Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 38
மறுநாள் மாலை அனைவரும் திருச்சிக்கு விமானப் பயணம் மேற்கொண்டார்கள்.
மாலை ஐந்து மணியளவில் திருச்சியில் கீர்த்திவாசனின் வீட்டு வாசலில் சென்று இறங்கியதும் புதுமணத் தம்பதிகளையும் ஆனந்தியையும் விராட்டையும் காலனிக்காரர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தீபிகாவை சுவாமி அறையில் விளக்கேற்றச் சொன்னாள் பூங்குழலி! தீபிகாவும் விளக்கேற்றினாள். புதுமணத் தம்பதிகளுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்.
கீர்த்திவாசன் கேட்டரிங்கில் சொல்லி இரவு உணவுக்கு ஏற்பாடு செய்துவிட்டதால் அனைவரும் சற்று ஓய்வாகவே இருந்தனர்.
அவர்கள் வீட்டுக்கு வந்தவுடனேயே மழலைப் பட்டாளங்கள் ஓடி வந்து அவர்களுடைய செல்லமான ஆனந்தி அக்காவை சுற்றிச் சுற்றி வந்தனர். விராட்டுக்கு ஒரே ஆச்சரியம். அவர்கள் ஆனந்தனையும் சுற்றி வந்தனர்.
"அண்ணா! இந்த அக்கா.. அந்த அக்காதானே!" என்று கேட்டு அவனை வம்பு செய்தனர்.
"ஏய்! கம்முனு இருங்கடா!" என்று சொல்லி சிரித்தான் ஆனந்தன்.
"ஆனந்தி அக்கா! உங்க பாப்பா கேர்ளா? பாயா?"
"தெரியாதே!"
"ஏன் தெரியாது?"
"அங்கிள்! உங்களுக்கு தெரியுமா?" விராட்டையும் விட்டு வைக்கவில்லை!
"தெரியாதே!"
"அங்கிள்! நீங்க இந்த புது அக்காவோட அண்ணாதானே?"
"ஆமா!"
"அப்ப அந்த அங்கிள்?"
"அவரும் அண்ணன்தான்!"
"புது அக்கா கதை சொல்வாங்களா?"
"அத அந்த புது அக்காகிட்டய கேளுங்க?"
"அக்கா நீங்க கதை சொல்வீங்களா?" தீபிகாவைக் குடைந்தனர்.
"என்கு உங்க அக்கா மாத்ரி ஸ்டோரி சொல் தெர்யாதூ!" என்று திக்கித் திணறி தமிழில் சொன்ன தீபிகாவைப் பார்த்து குழந்தைகள் கொல்லென்று சிரித்தார்கள்.
"ஏய்! சும்மா இருங்கடா!" என்றான் ஆனந்தன்.
"நீங்க என்க்கு தமில் சொலி தர்வீங்கலா?" என்று தீபிகா கேட்டாள்.
"நா சொல்லித் தரேன்! நா சொல்லி தரேன்!" என்று ஆளாளுக்கு கூவ அங்கே ஒரே கும்மாளமும் குதூகலமும் எழுந்தன.
தீபிகா எல்லாரையும் பார்த்து சிநேகமாய் சிரித்தாள்.
ஆனந்தியும் ஆனந்தனும் சளைக்காமல் எல்லாரும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு எல்லாருக்கும் தாங்கள் வாங்கி வந்திருந்த சாக்லேட் பேக்கட்டையும் பரிசுப் பொருட்களையும் எடுத்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.
"இவ்ளோ அவசரத்திலயும் எப்டி இவங்க கிஃப்டெல்லாம் வாங்க முடிஞ்சுது!" விராட் கேட்டான்.
"ஒரு செக் லிஸ்ட் வெச்சிருக்கேன்! இண்டியா வரணும்னு முடிவு பண்ணினதும் எடுத்துக்க வேண்டியது என்னென்ன? வாங்கிக்க வேண்டியது என்னென்ன? அதப் பாத்து வாங்க வேண்டியத வாங்கிட்டேன்! எடுத்துக்க வேண்டியத எடுத்துகிட்டேன்!" என்றான் ஆனந்தன்.
"மத்தவங்கள சமாதானம் செஞ்சுடலாம்! குழந்தைங்கள சமாதானம் செய்யவே முடியாதே?!" என்றாள் ஆனந்தி.
"ம்! அதுவும் கரெக்ட்தான்!" விராட் சொன்னான்.
சாப்பிட்ட பின் எல்லாரும் பயணக் களைப்பில் அவரவர் கிடைத்த இடத்தில் படுத்தனர்.
ஆனந்தன் தன் மனைவியை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்.
"உங்க ரூம் ரொம்ப அழகா இருக்கு!"
"உங்க ரூம் இல்லடா செல்லம்! இனிமே இது நம்ம ரூம்!" கண் சிமிட்டினான்.
அவள் மென்மையாய் சிரித்துவிட்டு ஜன்னல் அருகில் சென்று நின்றாள். ஜன்னலிலிருந்து மாடித் தோட்டம் அழகாக தெரிந்தது. நல்ல காற்று வந்தது. அவள் அதை பார்த்தபடி நின்றாள். அவளை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று உலாவியபடியே பேச ஆரம்பித்தான்.
"அன்னிக்கு நீ என் பின்னால வராதன்னு சொல்லிட்டுப் போனப்றம் இங்கதான் இந்த தோட்டத்தை பாத்துகிட்டே நைட்டெல்லாம் தூங்காம உக்காந்திருந்தேன்."
".."
"நீ ஆசையா பாத்துட்டுப் போன இந்த செடிங்க எல்லாம் என்னப் பாத்து அவதான் உன் தேவதை! அவளப் போய் கூட்டிகிட்டு வான்னு சொல்ற மாதிரியே தோணிச்சு! ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு! இங்க இருந்தா உன் நெனப்புதான் வரும்! நம்ம இங்கேந்து முதல்ல கிளம்பணும்னு பிடிவாதமா கிளம்பிட்டேன்!"
"அப்ப எனக்கு உங்க மேல எந்த சலனமும் ஏற்படவேயில்ல! நீங்க பாபியோட தம்பி! அவ்ளோதான் தோணிச்சு! ஆனா நீங்க என்னையே பாத்துகிட்டு சாப்பிடும்போதுதான் எனக்கு பயம் வந்திச்சு! உங்கள பாக்கப் பிடிக்கும்! உங்க கூட பேச பிடிக்கும்! ஆனா அத விட என் கரீர் எனக்கு பெரிசா தோணிச்சு!"
".."
"ஐம் ஸாரி நந்து! உங்க மனச புண்படுத்திட்டேன்ல!"
"நான் அப்டி நெனக்கவேயில்ல!"
"தேங்க்ஸ்!"
"நீ என்ன பாக்காதன்னுதானே சொன்ன! நான் படிக்கணும்னுதானே சொன்ன! நான் உங்கள லவ் பண்ண மாட்டேன்னு சொல்லலியே!"
".."
"அப்பலேர்ந்தே எனக்கு தோணிச்சு! நீ என்கிட்ட வந்திடுவேன்னு!"
"நெஜமாவா!"
"ம்.!"
"ஆனா நீங்க என்ன ஃபாலோ பண்றப்ப எனக்கு பயமா இருந்துச்சே!"
"அது நம்ம நாட்டு பெண்களோட வளர்ப்பு முறை. இயற்கையாவே உனக்குள்ள இருக்கற ஒரு உணர்வு! யாராவது உங்கள தப்பா பாத்தா நீங்க லேடீஸ் எல்லாம் உடனே பார்வைல இருக்கற வித்தியாசத்த புரிஞ்சுக்குவீங்க! அதுவும் நீ ஹாஸ்டல்ல தங்கி படிக்கறதுனால அந்த உணர்வு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். நான் உன்னப் பாத்த பார்வைல வித்தியாசத்தப் புரிஞ்சுகிட்ட! நல்ல வேள! செருப்ப கைல எடுக்காம விட்டியே!"
"அது எப்டி உங்க கிட்ட செருப்பக் காட்டுவேன்! நீங்கதான் செல்வி பாபி தம்பியாச்சே! கண்டிப்பா நல்லவராதான் இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா?"
"செல்வி பாபி தம்பி மேல அவ்ளோ நம்பிக்கையா?"
"இருக்காதா? பாபி எங்களுக்கு கிடைச்ச வரம்! அவங்க எங்களுக்கு கிடைக்கலன்னா விராட் பையாவுக்கு ஆனந்தி பாபி கிடைச்சிருப்பாங்களா? இல்ல எனக்குதான் நீங்க கிடைச்சிருப்பீங்களா?"
அவள் சொன்னதைக் கேட்டவன் சிரித்தபடி அவளைத் தூக்கிக் கொண்டான். இனிமை நிறைந்த இரவு அவர்களுக்காகக் காத்திருந்தது.
மறுநாள் மாலை ரிசப்ஷன்! இரண்டு நாட்களுக்கும் கேட்டரிங்கில் சொல்லிவிட்டதால் காலையில் வீட்டில் பெரிதாக வேலையில்லை. அதனால் எல்லாரும் மலைக்கோட்டை சென்று வரலாம் என்று கிளம்பினர்.
ஆனந்தி, செல்வி, அவர்களுக்குத் துணையாக கிரிதரன், மங்கை, மற்றும் லக்ஷ்மி பாட்டி வீட்டில் இருக்க மற்ற அனைவரும் கிளம்பினர்.
உச்சி பிள்ளையாரை வணங்கிவிட்டு தங்கள் வீட்டுப் பெண்களின் பிரசவம் சிக்கலில்லாமல் நடைபெற தாயுமானவரை மனமுருகி வேண்டிக் கொண்டனர்.
மாலை ரிசப்ஷனில் ஆனந்தனின் நண்பர்கள் அனைவரும் வந்து அவனை கலாய்த்து கிண்டல் செய்து சிரித்து விளையாடி மணமக்களை மனமகிழ்ச்சி அடையச் செய்தார்கள்.
தன் நண்பர்களின் உதவியுடன் ஆனந்தன் தன் மனைவிக்கு விசாவுக்கு ஏற்பாடு செய்தான்.
மங்கையின் கரம் பிடித்த மன்னவனும்
தன்னவளை அழைத்துச் சென்றான்!
புகுந்த வீட்டில் தகுந்த வரவேற்பு
அன்பு மலர்களைத் தூவி அர்ச்சனை!
மன்னவன் வளர்த்த செடிகளைக்
பெண்ணவள் கண்டு மகிழ்ந்தாள்!
தென்றலாக வருடிய காதலால்
மன்றத்தில் மங்கை நெகிழ்ந்தாள்!
ஆனந்தனைச் சூழ்ந்த மழலையர்
அன்போடு உரையாடக் கண்டாள்!
மன்னவனின் பண்பை உணர்ந்தாள்!
தன்னவனின் அன்பை அறிந்தாள்!
வாழட்டும் புதிய வாழ்க்கையை!
பெருகட்டும் அன்பு நித்தமும்!
பெரியோர் மனம் மகிழ இவரும்
தொடங்கட்டும் இனிய வாழ்வை!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?