் கட்டிக் கொள்வதற்காகக் காத்துத் தானே இருப்பாள். நீங்கள் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்க வேண்டியது தான் மிச்சம் மாமா…”
என்று சொன்னாள் இசையருவி.

தன் இரண்டாவது மருமகளைப் பார்த்துச் சிரித்தவரோ
“பெண் பார்க்கும் படலம் முடிந்து விட்டதும்மா. இனிமேல் நேரடியாகத் திருமணம் தான்.”
என்று சொன்னார்.

“நிஜமாகவா மாமா… அது தான் மாமி எல்லோரையும் உடனே கிளம்பி வரச் சொன்னார்களா?”
என்றபடி அமுதவாணியைப் பார்த்தாள்.

அவரோ ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள். அவ்வளவு தான் அப்படியே ஓடிச் சென்று தன் மாமியைச் சந்தோஷமாக அணைத்துக் கொண்டாள் இசையருவி.

அதன் பிறகு குடும்பத்தினரைத் தனியாளாகவே வைத்து நகைச்சுவை செய்யும் ஈழக்குமரனைக் குடும்பமே வைத்து நகைச்சுவை செய்து சிரித்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தவம் செய்யாமலே கிடைக்கும் வரம் யாதெனில்
அன்பையும் அக்கறையையும் சம விகிதமாய் வழங்கும் குடும்பம் கிடைப்பது
தவம் செய்து கிடைக்கும் வரம் யாதெனில்
பிறந்த வீட்டு சுதந்திரத்தை அச்சுப் பிசகாமல் கொடுக்கும் புகுந்த வீட்டு உறவுகள் கிடைப்பது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Last edited:

Aathisakthi

Well-known member
நிஜம் தான் அழகான குடும்பம்... ஈழக்குமரனின் குறும்புகள் ஆஹா இரகம்😍😍😍😍
 
Top