கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

2. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி – 2


அன்று பிரதோஷம். மாலை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு தமிழ்ச்செல்வி தன் பாட்டியுடன் வந்திருந்தாள். சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டு வந்து அமர்ந்தாள். கண்களை மூடி இறைவனை நினைத்து திருநீற்றுப் பதிகத்தை மனமுருகி பாடினாள். பாடி முடித்து நமஸ்காரம் செய்து எழுந்தாள். விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டு பாட்டியை அழைத்துக் கொண்டு கிளம்புகையில்,

"ஹாய்! மிஸ்.டமில் செல்...வி!" என்று ஒரு குரல் அவளை நிறுத்தியது!

குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள். சூரஜ் நின்றிருந்தான்.

"ஹலோ! மிஸ்டர் சூரஜ்! நீங்க எப்டி இருக்கீங்க?" ஆங்கிலத்தில் கேட்டாள்.

"யா! ஃபைன்! நீங்க ரொம்ப நல்லா பாடினீங்க! உங்க தலை காயம் ஆறிடுச்சா?" அவனும் ஆங்கிலத்தில் சொன்னான்.

"தேங்க்ஸ்! நல்லா ஆறிடுச்சு! பை த வே! இவங்க என்னோட பாட்டி!" அவனிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, பாட்டியிடம், "பாட்டி! இவர் மிஸ்டர் சூரஜ்! நான் சொன்னேன்ல! அன்னிக்கு என் பெயரை தப்பு தப்பா ஒருத்தர் சொன்னாருன்னு! இவர்தான்!" என்று தமிழில் கூறினாள்.

"வணக்கம் தம்பி!" தமிழிலேயே கூறினார்.

சூரஜும், "வண்க்கம்!" என்றான்.

"உங்களுக்கு தமிழ் தெரியுமா?" பாட்டி கேட்டார்.

"வாட்?"

தமிழ்ச்செல்வி ஆங்கிலத்தில் கேட்டாள். தனக்கு, "வணக்கம், ரொம்ப, கொஞ்சம், இல்ல, நல்லா, நன்றி, இளநி" போன்ற ஒரு சில தமிழ் வார்த்தைகள் மட்டும் தெரியும் என்றான்.

"நீங்க இங்கதான் தங்கி இருக்கீங்களா?"

"ஆமா! சில ஃப்ரண்ட்ஸோட இங்க ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கோம். ப்ரேக் ஃபாஸ்ட்டும் லஞ்சும் ஆஃபீஸ்ல! நைட்டு சாப்பாடு மட்டும் பக்கத்தில இருக்கற பஞ்சாபி மெஸ்ல இல்லன்னா மெட்ராஸி மெஸ்ல! சில சமயம் வீட்ல எதையாவது அரைகுறையா சமச்சுப்போம்! அவ்வளவுதான்! எப்பவாவது இப்படி கோவிலுக்கு வருவேன். நீங்க டெய்லீ வருவீங்களா?"

"இல்லல்ல! ஒவ்வொரு பிரதோஷத்துக்கு மட்டும் பாட்டியோட வருவேன்! எங்க வீடு பெஸண்ட் நகர்ல இருக்கு!"

"ஓ! ஓ கே! உங்களுக்கு டைம் ஆச்சுன்னு நெனக்கிறேன்! ட்ராஃபிக் வேற ரொம்ப இருக்கும். கிளம்புங்க!"

"ஓ கே! பை!"

"பை!"

அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவள் தன் பாட்டியுன் கிளம்பினாள். அவனும் கிளம்பினான்.

அன்று முழுவதும் வீட்டில் அவனைப் பற்றியே பாட்டியும் பேத்தியும் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

இரவு உணவு முடிந்து எப்போதும் செய்யும் வழக்கமாய் அமர்ந்து ஏதோ புத்தகம் வாசிக்கும் பொழுது, அவளுடைய செல்லுக்கு ஒரு வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி வந்தது.

"எனக்கு தமிழ் சொல்லித் தரீங்களா? ப்ளீஸ்!" என்று ஆங்கிலத்தில் சூரஜ் கேட்டிருந்தான்.

‘என்னுடைய செல் நம்பர் எப்படி இவருக்குக் கிடைத்தது. யாரிடம் கேட்டு வாங்கினார். நான் தரவேயில்லையே!’ வியப்போடு நினைத்துக் கொண்டாள்.

சாதாரணமாக இந்த மாதிரி இரவு நேரத்திலெல்லாம் அவளுக்கு குறுஞ்செய்தி எதுவும் வராது. குறுஞ்செய்தி அனுப்பும் அளவுக்கு நண்பர்களும் கிடையாது. இருக்கும் ஒரு சில நண்பர்களில் யாராவது அப்படியே அனுப்பினாலும் அது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். இது மாதிரி யாராவது தெரியாதவர்கள் அனுப்பினாலும் இவள் பதிலைக் காலையில்தான் அனுப்புவாள். ஆனால் இப்போது என்ன செய்வது? இவர் பள்ளிக்கு நன்கொடை அளிக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர். நாம் ஒழுங்காக பதிலளிக்கவில்லை என்றால் பள்ளிக்கு அளிக்கும் நன்கொடையை நிறுத்தி விடுவார்களோ? என்று நினைத்து சில நிமிடங்கள் கழித்து பதில் அளித்தாள்.

"தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு காலை வரை யோசிக்க நேரம் வேண்டும்."

உடனடியாக பதில் வந்தது.

"டேக் யுவர் ஓன் டைம்!"

"தேங்க்ஸ்! குட் நைட்!" என்று பதிலளித்தாள்.

இப்படி முகத்திலடித்த மாதிரி பதில் அனுப்பியிருக்க வேண்டாமோ? தெரியவில்லை. அனுப்பியாச்சு! இனிமே யோசிக்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டு படுத்தவள் என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள். ‘இவர் யாரு எவர்ன்னு ஒன்னும் தெரியாது.. எதுக்கும் காலையில அப்பா கிட்டயே கேக்கலாம்..’ என்று நினைத்தபடி உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை அவள் தன் அப்பாவிடம் சூரஜ் தன்னிடம் தமிழ் கற்க விருப்பம் தெரிவித்ததைச் சொல்லி அந்த குறுஞ்செய்தியைக் காட்டினாள்.

"அதுக்கென்னம்மா! தாராளமா கத்துக்குடு!" என்றார்.

"சரிப்பா!" சொல்லிவிட்டு அவனுக்கு பதில் அனுப்பினாள்.

"ஐ ஆம் ரெடி டு டீச் யூ டமில்!"

"தேங்க்யூ! நான் உங்கள பாக்க உங்க ஸ்கூலுக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வரேன்."

"ஓ கே!"

குழந்தைகள் எல்லாம் மூன்று மணிக்கே கிளம்பிவிட்டனர். அவள் நாராயணியிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

மாலை சொல்லியது போலவே சரியாக நாலு மணிக்கு பள்ளிக்கு வந்தான். நாராயணியிடம் பேசிவிட்டு தமிழ்ச்செல்வியை அழைத்துக் கொண்டு ஒரு ட்ரைவ் இன் காபி ஷாப்புக்குச் சென்றான். அவன் தன்னுடைய பைக்கில் வந்தான். அவள் அவளுடைய வண்டியில் அவனைத் தொடர்ந்தாள். அங்கு சென்று ஒரு ஓரமாக அமர்ந்தனர்.

அவள் முதலில் கேட்டது, "எப்படி என் செல் நம்பர் உங்களுக்கு கிடைச்சது?" என்றுதான்.

"மிஸஸ். நாராயணி கிட்டேந்து! ஏன்? எதுனா ப்ரச்சனையா?" மிகச் சாதாரணமாகக் கேட்டான்.

"இல்ல நான் தரலியேன்னு கேட்டேன்!"

"ம். ஆரம்பிக்கலாமா! நான் ஒரே ஒரு நோட் மட்டும் கொண்டு வந்திருக்கேன்!"

அவள் முதலில் எழுத்துக்களில் இருந்து ஆரம்பித்தாள்.

எழுத்து, சொல், சிறிய வாக்கியங்கள் என்று பொறுமையாக கற்றுத் தந்தாள். நடு நடுவே அவன் கேட்கும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளையும் சொல்லித்தந்து அதனை உச்சரிக்கும் முறையையும் கற்றுத் தந்தாள்.

வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் மாலை நாலு மணி முதல் ஐந்தரை மணி வரை தமிழ் வகுப்பு. சனி ஞாயிறு விடுமுறை.

அவனுக்கு தினம் தினம் தமிழ் வகுப்பு இனிமையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தான்.

தமிழ் மொழி அவனுக்கு கற்பதற்கு எளிதாக இருப்பது போல இருந்தது. அதனால் சீக்கிரமாகவே இரண்டு மாதங்களில் தமிழை நன்றாக எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டுவிட்டான்.

தமிழ்ச்செல்வியாலேயே நம்ப முடியவில்லை. அவன் இவ்வளவு சீக்கிரம் கற்பான் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

அவனுக்கு தமிழ் மொழியை மிகவும் பிடித்துப் போனது. தமிழை பிடித்தது போலவே அவனுக்கு தமிழ்ச்செல்வியையும் மிகவும் பிடித்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தமிழ் மொழிக்கு தமிழ் என்று தமிழ்ச்செல்வியின் பெயர் இருப்பதாலேயே தமிழை அதிகம் பிடித்தது என்று கூறலாம்.

ஆனால் அவன் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒரு தப்பான பார்வையோ தப்பான வார்த்தையோ தப்பான தொடுகையோ எதுவும் இல்லை. ஆனால் மனதின் ஆழத்தில் அவள் இல்லாமல் தன் வாழ்வு இல்லை என்று பதிந்து வைத்திருந்தான். அவளைத் தன் உயிருக்கு உயிராய் நேசித்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு அவன் மேல் எந்தவித சலனமும் ஏற்படவில்லை. ஒரு நண்பனிடம் பழகுவது போலவே அவனிடம் பழகினாள். தமிழ் கற்றுக் கொடுக்கும்போது மிகவும் கவனமாக பொறுமையாக ஒரு குழந்தைக்குக் கற்றுத் தருவது போல கற்றுத் தந்தாள்.

அவன் தமிழை நன்றாகக் கற்றபின் இனி வகுப்புகள் போதும். ஏதாவது சந்தேகம் என்றால் போன் செய்து கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி விட்டான். அவளும் சரி என்று கூறி விட்டாள்.

தமிழ் வகுப்புகள் முடிந்த பின் அவளுக்கு வாழ்க்கை கொஞ்சம் போர் அடிப்பது போலத் தோன்றியது. சூரஜை பார்ப்பதும் இல்லை. அவனும் குறுஞ்செய்தி எதுவும் செய்யவில்லை. கைப்பேசியில் அழைக்கவும் இல்லை. வகுப்புகள் இருக்கும் போதே அவன் அப்படிதான் இருப்பான். இப்போதோ கேட்கவே வேண்டாம். அவள் எதையோ இழந்தது போல உணர்ந்தாள். ஆனால் அவளுக்கு ஏன் என்றும் தெரியவில்லை. என்னவென்றும் புரியவில்லை.

அப்போது ஒரு நாள் அவளுடைய அப்பா, சில மாப்பிள்ளைகளின் புகைப்படங்களைக் காட்டி யாரையாவது பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.

எல்லாவற்றையும் அசுவாரசியமாகப் பார்த்தாள். உதட்டைப் பிதுக்கிவிட்டு, "யாரையும் பிடிக்கல!" என்றாள்.

"ஏய்! ஒழுங்கா பாரு!" அம்மா அதட்டினாள்.

"அம்மா! இங்க பாருங்க! தோ! இதுல இருக்கறவருக்கு மீசை நல்லாவேல்ல! ம்.. அப்றம் , இது.. முகம் ஒரு மாதிரி பாட்டில் ஷேப்ல இருக்கு! ம்.. இது ரொம்ப கடுகடுன்னு போஸ் குடுத்திருக்காரு! போட்டோக்கே சிரிக்கலன்னா எப்டிம்மா?" இப்படியே எல்லாவற்றிலும் ஏதோ ஒரு குறையைச் சொல்லி ஒதுக்கினாள்.

"சரிம்மா! உனக்கு பிடிக்கலன்னா விட்ரு!" அப்பா சொல்லிவிட்டார். இப்படியே இரண்டு மூன்று முறை மாப்பிள்ளைகளின் புகைப்படங்களைப் பார்த்து குற்றம் குறை சொல்லி ஒதுக்கிவிட்டாள்.

"ஏண்டி இப்டி பண்ற!"

"ஏய்! பிள்ளைய ஏன் அதட்ற! பிடிக்கலன்னா என்ன செய்வா! விடு இன்னும் நல்ல மாப்பிள்ளையா அமையும்! பொறுமயா இரு!"

"சரிங்க!" அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசியறியாத அம்மா சாந்தமானாள்.

"நீ போய் படும்மா! காலைல வேலைக்குப் போகணும்ல!" மகளை உறங்க அனுப்பினார்.

அன்று இரவு புத்தகம் படிக்கையில் அவளுக்கு அம்மாவின் பேச்சு நினைவுக்கு வந்தது. ‘எனக்கு என்னாச்சு? தெரியலையே! எனக்கு என்னமோ ஆயிடுச்சு!’ நினைத்தபடியே படுக்கப் போனாள்.

ஆனால் தூக்கம்தான் வரவில்லை. சூரஜ் டமில் செல்..வி என்று கூப்பிடுவதே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது.

'அடக் கடவுளே! இது என்ன! இப்டி அவன் நெனப்பாவே இருக்கு? எனக்கு என்னாச்சு?' ஒன்றும் புரியாமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

'ஓ! இதுதானா! எல்லா மாப்பிள்ளையையும் சூரஜுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேண்டாம் என்கிறேனா! அவன் என் மனதில் எப்போது குடி வந்தான். அதுதான் அவனைப் பார்க்க முடியவில்லையே பேசமுடியவில்லையே என்று ஏங்குகிறேனா? ஓ மை காட்!' தலையில் கை வைத்துக் கொண்டாள்.

இது சரியில்லையே! கடவுளே! ப்ளீஸ் ஹெல்ப் மீ! தூங்கினால்தான் காலை பள்ளியில் ஒழுங்காக வேலை செய்ய முடியும் என்று நினைத்து கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கினாள்.

ம்ஹூம்.. காதல் புகுந்த இடத்தில் அப்படியெல்லாம் தூக்கம் வந்துவிடுமா என்ன?



மொழி கற்க வந்தானோ!
மங்கையவள் மனம் தனிலே
இடம் பிடிக்க வந்தானோ!

காதலின் மொழி தான் இங்கு
இருஜோடி விழிகளும் கற்றுக்
காவியம் தான் படைத்தனரோ!

மன்னவனின் முகம் தனிலே
மனம் தொலைத்த நாயகிக்கு
மாற்று முகம் ஏனோ கசந்ததடி!

காதலிலே விழுந்து விட்டாள்!
ஊனுறக்கம் தொலைத்து விட்டாள்!
மன்னவனின் கண்ணசைவில்
மனதின் அவஸ்தையை மறப்பாளோ!


- C. Puvana


- காதலின் மொழி என்ன?
 
Top