கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

8. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 8

மும்பை வந்து இரண்டு நாட்கள் கழித்து மாமியார், மாமனார், கொழுந்தன், யமுனா அக்கா, பிங்கி எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்னை திரும்பினர்.

சென்னையில் செல்வி வீட்டுக்கு வந்தார்கள். குளித்து சாப்பிட்டு தயாராகினார்கள்.

செல்வி இப்போது செய்து கொண்டிருக்கும் பள்ளி வேலையை விட்டு விட்டு சூரஜின் நிறுவனத்திலேயே வேலைக்கு சேரலாம் என்று இருவரும் ஏகமனதாக முடிவு செய்து கொண்டனர். அதனால் செல்வியின் வருமானமும் சேர்ந்து குடும்ப பாரத்தை சுமப்பதில் சிரமம் இருக்காது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். சென்னை வந்திறங்கியதுமே அதனை செயல்படுத்த இருவரும் சூரஜின் நிறுவனத்துக்கு சென்று வேலைக்கு விண்ணப்பிக்க நினைத்தனர்.

"அம்மா! நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய போயிட்டு அப்படியே வீடு ஏதாவது கிடைக்கிதான்னு பாத்துட்டு வரோம். லஞ்ச் பத்தி தெரியாது. அப்டி வேணும்னா போன் பண்றேம்மா!"

"சரிம்மா!"

"பை! அத்தை!"

"பை! மாப்ள!"

சூரஜ் செல்வியின் ஸ்கூட்டியில் அவளை அழைத்துக் கொண்டு தன் கம்பெனிக்குச் சென்றான். அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அவன் மிகவும் எதிர்பார்த்த பயிற்சியுடன் கூடிய பணியுயர்வுக்கு அவனை தேர்ந்தெடுத்திருந்த்தார்கள். ஒரு வாரத்தில் யூஎஸ் கிளம்ப வேண்டும். இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் வரும் என்று நினைத்த பணியுயர்வு உடனடியாக கிடைக்கவும் கணவன் மனைவி இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அதே நேரத்தில் கொஞ்சம் குழப்பமும் ஏற்பட்டது! சூரஜ் பணியுயர்வை ஏற்று கையெழுத்திட்டு விட்டு வந்தான்.

அருகில் இருந்த காபி ஷாப்பில் இருவரும் அமர்ந்தனர்.

"திஸ் இஸ் ரியலி க்ரேட்! பட் உன் வேலைக்கு அப்ளிகேஷன் போடலாமா வேண்டாமா?"

"எனக்கும் குழப்பமாதான் இருக்கு!"

"சரி! எங்க கம்பெனில அப்ளிகேஷன் போட்டு வெப்போம்! வந்தா வரட்டும்!"

காபியை அருந்திவிட்டு அவன் அலுவலகத்துக்குச் சென்றார்கள். விண்ணப்பத்தைக் கொடுத்தார்கள். ஏதாவது வேலை காலி இருந்தால் சொல்லச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார்கள். அப்பாவும் வேலை முடிந்து வந்திருந்தார். அனைவரும் சேர்ந்து உணவருந்திய பின்னர் மங்கை கேட்டாள்.

"என்ன செல்வி! லஞ்சுக்கு வர மாட்டேன்னு சொன்ன! ஆனா போன வேகத்லயே வந்துட்டீங்க! எதுனா ப்ரச்சனையாம்மா?"

"இல்லமா! அதெல்லாம் ஒண்ணுமில்ல! நல்ல செய்திதான்! அவருக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு! நெக்ஸ்ட் வீக் யூஎஸ் போகணும்! நாங்க வேற ப்ளான் பண்ணினோம்! ஆனா இங்க வேற ஒண்ணு நடந்திருக்கு! அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு!"

வேலை பற்றி என்ன நினைத்தார்கள் என்று சொன்னார்கள். சரி செல்வி சென்னையில் பள்ளி வேலைக்குப் போய்க்கொண்டு தொடர்ந்து இங்கேயே சூரஜ் வரும் வரை அம்மா வீட்டில் இருந்து விடலாம். ஒரு வேளை கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தால் அந்த வேலையில் சேர்ந்து விடலாம். சூரஜ் யூஎஸ்ஸில் இருந்து வந்த பிறகு தனி வீடு பார்த்து கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் போகலாம் என்று முடிவு எடுத்தனர்.

கிரிதரன் இதுதான் நல்ல முடிவு என்றார். சூரஜுக்கும் இது சரியென்றே தோன்றியது. ஆனால் மங்கை,

"நீ உங்க மாமியார் வீட்டுக்குதான் போகணும். மும்பை கிளம்பு!" என்றாள்.

"என்னம்மா சொல்ற? ஏன்?"

"ஏன்னா? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சில்ல! அப்றம் ஏன் இங்க இருக்கணும்? அதுவும் அவர் வெளிநாட்டுக்கு போறார். நீ இங்க இருக்கக் கூடாது! அங்கதான் இருக்கணும்!"

"அரசி! என்னாச்சு உனக்கு? ஏன் இப்டி பேசற? அவ புருஷன் வெளிநாடு போறப்ப அவ எதுக்கு அவ மாமியாராட இருக்கணும்? இங்க நம்ம வீட்ல நம்மளோட இருக்கட்டும்!"

"இத நீங்க சொல்றீங்களா? உங்களுக்கு ஒரு நியாயம்! மத்தவங்களுக்கு ஒரு நியாயமா? நல்லாருக்கு! ரொம்ப நல்லாருக்கு!" சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள்.

"ஸாரி! மாப்ள!" கிரதரனும் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத அம்மாவா இவ்வளவு பேசுகிறாள் என்று இருந்தது செல்விக்கு. சூரஜுக்கு குழப்பம் நீடித்தது. சரி! கொஞ்சம் ஆறப்போட்டால் நல்ல முடிவு கிடைக்கும் என்று நினைத்து,

"அப்றமா பேசிக்கலாம்! நீ ரெஸ்ட் எடு! நான் தங்கியிருந்த ரூம்மேட்ஸ மீட் பண்ணிட்டு வந்திடறேன்! அப்டியே என் பைக் அங்க இருக்கு! ஃப்ரண்ட்ஸ் யூஸ் பண்ணிகிட்ருக்காங்க! போய் எடுத்திட்டு வந்திடறேன்!" சொல்லிவிட்டு எழுந்து வெளியே போனான்.

செல்வி தன்னுடைய அறைக்குப் போய் கட்டிலில் விழுந்தாள். அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. அம்மா ஏன் அப்டி சொன்னாங்க! நான் இங்க ஏன் இருக்கக்கூடாது! அப்பாகிட்ட அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசாதவங்க இப்ப இவ்ளோ கோபப்பட என்ன காரணம்! ஆயிரம் கேள்விகள் அவள் மனதில் ஓடியது!

எல்லாவற்றுக்கும் மேலாக சூரஜைப் பிரிந்து ஆறுமாதங்கள் கழிக்க வேண்டும் என்று நினைக்கும் போதே துக்கம் சுனாமி அலையாய் வந்து ஓங்கி அடித்து துன்புறுத்தியது. மும்பையில் அவர் வீட்டில் இரண்டு நாள் நைட்டும் ஒழுங்காத் தூங்க முடியல! ஒண்ணு.. ரெண்டு.. மூணுன்னு எண்ணிகிட்டே இல்ல தூக்கத்தை வரவழைச்சேன்.. அப்புறம் ஹனிமூன்ல வெச்சு இப்டி தூக்கம் வராம தவிச்சப்ப.. அவர்தானே என்ன தட்டி தூங்க வெச்சார்.. இனி ஆறு மாசத்துக்கு எப்டி தூங்கறது? பக்கத்துல இருந்து தட்டித் தூங்க வைக்க சூரஜ் இருக்க மாட்டாரே! அவர் இல்லாமல் என்னால தூங்க முடியாதது போல நா இல்லாம அவரால தூங்க முடியுமா! தூக்கத்தை விடு! அவர் இல்லாம எப்படி இருப்பேன்! எதப் பாத்தாலும் அவர் முகம் தானே தெரிது. இதோ இந்த ரூம்லதானே அவர் என் பெண்மையை முழுமையா எனக்கு உணர்த்தினார். இப்பதானே ஹனிமூன் முடிஞ்சுது.. இன்னும் எங்க இயல்பு வாழ்க்கைக்கே நாங்க திரும்பலையே! மணமாகி இன்னும் முழுசா ஒரு மாசம் கூட முடிலையே! அதுக்குள்ளயே பிரியணுமா? கடவுளே! இது என்ன சோதனை? என்றெல்லாம் ஏதேதோ எண்ணி கண்ணீர் சிந்தினாள்.

இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த செல்வியின் பாட்டி லட்சுமி அம்மாள் பேத்தியிடம் வந்து அவளருகில் அமர்ந்தார். குலுங்கிக் குலுங்கி அழும் செல்வியின் தலையை மென்மையாய் கோதினார்.

"செல்விம்மா! ம்மாடி! செல்வி!"

“.."

"இங்க பாரு கண்ணு! அழதம்மா! அழாத! நீ எதுக்கு அழறன்னு எனக்கு தெரியும்! உங்கம்மா ஏன் அப்டி சொன்னான்னு நான் சொல்றேன்! நீ எழுந்திரு!"

"பாட்டி? உங்களுக்கு தெரியுமா? சொல்லுங்க பாட்டி!" எழுந்து அமர்ந்தாள்.

"சொல்றேன்! நீ கண்ணத் தொட!"

துடைத்துக் கொண்டு, "சொல்லுங்க பாட்டி!" என்றாள்.

"முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு! நீ ஏன் இப்டி அழுத? மங்கை பேசினதுக்கு நீ இந்தளவுக்கு அழமாட்டன்னு எனக்குத் தெரியும்!"

"அது.. வந்து.. பாட்டி!" இழுத்தாள்.

"நான் சொல்லவா?"

"ம்?"

"உன் புருஷனப் பிரிஞ்சி எப்டி இருக்கறதுன்னுதானே அழுத?"

செல்விக்கு திரும்பவும் அழுகை வெடித்தது. "ஆமாம் பாட்டி! அவரப் பிரிஞ்சி எப்டி இருக்கப் போறேன்னு நெனச்சிதான் அப்டி அழுதேன்!" குலுங்கி அழுதாள்.

"சரி கண்ணத் தொடை! சொல்றதக் கேளும்மா! முதல்ல கண்ணத் தொடை! ம்!"

துடைத்துக் கொண்டாள்.

"நீ உன் புருஷன் கூட சேர்ந்து வாழணும்னுதான் அவ அப்டி சொன்னா!"

"அப்டீன்னா! எனக்கு புரியல! அவர்தான் யூஎஸ் போறாரே?"

"போயிட்டு சீக்கிரமா வரணுமா? இல்ல லேட்டா வரணுமா?"

"சீக்கரம் வரணும்னுதானே எல்லாரும் ஆசப்படுவாங்க?"

"நீ அப்டிதான் ஆசப்படுவ! ஆனா அவர் ஆசப்படணும்ல!"

"ஏன்? அவர் ஆசப்படமாட்டாரா? அவருக்கு என்ன ரொம்ப பிடிக்கும்!"

"அதுதான் எனக்கு அன்னிக்கு கோவில்ல வெச்சு பாத்தப்பவே தெரியுமே! இப்ப அது முக்யமில்ல! அவர் ஊருக்கு போனப்புறம் சீக்கிரமா திரும்பி வரணும்னா நீ உங்க மாமியார் கூட இருந்தாதான் நடக்கும். இல்லன்னா அவர் ஆறு மாச வேலைய ஒம்போது மாச வேலையா மாத்திக்குவார். ஒம்போது மாச வேலைய ஒரு வருஷ வேலையா மாத்திக்குவார்! ஆமா!"

"புரியவேயில்ல! நான் இங்க இருந்தா அவர் திரும்பி வர லேட்டாகும். மும்பைல இருந்தா சீக்ரம் வருவாரா? இது எப்டி? ப்ராஜக்ட் எவ்ளோ நாள் போட்ருக்கோ அவ்ளோ நாள்தானே ஆகும்?"

"எனக்கு உங்க கம்யூடர் புராஜெட் எல்லாம் தெரியாது. எல்லா கல்யாணம் ஆன ஆம்பளைங்க லாஜிக்தான் தெரியும்!"

"என்ன பாட்டி சொல்றீங்க? தெளிவா சொல்லுங்க!"

"இங்க பாரு செல்வி! நீ இங்க இருந்தா, கல்யாணத்துக்கு முன்னாடி எப்டி இருந்தியோ அப்டிதான் இருப்ப! கொஞ்ச நாள் அவர் இல்லையேன்னு தோணும். ஆனா நாள் ஆக ஆக பழகிடும். ஏன்னா இது நீ பழகின இடம். பழகின வேலை. முதல்ல டெய்லி போன் பண்ணுவார். அப்றம் ரெண்டு நாளுக்கு ஒரு வாட்டி! அப்றம் வாரத்துக்கு ஒரு வாட்டி! இப்டியே கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே குறைஞ்சிடும். எல்லாத்துக்கும் மேல அம்மாவும் அப்பாவும் உன் மனசு கோணாம பாவம் அவளே புருஷனப் பிரிஞ்சி இருக்கான்னு உன்ன தாங்குவாங்க! உன் புருஷனுக்கும் அவ அவம்மா வீட்லதானே இருக்கா! அவளப் பாத்துக்க அவம்மா அப்பா இருக்காங்கன்னு அவர் தன்னோட வேலையப் பாத்துகிட்டு இருப்பார். புராஜெட் லேட்டானாலும் கவலப்பட மாட்டார். ஒருவேள சீக்ரம் முடிச்சா அவங்க ஆபீஸ்ல இன்னும்தான் நாள் இருக்கேன்னு அடுத்த புராஜெட்ட குடுத்து செய்ய சொல்வாங்க! அவரும் அதுசரிதான்னு செய்வார்! இப்பதானே சம்பாதிக்க முடியும்! இன்னும் தங்கச்சி கல்யாணம் இருக்கு! தம்பி படிப்பு இருக்குன்னு தன்னோட ஆசையக் கம்மி பண்ணிக்குவார்! ஏன்னா அவர் வீட்டுக்கு மூத்த பிள்ள!"

"அப்போ நான் மாமியாரோட இருந்தா?"

"உம்மாமியாரோட இருந்தா உனக்கு அது புது இடம். பழகாத மனுஷங்க. உன் விஷயத்ல இன்னொன்னு உனக்கு தெரியாத பாஷை! அதுனால நீ கஷ்டப்படுவ! தினமும் போன் பண்ணுவ! இல்லன்னா அவர் போன் பண்ணுவார். மாமியார் நல்லவங்களா இருந்தா சீக்ரம் வாடான்னு சொல்வாங்க! ஒரு வேள உன்ன பாடா படுத்தினா உன்னப்பத்தி ஒரு மூட்ட குத்தம் சொல்வாங்க! அப்ப அவர், ஐயோ நம்ம பொண்டாட்டி பாவம்! நம்ம அம்மா கிட்ட கஷ்டப்படறா! நம்ளாலதானே! அப்டீன்னு புராஜெட்ட சரியான நேரத்துக்கு முடிப்பார்! ஒரு வேள சீக்ரம் முடிச்சாலும் அடுத்த புராஜெட்டுக்கு ஒத்துக்க மாட்டார்! ஆபீஸ்ல வற்புறுத்தினாலும் போய்யா உன் வேலையே வேணாம்! தம்பி தங்கச்சிக்கு இவ்ளோ செஞ்சா போதும்! எனக்கு எம்பொண்டாடிதான் வேணும்! நான் எம்பொண்டாட்டிய பாக்கப் போறேன்னு சொல்லிட்டு ஓடி வந்துடுவார்!"

"என்ன பாட்டி இப்டி சொல்றீங்க!"

"ஆமாண்டி என் ராஜாத்தி! இன்னொன்னு! நீ இங்க அம்மா வீட்ல இல்லாம தனிக்குடித்தனம் பண்ணாலும், அவ எல்லாத்தையும் தனியா சமாளிச்சுப்பா அப்டீன்னு அப்பவும் லேட்டாதான் வருவார்!"

"ஹூம்! ஐயியோ!"

"அதுனாலதான் உன்ன மும்பை போகச் சொல்றா உங்கம்மா!"

"ஆனா அம்மாக்கு இது எப்டி தெரியும்?"

"ஏன்னா உங்கம்மா கல்யாணம் ஆன உடனே உங்கப்பா போலீஸ் ட்ரெயினிங் போயிட்டான். மூணு மாசம். அவன்தான் இங்க இல்லயே! அங்கதானே இருக்கான்னு நான் உங்கம்மாவ உங்க பாட்டி வீட்லயே விட்டுட்டேன். அவளும் அங்க இருந்தா. ஆனா இவன் மூணு மாச ட்ரெய்னிங்க ஆறுமாசமா பண்ணினான். வீட்டுக்கே வரல. எனக்கு உடம்புக்கு முடியாம போச்சி. அப்பதான் நான் போய் உங்கம்மாவ பாத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அவ வந்தப்புறம் உடம்பு நல்லா தேறிடுச்சு. ஆனா நான் வேணும்னே அவள கொடும படுத்தினேன். விஷயம் இவன் காதுக்கு போச்சு. அடுத்த பத்து நாள்ல வந்து சேர்ந்தான். அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் உங்கம்மாவ தாங்கறான். அவன் சின்ன சின்ன விஷயத்துக்கும் உங்கம்மாவ கேக்காம செய்ய மாட்டான். ஏன்னா அவ என்கிட்ட கஷ்டபடறதா அவன் நெனக்கிறான். எனக்காகதானே கஷ்டபடறா! நான்தானே இவள பாத்துக்கணும்னு கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கறான். அதான் நீயும் உன் புருஷனோட சந்தோஷமா இருக்கணும்னுதான் அவ இப்டி சொன்னா!"

"பாட்டி!"

"உன் புருஷனோட கஷ்டத்த நீ உன் தோள்ல தாங்கிக்கோ! வேணாங்கல! ஆனா உன் மாமியார் வீட்ல இருந்துகிட்டு செய்! அவ்ளவ்தான்!"

மனம் தெளிந்தவளாய் பாட்டியை கட்டிக் கொண்டாள்.

"ம்ஹூம்! என்ன கட்டிப் பிடிக்க கூடாது! உன் புருஷன கட்டி பிடிச்சுக்கோ!"

"ஹூம்! பாட்டி!" செல்லமாய் சிணுங்கிவிட்டு கேட்டாள், "ஆமா! கோவில்ல வெச்சு பாத்தப்பவே தெரியும்னு சொன்னீங்களே! எப்டி தெரியும்!"

"ஓ! அதுவா! அவர் உன்ன முழிச்சி முழுச்சி பாத்தாரு! உன்கிட்ட பேச ஆசப்பட்டாரு! ஆனா பேச வாய் வரல! நம்ம கிளம்பினப்புறம் பின்னாடியே பெசன்ட் நகர் சிக்னல் வரைக்கும் நம்மள ஃபாலோ பண்ணிகிட்டு வந்தாரு! நீ சிக்னல் தாண்டினப்புறம் அப்டியே நின்னு உன்னப் பிடிக்கறதா நெனச்சி ரெண்டு கையாலயும் காத்தப் பிடிச்சு முத்தம் குடுத்தாரு! அப்பவே எனக்கு தெரியும்! அவர்தான் உன் புருஷன்னு!"

"பாட்டி! அப்ப முன்னாடியே ஏன் என்கிட்ட நீங்க சொல்லல?" செல்லமாய் கோபித்தாள்.

"ஆனா நான் உங்கம்மாகிட்ட சொல்லிட்டேனே!" ராகமாய் இழுத்துச் சொன்னார்.

"அம்மா கிட்டயா?"

"ம். உங்கம்மா நீ மாப்ள போட்டோ எல்லாத்லயும் தப்பு சொன்னதுமே கண்டு பிடிச்சுட்டா! ஆனா நீ இன்னும் எதுவும் சொல்லலியேன்னு வெயிட் பண்ணினா!"

"பாட்டி! தேங்க்ஸ் பாட்டி!" பாட்டிக்கு முத்தம் கொடுத்தாள்.

"ஏய்! அப்பவே சொன்னேன். இதெல்லாம் உன் புருஷனுக்குதான் குடுக்கணும்னு. முத்தத்த புருஷனுக்கு குடு. தேங்க்ஸ உங்கம்மாக்கு சொல்லு!" சிரித்துக் கொண்டே பேத்தியிடம் சொன்னார்.

பேத்தியும் சிரித்துக் கொண்டே அவசரமாய் எழுந்து அம்மாவிடம் போனாள்.

"அம்மா!"

".."

"அம்மா! கோவமாம்மா! நீங்க ஏன் மும்பை போகச் சொல்றீங்கன்னு புரிஞ்சிகிட்டேம்மா! நாளைக்கே மும்பை போறேம்மா! என்னப் பாருங்கமா! ப்ளீஸ்மா!" மகள் கொஞ்சினாள்.

"ஸாரி செல்விம்மா! உன்ன இங்கேந்து விரட்றதா நெனக்காத!" கண்ணீர் சிந்தினாள் மங்கை.

"ம்மா! என்னம்மா! கண்ணத் தொடைங்கமா!" அம்மாவின் முகத்தை தன் கையால் நிமிர்த்தி துப்பட்டாவால் கண்ணைத் துடைத்து விட்டாள்.

"எனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க! சூரஜோட என்ன சேத்து வெச்சதே நீங்கதான். நீங்க மட்டும் அன்னிக்கு எனக்காக பேசாம, இல்ல! அவ சின்ன பொண்ணு! நம்ம வேற மாப்ள பாக்கலாம்னு அப்பாட்ட சொல்லிருந்தா அவ்ளவ்தான். என் கல்யாணமே நடந்திருக்காது! நான் கண்டிப்பா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிருப்பேன். அவரப்பத்தி விசாரிங்கன்னு அப்பாட்ட சொல்லி என்னையும் அவரையும் சேத்து வெச்சதே நீங்கதான்! இப்பவும் மும்பை போன்னு சொன்னா, கண்டிப்பா அது அவர்கிட்ட என்ன பத்திரமா ஒப்படைக்கதான்னு எனக்கு இப்பதான் புரிஞ்சிதுமா! சூரஜ் வந்ததும் காத்தால முதல் ஃப்ளைட் இருக்கான்னு பாத்து கிளம்பிடறேன்! நீங்க என்ன விரட்டலன்னு எனக்கு நல்லா தெரியும். நான் உங்களுக்கு ஆக்சுவலா தேங்க்ஸ்தான் சொல்லணும். தேங்க்ஸ் ம்மா!" அம்மாவை கட்டிக் கொண்டாள்.

மகளை ஆதரவாய் அணைத்தாள். லட்சுமி அம்மாள் வந்தார்.

"மங்கை!"

"அத்த!" மகளை விடுவித்து மாமியார் பக்கம் திரும்பினாள்.

"செல்விம்மா! இன்னொரு விஷயம்! நீ இனிமே கொஞ்சம் கவனமா இருக்கணும்! உண்மை சொல்றது உன் குணம். ஆனா எல்லா இடத்லயும் அது சரிவராது! நீ பொய் சொல்ல வேண்டாம்! அதுக்காக உண்மைய சொல்லும்னும் அவசியம் இல்ல! யாருக்கு உண்மை தெரியணுமோ அவங்களுக்கு தெரிஞ்சா போதும்!"

"நிஜமாவே புரியல பாட்டி!"

"இப்ப ஒரு குழந்தைக்கு ஒரு விஷயம் தெரியக் கூடாதுன்னா என்ன பண்ணுவ! ஏன் அழுதன்னு இப்ப ஒரு குழந்தை உன்கிட்ட வந்து கேட்டா என்ன சொல்வ?"

"கண்ல தூசி விழுந்தடிச்சின்னு சொல்வேன்!"

"சரி உதாரணத்துக்கு கேக்கறேன்! இப்ப மாப்ள உன்ன அடிச்சிதான் நீ அழுதன்னு வெச்சிக்கோ! அப்ப உங்கம்மா வந்து உன்கிட்ட ஏம்மா அழறன்னு கேட்டா என்ன சொல்வ!?"

"ஒண்ணுமில்லமா! கண்ல தூசி விழுந்திடிச்சின்னுதான் சொல்வேன்!"

"இப்ப நீ ஏன் மும்பை போறேன்னு மாப்ள கேட்டா என்ன சொல்வ?"

"எனக்கு எங்க மாமியாரோட இருக்கணும்னு ஆசைன்னு சொல்வேன்!"

"அவ்ளவ்தான்! இததான் செய்ய சொல்றேன்! எல்லார்க்கும் எல்லா உண்மையும் தெரிய வேண்டாம்! புரியுதா?"

"புரியுது பாட்டி!"

"சரி! நீ உன் மூட்ட முடிச்ச கட்ற வழியப் பாரு! கிளம்பு! இங்கேந்து என்னென்ன வேணும்னு நெனக்கிறியோ அத்தனையும் பேக் பண்ணிக்கோ!" பேத்திக்கு கட்டளையிட்டாள்.

"மங்கை! அவளுக்கு குடுக்கறதுக்காக வாங்கியிருக்கற மிக்ஸி க்ரைண்டர் வாஷிங் மிஷின் மத்த சீர் பாத்திரத்தை எல்லாம் பேக் பண்ணி மும்பை அனுப்பறதுக்கு ஏற்பாடு பண்ணு!"

"சரிங்க அத்த!"

செல்வி தன்னுடைய அறைக்குப் போனாள். மங்கை மாமியாரிடம், "ஏன் அத்த! அவகிட்ட நீங்க என்ன கொடும பண்றதா பொய் சொன்னீங்க?"

"சில நேரத்தில பொய் சொல்லிதான் ஆகணும் மங்கை! உனக்கு தெரியாதா? செல்வியோட மாமியார் நல்லவங்கதான். ஆனா நாளைக்கே அவ அங்க ஏதாவது சின்னதா தப்பு பண்ணினான்னு வெய்! அட சமைக்கும்போது ஒரு கல் உப்பு கூடவோ குறையவோ ஆச்சுன்னு அவங்க இவள கோபமா பேசினா இவ மனசு ஒடியாம இருக்கணும்ல! நம்ம அம்மாவ நம்ம பாட்டி அவ்ளோ கொடும பண்ணிருக்காங்க! அம்மா எவ்ளோ பொறுமையா இருந்தாங்க! நம்ம அம்மா மாதிரியே நம்மளும் பொறுத்துப் போகணும் அப்டின்னு நெனச்சி மனச தேத்திகிட்டு வேலைய பாக்க முடியும். பாட்டி பண்ணின கொடுமைய விட எம்மாமியார் என்ன அவ்ளோ ஒண்ணும் கொடும பண்லன்னு கூட தோணலாம். அதான் அப்டி சொன்னேன்."

"ஆனாலும் நீங்களே உங்களப்பத்தி தப்பா சொல்லிகிட்டீங்களே! கஷ்டமா இருக்கு அத்த!"

"என்னப் பத்திதானே சொல்லி கிட்டேன். உன்ன தப்பா சொல்லலியே! விடு! வேலையப் பாரு! அப்றம் இன்னொரு விஷயம்!"

"என்ன அத்த?"

"நம்ம வீட்ல அடுத்த கல்யாணம் வரப் போகுது! அதுவும் ஒண்ணில்ல ரெண்டு!"

"என்ன அத்த சொல்றீங்க?

"ம். ஆமா மங்கை! நம்ம ஆனந்தன் செல்வியோட நாத்தனார் தீபாவ சைட் அடிக்கறான். செல்வியோட கொழுந்தன் நம்ம ஆனந்திய சைட் அடிக்கறான்! அதாவது பையன்க ரெண்டு பேரும் பொண்ணுங்கள பாக்கறாங்க! பொண்ணுங்க இன்னும் இவனுங்கள பாக்க ஆரம்பிக்கல!"

"என்ன அத்த சொல்றீங்க?" ஆச்சரியமாய் கேட்டாள்.

"அட ஆமாங்கறேன்! இது நல்லதுதானே! நல்ல பசங்க! பிடிச்சா கட்டி வெக்க வேண்டியதுதான். எல்லாரும் ஒரே குடும்பமா பாக்கவே அழகா இருக்கும். சரி இன்னிக்கு கதைக்கு வருவோம். செல்விக்கு குடுத்தனுப்ப பட்சணம் எதாவது செய்யணும்னா செய்துடலாம். கொஞ்சம் படுத்து எழுந்து வரேன்! வந்ததும் ஹெல்ப் பண்றேன்! நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு! ஓயாம வேலை செஞ்சாலும் உன் உடம்புக்கும் கெடுதிதான்." சொல்லிக் கொண்டே தன்னுடைய அறையைப் பார்த்து நடந்தார்.

"சரி அத்த!"

படிக்காத மேதையாய் அன்று மருமகளை மகனுடன் சேர்த்து வைத்த அந்த தாய் இன்று பேத்தியை அவள் கணவனுடன் சேர்க்க தன்னாலான அத்தனை முயற்சியும் செய்தாள். அவளுக்கு வெற்றி நிச்சயம்.

வெளியே போய்விட்டு வந்த கிரிதரன் மங்கையைத் தேடி வந்தார். அவள் செல்விக்காக வாங்கிய சீர் பாத்திரங்களை பேக் செய்ய பையைத் தேடி தன்னுடைய அறையின் பரணில் குடைந்து கொண்டிருந்தாள்.

"அம்மா எங்க அரசி?"

"படுத்திருக்காங்க!" ஒன்றும் கிடைக்காமல் எரிச்சலுடன் கீழே இறங்கினாள். அவள் பத்திரமாக இறங்க கிரிதரன் கைகொடுத்து உதவினார்.

"மாப்ள ரூம்ல இருக்காரா?"

"மாப்ள நீங்க வெளிய போனதுமே அவரும் வெளிய போயிட்டாரு! உங்களுக்கு கதவ யார் தெறந்து விட்டாங்க?"

"செல்விதான்! செல்வி கதவ தெறந்துட்டு அவ ரூம்க்கு போயிட்டா! அதான் மாப்ள உள்ள இருக்காரோன்னு கேட்டேன்! ஆமா! நீ இங்க என்ன பண்ற?"

".."

"ஏய்! உன்னதான்டி கேக்கறேன்? இங்கென்ன பண்ற?"

".."

அவள் தன் மேல் கோபமாயிருப்பது அவருக்கா புரியாது. அரைகுறையாய் மூடியிருந்த தன்னுடைய அறையின் கதவை நன்றாக சாத்திவிட்டு மனைவியை அணைத்து முத்தமிட்டார்.

"விடுங்க! விடுங்க என்ன!" மெல்லிய குரலில் விசும்பினாள்.

"சரி! சரி! ஸாரிடி! யோசனையில்லாம சொல்லிட்டேன்! இங்க பாரு! சொல்றேன்ல! இங்க பாருடி!" அவளை தன் அணைப்பிலேயே வைத்திருந்து பிடிவாதமாய் குனிந்திருந்த மங்கையின் முகத்தை அவளைவிட அதிக பிடிவாதத்துடன் நிமிர்த்தினார். அவருக்குத் தெரியும், அவள் தன் கண்களைப் பார்த்தால் அவளுடைய கோபம் எல்லாம் அடுத்த நொடியே காணாமல் போய்விடும் என்று. அவளுடைய கோபத்தை விரட்ட இத்தனை ஆண்டுகளாக அவர் கடைபிடித்துவரும் டெக்னிக் அதுதான். அவளுக்கு மட்டும் அது தெரியாதா என்ன? அவள் கோபம் எல்லாம் அவர் கண்ணைப் பார்க்கும் வரைதான். அதற்கப்புறம் அவர் என்ன நினைக்கிறாரோ அதைதான் அவள் செய்து முடிப்பாள். ஆனால் இது மகளின் வாழ்வுக்காக காட்டும் கோபமாயிற்றே! அவள் பிடிவாதம் பிடித்தேனும் மகளை மும்பை அனுப்பியாக வேண்டுமே! அவர் கண்களைப் பார்த்தால் தன் கோபம், பிடிவாதம் எல்லாம் புஸ்வாணமாகி விடுமே! என்று நினைத்து தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் இதுவும் அவருக்கு தெரியுமல்லவா! அதனால்,

"எனக்குத் தெரியும் அரசி! செல்விய மும்பை அனுப்பியே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்கற! நானும் புரிஞ்சிகிட்டேன். இப்ப எங்கேந்து வரேன்னு தெரிஞ்சா நீ உன் கோபத்தையெல்லாம் சூ சூன்னு வெரட்டிடுவ!"

".."

"சரி நானே சொல்றேன்! நீ ஜெய்ச்சிட்ட! ஆமா! பேக்கர்ஸ் அன் மூவர்ஸ் பாக்கதான் போயிருந்தேன். செல்விக்கு மும்பைக்கு அவ சீர் பாத்திரங்கள அனுப்பனும்ல!"

சுவிட்சைப் போட்டது போல கண்ணைத் திறந்தாள். கிரிதரன் மனைவியை பார்த்து சிரிக்க அவளும் பதிலுக்கு அவரைப் பார்த்து சிரித்தாள். திரும்பவும் முத்தமிட்டார். வெட்கத்தோடு குனிந்து கொண்டாள்.

"சரி! இப்ப சொல்லு! இங்க என்ன பண்ற?"

"ம். செல்விக்கு பாத்திரம் பேக் பண்ண பையத் தேடினேன்!" மெதுவாய் சொன்னாள். மீண்டும் அழுத்தமாய் முத்தமிட்டுவிட்டு அவளை விடுவித்தார். சாத்திய கதவை திறந்து வைத்தார்.

"சரி வா! மணி நாலாச்சு! காபி குடு!" ஹாலில் சென்று அமர்ந்தார்.

சூரஜ் தன் பைக்கோடு வந்து சேர்ந்தான். மங்கை அனைவருக்கும் காபியைக் கலந்து எடுத்து வந்தாள்.

"மாப்ள! நானும் யோசிச்சு பாத்தேன்! அரசி சொல்றதுதான் சரி! செல்வி உங்கம்மாவுக்கு உதவியா மும்பைல இருக்கட்டும். அவங்க அவள எங்கள விட நல்லா பாத்துப்பாங்க! அது மட்டுமில்ல. உங்க பக்கத்து பழக்க வழக்கமெல்லாம் செல்வி கத்துக்க இது நல்ல சான்ஸ்! ஏன்னா இனிமே அவ உங்க குடும்பம் ஆயாச்சே! நீங்க இந்தியா வந்தப்பறம் சென்னையோ பெங்களூருவோ மும்பையோ உங்க கூட எங்க வேணா குடித்தனம் பண்ணுவா! ஆனா இப்ப அவ மும்பைல உங்கம்மா கூட அவங்க பாதுகாப்புல இருக்கட்டும்! அதுதான் முறை!"

"ஏன் மாமா! இப்டி முடிவு பண்ணிணீங்க? அவ பழகின இடமாச்சேன்னு நெனச்சேன்! அது மட்டுமில்ல! ஒரு வேள எங்க கம்பெனில வேலைக்கு கூப்ட்டா என்ன செய்றது? அதுக்கு அவ இங்க இருந்தாதானே ஈஸியா இருக்கும்?"

"இல்ல சூரஜ்! நான் மும்பைல அத்த கூடதான் இருப்பேன்! அங்க வேலையே கிடைக்காதா என்ன?"

"இல்ல டமில்! அங்க வந்தா உனக்கு லாங்வேஜ் ப்ராப்ளம் வரும்!"

"ஏன்! நீங்க தமிழே தெரியாம இங்க சென்னைல இருக்கலியா? அங்க என்ன பாத்துக்க எல்லாரும் இருக்காங்க! நானும் அரை குறையா ஹிந்திய கத்துகிட்டிருக்கேன்ல! அப்றம் எனன கஷ்டம்?"

"நீயே கஷ்டமில்லன்னும் போது எனக்கென்ன? அம்மாவும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. சரி அப்ப எப்ப கிளம்பலாம்! நீ அங்க போறன்னா பேக்கிங் எல்லாம் பண்ணணும்ல."

"அதெல்லாம் ப்ரச்சனையில்ல மாப்ள! என்னென்ன வேணும்னு எடுத்து வெச்சிடுங்க. எப்டியும் நான் இந்த சீர் பாத்திரங்களெல்லாம் பேக்கர்ஸ் அன் மூவர்ஸ் மூலமா அனுப்பப் போறேன். அது கூட அனுப்பிடறேன்."

"அப்ப ஓகே மாமா! அது கூட என் பைக்கையும் அனுப்பிடுங்க! அது இங்க இருந்து வேஸ்ட் ஆகறதுக்கு அங்க இருந்தா விராட் ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி ஓட்டுவான். இல்ல நீங்க ஓட்டறதுனாலும் ஓகே! இங்கயே இருக்கட்டும்!"

"இதயும் அனுப்பிடறேன். எனக்கு என் வண்டிதான் சரிவரும்."

"அப்பா! என் ஸ்கூட்டியையும் எடுத்துகிட்டு போகவாப்பா?" செல்வி கேட்டாள்.

"எடுத்துகிட்டு போம்மா! இதென்னமா இப்டி கேக்கற! உனக்கு கல்யாணம் ஆனாலும் நீ இந்த வீட்டுப் பொண்ணுதானேம்மா!"

"அப்ப ஸ்கூட்டியையும் அனுப்புங்கப்பா!"

"சரி அனுப்பிடறேன்! வேற என்ன வேணும்னு பாத்து சொல்லுமா! முதல்ல மாப்ள ஊருக்கு போக என்ன வேணும்னு எடுத்து வெச்சு குடு! அப்றமா உன் திங்கஸ் பேக் பண்ணலாம்!"

"சரிப்பா! வாங்க சூரஜ்!" கணவனுடன் தன்னுடைய அறைக்கு சென்றாள்.

சூரஜ் யூஎஸ் கிளம்பிவிட்டான். செல்வி தன் திருமணச் சீர் வரிசைகளுடன் தன் ஸ்கூட்டி, தன் கணவனின் பைக் சகிதம் மும்பை வந்திறங்கினாள். வாழ்க்கையை மும்பையில் தன் புகுந்த வீட்டில் ஆரம்பித்தாள்.

கௌரிக்கும் தீன்தயாளுக்கும் மிகுந்த சந்தோஷம். பூங்குழலி, கீர்த்திவாசன், ஆனந்தி, ஆனந்தன் என அனைவரும் செல்விக்கு ஆல் த பெஸ்ட் கூறினார்கள். தீபிகா சந்தோஷமாக போன் செய்தாள். இருவரும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசிக்கொண்டார்கள். "பாபி! ரொம்ப சந்தோஷமா இருக்கு பாபி! நெக்ஸ்ட் மன்த் செமஸ்டர் ஹாலிடேஸ் வரும். நான் எப்பவும் செமஸ்டர் ஹாலிடேஸ்க்கு மும்பை வரமாட்டேன். ஆனா இந்த வாட்டி கண்டிப்பா மும்பைதான்!"

"ரொம்ப சந்தோஷம் தீபிகா!"

"ம்ஹூம்! தீபிகா இல்ல! ரெண்டு அண்ணன்களும் என்ன சுட்கின்னு தான் கூப்டுவாங்க! இனிமே உங்களுக்கும் நான் சுட்கிதான்!"

"சுட்கின்னா?"

"நீங்க தமிழ்ல அம்மு, புஜ்ஜின்னு கூப்டுவீங்கல்ல! செல்லமா! அது மாதிரி!"

"ஓ! அப்ப நீ எனக்கும் சுட்கிதான்! சீக்ரம் வா! உனக்காக ஆவலா காத்துகிட்டு இருப்பேன்!"

"தேங்க்யூ பாபி! பை பாபி!"

விராட்டுக்கு ஒருபுறம் ஆச்சரியம் என்றால் மறுபுறம் சிறிய சந்தேகம்! இவங்க ஏன் இங்க வந்திருக்காங்க? நல்லவங்கன்னு காட்டிக்கவா இல்ல நிஜமாவே நல்லவங்கதானா? அவனுக்கு ஒரே குழப்பம். சரி இங்கதானே இருக்கப் போறாங்க! கண்டுபிடிக்கறேன்! என்று நினைத்துக் கொண்டான்.

யமுனா கூட ஆச்சர்யப்பட்டாள். பிங்கி பாபி பாபி என்று செல்வியை சுற்றிச் சுற்றி வந்தாள்.

இப்படி அனைவருடைய ஏகோபித்த ஆதரவுடன் செல்வியின் மும்பை வாழ்க்கை ஆரம்பித்தது.


லட்சுமி பாட்டி சொல்லியது போல் சூரஜ் சீக்கிரம் இந்தியா திரும்புவானா? செல்வியின் மும்பைவாசம் அவளுக்கு என்ன கொடுக்கப்போகிறது? அடுத்தடுத்த அத்தியாயங்களில்..



மன்னவனோ பிரிந்து சென்றான்!
பரிசாகப் பிரிவெனும் துயரை
மனையாளுக்கு வழங்கிச் சென்றான்!

தாய்வீடு தஞ்சமெனப் புகுந்தவளைத்
மன்னவனின் வீடே சொர்க்கமென்று
தாயுமே அறிவுரை தந்துவிட்டாள்!

புகுந்த வீட்டில் நுழைந்த மருமகளை
இருகை நீட்டிப் பெரியோர் வரவேற்க
மன்னவனும் மனமகிழ்ந்து நின்றான்!

இளையவனின் மனக்குழப்பம் நாளை
இவள் வாழ்வில் உறுத்தினாலும்
அன்பாலே உள்ளத்தை வென்றிடுவாள்!


- C. புவனா



- காதலின் மொழி என்ன?

 
Top