Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 22
செல்வி சென்னை பெஸன்ட்நகரில் உள்ள தன் அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்கு சென்னை மண்ணை மிதித்ததுமே உடலில் புதிய ரத்தம் பாய்ந்தது போல இருந்தது.
அம்மா வீட்டுக்கு வந்ததும் ஓடிச் சென்று பாட்டியைக் கட்டிக் கொண்டாள்.
"பாட்டி!"
"செல்விம்மா! ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?"
"எல்லாரும் நல்லா இருக்காங்க.." என்று கூறிவிட்டு,
"என்ன பாட்டி.. என்னைப் பார்க்கணும்னுதானே காலை உடைச்சிகிட்டீங்க?" என்று செல்வி ரகசியமாய் லட்சுமியம்மாளிடம் கேட்க,
"அடிக்கள்ளி! கண்டுபிடிச்சிட்டியா?" என்று அவரும் தன் பேத்தியைப் போலவே ரகசியம் பேசினார்.
இருவரும் சிரித்துக் கொண்டனர்.
"சரி! பேத்தி வந்துட்டால்ல.. இனிமே உங்க கால் சரியாப் போயிடும்.. அப்டிதானே அத்த?" என்றே மங்கை தன் மாமியாரிடம் கேட்டாள்.
"இல்லையா பின்ன?" என்று தன் மருமகளைப் பார்த்து புன்முறுவல் பூத்தார் லட்சுமியம்மாள்.
"சரி! போ கண்ணு! ஊர்ல இருந்து வந்திருக்க.. போய் ரெஸ்ட் எடு.." என்று பாட்டி பேத்தியை அனுப்ப, அதை மறுத்த பேத்தி, பாட்டியுடன் பசை போட்டது போல அமர்ந்து கொண்டு விட்டாள்.
அவர்கள் இருவருக்கும் பேசுவதற்கு நிறைய கதைகள் இருந்தன.
தான் சென்னை வந்து சேர்ந்து விட்டதை தீபிகாவுக்குத் தெரிவித்ததோடு சரி.. அதன் பின்பு தன் கணவன் நினைப்பு உட்பட யார் நினைப்பும் அவளுக்கு வரவே இல்லை. மும்பை நினைப்பே வராதபடிக்கு ஆசை தீர பாட்டியுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
*****
மறுநாள் காலை வெகு உற்சாகமாக சென்னை வந்திறங்கினான் சூரஜ்.
அவன் தன் மாமியார் வீட்டுக்கு வரும்போது காலை எட்டரை மணியாகியிருந்தது. அவன் வரும்போது செல்வியும் பாட்டியும் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இருவரும் கட்டியணைத்து கொஞ்சி கொண்டிருப்பதைக் கண்டதும் சூரஜுக்கு வியப்பாக இருந்தது. இவள் என்ன இத்தனை வயதுக்குப் பிறகு பாட்டியுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
'இவளுக்கு குழந்தை மனம்டா.. அதனாலதான் இவளால இப்பவும் பாட்டி கிட்ட செல்லம் கொஞ்ச முடியுது.. இவளதான் இவ்வளவு நாளா கண்டுக்காம தவிக்க விட்ட..' என்று அவன் மனம் அவனைக் குத்திக் காட்டியது.
"வ.. வா.. வாங்க மாப்ள!" என்று பதற்றமும் வியப்புமாக வரவேற்ற மங்கை,
"செல்விம்மா! ஏங்க!" என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.
"உக்காருங்க மாப்ள! இருங்க காபி எடுத்துட்டு வரேன்!" என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்கு ஓடினாள் மங்கை.
செல்வியும் கிரிதரனும் வியப்பாக அவனைப் பார்க்க, லட்சுமியம்மாள் சுதாரித்துக்கொண்டு,
"வாங்க வாங்க.." என்றார். தன் அன்னையின் அழைப்பைக் கேட்டதும் கிரிதரனும்,
"வாங்க வாங்க.." என்று சூரஜின் கை பிடித்து வரவேற்றார்.
"பாட்டி எப்டி இருக்கீங்க?" சூரஜ் பாட்டியிடம் நலம் விசாரித்தான்.
"நல்லா இருக்கேன் மாப்ள! நீங்க எப்டி இருக்கீங்க?" என்றார் லட்சுமி பாட்டி.
"நான் நல்லா இருக்கேன்! என்னப் போயி மாப்ளன்னு கூப்பட்றீங்களே! நானும் உங்களுக்கு பேரன்தான்! என்னை சூரஜ்னு பேர் சொல்லி கூப்பிடுங்க!" என்றான்.
"சரி சூரஜ் மாப்ள! எங்க வீட்டு புது மாப்ள எப்டி இருக்கார்?" என்று விசாரித்தார்.
"ம்! நல்லா இருக்கார்! ஹனிமூன் போயிருக்கார்!" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சூரஜ்.
"நல்லா தமிழ் பேச கத்துகிட்டீங்க சூரஜ் மாப்ள!" என்று வியந்து போய் கூறினார் பாட்டி.
"ஆம்! தமிழ்ச்செல்வியின் கணவன்! இந்தத் தமிழ்நாட்டின் மருமகன்! தமிழ் பேசுவது அதிசயமா!" என்று செந்தமிழில் கேட்டான் சூரஜ்.
"ஆஹா எத்தனை தமிழ்! கவிதை! கவிதை!" என்றார் லட்சுமி பாட்டி!
'ஹா! ஹா! ஹா!' வாய்விட்டு சிரித்தான். அவன் சிரிப்பதையே செல்வி பார்த்தாள்.
'இவர் இப்டி வாய்விட்டு சிரிச்சி எவ்ளோ நாளாகுது?' என்று நினைத்துக் கொண்டாள்.
"என்ன தமிழ்? அப்டி பாக்கற?" என்று செல்வியைப் பார்த்து அவன் புன்னகைத்துக் கேட்க,
"திடீர்ன்னு.. உங்கள இங்க.." என்று அவள் தடுமாறினாள்.
"ம்ம்.. பாட்டிக்கு கால்ல அடி பட்டிருக்கு. நானும் வந்து பாக்கணும்ல.. அதானே முறை?.." என்றான்.
அவள் அவனை விநோதமாகப் பார்க்க, அவன் தன் மாமனாருடன் பேசலானான்.
'என்னமோ பிளானோடதான் வந்திருக்கார்..' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாலும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள் செல்வி.
கிரிதரன், சூரஜிடம் சொல்லிக்கொண்டு தன் பணிக்குக் கிளம்பிச் சென்றபின் மங்கை தன் வேலைகளில் ஈடுபட, பாட்டியும் தூங்கிவிட, அதன் பின்பே செல்வி அவனிடம் பேச வந்தாள்.
"என்ன மேடம்? இப்போதான் என் ஞாபகம் வந்துச்சா?" என்று அவன் கிண்டலாகக் கேட்க,
"ஹே.. அப்டி இல்லப்பா.. அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டிருந்தேன்.. இப்போ வீட்டு வேலையோட சேர்ந்து பாட்டிக்கும் செய்ய வேண்டிருக்கு.. பாவம்ல.. தனியா எப்டி அவங்களால சமாளிக்க முடியும்.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணதானே நா சென்னை வந்திருக்கேன்.." என்றாள்.
"ஹே.. சும்மா சொன்னேன் தமிழ்.. எனக்கு தெரியாதா?" என்றான் சூரஜ்.
"ஆமா.. என்ன திடீர்ன்னு வந்திருக்கீங்க?" என்று செல்வி மீண்டும் கேட்க, அவன் லேசாக புன்னகைதான்.
"உண்மைய சொல்லவா.. பொய் சொல்லவா.."
"ம்?" என்று அவள் வியப்புடன் அவனை ஏறிட,
"உன்ன பாக்காம எனக்கு எந்த வேலையுமே ஓடலை.. அதான்.." என்று சொல்லி அவளை தன்னருகே இழுத்தான்.
"ஆஹஹா.. இத்தன நாளா நா உங்க கண் முன்னால தானே இருந்தேன்.. அப்போல்லாம் மட்டும் உங்க வேலை ஒழுங்கா ஓடிச்சோ.." என்று ஏளனமாகக் கேட்டாள் செல்வி.
"உண்மைதான் தமிழ்.. நீ பக்கத்தில இருக்கும் போது எனக்கு எல்லா வேலையும் சீரா எந்த தடங்கலும் இல்லாம ஒடிச்சு.. நீ இல்ல.. வீட்லயும் சரி.. ஆபீஸ்லயும் சரி.. எதுவுமே ஓடல.." என்று அவன் கூறி அவளுடைய உள்ளங்கையில் முத்தம் பதித்தான்.
அவளுக்கு அழுகையும் கோபமும் முட்டிக் கொண்டு வரும் போல இருந்தாலும் அடக்கிக் கொண்டாள்.
அதற்குள் மங்கைக்கு செல்வியின் உதவி தேவைப்பட, இதுதான் சமயம் என்று எழுந்து சென்றாள். சூரஜுக்கும் அவளுடைய கோபம் புரிந்தே இருந்தது.
இருவரும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பாட்டியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சூரஜுக்குக் கண்கள் இழுத்துக் கொண்டு போக, அவனை உறங்கச் சொல்லி அனுப்பினார் பாட்டி. அவனும் எழுந்து சென்று செல்வியின் அறையில் படுத்துவிட்டான்.
"இத்தன நாளா நா ஒருத்தி இருக்கறதே தெரிலயாம்.. நேத்திக்கு ஒரு நாள் நா இல்ல.. அவருக்கு எந்த வேலையும் ஓடலையாம்.." என்று சத்தமாகவே முணுமுணுத்தாள் செல்வி.
இதைக்கேட்ட லட்சுமியம்மாள்,
"குடும்ப பாரத்தை தூக்கி சுமக்குற எல்லா ஆம்பளைக்கும் அப்டிதான் இருக்கும் செல்விம்மா.. வீட்டு வேலைகளையும் பெத்தவங்களையும் பொண்டாட்டி பொறுப்பா கவனிச்சுப்பாங்கற நெனப்புலதான் அவங்க வெளி வேலைகள்ல கவனம் செலுத்த முடியும்.. நீ பக்கத்தில இருந்தாதான் அவருக்கும் வேலை ஓடும்.. நீ இல்ல.. அவருக்கு வேலை ஓடல.. அதான் உன்னைத் தேடி ஓடி வந்துட்டார்.." என்றார்.
"நீங்க உங்க மாப்ளைக்கு ஓவரா சப்போர்ட் பண்றீங்க பாட்டி.." என்றாள் செல்வி.
"அப்டியில்ல செல்விம்மா.. அவரோட பலமே நீதான்னு சொல்றேன்.. நீ இல்லன்னா அவருக்கு சின்ன சின்ன வேலை கூட ஓடாதுன்னு சொல்றேன்.. அந்த அளவுக்கு நீ அவருக்கு முக்கியம்ன்னு சொல்றேன்.."
"அப்போ எனக்கு மட்டும் அவர் முக்கியம் இல்லையா பாட்டி.."
"அவரும் உன்ன புரிஞ்சுப்பார்டா செல்லம்மா.." என்று பாட்டி பேத்திக்கு ஆறுதல் மொழிகள் கூறினார்.
"என்னத்தப் புரிஞ்சிப்பாரோ?!" என்று புலம்பினாள் செல்வி.
"இத்தன நாளா அவரோட அன்புக்கு நீ ஏங்கினதானே? அத அவர் குடுக்க வரும்போது உனக்கு எதுக்கு இத்தன கோவம்?"
"கோவம் வரக் கூடாதா?" அழுத்தமாகக் கேட்டாள் செல்வி.
"கோவம் வரும்தான்.. ஆனா அது அவசியமில்லன்னு சொல்றேன்.."
"என்ன பாட்டி சொல்றீங்க?" என்று அலுப்பாகக் கேட்டாள்.
"இங்க பாரு செல்விம்மா.. மாப்ளைக்கு நீயும் முக்கியம்.. அவரோட குடும்பமும் முக்கியம்.."
"ஆனா அவரு அவரோட குடும்பத்தோட தேவைகளை மட்டும் பாத்து பாத்து நிறைவேத்தறார்ல.. அப்ப என் தேவைகளை யார் நிறைவேத்துவாங்களாம்? அது மட்டும் அவருக்கு புரியாதா? இல்ல இவளுக்கு தேவைகளே இருக்க கூடாதுன்னு நினைக்கிறாரா? இல்ல எதுக்கு நாம செய்யணும்னு நினைக்கிறாரா?" என்று படபடவென பொரிந்தாள்.
"அடடா.. என் பேத்திக்கு எவ்ளோ கோவம் வருது.." என்று செல்லமாகக் கேட்டு பேத்தியை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்ட பாட்டி மெதுவாக அவள் தலையைக் கோதிக் கொடுத்தார்.
"அப்டியில்லடீ ராஜாத்தி.. ஆம்பிளைங்களுக்கு இது புரியாதும்மா.."
"அப்ப.. நா மட்டும் என்ன ஏமாளியா?"
"உன்ன யாரு ஏமாளின்னு சொன்னா? உன் தேவைகளை நீ அவருக்கு எடுத்து சொல்லு.. சொன்னாதானே அவருக்கு புரியும்!?"
"ம்ச்.. எப்டி பாட்டி?"
"வாயால சொல்ல விருப்பமில்லன்னா செயலால புரிய வை!"
"அதுக்கு இந்த மனுசன் என் பக்கத்தில இருக்கணும்.. இவரு பாதி நாள் வீட்டுக்கே வரதில்லயாம். எந்நேரமும் அந்த ஆஃபீசே கதின்னு இருந்தா.. நா என்னத்த இவருக்கு புரிய வைக்கிறதாம்?" என்று குறை படித்தாள் செல்வி.
பாட்டிக்கும் அவள் சொல்வது புரிந்துதான் இருந்தது. இருப்பினும் பேத்தியின் மனதுக்கு தன்னால் முடிந்த ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவோம் என்று கூறிக் கொண்டிருந்தார்.
செல்வி பாட்டி சொல்வதையே அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இவர்கள் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் பக்கத்து அறையிலிருந்து சூரஜ் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனுக்கு குற்றவுணர்வாக இருந்தது. இருப்பினும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
'அவ கோவமும் நியாயம்தானே! குழந்தையில்லன்னு இவ பட்ட அவமானத்தை வெளிய சொல்லாம புழுங்கறா.. பாவம்! இனிமே இவ இப்டி மனசு ஒடிஞ்சி போற அளவுக்கு நா நடந்துக்கக் கூடாது.' என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.
அன்று மாலை பாட்டிக்கு வேண்டியதைச் செய்ய மங்கையும் செல்வியும் பாட்டியுடன் இருக்கும்போது சூரஜுக்கு டீ குடிக்க வேண்டும் போலிருக்க, அவன் யாரையும் எதிர்பார்க்காமல் அவனே சென்று டீ போட்டான். டீயை கோப்பைகளில் ஊற்றும் போது கிரிதரன் வேலை முடிந்து வீடு வந்தார். பாட்டிக்கு உதவி செய்துவிட்டு செல்வியும் மங்கையும் வந்தனர். அனைவருக்கும் ஒரு கோப்பையை கொடுத்தான். அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.
"என்ன மாப்ள? இதெல்லாம் போய் நீங்க பண்ணிகிட்டு?"
"ஏன் அத்த? உங்க கிச்சன்ல நான் டீ போடக்கூடாதா?"
"ஐயோ! அதில்ல! வீட்டு மாப்ள? நீங்க போய்.."
"அத்த நான் உங்க மகன் மாதிரி! மாதிரி என்ன? மகனேதான்! எங்கம்மாவுக்கு நான் ஹெல்ப் பண்றேன்! அவ்ளவ்தான்!"
கிரிதரனும் மங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். செல்விக்கும் இது புதிதாய் இருந்தாலும் பிடித்தது.
"வா! தமிழ்! நம்ம அந்த கோவிலுக்கு போய்ட்டு வரலாம்!" என்று அழைத்தான்.
"எந்த கோவில்?"
"ம்! அந்த ஷிவ்ஜி.... இல்ல சிவன் கோவில்.. நீ பாட்டு பாடினியே! அந்த கோவிலுக்கு போலாம்!"
"மருந்தீஸ்வரர் கோவில்!"
"ஹாங்! அதேதான்!"
அவர்கள் கோவிலுக்குச் சென்றனர். சிவனையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு விபூதி பிரசாதத்தை வாங்கி பையில் பத்திரப் படுத்திக் கொண்டு பெசன்ட்நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கும் சென்றனர். தாயாரை மனம் குளிர சேவித்துவிட்டு நெய் தீபம் ஏற்றினார்கள். அருகே அன்னை வேளாங்கன்னியையும் கண்டு வணங்கினர். செல்வி அங்கு ஒரு மெழுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு வந்தாள்.
அப்படியே காலார கடற்கரையில் நடந்தார்கள்.
அவளுக்கு தன் சிறிய வயது நினைவெல்லாம் வந்தது. இதே கடற்கரையில் எத்தனை நாள் பாட்டியுடனும் ஆனந்தி ஆனந்தனுடனும் மணல் வீடு கட்டி விளையாடுயது, ஓடிப் பிடித்து விளையாடியது, ஐஸ்க்ரீம் வாங்கித் தின்றது, கடலில் ஆடியது, சொட்டச் சொட்ட வீட்டுக்கு வந்து அம்மாவிடம் திட்டு வாங்கியது, சிப்பி பொறுக்கியது, பரீட்சை சமயங்களில் வீட்டு மாடியில் இருந்து தெரியும் கடலைப் பார்த்துக் கொண்டே படித்தது என அனைத்தும் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. சின்னக் குழந்தை போல அத்தனையும் சூரஜிடம் கண்கள் படபடக்க சொல்லிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கடற்கரை மணலில் அமர்ந்தார்கள்.
"பயங்கர ஜாலியா இருக்கும்! இங்கதான் ஒரு முறை, ஆனந்த் கிரிகெட் ஆடும்போது ஸிக்ஸர் அடிக்கறேன்னு பால (ball) தூக்கி அடிச்சான். பால் கடல்ல போய் விழுந்திடுச்சு. தேடிப் பாத்தா கிடைக்கவேயில்ல! அன்னிக்கு பூரா ஒரே அழுகைதான்! அப்றம் அப்பா வேற புது பால் வாங்கிக் குடுத்தப்றம்தான் அழுகைய நிறுத்தினான்!"
சூரஜ் அவள் பேசுவதை ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தான்.
"ஆனந்தியும் ஆனந்தனும் ஆனுவல் லீவ்க்கு இங்க வந்துடுவாங்களா.. பாட்டி டெய்லி காலைலயும் சாய்காலமும் பீச்க்கு கூட்டிட்டு வந்துடுவாங்க.. மண்ணுல வீடு கட்டி ஒரே ஆட்டம்தான்! நானும் ஆனந்தியும் ஒரு செட்! பாட்டியும் ஆனந்தும் ஒரு செட்! யார் கட்ற வீடு பெரிசுன்னு போட்டி நடக்கும்! அவன்தான் பெரிசா கட்டுவான்! உடனே நம்ம தோத்துட்டோம்னு ஆனந்தி அழுவா! பாட்டி அவள சமாதானப்படுத்தி கண்ணாடி வளையல் வாங்கித் தருவாங்க! அவ தோத்துட்டா! அவளுக்கு ஏன் வளையல் வாங்கி தந்தீங்கன்னு ஆனந்த் அடம் பிடிப்பான்! சரின்னு அவனுக்கு பேட்டும் பாலும் வாங்கித் தருவாங்க! செம ஜாலி! அதெல்லாம் மறக்கவே முடியாது!"
சூரஜுக்கு, 'இப்டி ஒரு பாட்டி எனக்கு இல்லாம போய்ட்டாங்களே..' என்று தோன்றியது!
மெல்ல இருட்டத் தொடங்கியது. அவர்கள் மெதுவாக நடந்து வீடு வந்து சேர்ந்தனர்.
பாட்டியிடம் விபூதி பிரசாதத்தையும் அம்மாவிடம் அஷ்டலக்ஷ்மி கோவில் குங்கும பிரசாதத்தையும் கொடுத்தாள்.
"பாட்டி! உங்களுக்காக வேளாங்கன்னி கோவில்ல மெழுகுவர்த்தி ஏத்தி வெச்சுட்டு வந்திருக்கேன்!"
"சரிடா கண்ணு!"
"பாட்டி! உங்களப் பத்திதான் பேசிகிட்டு இருந்தோம்! நீங்க இவளையும் இவ தம்பி தங்கையையும் தினமும் பீச் கூட்டிட்டு போவீங்க! நிறைய விளையாடுவீங்க! வளையல் வாங்கித் தருவீங்கன்னு எல்லாம் தமிழ் சொன்னா!" என்றான் சூரஜ்!
"ம்! அதெல்லாம் ஒரு காலம்! இனிமே உங்க குழந்தைங்க வந்தப்றம் அவங்கள கூட்டிகிட்டு திரும்பவும் பீச்சுக்கு ஓடிடுவேன்! அதனால இப்பவே சொல்லிடறேன், உங்க குழந்தைகளையும் உங்க தம்பி தங்கச்சி குழந்தைகளையும் எல்லா லீவுக்கும் இங்கதான் கூட்டிகிட்டு வரணும்! ஆமா சொல்லிட்டேன்!" என்றார் லட்சுமி பாட்டி!
சூரஜுக்கு ஆச்சர்யமாய் இருந்தது! 'மனசுல எவ்வளவு அன்பு இருந்தா இவங்க இப்டி சொல்வாங்க! பாட்டி! யூ ஆர் ரியலி க்ரேட்!'
"ஏன் பாட்டி! குழந்தைங்கள மட்டும்தான் பீச்சுக்கு கூட்டிட்டு போவீங்களா! என்னையெல்லாம் கூட்டிட்டு போகமாட்டீங்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் சூரஜ்.
"மாப்ள! நான் ரெடி! ஆனா இந்த கிழவியோட பீச்சுக்கு வர நீங்க ரெடியா?" கேட்டுவிட்டு சிரித்தார்.
விஷமக்காரப் பாட்டிதான்! கூடச் சேர்ந்து சிரித்தான்.
"எப்படியும் உங்களோட உங்க பேத்தியும்தானே வருவா! அப்றம் எனக்கென்ன? நானும் உங்க கூட வருவேனே!" என்றான்.
"சபாஷ்! மாப்ள! நீங்க புத்திசாலின்னு நிரூபிச்சுடீங்க!" பாட்டி கைதட்டி பாராட்டினார்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக வட்டமாக அமர்ந்து பேசி சிரித்தபடி உண்டனர்.
சாப்பிட்ட பின் சூரஜ் கிரிதரனுடன் பேசிக்கொண்டிருந்தான். பாட்டிக்கு மருந்து கொடுக்க செல்வி சென்றாள்.
"செல்விம்மா!"
"என்ன பாட்டி?"
"மாப்ளக்கு ஆஃபீஸ்ல ரொம்ப வேலை! ஆனா உன்ன பாக்க லீவ் போட்டுட்டு சென்னை வந்திருக்கார்!"
"ஆமாமா..!" என்று கூறி பழிப்பு காட்டினாள்.
"அவர் மேல கோபத்தை காட்டாத செல்விம்மா.."
"சரி பாட்டி! கோபத்தை காட்ட மாட்டேன் போதுமா.." என்றாள். அவள் குரலில் கொஞ்சம் கோபமும் ஆதங்கமும் இருந்தது போல உணர்ந்தார் பாட்டி.
"நா உன் நல்லதுக்குதான் சொல்றேன்." என்ற பாட்டி அதற்கு மேல் எதையும் சொல்லி அவளை கோபப்படுத்தவில்லை.
சிறிது நேரத்தில் மருந்து மயக்கத்தில் பாட்டி தூங்க ஆரம்பித்தார். மங்கை வந்து பார்த்தாள்.
"பாட்டி தூங்கிட்டாங்க செல்வி! நீ போய்ப் படு! காலைல பேசிக்கலாம்!"
"சரிம்மா! குட் நைட்!"
சூரஜுடன் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
அவளுக்கு மனதிலிருந்த கோபமும் ஆதங்கமும் பொங்கத் தொடங்கியது. ஆனால் பாட்டியின் சொல்லைத் தட்டக் கூடாது என்று தன்னை அடக்கிக் கொண்டாள்.
"சாரி தமிழ்!" என்று அவள் கை பிடித்துக் கூறினான் சூரஜ்.
இதைக் கேட்டதுதான் தாமதம், அவளுக்கு வெடித்துக் கொண்டு அழுகை வந்தது. அடக்க முடியாமல் அழுதாள்.
சட்டென்று அவளைத் தன் மார்போடு அணைத்தான்.
"எனக்கு நெஜமாவே தெரியல தமிழ்.. நீ மனவுளைச்சல்ல இருக்கேன்னு எனக்கு தெரியல.."
".."
"என்னைய நம்பி அந்த ஆஃபீஸ் தெறந்திருக்காங்களே.. அத நல்லபடியா நடத்தணுமேன்னு மட்டும்தான் யோசிச்சேன்.. நீ என்ன நம்பி வந்திருக்கேன்னு யோசிக்கத் தவறிட்டேன்.. சாரி மா.." என்று உண்மையான வருத்தத்துடன் கூறி தானும் கண் கலங்கினான்.
தன் கைகள் இரண்டினாலும் தன் காதுகள் இரண்டையும் பற்றிக் கொண்டு தப்பு போட்டுக் கொண்டான்.
அவன் கண் கலங்குவதைப் பார்த்த செல்வி பதறினாள்.
"ஐயோ.. என்னங்க.. விடுங்க.. நீங்க ஏதோ தப்பு பண்ணின மாதிரி சாரிலாம்.. விடுங்கப்பா.." என்று கணவனை சமாதானம் செய்யத் தொடங்கினாள்.
அவளுக்குள் இருந்த கோபம் ஆதங்கம் எல்லாம் மறைந்தே போனது.
"அன்ட் ஐ பிராமிஸ் யூ! இனி இந்த மாதிரி நடக்கவே நடக்காது!" என்று சொல்லிக் கொண்டே அவளுடைய வலது கையில் தன் வலது கையை வைத்து சத்தியம் செய்தான்.
"என்னப்பா நீங்க?" என்று அவள் அன்பாகக் கடிந்து கொண்டாள்.
"இல்ல.. நீ என்ன மன்னிச்சேன்னு சொல்லு.." என்று பிடிவாதமாகக் கூறினான்.
"நீங்க தப்பு எதும் பண்ணல.. ஆனாலும் சரி! ஓகே மன்னிச்சுட்டேன்.." என்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
தங்கள் காதல் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தை அழகான கவிதையாக எழுத ஆரம்பித்து நடுவில் நிறுத்தி இருந்ததை இப்போது மகிழ்ச்சியுடன் திரும்பவும் எழுதினர்.
எப்போதுமே சீக்கிரம் எழுந்து பழக்கமுடைய செல்வி மறுநாள் காலை விழிக்கும் போது காலை எட்டாகியிருந்தது. தன்னை அணைத்து உறங்கும் கணவனின் கையை மெல்ல விலக்கிவிட்டு எழுந்து வந்தாள்.
கிரிதரன் அன்றைய நாளிதழை வைத்துக் கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்து இருந்தார். பல் துலக்கிவிட்டு வந்து அப்பாவின் அருகில் அமர்ந்தாள். கொட்டாவி விட்டாள். கண்கள் திரும்பவும் சொருகியது. சோபாவிலேயே சாய்ந்தபடி கண்ணயர்ந்தாள். மங்கை இவள் எழுந்து வந்ததைப் பார்த்து காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது மீண்டும் தூங்கியிருந்தாள்.
கிரிதரன் அவளை எழுப்பாதே என்று கண் காட்டினார். ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றுவிட்டாள். கிரிதரனும் சத்தம் செய்யாமல் எழுந்து மனைவியின் பின்னால் சென்றார்.
"அதிசயமா இருக்குல்ல அரசி!"
"ஆமாங்க! ஆனா சந்தோஷமா இருக்கு!"
"ம்! இப்பதான் இது நடக்கணும்னு இருக்கு!"
"பாவம்! அவளுக்கு இப்பவாவது நல்ல வழி பொறந்துதே!"
"ஆஃபீஸ் ஆஃபீஸ்ன்னு ஓடிட்டிருந்த மனுஷனுக்கு ஒரு ப்ரேக் கிடைக்காம தவிச்சிருக்காரு! அம்மாவுக்கு அடிபட்டதும், அதையே கெட்டியா பிடிச்சுகிட்டு ப்ரேக் எடுத்துகிட்டு ஓடி வந்திருக்கார்!"
"ஆமாங்க! அவரும்தான் என்ன செய்வார்!"
"எல்லாத்துக்கும் நேரம் வரணும்கறது சரியாதான் இருக்குல்ல!"
"ம்! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரிதான்! சரி! போய் குளிச்சிட்டு வாங்க! ட்யூட்டிக்கு டைம் ஆச்சு!"
"ம்!" அவர் குளிக்கச் சென்றார்.
மன்னவனும் கிளம்பி விட்டான்!
தன்னவளை எண்ணியதும்
நெஞ்சினிலே பொங்கி வரும்
காதலை உடன் சுமந்து சென்றான்!
பிறந்த கூட்டை வந்து சேர்ந்த
பாசப் பறவையும் பிரியத்துடன்
பெற்றோரிடம், பாட்டியிடம் கூடிப்
பலநாள் கதை பேசிக் களித்திடுது!
மன்னவன் வந்து சேர்ந்தான்!
கணவனின் வருகை கண்டு
செல்வியின் மனக் கேணியில்
உற்சாகம் ஊற்றாக ஊறியதே!
மகிழ்ச்சி விதைகளை மனைவியின்
மனதில் விதைத்தவனும் மகிழ்ந்தான்!
மறந்திருந்தேன் உனையென்று
மன்னிப்பை யோசித்து நின்றான்!
புரிதல் இங்கே கூடியதால்
பிரியம் இன்று பெருகியது!
காதலில் இருவரும் இணையக்
காலமும் வழி வகுத்ததுவே!
இல்லறத்தின் கனி இனியிங்கு
விரைவில் விளைந்திடுமோ?
இறைவா கண் திறந்துவிடு!
இனிமை இங்கு சேர்த்து விடு!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?