Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 7
"பாபி! ஐ ஆம் கண்மணி அலைஸ் பிங்கி!" என்று சொல்லிக் கொண்டு ஒரு சிறுமி உள்ளே வந்தாள். செல்வி அவளை வியப்புடன் பார்த்தாள்.
"ஹாய்! நீ தமிழா! கண்மணின்னு பேர் வெச்சிருக்கியே?" தமிழிலேயே கேட்டாள்.
"நோ! நோ! நோ டமில்!" என்றாள் சிறியவள்.
ஹூம்.. மறுபடியுமா? என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
"தமிழ் தான்! ஆனா இப்ப தமிழ் இல்ல!" என்று தமிழிலேயே கூறிக் கொண்டு ஒரு பெரியவள் வந்தாள்.
அவளைப் பார்த்ததும் தீபிகா சொல்லிக் கொடுத்தது போல அவசரமாகத் தலையில் முக்காடினை போட்டுக் கொண்டாள் செல்வி. இவளுடைய பதட்டத்தைப் பார்த்த அந்த புதியவள்,
"டென்ஷன் வேண்டாமா.. ரிலாக்ஸ்.." என்று சொல்லி அவளுடைய முகத்தைப் பார்த்து திருஷ்டி வழித்து விட்டு அருகிலிருந்த லட்டு தட்டிலிருந்து ஒரு லட்டுவை எடுத்து செல்விக்கு ஊட்டினாள்.
செல்வி அதனை மெதுவாய் வாங்கிக் கொண்டாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்தால் ஹிந்திக்காரி போல் இருக்கிறாள். ஆனால் தமிழில் பேசுகிறாளே என்று வியந்தாள் செல்வி.
"தமிழ்ச்செல்வி! நான் யமுனா! பக்கத்து வீட்ல குடியிருக்கேன். இவ என் பொண்ணு, பேர் கண்மணி! இப்ப பிங்க்கி!" என்று தன்னைப்பற்றி தமிழில் அறிமுகம் செய்து கொண்டு தன்னைப்பற்றி கூறினாள்.
யமுனா மும்பை அரசு பொது மருத்துமனையில் நர்ஸாக பணியாற்றுகிறாள். அவளுடைய கணவன் செந்தில் போலீசில் வேலை செய்யும்போது ரௌடிகளால் தாக்கப்பட்டு இறந்து போனான். இவர்களுக்கு ஒரு மகள் கண்மணி. ஒன்பதாவது படிக்கிறாள். செந்தில் இறக்கும்போது கண்மணிக்கு ஐந்து வயதிருக்கும். யமுனா ஹிந்திகாரி! செந்தில் தமிழன். அதனால் மகளுக்கு கண்மணி என்று தமிழ்ப் பெயர் வைத்தான். ஆனால் கூப்பிட்டு மகிழ அவன் இல்லை என்பதால் கண்மணி பிங்கியாகிப் போனாள். கணவன் வீடு மதுரை. அவர் இருக்கும் போதே பிடிக்காது. இப்போது இல்லை என்பதால் மாமியார் இவளை சேர்த்துக் கொள்ளவில்லை. இருக்கும் ஒரே சொந்தம் தன்னுடைய தாய் என்பதால் மும்பையில் இருக்கும் தாயிடமே வந்து விட்டாள். அந்தத் தாயும் இப்போது இல்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பே போய்ச் சேர்ந்து விட்டார். இப்போது சொந்தம் என்றால் தீன்தயாளும் அவர் குடும்பத்தவரும்தான் என்றாள் யமுனா.
செல்வி யமுனாவிடம் பாசமாகப் பேசினாள்.
"அப்ப நீங்க எனக்கும் சொந்தம்னு சொல்லுங்க!"
"ரொம்ப சந்தோஷமா இருக்கு! எங்க என் மாமியார் வீட்டு ஆளுங்க மாதிரி இருப்பியோன்னு நெனச்சேன்!" என்று வெளிப்படையாய் பேசினாள்.
ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள் செல்வி.
"சரி! நான் வரேம்மா!" என்று யமுனா கிளம்பினாள்.
"சரி அக்கா! அக்கான்னு கூப்பட்லாம்ல!"
"கூப்டுமா!"
"தேங்க்ஸ்க்கா!"
"சரி வரேம்மா!" கிளம்பினாள். பிங்கி சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறி செல்வியுடன் இருந்துவிட்டாள்.
பிங்கி செல்வியுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். பாபி பாபி என்று வளவள வென்று எதையாவது கேட்டுகொண்டே இருந்தாள். செல்வி அவளுக்கு பதில் சொல்லியபடியே இருந்தாள்.
அப்போது சூரஜும் விராட்டும் உள்ளே வந்தனர்.
"சூரஜ் பையா! பாபி பஹுத் கூப்சூரத்தி ஹைன்!" என்று சொல்லிக் கொண்டே ஓடிப் போய் அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டாள் சிறுமி.
"ஹே பிங்கி! தும் ஹீ உன்ஸே பஹுத் கூப்சூர்த்தி ஹோ!" என்றான் சூரஜ்.
"பையா!" செல்லமாய் சிணுங்கியபடி சிறுமி ஓடிப் போனாள்.
ஹிந்தி அரைகுறையாய் தெரிந்திருந்தாலும் அவர்கள் வேகமாகப் பேசியதால் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் விழித்தாள் செல்வி. விராட்டுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அவன் ஒன்றும் பேசாமல் ஹாலுக்குப் போனான். அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.
இரவு உணவுக்குப் பிறகும் அனைவரும் உறங்காமல் ஒரே பேச்சும் சிரிப்புமாக அன்றைய இரவு கழிந்தது. கௌரியும் அவளுடைய சொந்தக்காரர்களும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள்.. அதற்கு நேர்மாறாக தீன்தயாளும் பூங்குழலியின் கணவன் கீர்த்திவாசனும் படுத்ததும் உறங்கிப் போனார்கள். விராட், சூரஜ், மற்றும் தீபிகா மூவரும் ரொம்ப நேரத்துக்கு பேசிக்கொண்டே இருக்க, செல்வி மிகவும் தவித்துப் போனாள். அவளுடைய சித்தி பூங்குழலி அவளுக்குத் துணையாய் அவளுடன் இருந்தாலும், களைப்பு மிகுதியில் அவளும் உறங்கிவிட்டாள். யாரும் செல்வியிடம் பேசுவதற்கு இல்லாமல், புதிய இடத்தில் உறக்கமும் வராமல், வெகு நேரம் தவித்துவிட்டு, பின்னர் ஒருவழியாய் உறங்கிப் போனாள்.
மறுநாள் எதிர்பார்த்தபடி செல்வியின் பெற்றோரும் ஆனந்தியும் வந்தனர். தாய் தந்தையைப் பார்த்ததும் செல்வியின் முகம் அனிச்சையாய் மலர்ந்தது.
கௌரி,
"ஆயியே! ஆயியே!" என்று வாய் நிறைய கூப்பிட்டு வரவேற்று உபசரித்தாள்.
இன்னும் சில சொந்தக்காரர்கள் வந்தனர். பிங்கி பாபி பாபி என்று சுற்றிச் சுற்றி வந்தாள். ஆனந்தியும் தீபிகாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். விராட் ஆனந்தியை பார்க்காதது போல பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தான். வீடு முழுவதும் சொந்தங்களின் கூட்டம் ஜேஜேவென்று இருந்தது. வரவேற்புக்கு கேட்டரிங்க் செய்பவர்களையே அன்று முழுவதுக்கும் வீட்டுச் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்துவிட்டிருந்தபடியால் வேலை என்று பெரிதாக எதுவுமில்லாமல் எல்லாருமே நிதானமாக வரவேற்புக்குத் தயாராகினர்.
வரவேற்பின் போது சரியாக ஆனந்தன் வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தான்.
"டேய்! நீ வரமாட்டேன்னு சொன்ன?! வந்திருக்க? என்னடா விஷ்யம்?" ஆனந்தி ரகசியமாக அவனைத் துருவினாள்.
"ஏய்! எங்கக்கா ரிசப்ஷன் நான் இல்லாமலா? போடி!" என்று தங்கையிடம் சொன்னான். ஆனால் மனதுக்குள், ‘எல்லாம் என் தேவதையப் பாக்கதான்டி வந்தேன்’ என்று நினைத்தான். அப்போது அவன் தேவதை என்று நினைத்த தீபிகா வந்து,
"ஹாய்! ஆனந்த்! வெல்கம்!" என்று கூறி சிரித்தாள்.
‘ப்பா! என்ன ஒரு அழகு!’ அவனுக்கு ஆடுகளம் படத்தின் பாட்டுதான் நினைவுக்கு வந்தது! மனதுக்குள், ‘யாத்தே யாத்தே! உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்க்யளா?’ என்று பாடிக்கொண்டான்.
விராட் அங்கே வர, ஆனந்தும் விராட்டும் கைகுலுக்கிக் கொண்டு ஒருவர் தோளில் மற்றொருவர் கையைப் போட்டுக் கொண்டு பேசப் போனார்கள்.
திருமண வரவேற்ப்பில், சூரஜ் தன்னருகில் அலங்காரவல்லியாய் நிற்கும் செல்வியிடம்,
"நம்ம தம்பிங்களும் தங்கைகளும் நல்ல ஃப்ரண்ட்ஸ் ஆயிட்டாங்கல்ல?" என்று கேட்டான்.
"ம். ஆமாங்க! அவங்க எப்பவும் இதே மாதிரி நல்ல ஃப்ரண்ட்ஸா இருக்கணும்." என்றாள்.
சூரஜ் ஒரு சூரியன் போல ப்ரகாசமாய் இருந்தான். மனைவியைப் பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகையை வீச அவள் மயங்குவது போல ஜாடை காட்ட, அவள் காதருகே வந்து ரகசியமாய்க் கிசுகிசுத்தான். அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. தலை குனிந்து சிரித்துக் கொண்டாள்.
இவர்களின் காதல் லீலைகளை தள்ளியிருந்து கண்ட பெரியவர்கள் மனம் நிறைந்தது. வரவேற்பு இனிதே முடிந்தது.
அன்று இரவே செல்வியின் பிறந்த வீட்டினர் அனைவரும் கிளம்பினர். வந்திருந்த விருந்தினர் எல்லாரையும் அனுப்பிவிட்டு மண்டபத்தை காலி செய்துகொண்டு வீடு வர இரவு பன்னிரெண்டு ஆகிவிட்டது. வந்ததும் மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்து கிராமத்துக்கு கிளம்ப வேண்டும் என்பதால் அனைவருமே உறங்கச் சென்றுவிட்டனர்.
சூரஜ் படுத்ததும் தூங்கிவிட்டான். செல்விக்கு இன்றும் தூக்கம் வரவில்லை. தூங்கினால்தான் காலையில் எழுந்து கிளம்ப முடியும். அதனால் எப்போதும் செய்வது போல ஒன்று இரண்டு என்று எண்ணத் தொடங்கினாள். ம்ஹூம். தூக்கம்தான் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.
‘இந்த வீட்டுல என்னால சத்தியமா குடித்தனம் நடத்தவே முடியாது.. கடவுளே.. சீக்கிரமா சென்னைக்கு போய்டணும்.. சாமி.. என்ன எப்படியாவது சென்னைக்கு அனுப்பிடுப்பா.. முருகா..’ என்று குழந்தை போல வேண்டிக்கொண்டாள்.
ஆனால் விரைவிலேயே அவள் இந்த வீட்டில் வந்து குடித்தனம் நடத்தப் போகிறாள் என்பது அவளுக்கு இப்போது தெரிய நியாயமில்லை.
விடியற்காலை எழுந்து தயாராகி கிராமத்துக்கு சென்று குலதெய்வம் கோவிலில் நேர்த்திக் கடனை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர இரவு எட்டு மணியானது. மறுநாள் புதுமணத்தம்பதி ஹனிமூன் கிளம்புகிறார்கள். தீபிகா ஹாஸ்டலுக்கு செல்கிறாள். விராட்டுக்கு எஸ் ஐ ஆக பக்கத்து ஊரிலேயே போஸ்டிங் ஆடர் வந்துவிட்டது. அவன் நாளை வேலையில் சேரவிருக்கிறான். எல்லாவற்றையும் நல்லபடியாக வைக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வணங்கிவிட்டு வந்தார்கள். ஆறு பேரும் வசதியாய் சென்று வர வண்டி ஏற்பாடு செய்திருந்த போதும் எல்லாருக்கும் உடல் அசந்துவிட்டது. வீட்டுக்கு வந்ததும் அனைவரும் அப்படியே படுத்தனர். வரும் வழியிலேயே இரவு உணவை முடித்துக் கொண்டு வந்துவிட்டதால் எல்லாரும் தூங்கப் போனார்கள்.
மறுநாள் திட்டமிட்டபடி ஒவ்வொருவராக கிளம்பினார்கள். முதலில் விராட் கிளம்பினான். எல்லாரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
"ஆல் த பெஸ்ட் விராட்!" இது சூரஜ்.
"ஆல் த பெஸ்ட் விராட் பையா!" இது தீபிகா.
இருவருக்கும் தேங்க்ஸ் என்று கூறி பல்ஸரை உதைத்தான்.
"விராட்ஜி! ஆல் த பெஸ்ட்!" செல்வி கொழுந்தனை வாழ்த்தினாள்.
"ஷுக்ரியா.. பா.. பி!" என்றான் வேண்டா வெறுப்பாக.
"ம்.ஷு..க்ரி...யா! விராட்ஜி!" கவனமாக உச்சரித்தாள்.
எல்லாருக்கும் சிரித்து கையசைத்து டாட்டா காட்டிவிட்டு கிளம்பினான்.
அடுத்த அரைமணியில் தீபிகா கிளம்பினாள்.
"பை பையா! பை பாபி!"
"பை!"ஒரே குரலில் கூறினர்.
டாட்டா காட்டிவிட்டு கால்டாக்ஸியில் கிளம்பினாள்.
அடுத்த அரைமணியில் சூரஜ் செல்வி இருவரும் தேன்நிலவுக்கு கிளம்பினார்கள்.
மதேரான் என்ற இடத்துக்கு வந்து சேர பல மணி நேரங்கள் ஆனது. அது மும்பைக்கு அருகில் இருக்கும் அழகான மலைப் பிரதேசம். நம் ஊர் ஊட்டி போல அங்கும் மலை ரயில் மிகவும் பிரபலம். மும்பையிலிருந்து நேரல் என்ற ஊருக்கு ரயிலில் வந்து நேரலில் இருந்து மலை ரயிலில் மதேரான் வரலாம். வேறு வகையான போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. ஊருக்குள்ளும் குதிரை சவாரி செய்தோ அல்லது கைரிக்ஷாவிலோதான் சுற்றிப் பார்க்க முடியும். பார்ப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகான ஊர். இந்தியாவின் மிகச் சிறிய மலைப் பிரதேசம் என்று பிரசித்தி பெற்றது மதேரான்.
அங்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு சென்று செக் இன் செய்து ரூமுக்கு வந்து குளித்து உணவருந்திவிட்டு அருகில் சென்று வரலாம் என்று கிளம்பினார்கள். எழில் கொஞ்சும் மலையின் அழகை கண்குளிர ரசித்து மகிழ்ந்தனர்.
தேன்நிலவுத் தம்பதியர் இருவரும் சந்தோஷத்தின் அர்த்தத்தை உணரத் தொடங்கினர்.
இரண்டாவது நாள் ஒரு பாயின்டை பார்த்துவிட்டு வந்து அங்கிருந்த சிறிய சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள். திடீரென்று அவன் கேட்டான்.
"உன்கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணும்னு நெனச்சிட்டிருந்தேன்!" அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
"என்ன சூரஜ்?"
"நீ என்ன லவ் பண்றன்னு எப்டி தெரிஞ்சிகிட்ட? உனக்கு எப்ப தெரிஞ்சிது?"
"ஏன் கேக்கறீங்க?"
"உங்கப்பா சொன்னார், நீ இது மாதிரி ஃபீல் பண்ணின உடனேயே அவர்ட்ட சொல்லிட்டியாமே! அதான் எப்டின்னு கேக்கணும்னு நெனச்சேன்!"
"ம். அப்பா நிறைய மாப்பிள்ளைங்களோட போட்டோஸ் காட்னாரு! எனக்கு எதுவுமே பிடிக்கல. அம்மா ஏன் இப்டி பண்றன்னு கேட்டாங்க! தனியா உக்காந்து யோசிச்சேன். ஆனா அப்பவும் புரில. ஒருநாள் காதுகிட்ட நீங்க டமில் டமில்னு கூப்பட்ற மாதிரியே தோணிகிட்டு இருந்தது. எங்க திரும்பினாலும் உங்க சிரிச்ச முகம்தான் தெரிஞ்சுது. யாராவது தமிழ்னு கூப்ட்டாலும் டமில்னு நீங்க கூப்பட்ற மாதிரியே இருக்கும். என்னடா இது இப்டின்னு நெனச்சி டிவி போட்டா, டிவில ஒரு பாட்டு. அப்டியே என் மனச என்கிட்ட தெறந்து காட்ற மாதிரி இருந்தது. அப்றம்தான் புரிஞ்சிது. உடனே ஓடி வந்து உங்கள பாக்கணும் பேசணும்னு ஆசை! ஆனா ஆசைய வளத்துக்கவும் பயமா இருந்தது. அப்பாவ மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. அதான் அப்பாகிட்ட சொன்னேன். ஒரு வேள அவர் ஒத்துக்கலன்னா கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு நெனச்சிகிட்டுருந்தேன்.!" சொன்னவளை அணைத்துக் கொண்டான்.
"அது சரி! நீங்க சொல்லுங்க! நீங்க எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?
"உன்ன முதல் முதலா உங்க ஸ்கூல்ல பாத்ததுமே பிடிச்சி போச்சு. அப்பவே மிஸஸ் நாராயணிகிட்ட உன் நம்பர வாங்கிட்டேன். ஆனா உன்கிட்ட சொல்ல பயம்! அப்றம் கோவில்ல வெச்சுப் பாத்த அன்னிக்கு என்னால தூங்கவே முடியல. எங்க திரும்பினாலும் நீதான் நிக்கற! இது என்னடா வம்பா போச்சின்னுதான் தமிழ் கத்து தரயான்னு மெஸேஜ் பண்ணினேன். ஒரு வேள நீ மாட்டேன்னு சொல்லியிருந்தா எனக்கு ப்ராஜக்ட்ல கொஞ்சம் ஹெல்ப் பண்றியான்னு கேட்ருப்பேன். நீ தமிழ் க்ளாஸ்ல ரொம்ப கண்ணியமா நடந்துகிட்ட! அது வேற எனக்கு இன்னும் பிடிச்சி போச்சு. ஆனா உன்ன மாதிரியே எனக்கும் எங்க அம்மா ஒத்துக்கணும்னு நெனச்சேன். அதான் நேரா மும்பை வந்து அம்மாவ கேட்டேன். அவங்க ஒத்துலன்னா நானும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னுதான் நெனச்சுகிட்டிருந்தேன்.!"
அவள் சிரித்துக்கொண்டாள்.
"ஆனா நம்ம எங்கேஜ்மென்ட்க்கு அப்றம்தான் மனச கன்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருந்தது. உனக்கு ஹிந்தி சொல்லிக் குடுக்கும்போது எப்டி தவிச்சேன் தெரியுமா? ஒரு கண்ணசைவு கூட காட்ட முடில! அம்மையார் படிப்புல கெட்டி! என்ன பண்றது? நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்!" அவன் சொன்னான்.
"ஆமா! இங்க மட்டும் என்னவாம்? ஒரு நாள் என்னாச்சு தெரியுமா? கண்ணமூடி தூங்கினா, நீங்க வந்து கன்னாபின்னான்னு கட்டிப்பிடிச்சி முத்தம் குடுக்கறீங்க! தூக்கம் போச்சு! சரி தூக்கம் வர வரை டிவி பாக்கலாம்னு டிவி போட்டா டிவில ஒரே காதல் பாட்டு! சரின்னு ஹிந்தி கத்துப்போம்னு ஹிந்தி சேனல் மாத்தினா அமிதாப் பச்சன் படம். அதுல அவர் பேரு சூரஜ். ஹீரோயின் சூரஜ் சூரஜ்னு கொஞ்ச, இவரு அந்தம்மாவ கட்டிப் பிடிச்சு முத்தமா குடுக்கறாரு! ஒரே ரொமான்ஸ்! எனக்கு ஹையோன்னு ஆயிடுச்சு! பேசாம உங்களுக்கு போன் போடலாமான்னு கூட நெனச்சேன்!" என்றாள்.
"இதேதான் எனக்கும் நெறைய நாள் தோணிருக்கு! பேசாம உங்க வீட்டுக்கே கிளம்பி வந்திடலாமான்னு நெனச்சிருக்கேன்! எல்லாத்துக்கும் சேத்து வெச்சு நம்ம ஆசையெல்லாம் தீத்துக்கணும்!" என்றான் அவன்.
ஒருவர் மனதை ஒருவர் அறிந்தனர். இருவரும் சிரித்துக்கொண்டனர்.
"சரி! அது என்ன பாட்டு! எனக்காக ஒரு வாட்டி பாடேன்! ப்ளீஸ்!"
அவள் பாடினாள்.
"
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
...
ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நாணம் மின்னுங்கும் மேல
"
அவள் பாடுவதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் வந்து நின்று கேட்டனர். அவள் பாடி முடித்ததும் எல்லாருமே கைதட்டினார்கள். அவள் நாணத்தோடு எல்லாருக்கும் நன்றி கூறினாள்.
"எல்லாரும் பாராட்றாங்க! நீங்க ஒண்ணுமே சொல்லலியே சூரஜ்! பாட்டு நல்லா இல்லியா?"
"சொல்றேன்! வா!"
எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பினார்கள்.
அறைக்கு வந்ததும் சூரஜ்,
"நீ பாடின பாட்டுக்கு எல்லாரும் கை குடுத்தாங்க! நான் என்ன தரப்போறேன் தெரியுமா?" கேட்டுக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டு முத்தமழை பொழிந்தான். இது உன் பாட்டுக்கு! இது உன் மனசுக்கு! இது நீ பேசற பேச்சுக்கு! என்று எல்லாவற்றுக்கும் முத்தம்தான். விடிய விடிய காதலில் திளைத்தனர். அன்று மட்டுமல்ல தொடர்ந்து வந்த நாட்களும் ஒருவருடன் ஒருவர் பசை போடாமல் ஒட்டிக் கொண்டனர். பூட்டி வைத்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டனர்.
பத்து நாளும் உல்லாசமாக ஊரைச் சுற்றிப் பார்த்தார்கள். பார்ப்பதற்கு நிறைய பாயிண்டுகள் இருந்தது. எல்லாவற்றையும் பொறுமையாக பார்த்தார்கள். சில சமயம் குதிரை சவாரி செய்தார்கள். சில சமயம் கைரிக்ஷாவில் சுற்றினார்கள்.
ஒவ்வொரு இடத்தையும் பற்றி சூரஜ் நிறைய சொன்னான். சூரஜ் சொல்ல செல்வி ஆர்வமுடன் கேட்டாள். இருவரும் நிறைய பேசினார்கள். நிறைய கொஞ்சினார்கள். சின்ன சின்ன விஷயத்தையும் ரசித்துவிட்டு ரசித்தவற்றுக்காக ரூமில் வந்து முத்தமிட்டுக் கொண்டார்கள். இந்த முத்தம் மஞ்சப்பூவுக்காக! இந்த முத்தம் குட்டிப் பொண்ணுக்காக! இந்த முத்தம் அந்த லேடியோட அழகான முடிக்காக! என்று ரசித்தவற்றை கணக்கு வைத்து கணக்கில்லாமல் முத்தம் கொடுத்துக் கொண்டார்கள். கூடிக் களித்தார்கள். காதலில் பெறுவது மட்டும் மகிழ்ச்சியல்ல! தருவதும் மகிழ்ச்சிதானே! நிறைய பெற்று நிறைய தந்து நிறைய காதல் செய்தார்கள். இருவர் உள்ளமும் இனிக்க இனிக்க தேன்நிலவு கொண்டாடிவிட்டு மும்பை திரும்பினர்.
மன்னவனும் தன் நங்கையவள்
கரம் கோர்த்து நின்றான்!
தன்வீட்டு உறவுகளை நண்பர்களை
எதிர்கொண்டு வரவேற்றான்!
வாழ்த்துகள் பல நல்லாசிகளுடன்
மகிழ்வுடனே ஏற்று நின்றான்!
தித்திக்கும் தேனிலவில் மூழ்கித்
திகட்டாத இன்பத்தில் திளைத்திட
மன்னவனும் அழகு மங்கையுமே
மகிழ்ச்சியுடன் சென்றனரே!
புதிய அறிமுகங்களின் வரவேற்பில்
புதிய ஜோடிகள் திரை மறைவில்!
காதல் நாடகங்களின் அரங்கேற்றம்
காலமும் நாளை நிறைவேற்றும்!
- C. புவனா
- காதலின் மொழி என்ன?