கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

44. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 44



சூரஜ் மற்றும் செல்வி குடும்பத்தாரின் மனதிடத்தை இன்னும் சோதிக்க நினைத்தானோ என்னவோ, அவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்கவில்லை.

மருத்தவர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு எல்லாவற்றையும் செய்தும், செல்வி பெற்ற குழந்தையின் உயிரை அவர்களால் காப்பாற்றமுடியவில்லை.

செல்வியாலும் சூரஜாலும் இந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை.

கௌரியும் தீன்தயாளும் செய்வதறியாது கலங்கிப் போயினர்.

"அக்கா! என் குழந்தைய காப்பாத்தப் போய் உன் குழந்தைக்கு இப்டி ஆகிடுச்சே.." என்று ஆனந்தி செல்வியைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"பாபி!" என்பதற்கு மேல் செல்வியிடம் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட விராட்டினால் பேச முடியவில்லை.

செல்விக்கு இந்த அதிர்ச்சியால் திடீரென காய்ச்சல் வந்துவிட உடல் தூக்கித் தூக்கிப் போட்டது.

அதனால் அவளை மருந்துகளின் உபயத்தால் மயக்க நிலையில் வைத்தார்கள்.

சூரஜுக்கு குழந்தையை நினைத்து கலங்குவதா செல்வியின் உடல் நிலையை நினைத்து வருந்துவதா என்றே புரியவில்லை.

'கடவுளே! என் குழந்தையதான் பறிச்சிகிட்ட.. என் தமிழையாவது என்கிட்ட பத்திரமா குடுத்துடு.. ப்ளீஸ்!' என்று இறைவனிடம் மன்றாடினான்.

குழந்தையைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவன் உள்ளம் குமுறியது. மௌனமாக அழுது கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் தன்னையுமறியாமல் வாய்விட்டு அழத் தொடங்கினான்.

"ஹையோ! ஹையோ! பெரிய தப்பு பண்ணிட்டேனே.. உன்ன வேணாம்னு தள்ளி போட்டேன்.. இப்ப நீ என்ன வேணாம்னு ஒதுக்கிட்டியாடா கண்ணா.." என்று தன் தலையிலடித்துக் கொண்டு அழுதான்.

இதைக் கேட்ட கௌரி அதிர்ந்து போய் அவன் சட்டைப் பிடித்துக் கொண்டு கோபமாக அவனைப் பார்த்தாள்.

"என்ன சொல்ற? குழந்தைய தள்ளி போட்டியா?" என்று கோபமாகக் கேட்டாள்.

சூரஜ் கண் கலங்க ஆமாம் என்று தலையசைத்தான்.

விராட் தன் தலையிலடித்துக் கொண்டான். ஆனந்தி அதிர்ந்து போய் தன் வாயைப் பொத்திக் கொண்டாள்.

பளார் பளார் என்று சூரஜின் கன்னத்தில் அறைந்த கௌரி, அவனை ஒரு புழுவைப் போல பார்த்தாள்.

"இனிமே என் மூஞ்சியில முழிக்காத.. " என்று தன் பல்லைக் கடித்து கூறி விட்டு விடுவிடுவென்று மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்.

நடந்து கொண்டிருந்ததை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த தீன்தயாள் விராட்டின் அருகில் வந்து என்னவென்று கேட்க, கண்ணீர் விடுவதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அவர் ஆனந்தியை கோபமாகப் பார்க்க, அவள் நடந்தவற்றை அவரிடம் கண்ணீருடன் விளக்கினாள்.

தீன்தயாள் சூரஜின் அருகில் வந்து அவனை கோபமாகப் பார்த்து அறைவது போல கையை ஓங்கிவிட்டு அவனை அடிக்காமல் தன் கையை இறக்கி, தன் தலையை உலுக்கிக் கொண்டு கௌரியின் பின்னால் நடக்கலானார்.

"ஏண்டா? ஏண்டா சொன்ன? இப்ப அம்மாவும் அப்பாவும் எவ்ளோ கோவமா போறாங்க பாரு.." என்று விராட் சூரஜை கடிந்து கொண்டான்.

"நீங்க ஏன் இப்டி ஒரு விஷயத்தை செய்தீங்கன்னு எனக்கு புரியுது மாமா! அத்தையும் மாமாவும் குழந்தை பறிபோன கோவத்தில போயிருக்காங்க.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.. கவலப்படாதீங்க மாமா.." என்று ஆனந்தி சூரஜுக்கு ஆறுதல் கூறினாள்.

விராட்டுக்கும் ஆனந்திக்கும் தங்கள் குழந்தையைக் காப்பாற்றப் போய் தானே செல்விக்கு இந்த நிலை ஏற்பட்டது என்ற குற்றவுணர்ச்சியும் தன் குழந்தையை இழந்து என் குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறாள் என்ற நன்றியுணர்ச்சியும் ஏற்பட்டிருந்தது.

விஷயமறிந்து சென்னையிலிருந்து மங்கை கிரிதரன் மற்றும் லட்சுமிப் பாட்டி, திருச்சியிலிருந்து பூங்குழலியும் கீர்த்திவாசனும்
என ஐவரும் பதறிக் கொண்டு வந்து சேர்ந்தனர்.

செல்விக்கு ஒரு வழியாக காய்ச்சல் குறைய அவள் மெதுவாகக் கண் விழித்தாள்.

தன் பிறந்த வீட்டு சொந்தங்களைப் பார்த்தவள் தன் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.

ஆண்கள் இருவரும் சூரஜுக்கு ஆறுதல் கூற பெண்கள் மூவரும் செல்வியின் மனதை தைரியப்படுத்துவதில் முனைப்பாய் இருந்தனர்.

ஆனந்தும் தீபிகாவும் கூட வீடியோ காலில் வந்து இவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்கள்.

"பாபி! நீங்க ரொம்ப பிரேவா (brave) போராடி நம்ம ஐஷுக்குட்டிய காப்பாத்தியிருக்கீங்க.. கவலப்படாதீங்க பாபி.. சீக்கிரமே நீங்க தாயாவீங்க.. மனச தளரவிடாதீங்க.. தைரியமா இருங்க பாபி.. நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிடுங்க.. எல்லாமே சீக்கிரம் சரியாகும்.." என்று தீபிகா பெரிய மனுஷியாய் செல்வியிடம் சொன்னதைக் கேட்ட சூரஜ் குலுங்கி அழுதான்.

ஒரு வாரம் மருத்துவமனையில் செல்வி இருக்க நேர்ந்தது. செல்வியுடன் சூரஜும் மருத்துவமனையிலேயே இருந்து மனைவிக்கு உதவிக் கொண்டிருந்தான்.

மற்ற எல்லாரும் செல்வியைப் பார்த்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்க கௌரியும் தீன்தயாளும் மருத்துவமனைக்கு வரவேயில்லை.

விராட்டும் ஆனந்தியும் எவ்வளவோ கெஞ்சி அழைத்தும் அவர்கள் தங்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவேயில்லை.

அதே போல தங்கள் சம்மந்திகளுடனும் அவர்கள் சரியாகப் பேசவில்லை.

மங்கையும் கிரிதரனும் மனம் வருந்தினார்கள். பூங்குழலியும் கீர்த்திவாசனும் குழம்பினார்கள். லட்சுமிப் பாட்டிக்கு எதுவோ தவறாக நடப்பதாகப் பட்டது.

மருத்துமனையில் வைத்து ஆனந்தியை அழைத்து விசாரித்தார்.

"அது வந்து பாட்டி.." ஆனந்தி தயங்கினாள்.

"எங்களுக்கு புரியல ஆனந்தி.. உன் குழந்தைய காப்பாத்தப் போய்தானே செல்வி தன் குழந்தைய பறி கொடுத்திருக்கா.. இதுல செல்வியோட தப்பு என்ன இருக்கு.. எப்டி விராட் மாப்ளை மேல இருக்கற கோவத்தை ரௌடி பசங்க உங்க வீட்டுல காட்டினது மாப்ளையோட தப்பு இல்லையோ அதே மாதிரி தன் குழந்தைய பறி கொடுத்ததில செல்வியோட தப்பும் இல்லையேம்மா.. அப்றம் ஏன் உன் மாமியாரும் மாமனாரும் செல்வி மேல இவ்ளோ கோவமா இருக்காங்க.." என்று பாட்டி வேதனையுடன் கேட்டார்.

"அவங்களுக்கு அக்கா மேல கோவம் இல்ல பாட்டி.. மாமா மேலதான் கோவம்.." என்றாள் ஆனந்தி தயங்கிய குரலில்.

"சூரஜ் மாப்ள மேலயா?"

"ம்.."

"எதுக்கு?"

"அது வந்து.." ஆனந்தி ஒரு நொடி தயங்கிவிட்டு,

"இவங்க கல்யாணம் நடந்தப்ப மாமாவுக்கு ஓரளவுக்குதான் சம்பளம் வந்திட்டு இருந்தது.. விராட்டும் அப்ப போலீஸ் ட்ரைனிங்லதான் இருந்தாரு.. வேலையில ஜாயின் பண்ணியிருக்கல.. சுட்கியும் படிச்சிட்டு இருந்தா.. மாமா ஒருத்தரோட சம்பளத்திலதான் குடும்பம் ஓடிட்டு இருந்தது.. புது மெம்பரா செல்வி அக்காவும் வந்தாச்சு.. இந்த நேரத்தில உடனே குழந்தையும் பிறந்தா ஒரே நேரத்தில தன்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியாதோன்னு அவருக்குள்ள ஒரு பயம்.. அதனால குழந்தை பெத்துகறத கொஞ்ச நாள் தள்ளி போட்டிருக்கார்.. இந்த விஷயம் இப்பதான் அத்தைக்கும் மாமாவுக்கும் தெரிஞ்சது.. அதனாலதான் அவங்க ரெண்டு பேரும் மாமா மேல இவ்ளோ கோவமா இருக்காங்க.." என்று சொல்லி முடித்தாள்.

கேட்டிருந்த செல்வியின் பிறந்த வீட்டு சொந்தங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.

ஆனந்தி சொன்னதை கவனமாகக் கேட்டிருந்த லட்சுமி பாட்டிக்கு கண்கள் கலங்கின. ஆனால் சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட பாட்டி, தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"எப்பவோ முடிஞ்சு போனத இப்ப நெனச்சி வருத்தப்படறதிலயோ கோவப்படறதிலயோ என்ன பலன் கிடைக்கும்.. சரி.. நா உன் மாமியார்கிட்ட பேசறேன்.." என்றபடியே ஆனந்தியின் கன்னத்தில் ஆதரவாகத் தட்டிவிட்டு எழுந்து போனார்.

செல்வியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

கௌரியும் தீன்தயாளும் செல்வியிடமும் முகம் திருப்பிக் கொள்ள செல்வி குழம்பினாள்.

இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

வந்தவுடனே எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்த லட்சுமி பாட்டி அமைதியாகவே இருந்தார். ஆனால் கௌரியிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தன் மனதுக்குள் பேசிப் பார்த்தபடியே இருந்தார்.

இதனிடையே ஆனந்தும் தீபிகாவும் வீடியோ காலில் அழைத்து செல்விக்கும் சூரஜுக்கும் ஆறுதல் கூறினார்கள்.

"ஆனந்தி! அக்காவ பத்திரமா பாத்துக்கோ! உடம்பில ஏற்பட்ட வலி மருந்தினால சரியாகிடும்.. ஆனா குழந்தைய பறிகுடுத்த வலி லேசில குறையாதுடீ! அக்காவையும் மாமாவையும் ரொம்ப கவனமா பாத்துக்கோ! புரியுதா?" என்று ஆனந்தியிடம் ஆனந்தும்,

"விராட் பையா! பாபிய ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கோ! அதே மாதிரி சூரஜ் பையாவையும் தனியா விட்டுடாத.. தன்னாலதான் இந்த தப்பு நடந்ததுன்னு அவன் குற்றவுணர்ச்சியில கூனி குறுகிட்டிருப்பான்.. கவனமா பாத்துக்கோ பையா!" என்று தீபிகா விராட்டிடமும் தனித்தனியே கூறினார்கள்.

"சரி.. நாங்க பாத்துக்கறோம்.." என்று இருவரிடமும் அவர்கள் கூறினார்கள்.

வீடு முழுக்க மனிதர்கள் இருக்க குழந்தை ஐஷுவும் அவர்களுடன் விளையாடியபடி இருக்க எல்லாருமே ஒரு இறுக்கமான சூழ்நிலையில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததாக எண்ணிக் கொண்டனர்.

குழந்தை ஐஷு மற்றவர்களின் கையிலிருந்து சூரஜின் கைக்குச் சென்றாலோ செல்வியின் கைக்குச் சென்றாலோ கௌரியும் தீன்தயாளும் ஓடி வந்து அவர்களிடமிருந்து பிடுங்காத குறையாக குழந்தையைப் பறித்துக் கொண்டனர்.

ஏற்கனவே மனவுளைச்சலில் இருந்த செல்வியும் சூரஜும் இதனால் மனமுடைந்து போயினர்.

செல்வி தன் மாமியாரைப் பார்த்து நேரடியாகக் கேட்டாள்.

"அத்த? எங்க மேல உங்களுக்கென்ன கோவம்? நாங்க என்ன தப்பு பண்ணினோம்?"

"தப்புதான் செல்வி! பெரிய தப்புதான் பண்ணியிருக்கீங்க. அதனாலதான் உங்க குழந்தைய நீங்க பறி குடுத்திருக்கீங்க." என்று கௌரி கோபமாகக் கூறினாள்.

"எது? ஐஷுகுட்டிய காப்பாத்தினது அவ்ளோ பெரிய தப்பா அத்த? என்ன அத்த இப்டி பேசறீங்க?" என்று செல்வி முதன்முறையாகத் தன் மாமியாரை எதிர்த்துக் கேள்வி கேட்க, கௌரி அவளை இன்னும் அதிகக் கோபத்துடன் முறைத்தாள்.

நிலைமை தவறான திசையில் செல்கிறதோ என்று நினைத்த லட்சுமிப் பாட்டி செல்வியை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு கௌரியிடம் திரும்பினார்.

"அம்மா! உங்க கோவம் நியாமானது.. எனக்கு உங்க நிலைமை புரியுது.. ஆனா நடந்தது நடந்துடுச்சு.. நீங்க முடிஞ்சு போனத நெனச்சு வருத்தப்பட்டாலோ கோபப்பட்டாலோ எல்லாம் சரியாகிடுமா.. உங்க கோவத்தினால நம்ம குழந்தைங்கதானே கஷ்டப்படறாங்க.. அவங்க தப்பே பண்ணியிருந்தாலும் அவங்களுக்கு இப்ப ஆறுதலா நாமதானே இருக்கணும்.." என்று நயமான வார்த்தைகளால் கூற, ஆனந்தி பாட்டி சொன்னதை தன் மாமியாரிடம் ஹிந்தியில் மொழி பெயர்த்துச் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்ட கௌரி,

"நீங்க சொல்றது எனக்கு புரியுதும்மா.. ஆனா எல்லாத்திலயும் ரொம்ப கவனமா செயல்படற செல்வி இப்டி ஒரு தப்பை பண்லாமா?" என்று கடுகடுத்த குரலில் கேட்டாள்.

செல்விக்கு இவர்களின் கோபத்துக்கான காரணம் இன்னும் விளங்கவில்லையாதலால் அவள் குழப்பத்துடன் பாட்டியைப் பார்க்க, மங்கை அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு,

"நீயும் மாப்ளையும் ஏம்மா குழந்தை பெத்துக்கறத தள்ளி போட்டீங்க? இதனால எவ்ளோ பிரச்சனை வரும்னு உனக்கு நல்லா புரிஞ்சும் நீ இந்த தப்பை பண்ணிட்டியேம்மா.. கல்யாணம் ஆகி இத்தன நாளாகியும் உனக்கொரு குழந்தை பொறக்கலையேன்னு நாங்கல்லாம் கவலப் பட்டுகிட்டு இருந்தோம்.. ஆனா நீங்க.. குழந்தை பொறக்கக் கூடாதுன்னு மருந்து மாத்திரை எல்லாம் டாக்டரோட அட்வைஸ் இல்லாம.." என்ற மங்கை மேற்கொண்டு சொல்ல முடியாமல் தவிக்க செல்வி அதிர்ந்தாள்.

"அம்மா! நீங்க நெனக்கற மாதிரி எதுவுமே இல்ல.. ஆரம்பத்தில அப்டி நெனச்சோம்தான்.. இல்லங்கல.. ஆனா அதுக்காக நானோ அவரோ எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடவேயில்ல.. அதனால என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும்னு எனக்கு நல்லா தெரியும்.. அதனால நா அப்டி ஒரு தப்பை பண்ணவேயில்ல.." என்றாள். இதையே தன் மாமியாரிடமும் ஹிந்தியில் கூறினாள்.

கௌரி இவள் சொன்னதை ஒத்துக் கொள்ளாதது போல மறுப்பாகத் தலையாட்டினாள்.

செல்வி எதையோ சொல்லத் தொடங்கும் முன் விராட் குறுக்கிட்டு,

"பாபி! இருங்க.." என்று செல்வியிடம் சொல்லிவிட்டு, தன் அம்மாவைப் பார்த்துக் கூறினான்.

"அம்மா! நீங்களே யோசிச்சி பாருங்க.. இவங்க ஹனிமூன் முடிஞ்சி ரொடீன்னுக்கு திரும்பறதுக்குள்ளவே சூரஜுக்கு யூஎஸ் போகறதுக்கு ஆடர் வந்துடுச்சு.. அவன் யூஎஸ் போய்ட்டான்.. பாபி மும்பை வந்துட்டாங்க.. அவன் யூஎஸ்ல இருந்து திரும்பி வந்தப்றம் இங்க புது ஆஃபீஸ் அவனோட பொறுப்பில ஆரம்பிச்சதால அந்த வேலைய பாக்கவே அவனுக்கு நேரம் சரியா இருந்தது.. பாதி நாள் அவன் வீட்டுக்கே வராம இருந்தப்ப பாபி வயித்தில எப்டி குழந்தை வரும்.. அதெல்லாம் நீங்க யோசிக்காம இவங்கள ஏன் குத்தம் சொல்றீங்க.. என் கல்யாணத்துக்கு அப்றம் தானே அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு கெமிஸ்ட்ரீயே வொர்க் அவுட் ஆச்சு.." என்று விராட் கூற கௌரிக்கு அவன் சொல்வதெல்லாம் புரிந்தும் அவளுடைய கோபமே முதன்மையாயிருந்தது.

"நீ சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா அவன் எப்டி இப்டி ஒரு முடிவை தன்னிச்சையா எடுக்கலாம்.. எல்லாத்துக்கும் என்கிட்ட அபிப்ராயம் கேட்டு கேட்டு செய்யறவன் இத எப்டி தானே முடிவெடுக்கலாம்.. இவளும்தான் அத எப்டி சரின்னு ஒத்துக்கலாம்? சரி நா படிக்காதவ.. என்கிட்ட கேக்க வேண்டாம்.. உங்கப்பாவுக்கு காதும் கேக்காது வாயும் பேச முடியாது.. அதனால அவர்கிட்டயும் கேக்க வேண்டாம்.. செல்வியோட அப்பாம்மா ரெண்டு பேரும் நல்லா படிச்சவங்கதானே? அவங்களையாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கணுமா இல்லையா? இதோ அவங்க பாட்டி! வயசிலயும் அனுபவத்திலயும் பெரியவங்க.. அவங்ககிட்ட கேட்டிருந்தா கூட போதுமே? இது தப்புன்னு எடுத்து சொல்லியிருப்பாங்களே! இவங்க ஏன் பெரியவங்கள கலந்து பேசி முடிவெடுக்கல.. அப்ப இந்த வீட்ல எங்களுக்கு என்ன மரியாதை? அப்பாம்மான்னு நாங்க எதுக்கு இருக்கோம்? வீட்ல பணத்துக்கு பிரச்சனைன்னு எனக்கு புரியாதா? இல்ல உங்கப்பாவுக்குதான் புரியாதா? ஏன்? நீங்கல்லாம் சின்ன சின்ன குழந்தைங்களா இருந்தப்ப நாங்க உங்கள நல்லா வளர்க்கல? உங்களோட சேர்த்து யமுனாவையும் நாங்கதானே பாத்துகிட்டோம்?.." கௌரி கோபமாகக் கேட்டுக் கொண்டே போனாள்.

விராட்டினாலும் சரி மற்ற யாராலும் அவளை சமாதானம் செய்யவே முடியவில்லை.

சூரஜும் செல்வியும் குற்றவுணர்ச்சியினாலும் குழந்தையைப் பறி கொடுத்த வேதனையினாலும் துவண்டு போயினர்.

மங்கையும் கிரிதரனும் லட்சுமிப்பாட்டியுடன் கலந்து ஆலோசனை செய்து, செல்வியை கொஞ்ச நாட்கள் சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

கீர்த்திவாசனும் பூங்குழலியும் கூட இதுதான் இப்போதைக்கு நிலைமையின் தீவிரத்தை சற்று மட்டுப்படுத்தும் என்று ஆமோதித்தனர்.

கௌரி இவர்களின் முடிவுக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை; அதே நேரத்தில் மறுப்பும் தெரிவிக்கவில்லை.

'இந்த வீட்ல நீ இருந்தாலும் இல்லன்னாலும் எனக்கொண்ணும் இல்ல..' என்பது போல அவள் நடந்து கொள்ள செல்விக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

சூரஜினால் செல்வியின் அழுகையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

செல்வியுடன் தானும் சென்னைக்கு கிளம்புவதாகக் கூறினான்.

அவனை ஒரு புழு போல கௌரி பார்த்து வைக்க சூரஜ் துடி துடித்துப் போனான்.

தான் செய்த சிறிய தவறு தன்னையே வெறுக்கும் அளவுக்கு தன் அன்னையை மாற்றிவிட்டதே என்று மருகினான்.

விராட்டிடமும் ஆனந்தியிடமும் கூறிவிட்டு செல்வியையும் சூரஜையும் அழைத்துக் கொண்டு கிரிதரன் முதலானோர் சென்னைக்கு கிளம்பினார்கள்.

பத்து நாட்கள் சென்னையில் அவர்கள் இருக்க செல்வியின் நிலையறிந்து அவளைப் பார்க்க யமுனா மும்பைக்கு ஓடி வந்தாள்.

ஆனால் அங்கு கௌரியின் கோபத்தைப் பற்றியும் செல்வி மற்றும் சூரஜின் மன வேதனையைப் பற்றியும் ஆனந்தியும் விராட்டும் சொல்லக் கேட்டு சொல்லொணாத் துயரடைந்தாள்.

எல்லாருக்காகவும் பார்த்துப் பார்த்து நல்லது மட்டுமே செய்யும் செல்விக்கா இந்த நிலைமை என்று மிகவும் வேதனையடைந்தாள்.

எல்லாவற்றையும் விட இந்த மாதிரி உடல்நிலை நலிவுற்ற நிலையில் கௌரி அவளிடம் காட்டிய பாரமுகத்தைப் பற்றித் தெரிந்ததும் அவளுக்குக் கோபமாக வந்தது.

"பாபி! நீங்க செய்யறது கொஞ்சமாவது நல்லா இருக்கா? பிள்ளைங்க தப்பு பண்ணினாலும் அவங்க நம்ம பிள்ளைங்கதானேன்னு நீங்கதானே எப்பவும் எனக்கு சொல்லுவீங்க? பிங்கி எவ்வளவோ நாள் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அழுது அடம் பிடிச்சிருக்கா.. அப்பல்லாம் நம்ம வீட்டு குழந்தைக்கு நாம தான் சொல்லி புரிய வைக்கணும்னு எனக்கு அட்வைஸ் பண்ணினீங்க.. அத நீங்களே மறக்கலாமா?" என்று உரிமையுடன் கௌரியிடம் கோபமாகக் கேட்டாள்.

"இங்க பாரு யமுனா! நீ அவங்களுக்காக வக்காலத்து வாங்காத.. அவன் பண்ணினது பெரிய தப்பு.. அதுவும் மன்னிக்க முடியாத தப்பு!" என்று கௌரி கோபமாகக் கூறினாள்.

"எது தப்புங்கறீங்க? இல்ல எது தப்புன்னு சொல்றீங்க? சூரஜும் செல்வியும் தன் லைஃபை எஞ்சாய் பண்ணனும்னா இத பண்ணினாங்க? இல்ல செல்விதான் குழந்தை பெத்துகிட்டா தன் அழகு கெட்டுடும்னு இத செய்தாளா? இல்லையே! இந்த குடும்பம் நல்லா இருக்கணும்னுதானே செய்தாங்க.." என்று யமுனா கூற, கௌரி அவளை முறைத்தாள்.

"என்ன பேசற நீ? ஏன் அவங்க குழந்தை பெத்துகிட்டா இந்த குடும்பம் நல்லா இருக்காதா?" என்று கௌரி கோபமாகக் கேட்டாள்.

"ஐயோ பாபி! நீங்க இத ஒண்ண மட்டும் பிடிச்சிகிட்டு அவங்கள குற்றவாளிக் கூண்டுல ஏத்தாதீங்க.. உண்மைய சொல்லப் போனா அவங்க ரெண்டு பேரும் குற்றமே செய்யல.. தியாகம் பண்ணியிருக்காங்க.. இந்த குடும்பத்தோட சந்தோஷத்துக்காக தன்னோட சந்தோஷத்தை தியாகம் பண்ணியிருக்காங்க.. நீங்களே சொல்லுங்க.. இந்த காலத்தில இப்டி ஒரு அனுசரணையான புள்ளையும் மருமகளும் எங்க கிடைப்பாங்க.. நம்ம கடைசி வீட்டு சர்மாஜியோட மருமக எப்டின்னு ஊருக்கே தெரியும்.. புருஷனை கைக்குள்ள போட்டுகிட்டு மாமியார் மாமனாரோட பூர்வீக வீடு உட்பட எல்லாத்தையும் எழுதி வாங்கிகிட்டு அவங்கள வீட்ட விட்டே தொறத்தி விட்டுட்டா.. அவங்க ரெண்டு பேரும் இப்ப எங்க போனாங்கன்னு யாருக்குமே தெரியாது.. அந்த வீட்டையும் பில்டருக்கு குடுத்து இடிச்சி பெரிய அபார்ட்மென்ட்டா மாத்தி விட்டு கீழ கடை, மேல வீடுகள்ன்னு கட்டி அநியாய வாடகைக்கு விட்டு சம்பாதிக்கறா.. அவளுக்கு பணம் மட்டும்தான் குறிக்கோள்.. ஆனா செல்வி அப்டியா? யோசிச்சி பாருங்க! கல்யாணம் ஆனதும் புள்ளைய பிரிச்சி கூட்டிட்டு போற மருமகளுங்க இருக்கற இந்த காலத்தில சூரஜ் யூஎஸ் போனாலும் நா உங்ககூட தான் இருப்பேன்னு மும்பை வந்தா செல்வி.. அவளுக்கு அப்ப ஹிந்தி தெரியாது.. நம்ம பழக்க வழக்கம் தெரியாது.. என்ன செய்யணும் ஏது செய்யணும்னு ஆலோசனை கேக்க கூட பக்கத்தில அவளுக்கு துணையா யாரும் கிடையாது.. அந்த மாதிரி நேரத்தில கூட இதுதான் என் வீடு.. இங்கதான் நான் இருப்பேன்னு இருந்தா.. இப்ப கூட சீமந்தம் முடிஞ்சதும் பொறந்த வீட்டுக்கு போறதுக்குதான் எல்லா பொண்ணுங்களும் விருப்பபடுவாங்க.. அதுதான் முறையும் கூட! அதுவும் தமிழ்க்காரங்க அந்த மாதிரி முறையெல்லாம் ரொம்ப கரெக்ட்டா ஃபாலோ பண்ணுவாங்க.. ஆனா செல்வி அப்ப கூட இங்க இருக்கதானே ஆசைப்பட்டா.. செல்வி உங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் பாபி! செல்வி மட்டுமில்ல, உங்க ரெண்டாவது மருமக ஆனந்தி மருமகன் ஆனந்துன்னு உங்களுக்கு வந்த மூணு பேருமே சொக்கத் தங்கம்.. அவங்க வீட்டாளுங்க எல்லாம் எப்டி பழகறாங்க.. செல்வியோட பாட்டி.. அந்தம்மா எனக்கு ஜோசியம் சொல்லிட்டு போனாங்க.. உன் புகுந்த வீட்டு மனுஷங்க உன்ன கூடிய சீக்கிரம் சேர்த்துப்பாங்கம்மான்னு.. அவங்க வாக்கு அப்டியே பலிச்சிருக்கு.. இன்னிக்கு என்னை என் மாமியார் வீட்ல மூத்த அண்ணியா மதிக்கறாங்க.. எல்லா விஷயத்திலயும் என்னையும் சேர்த்துகறாங்க.. அப்படிப்பட்டவங்களோட பேத்தி எப்டி இருப்பா.. உண்மையா சொல்றேன் பாபி! பிங்கி இன்னிக்கு அவங்கப்பா ஆசைப்பட்ட மாதிரி இருக்கறதுக்கு மூல காரணமே செல்விதான். குழந்தைய பறி கொடுத்த துக்கத்தில இருக்கறவங்கள நீங்க மேலும் மேலும் உங்க வார்த்தையால காயப்படுத்தாதீங்க.. அவங்க நம்ம குழந்தைங்க.. அவங்க கண்ணீர் விட்டா இந்த குடும்பம் நல்லா இருக்காது.. நல்லா ஞாபகம் வெச்சிக்கங்க பாபி! செல்விதான் இந்த குடும்பத்தோட குத்து விளக்கு. உங்களோட வீண் பிடிவாதத்தாலயும் தேவையில்லாத கோவத்தினாலயும் அத தொலைச்சிடாதீங்க.. அவ்ளோதான் என்னால சொல்ல முடியும்!" என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

கௌரி யமுனாவின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்தாள்.

ஆனந்தியும் விராட்டும் தீபிகாவும் அவளை பலவாறு தேற்றத் தொடங்கினார்கள்.

மெல்ல மெல்ல அவளுடைய மனம் மாறத் தொடங்க தீன்தயாளும் மனம் மாறத் தொடங்கினார். இதற்குள் செல்வி சென்னை சென்று ஒரு மாதம் ஓடியிருந்தது.

ஒருவாறு மனம் மாறிய கௌரி சூரஜிடம் பேச முன் வந்தாள்.

அது கூட கிரிதரனின் கைபேசிக்குதான் அழைத்தாள்.

"நா கௌரி பேசறேன் சம்மந்தி. ம்.. செல்வி எப்டி இருக்கா? சூரஜ் பக்கத்தில இருந்தா போனை அவன் கிட்ட குடுங்க.." என்றாள்.

"என்ன சொல்றீங்க சம்மந்தி? செல்வி இன்னும் வீட்டுக்கு வரலியா? அவங்க ரெண்டு பேரும் ரெண்டு நாள் முன்னாடியே மும்பை கிளம்பறோம்னு ட்ரைன் ஏறிட்டாங்களே! நாந்தானே அவங்கள ஸ்டேஷன்ல டிராப் பண்ணினேன்.. இந்நேரம் அவங்க வீட்டுக்கு வந்திருக்கணுமே?" என்று கிரிதரன் பதற்றத்துடன் கேட்டார்.

கௌரி அதிர்ந்தாள்.

"என்ன சொல்றீங்க? ட்ரைன்ல கிளம்பினாங்களா? ஆனா அவங்க எப்பவும் ப்ளேன்லதானே மும்பை வருவாங்க?"

"நானும் கேட்டேன் சம்மந்தி.. ஆனா ட்ரைன்ல போகணும்னு செல்வி விருப்பப்பட்டான்னு மாப்ள ட்ரைன் டிக்கட் புக் பண்ணினார்.. ஆனா நா விராட் மாப்ளைக்கு இவங்க கிளம்பி வராங்கன்னு மெசேஜ் பண்ணினேனே?" என்று அவர் கூற கௌரி விராட்டிடம் விஷயத்தைச் சொன்னாள்.

விராட் கிரிதரனிடம்,

"என்ன மாமா சொல்றீங்க? எனக்கு மெசேஜ் பண்ணீங்களா.." என்று கேட்டுவிட்டு உடனேயே தன் தலையில் கை வைத்துக் கொண்டான்.

"ஐயோ! மாமா! என் மொபைல் இன்ஸ்ட்ருமென்ட் பிராப்ளமாயிருச்சு.. அத ரிப்பேருக்கு குடுத்திருக்கேன்.. சாதா பட்டன் மொபைல்தான் ரெண்டு நாளா யூஸ் பண்றேன்.. முக்கியமான ஆஃபீஸ் கான்வர்சேஷன் மட்டும் என் சபார்டினேட்ஸ் எனக்கு எஸ்எம்எஸ் அனுப்பிடறாங்க.. அதான் எனக்கு உங்க மெசேஜ் தெரியல.." என்றான்.

"மெசேஜ் வரலன்னா பரவால்ல மாப்ள.. செல்வியும் உங்க அண்ணனும் வீட்டுக்கு வரதுதான் இப்ப முக்கியம். அவங்க நேத்தி ஈவ்னிங்கே மும்பை வந்து இறங்கியிருப்பாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துடுவாங்க.. அவங்க வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லுங்க மாப்ள.." என்று கிரிதரன் கூறி அழைப்பை துண்டித்தார்.

செல்வியும் சூரஜும் வீட்டுக்கு திரும்புகிறார்கள் என்ற ஒன்றே கௌரிக்கு நிறைவாய் இருந்தது.

ஆனால் அவளுடைய மனநிறைவு முழுமை பெறவில்லை.

ஆம்! செல்வியும் சூரஜும் அன்று மட்டுமல்ல அதன் பிறகும் வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.

அவர்கள் எங்கு சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

அவர்களுடைய கைப்பேசி எண்கள் இரண்டும் நாட் ரீச்சபுளாகவே நிலைத்து விட்டது.

கௌரியும் தீன்தயாளும் தங்களுடைய கோபத்தை எண்ணி எண்ணி வேதனையடையும்படி எல்லாம் நடந்து விட்டது.

விராட் தன் காவல் பணியின் உதவியுடன் மும்பை முழுதும் அவர்களைத் தேடினான்.

ஆனால் அவர்களை எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் மும்பை செல்லும் ரயிலில் ஏறியிருந்தால்தானே மும்பை வந்திறங்குவதற்கு? அவர்கள்தான் அதில் ஏறவேயில்லையே!

பிறகு அவர்கள் எங்குதான் போனார்கள்?

செல்வியும் கருவை ஈன்றெடுத்தாள்!
செல்வக் களஞ்சியமோ கண் திறவாமல்
வானுலகை நோக்கிப் பறந்ததுவே!
வாடிய உள்ளங்கள் மூடின சோகத்தில்!

நாயகனும் கதறிப் புலம்புகையில்
நாவிலிருந்து குதித்தன சொற்களும்!
மழலை வேண்டாமெனத் தள்ளியது
தவறோ எனத் தடுமாறி உரைத்தான்!

உண்மையறிந்த பெற்றோரும்
அதிர்ச்சியுடன் மனமுழன்று மருகினரே!
குடும்ப நலத்துக்கான தியாகமென்று
ஏற்கவும் மறுத்து அவரை வெறுத்தனரே!

குழந்தையை இழந்த துயரத்தில்
வாடி நின்ற செல்வியோ துடிதுடித்தாள்!
வெறுப்பை உமிழ்ந்த பெரியோரால்
வேதனை கூடியதே பன்மடங்கு!

அன்புக்கு ஏங்கி நின்ற செல்வியும்
அடைக்கலம் புகுந்தாள் அன்னையிடம்!
நாயகன் நாயகனும் வீடு திரும்புகையில்
வழிமாறி எங்கோ சென்று மறைந்தனரே!

காதலுக்கு மொழியில்லை என்றே
நெஞ்சில் நேசத்தைச் சுமந்து வந்து
அன்பைப் பரப்பிய நாயகிக்கு இனி
நியாயம் கிடைத்திடுமோ? யாரறிவர்!


- C. புவனா



- காதலின் மொழி என்ன?
 
Top