கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

3. (வி)சித்திரமாய்...

Annapurani Dhandapani

Active member
3.


தொழிலதிபர் நந்தாவின் முன்னால் தலையைக் குனிந்து கொண்டு பவ்யமாய் அமர்ந்திருந்தார் அமரன்.

நந்தாவின் காரியதரிசி பாரி, அறையின் கதவை மெதுவாய் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

"பாரி! அந்த மெயில்.." நந்தா கேட்க,

"அதோட பிரிண்ட் அவுட்தான் கொண்டு வந்திருக்கேன் சார்.." என்றபடியே நந்தாவிடம் ஒரு ஃபைலை நீட்டினான்.

"அத இவன் கிட்ட காட்டு.." என்று ஏளனக் குரலில் சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தவனை கோபமாக முறைத்தார்.

பாரி அமரனிடம் அந்த ஃபைலைக் கொடுத்தான்.

வாங்கிப் பார்த்த அமரன் திருடனுக்கு தேள் கொட்டியது போல உணர்ந்தார். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாத முக பாவனையுடன்,

"சூப்பர் சார்.. மனமார்ந்த வாழ்த்துகள் சார்.." என்று எழுந்து நந்தாவுக்கு கை கொடுத்தார்.

நந்தா அவரை புழுவைப் பார்ப்பது போல பார்த்தார்.

"என்ன நடிக்கிறியா அமரன்? உன் வாழ்க்கைய நாசம் பண்ணிடுவேன்.." என்று அவரைப் பார்த்து கோபமாகக் கத்தினார்.

"சார்.. நீங்க என்ன.. சொல்றீங்கன்னு.. புரீல.. சா.." என்று அவர் முடிப்பதற்குள்,

"யேய்.." என்று கத்தினார் நந்தா.

அமரன் மட்டுமல்ல அங்கு நின்று கொண்டிருந்த நந்தாவின் காரியதரிசி பாரியும் நடுங்கித்தான் போனான்.

"என்னை என்ன கேணன்னு நெனச்சியா? நீ இந்த டென்டர் எனக்கு கிடைச்சிடக் கூடாதுன்னு நா சொன்ன அமவுன்ட்டை விட ஒரு லட்ச ரூபா அதிகமா போட்டு அனுப்பின.. ஆனா இந்த டென்டர் எனக்கே கிடைச்சிடுச்சி.. அதுவும் நா கோட் பண்ண சொன்ன ரேட்டுக்கு.." என்றார் நந்தா.

"சார்.. சத்தியமா.." என்று அவர் திரும்பவும் ஆரம்பிக்க,

"ஷட் அப்!" என்று கர்ஜித்தார் நந்தா.

தன்னுடைய மேஜையிலிருந்த கணிணித்திரையை அமரனின் புறமாகத் திருப்பினார்.

அதில் ஒரு காணொளி ஓடியது.

"இந்த டெண்டர் எடுத்தா கவர்மென்ட் சப்போர்ட் உனக்கு கிடைக்கும்.. சொசைட்டிக்கு நீயும் நல்லது பண்றன்னு பேர் கிடைக்கும்.. அதனால ஸ்டாக் மார்கெட்ல உன் கம்பெனி ஷேர்ஸ் ரேட் எகிறும்.. இதானே உன் பிளான்.. இத நா அவ்ளோ சீக்கிரம் நடக்க விட்டுடுவேனா.." என்று கறுவிக் கொண்ட அமரன் நந்தா சொன்ன தொகையை விட கூடுதல் தொகையை டெண்டரில் கோட் செய்து அதை சீல் செய்து மூடினார்.

இது அப்படியே வார்த்தை பிசகாமல் தெளிவான ஒலி ஔியுடன் காணொளியாக பதிவாகியிருந்தது.

அமரன் தன் கை கூப்பியபடியே எழுந்து எதோ சொல்ல எத்தனிக்க,

"வாய மூடு.. இந்த வீடியோ போதும்.. எனக்கு சாதகமா உனக்கெதிரான ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் இது.. உன்ன போலீஸ்ல மாட்டி விட்டாதான் என் அருமை உனக்கு தெரியும்.. என் கம்பெனிலயே சேர்ந்து வேலை கத்துகிட்டு என் கூடவே இருந்துகிட்டு என் கிட்டயே சம்பளம் வாங்கிகிட்டு எனக்கு எதிராவே சதி செய்வியா? அதப் பார்த்துகிட்டு நா சும்மா போவேன்னு நெனச்சியா?" என்று கோபமாகக் கேட்டார் நந்தா.

அவர் முகத்தில் அமரன் மீதான வெறுப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

"நீ ஜெயிலுக்கு போய் களி தின்னு.. உன் பொண்டாட்டியோட கவர்மென்ட் வேலை பறி போகும்.. போக வெப்பேன்.. உன் பொண்ணுங்கள காலேஜ்ல இருந்து விரட்டிடுவாங்க.. விரட்ட வெப்பேன்.. அப்றம் அவங்கல்லாம் சோத்துக்கு சிக்னல்ல நின்னு பிச்ச எடுப்பாங்க.." நந்தா வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.

கேட்டுக் கொண்டிருந்த பாரிக்கு தர்மசங்கடமாக இருந்தது.

'என்ன இருந்தாலும் அமரன் சார் ரொம்ப வருஷமா இங்க வேல பண்றவர்.. அவர் பண்ணினது தப்புதான்.. ஆனா அதுக்காக இந்தாள் பேசறது டூ மச்.. இவர் செய்த தப்புக்கு இவர் வைஃப் குழந்தைல்லாம் ஏன் இந்தாள் பேச்சில இழுக்கறான்..' என்று நினைத்துக் கொண்டான் பாரி.

தன் மனைவி மக்களைப் பற்றி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அமரன் நடுங்கியபடி நிமிர்ந்து நந்தாவைப் பார்க்க, நந்தா அமரனைக் கோபமாகப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நந்தாவின் அறையில் மாட்டப்பட்டிருந்த அந்த ஓவியத்திலிருந்த அழகான பெண்ணின் முகம் விகாரமாக மாறியது. அவளுடைய கைகள் ஓவியச் சட்டத்திலிருந்து நீண்டு நந்தாவின் கழுத்தை நெறிப்பது போல வர, இதைக் கண்ட அமரன் பயத்தில் நடுங்கினார்.

அவருக்கு வியர்த்து வழிந்தது. மூச்சு விட சிரமமாயிருந்தது. நெஞ்சின் இடது பக்கத்தில் சுருக்கென்று ஒரு வலியை உணர்ந்தார்.

ஒரு கையால் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டவர் மறுகையால் நந்தாவை அந்த ஓவியத்திலிருந்த பேய்ப் பெண்ணிடமிருந்து காப்பாற்றும் எண்ணத்தில் கை நீட்டினார்.

தன்னைப் பார்த்து, தான் சொன்னவற்றைக் கேட்டுதான் அமரன் நடுங்குகிறார் என்று நந்தாவுக்கு தன் மீதே ஒரு கர்வம் ஏற்பட்டது.

விகாரமாக மாறியிருந்த அந்த ஓவியப் பெண்ணின் கண்ணிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தச் சிவப்பில் தீப்பிழம்புகள் சீறிப் பாய்ந்து வந்து நந்தாவைச் சூழ்ந்து கொள்வது போல அமரனுக்குத் தோன்றியது.

அமரன் நந்தாவை எப்படியாவது அந்த தீயிலிருந்த காத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், தன் நெஞ்சில் ஏற்பட்ட வலியைப் பார்க்காமல் நந்தாவின் அருகில் ஓடினார். ஆனால் அவர் நந்தாவின் மேல் கை வைப்பதற்குள் அவருடைய உயிர் பிரிந்தேவிட்டது. அப்படியே பட்ட மரம் போல சடாரென்று கீழே விழுந்தார்.

"அமரன் சார்.." என்று பாரி அவரைப் பிடிக்க முயன்றான்.

அமரன் நாடகமாடுவாக நந்தா நினைத்தார்.

"பயமா இருக்கா அமரன்.. நா நெனச்சா இதெல்லாம் செய்ய முடியும்.. ஆனா செய்ய மாட்டேன்.. ஆனா உன்ன அப்டியே விடற அளவுக்கு நா நல்லவன் இல்ல.. உன் பதவிய பறிச்சிட்டேன்.. உன் சம்பளத்தை குறைச்சிட்டேன்.. நீல்லாம் வசதிக்கு பழக்கப்பட்டவன்.. உன் வசதிகளை குறைச்சாதான் ஒழுங்கா இருப்ப.." என்று சொல்லிக் கொண்டே போனார்.

பாரி கீழே விழுந்த அமரனைத் தூக்கப் போனான்.

அமரனின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

"சார்.. செத்துட்டார் சார்.." என்று அலறினான் பாரி.

"வாட்!" என்று அதிர்ந்து போய் அருகில் வந்த நந்தாவுக்கு இப்போது நடுக்கமாக இருந்தது.

"நா.. நா.. எதுவும் பண்ணல.." என்று லேசாக முணுமுணுத்தார் நந்தா.

"அநியாயமா ஒரு நல்லவரை இப்டி கொலை பண்ணிட்டீங்களே சார்.." என்று கத்திக் கொண்டே வெளியே ஓடினான் பாரி.

பாரி வெளியே சென்று கூச்சல் போட, அலுவலகத்தில் பணியிலிருந்த அத்தனை ஊழியர்களும் ஓடி வந்துவிட்டார்கள்.

சில நிமிடங்களில் காவல்துறையிலிருந்து மோப்ப நாய் சகிதம் காவலர்களும் வந்துவிட நந்தா கைது செய்யப்பட்டார். விசாரணை தொடங்கியது.

வணிகப் பெரும்புள்ளி என்பதால் பத்திரிகையாளர்களும் டிவி சேனல்காரர்களும் கூட அங்கே குழுமிவிட்டார்கள்.

"இந்தாள்தான்.. இந்தாள் வழக்கம் போல தன் பண பலத்த வெச்சி மிரட்டினான்.. அமரன் சாரோட பொண்டாட்டி புள்ளைங்கள நடுத் தெருல பிச்சையெடுக்க வெப்பேன்னு சொன்னான்.. இதக் கேட்டு எந்த மனுஷனால தாங்கிக்க முடியும்.. அப்டியே நெஞ்சப் புடிச்சிகிட்டு விழுந்துட்டாரு..

ஆனா அப்ப கூட இந்தாள் பக்கத்தில வந்து என்னாச்சுன்னு பாக்கல.. நா எங்க வேணும்னாலும் வந்து சாட்சி சொல்வேன்.. இந்தாள்தான் அமரன் சாரை பயமுறுத்தி கொலை பண்ணினான்.." பாரி நந்தாவின் மீது இத்தனை நாளாக சேமித்து வைத்திருந்த அத்தனை வெறுப்பையும் கொட்டித் தீர்ப்பது போல ஒரு டிவி சேனல் கேமிரா முன்னால் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதை அப்படியே பதிவு செய்து கொண்டிருந்தான் ஒருவன்.

"ஏன் அவரு மேல உங்க முதலாளிக்கு இவ்ளோ கோவம் வந்தது.. ஏதாவது முன் விரோதமா.." என்று ஒரு மாடன் பெண் துருவித் துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

சென்சேஷனலான செய்திகள் கிடைத்தால் விடுவார்களா?

"அமரன் சார் ஒரு டென்டர் விஷயத்தில கம்பெனிக்கு எதிரா சதி செஞ்சிட்டார்ன்னு எங்க முதலாளி நெனச்சிகிட்டான்.. ஆனா உண்மை என்னன்னா அமரன் சாரை நந்தாவே சூழ்ச்சி பண்ணி சிக்க வெச்சிட்டான்.." என்று பாரி சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டபடியே நந்தா காவலர்களுடன் சென்றார்.

அவர் மனதில் சொல்லொணத் துயர் ஏற்பட்டது.

'என் உழைப்பு.. என் பணம்.. யாராவது ஏமாத்தி என்கிட்டயிருந்து தட்டி பறிக்க நெனச்சு அத நா தடுத்தா.. அது சூழ்சசியா..' என்று நினைத்தபடியே இருந்தார்.

அகங்காரம் பிடித்த தொழிலதிபர் தன் ஊழியரை சூழ்ச்சி செய்து கொன்றார் என்ற செய்திதான், ஊர் முழுதும் பேசு பொருளாக இருந்தது.

செய்தி பரவத் தொடங்கில சில மணி நேரங்களில் நந்தாவின் கம்பெனி பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

அவருடைய பல ரெஸ்ட்டாரண்டுகள் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

பல வருடங்களாக அவர் உழைத்து உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் சில நாட்களில் தரைமட்டமானது.

அவருடைய மனைவி பரமு என்கிற பரமேஸ்வரி தன் கணவனைக் காண சிறைக்குச் சென்றாள்.

"ஏன் இப்டி பண்ணீங்க?"

"சத்தியமா சொல்றேன்டீ.. நா எதுவுமே செய்யல.. உண்மையாவே அவன்தான் நமக்கு அந்த கவர்மென்ட் டென்டர் கிடைச்சிடக் கூடாதுன்னு நா சொன்ன அமவுன்டை விட லட்ச ரூபாய் அதிகமா போட்டு அனுப்ப ரெடி பண்ணினான். நா அத கண்டுபிடிச்சி அத மாத்தி கம்மி அமவுன்டை கோட் பண்ணி அனுப்பினேன்.. அந்த டென்டரும் நமக்கு கிடைச்சது.. இதுக்கு பக்காவான எவிடென்சும் இருக்கு..

நீ இப்டி ஒரு துரோகத்த எனக்கு பண்ணினது எனக்கு தெரியும்னு அவன்கிட்ட சொல்லிட்டிருந்தேன்.. என் கை விரல் கூட அவன் மேல படல.. போலீஸ்ல சொல்வேன்னு சொல்லி மிரட்டினேன்தான்.. இல்லங்கல.. ஆனா அப்டில்லாம் பண்ணல.. அப்டி பண்றதாவும் இல்ல.. உண்மையாவே அவன ஜெனரல் மேனேஜர் பதவில இருந்து தூக்கிட்டு சாதா கிளார்க்கா டீப்ரொமோட் செய்துட்டேன்.. அததான் அவன் கிட்ட சொல்லிட்டும் இருந்தேன்..

இதெல்லாம் நம்ம ஆஃபீஸ் ரூம்ல இருக்கற சிசிடீவி கேமிரா கண்டிப்பா பதிவாகியிருக்கும்..

நா கொஞ்சம் அதிகமாதான் மிரட்டினேன்.. ஒத்துக்கறேன்.. ஆனா அவன மல மாதிரி நம்பின எனக்கு துரோகம் பண்ணிட்டானேன்னு வந்த நியாயமான கோபம்..

ஆனா நா மிரட்டினத கேட்டு பயந்துட்டான் போல.. பயத்தில செத்துட்டான்.. ஆனா இந்த பாரி ஏன் இப்டிலாம் தப்பு தப்பா பேசறான்னு எனக்கு புரியவேல்ல.." என்று வருத்தத்துடன் சொன்னார் நந்தா.

பரமு தீவிரமாக யோசித்துவிட்டு,

"சரி! நம்ம வக்கீல் கிட்ட பேசிட்டு வரேன்.. நீங்க சொல்றதுல உண்மையிருந்தா அந்த ஆண்டவன் நம்மள கைவிட மாட்டான்.." என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி தேற்றிவிட்டுப் போனாள்.

நேராக அலுவலகம் சென்றாள். அது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அலுவலகம் முழுதும் அலங்கோலமாகக் காணப்பட்டது.

அவளுக்கு ரத்தக் கண்ணீரே வரும்போல இருந்தது.

தள்ளுவண்டியில் இட்லி விற்று கையேந்தி பவனாக ஆரம்பித்த கடை இன்று இவ்வளவு பெரிய வணிக சாம்ராஜ்ஜியமாக மாறியதற்கு காரணம் நந்தாவின் கடின உழைப்புதான்.

இத்தனை உயரத்துக்கு வந்தாலும் அரசாங்கத்தை ஏமாற்றாமல் வரிகள் எதையும் பாக்கி வைக்காமல் சரியாகச் செலுத்தி விடுபவர். தன் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் அளித்து ஆதரிக்கும் நல்ல மனம் படைத்தவர்.

ஆனால் அவர் ஒரு முன்கோபி. அவருக்கு கோபம் வந்து விட்டால் எதிரில் நிற்பவர்கள் யார் என்ன என்பது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட யோசனை செய்யாமல் வாயில் சொல்லக் கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டித் தீர்த்துவிடுவார். அவருடைய கோபம்தான் இன்று அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

வருந்தியபடியே வக்கீலைச் சென்று பார்த்தாள். அவருடைய வக்கீலும் நந்தாவைச் சந்தித்து விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.

நந்தாவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை அவர் செய்ய ஆரம்பித்தார்.


- தொடரும்....
 
Top