Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 50 (முடிவு)
செல்வி கருவுற்றிருப்பது அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.
மங்கை அவளை சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூற, கௌரி அவளை மும்பை அழைத்துச் செல்வதாகக் கூறினாள்.
ஆனால் செல்விக்கு இந்த கிராமத்தை விட்டுச் செல்ல மனமேயில்லை.
"இல்ல.. வந்து.. நா இங்கியே இருக்கேன் ப்ளீஸ்.." என்று கெஞ்சும் குரலில் கூறிளாள்.
அவர்கள் இதைக் கேட்டதும் கொஞ்சம் அதிரத்தான் செய்தார்கள்.
"பாபி இங்கியே இருக்கட்டும்.. அவங்க மனசுக்கு என்ன பிடிக்கிதோ அதை செய்யட்டும்.. ஏற்கனவே ஒரு குழந்தைய இழந்திருக்காங்க.. நம்மள விட அவங்க இழப்பு ரொம்ப பெரிசு.. அவங்க மனநிம்மதி இப்ப அவங்களுக்கு ரொம்ப முக்கியம்.. அப்பதான் குழந்தை ஆரோக்கியமாப் பிறக்கும்." என்றாள் தீபிகா ஒரு மருத்துவராய்.
"ஆனா இங்க எப்டிம்மா.. நீ தனியா இருப்ப.." என்று மங்கை தயங்க,
"நா என் பேத்தி கூட இருந்து அவள கண்ணும் கருத்துமா கவனிச்சிப்பேன்.." என்று லட்சுமி பாட்டியும்,
"நா இருக்கேன் செல்வியோட துணைக்கு.. ஒரு நர்சா அவளுக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரியும்.. இத விட எனக்கென்ன வேலை.." என்று யமுனாவும் கூறினார்கள்.
இந்த யோசனை அனைவருக்கும் சரியென்று பட, அவர்கள் செல்விக்கு ஆயிரம் அறிவுரைகள் கூறிவிட்டு அடிக்கடி வந்து பார்க்கிறோம் என்று உறுதியளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
ஆனந்தியும் தீபிகாவும் கண்மணியும் செல்வியின் கன்னத்தில் முத்தமிட்டனர்.
"பிங்கி.. எப்டிம்மா இருக்க?" என்று செல்வி கண்மணியை விசாரிக்க,
"நீங்க பக்கத்தில இல்லங்கற குறை தவிர வேற எதுவும் இல்ல பாபி.." என்று அழகான தமிழில் சொன்ன கண்மணியை மகிழ்ச்சியும் ஆவலுமாகப் பார்த்தாள் செல்வி.
"ரொம்ப அழகா தமிழ் பேசற பிங்கிம்மா.." என்று செல்வி கூற,
"எல்லாத்துக்கும் துர்காதான் காரணம் பாபி.." என்று துர்காவை செல்விக்கு அறிமுகம் செய்தாள் கண்மணி.
செல்வி துர்காவையும் பிங்கியையும் மாறி மாறி பார்த்து அதிசயப் பட்டாள்.
"எப்டி.. ரெண்டு பேரும் அப்டியே அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கீங்க.." என்றாள்.
"அக்கா தங்கைன்னா அப்டிதானே இருப்போம்.." என்றாள் துர்கா.
"எஸ்.. எஸ்.." என்ற செல்வி துர்காவின் கன்னம் வழித்து கொஞ்சினாள்.
எல்லாரும் செல்வியிடம் செல்லம் கொஞ்சுவதை பால்பாண்டியன் குடும்பம் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"எப்டி இப்டி.. ஒரு குடும்பமே அந்த வீட்டு மருமகளை தலையில தூக்கி வெச்சி கொண்டாடுது.." என்று வியப்புடன் கேட்டாள் நித்யா, பால் பாண்டியனின் மனைவி.
"அவ இந்த குடும்பத்துக்காக செய்த தியாகம் அவ்ளோ.. அதனாலதான் இந்த குடும்பம் இவ்ளோ கொண்டாடுது.." என்று விளக்கினாள் யமுனா.
"எல்லாம் சரி.. ஆனா டெலிவரிக்கு நீ மும்பைக்கு வந்திடணும்.." என்று கௌரி கூற,
"சம்மந்தி.. அது சரி வராது.. நா அவள சென்னைக்குதான் கூட்டிட்டு போவேன்.." என்று மங்கை மல்லுக்கு நின்றாள்.
"அது எப்டி.." என்று இருவரும் ஒரு சண்டைக்குத் தயாராவதைப் போல பேசத் தொடங்க,
"அத்த.. அத்த.. நா மும்பைக்கும் வரல.. சென்னைக்கும் போக மாட்டேன்.. இங்கதான் இருக்கப் போறேன்.." என்று செல்வி கூறினாள்.
இப்போது கௌரியும் மங்கையும் அவளை முறைத்தனர்.
"அத்த ப்ளீஸ்.." என்று அவள் ஆரம்பிக்க, தீபிகா அவளை நிறுத்தவிட்டு, தன் அன்னையிடமும் பெரிய மாமியாரிடமும் சமாதானமாய் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தாள்.
எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படியாகப் பேசி அவர்களை சமாதானம் செய்த தீபிகா செல்வியை பரிசோதனை செய்து சில சத்து மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தாள்.
அனைவரும் கிளம்ப எத்தனிக்க,
"அதெப்டி.. என் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போவீங்களா.." என்று கேட்ட நாராயணி, அவர்களுக்கு தடபுடலாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அவர்கள் அனைவரும் சாப்பிட வைத்தே அனுப்பி வைத்தாள்.
சிறிது மனக்குறை இருந்தாலும் செல்வியும் சூரஜும் கிடைத்தார்களே என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு இருக்கதான் செய்தது. அதுவும் செல்வி இப்போது கருவுற்றிருப்பதும் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.
காலம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
செல்வியின் பிரசவ நேரம் நெருங்க, மங்கையும் கௌரியும் தீன்தயாளும் அடையகருங்குளம் கிராமத்துக்கு வந்துவிட்டனர்.
ஏற்கனவே லட்சுமி பாட்டியும் யமுனாவும் இருக்க கூடவே நாராயணியும் அங்கு வந்துவிட்டிருந்தார்.
செல்விக்கு பிரசவ நேரம் நெருங்க அவளை அங்கிருந்த சிறிய மருத்துவமனையில் சேர்த்தனர். அது சிறியதாய் இருந்தாலும் அங்கிருந்த மருத்துவர் மிகவும் திறமை வாய்ந்தவராகவும் அனுபவம் மிக்கவராகவும் இருந்தார்.
பிரசவ நேரம் நெருங்க நெருங்க, சூரஜுக்கு படபடப்பாய் இருந்தது.
லட்சுமி பாட்டியும் நாராயணியும் அவனை ஆசுவாசப்படுத்தினர்.
சில மணி நேரக் காத்திருப்புக்குப் பின், செல்வி சுகப் பிரசவத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
சூரஜ் குழந்தையை கையில் வாங்கினான். குண்டு குண்டு கன்னங்களுடன் தலை முழுதும் கறுகறுவென்று கூடையைக் கவிழ்த்த மாதிரி முடியுடன் செக்கச் செவேலென சூரஜின் நிறத்தில் செல்வியின் ஜாடையில் இருந்தது. குழந்தையை கண் குளிர கண்டு மகிழ்ந்தான்.
தீன்தயாளும் கௌரியும் குழந்தையைக் கண்டு மகிழ்ந்தனர்.
குழந்தை பிறந்த செய்தியறிந்து அந்தக் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது.
குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனந்த் தன் வெளிநாட்டு பிராஜக்ட் முடிந்தபடியால் இந்தியா திரும்ப ஆயத்தமாக இருந்தான். தீபிகாவும் தன் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டாள். எனவே அவர்கள் வந்தவுடன் இந்த விழாவை ஏற்படு செய்யலாம் என்று கொஞ்சம் தள்ளிப் போட்டனர்.
தங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இருவரும் தாயகம் திரும்பி வந்தனர்.
அவர்கள் வந்த பிறகு சரியாக குழந்தை பிறந்த பிறகு ஒரு மாதம் கழிந்த பிறகு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.
குடும்பத்தினரும் நண்பர்களும் புடை சூழ அந்த விழா இனிதே ஆரம்பமாயிற்று.
குழந்தைக்கு சந்தோஷ் என்று பெயர் சூட்டினார்கள்.
விராட் குழந்தையைப் பார்த்தான். அவன் கண்கள் பனித்தது.
"பையா!"
"ம்!"
"குழந்தை அப்டியே பாபி மாதிரியே இருக்குல்ல!"
"ம்!"
"தலை நிறைய சுருட்ட சுருட்டையா முடி! பெரியவனானா கிரிக்கெட்டர் மலிங்கா மாதிரி இருப்பான்ல! சிவப்பு மலிங்கா!"
இதைக்கேட்டு சூரஜ் சிரித்தான்! அவன் சிரிப்பதைப் பார்த்து விராட்டும் சிரித்தான்.
ஆனந்தி ஐஷுவை விராட்டிடம் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிக் கொஞ்சினாள்.
"அப்டியே அக்கா மாதிரியே இருக்குல்ல மாமா!"
"ஆமா ஆனந்தி! பொண்ணு அப்பா மாதிரியும் பிள்ள அம்மா மாதிரியும் இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்வாங்க! அந்த வகையில நம்ம வீட்டு ரெண்டு குழந்தைங்களும் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவங்க!"
"ஆமா பையா!" என்றான் விராட்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர்:
சூரஜும் செல்வியும் அடையகருங்குளத்திலேயே ஒரு வீடு வாங்கிக் கொண்டு செட்டிலாகி விட்டனர்.
செல்வியுடன் சேர்ந்து சிறப்பு பள்ளியில் சூரஜும் ஒரு ஆசிரியராக வேலை செய்யத் தொடங்கிவிட்டான்.
ஆனந்தி ஒருபுறம் தன் ஓவியங்களால் நிறைய சம்பாதித்து நிறைய ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவினாள். மறுபுறம் தன் கதைகளால் அனைவரையும் கட்டிப் போட்டாள்.
விராட் போலீஸ் கமிஷ்னராகி மும்பையின் ரௌடிகளுக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டான்.
ஆனந்தன் சென்னைக்கு மாற்றலாகி இங்குள்ள ஆஃபீஸுக்கு தலைமைப் பொறுப்பேற்றான். இங்கும் இவன் தன் டார்கெட்டை சரியாக முடிப்பதில் தனக்கு நிகர் தானே என நிரூபித்தான்.
தீபிகா தன்னுடைய இதயத்தைப் பற்றிக் கூட அறிந்து கொள்ள முடியாமல் இருந்தவள், இப்போது நோயாளிகளின் இருதயத் துடிப்பை வைத்தே நோயின் தீவிரத்தைக் கண்டுபிடிக்கும் கைதேர்ந்த கைராசிக்கார இருதய நோய் நிபுணராக மிகப் பெரிய கார்டியாலஜிஸ்ட்டாகி விட்டாள்.
ஆனந்தனிடம் சொன்னது போலவே சென்னை அடையாரில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டே தன் வீட்டிலும் கணவனையும் குழந்தையையும் கவனிக்கும் அன்பான, அதே நேரத்தில் அதிநவீன இந்திய மனைவியாகிவிட்டாள். அவர்கள் இருவரும் இப்போது சென்னை திருவான்மியூரில் சொந்த ஃப்ளாட்டில் நான்காவது தளத்தில் வசிக்கிறார்கள்.
அவர்கள் வசிக்கும் அதே அபார்ட்மென்டில் ஆனந்தனின் ஃப்ளாட்டுக்கு அடுத்த ஃப்ளாட்டை சொந்தமாக்கிக் கொண்டு கீர்த்திவாசன் பூங்குழலி தம்பதியினர் தங்கள் திருச்சி வீட்டை வாடகை விட்டுவிட்டு சென்னையில் குடியேறிவிட்டனர்.
ஆனந்தன் இங்கும் மாடியில் தோட்டம் போட்டு நந்தவனம் மாதிரி பராமரிக்கிறான். தீபிகாவும் ஆனந்தனும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் அங்குதான் தன் குழந்தையுடனும் பெற்றோருடனும் நேரம் செலவிடுவார்கள்.
சென்னை பெசண்ட் நகர் எலியாட்ஸ் பீச்சில் விராட் ஆனந்தியின் ஆறு வயது மகள் ஐஸ்வர்யா, சூரஜ் செல்வியின் நான்கு வயது மகன் சந்தோஷ், ஆனந்தன் தீபிகாவின் மூன்று வயது மகள் ஆராதனா மூவரும் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் குழந்தையோடு குழந்தையாய் லட்சுமி பாட்டியும் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
சூரஜ், செல்வி, விராட், ஆனந்தி, ஆனந்த், தீபிகா அனைவரும் கடலலைகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மூன்று குழந்தைகளும் லட்சுமி பாட்டியுடன் விளையாடுவது கண்டு அனைவரும் அவர்கள் அருகில் வந்தனர்.
"பாத்தி! இவன் நாங்க கத்தின வீத்த இதிச்சுத்தான்!" ஆராதனா தன் மழலைக் குரலில் சிணுங்கியபடி லக்ஷ்மி பாட்டியிடம் கூறினாள்.
"நான் ஒண்ணும் இடிக்கல பாட்டி! அவ லாங் ஸ்கர்ட் பட்டுதான் இடிஞ்சுது!" சந்தோஷ் மறுத்தான்.
"இல்ல பாத்தி! இவன்தான் இதிச்சான்!" ஆராதனா விடுவதாயில்லை!
"ஐஷு! நீ பாத்தல்ல! இவன்தானே இதிச்சான்! சொல்லு!" ஐஷுவையும் கூட்டு சேர்த்துக் கொண்டாள்.
"சரி விடுடி! நம்ம சந்தோஷ்தானே! தெரியாம இடிச்சுட்டான்! நம்ம திரும்பியும் வீடு கட்டலாம்!"
"நான் ஒண்ணும் இடிக்கல!" சந்தோஷும் விடுவதாயில்லை!
ஆராதனா இப்போது அழ ஆரம்பிக்க,
"சரி! சரி! அழக்கூடாது! வாங்க! நான் பொம்ம வாங்கித் தரேன்!"
"அவ அழுதான்னு அவளுக்கு பொம்மையா? இதெல்லாம் டூ மச் பாட்டி!"
"சரி! கோவப்படாத! உனக்கும் பொம்ம வாங்கித்தரேன்!"
லக்ஷ்மி பாட்டி தள்ளாத நடையுடன் மெதுவாய் குழந்தைகளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
அப்போது ஆராதனாவை ஒரு முரட்டுக் குழந்தை தள்ளிவிட, ஐஷு அவனை கண்டிக்க, சந்தோஷ் அவனை அடித்தான்.
"டேய்! எங்க ஆராதனாவ ஏண்டா தள்ளின?" கேட்டுவிட்டு, "நீ வா ஆராதனா!" என்று ஆராதனாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
"நம்ம குழந்தைப்பருவத்த திரும்பி பாத்த மாதிரி இருக்குல்ல ஆனந்தி!" செல்வி கேட்டாள்.
"ம்! ஆமாக்கா!" ஆமோதித்தாள் ஆனந்தி!
"தி ஹிஸ்ட்ரி ரிட்டன்ஸ்!" என்று சிரித்தான் ஆனந்தன்.
சூரஜ், விராட், தீபிகா மூவரும் உடன் சேர்ந்து சிரித்தனர்.
செல்வி ஆராதனாவைத் தூக்கிக் கொண்டு கொஞ்சினாள்.
"வீத்த இதிச்சுத்தானா? நான் ஏன்தா இதிச்சன்னு கேக்கவா?"
"வேன்தாம் அத்த! சந்தோஷ் சும்மா விளையாதினானா! நானும் அவனோத விளையாதினேன்!" அவளும் மழலை மாறாத குரலில் அழகாய் கூறினாள். செல்வி ஆராதனாவை கொஞ்சி மகிழ்ந்தாள்.
"அத்தை மடி மெத்தையடி!
ஆடி விளையாடம்மா!
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா!"
கூடச் சேர்ந்து ஆனந்தியும் பாட, ஆனந்தனும் தீபிகாவும் விராட்டும் சூரஜும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் குந்தைகளை தூக்கிக் கொஞ்சினர்.
"அக்கா, சந்தோஷ் தலைமுடி அப்டியே கிரிக்கெட்டர் மலிங்கா மாதிரியே இருக்கு. சிவப்பு மலிங்கா!" ஆனந்தன் கூறினான்.
"விராட் கூட இப்டிதான் சொன்னார்!" என்றாள் செல்வி!
"ஆராதனா குட்டி அப்டியே தீபிகாவோட ஜெராக்ஸ் காப்பி! என் செல்லக் குட்டி!" ஆனந்தி ஆராதனாவைக் கொஞ்சினாள். கூடச் சேர்ந்து விராட்டும் கொஞ்சினான்.
"ஐஷுக்குட்டி பாக்கறதுக்கு விராட் மாதிரியே இருக்கு! ஆனா செல்வி பாபி மாதிரி அமைதியா இருக்கு! என் சமத்துச் செல்லம்!" தீபிகாவும் சூரஜும் கொஞ்சினர்.
குழந்தைகள் மூவரும் பெரியவர்களின் கொஞ்சலில் பூப்போல மலர்ந்து சிரித்தனர்.
"எல்லாரும் நாளைக்கு காலையில கரெக்ட்டா ரெடியாயிடுங்க.. கண்மணி கலெக்ட்ரா பதவி ஏத்துக்க போறா.. மறுநாள் அவளுக்கும் முத்துப் பாண்டிக்கும் கல்யாணம்.. நம்ம எல்லாரும் போகணும்.. அவங்கப்பாவோட கனவை அவ நிறைவேத்திட்டா.. அந்த குடும்பத்துக்கு குறையாத சந்தோஷத்தை குடுக்கப் போறா.. அவளோட சந்தோஷமான தருணத்தில நாம எல்லாரும் அவ பக்கத்தில இருக்கணும்.. இப்ப போய் எல்லாரும் தூங்குங்க.." என்றாள் செல்வி.
"எஸ்.." என்றபடி அனைவரும் உறங்கச் சென்றனர்.
பாட்டியின் நிபந்தனையற்ற அபரிமிதமான அன்பில் வளர்ந்ததினால் செல்வி தன்னைச் சேர்ந்த அனைவரையும் நேசித்தாள். நேசிக்கிறாள். அவளுடைய அன்பினால் அவளுடைய மாமியார், மாமனார், கொழுந்தனார், நாத்தனார், இவர்களுடன் தன் பெற்றோர் சித்தி சித்தப்பா தம்பி தங்கை அவர்களின் குழந்தைகள் தன் குழந்தைகள் என அனைவரையும் ஒரே குடும்பமாக ஒன்றாக கட்டிவிட்டாள். இவர்களுடன் யமுனா கண்மணி துர்கா பால் பாண்டியன் நித்யா முத்துப் பாண்டியன் என்று அந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகின்றது. அந்த அன்பை புரிந்து கொண்ட அனைவரும் அவளைப் போலவே மற்றவர்களுக்கும் தங்கள் அன்பை வாரி வழங்க ஆயத்தமாகிவிட்டனர்.
சூலுற்ற மங்கையைத் தன்னோடு அழைத்துச் செல்ல
போட்டி போட்டனர் பெற்ற தாயும்
மற்ற தாயும்!
செல்விக்கு விருப்பமில்லை எங்கேயும் சென்றிட!
இருக்கும் இடமே எனக்கு சொர்க்கம்
என்றுரைத்தாள்!
பெரியோர் கூடிப்பேசி விவாதித்தபின்
ஒரு மனதாய்
செல்வியின் இச்சைப்படி விட்டுச் செல்ல
முடிவெடுத்தனரே!
பாட்டியும் யமுனாவும் உதவுகிறோமென
முன்வந்து நிற்க
நல்லதொரு நாளில் பிள்ளைச்செல்வம்
பிறந்தது!
வாழ்க்கையில் உற்சாகம் பெருகியது
அளவின்றி!
இன்பம் தந்த குழந்தையின் பெயரும்
சந்தோஷ்!
கண்மணியின் கனவும் நிறைவேறியது
இனிதாக!
கைபிடிக்கிறாள் பாண்டியைத் துணையாக
ஏற்கிறாள்!
திருமணத்தில் கூடி நின்று வாழ்த்தி
மகிழ்ச்சியுற
நண்பர்கள் உறவினர் அனைவரும்
ஒன்று கூட
அன்பின் சங்கமம் அரங்கேறியது
அழகாக!
காதலுக்கு மொழியில்லை அன்புக்கும்
அழிவில்லை!
- C. புவனா.
காதலுக்கு மொழி தேவை இல்லை!
அன்புக்கு என்றும் அழிவு இல்லை!
♥♥♥♥♥♥♥♥
அன்புக்கு என்றும் அழிவு இல்லை!
♥♥♥♥♥♥♥♥