கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

13. புதையல்

Appusiva

Moderator
Staff member
புதையல்

“ ஐந்து பவுனும், கூட பத்தாயிரமும் குடுத்துடுங்க… அதோட, கல்யாண செலவுக்கு ஒரு முப்பதாயிரம் ஆவும்… ரெடி பண்ணிடுங்க… “
என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட சற்று ஆடித்தான் போனார் குணசேகரன்.

சில ஆண்டுகளுக்குமுன் ப்ளாட்ஃபாரத்தில் நடந்து வரும்போது ஒரு கார், போதையில் மோதிய ஆக்ஸிடெண்டில் கால் அடிபட்டு, இருந்த மிச்சசொச்சமெல்லாம் விற்று, வைத்தியம் பார்த்து, இப்போதுதான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். வரும் கூலி தினசெலவுக்கே சரியாகும் சூழல். மனைவி ரஞ்சிதமும் வீட்டு வேலைக்கு சென்று இரண்டாயிரம் சம்பாதித்து ஏதோ கொஞ்சம் மிச்சம் பண்ணி வருகிறார்.

“ நல்ல இடங்க…. எப்படியாவது கடனை வாங்கியாவது முடிச்சுடலாங்க… நாம கஷ்டப்பட்டு, கடனை கட்டிடலாம். அவளாவது நல்லா இருக்கட்டும்… பாவம் … கஷ்டத்திலேயே வளர்ந்த புள்ள… “

என்று ரஞ்சிதம் சொன்னது சரிதானென்று பட்டாலும், தன்னை நம்பி யார் கடன் தருவார் என்ற கேள்வி பூதாகரமாய் இருந்தபோதுதான் சரவணகுமார் வந்தான். சரவணன் அவருக்கு தூரத்து சொந்தம். தம்பி முறை. பக்கத்து ஊர். அவர் மீது மிகுந்த பரிவும் பாசமும் கொண்டவன். பால் வியாபாரம் செய்து வருகிறான்.

டீ கடையில் அமர்ந்து, அவனிடம் பேசி, தன் கஷ்டங்களை சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டே பேப்பரை புரட்டியவர் ஒரு பக்கத்தை சில நேரம் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ அண்ணா…. நம்ம போலிஸ்காரர் ஜானிகிட்ட கடன் கேட்டுப்பார்க்கலாம்னு சொல்றேன்… நீ என்ன பேப்பரையே பாக்காத மாதிரி இந்த பார்வை பாக்கற… “ என்றான் சரவணகுமார்.

“ இதபாரு சரவணா… இதெல்லாம் தங்கம்தானே.. “ என்று ஒரு ஃபோட்டோவை காட்டினார் குணசேகரன்.
அதில் ஒரு சாமியாரின் படம் போட்டிருந்தது. அந்த சாமியார் சமீபத்தில்தான் சரவணன் ஊரில் புதிய ஆஸிரம கிளையை திறந்து வைத்து, அங்கேயே தங்கியிருந்தார். ஒரு நாற்பது வயதுதான் இருக்கும். படத்தில் ஒரு தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது கழுத்தில் போட்டிருந்த தங்க ருத்திராட்ச மாலையின் கனம் மட்டுமே ஐம்பது பவுன் தேறும். அது தவிர ராஜா போல கிரீடம், கையில் காப்பு… இன்னமும் சினிமாவில் கவரிங் நகைகளாக பார்த்த அத்தனையும் தங்கத்தில் போட்டிருந்தார்.

“ ஆமாண்ணா… சுத்த தங்கம்.. “

“ எப்படிடா…. இது மட்டும் ஆயிரம் பவுன் தேறும் போலயே… “

“ இருக்கும்… இருக்கும்… இது மாதிரி தினம் வேற வேற வேஷம் போடுவாப்ல… அப்ப கணக்குப்போடுங்க… சரியான காசு… “

“ இந்த மாதிரி ஆளுங்க நெனச்சா… நம்மள மாதிரி இருக்கவங்களுக்கு… உதவி பண்ணலாமில்ல… ஒரு அஞ்சு பவுன் போதும்டா.. “

“ உன்னை போல இருக்கவங்களுக்கு உதவி பண்ணா, என்னா கெடைக்கும்… வேஸ்ட்… அவர் பண்றதெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களுக்கு.. “

“ புரியலடா…”

“ அட… ஏமாத்தி சொத்து சேத்தவனுங்க அத மறைக்க இவர்ட்ட கொடுத்து வைக்கிறாங்க… இவர் வந்து அவங்க சொர்கத்துக்கு போக சாமிகிட்ட வேண்டிக்கறார்… “

“ ஏன் … நாம வேண்டினா சாமி கேட்காதா… “

“ நம்ம சாமி ஏழைசாமிண்ணா… இவங்க சாமில்லாம் பெரிய இடம்… நாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.. “

“ அதிகாரிங்கல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா… “

“ அட நீ வேற…. இவர நெருங்ககூட அவங்களால் முடியாது… “

“ இதெல்லாம் பாக்க, நாம பொழைக்கற பொழப்பே கேவலமா இருக்குடா..”

என்று விரக்தியாய் சொல்லிவிட்டு, சரவணனை பார்த்தார் குணசேகரன். அவரது வார்த்தையின் வீரியம் தாங்காமல் அவனது முகம் சுருங்கிப்போனது. ஆனால் ஒரு கணம்தான். திடீரென்று அவன் முகம் மின்னலடித்தாற்போல் பிரகாசமானது. அவரை இழுத்துக்கொண்டு ஆளில்லாத பக்கத்து தெருவில் நிறுத்தினான்.

“ என்னடா… யார்ட்டயாவது கடன் வாங்கிட்டு மாட்டிட்டயா… இந்த மாதிரி இழுத்துட்டு வர…” என்று மூச்சு வாங்க அவனிடம் கேட்டார்.

அவன் பிரகாசம் கலையாமல் அவரிடம் சொன்னான்.

“ அண்ணா… சொல்றேன்னு தப்பா நெனக்காத… சாமியாரின் புது ஆஸிரமம் இருக்கில்ல… அங்க சமீபமா எங்கிட்டதான் பால் வாங்கறாங்க… தினம் முப்பது லிட்டர், சுத்தமான பசும்பால் வேணும்னு. அது சரியா சாமியார் குடிலுக்கு போகுது. ஒருசில நாள் என்னை தூக்கிட்டு வரச்சொல்வாங்க.. நான் பாத்திருக்கேன்… சாமியார் குடில் சும்மாதான் இருக்கும். ஆளிருக்க மாட்டாங்க…. “

“ அதுக்கு…. நீ… “ என்றவர்…
சட்டென்று அதிர்ந்து…

“ எலேய்….. திருடச்சொல்றியா… போடாங்… அதுக்கு மருந்து குடிச்சு சாவலாம்.. “ என்றார்.

“ உன் இஷ்டம்… நான் தயார் ஆயிட்டேன். அவன் அப்பன்வூட்டு காசா… அவனே துறவிதானே… என் சாமி ஒரு ஐடியா கொடுத்திருக்கு…” என்றுவிட்டு சரவணன் கிளம்பிவிட்டான்.

அவனை திட்டிவிட்டு வந்தவர், அன்று இரவு அவன் திரும்ப வந்து கூப்பிட்டபோது, ஏன் அவனுடன் கிளம்பினார் என்பது அவருக்கே தெரியவில்லை.

அந்த ஆஸிரமத்துக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே இருளில், டிவிஎஸ்ஸை நிறுத்திவிட்டு நடந்தார்கள். அவருக்கோ திகீர் திகீரென்றது.

ஆஸிரமத்தின் நுழைவாயிலை தவிர்த்து, பின்புறம் சென்றார்கள். புது ஆஸிரமம் என்பதால் ஓலைகளால் காம்பவுண்ட் அமைத்திருந்தார்கள். அதை தாண்டுவது மிக சுலபமாக இருந்தது. ஆனாலும் உள்ளே நடமாட்டம் இன்னமும் குறையவில்லை.

இவர்கள் இருவரும் ஒரு பெரிய யாககுண்டம் அமைத்திருந்த அறையின் ஒரு ஓரத்தில் போட்டிருந்த கூடைகளின் அடுக்குகளுக்கு பின்புறமாய் அமர்ந்து கொண்டனர். இவர்கள் எழுந்தாலொழிய கண்டுபிடிப்பது கடினம். அதே சமயம், இவர்களின் பார்வையில் நடமாட்டம் முழுதும் கண்டறிய முடிந்தது. எல்லாம் எளிதாக நடந்தேறுவதே குணசேகரனுக்கு கலக்கத்தை தந்தது.


சரியாக மணி பன்னிரண்டைத் தாண்டும் போது, நடமாட்டம் குறைய ஆரம்பித்தது. ஒரு சிலர் ஜோடி ஜோடியாக சில குடிலுக்குள் போனார்கள். சரவணனும், குணசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

சரவணன் தன் உதட்டை பிதுக்கி, கண்ணால் அவர்களை கேலி செய்தான்.
இருவரும் மிக மெதுவாக, சாமியாரின் குடிலை நெருங்கினார்கள். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். சாமியார் சில சிஷ்யப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

கடிகாரத்தை காட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். தலையாட்டி ஆட்டி கேட்டுக்கொண்டவர்கள் வெளியேறினர். சாமியார் சட்டென்று எழுந்தவர் நேராக, ஜன்னல் புறமாக பார்த்தபோது அவர்களுக்கு ஜில்லிட்டது.

நல்லவேலையாக அவர் தன் பார்வையைத்திருப்பி அந்த அறையை ஆராய ஆரம்பித்தார். அது பெயருக்குதான் குடிலே தவிர அங்கே இல்லாத பொருளே இல்லை. அவர், குனிந்து நிமிர்ந்து அங்கே இங்கேயென ஏதோ தேடிக்கொண்டேயிருந்தார்.

குணசேகரன் கேள்வியாய் சரவணகுமாரை பார்க்க, அவன் மெதுவாக கிசுகிசு குரலில்..

“ கேமரா மறைச்சி வச்சிருக்கான்னு தேடறார்… “ என்றான்.

“ எதுக்கு மறைச்சி வைக்கணும்… “ என்றார்.

“ நீ ஒரு கொழந்த அண்ணா… பேசாம கவனி… “ என்றான் சரவணன்.

பின் சாமியார் தன் உடைகளையும், நகைகளையும் களைந்து, குளிக்கும் அறைக்குள் புகுந்தார். இவர்கள் இருவரும் மெதுவாக குடிலுக்குள் நுழைந்தனர். வேகமாக அவரது மேஜையை நெருங்கினர். மேல்புறமாய் கழட்டி வைத்திருந்த தங்க மாலையையும், கை காப்புகளையும் எடுத்துக்கொண்டார் குணசேகரன்.

கிரீடத்தை எடுத்து சரவணன் நீட்ட, “ போதும் “ என்று குணசேகரன் சைகை காட்டினார். தன் தலையில் அடித்துக்கொண்ட சரவணன் , அந்த கிரீடத்தை அங்கேயே வைத்துவிட்டு, மெதுவாக மேஜையின் ட்ராயரை இழுத்தான். அதில் கண்ணில்பட்ட இரண்டாயிரம் ரூபாய் கட்டை எடுத்துக்கொண்டான் சரவணன்.

பின் மெதுவாக வந்த வழியிலேயே வெளியேறினர்.
வண்டியை ஸ்டார்ட் செய்து போகும்போது, சரவணகுமார் சொன்னான்….

“ அண்ணா நகை இப்போதைக்கு எங்கிட்டயே இருக்கட்டும். அத சரியான வழியிலே காசாக்கிடலாம். உனக்கு சரியா வராது. இப்போதைக்கு இந்த பணத்தில செலவுகளை சமாளி… ”

“ சரிடா… ஆனா இது பாவமில்லயா… “

“ அண்ணா, ஒரு ஏழை குடும்பத்துக்கு உதவ சாமியார்கிட்ட, சாமி சொல்லியிருக்கு. அவருக்கே தெரியாம அது நடந்திருக்கு… வுடு.. “

“ ஆனா… ராஜ வாழ்க்கை. இல்லடா… சாப்பாடு… துணிமணி… ஏஸி… கார்.. “

“ அந்த சாமியார் நிம்மதியா சாப்பிட மாட்டான்ணா… வெசம் வச்சிடுவாங்ளோன்ணு பயம். நீ வேலை முடிஞ்சி வந்து என்ன பண்ணுவ.. ? “

“ ரஞ்சிதம் கிட்ட பேசுவேன்… பொண்ணோட பேசுவேன்…. கொஞ்ச நேரம் டிவி பார்ப்பேன்… “

“ அப்புறம்… ? “

“ அப்புறம் என்ன… படுத்தா நல்லா தூங்குவேன்… கனாவா வரும்.. “

“ அவனை பாத்தியா… சாப்பிட்டயான்னு உண்மையான அக்கறையோட கேட்க ஆளில்ல… அவன் ரூம்ல ஏதோ சர்க்கஸ் பண்றாப்ல கீழே தேடறான்… மேலே தேடறான்… குதிக்கறான்… வந்து நிம்மதியா தூங்குவான்ற…. நாய் பொழப்புடா சாமி…. “ என்றான் சரவணகுமார்.



 
Top