கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

17. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 17

தீபிகாவும் தீன்தயாளும் செல்வியைத் தேற்ற, சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட செல்வி, அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, இரவு உணவு செய்ய உள்ளே சென்றுவிட்டாள்.

பாவம்! பேரக்குழந்தை இன்னும் வரலன்னு அவங்களுக்கும் மனசு வருத்தப்படும்தானே! என்னைய கோவிச்சிக்காம வேற யாரக் கோவிச்சிக்குவாங்க! எல்லாம் சீக்கிரம் சரியாகும். இந்தக் குடும்பத்த பத்தி நா நிறைய யோசிச்சேன்னு ஒரு நாள் இவங்க புரிஞ்சிப்பாங்க. இதெல்லாம் வரும்னு நாம முன்னாலயே யோசிச்சி பாத்தோம்ல.. என்ன.. இப்ப குழந்தை பெத்துக்கலாம்னு முடிவு பண்ணினப்றமா இந்த பிரச்சனை வெடிச்சிருக்கு.. சீக்கிரமே எல்லாம் சரியாகும்.. என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு செல்வி சப்பாத்திக்கு மாவு பிசைந்தாள்.

விராட்டுக்கு ஏற்கனவே என்னை பிடிக்காது. தமிழ்க்காரங்கல்லாம் சுயநலவாதிங்கன்னு ஒரு தவறான அபிப்ராயம் வெச்சிருக்கான்.. ஏதோ அவன் லவ்வுக்கு உதவி செய்ததால என் மேல கொஞ்சம் மரியாதை கலந்த நட்புணர்வு வந்தது. அவ்ளோதான்.. அவனோட ஆங்கிள்லேர்ந்து பார்த்தா அப்டிதானே நெனைக்க தோணும். பாவம். அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆயிடுச்சு.. இன்னும் அண்ணி உண்டாகலன்னா என்ன நெனப்பான்.. அண்ணிக்கு குழந்தை பெத்துக்கறதில இஷ்டம் இல்லன்னுதான் நெனப்பான். அவன் கோவப்பட்டதில எந்த தவறும் இல்ல! சீக்கிரமே நமக்கு குழந்தை வந்திடுச்சுன்னா இவனுடைய கோவமும் போய்டும்.

ஆனா, யார் யாருக்கு எப்பப்ப என்னென்ன தரணும்னு அந்த ஆண்டவனுக்குதான் தெரியும்னு இவங்களுக்கெல்லாம் யார் சொல்லி புரிய வெக்கறது.

எல்லாம் சரியாகும்! இவங்களோட கோவத்தெல்லாம் நா பெரிசா எடுத்துகிட்டு வருத்தப் பட்டா என் நிம்மதி போய்டும்!

என்றெல்லாம் தனக்குள் நினைத்துக் கொண்டு தெளிவடைந்தவளாய் சப்பாத்தியை செய்து முடித்து அதற்குத் தொட்டுக் கொள்ள சன்னா மசாலாவையும் செய்து வைத்தாள். மாமனாருக்குப் பிடித்த தால் ஃப்ரையையும் மாமியாருக்காக தக்காளிச் சட்னியையும் தனியாக செய்து வைத்தாள்.

விராட் கோபமாகத் தன்னுடைய அறையில் முணுமுணுத்தபடி இருக்க, தீபிகா அவனைத் தேடி வந்தாள்.

"பையா! உனக்கு ஏன் பாபி மேல இவ்ளோ கோவம்! அம்மாதான் வயசானவங்க! படிக்காதவங்க! அந்த காலத்து மனுஷி! உனக்கென்ன? பத்தாம் பசலியா பழைய பஞ்சாங்கம் மாதிரி பாபி மேல இப்டி அபாண்டமா குத்தம் சொல்ற?" என்று நேரடியாகக் கேட்டாள்.

"உனக்கு தெரியாது சுட்கி! பாபி குழந்தை வேணாம்னு மாத்திரை சாப்பிடறாங்க!" என்றான்.

"வாட் நான்சென்ஸ்? உனக்கு தெரியுமா? பாபி அப்டி எந்த மாத்திரையும் சாப்பிடல!" என்றாள் தீபிகா.

"ஆமா! எனக்கு தெரியும்! இதப் பாரு!" என்று அவன் தன்னுடைய அலமாரியில் துணிகளுக்கடியிலிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்துக் காட்டினான்.

அது பெண்கள் எடுத்துக் கொள்ளும் கருத்தடை மாத்திரை. பழைய ஸ்டாக்தான் ஆனாலும் இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

அதைத் திருப்பி எக்ஸ்பைரி தேதி பார்த்து விட்டு,

"இது எங்க கெடச்சிது?" என்று கேட்டாள் தீபிகா.

"சூரஜ் கல்யாணம் ஆகி வந்தப்றம் அவங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போனாங்கல்ல! அப்ப அவனுடைய ரூம் செல்ஃப்ல இருந்தது!" என்றான் விராட்.

"அவங்க ரூம்க்கு நீ ஏன் போன?" தீபிகா விடவில்லை.

"ஏய்! பெரிய இவ மாதிரி கேள்வி கேக்காத! வழக்கம் போல அவன் பனியனையும் என் பனியனையும் அம்மா மாத்தி வெச்சிட்டாங்க. என் பனியனை எடுக்க அவன் ரூம்க்கு போனேன். அப்பதான் இது அங்க இருந்தத பாத்தேன். எடுத்துட்டு வந்து வெச்சிகிட்டேன்! போதுமா?" என்றான்.

"ம்.. ஆனா பாபி இந்த மாத்திரைய போடல! ஐ மீன், பாபி எந்த கருத்தடை மாத்திரையும் யூஸ் பண்றதில்ல. ஆஸ் அ டாக்டர் எனக்கு நல்லா தெரியும். ஏன்னா ஒரு சின்ன தல வலிக்கு கூட அவங்க தைலம்தான் தேச்சிப்பாங்களே தவிர மாத்திரை யூஸ் பண்ண மாட்டாங்க. அப்டியே அந்த மாத்திரை போட்டுதான் ஆகணும்னா ஒரு முறைக்கு பல முறை எனக்கு போன் பண்ணி கேட்டுதான் போடுவாங்க.

சூரஜ் பையா யூஎஸ்ல இருந்தப்ப உனக்கு ஃபீவர் வந்துச்சே அப்ப கூட உனக்கு டாக்டர் எழுதிக் குடுத்த மாத்திரைய எனக்கு போட்டோ எடுத்து காட்டி போடலாமா சரியான மாத்திரைதானா அப்டீன்னு கேட்டு கேட்டுதான் உனக்கு குடுத்தாங்க.

அவங்க ஸ்பெஷல் சில்ரன் ஹேன்டில் பண்ணினவங்க! ஏதாவது மாத்திரையோ மருந்தோ யூஸ் பண்றதுக்கு முன்னாடி பல முறை யோசிச்சிதான் யூஸ் பண்ணுவாங்க.

அதனால நீ பாபிய பத்தி நெனச்சிக்கிட்டிருக்கற தப்பான அபிப்ராயத்த மாத்திக்கோ! புரியுதா?" என்று நீளமாகச் சொன்னாள்.

விராட்டுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை.

"சரிடீ! நீ சொல்ற மாதிரியே பாபி இந்த மாத்திரை.. இல்ல.. இல்ல.. எந்த மாத்திரையும் யூஸ் பண்ணலன்னே வெச்சிக்குவோம்.. ஆனா அவங்களுக்கு ஏன் இன்னும் குழந்தை உண்டாகல.." என்று கேட்டான்.

"லூசா பையா நீ?" என்று எதிர் கேள்வி கேட்டாள் தீபிகா.

இதைக் கேட்டதும் விராட்டுக்கு கோபம் தலைக்கேறியது.

"ஏய்?!" என்று தங்கையை அடிக்கக் கையோங்கினான்.

ஆனால் தீபிகா சலனமேயில்லாமல் நிற்பதைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் தன் கையை கீழே இறக்கிக் கொண்டு காலால் தரையை ஓங்கி மிதித்தான்.

சரியாக அப்போது சூரஜ் அலுவலகத்திலிருந்து வந்து அவனுடைய காரை ஷெட்டில் நிறுத்தும் சத்தம் கேட்டது.

விராட்டும் தீபிகாவும் அவன் முன்னால் சண்டையிட வேண்டாம் என்று நினைத்து தங்கள் சண்டையைப் பாதியில் நிறுத்திவிட்டு நகர்ந்தனர்.

சூரஜ் சென்று குளித்துவிட்டு வந்தான். செல்வி உணவு எடுத்து வைத்தாள். கௌரியும் தீன்தயாளும் வந்து சாப்பிட அமர்ந்தனர். அவர்களருகே சூரஜும் வந்து அமர்ந்தான். ஆனால் உணவில் கவனமில்லாமல் அவன் தன் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே தனக்குள் எதையோ யோசித்துக் கொண்டே சாப்பிட்டான்.

விராட்டும் தீபிகாவும் வந்து அவனருகில் அமர்ந்தனர். அவன் அவர்களை கவனிக்கவேயில்லை. சொல்லப் போனால் வீட்டில் நிலவும் அசாத்திய அமைதியைக் கூட அவன் உணரவேயில்லை.

செல்வி எல்லாருக்கும் பரிமாறினாள். எல்லாரும் உண்டு முடித்து எழுந்து சென்ற பின் சமையலறையிலேயே தனியாக அமர்ந்து சாப்பிட்டாள்.

சூரஜ் சென்று தன் கணிணியில் மூழ்கினான். செல்வி சாப்பிட்டாளா இல்லையா என்பதைக் கூட அவன் கவனிக்கவேயில்லை. அவள் சாப்பிட்ட பின் பாத்திரங்களை தேய்த்துக் கழுவி காய வைத்தாள். மேடையைத் துடைத்தாள்.

இதற்கே மணி பத்தரையாகி விட்டது.

அவள் சென்று படுக்கும் போது சூரஜ் தூங்கியிருந்தான்.

தீபிகா விராட்டிடம் சொன்னாள்.

"சூரஜ் பையா இண்டியா வந்தப்றம் ஏன் இன்னும் குழந்தை வரலன்னு கேட்டியே? குழந்தை வரணும்னா புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் முயற்சி பண்ணனும். இது உனக்கு புரியும்னு நெனக்கிறேன்.

நீயும் பாத்துகிட்டுதானே இருந்த.. பையா வந்தான்.. குளிச்சான்.. தட்டுல என்ன இருக்குன்னு கூட தெரியாம மொபைல் பாத்துகிட்டே சாப்பிட்டான்.. பாபி சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட கவனிக்கல.. எழுந்து போய் மறுபடியும் லேப்டாப்ல உக்காந்தான்.. பாபி தனியா உக்கார்ந்து சாப்பிட்டாங்க.. பேச்சு துணைக்கு கூட யாரும் இல்ல.. சாப்பிட்டதும் அவ்ளோ பாத்திரங்களையும் தேய்ச்சாங்க.. கிச்சனை க்ளீன் பண்ணிட்டு படுக்க போனாங்க.. அவங்க படுக்க போறதுக்கு அரை மணி முன்னாலயே பையா தூங்கிட்டான்.. இப்டி இருந்தா எப்டி குழந்தை வரும்.. மூளைன்னு ஒண்ணு இருந்தா கொஞ்சம் யோசி.. பண்ற தப்பு அத்தனையும் நம்ம பையாதான்.. ச்சும்மா பாபிய குத்தம் சொல்லாத.." என்று படபடவென்று பொறிந்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

பாபி! உங்கள எல்லாரும் குத்தம் சொல்றாங்க! ஆனா கவலப்படாதீங்க! யார் என்ன சொன்னாலும் நா எப்பவும் உங்களுக்காக நிப்பேன் பாபி! என்று தனக்குள் நினைத்துக் கொண்டு படுத்தாள்.

விராட் தீபிகா சொன்னவற்றை யோசித்தபடியே படுத்தான்.

எந்த விஷயத்தையும் எல்லா ஆங்கிள்லயும் யோசிச்சி முடிவெடுங்க விராட்! என்று செல்வி முன்பு ஆனந்தியிடம் பேச முடியாமல் தவித்த போது சொன்னது நினைவுககு வந்தது.

ஒரு வேளை சுட்கி சொல்ற மாதிரி பாபி மேல தப்பில்லையோ? நாந்தான் அவங்க மேல தேவையில்லாம கோவப்பட்டேனோ? என்று முதல் முறையாக அவனுக்குத் தோன்றியது.

இந்த சூரஜும்தான் ஏன் இப்டி மாறிட்டான்? கல்யாணம் ஆன புதுசுல பாபிகிட்ட எவ்ளோ அன்னியோன்யமா இருந்தான்? அவங்களுக்காகவே யூஸ்லேர்ந்து சீக்கிரம் வரணும்னு ஓடி வந்தான்! அன்னிக்கு யூஸ்எஸ்லேர்ந்து வந்த அன்னிக்கு கூட பாபிய தூக்கி சுத்தி எவ்ளோ ஜாலியா தன் லவ்வ எக்ஸ்ப்ரஸ் பண்ணினான்.. அப்றம் ஏன் இப்டி வேலை வேலைன்னு ஓட ஆரம்பிச்சான்னு தெரீலயே? சரியான லூசுதான்! காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டு பொண்டாட்டி கூட வாழாம இருக்கறதுக்கு.. என்ன கர்மத்துக்கு இவன் காதலிச்சான்.. என்ன கர்மத்துக்கு கல்யாணம் கட்டிகிட்டான்.. என்று தன் அண்ணனின் மேல் அத்தனை கோபத்தையும் திருப்பினான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் கோபம் செல்வியின் பேரிலும் மிச்சமிருக்கவே செய்தது.

அதே நினைவுடனேயே தூங்கிப் போனான்.

மறுநாள் எல்லாரும் வழக்கம் போல தத்தம் வேலைக்குக் கிளம்பினார்கள். செல்வியும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தன் பள்ளி வேலைக்குச் சென்றாள்.

விராட் முக்கிய வேலையாக டிஐஜி அலுவலகம் செல்ல வேண்டி சீக்கிரமே கிளம்பியிருந்தான்.

தன் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது தன் பழைய கல்லூரித் தோழனை சந்தித்தான். அவன் சொன்ன விஷயம் ஒன்று செல்வியின் மீது அவன் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச கோபத்தையும் தூள் தூளாக்கியது. ஆனால் சூரஜின் மீது அவன் கொண்டிருந்த கோபத்தின் அளவு பன்மடங்காகப் பெருகியது.



கசப்பொன்றை மனதில் சுமந்து
காரணமே இன்றி அண்ணியை
வெறுத்தே வாழ்கின்றான் விராட்!
வேதனையை நிதம் கூட்டுகிறான்!

தீபிகாவெனும் தேவதை மட்டுமென்றும்
செல்வியை நேசிக்கும் நல்தோழி!
அன்பை அகத்தில் நிறைத்தவளென்று
அறிந்தவள்; புரிந்தவள்; உருகுகிறாள்!

தவறெதுவும் செல்வி செய்யவில்லை;
தவறெல்லாம் அண்ணன் பேரிலென்று
தெளிவாக அவளுமே எடுத்துரைக்க
மாயத்திரை அகன்று மனம் தெளிந்தது!

எங்கோ ஒரு மூலையில் இன்னும்
கடுகளவு ஐயம் தாங்கி ஏங்குகிறான்!
காலம் தான் விடை சொல்லுமோ!
கனியும் மனம் அன்பைப் பொழியுமோ!

- C. புவனா.

- காதலின் மொழி என்ன?
 
Top