கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

32. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 32

பாண்டியன் யமுனாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்! கண்மணியின் தேர்வுகள் முடிந்து முடிவு வெளியானதும் அவள் தமிழகத்தில்தான் அவள் மேற்படிப்பைத் தொடருவாள் என்று யமுனாவிடம் சொன்னான்! அதற்குள் பாட்டியை அழைத்து வருவேன் என்று கூறிச் சென்றான்!

சொன்னது போல தாத்தா, பாட்டி, அவனுடைய அப்பா பாரிவேந்தன், அம்மா அங்கையற்கண்ணி, செந்திலின் தம்பி சரவணவேலன், அவன் மனைவி கனகவல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தான்!

யமுனாவின் வீட்டை அதுவும் அவளுடைய சாமி அறையைப் பார்த்ததும் அனைவரும் கண் கலங்கி விட்டனர்! அவள் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டனர்! பிங்கியைப் பார்த்ததும் ஆடிப் போய் விட்டனர்! அப்படியே செந்திலுக்கு பெண் வேடமிட்டு வந்தது போலவே இருப்பவளைக் கண்டதும் மலைத்தனர்!

பிங்கி தேர்வில் பள்ளி முதல் மாணவியாக வந்து யமுனாவுக்கு பெருமை சேர்த்தாள்! அனைவரும் வாழ்த்தினர்! செல்வி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்!

அனைவரின் பாராட்டுக்களோடும் வாழ்த்துக்களோடும் பிங்கி தமிழ்நாட்டுக்கு கிளம்பினாள். யமுனாவையும் பிங்கியையும் அழைத்துக்கொண்டு பாண்டியன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

செல்வி பிங்கியிடம் கூறினாள்!

"பிங்கி! எப்பவும் படிப்ப விட்ராத! யோகாவையும் கராத்தேயையும் கூட விட்டுடக் கூடாது!"

"சரி பாபி!"

"அங்க இருக்கற பெரியவங்க எப்பவோ உங்கம்மாவ கொடுமை பண்ணினாங்க! ஆனா நீ அதெல்லாம் நெனச்சு அவங்கள அவமரியாதை செய்யக் கூடாது!"

"சரி பாபி!"

"அங்க உன் வயசில பசங்க பொண்ணுங்க இருக்கலாம்! எல்லார் கிட்டயும் அன்பா பழகணும்! அவங்க வம்புக்கிழுத்தா கூட நீ கோபப்படக் கூடாது! சண்டை போடக்கூடாது!"

"சரி பாபி!"

"நீ பண்ற எந்தவொரு செய்கையையும் எல்லாரும் கவனிப்பாங்க! தப்பு பண்ணினாலும் நல்லது பண்ணினாலும் உங்க அம்மாவுக்குதான் பேர் கிடைக்கும்! நீ நல்லது பண்ணினா அம்மாவுக்கு நல்ல பேர்! தப்பு பண்ணினா அம்மாவுக்கு கெட்ட பேர்! அதனால எப்பவும் கவனமா இருக்கணும்! புரியுதா!"

"சரி பாபி! புரியுது!"

"எப்பவும் தைரியத்தை விட்டுடக் கூடாது.. நீ தைரியத்தை இழக்காம இருக்க உண்மையையும் அன்பையும் கடைபிடிக்கணும்.. அன்பும் உண்மையும் எங்க இருக்கோ அங்க தைரியம் தன்னால வந்துடும்.."

"சரி பாபி!"

"அதே மாதிரி சுயபச்சாதாபமும் படக்கூடாது.. அதாவது செல்ஃப் பிட்டி (self pity).. இது இரும்புல படரும் துரு மாதிரி... நம்ம மேல நாமே படற பரிதாபம் நம்மை அறியாம நம்மளையே கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிடும்!"

"புரியுது பாபி!"

"நல்ல பொண்ணா இருந்து நல்லா படிச்சு உங்கப்பாவோட லட்சியத்த நிறைவேத்தணும்! சரியா!"

"சரி பாபி! கண்டிப்பா நிறைவேத்துவேன்!"

"பத்திரமா போய்ட்டு வா!" அவளுக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை பரிசாக அளித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைத்தாள்!

கேட்டுக் கொண்டிருந்த சூரஜ், விராட், தீபிகா மூவரும் வியந்தனர்! எவ்வளவு நுணுக்கமாக சொல்லித் தருகிறாள்! பாசமும் வைக்கிறாள்! அதே நேரத்தில் அந்தப் பாசம் கண்மூடித்தனமான ஒன்றாக இல்லாமல் வழிகாட்டுதலாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டனர்!

யமுனா, தீன்தயாள் கௌரியின் கால்களில் விழுந்து வணங்கினாள். அவர்கள் அவளை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

பிங்கிக்கு சூரஜ், விராட், தீபிகா, ஆனந்தி மற்றும் அவளுடைய ட்யூஷன் நண்பர்கள் எல்லாரும் பரசுப் பொருட்கள் தந்து பிரியாவிடை கொடுத்தார்கள்.

யமுனாவும் பிங்கியும் தமிழ்நாட்டுக்கு கிளம்பிவிட்டனர். தீன்தயாளுக்கும் கௌரிக்கும் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது! அன்று முழுவதும் வீட்டில் எல்லாரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

சூரஜ் செல்வியிடம் கூறினான்!

"யமுனாக்காவுக்கு ஒரு வழியா விமோசனம் கிடைச்சுடுச்சுல்ல!"

"ம்! ஆமாங்க! ரொம்ப சந்தோஷமா இருக்கு!"

"பிங்கி செம மார்க்ஸ் வாங்கிட்டாளே! நான் நெனச்சுகூட பாக்கல! ஒண்ணுமே தெரியாத குழந்தையா இருந்தா!"

"ம்!"

"ஆனா! கண்டிப்பா இது நீதான் சாதிச்சிருக்க தமிழ்! அவள கரெக்ட்டா மோல்ட் பண்ணியிருக்க! நீ இல்லன்னா அவ இவ்ளோ செல்ஃப் கான்ஃபிடென்ஸோட இருந்திருக்க மாட்டா!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லங்க! அவளுக்கு கொஞ்சம் பாசமும் அன்பும் தேவைப்பட்டுது! அததான் குடுத்தேன்!"

"எப்டியோ கோணலா இருந்த அவங்க வாழ்க்கை நேராயிடுச்சு!"

"ஆமாங்க! ரொம்ப சந்தோஷமா இருக்கு!"

யமுனாவையும் பிங்கியையும் பற்றியே பேசியபடி இருந்தனர். அன்றிரவு அவர்கள் இருவரும் உறங்க வெகு நேரமானது!

மறுநாள் அவர்கள் இருவருமே மிக மிகத் தாமதமாக எழுந்தார்கள். செல்வி அன்று தினமும் செய்யும் யோகா செய்யவில்லை! சூரஜ் வழக்கமாய் செல்லும் ஜிம் செல்வில்லை! எப்போதும் அவசர அவசரமாய் எழுந்து கிளம்பி எதையோ வாயில் போட்டுக் கொண்டு டப்பாவில் அடைத்துக் கொண்டு செல்லும் அலுவலகத்துக்கு இன்று சூரஜ் செல்லவில்லை!

எல்லாவற்றையும் மறந்து மிக மிகத் தாமதமாய் எழுந்து வந்த செல்வியை அனைவரும் ஆச்சர்யமாய் பார்த்தனர். அதுவும் எழுந்து வந்தவள் குளிக்கப் போகாமல் ஹால் சோபாவில் கொட்டாவி விட்டபடி அமர்ந்து செய்தித்தாளைப் புரட்டினாள். அவளை வியப்புடன் பார்த்தபடி காக்கிச் சீருடை அணிந்து வேலைக்குச் செல்ல கிளம்பி வந்தான் விராட்!

"பாபி! உடம்பு எதுவும் சரியில்லையா?" அக்கறையுடன் கேட்டான்.

"ம்! இல்லையே! நல்லா இருக்கேனே! ஏன் விராட்?" முகம் மலர சிரித்து பதில் சொன்னாள்.

"இல்ல இவ்ளோ லேட்டால்லாம் எழுந்துக்க மாட்டீங்களேன்னு கேட்டேன்!"

"ம்! இந்த எக்ஸாம் முடிஞ்சதும் வருமே ஒரு லீவ் மூட்! அது மாதிரி இருக்கு! ஸ்கூலும் லீவ்தான்! சமைக்கதான் ஆள் இருக்காங்களே! சரி மெதுவா எழுந்தா போதும்னு தூங்கிட்டேன்!" எழுந்து வந்த சூரஜை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

சூரஜம் செல்வியும் ரகசியமாய் புன்னகை செய்து கொண்டனர்.

"பையா நீயும் ஆஃபீஸ் போகலையா?"

'இவன் முகம் என்ன இன்னிக்கு அழகா தெரியுது!' என்று நினைத்துக் கொண்டான்.

"ம்! இன்னிக்கு காலைல இருந்த மீட்டிங் கேன்சல் ஆயிடுச்சுன்னு மெஸேஜ் வந்திச்சு! ஸோ நானும் நல்லா தூங்கிட்டேன்!"

"ஓ! கிரேட்! பை பாபி! பைடா!" சொல்லிவிட்டு அவன் தன் பல்ஸரை உதைத்து வேலைக்குக் கிளம்பினான்.

மனதுக்குள், 'இப்பதான் இவங்க ரெண்டு பேரும் ஒழுங்கா குடும்பம் நடத்தறாங்க!' என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

தீபிகாவின் படிப்பு முடிந்துவிட்டது. அவள் மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று பிடிவாதத்தில் இருந்தாள். கௌரியும் தீன்தயாளும் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையாக அதுவும் இவள் படிப்புக்கு தடை போடாதவனாக ஒரு நல்ல பையனை பார் என்று சூரஜிடமும் விராட்டிடமும் கூறினார்கள். இருவருக்கும் அவரவர் மனக்கண் முன் ஆனந்தனின் முகம் வந்து போனது!

ஆனந்திக்கு இது ஏழாம் மாதம். வயிறு மேடிட்டு தெரிய ஆரம்பித்தது. அவள் அழகு கூடியது. பெண்மையின் அழகே தாய்மையில்தானே! இயற்கையாகவே அழகாய் இருப்பவள் இப்போது தாய்மையின் அழகும் சேர அவளுடைய அழகு மேலும் மெருகேறியது. கன்னங்கள் செழுமை அடைந்து அவள் சிரிக்கும் போது அதில் ஒரு தெய்வீகத்தன்மை குடிகொண்டது.

இன்னும் பத்து நாட்களில் அவளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வளைகாப்புக்கு பூங்குழலியும் மங்கையும் மும்முரமாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

விராட் மனைவியின் உடலில் ஏற்பட்டிருந்த மாற்றங்களினால் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் நடமாடினான். அவளை பூப்போல தாங்கினான்! அவள் கீழிருந்து மாடியேறும் போது அவன் அவள் கையைப் பிடித்து மெதுவாய் அழைத்துச் சென்றான். அவள் வயிற்றில் குழந்தை உதைக்கும்போது அவன் அவளுடைய வயிற்றில் காதை வைத்துக் கேட்டு குழந்தை உதைப்பதை உணர்ந்து சிலிர்த்தான்.

"ஆனந்தி! ரொம்ப சந்தோஷமா இருக்கு! எப்டி உதைக்கறதுல்ல!"

"ம்!" அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

"ஏன் கண்ணை மூடிக்கற? ரொம்ப வலிக்குதா!"

"இல்லப்பா! உதைக்கும் போது பயங்கர ஃபோர்ஸா இருக்கா! அதான்! வேற ஒண்ணுமில்ல!"

"ஏய்! குட்டி! அம்மா பயப்படறா! கொஞ்சமா உதைக்கணும்! அம்மா பாவம்ல!" என்று அவளுடைய வயிற்றைப் பார்த்து உள்ளே இருக்கும் குழந்தையிடம் கூறினான்.

இன்னும் அதிகமாக உதை கிடைத்தது அவளுக்கு!

"நீங்க நம்ம குழந்தை கிட்ட நடத்தின பேச்சுவார்த்தை தோல்வி அடைஞ்சிடுச்சு! இப்ப தாக்குதல் ரொம்ப பலமா இருக்கு!" என்று தன் வயிற்றைத் தடவிக் கொண்டே சொன்னாள்.

"அடக்கடவுளே!" அவள் வயிற்றை தடவியபடி அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

"இதெல்லாம் கோல்டன் மொமன்ட்ஸ்ல ஆனந்தி! எவ்ளோ கொட்டிக் குடுத்தாலும் இந்த சந்தோஷத்துக்கு ஈடாகாதுல்ல!" மெதுவாய் அவளை படுக்க வைத்தான்.

"ஆமாங்க! இது ஒருமாதிரி சந்தோஷமான வேதனை! ஒவ்வொரு பொண்ணும் அனுபவிக்கணும்னு வேண்டிக்கற வலி!" என்றாள்.

"சரி! தூங்கு ஆனந்தி!" என்று கூறி அவள் தலையைக் கோதினான். அவளும் கண் மூடி உறங்கத் தொடங்கினாள்.

'இந்த அழகான அனுபவம் என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் சீக்கிரமே கிடைக்கணும்!' என்று விராட் மனதுக்குள் வேண்டியபடி தன் கண் மூடி உறங்கினான்.




கண்ணும் கருத்துமாகப் படித்து
கண்மணியும் தேர்வில் வென்றாள்!
பள்ளியில் முதன்மை இடம்!
பாங்காக மதிப்பெண் பெற்றாளே!

சூரஜின் நண்பனும் சொன்னபடி
உறவுகளை அழைத்து வந்தான்!
பிங்கியைக் கண்டதும் பெரியோரும் பாசம் பொங்க அணைத்தனரே!

உடன் அழைத்துச் சென்றனரே!
உயர்கல்விக்கு வழி வகுத்தனரே!
சிறுமியும் சிலிர்த்து நின்றாள்!
சிறந்திடுவாள் இனி குறையில்லை!

ஆனந்தியின் கரு வளர்ந்ததனால்
அசைவுகளை அவள் உணர்ந்து
உள்ளுக்குள் நெகிழ்ந்து நின்றாள்!
மன்னவனும் உருகி நின்றான்!


- C. புவனா.


- காதலின் மொழி என்ன?
 
Top