கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

24. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 24


மங்கையும் கிரிதரனும் மறுநாள் பாட்டியை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றனர். நாங்கள் சமையல் செய்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு செல்வியும் சூரஜும் சமையல் செய்தனர். மிக்ஸி போடுவது, காய் நறுக்குவது போன்றவற்றை அவன் செய்ய இவள் அடுப்பில் செய்ய வேண்டியதை செய்தாள். பேசிச் சிரித்தபடி வேலை செய்தது இருவருக்குமே பிடித்தது.

வேண்டிய உதவிகளை செய்துவிட்டு அவன் சென்று அமர்ந்து கொண்டு டீவியைப் போட்டான். டீவியில் தமிழ்த் திரைப்படங்களின் சிரிப்புக் காட்சிகள் காமெடி சேனலில் ஓடிக் கொண்டிருந்தது. செல்வி சமைத்து முடித்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து மேடையைத் துடைத்துவிட்டு வந்து அவனருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"தமிழ்! சமைச்சு முடிச்சுட்டியா?"

"ம்! ஏன்?"

"பாத்திரம் எல்லாம் தேய்ச்சுட்டியா?"

"வேலை பண்ணறவங்க வருவாங்க!"

"ஓ! சரி! சரி!"

அப்போது டீவியில் ஒரு திரைப்படத்தின் காட்சி வந்தது. காமெடியன் ஷேரிங் என்பது இருவரும் சேர்ந்து எடுக்கும் பிச்சையை பங்கு போட்டுக் கொள்வது என்று செந்தமிழில் திரைப்படத்தின் கதாநாயகனுக்கு விளக்கினான். இதைக் கேட்ட அந்த கதாநாயகன் தலையில் கை வைத்துக் கொண்டான். இந்தக் காட்சியைக் கண்டதும் சூரஜ் செல்வியைப் பார்த்து சொன்னான்.

"தமிழ்! நான் சொல்றது சரியான்னு சொல்றியா?"

"என்னது?"

"உசார் பண்ணுவதென்பது என்னவென்றால் நமக்கு பிடித்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொள்வது என்று பொருள்!" என்று செந்தமிழில் பேசிக் காட்டினான்.

"என்ன கத்துகிட்டீங்களோ இல்லையோ.. தமிழ கொலை பண்ணாம பேச கத்துகிட்டீங்க." என்று சொல்லிச் சிரித்தாள்.

அழைப்புமணி சத்தம் கேட்டது. செல்வி சென்று கதவை திறந்தாள். பாட்டியை அழைத்துக் கொண்டு மங்கை வந்தாள். பழைய கட்டு பிரிக்கப்பட்டு புது கட்டுடன் பாட்டி வந்ததைப் பார்த்ததும் செல்வி கேட்டாள்.

"என்னம்மா சொன்னாங்க?

"ஓரளவுக்கு கூடிடுச்சுடா! இப்ப மாதிரியே நல்லா ரெஸ்ட் எடுத்தா போதும்.. நல்லா கூடிடும்.. அப்புறம் பிரச்சனையே இருக்காதுன்னு சொன்னாரு!"

"நா உங்கள நல்லா பாத்துக்குவேனாம்.. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க பாட்டி!" என்று சொல்லிக் கொண்டே செல்வி பாட்டியை அழைத்துச் சென்று சாப்பாட்டு மேஜையில் அமர வைத்தாள்.

"அப்பா எங்கமா?"

"அவர் எங்கள வீட்டு வாசல்ல டிராப் பண்ணிட்டு அப்டியே ட்யூட்டி போயிட்டார்! யாரோ மினிஸ்ட்டர் வராங்களாம்.. கமிஷ்னர் ஆஃபீஸ்ல இருந்து போன் வந்துட்டே இருந்தது.." என்றாள் மங்கை.

அதற்குள் சூரஜ் சாப்பாட்டு மேஜையைத் தயார் செய்தான்.

"உங்களுக்கேன் வீண் சிரமம் மாப்ள?" என்று செல்லமாகக் கடிந்து கொண்ட மங்கையைப் பார்த்து புன்னகைத்தான் சூரஜ்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பேசி சிரித்து வம்பு செய்து கிண்டல் செய்து என்று பாட்டியுடன் லூட்டி அடித்தபடி சாப்பிட சூரஜுக்கு ரொம்ப பிடித்தது.

அவன் வீட்டிலும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாலும் இவ்வளவு லூட்டி கிடையாது. ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் கூட தகவல் பரிமாற்றம் போலதான் இருக்குமே தவிர இப்படி சந்தோஷமாக இருக்கவே இருக்காது. 'ஏன் தன்னுடைய மற்றும் விராட்டின் திருமணத்துக்கு முதல் நாள் மும்பையிலிருந்து கிளம்பும் அன்று கூட அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிட்டோம்! ஆனால் இப்படி பேசி சிரித்து.. ம்ஹூம்.. அதுதான் தமிழ் இப்படி ஆகிவிட்டாள். அவள் வீட்டில் எப்போதும் கலகலவென்று இருந்துவிட்டு இப்போது நம் வீட்டில் இவளுடன் பேசுவதற்கு கூட யாரும் இல்லாதிருந்தால் அவள் எப்படி சந்தோஷமாக இருப்பாள்?' என்று நினைத்துக் கொண்டான்.

சாப்பிட்ட பின் மங்கையும் பாட்டியும் சிறிது நேரம் கண்ணயர செல்வியும் சூரஜும் அவளுடைய அறைக்கு சென்றனர்.

"தமிழ்! நம்ம எல்லாரும், அதாவது நீ, நான், விராட், சுட்கி, ஆனந்தி, எல்லாரும் எல்லா லீவுக்கும் இங்க வந்துடலாமா? லக்ஷ்மி பாட்டியோட பேசிகிட்டிருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு!"

"நான் ரெடி! ஆனந்தி கூட ரெடிதான்! நீங்களும் ரெடி! ஆனா விராட்! பாவம் அவருக்கு லீவு கிடைக்கணுமே!"

"அவனுக்கு எப்ப லீவு கிடைக்கிதோ அப்ப நம்மளும் லீவு எடுக்க வேண்டியதுதான்!" என்றான்.

அவள் அங்கிருந்த வாரப் பத்திரிகையை கையிலெடுத்துப் புரட்டினாள்.

"தமிழ்! உனக்கு என்ன வேணும்னு கேளு! இல்லன்னா எங்கியாவது போகணும்னா சொல்லு! என்ன வேணா கேளு! நான் வாங்கி தரேன்! இல்ல கூட்டிட்டுப் போறேன்!"

"ஒண்ணே ஒண்ணுதான் வேணும்! வாங்கி தரவேணாம்! கூட்டிட்டு போக வேணாம்! நீங்க ஒரே ஒரு வேல செய்யணும்!"

"ம்! என்ன செய்யணும்?"

"நீங்க தினமும் ஆஃபீஸ்லேந்து சீக்கிரம் வரணும்! சண்டே வீட்லதான் இருக்கணும்! இது மட்டும்தான் வேணும்!"

"ஓகே டன்!" ஒரு நொடி கூட தாமதிக்காமல் பதிலளித்தான்.

"நெஜம்மா!" கண்களை விரித்து நம்ப முடியாமல் கேட்டாள்.

"நெஜம்மா!" அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி கூறினான்.

"அப்றம் ஃபாரின் டெலிகேட்ஸ் வராங்க.. டார்கெட் கம்ப்ளீட் பண்ணனும்.. அப்டீன்னு எல்லாம் சொல்லி பேக் அடிக்கக் கூடாது.. !"

"பேக் அடிக்கவே மாட்டேன்!" என்று உறுதி கூறினான்.

"ம்.. என்னமோ இப்ப ஒரு உணர்ச்சி வேகத்தில சொல்றீங்க.. பாக்கலாம்.." என்றாள் அவள். அவன் செல் சிணுங்கியது.

"யாரோ போன் பண்றாங்க! பேசுங்க!" என்று செல்லை அவன் கையில் கொடுத்தாள்.

வாங்கிப் பேசிவிட்டு செல்லை அவளிடமே தந்தான்.

"அங்கியே வை! யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்!" என்று கூறி செல்வியின் மடியிலேயே தலையை வைத்து படுத்துக் கொண்டான்.

"என்ன ஆச்சு?"

"எவளோ ஒருத்தி! ஹாலிடே ப்ளான்ஸ் இருக்காம்! வரீங்களான்னு கேட்டா?"

"ஏன்? ஆசையா கூப்பிடறா! போக வேண்டியதுதானே?" நக்கலாகக் கேட்டாள்.

"கேட்டேனே! கூட அவ வரமாட்டேன்னுட்டாளே!" அதே நக்கலுடன் கூறினான்.

"அதீத கற்பனை உடம்புக்கு ஆகாது! சமத்தா இருங்க!" என்று அவன் காதை திருகினாள்.

"இததான் சொன்னேன்! என் வைஃப் இருக்கா! இப்டி சொன்னா என் காதைத் திருகிடுவான்னு சொன்னேன்." என்று கூறி அவளை விட்டு நகர்ந்து நிமிர்ந்து படுத்தான்.

"நீங்க இருக்கீங்களே!" எழுந்து கொள்ள முயன்றவளை எழுந்து கொள்ளவிடாமல் கட்டிக் கொண்டான்.

"என்னங்க! இப்டி பண்றீங்க?" என்று சிணுங்கினாள்.

"ஹே! அது அப்டி இல்ல! "என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா!" அப்டிதான் சொல்லணும்!"

"எது வருதோ இல்லையோ! உங்களுக்கு தமிழ் நல்லா வந்துடுச்சு! சூப்பரா பேசறீங்க!" என்றாள்.

"தேங்க்யூ! தேங்க்யூ! தேங்க்யூ! தமிழ் கூடவே வாழறேன்ல! அதான்!" என்று ரஜினி ஸ்டைலில் பேசிக்காட்டினான்.

இருவரும் இப்படியே பேசிச் சிரித்துக் கொண்டிருப்பது பக்கத்து அறையிலிருந்த லட்சுமி பாட்டிக்கும் மங்கைக்கும் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

அன்று மாலையும் இருவரும் பீச்சுக்கு கிளம்பினர். அப்போது கிரிதரன் வந்திருந்தார்.

சூரஜ், அவரையும் மங்கையையும் அழைத்தான்.

"அத்த! வாங்க! பீச் போய்ட்டு வரலாம்!"

"இல்ல மாப்ள! இப்பதான் உங்க மாமா வந்தார்.. அவருக்கு டிபன் தரணும்.. நீங்க போய்ட்டு வாங்க." நாசூக்காக மறுத்தாள்.

"அப்டீன்னா, மாமா! நீங்க வாங்க! நம்ம போய்ட்டு வரலாம்!"

"இல்ல மாப்ள! நீங்க போய்ட்டு வாங்க! இன்னிக்கு செம்ம அலைச்சல்! டயர்டா இருக்கு!"

"ஏன்ப்பா? வாங்கப்பா! ஜாலியா இருக்கும்ல!" செல்வி அப்பாவிடம் செல்லம் கொஞ்சினாள்.

"இல்ல செல்விம்மா! நாளைக்கு இதைவிட இன்னும் அலையணும்.. அதுக்கு இப்ப ரெஸ்ட் எடுத்தாதான் சரியா இருக்கும்!"

செல்வியின் முகம் வாடி விட்டது. இதைக் கண்ட லட்சுமி பாட்டி,

"செல்விம்மா! நீ வேல பண்றியே! கம்யூடர்! ரொம்ப நேரம் ஓடிச்சின்னா சூடாயிடுச்சுன்னு சொல்வியே! என்னமோ சொல்வியே! ஹேங்கர் ஆயிடுச்சுன்னு!" என்று கேட்டார்.

"ஹேங்க் ஆயிடுச்சு!" சூரஜ் சொன்னான்.

"ஆங்! அதேதான்! அது மாதிரிதானே! நம்ம உடம்பும்! தேவையான ரெஸ்ட் இல்லன்னா உடம்பு சோர்ந்து போகும்! உடம்பு சோர்ந்தா மனசும் சோர்ந்துடும்! மனசு சோர்ந்தா வாழ்க்கையே வெறுத்துடும்! என்னடா இந்த வாழ்க்கைன்னு போர் அடிச்சுடும்! அதனால இப்ப உங்கப்பா ரெஸ்ட் எடுப்பாராம்! நீயும் மாப்ளயும் ஜாலியா போய்ட்டு ஜாலியா வருவீங்களாம்! ஓடு! ஓடு! மாப்ள உனக்காக வெய்ட் பண்றார் பார்! சீக்ரம் போ!"

"ம்! சரி பாட்டி!" மனம் தெளிந்து சூரஜின் கையைப் பிடித்துக் கொண்டு சின்னக் குழந்தை போல ஓடினாள்.

சூரஜுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எத்தனை அழகாய் விளக்குகிறார்! அவனுடைய மனதில் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்தது போல இருந்தது. குழந்தை போல சந்தோஷமாக செல்வியுடன் பீச்சில் நன்றாக ஆடிவிட்டு வந்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சூரஜ் செல்வியை அழைத்துக் கொண்டு தங்கள் ஆஃபீசுக்கு சொந்தமான பீச்ரிசார்டில் இரண்டு நாட்கள் உல்லாசமாக இருந்து விட்டு திரும்பினான்.

செல்வியின் பெற்றோர் சூரஜ் செல்வி முதல் திருமணநாளுக்கு பரிசாக இருவருக்கும் தனித்தனியாக ஒரு பவுனில் தங்க நாணயம் கொடுத்தனர். பாட்டி இருவருக்கும் சேர்த்து ஒரு புத்தகம் பரிசளித்தார்.

பாட்டிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு கிரிதரனுக்கும் மங்கைக்கும் நமஸ்காரம் செய்தனர்.

மங்கை, கிரிதரன், பாட்டி மூவரிடமும் பிரியா விடைபெற்றுக் கொண்டு செல்வியும் சூரஜும் மும்பைக்கு விமானம் ஏறினர்.

செல்வியின் மனம் முழுக்க சந்தோஷப்பூ பூத்துக் குலுங்கியது. சூரஜுக்கும் பாட்டரி ரீசார்ஜ் செய்தது போல உணர்ந்தான்.

"ஒரு மாதிரி.. ஹேப்பியா இருக்குல்ல தமிழ்?"

"ஆமாங்க! ரொம்ப உற்சாகமா இருக்கு!"

"இது மாதிரி ஒரு உற்சாகம் புத்துணர்ச்சி இதுக்கு முன்னாடி நம்ம கல்யாணத்தப்போ இருந்தது. அதுக்கப்புறம் இப்பதான் இப்டி இருக்கு!"

"ஆமாங்க!"

"இனிமே எப்பவும் இப்டியே இருக்கணும்!" சொல்லிவிட்டு அவள் கையை தன் கையில் கோர்த்துக் கொண்டான். அவள் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள்.

குழப்பமான மனதோடு சென்னை வந்தவர்கள் தெளிவான மனதோடு மும்பை வந்திறங்கினர்.

செல்வியின் பிறந்த வீட்டில்
சேர்ந்தே கழித்த தருணங்கள்
புதிய பாடங்களைக் கற்றுத் தர
மன்னவனின் கண் திறந்ததுவே!

மனைவியின் அருமையை இவன்
மனதாரப் புரிந்து கொண்டான்!
பெண்ணவள் தனக்காகவே வாழும்
பெருமை தனை அறிந்து கொண்டான்!

பாட்டியின் அறிவுரைகளும்
பாயசத்தில் முந்திரியாக
இல்லறத்தில் சுவை சேர்க்க
மனதில் நிறைவு பொங்கியதே!

குழம்பிய உள்ளங்கள் மாறி
குதூகலத்தில் குதித்து நிற்க
இன்பத்தை மனதில் சுமந்தபடி
மும்பைக்கும் திரும்பினரே!

- C. புவனா.



- காதலின் மொழி என்ன?
 
Top