Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 49
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அடையகருங்குளம் என்ற கிரமத்தில் இருந்த பண்ணை வீட்டின் பின்புறத்தில் அமர்ந்திருந்தார்கள் அவர்கள்.
"இன்னிக்கும் பிங்கி ஒரு மெயில் அனுப்பியிருக்கா சூரஜ்!" என்று செல்வி தன் கைப்பேசியைக் காட்டினாள்.
எல்லாரும் அவர்கள் இருவரையும் எங்கெல்லாம் தேடுகிறார்கள் என்றும் இந்த மெயில் பார்த்ததும் தயவு செய்து வீட்டுக்கு திரும்பி வாருங்கள் என்று கண்மணி உருக்கமாக வேண்டியிருந்தாள்.
அதை வாங்கிப் படித்துப் பார்த்த சூரஜ்,
"எனக்கும் அவங்க நம்மள தேடறாங்கன்னு புரியுது.. ஆனா என்னமோ அவங்கள போய் பாக்கணும்னு தோணல தமிழ்.. என்னாலதான.. என்னோட முட்டாள்தனமான முடிவாலதான அம்மாவும் அப்பாவும் நம்மள வெறுத்து ஒதுக்கினாங்க.. என்ன வெறுத்ததால உன்னையும் வெறுத்துட்டாங்க.. இனிமே எப்டி அவங்க முகத்தில முழிக்கறது.." என்று வேதனையுடன் கூறினான் சூரஜ்.
"எனக்கு உங்க கஷ்டம் புரியுதுங்க.. நாம நல்லது நெனச்சி செய்த விஷயம் அவங்கள இவ்ளோ காயப்படுத்தும்னு எனக்கும் தோணவேயில்ல.." என்றாள்.
இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர்.
'ச்சே! அவளே உடம்பு சரியில்லாம போய் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா உடம்பு தேறிட்டு வரா.. நா வேற அவள திரும்பத் திரும்ப நோகடிக்கறேன்.. பாவம் என் தமிழ்.. இனிமேலயாவது அவ சந்தோஷமா இருக்கணும்..' என்று நினைத்தான் சூரஜ்.
'ச்சே! நா ஒருத்தி.. லூசு மாதிரி.. அவரே பாவம் குழந்தைய பறி குடுத்த வருத்தத்தில இருக்கார்.. இப்ப எனக்காக குடும்பத்தையும் விட்டுட்டு வந்துட்டாரு.. இனிமேலயாவது அவருக்கு என்னால நிம்மதியும் சந்தோஷத்தையும் மட்டும்தான் கிடைக்கணும்.. முதல்ல இந்த மெயில் ஐடியையும் டீஆக்டிவேட் பண்ணனும்..' என்று நினைத்தாள் செல்வி.
இருவரும் தங்களுக்குள் தன்னைத் தானே சமாதனம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
சூரஜின் தோளில் செல்வி சாய்ந்து கொள்ள, சூரஜ் அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தான்.
"பிங்கியோட மெயில்ல இருந்து என்ன தெரியுது.. அவங்கல்லாம் நம்மள மன்னிச்சிட்டாங்க.. அது போதும் நமக்கு.. நாம இப்போதைக்கு இங்கியே இருக்கலாம்.. நாம ஒண்ணும் இங்கியே நிரந்தரமா இருந்துடப் போறதில்ல.. கண்டிப்பா அவங்க கூட போய் சேருவோம்.. ஆனா இப்ப வேணாம்.. கொஞ்ச நாள் போகட்டும்.. அத அப்றமா பாத்துக்கலாம்.." என்று மெதுவாகக் கூறினான்.
"நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகே சூரஜ்.. இங்க இருக்கலாம்னாலும் ஓகேதான்.. கிளம்பலாம்ன்னு சொன்னாலும் ஓகேதான்.." என்றாள் செல்வி.
"இருப்படா.. இருப்ப.. ராஸ்கல்!" என்ற குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.
அங்கே, விராட், ஆனந்தி, குழந்தை ஐஸ்வர்யா, கௌரி, தீன்தயாள், லட்சுமிப் பாட்டி, கிரிதரன், மங்கையர்க்கரசி, கீர்த்திவாசன், பூங்குழலி, ஆனந்தன், தீபிகா, யமுனா, கண்மணி, முத்துப் பாண்டியன், பால் பாண்டியன், நித்யா, துர்கா, பாரிவேந்தன், அங்கையற்கண்ணி, சரவண வேல், கனகவள்ளி என உறவினர் மற்றும் நண்பர்கள் பட்டாளமே நின்றிருந்தனர்.
பால் பாண்டியனும் விராட்டும் சூரஜை பளார் பளார் என்று அறைய,
"டேய்.. விடுங்கடா.. சாரி.. சாரி.. விடுங்கடா.. வலிக்கிதுடா.." என்று அலறினான். அவனுடைய உடம்பு வலித்தாலும் மனது மகிழ்ச்சியாகவே இருந்தது.
அடித்துக் கொண்டிருந்த இருவரும் சூரஜைக் கட்டிக் கொண்டார்கள்.
ஆனந்தியும் தீபிகாவும் கண்மணியும் செல்வியை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டனர்.
கௌரியும் தீன்தயாளும் ஓடி வந்து மகனைக் கட்டிக் கொண்டு கொஞ்சினார்கள்.
லட்சுமிப் பாட்டியும், செல்வியின் பெற்றோரும் ஆனந்தியின் பெற்றோரும் செல்வியைக் கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்தார்கள்.
ஆனந்தன் செல்வியின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.
"என்ன இது? ஆனந்த்? ஏன் அழற?" என்று செல்வி அழுது கொண்டே கேட்டாள்.
"நீ இப்டி பண்லாமா க்கா.. இந்த வீட்டோட ஆணி வேரே நீயும் மாமாவும்தான்.. நீங்க ரெண்டு பேரும் இப்டி எங்கள தவிக்க விடலாமா.." என்று குற்றம் சாட்டினான்.
"அப்டிலாம் இல்லாடா.." என்று செல்வி ஆரம்பிக்க,
"என்ன செல்வி? நா உன் மேல கோவப்படக் கூடாதா? ஏதோ குழந்தைய பறி குடுத்த துக்கத்தில மனசு குழம்பி போய் ஏதோ சொன்னேங்கறதுக்காக வீட்ட விட்டு போய்டுவீங்களா.. உங்கள பாக்காம நாங்க எப்டி தவிச்சி போய்ட்டோம் தெரியுமா.." என்று கௌரி கேட்க, செல்வி பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள்.
தீன்தயாள் மருமகளின் கைபிடித்து மன்னிப்பு கேட்பது போல செய்கை செய்ய, செல்வி துடித்துப் போனாள்.
"என்ன மாமா.. நீங்க போய் எங்க கிட்ட.. சாரி மாமா.. உங்கள எல்லாரையும் நாங்க எவ்ளோ கஷ்டப்படுத்திட்டோம்னு இப்பதான் புரியுது.." என்று செல்வி தழுதழுத்தாள்.
"எங்கள மன்னிச்சிடுங்கம்மா.." என்றான் சூரஜும் கண்ணீருடன்.
அங்கே அந்தக் குடும்பம் தங்களின் மன வருத்தங்களை எல்லாம் தங்களின் கண்ணீரில் கழுவிக் களைந்துவிட்டு மகிழ்ச்சியான அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார்கள்.
"சரி! நாங்க இங்க இருக்கோம்னு எப்டி கண்டு பிடிச்சீங்க?" என்று செல்வி கேட்க,
"எல்லாம் என் தம்பி முத்துவாலதான்.. அவன்தான் நீங்க இங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிச்சான்.." என்றான் பால்பாண்டி.
அங்கே திடீரென்று முத்துப் பாண்டியன் ஹீரோவாகிவிட,
"நா எதும் பண்ல.. கண்மணிதான் எங்க செல்வி பாபிக்கு மெயில் அனுப்பறேன்.. அது அவங்களுக்கு போச்சா இல்லையான்னு கூட தெரியலன்னு வருத்தப்பட்டா.. அத நா கண்டு பிடிக்கறேன்னு சொல்லி எனக்கு தெரிஞ்சத செஞ்சேன்.." என்று தன் வெற்றியில் கண்மணிக்கும் பங்கு உள்ளது என்றான்.
"இல்ல.. முதல்ல நீங்க குடுத்த மெயிலுக்குதான் நா மெயில் அனுப்பினேன்.. ஆனா அது உங்களுக்கு போகவேல்ல.. துர்காதான் நீங்க குடுத்த பாரதியார் கவிதைகள் புக்ல உங்க பழைய ஐடியை கண்டுபிடிச்சா.. அவளாலதான் உங்கள கண்டுபிடிக்க முடிஞ்சது.." என்று தன் வெற்றியில் துர்காவை சேர்த்துக் கொண்டாள்.
"ரெண்டு பேரும் எப்பவும் இப்டியே ஒத்துமையா இருக்கணும்.." என்ற ஆனந்தி,
"எங்கள மாதிரியே! இல்லக்கா!?" என்று செல்வியைப் பார்த்து கேட்டாள்.
"ஆமா ஆனந்தி!" என்றாள் செல்வி சிரிப்புடன்.
"சரி! மும்பை போறோம்னு ட்ரைன்ல ஏறினவங்க இங்க எப்டி வந்தீங்க? எதுக்கு வந்தீங்க?" என்று கிரிதரன் கேட்டார்.
"அத நா சொல்றேன்.." என்றபடியே அங்கு வந்தார் நாராயணி, செல்வி சென்னையில் வேலை பார்த்த பழைய சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியின் தலைமை ஆசிரியை.
"நாராயணி மேடம்! நீங்களா?" என்று கேட்டார்கள் ஆனந்தியும் ஆனந்தனும்.
அவர் யார் என்று பலருக்குத் தெரியாததால் செல்வி விளக்கினாள்.
"நா என் கல்யாணத்துக்கு முன்னால வேலை பார்த்துட்டு இருந்தேனே.. ஒரு ஸ்பெஷல் சில்ரன்ஸ்க்கான ஸகூல்.. அதோட ஹெட் மிஸஸ்.. மிஸ். நாராயணி! இவங்கதான்.."
"ஓ! ஓகே! ஓகே!" என்று தலையாட்டிக் கொண்டனர்.
"செல்வியும் சூரஜும் மும்பை போக ட்ரைன்ல ஏறி உக்கார்ந்திருந்தப்ப நா அவங்கள ஏதேச்சையா சந்திச்சேன்.. என் தோழி ஒருத்திய ட்ரைன் ஏத்திவிட்டுட்டு திருநெல்வேலிக்கு கிளம்பிட்டிருந்தேன்.. அப்பதான் செல்வி தன் குழந்தைய பறி குடுத்த விஷயம் எனக்கு தெரிஞ்சது.. ரெண்டு பேரும் ரொம்பவே டிப்ரஷன்ல இருக்காங்கன்னு புரிஞ்சது.. நா சென்னையில இருக்கற மாதிரியே இங்க இருக்கற ஒரு ஸ்கூல்ல ஒரு செமினார் இருந்தது. அத அட்டன்ட் செய்யதான் திருநெல்வேலிக்கு கிளம்பினேன்.. இவங்களுக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டும்னு என் கூட திருநெல்வேலி வரீங்களான்னு கேட்டேன்.. இவங்களும் என் கூட கிளம்பி வந்துட்டாங்க.. நா கார்லதான் கிளம்பினேன்.. அதனால இவங்களையும் கார்ல கூட்டிட்டு வரது எனக்கு ஈசியா போயிடுச்சு..
இங்க இருந்த ஸ்கூல் செல்விக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு.. சூரஜும் இங்க இருக்க சம்மதிச்சாரு.. இங்க ஸ்கூல்ல குழந்தைங்கள பாத்து பாத்து இவங்க மனசும் கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலைக்கு வந்துடுச்சு.. இந்த வீடு என்னோட ஃபார்ம் ஹவுஸ்தான்.." என்றார் நாராயணி.
"ஆமா.. தமிழ் கல்யாணத்துக்கு முன்னால எவ்ளோ மனநிறைவோட ஒரு அர்ப்பணிப்போட இந்த வேலைய செய்தான்னு எனக்கு தெரியும்.. அவளோட அந்த அர்ப்பணிப்பை பாத்துதான் அவளை நா லவ் பண்ணினேன்.. என்ன கல்யாணம் செய்தப்றமும் கூட அவ நம்ம வீட்ல அர்ப்பணிப்போடதான் எல்லா வேலையும் செய்தா.. ஆனா.. ஆனா அவளோட மகிழ்ச்சி.. அவளோட மகிழ்ச்சிய மொத்தமா தொலச்சிட்டா.. அதுக்கு நா ஒரு முக்கியமான காரணம்னு என் மனசு கொன்னுகிட்டு இருந்துச்சு.. அதனாலயே நாராயணி மேடம் இந்த மாதிரி ஸ்கூலுக்கு செமினாருக்கு போறேன்னு சொன்னதும் நா அவள இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.. எனக்கும் மனசில இருந்த குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது.. எங்க உங்கள கான்டேக்ட் பண்ணினா திரும்பவும் என் குற்றவுணர்வு வந்துடுமோன்னு நினைச்சிதான் நாங்க இருக்கற இடத்தை உங்ககிட்ட காட்டிக்காம இருந்தேன்.. சாரி.." என்றான் சூரஜ்.
"அப்டில்லாம் எதுவுமே இல்ல மாமா.. நீங்க அக்காவுக்காக இவ்ளோ யோசிச்சிருக்கீங்களே.. அதுவே எங்களுக்கு போதும்.." என்றான் ஆனந்த்.
"நல்லது பண்ணினீங்க மேடம்.. பையாவும் பாபியும் இப்டி குழந்தைங்களோட இருந்ததுதான் அவங்க மனவுளைச்சலுக்கு சரியான ட்ரீட்மென்ட்.." என்ற தீபிகா செல்வியைின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
எல்லாரும் நாராயணிக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க, தீபிகாவுக்கு முக்கியமான உண்மை ஒன்று தெரிய வந்தது.
"பாபீ.. இது.. இது உண்மையா?" என்று தீபிகா செல்வியிடம் மகிழ்ச்சியும் ஆவலுமாகக் கேட்க,
"ம்.. ஆமா சுட்கி.." என்று வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள் செல்வி.
"வாவ்! பாபி மா பன்னேவாலி.." என்று ஆரவாரக் கூச்சலிட்டாள் தீபிகா.
ஆமாம்! அந்த இறையருளால் செல்வி மீண்டும் கருத்தரித்திருந்தாள். நான்கு மாதக் கரு அவள் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்தது.
அனைவரும் அங்கே மீண்டும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
"எல்லாம் நல்லபடியாவே முடிஞ்சது! எல்லாரும் உக்காருங்க.. நா திருஷ்டி கழிச்சி போடறேன்.." என்று அனைவரையும் அமர வைத்து திருஷ்டி கழித்தார் லட்சுமி பாட்டி.
நெல்லையில் சரணடைந்த செல்வியும்
நாயகனும்
இல்லையினி கவலையென்று எண்ணித்
தனித்திருக்க
கண்மணியும் முத்துவும் தேடுதலில்
வெற்றி கண்டு
உற்றார் பெற்றோர் நண்பருக்கும்
தெரிவித்தாரே!
மங்கையும் மன்னவளும் நெகிழ்ந்து
பேசுகையில்
வந்து குதித்தது உறவினர் பட்டாளர்
எதிர்பாராமல்!
ஆனந்தக் கண்ணீர் அங்கே சிந்தினரே
அனைவரும்!
இன்பவெள்ளம் ஓடியதே இல்லத்தில் பெருக்கெடுத்து!
பிரிந்தவர் சேர்கையில் பேச்சுக்கு
இடமில்லை!
தவறுக்கு வருந்தியோர் மன்னிப்பும்
வேண்டினர்!
பதைபதைத்த உள்ளத்தில் கலக்கம்
செல்விக்கும்!
யாரிடமும் வருத்தமில்லை எனக்கென்று
உரைத்திட்டாள்!
இன்பத்தில் இன்பம் சேர்க்கவோர்
இனிய செய்தி!
செல்வியின் கருவில் குழந்தையாக
வந்து நிற்க
உற்சாகம் பெருகியது உள்ளங்களில்
அனைவருக்கும்!
வாழட்டும் நிறைவோடு ! வளரட்டும்
அவரின்பம்!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?