கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

12. இலக்கியன்

Appusiva

Moderator
Staff member
இதுபோல தஸ்தயேவ்ஸ்கி வாழ்க்கையிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது “

என்றான் மகேந்திரன். அவனைச்சுற்றி எப்போதும் போல குழுமியிருந்தனர் நண்பர்கள். நான் ஒரு ஓரமாக அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு எப்போதும்போல் செல்லை நோண்டிக்கொண்டிருந்தேன். மகேந்திரனின் வசீகரம் அவனது பேச்சு. அவன் பேச ஆரம்பித்தால் நாள் முழுதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். கல்லூரியின் மிக பெரும் நேரம் அவன் படிப்பது உலக இலக்கியங்கள் மட்டுமே. ஆனால் அனைத்து பாடங்களிலும் தவறாது முதலிடம் வருவான்.

நாங்கள் படிப்பது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி. துணைப்பாடமாக பிஸிக்ஸ், மேத்ஸ் உண்டு. எனக்கு மூன்றுமே அலர்ஜி. தேர்வுக்கு முதல் நாள் என் பிட்டு தயாரிக்கும் முறைகளை பார்த்தால் ஒரு தனி சினிமாவே எடுக்கலாம். ஆனால் இந்த மகேந்திரன் என்ன செய்கிறான், ஏது என்றே தெரியவில்லை. கதைப்புத்தகங்களாக மேய்ந்துவிட்டு, தேர்வில் கலக்கிவிடுவான்.

“ படிப்பதை கடமையாக செய்கிறீர்கள் தோழர்... மனசு சுத்தமா வைங்க... தெளிவான மனசில எந்த பாடமா இருந்தாலும் அப்படியே வந்து உட்காரும். மனசு சுத்தமா தெளிவா வைக்க உலக இலக்கியம் நெறயா படிங்க.. “ என்பான்.

அவன் வீட்டில் ஒருநாள் பார்த்தேன். ஒரு அலமாரி நிறைய குண்டு குண்டாய் புத்தகங்கள். அதில் ராஸலீலா என்றொரு புத்தகம் பார்த்துவிட்டு,

“ டேய் மகி... இத படிச்சா மனசு தெளிவாவுமாடா...” என்றேன்.

அவன் என்னைப்பார்த்து மௌனப்புன்னகையுடன் கூறினான்.

“ இலக்கியமா படிச்சா சுத்தமாவும். “

அதன்பின் அந்த புத்தகத்தை படித்துவிட்டு, ஒருவாரம் பிரமை பிடித்தார்போல் நான் அலைந்தது வேறுவிஷயம்.
நாங்கள் மட்டுமல்ல, சில பேராசிரியர்களும் அவனுடன் சரிக்குசரி இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது கண்டிப்பாக அவன் மிகப்பெரும் மேதையாக இருப்பதையும், அவன் என் பக்கத்து தெரு நண்பன் என்பதையும் நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன்.

அவன் படிக்கும் முறையை காப்பியடிக்கும் ஒரு கூட்டமே உண்டு. அதாவது இலக்கிய புத்தகங்களை.

“ அவன் படிக்கற எழுத்தாளர் பேர் எல்லாத்திலயும் ஃ ன்ற எழுத்து வரும் தெரியமா... “ என்பான் பாபு. அதற்கு ஏற்றார்போல் அன்றைய தினம் காஃப்கா, போஃல்கா என்று ஏதாவது பெயர் போட்ட புத்தகம் வைத்திருப்பதை கண் ஜாடையில் காட்டுவான்.
இதற்கு மாற்றாக குமார், “ ...இஸ்கி... புஸ்கி... இதுபோல புத்தகம் எக்ஸாம் டைம்ல படிப்பான் “ என்பான்.

ஆனால் எனக்கு அவனிடம் மிகப்பிடித்த விஷயம் அவனது பொறுமை. ஒருதடவை பஸ்ஸில் வரும்போது, டிக்கெட் எடுக்க மறந்து படித்துக்கொண்டு வந்தான். நானும் கவனிக்கவில்லை. இறங்கும் சமயம் ஞாபகம் வந்து கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டான். ஏதோ கொலைவெறி மூடில் இருந்த அரசு பஸ் கண்டக்டர்,

“ ஏண்டா ... சாவுகிராக்கி... செக்கிங் வந்தா நாந்தாண்டா பதில் சொல்லணும்... உயிரை வாங்கவே வறீங்களாடா..: ” என்று கத்தியவாறு டிக்கெட் கொடுத்தார்.

“ அந்தாள்தான் கவனிக்கல இல்ல... இறங்கபோறப்ப எதுக்கு டிக்கெட் எடுத்து திட்டு வாங்கற.... “ என்றேன்.

அவன் முகத்தில் சிரிப்பு மாறாமல்,

“ அவர் கடமையை அவரும், என் கடமையை நானும் செய்யணும் இல்லையா ..” என்றான்.

புத்தருக்கு பொறந்த பயல்.

பழனிவேல் மட்டும் தெளிவான ஒரு முடிவில் இருந்தான். பக்கத்து தெரு, கூடவே வரும் நண்பனாக இருந்தாலும் என்னைவிட பழனிவேல் அவனுடன் மிக நெருக்கமாக கூடவே சுற்றுவான். முக்கியமாக இலக்கிய அட்வைஸ்களின்போது. ஒருநாள் அதன் ரகசியத்தை உடைத்தான்.

“ மாப்ள... கவனிச்சு பார்... இந்த பொண்டுங்க எல்லாம்... யாரை சுத்திசுத்தி வருது. “

“ ஏண்டா... நம்ம க்ளாஸ் பொண்ணுங்க எல்லாம் நல்ல டைப்புடா... “

“ அடேய்... நான் என்னா சரியில்லன்னா சொல்றேன்... ஆனா பாரு மாப்ள... இந்த மகிய சுத்தி இருக்கற பொண்ணுங்க கூட்டம் நமக்கு எப்பயாவது வருதா.. அவன் பேசறத கவனிக்கறதென்ன.... அவனுக்கு டிஃபன் கொண்டு வந்து கொடுக்கறதென்ன... அடாஅடா... “

“ டேய்... படுபாவி...அவன் நெருப்புடா...”

“ அவன் நெருப்புதான்... இருக்கட்டும்... நான் ஈ மாப்ள... ஈ எங்க சுத்தும்... ? ... இனிப்பு இருக்கற எடம் ஈ சுத்தும்... அதான் அவனோடயே சுத்தறேன்.. “

“ போட்டாங்.... வெட்கங்கெட்டவனே.... “

“ தாங்க்ஸ்... மாப்ள... “ என்றான் பழனிவேல்.

ஆனால் சில நாட்களாக பழனிவேல் மகேந்திரனுடன் சுற்றுவதை குறைத்துக்கொண்டான். அவனை கவனித்தபோது அவன், தற்போது புதிதாக வந்து சேர்ந்திருக்கும் வெங்கடேஷ் என்பவனுடன் சேர்ந்து சுற்றுவதை கவனித்தேன். அவனை விசாரிக்கும்போது,

“ இனிப்பு இடம் மாறிடுச்சு மாப்ள...” என்றான்.

வெங்கடேஷ் தற்போதுதான் வேறு ஊரிலிருந்து வந்து கல்லூரியில் எங்கள் வகுப்பில் இணைந்தவன். அசப்பில், ஆர்யா போல தோற்றமளிப்பவன். கிரிக்கெட்டில் மிக ஆர்வமான அவனுக்கு கெமிஸ்ட்ரி ஃபுரபஸர் மெய்ஞான மூர்த்தி, கவாஸ்கர் என்ற செல்லப்பெயர்கூட வைத்தது ஞாபகம் வந்தது.
வெங்கடேஷ், மகிக்கு நேர் எதிர் குணம் கொண்டவனாக இருந்தான். அவன் இலக்கியம் பேசினால், இவன் உள்ளூர் சினிவாவை பிளந்து கட்டுவான். அவன் அளந்துஅளந்து அளவாக அழகாக பேசுவான். ஆனால் இவனோ தண்ணிலாரியைக் கண்ட கும்பல் கத்திக்கொண்டு ஓடுவதைப்போல திறந்த வாயை மூட மாட்டான். மகி, பாடங்களைப்பற்றி பேசவே மாட்டான். வெங்கடேஷ் உட்காரும் இடம் தோறும் மற்றவர்களுக்கு டியூஷன் எடுத்துக்கொண்டே இருப்பான். ஆனால், சுற்றியிருந்த கும்பல் மகேந்திரனை விட்டு, இவன்புறம் சாய்ந்ததை என்னால் கணிக்கவே முடியவில்லை.

அந்த மாத மாடல் எக்ஸாமில் அந்த அதிசயம் நடந்தது. வெங்கடேஷ் அனைத்து பாடங்களிலும் முதலாவதாக வந்து ஆச்சரியப்படுத்தினான்.
மகேந்திரன் முதல் ஆளாக வந்து, வெங்கடேஷ்க்கு கை கொடுத்து பாராட்டினான்.

“ என்னா ப்ரோ... நான் வந்து சேர்ந்து மூணுமாசமாச்சு... இன்னிக்குதான் நான் கண்ணுக்கு தெரியறேன்... ல்ல... “ என்றான் வெங்கடேஷ்.

எப்போதும் போல மெல்லிய புன்னகையை சிந்திய மகேந்திரன்,

“ எது எப்போ நடக்குமோ , அது அந்த சமயம் கண்டிப்பா நடக்கும் நண்பா.. “
என்றான்.

அதன்பின் அவர்கள் அடிக்கடி, சந்தித்து பேசுவதை கண்டேன். பெரும்பாலான சமயங்களில், தீவிர இலக்கியங்களைப்பற்றி, மகி பேசுவதையும், அதற்கு ஆப்போசிட்டாக வெங்கடேஷ் கமெண்ட் அடிப்பதையும் கவனித்திருக்கிறேன்.

ஒரு இரண்டுமாதம் போயிருக்கும். ஒருநாள் மதிய உணவு இடைவேளையின் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. எப்போதும் போலதான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

“ அப்போ இலக்கியம் படிச்சாதான் அறிவு வளரும்றயா ப்ரோ...? “ என்றான் வெங்கடேஷ்.


“ அறிவு வளர்வது இல்லப்பா.... அது நமக்குள்ளதான் இருக்கு... அதை அடையாளம் காட்ட இலக்கியம் ஒரு விளக்கு.. “ என்றான் மகேந்திரன்.

“ எனக்கு அந்த விளக்கு வேண்டாம்பா... ஒரு டார்ச்லைட் எடுத்துக்கறேன்... அட ஒரு சீமெண்ணெய் விளக்கே எடுத்துக்கறேன்...”

“ நீ கேலியா கேட்டாலும், எனக்கு சிரிப்புதான் வருது. நான் ஒரு அடையாளத்துக்கு விளக்குண்ணேன்... ஒரு வழிகாட்டின்னு வச்சுக்கோ.. “

“ அட புரியுதுப்பா... நானும் அடையாளத்துக்குதான் சொன்னேன். வெளியூர் விளக்கு மட்டுமில்ல... நம்மூர்லயும் இருக்குண்ணேன்... “

இவர்கள், இருவரின் உரையாடல் மிக சுவராசியமாக போய்க்கொண்டிருக்க, அதைக்கேட்க கூடுபவர் அதிகமாயினர். சில பேராசிரியர்களும் சுற்றிவந்து உட்கார்ந்துகொண்டனர்.

அப்போதுதான் நான் ஒருவிஷயத்தை கவனித்தேன். இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, எப்போதும் கோபப்படாத தன்மை. புடம் போட்ட தங்கம் போல சிரித்தமுகம். இதுதான் இவர்களின் வெற்றியின் அடையாளமாக என் மனதில் பட்டது.

“ நம்மூர்ல இருக்கறது, போலச்செய்தல்... அதாவது... மார்க்கேஸ்ஸை காப்பியடிச்சு போலச்செய்தல்.. உண்மையான கட்டுடைத்தல் இங்கே சாத்தியமில்லை.. “ என்றான் மகேந்திரன்.

“ சரிதான் ... இலக்கியம்னா.... தெளிவா சொல்லு... மக்களின் மேல உண்மையான அக்கறை நம்மூர்ல யாருக்கும் இல்லன்றியா...” என்றான் வெங்கடேஷ்.

“ மக்களின் மேல் அக்கறை வேற... தீவிர இலக்கியம் தளமே வேற நண்பா.... “

“ அட நம்ம பெரியார எடுத்துக்கோயேன்... அவர் உடைக்காத கட்டா... அவர் சொன்னத எல்லாம், கொஞ்சம் கற்பனை கலந்து கதையா அடிச்சுவுடு பாக்கலாம்... உலக இலக்கியமெல்லாம் பிச்சை வாங்கணும்... “

“ இல்ல... நீ அரசியல் பேசறே.... அதுக்கு நான் வர்ல..... “

“ அரசியல் கலக்காம என்ன கூ..தலுக்கு இலக்கியம்.... நீ உண்மையா உலக இலக்கியம் படிச்சா அரசியல் இல்லாம இருக்காது பாத்துக்கோ... ஆனா நீ ஒரு பம்மாத்துக்குக்கு ரீல் அடிக்கறேன்றேன்... “

“ தனிப்பட்ட விமர்சனம் வேணாமே வெங்கடேஷ்....” என்ற மகியின் முகம் சற்று சிவந்துதான் போனது.

“ ஆமாமா... உலக இலக்கியம் படிச்சா தெளிவாவேன்னு எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணிட்டு... மத்தவன் பாடம் படிக்கறத கெடுத்து... நீ வீட்டுக்கு போய் மாங்குமாங்க்குன்னு உருபோடறதையும், வாரம் ரெண்டு நாள் வெளியூர் டியூஷன் போறதையும் கூட சொல்லக்கூடாதுதான்... “
என்று வெங்ககடேஷ் சொல்ல....

எங்கிருந்துதான் மகேந்திரனுக்கு கோபம் வந்ததோ... சடாரென்று எழுந்தவன்... தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை தன் தலை உயரத்திற்கு தூக்கி, பொட்டென்று போட்டான். அவன் கைகள் நடுங்குவதை முதல் தடவையாக பார்த்தேன்.

“ ஹேய்... ப்ரோ.... குற்றமும் தண்டனையும் நாவல்ல... இது மாதிரியே.....”
என்று வெங்கடேஷ் சொல்லிக்கொண்டிருக்க...

சட்டென்று திரும்பி வெளியேறினான் மகேந்திரன்.
 
  • Like
Reactions: KaK
Top