Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 6
திருமணச் சடங்குகள் பெண்வீட்டில் நடைபெற்றதால் மறுவீடு அழைப்பு என்று தனியாக வேண்டாம் என்று கிரிதரன் குடும்பத்தார் விட்டுக் கொடுத்தார்கள். அன்று மாலை அனைவரும் மும்பைக்கு கிளம்ப இருப்பதால் செல்வியும் சூரஜும் தங்களுக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டனர். தேன்நிலவை முடித்துக்கொண்டு சென்னையில் தனிக்குடித்தனம் வரப்போவதால் சீர் பாத்திரங்கள் வீட்டு உபயோக சாமான்கள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும் என்று கௌரி கூறிவிட்டாள்.
"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை;
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை."
என்று ஒரு புதுமொழி உள்ளது.
இப்படி மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் விட்டுக் கொடுத்துப் போனால் திருமணம் செய்து கொண்ட ஆணும் பெண்ணும் தங்களுடைய பெற்றவர்களைப் பார்த்து தாமும் தங்கள் குடும்ப வாழ்வில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வெறுப்பை கோபத்தை எல்லாம் ஒதுக்கித் தள்ளி அன்பை நட்பை காதலை வளர்ப்பார்கள். அன்யோன்யமான ஆதர்ச தம்பதிகளாய் வாழ்ந்து நல்ல மக்களைப் பெற்று வாழ்வில் எல்லாவிதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள்.
இந்த அற்புதமான தத்துவம் புரிந்ததாலோ என்னமோ சூரஜின் பெற்றோரும் தமிழ்ச்செல்வியின் பெற்றோரும் விட்டுக் கொடுத்துப் போனார்கள்.
தமிழ்ச்செல்வி பாட்டன், பாட்டிகள், தம்பி தங்கை வீட்டு வேலை செய்யும் ஆயா என எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு தன் புத்தம் புது கணவனுடனும் புகுந்த வீட்டினருடனும் மும்பைக்குக் கிளம்பினாள்.
செல்வியை புகுந்த வீட்டில் கொண்டுவிடும் சம்பிரதாயமாக பூங்குழலியும் கீர்த்திவாசனும் உடன் கிளம்பினார்கள். ஆனந்தன் பெங்களூருவுக்கு அன்று மதியமே வண்டியேறிவிட்டான். கிரிதரனும் மங்கையும் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள நாளை புறப்படுவதாய் இருந்தது. அவர்களோடு ஆனந்தியும் நாளை மும்பை சென்று விட்டு திருமண வரவேற்பு முடிந்ததும் பெண்வீட்டார் அனைவரும் ஒன்றாக சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர்.
மும்பை சென்று வீட்டு வாசலில் இறங்கிய போதே அவர்களின் விளையாட்டு தொடங்கி விட்டது.
தீபிகாவுடன் சேர்ந்து நிறைய பெண்கள் மணமக்களை வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து, புது மருமகளுக்கு ஆரத்தி எடுக்க தட்சணை கேட்டு வம்பு செய்ய, சூரஜ், புன்சிரிப்புடன் தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து எல்லா பெண்களுக்கும் கொடுத்து அவர்களை திருப்தி செய்த பின்னரே அவர்கள் ஆரத்தி எடுத்து வழிவிட்டனர்.
கௌரியும் தீன்தயாளும் அனைவரையும் அன்போடு வரவேற்றனர். மணமக்களை வீட்டுக்குள் வரச்சொன்னார்கள். உள்ளே வரும்போது செல்வியை வாசல்படியில் நெல் நிரப்பி வைக்கப்பட்டிருந்த அரிசியளக்கும் படியை வலது காலால் வீட்டின் உட்புறமாக மெதுவாகத் தட்டிவிட்டு வரச் சொன்னார்கள்.
செல்விக்கு எல்லாமே புதிதாய் இருந்தது. ஆனால் அவர்கள் சொன்னதை எல்லாம் அவளும் தயங்கியபடி செய்தாள். நம் தமிழகத்து வழக்கப்படி அரிசிப்படியை மட்டுமல்ல, எதையும் காலால் தட்டக் கூடாது. ஆனால் இது வடகத்தி வழக்கம். ஏன் என்று கேள்வியாய் சூரஜைப் பார்த்தாள். இப்படிச் செய்தால் வீட்டுக்கு வரும் புது மருமகளின் வருகையால் வீட்டில் எப்போதும் தானியம் நிறைந்து இருக்கும். வீடு செல்வச் செழிப்புடன் இருக்கும் என்ற நம்பிக்கையால் செய்வது என்று விளக்கினான். கௌரி மணமக்களை சுவாமி அறைக்கு அழைத்துச் சென்று செல்வியை விளக்கேற்ற சொன்னாள். செல்வி விளக்கேற்றியதும் மணமக்கள் இருவரும் சுவாமி நமஸ்காரம் செய்தனர்.
அதன் பின் தீபிகா செல்வியை அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றிக் காட்டினாள். செல்வியுடன் அவள் சித்தியும் வந்தாள். அப்படியே மாடியில் தன்னுடைய அறைக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டாள். தீன்தயாள் அப்படியே ஹாலில் அமர்ந்துவிட்டார். கீர்த்திவாசனும் அவருடன் அமர்ந்துவிட்டார். கௌரி வந்தவர்களுக்கு முதலில் குடிக்க டீ தயாரிக்க சமையலறையில் நுழைந்தாள். அவளுக்கு உதவ அருகில் யாரும் இல்லாது போகவே அம்மாவுக்கு உதவ சூரஜ் வந்தான்.
விராட் தன்னுடைய நண்பர்களைப் பார்த்து வருவதாகக் கூறிக் கிளம்ப, சூரஜ் தம்பியையும் உதவி செய்ய அழைத்தான்.
'ஏன் உன் பொண்டாட்டியக் கூப்ட்டுக்க வேண்டியதுதானே! மகாராணி விரலசைக்க மாட்டாளோ?' என்று மனதுக்குள் கடுத்தபடியே அவனும் அம்மாவுக்கு உதவினான்.
டீயை ஹாலில் இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு கௌரி தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்துவிட்டாள். விராட் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்தான். சூரஜ், மற்றவர்களுக்கும் தனக்கும் சேர்த்து ஒரு ட்ரேயில் எடுத்துக்கொண்டு தீபிகாவின் அறைக்குச் சென்றான்.
அனைவருடனும் ஒன்றாக பேசி சிரித்தபடி டீயை அருந்திவிட்டு காலிக் கோப்பைகளுடன் சூரஜ் கீழே வர, செல்வியும் அவனோடு சேர்ந்து இறங்கினாள். சித்தியும் மகளுடன் பின்னாலேயே இறங்கினாள். தீபிகா தன்னுடைய அறையிலேயே சிறிய வேலையிருக்கிறது. முடித்துவிட்டு வருவதாய்க் கூறி இருந்துவிட்டாள்.
கீழே வந்து பூங்குழலி கௌரியின் அருகில் அமர்ந்தாள். சூரஜ் மனைவியை அழைத்துக் கொண்டு கீழேயே இருக்கும் தன்னுடைய அறைக்குள் சென்றான். தீன்தயாள் கீர்த்திவாசனை அழைத்துக் கொண்டு வீட்டைக் காட்டினார்.
விராட் டீயைக் குடித்துவிட்டு மாடியேறினான். அவனுடைய அறையும் மாடியில்தான் உள்ளது. தீபிகாவின் அறைக்கு பக்கத்து அறை. தன்னுடைய அறைக்குப் போய் எதையோ எடுத்துக் கொண்டு தீபிகாவின் அறையில் நுழைந்தான்.
தன்னுடைய அறைக்குள் சின்ன அண்ணன் வருவதைக் கண்டதும்,
"க்யா பைய்யா?" என்றாள்.
(இனி அவர்கள் ஹிந்தியில் பேசிக்கொள்வதை தமிழில் தருகிறேன்.)
"ஒனக்கு அறிவே கிடையாதா?" கோபமாய்க் கேட்டான்.
"எதுக்கு இப்டி வந்ததும் வராததுமா கோபப்படற! நான் என்ன தப்பு பண்ணேன்?"
"அம்மா மட்டும் தனியா டீ போட வேண்டியதாயிடுச்சி! நீயும் கூட மாட ஹெல்ப் பண்ணனும்ல! அவங்களுக்கு இப்ப வீடு சுத்தி காட்றது ரொம்ப முக்யமா? அவங்களுக்கும் அறிவு இல்ல! என்னடா! மாமியார் தனியா கஷ்டப்படுவாங்களேன்னு நெனச்சிருக்கணும்!" பொரிந்து தள்ளினான்.
விராட் கொஞ்சம் கோபக்காரன். கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் கத்துவான் என்று அந்த வீட்டில் அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லாரும் அவனை பொறுத்துப் போவார்கள். இப்போது தீபிகாவும் பொறுத்துப் போனாள்.
"சரி! சரி! ஸாரி! இனிமே அம்மாவுக்கு தேவைப்படற ஹெல்ப் பண்ணிட்டு அப்றமா என் வேலைய செய்றேன்! தோ! இப்பவே கீழ போறேன். ஸாரி! போதுமா! கொஞ்சம்தான் சிரியேன்!" என்றாள்.
"ம். ம்." என்று கொஞ்சம் சமாதானமடைந்து, ஆனால் சிரிக்காமல் அவள் கன்னத்தை தட்டிவிட்டு வெளியேறினான். அம்மாவிடம் தன் நண்பனைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு எல்லாரிடமும் பொதுவாய் பை சொல்லிவிட்டு தன் பல்சரை உதைத்துக் கொண்டு கிளம்பினான்.
அந்த வீடு பழங்காலத்து வீடு. நம் கிராமங்களில் இருப்பது போல் பெரிய கல்யாணக் கூடம், கூடத்தைச் சுற்றிலும் அறைகள் போல வீட்டுக்குள் நுழைந்ததும் சிறிய வராண்டா. அதைத் தாண்டி உள்ளே வந்தால் பெரிய ஹால். ஹாலின் வலதுபறத்தில் உள்ள அறை சமையலறை. சமையலறையில் இருந்து தோட்டத்துக்குச் செல்ல வழி. ஹாலின் இடதுபுறத்தில் உள்ள அறை பூஜையறை. ஹால் வாசலுக்கு நேர் எதிரே வழி அல்லது காரிடார் மாதிரி போகும். அது வழியாகச் சென்றால் இடதுபறத்தில் சரியாக பூஜை அறைக்குப் பின்னால் கௌரி தீன்தயாளின் அறை. அதற்கு எதிரே சூரஜின் அறை.
அந்த அறைகளைக் கடந்து காரிடாரில் மேலும் போனால் வெளியே கொஞ்சம் தள்ளி குளியலறை, கழிப்பறை, துணி துவைக்கும் வெளி, அருகே தோட்டத்துக்கு செல்ல வழி, மாடி செல்ல படிகள் என பழைய மாடல் வீடு.
பாதுகாப்புக்கு தோட்டம் செல்லும் வழியில் க்ரில் கேட் உண்டு. மாடி செல்ல வராண்டாவிலும் படிகள் உண்டு. மாடியில் சமையலறைக்கு மேலே தீபிகாவின் அறை. சூரஜின் அறைக்கு மேலே விராட்டின் அறை. பூஜை அறைக்கு மேலும் தீன்தயாள் அறைக்கு மேலும் இரண்டு அறைகள் உண்டு. ஹாலின் சீலிங் மாடி அறையின் சீலிங்குடன் சேர்த்து என்பதால் ஹால் கல்யாண மண்டபங்களில் உள்ளது போல இருக்கும். கீழிருந்து குரல் கொடுத்தால் மாடியறைகளிலிருந்து வெளியே எட்டிப் பார்த்து கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் கட்டப் பட்டது.
தீன்தயாள் அறை மட்டும் பாத் அட்டாச்சுடு. அது சமீபத்தில் தாயாருக்காக சூரஜ் ஏற்படுத்திக் கொடுத்த வசதி. மற்றவர்கள் பின்னால் இருப்பதைத்தான் பயன்படுத்த வேண்டும். மாடியிலும் பொதுவான கழிப்பறையும் குளியலறையும் கீழே உள்ளதைப் போலவே உண்டு.
தோட்டம் சிறியது. வீட்டின் வலப்பக்கத்தில் சிறிய காலியிடம், அதில் சில செடிகள். அவ்வளவுதான். அக்கம் பக்கத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரி வீடுகள்தான்.
மும்பையிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு ஊர். சென்னையில் இருந்து செங்கல்பட்டு தூரம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
சிறிது நேரத்துக்குப் பின் கௌரி சென்று குளித்துவிட்டு வந்தாள். தீபிகா மாடியில் குளித்துவிட்டு வந்தாள். இருவரும் சேர்ந்து சமையலறையில் சமையல் செய்யத் தொடங்கினர். சூரஜ் கீழே குளித்துக் கொண்டிருந்ததால் செல்வியை, தீபிகா மாடியில் குளிக்கச் சொன்னாள். அவள் மாடியில் குளித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது விராட் நண்பனைப் பார்த்துவிட்டு வந்தான். சமையல் அறையில் அம்மாவும் தங்கையும் மட்டும் வேலை செய்வதைப் பார்த்து அவனுக்கு திரும்பவும் கோபம் வந்தது. ஆனால் யாரிடம் காட்டுவது? ஒன்றும் பேசாமல் மாடியேறினான். அப்போது செல்வி குளித்துவிட்டு சுடிதார் அணிந்து வெளியே வந்தாள்.
ஏற்கனவே இந்த வீட்டின் அமைப்பைப் பற்றி கை நனைக்க வந்தபோது பார்த்திருந்ததால் அவளுடைய அம்மா சொல்லியிருந்தாள். அதனால் குளித்துவிட்டு வெறும் பாவாடையை நெஞ்சை மறைத்து கட்டிக்கொண்டு மேலே ஒரு டவலால் போர்த்திக் கொண்டு வர இயலாது என்று செல்விக்கு எடுத்துச் சொல்லி இருந்தாள். வீட்டில் ஏறக்குறைய கணவனுடைய வயதில் ஒரு கொழுந்தன் வேறு இருக்கிறான். அதனால் சென்னையில் செய்வது போல குளித்துவிட்டு நைட்டி போட்டுக் கொண்டும் வருவது நல்லதல்ல என்றும் சொல்லி அறிவுருத்தியிருந்தாள். அதனால் செல்வி குளித்துவிட்டு சுடிதாரை அணிந்து அவிழ்த்த ஆடைகளை பக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
தூக்கிக் கட்டப்பட்ட கருங்கூந்தல், தமிழகத்து வழக்கமாய் முகத்தில் மஞ்சள் பூசி, இளஞ்சிவப்பு டாப்பும் கிளிப்பச்சை பாட்டமும் அணிந்து அழகுப் பெட்டகமாய் வெளியே வந்த செல்வியைப் பார்த்ததும் விராட்டுக்கு ஒரு நொடி தன் அம்மாவைப் பார்ப்பது போலவே இருந்தது. தன்னுடைய சிறிய வயதில் அம்மா இப்படித்தான் சிவந்த நிறத்தில் கருமையான கூந்தலுடன் ஒல்லியான தேகத்துடன் சுடிதார் அணிந்து இருப்பாள்.
நல்ல சிவந்த நிறத்தில் மஞ்சள் பூசி மங்களகரமாக வரும் செல்வியைப் பார்த்து அசந்துவிட்டான். வெளியே வந்தவள் விராட் வருவதைப் பார்த்து சிநேகமாய் சிரித்துவிட்டு பக்கெட்டுடன் விடுவிடுவென்று கீழே இறங்கிப் போனாள்.
‘அண்ணி அழகாதான் இருக்காங்க! ஹூம்.. நல்ல பாம்பு கூட பாக்கறதுக்கு அழகாதான் இருக்கும்!’ என்று நினைத்துக் கொண்டு குளிக்கப் போனான்.
கீழே வந்த செல்வி, சமையலில் உதவி செய்ய சமையலறைக்குப் போனாள். தீபிகாவும் கௌரியுமே முக்கால்வாசி முடித்து விட்டதால், இவள் செய்ய பெரிதாக ஒன்றுமில்லை. அதனால் ஒன்றும் செய்யாமல் தன சித்தியுடன் அமர்ந்திருந்தாள். குளித்துவிட்டு வந்த சூரஜ், தன்னுடைய கைபேசியில் ஏதோ அழைப்பு வர, அதில் மூழ்கிவிட்டான்.
மற்றவர்கள் ஒவ்வொருவராய் சென்று குளித்துவிட்டு வந்தனர். விராட் கீழே வரும்போது செல்வி ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு அவளை முறைத்தபடி தன் தங்கையை தேடினான். அவள் சமையலறையில் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் தன் அண்ணனை தேடினான். அவன் தன் கைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ‘இவனுக்கும் பொறுப்பில்ல.. இவன் கட்டிக்கிட்டு வந்த பொம்பளைக்கும் பொறுப்பில்ல..’ என்று நினைத்துக் கொண்டான்.
அதற்குள் சமையல் முடிந்துவிட்டதால் கௌரி அனைவரையும் சாப்பிட அழைத்தாள். பரிமாறுவதற்கு உதவி செய்ய செல்வி நிற்க, புது மருமகள் மகனோடு ஜோடியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறி கௌரியும் தீபிகாவும் பரிமாற எல்லாரும் உணவருந்தினர். எல்லாரும் சாப்பிட்டபின், செல்வியும் சூரஜும் பரிமாற கௌரியும் தீபிகாவும் சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டபின் எல்லாரும் சிறிது நேரம் இளைப்பாறுவதற்காக சாய்ந்தனர்.
செல்விக்கு தூக்கம் வரவில்லை. எப்போதும் மதியம் தூங்கிப் பழகாததால் என்ன செய்யலாம் என்றெண்ணி தீபிகாவிடம், பேச போனாள்.
"என்ன பாபி.. ஏதாவது வேணுமா?"
"ம்.. இங்க.. வீட்டு வேலைக்கு யாராவது வருவாங்களா.."
"ஹாங்.. பாபி.. ஈவ்னிங் வருவாங்க.." என்று கொட்டாவி விட்டபடியே சொன்னாள் தீபிகா.
"ஓ.. ஓகே.. யூ டேக் ரெஸ்ட்.." என்று கூறிவிட்டு செல்வி கீழே இறங்கிப் போனாள். சூரஜ் தன்னுடைய மடிக்கணினியில் ஏதோ குடைந்து கொண்டிருக்க, அவனருகில் சென்று அமர்ந்தாள்.
"நீ இப்போ.. என் பக்கத்தில.. வராத.. இங்கல்லாம்.. ரொம்போ.. ஸ்ட்ரிக்ட்.." என்று கூறி அவளை அங்கிருந்து செல்லும்படி கூறினான்.
"ஹையோ.. அப்ப.. நா எங்க இருக்கணும்.. என்று கேட்க, அதற்குள் கௌரி வந்து செல்வியை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.
"நீ.. இங்கயே இருமா.. இப்போ சொந்தக்காரங்கல்லாம் உன் முகம் பாக்க வருவாங்க.." என்று கூறிவிட்டு அவளை புத்தாடை அணிந்து கொள்ள சொல்லி புதிய ஆடைகளை எடுத்துக் கொடுத்தாள்.
சிவப்பு நிறத்தில் பொன் ஜரிகையால் வேலைப்பாடுகள் செய்த பாவாடை, பொன்னிறத்தில் தாவணி, என்று வடநாட்டு மணமகளின் பாரம்பரிய உடையைப் பார்த்து பிரமித்துப் போனாள் செல்வி.
அவள் அந்த உடையை அணிந்து தயாராகி வர, தீபிகாவை எழுப்பி அழைத்து வந்தாள் கௌரி.
"பொறுப்பேயில்லயா சுட்கி.. இங்க எவ்ளோ வேல இருக்கு.. போ.. அண்ணிய தயார் செய்.." என்று விரட்டினாள்.
"ஒஹ்.. சாரி மா.. ரொம்ப டயர்டா இருந்துச்சு.." என்று கூறியபடியே இரண்டு மூன்று கொட்டாவிகளை விட்டாள் தீபிகா.
"சரி.. சரி.. எல்லாரும் வர நேரமாச்சு.. வேலைய பாரு.." என்று சொல்லிவிட்டு கௌரி அறையை விட்டு வெளியேற, தீபிகா செல்விக்கு அலங்காரம் செய்து தயார் செய்தாள். கூடவே இப்போது என்ன சடங்கு என்பதைப் பற்றியும் விளக்கினாள்.
"பாபி.. இப்ப எல்லாரும் புது மருமக முகத்தை பாக்க வருவாங்க.. உங்க முகத்தை நீங்க இந்த முக்காடுல மறைச்சு வெச்சுருக்கணும்.. உங்க கைல ஏதாவது ஒரு கிப்ட் குடுத்து, உங்க முகத்தை பாத்துட்டு வாழ்த்திட்டு போவாங்க.. சரியா.. இந்த சடங்குக்கு, மூஹ் திக்காய்.. அப்டின்னு பேரு.. அதாவது, முகம் காட்டும் சடங்கு.." என்று விளக்கினாள்.
செல்வி கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
தீபிகா சொல்லியபடி பொன்னும் சிவப்பும் சேர்ந்த தாவணியை தன் தலையுடன் சேர்த்து முகத்தை மறைப்பது போல போட்டுக் கொண்டாள். நல்லவேளையாக அந்த அறையில் ஏசி இருந்ததால் பிழைத்தாள்.. இல்லையெனில் வியர்த்து வழிந்திருப்பாள்.. 'ச்சே.. ஹிந்திக்கார கல்யாண பொண்ணுங்கல்லாம் ரொம்ப பாவம்.. எவ்ளோ நேரம் இப்டியே மூஞ்சிய மூடிக்கிட்டு உக்காந்திருப்பாங்க.. மூச்சு முட்டி செத்துடுவாங்க போல..' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
முதலில் கௌரி வந்து மருமகளின் கையில் பரிசு கொடுத்து அவள் முகம் பார்த்து வாழ்த்திவிட்டு,
"எல்லாரும் வந்து போற வரைக்கும் முகத்தை மூடியே வெச்சிக்கோம்மா." என்று அறிவுறுத்திவிட்டுப் போனாள்.
கௌரி சொன்னது போல உறவினர்கள் வரத் தொடங்கிவிட்டனர். வந்தவர்கள் எல்லாம் செல்வியை வாழ்த்த தான் செய்தாலும், செல்விக்கு மூச்சு விட முடியவில்லை. குனிந்தே இருந்து கழுத்து வலி வந்துவிட்டது. ‘இது என்னடா கொடுமை..’ என்று மனதுக்குள் கதறவே தொடங்கிவிட்டாள். கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவெனில், அதன் பின்பு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அவள் சூரஜை பார்க்கவே முடியவில்லை. அது செல்விக்கு இன்னும் அதிக வருத்தத்தை கொடுத்தது.
தன்னருகில் களைப்பாய் அமர்ந்திருந்த தீபிகாவிடம்,
"இது எப்ப முடியும் சுட்கி.." என்று கேட்டாள்.
"அவ்ளோதான் பாபி.. எல்லாரும் வந்துட்டாங்கன்னு நெனக்கிறேன்.. இருங்க.. அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்.." என்று போனவள், அரை மணி நேரம் கழித்தே வர, செல்விக்கு கொடுமையாய் இருந்தது.
அருகில் சித்தியும் இல்லாமல், மிகவும் நொந்து போனாள்.
ஒரு வழியாய் இந்த முகம் காட்டும் சடங்கு முடிய, ஹப்பாடாவென்று தன முக்காடினை எடுத்தாள்.
சரியாய் அப்போது விராட் அந்த அறைக்குள் நுழைய, ஏசி அறையிலும் வியர்த்து வழிந்தபடி முக்காடின்றி இருக்கும் அண்ணியின் முகத்தை பார்த்துவிட்டு, அவளை கோபமாக முறைத்து விட்டு, விருட்டென்று வெளியேறினான்.
‘இவன் எதுக்கு இப்ப என்ன மொறைக்கறான்..’ என்று செல்விக்கு குழப்பமாக இருந்தது.
‘அண்ணி நிஜமாவே நல்லவங்களா? இல்ல நல்லவங்க மாதிரி நடிக்கறாங்களா? இல்ல.. நல்லவங்க இல்ல.. கண்டிப்பா நடிக்கறாங்க.. எனக்கு தெரியாதா.. இவங்க ஒரே நாள்ல எல்லார் கிட்டயும் நல்ல பேர் எடுக்கணும்னு ட்ரை பன்றாங்க.. நல்ல பேர் எடுத்து இந்த வீட்ல தன்னோட ஆட்சிய செலுத்த நல்ல ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போடறாங்க..’ என்று விராட் நினைத்துக் கொண்டான்.
எல்லாரும் கலைந்து சென்ற பின், சூரஜ் தன் மனைவியை பார்க்க வந்தான்.
இவ்வளவு நேரம் இருந்த களைப்பெல்லாம் மறைந்தது போல உணர்ந்தாள் செல்வி.
சூரஜின் அவளருகில் வந்து அமர்ந்தான். அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
"ரொம்ப தேங்க்ஸ்! ஆனா ரொம்ப ஸாரி!"
"தேங்க்ஸும் வேணாம்! ஸாரியும் வேணாம்! உங்க லவ் மட்டும் போதும்!"
"இல்ல டமில்! வந்து..!"
"கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. ம்ச்.. பரவால்ல.. என் ஒரே வருத்தம்.. நீங்க என் பக்கத்தில இல்லங்கறதுதான்.. " ஆங்கலத்திலும் தமிழிலும் கலந்து சொன்னாள்.
"நீ.. இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்க.." என்று கூறி அவள் கைகளில் முத்தமிட்டான். அவளும் அவன் கைகளில் முத்தமிட்டாள்.
"சரி! நாளைக்கு ஈவ்னிங் நம்ம ரிசப்ஷன். அது முடிஞ்சதும் நாளை மறுநாள் எங்க கிராமம். அதுக்கு நெக்ஸ்ட் டே நம்ம ரெண்டு பேரும் ஹனிமூன் போறோம். டென் டேஸ்! அந்த டென் டேஸ் எப்ப வரும்னு நான் வெயிட் பண்றேன்! ம்!" கிசுகிசுப்பாய் அவளிடம் கூறி சிரித்தான்.
"ம். இன்னும் ரெண்டு நாள்ல வரும்!" அவனைப் போலவே கிசுகிசுப்பாய் அவனிடம் கூறி சிரித்தாள்.
"டென் டேஸும் புது யோகாதான்! ஹூம்! ஐ ஆம் வெய்ட்டிங்!" சொல்லி சிரித்தான்.
வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. கண் நிறைய காதலுடன் அவளையே பார்த்தான். அவள் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.
திரும்பவும் இருவரும் கைகளில் முத்தமிட்டுக் கொண்டனர்.
"பையா!" என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்த விராட் இருவரும் அருகருகே அமர்ந்து கையைப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்டு,
"ஸாரி! ஸாரி!" என்று கூறிவிட்டு வெளியே நின்றான். ‘ம்க்கும்.. ஆரம்பிச்சுட்டா.. பெரிய வித்தக்காரியா இருப்பா போல..’ என்று மனதுக்குள் செல்வியை நினைத்து கடுத்துக் கொண்டான்.
"விராட்! அந்தர் ஆவோ!" என்று குரல் கொடுத்தான் பெரியவன். செல்வி உடனே எழுந்து தள்ளி அமர்ந்து கொண்டாள்.
தயங்கியபடி உள்ளே வந்து அண்ணியைப் பார்க்காமல் அண்ணனை மட்டும் பார்த்து பேசினான்.
"நாளைக்கு ரிசப்ஷன்க்கு போக ஒரு கார், ஒரு வேன் போதும்தானே! ரெண்டு கார் வேண்டியிருக்குமா?"
"சரி வா!" என்று எழுந்து தம்பியின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, செல்வியைப் பார்த்து,
"சரி! நிறைய வேலையிருக்கு! நீ ரெஸ்ட் எடு! நான் வரேன்!" சொல்லிவிட்டு நிற்காமல் தம்பியுடன் வெளியே சென்றுவிட்டான்.
செல்வி, என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே சோபாவில் அமர்ந்திருக்க,
"பாபி! ஐ ஆம் கண்மணி அலைஸ் பிங்கி!" என்று சொல்லிக் கொண்டு ஒரு சிறுமி உள்ளே வந்தாள். செல்வி அவளை வியப்புடன் பார்த்தாள்.
நங்கையவள் புது இடம் சென்றாள்!
மன்னவனின் இல்லத்தில்
திருமகளாய் நுழைந்து விட்டாள்!
பிறந்த வீட்டுப் பெருமைகளைப்
பாங்குடனே எடுத்துச் செல்வாள்!
பெரியோரை மதித்து நிற்பாள்!
மன்னவனின் உடன் பிறந்தோர்
மனங்களையும் வென்றிடுவாள்!
அன்பால் ஆட்சி செய்திடுவாள்!
தவறான எண்ணம் ஒன்று
உடன் பிறந்தான் உள்ளத்தில்
ஒளிந்திருந்து உறுத்தி நிற்க
நிலைமை மாறி விடும்!
உண்மை நாளை வெளியாகும்!
உண்மைக்கு வெற்றி நிச்சயமே
தோல்வியுற்று வீழ்வதில்லை!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?