கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

26. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 26


வீட்டில் சூரஜ் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தான். தொலைக்காட்சியில் தமிழ் சேனல்கள் ஓட ஆரம்பித்தது. செல்வியிடம் வாக்களித்தது போல வேலையிலிருந்து மாலை சீக்கிரம் வர ஆரம்பித்தான். சனி ஞாயிறுகளில் வீட்டில் இருக்க ஆரம்பித்தான். எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். சாப்பிடும்போது பேசி சிரித்து கிண்டல் செய்து எல்லாரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிப் பார்த்துக் கொண்டான்.

ஆனந்தி படம் வரைய அவளுக்கு மாடியில் சும்மா இருக்கும் அறையில் ஒன்றை சுத்தப்படுத்தி தர ஏற்பாடு செய்தான். மற்றொரு அறையில் அவள் வரைந்ததை பத்திரப் படுத்த ஏற்பாடு செய்தான்.

வீட்டுத் தோட்டத்தை ஆள் வைத்து சீர் செய்து செப்பனிட்டனர்.

ஆனந்தி தன் அண்ணனிடம் கேட்டு மண் பரிசோதனை செய்து இந்த மண்ணில் நன்றாக வரக் கூடிய பூஞ்செடிகள், கீரைகள், காய்கறிகள் என்று எல்லாம் போட்டு பயிர் செய்து அழகாக பராமரித்தாள்.

தீன்தயாள் செடிகளுக்கு நீர் பாய்ச்சினார். அவருக்கு இந்த வேலை மிகவும் பிடித்தது. செடிகள் பூக்க ஆரம்பித்ததும் அனைவரையும் அழைத்து வந்து காட்டினார். குழந்தை போல அவர் குதூகலிப்பதைப் பார்த்த கௌரிக்கு கண்கள் பனித்தன. தன் மகன்களிடம் சொன்னாள்,

"உங்க மூணு பேருக்கும் காது நல்லா கேக்குது, நல்லா பேச முடியுதுன்னு தெரிஞ்சப்போ இவர் முகத்தில இதே சந்தோஷம்தான் இருந்தது. அதுக்கப்புறம் இவர் தன்னோட முழு சந்தோஷத்தையும் இப்பதான் வெளிப்படுத்தறார். இவருக்கு இதெல்லாம் பிடிக்கும்னு கூட எனக்கு தெரியாது. என்னால இவ்வளவு நாளா இவரோட விருப்பங்கள் என்னன்னு புரிஞ்சிக்கவே முடியல." என்று கண்ணீருடன் சொன்னாள்.

விராட் அம்மாவை அணைத்துக் கொண்டான். சூரஜ் அப்பாவுக்கு மேலும் சில செடிகளை வாங்கிக் கொடுத்து அப்பாவை மேலும் மகிழ்ச்சியடையச் செய்தான்.

ஆனந்தி வீட்டில் குட்டி குட்டியாக படங்கள் வரைந்து மாட்டி கொஞ்சம் கொஞ்சமாக அலங்கரிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு வாரமும் வீட்டில் ஏதாவது ஒரு புதுமை வர ஆரம்பித்தது. எல்லாருக்குமே இந்த வாரம் நம் வீட்டில் என்ன மாற்றம் என்று ஆவலாக எதிர்பார்க்கத் தொடங்கினர்.

தீபிகா மும்பையில் மேற்படிப்பை தொடங்கினாள். வீட்டில் ஆனந்தியின் கைவண்ணத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களில் அவள் மனம் மகிழ்ந்தது.

"வாவ்! பாபி! க்ரேட்! நம்ம வீடே மாறிடுச்சே!" என்று ஆனந்தியை வெகுவாகப் பாராட்டினாள்.

அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு பெரிய கார் வாங்கினார்கள். சனி ஞாயிறுகளில் காரில் எல்லாரும் ஊரைச் சுற்றி வந்தார்கள்.

வீட்டில் ஏற்பட்டிருந்த மாற்றத்தினால் தீபிகாவின் மனதிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

தீபிகா தன் அண்ணன்கள் அண்ணிகளின் பாச மழையில் நனைந்தாள். தன் அண்ணன்கள் இருவரும் தங்கள் மனைவிகளை மகிழ்ச்சியாய் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தாள்.

தனக்குத் திருமணமானால் தானும் தன் கணவனுடன் இப்படிதான் அன்யோன்யமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். தனக்கு நல்லவன் ஒருவன் கணவனாக வந்தால்தான் இது சாத்தியமாகும். நல்லவன் என்று நினைத்த உடனேயே அவள் மனக்கண் முன் ஆனந்தன் வந்து சிரித்தான். அவள் மனம் அவனுக்காக ஏங்க ஆரம்பித்தது!

தன் வீட்டைப் பார்க்கும் போது ஆனந்தியின் திருச்சி வீட்டையும் அதைத் தொடர்ந்து ஆனந்தனையும் அவனிடம் தான் சொல்லியதும் அவள் நினைவுக்கு வந்து அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தது.

ஆனந்தி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லத் தொடங்கினாள். வீட்டில் உள்ள எல்லாரும் அமர்ந்து கதை கேட்பர். கௌரியும் தீன்தயாளும் இதை மிகவும் ரசித்தனர்.

பக்கத்து வீட்டு யமுனா கூட நேரம் கிடைக்கும் போது வந்து அமர்ந்து கதை கேட்டு தன் கவலைகளை மறக்கும் மருந்தாக உணர்வாள்.

விராட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம்! அவள் கதை சொல்ல ஆரம்பிக்கும் வரைதான் விராட்டாக, ஒரு கடுமையான போலீஸ்காரனாக இருப்பான். கதை கேட்க அமர்ந்தால் குழந்தையாகவே மாறிவிடுவான்.

செல்வி அவளுக்கு கதைகள் தேர்ந்தெடுத்துக் கொடுப்பாள். சூரஜும் தீபிகாவும் அதற்கு ஏற்ற ஹிந்தி பாடல்களை தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள்.

அவளுடைய கதைகள் அந்த பிரதேசம் முழுதும் பிரசித்தி பெற்றது. நிறைய பள்ளிகளில் இருந்து அவளுக்கு கதை சொல்ல அழைப்புகள் வந்தன. பல இடங்களுக்கு சென்று கதை சொல்லி குழந்தைகளை மகிழ்வித்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விராட்டிடம் கொடுத்து கொலைக் குற்றவாளிகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுடைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கு செலவு செய்ய வித்திட்டாள். இதனால் விராட்டுக்கும் தன் டிபார்ட்மென்டில் நற்பெயர் கிடைத்தது. அவனுடைய உயரதிகாரிகள் பலரின் நட்பையும் நன்மதிப்பையும் பெற்றான்.

திருமணமாகி ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில் ஒருநாள் ஆனந்தி தன் கணவன் விராட்டின் கோபத்தை முதன்முதலில் கண்டாள். பயத்தில் அவளுக்குக் காய்ச்சலே வந்துவிட்டது.

தீபிகா தன் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பூனா போயிருந்தாள். அவள் வர நான்கு நாட்கள் ஆகும். செல்வி வழக்கம் போல பள்ளி வேலைக்கும் சூரஜ் தன் அலுவலகத்துக்கும் சென்று விட, விராட் தன் வேலைக்குக் கிளம்பினான். அங்கு போனால் அவனுக்குப் பெரிய தலைவலி காத்திருந்தது.

அவனுடைய காவல் நிலையப் பாதுகாப்பில் இருந்த விசாரணைக் கைதி ஒருவன் தப்பிவிட்டான். அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலிடத்திலிருந்து விராட்டிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, அவன் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.

ஏற்கனவே அவன் தன் திறமையால் பல வழக்குகளை நல்லமுறையில் முடித்து இருந்ததால் கைதியைப் பிடித்து வர அவனுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

விராட் பசி தூக்கம் பாராது அவனைத் தேடியலைந்தான். கைதி சென்றிருக்கக் கூடிய இடங்களை யூகித்து அங்கெல்லாம் ஆட்களை அனுப்பித் தேடினான். ஒருவரும் உருப்படியான தகவல்களைக் கொண்டு வரவில்லை.

மிகவும் நுணுக்கமாக துப்பு துலக்கியதில், அவனுக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு காவலரே அந்தக் கைதியை தப்ப வைத்துள்ளான் என்பதைக் கண்டுபிடித்தான்.

அந்த காவலர் மேல் வழக்குப் பதிந்து அவனைக் கைது செய்து விசாரித்துக் கொண்டிருந்தான். அவனோ வாயைத் திறக்கவே மாட்டேன் என்று சாதித்தான். அந்தக் கடுப்பில் விராட்டுக்கு மண்டை காய்ந்தது. தலைக்கேறிய கோபத்தில் கர்ஜித்துக் கொண்டிருந்தான்.

அப்போது மதிய உணவை எடுத்துக் கொண்டு காவல்நிலையம் வந்தாள் ஆனந்தி. அவனுடைய இருக்கையில் விராட்டைக் காணாது அங்கிருந்த பெண் காவலரிடம் கேட்டாள். பெண் காவலர் ஷில்பா, விராட் உள்ளே கைதியை விசாரித்துக் கொண்டிருப்பதாக மெல்லிய குரலில் தெரிவித்தாள்.

சாப்பாட்டு கூடையை ஷில்பாவிடம் கொடுத்துவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் விராட் கனல் கக்கும் விழிகளுடன் வெளியே வந்தான். அங்கிருந்த காவலர்கள் எல்லாரையும் பார்த்து கோபத்தோடு கத்தினான். ஆனால் தன் அன்பு மனைவி அங்கே நின்றிருப்பது அவன் கண்ணிலும் கருத்திலும் பதியவேயில்லை! அவன் கத்திய கத்தலில் ஆனந்திக்கு உடல் நடுங்கிவிட்டது. பயத்தில் முகம் வெளிறிவிட்டது. அவன் கத்திவிட்டு வெளியே போய்விட்டான்.

இவளுடைய முக மாற்றத்தைக் கண்ட ஷில்பா, "மேம்ஸாப்! மேம்ஸாப்!" என்று அழைத்தாள்.

ஆனந்தி பயத்தில் உறைந்து விட்டாள். அவளால் நிற்க முடியவில்லை. கீழே விழப் போனவளை அருகில் இருந்த மற்றொரு காவலர் பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைக்க அவளோ அப்படியே மயங்கிச் சரிந்தாள். அந்தக் காவலர்கள் இருவரும் விராட்டுக்கு மாறி மாறி அழைத்தனர். அவனுக்கு அழைப்பு போகவேயில்லை. இருவருக்கும் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

கொஞ்சம் யோசித்த ஷில்பா, ஆனந்தியின் கைபேசியை எடுத்து செல்விக்கு போன் செய்தாள். செல்வி பள்ளியில் இருக்கும்போது போன் பேச மாட்டாளே! அடுத்ததாக, சூரஜின் நம்பருக்கு டயல் செய்தாள். நல்ல வேளையாக அவன் அழைப்பை எடுத்துப் பேசினான். அவனிடம் விஷயத்தைத் தெரிவித்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் சூரஜ் அங்கு வந்தான். அதற்குள் ஆனந்திக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

சூரஜைப் பார்த்து கூட பயந்தாள்.

'ஒண்ணுல்ல! ஒண்ணுல்ல!' என்று சொல்லியபடியே அவளை சமாதானம் செய்து கூட்டி வந்து தன் காரில் ஏற்றினான். அவளை அழைத்துக் கொண்டு முதலில் ஒரு மருத்துவரிடம் சென்றான்.

"பயப்படுவதற்கு எதுவும் இல்லை. சாதாரண ஜுரம்தான். மயக்கத்தைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை. திடீர்ன்னு ஏற்பட்ட அதிர்ச்சில இப்டி வந்திருக்கு.." என்று கூறி உடல் சத்துக்கும் தூங்குவதற்கும் சில மருந்து மாத்திரைகளை எழுதித் தந்தார்.

அவருக்கு நன்றி கூறி ஆனந்தியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். வழியெல்லாம் பயத்தில் அனத்திக் கொண்டே வந்தாள்.

கௌரியும் தீன்தயாளும் பதறிவிட்டனர். ஆனந்தியால் மாடியேறி அவளுடைய அறைக்கு போக முடியவில்லை. தன்னுடைய அறையில் படுக்க வைத்துவிட்டு வந்து கௌரியிடம் கூறினான்.

கௌரி ஆனந்தியை மெதுவாக எழுப்பிப் பார்த்தாள். கௌரியைப் பார்த்தும் கூட பயந்தாள். தீன்தயாள் அவளுடைய கையை பிடித்துக் கொண்டார். ஏதோ சைகை செய்தார். அவளுக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது போல இருந்தது. அமைதி அடைந்தாள். ஆனால் காய்ச்சல் அதிகமாக இருந்தது.

சூரஜ் அம்மாவிடம் கஞ்சியைப் போட்டு எடுத்து வரச் சொன்னான். கௌரியும் கஞ்சி போட்டு எடுத்து வந்தாள். ஆனால் ஆனந்தி அதை ஒரு சொட்டு கூட குடிக்கவில்லை. சூரஜ், கௌரி இருவரைப் பார்த்தும் பயப்படுகிறாளே! என்ன செய்ய? தீன்தயாள் நான் ஊட்டிப் பார்க்கிறேன் என்று கஞ்சியை கையில் எடுத்துக் கொண்டார்.

ஆனந்தியிடம் வந்து அவள் தலையை மென்மையாக் தடவி அவள் வாயைத் திறக்கச் சொல்லி தன்னுடைய மொழியில் புரிய வைத்தார். அவள் மெதுவாக வாயைத் திறந்தாள். கஞ்சியை ஊட்டி விட்டார். அதே முறையில் மாத்திரைகளையும் முழுங்க வைத்தார். அவளை தட்டித் தூங்க வைத்தார்.

கௌரிக்கும், சூரஜுக்கும் ஆனந்தியை பார்க்கப் பாவமாயிருந்தது.

இவள் இப்படி மெல்லிய மனதுடன் இருந்தால் விராட்டால் எப்படி வேலை செய்ய முடியும்! அதுவும் அவன் ஒரு போலீஸ்காரன். அவன் கோபப்படாமல் எப்படி இருப்பான்?

'கடவுளே! ரெண்டு வேற வேற சுபாவம் இருக்கற இவங்க ரெண்டு பேரையும் சேத்து வெச்சு என்ன நாடகம் நடத்தறியோ!' என்று கௌரி நினைத்தாள்.

ஆனந்தி அரை மணிநேரம் கூட உறங்கவில்லை! திரும்பவும் பயத்தில் அலறினாள். மூவரும் அருகில் அமர்ந்து கொண்டு அவளை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் யாராலும் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை! தீன்தாயாளின் முயற்சிகளுக்கும் இம்முறை பயனிருக்கவில்லை.

பள்ளி வேலை முடிந்து வந்த செல்வி, சூரஜின் காரைப் பார்த்து வியந்தபடியே வீட்டுக்குள் வந்தாள். ஆனந்தியின் அலறலைக் கேட்டதும் பதறியபடி ஓடி வந்தாள்.

செல்வியைப் பார்த்ததும் ஆனந்தி "அக்கா!" என்று அவள் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். செல்வி அவளை தட்டிக் கொடுத்துக் கொண்டே சூரஜிடம் என்னவென்று கேட்டாள்.

சூரஜ் எல்லாற்றையும் சொன்னான். மருந்து மாத்திரைகளை காட்டினான்.

"பாவமாயிருக்கு தமிழ்! இப்படி பயப்படுவான்னு நெனச்சு கூட பாக்கல!"

"எனக்கே ஆச்சரியமா இருக்கு சூரஜ்! இவளுக்கு கத்தினா பிடிக்காதுன்னு தெரியும்! ஆனா பயப்பட மாட்டாளே!"

"விராட், இவ இருக்கறதையே கவனிக்கலையாம்! கத்திட்டு வெளிய போய்ட்டானாம்! நானும் ரெண்டு முறை அவன் போனுக்கு ட்ரை பண்ணினேன்! நாட் ரீச்சபிள்ன்னு வருது."

"சரி விடுங்க! அவர் பாவம்! சோறு தண்ணியில்லாம அலைஞ்சுகிட்டு இருக்கார்! இத வேற சொன்னா ஆடிப் போய்டுவார்!"

"நீ ஒரு முறை போன் பண்ணி பாக்கறியா?"

"இல்ல! வேணாம்! அநேகமா அவர் இப்ப வர நேரம்தான். லஞ்ச் சாப்பிட்டிருக்க மாட்டார்! அதனால இப்ப வந்துடுவார்னு நெனக்கிறேன்!"

"சரி!"

ட்யூஷன் குழந்தைகள் வந்தனர். கௌரி அவர்களிடம் அன்று ட்யூஷன் இல்லையென்று கூறினாள். குழந்தைகள் எல்லாம் சத்தமில்லாமல் வந்து தங்களுடைய அன்பான சோட்டி பாபியை பார்த்துவிட்டுச் சென்றனர்.

செல்வியும் சூரஜும் ஆனந்தியை விட்டு நகராமல் அருகிலேயே இருந்தனர்.

செல்வி சொன்னது போலவே விராட் "ஆனந்தி!" என்று அழைத்துக் கொண்டே வேகமாக வந்தான்!

எதிரே நின்ற அம்மாவைப் பார்த்து,

"அம்மா! திரும்பவும் கிளம்பணும்! என்ன இருக்கோ குடுங்க! பயங்கரமா பசிக்கிது! நான் போய் ஃப்ரஷ் ஆகிகிட்டு வரேன்!" நிற்காமல் சொல்லிக் கொண்டே மாடியேறினான்.

"ஆனந்தி! எனக்கு வேற யூனிஃபார்ம் குடுப்பா!" என்று சொல்லிக் கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

சில நிமிடங்களில் வெளியே வந்தவன் தன்னுடைய அறையில் சூரஜ், தன்னுடைய சீருடையை எடுத்து வைத்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு,

"பையா! நீ இங்க என்ன பண்ற? ஆனந்தி எங்க?"

"ஒண்ணுலடா! அவ கொஞ்சம் வேலையாயிருக்கா! நீதான் திரும்பவும் கிளம்பணும்னியே! அதான்! உனக்கு ஹெல்ப் பண்ண நான் வந்தேன்! நீ சேஞ்ச் பண்ணிகிட்டு வா! டிபன் ரெடியா இருக்கு!" வெளியேறினான்.

"ஓ! தேங்க்ஸ் டா!" கதவை சாத்திக் கொண்டான்.

ஐந்தே நிமிடங்களில் சீருடை மாற்றிக் கொண்டு கீழே வந்தான். அம்மா கொடுத்த டிபனை வேக வேகமாக முழுங்கினான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை! இல்லையென்றால் அவன் சாப்பிட மாட்டானே!

அவன் சாப்பிட்டதும் அவனை சூரஜ் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்.

"பையா! டைம் ஆச்சு!"

"ஒரு நிமிஷம்தான்! வா!"

உள்ளே வந்தவன் ஆனந்தியைக் கண்டதும் பதறிவிட்டான்!

"ஆனந்தி! என்னாச்சும்மா! பாபி! இவளுக்கு என்னாச்சு!"

சூரஜ் நடந்ததைக் கூறினான். விராட்டைப் பார்த்ததும் ஆனந்தி திரும்பவும் அலறினாள்.

"இவ வந்ததே எனக்கு தெரியாதே! இவ இன்னிக்கு லஞ்ச் கொண்டு வரலன்னுதான் நான் நெனச்சேன்!"

"எனக்கு புரியுது விராட்! இவ பயந்தாலும் பரவால்ல! இவ கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போங்க! அப்பதான் ஃபீவர் குறையும்!" விராட்டிடம் கூறிவிட்டு சூரஜை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள் செல்வி!

விராட் குழம்பினான். 'நான் என்ன செய்ய முடியும்!' என்று நினைத்தான்.

"என்ன தமிழ்! அவ ஏற்கனவே அவனப் பாத்து பயப்படறா! கரெக்ட்டா சொன்னா, அவளுக்கு ஜுரமே அவனப் பாத்துதான் வந்திருக்கு!"

"இல்லங்க! முள்ள முள்ளாலதான் எடுக்க முடியும்ங்கற மாதிரி விராட்டப் பாத்து வந்த ஜுரம் விராட்டால மட்டும்தான் குறையும்!"

செல்வியின் வார்த்தைகள் விராட்டின் காதுகளில் விழுந்தது.

ஆனந்தியின் அருகில் சென்று அமர்ந்தான். அவள் அவனைப் பார்த்து பயந்து நடுங்கினாள். நகர முற்பட்டவளை தன் வலுவான கரங்களால் பிடித்து நகரவிடாமல் தடுத்து மென்மையான குரலில் குழந்தையிடம் பேசுவது போல பேசினான்.

"ஆனந்தி! நான் உன்னப் பாத்து கத்தல! உன்னப் போய் நான் கத்துவேனா?"

"ம்!" கண்களை மூடிக்கொண்டே பதில் சொன்னாள்.

"இன்ஃபேக்ட் நீ அங்க இருக்கறதையே நான் பாக்கலம்மா! நீதான் என்னோட உயிராச்சே! என் ஆனந்தியப் போய் நான் கத்துவேனா?"

"ம்!"

"நான் இப்ப ஒரு ரௌடிய அரெஸ்ட் பண்ண போகணும்! நான் போய்ட்டு வரவா?"

"ம்! சாப்டீங்களா?" குரலில் நடுக்கம் இன்னும் இருந்தது.

"சாப்டேன்டா! நீயும் சாப்டு! நான் கிளம்பவா?"

"ம்!"

"அழகான ராட்சசி! உனக்கு ஒண்ணும் ஆகாதுடீ!" அவன் அவளுடைய காதில் அவன் அவளுக்கு வைத்த செல்லப் பெயரை வைத்து கிசுகிசுப்பாய் கூறினான். அவள் கண் திறந்து அவனைப் பார்த்து மெதுவாக சிரித்தாள்.

"நீ சாப்ட்டு நல்லா தூங்கு! நல்லா தூங்கினாதான் ஃபீவர் விடும்! சரியா?"

"ம்!"

"நான் போய்ட்டு சீக்ரம் வந்துடறேன்!"

"பத்திரமா போய்ட்டு வாங்க!" நடுக்கம் குறைந்திருந்தது.

"நான் போய்ட்டு வரேன்! எல்லாம் சரியாய்டும்! வரட்டுமா?" கேட்டவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு வெளியேறினான்.

"பாபி! போய்ட்டு வரேன்!" செல்வியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"ம்! சரி விராட்! டேக் கேர்!"

"அம்மா! வரேம்மா!" அப்பாவிடமும் சைகை காட்டினான்.

"சரிப்பா! பத்திரமா போய்ட்டு வா!" கௌரி சொன்னாள்.

"சீக்ரமா வாடா!" சொன்ன சூரஜிடம்,

"எங்கடா சீக்ரம் வரது? அந்த கைதிய தேடிக்கிட்டு இருக்கேன்! நாளைக்கு காலைலக்குள்ள அரெஸ்ட் பண்ணனும்! எங்க போனான்னே தெரியல!" விரக்தியுடன் சொன்னான். அப்படியே ஹால் சோபாவில் அமர்ந்துவிட்டான்.

அறைக்குள் நுழையப் போன செல்வி நின்று அவனருகில் வந்து,

"ஹேய்! விராட்! சீர் அப்! உங்களாலயே முடியாதுன்னா வேற யாராலயும் முடியாது! நம்பிக்கையோட போய்ப் பாருங்க! அநேகமா உங்க கண்ணு முன்னாலயே எதாவது ஒரு சந்துக்குள்ளயோ பொந்துக்குள்ளயோ ஒளிஞ்சிகிட்டு இருப்பான்! போய் அரெஸ்ட் பண்ணி லாக் அப்ல வெச்சுட்டு வெற்றியோட வாங்க!" என்றாள்.

"தேங்க்ஸ் பாபி!" எழுந்து கொண்டவனிடம் சூரஜ் ஒரு டம்ளர் தண்ணீரை நீட்டினான். விராட் அதை வாங்கி குடித்தான்.

"ஆனந்திய பத்தி கவலப்படாம போய்ட்டு வாடா! நாங்க எல்லாரும் இருக்கோம்!" சூரஜ் கூறினான்.

"தேங்க்யூ பையா! பை!" கிளம்பினான்.

ஆனந்தியின் நடுக்கம் பயம் எல்லாம் குறையத் தொடங்கியது. காய்ச்சல் மட்டும் இருந்தது. அவளை விட்டு செல்வியும் சூரஜும் எங்கும் நகராமல் கவனித்துக் கொண்டார்கள்.

இரவு எட்டு மணியளவில் செல்வி கஞ்சியைப் போட்டு எடுத்து வந்து ஆனந்திக்கு ஊட்டினாள். மாமியார் மாமனாரை சாப்பிடச் சொன்னாள். அவர்கள் இருவரும் சாப்பிட்டனர். சூரஜையும் சாப்பிடச் சொன்னாள். விராட் வரட்டும் என்று கூறிவிட்டான்.


இல்லறத்தின் இனிமையை
இரண்டு ஜோடிகளும் ஆசையுடன்
அணு அணுவாக அனுபவித்து
மகிழ்ந்து திளைத்தனரே!

இல்லத்தில் மாற்றங்கள் பல
மெல்ல மெல்லப் புகுந்தனவே!
ஆனந்தியின் ஓவியங்கள்
ஆனந்தத்தைப் பெருக்கினவே!

அண்ணனின் அறிவுரைகள் கேட்டு
ஆனந்தியோ சீரமைத்தாள் செடிகளை!
பூக்களும் இலைகளும் கனிகளும்
சேர்ந்து சிரித்துக் குலுங்கினவே!

வீட்டுப் பெரியவரும் மனமகிழ்ந்து தோட்டத்தில் உழைப்பைப் போட்டு
சிறுகுழந்தை போலக் குதூகலிக்க
துணைவியும் நெகிழ்ந்து நின்றார்!

காவலனாக விராட்டும் கடமையை
ஆற்றுகையில் சினம் கொள்ள
துணைவனின் புதுமுகம் கண்டு
ஆனந்தியும் அதிர்ச்சியுற்றாள்!

மென்மையான இதயமுடையாள்
வன்சொற்கள் கேட்டுக் கலங்கினாள்!
வாடிய பெண்ணவளை வாட்டிய
காய்ச்சலும் சேர்ந்து வருத்தியது!


- C. புவனா.




- காதலின் மொழி என்ன?
 
Top